வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உலகில் பெரும்பாலான இடங்களில் கல்யாண பரிசுகள் வழங்குவது வழக்கம். அன்பளிப்புகள் கொடுக்கும்போதோ வாங்கும்போதோ மனதிற்கொள்ள வேண்டிய வேதப்பூர்வ நியமங்கள் யாவை?
நல்லெண்ணத்துடன் சரியான சந்தர்ப்பத்தில் அன்பளிப்புகள் வழங்குவதை பைபிள் அங்கீகரிக்கிறது. கொடுக்கும் விஷயத்தில், தாராளமாய் கொடுப்பவராகிய யெகோவாவின் முன்மாதிரியை மெய் கிறிஸ்தவர்கள் பின்பற்றும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (யாக்கோபு 1:17) சக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” ஆகவே, கொடுப்பதில் கிறிஸ்தவர்கள் தாராள குணம் படைத்தவர்களாக திகழ வேண்டுமென உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.—எபிரெயர் 13:16; லூக்கா 6:38.
ஐக்கிய மாகாணங்களில் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் பழக்கமாகிய ‘கிஃப்ட் ரெஜிஸ்ட்ரி’யை பற்றி என்ன சொல்லலாம்? இங்கிலாந்தில், இதை ‘வெடிங் லிஸ்ட்’ என குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக, மணமுடிக்கப் போகும் ஜோடிகள் ஒரு கடைக்குச் சென்று அந்தக் கடையிலுள்ள பொருட்களை அலசிப் பார்த்து திருமண அன்பளிப்பாக பெற விரும்புகிறவற்றை அந்தக் கடையிலுள்ள ‘ரெஜிஸ்ட்ரி’யில் எழுதி வைக்கிறார்கள். பின்பு உற்றார் உறவினர்கள் அந்தக் கடைக்குப் போய், ‘ரெஜிஸ்ட்ரி’யில் எழுதப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றை வாங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடைமுறையில் பார்த்தால், அன்பளிப்பு வழங்குபவர் ஒரு பரிசுப்பொருள் வாங்குவதற்கு மணிக்கணக்காக நேரம் செலவழிப்பதை ‘கிஃப்ட் ரெஜிஸ்ட்ரி’ ஏற்பாடு மிச்சப்படுத்துகிறது. அதோடு, அன்பளிப்பை பெறுகிறவர் தேவையில்லாத அன்பளிப்புகளை அந்தக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடுகிறது.
திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் ‘கிஃப்ட் ரெஜிஸ்ட்ரி’ முறையைப் பயன்படுத்த விரும்புகிறார்களா என்பது அவர்கள் தீர்மானிக்க வேண்டிய தனிப்பட்ட விஷயம். என்றாலும், பைபிள் நியமங்களை மீறக்கூடிய எந்தப் பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பதற்கு கிறிஸ்தவர் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு பட்டியல் போட்டுக் கொடுத்தால் என்னவாகும்? இத்தகைய சந்தர்ப்பத்தில், அதிக பணவசதி இல்லாதவர்களால் அன்பளிப்பு வழங்க முடியாமல் இருக்கலாம், அல்லது விலை குறைந்த அன்பளிப்பை கொண்டுபோய் கொடுத்து தர்மசங்கடப்படுவதை தவிர்ப்பதற்காக திருமணத்திற்கே செல்லாதிருப்பது நல்லது என நினைக்கலாம். ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு எழுதினார்: “கல்யாண பரிசுகள் கொடுப்பது பெரும் தலைவலியாக ஆகிவருகிறது. நான் தாராள குணம் படைத்தவளாக இருக்க முயற்சி செய்திருக்கிறேன், ஆனால் இப்போதெல்லாம் கொடுப்பதில் மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடுகிறது.” திருமணம் கவலைக்கு காரணமாகிவிடுவது எவ்வளவு வருத்தகரமானது!
அன்பளிப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அதை குறிப்பிட்ட ஒரு கடையில்தான் வாங்க வேண்டும் என்றோ அல்லது குறிப்பிட்ட விலையில்தான் வாங்க வேண்டும் என்றோ சொல்லி அன்பளிப்பு வழங்குபவர்களை பாரப்படுத்தக் கூடாது. சொல்லப்போனால், கடவுளுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றது கொடுப்பவருடைய மனப்பான்மையே, கொடுக்கப்படும் அன்பளிப்பின் விலைமதிப்பு அல்ல என்பதை இயேசு கிறிஸ்து சுட்டிக் காட்டினார். (லூக்கா 21:1-4) அது போலவே, வறுமையில் வாடுபவர்களுக்கு தர்மம் செய்வதன் சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 9:7.
பைபிள் அடிப்படையில் பார்த்தால், ஓர் அன்பளிப்பை கொடுத்தவர் யார் என்பதை தெரியப்படுத்துவதில், அல்லது அன்பளிப்புடன் நம் பெயரை எழுதித் தருவதில் எந்தத் தவறுமில்லை. இருந்தாலும், சில இடங்களில், அன்பளிப்பு வழங்கியவருடைய பெயரை எல்லாருக்கும் முன்பு சொல்வது வழக்கமாக இருக்கலாம். இந்தப் பழக்கம் ஒருவேளை பிரச்சினைகளுக்கு வழிநடத்தலாம். அன்பளிப்பு வழங்குபவர்கள் தங்கள் மீது கவனத்தைத் திருப்புவதைத் தவிர்ப்பதற்காக தங்களுடைய பெயரை சொல்ல விரும்பாமல் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மத்தேயு 6:3-ல் உள்ள நியமத்திற்கு இசைவாக செயல்படுகிறார்கள்; அந்த வசனத்தில் இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீயோ தர்மஞ் செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.” வேறுசிலரோ கொடுப்பது என்பது தனிப்பட்ட விஷயம், அது கொடுப்பவருக்கும் பெற்றுக்கொள்கிறவருக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என நினைக்கலாம். அதோடு, அன்பளிப்பு கொடுத்தவருடைய பெயரை சொல்வது மற்றவர்களுடைய அன்பளிப்புடன் ஒத்துப்பார்ப்பதற்கு வழிநடத்தலாம், அதனால் ‘போட்டி மனப்பான்மையை தூண்டலாம்.’ (கலாத்தியர் 5:26, NW) அன்பளிப்பு கொடுத்தவருடைய பெயரை அறிவிப்பதன் மூலம் எவருக்கும் அசௌகரியமோ தர்மசங்கடமோ உண்டாக்குவதை கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே தவிர்க்க வேண்டும்.—1 பேதுரு 3:8.
ஆம், கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களைப் பின்பற்றினால் அன்பளிப்பு வழங்குவது மகிழ்ச்சிக்கு ஊற்றுமூலமாய் விளங்கும்.—அப்போஸ்தலர் 20:35.