வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
செல்லமாக வளர்க்கப்படும் பிராணிக்குச் சீக்குப் பிடித்தால் அல்லது கிழடு தட்டிவிட்டால் கொல்லுவது தவறா?
விதவிதமான விலங்குகள் என்றாலே அநேகருக்கு கொள்ளை ஆர்வம், அலாதி இன்பமும்கூட. வீட்டு விலங்குகள் சில செல்லப் பிராணிகளாய் ஆகிவிடுகின்றன, நன்கு பழகுகின்றன. உதாரணமாக, எஜமானர்களின் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து பாசமாயிருப்பதற்கு நாய்கள் பெயர் போனவை. ஆகவே, அப்படிப்பட்ட செல்லப் பிராணியிடம், அதுவும் பல வருடங்களாக தங்களுடன் இருக்கும் செல்லப் பிராணியிடம் ஆட்கள் எந்தளவுக்கு ஒட்டிக்கொள்கிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல.
என்றாலும், பெரும்பாலான செல்லப் பிராணிகள் கொஞ்ச காலமே வாழ்கின்றன. நாய்கள் அவற்றின் இனத்தைப் பொறுத்து ஏறக்குறைய 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழ்கின்றன, பூனைகளும் அப்படித்தான். செல்லப் பிராணிகளுக்கு கிழடு தட்டுகையில், வியாதியாலும் பலவீனத்தாலும் கஷ்டப்படுவதை பார்ப்பது அவற்றின் சொந்தக்காரர்களுக்கு வேதனையாக இருக்கும்; அவை சிறியவையாய் துள்ளித் திரிந்த நாட்கள் அவர்களுக்கு நினைவிருக்கும். அப்படியானால், அவை படுகிற அவஸ்தையை காண சகிக்காமல் அவற்றைக் கொன்றுவிடுவது சரியா?
மிருகங்களைப் பொறுத்ததில் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படவே ஒரு கிறிஸ்தவர் விரும்புவார். அவற்றை கொடூரமாக நடத்துவது கடவுளுடைய சித்தத்திற்கு விரோதமானது; ஏனெனில், “நீதிமான் தன் [“வீட்டு,” NW] மிருக ஜீவனைக் காப்பாற்றுகிறான்” என அவருடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 12:10) ஆனால், மிருகங்களையும் மனிதரைப் போலவே கடவுள் கருதுகிறார் என அது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதரை கடவுள் படைத்தபோது அவர்கள் மிருகங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை காட்டினார். உதாரணமாக, மனிதருக்கு நித்திய காலம் வாழும் நம்பிக்கையை கொடுத்தார், ஆனால் அத்தகைய நம்பிக்கையை மிருகங்களுக்கு அவர் கொடுக்கவேயில்லை. (ரோமர் 6:23; 2 பேதுரு 2:12) படைப்பாளராக, மனிதருக்கும் மிருகங்களுக்கும் இடையே தகுந்த உறவை நிர்ணயிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு.
அந்த உறவைப் பற்றி ஆதியாகமம் 1:28 நமக்கு சொல்கிறது. “சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என முதல் மனிதரிடம் கடவுள் சொன்னார். சங்கீதம் 8:6-8 வசனங்களும் அவ்வாறே சொல்கின்றன: ‘நீர் [கடவுள்] சகலத்தையும் அவனுடைய [மனிதனுடைய] பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டு மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து, மச்சங்களையும் கீழ்ப்படுத்தினீர்.’
மிருகங்களை தகுந்த விதத்தில் பயன்படுத்தவும் கொல்லவும் செய்யலாம் என்பதை கடவுள் தெளிவாக விளக்கினார். உதாரணமாக, அவற்றின் தோலை உடையாக பயன்படுத்த அனுமதித்தார். நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு பின்பு, மிருகங்களின் இறைச்சியையும் சாப்பிடுவதற்கு மனிதருக்கு கடவுள் அனுமதியளித்தார்; அதுவரையில் சாப்பிடப்பட்ட தாவர உணவோடு இதுவும் சேர்ந்து உணவு தேவைகளை நிறைவு செய்தது.—ஆதியாகமம் 3:21; 4:4; 9:3.
விளையாட்டுக்காக மிருகங்களை கண்மூடித்தனமாக கொல்வதை அது அனுமதிப்பதில்லை. ஆதியாகமம் 10:9-ல் நிம்ரோதை ‘பலத்த வேட்டைக்காரன்’ என பைபிள் வருணிக்கிறது. இதனால் அவன் ‘யெகோவாவுக்கு விரோதி’ (NW) ஆனான் என அதே வசனம் கூறுகிறது.
ஆகவே, மிருகங்கள் மீது மனிதனுக்கு அதிகாரம் இருந்தாலும், அதை அவன் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது; கடவுளுடைய வார்த்தையின் நியமங்களுக்கு ஏற்பவே அதை பயன்படுத்த வேண்டும். ஒரு செல்லப் பிராணிக்கு கிழடு தட்டியதாலோ படுமோசமாக காயம் ஏற்பட்டதாலோ அல்லது பயங்கரமாக வியாதிப்பட்டதாலோ அநாவசியமாக அவஸ்தைப்படும்படி விட்டுவிடாதிருப்பதும் இதில் அடங்கலாம். இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வதென தீர்மானிப்பது ஒரு கிறிஸ்தவரின் பொறுப்பு. அந்தச் செல்லப் பிராணி இனி பிழைக்காது என தெரிய வருகையில் அது மேலும் அவஸ்தைப்பட அனுமதிக்காமலிருப்பதே இரக்கமான செயல் என அவர் நினைத்தால் அதை கொல்ல தீர்மானிக்கலாம்.