தீர்மானம் எடுத்தல்—தவிர்க்க முடியாத ஒரு சவால்
தீர்மானம் எடுக்க தெரிந்திருப்பதைவிட ரொம்ப கஷ்டமானது வேறெதுவும் இல்லை, அதனால்தான் இது அதிக மதிப்புமிக்கது” என 19-ம் நூற்றாண்டு பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் ஒரு சமயம் கூறினார். இந்த மேற்கோளில் உள்ள இரண்டு அம்சங்களையும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், ஏனென்றால் தங்களுடைய வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பொதுவாக மக்கள் பொக்கிஷமாய் கருதுகிறார்கள். அதேசமயத்தில், தீர்மானம் எடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் சுலபமோ கஷ்டமோ தீர்மானம் எடுக்காமல் நாம் இருந்துவிட முடியாது. ஒவ்வொரு நாள் காலையிலும் இந்தச் சுமை நம் தலையில் விழுகிறது. காலையில் படுக்கையைவிட்டு எழுந்ததும் இன்றைக்கு என்ன டிரெஸ் போடலாம், என்ன சாப்பிடலாம், இன்றைய காரியங்களை எப்படி செய்யலாம் போன்றவற்றை நாம் தீர்மானித்தாக வேண்டும். இவற்றில் பெரும்பாலான தீர்மானங்கள் சாதாரணமானவைதான். அவற்றைப் பற்றி நாம் மறுபரிசீலனை செய்வது ரொம்ப அபூர்வமே. அந்தத் தீர்மானமெல்லாம் ஞானமானவையா ஞானமற்றவையா என தூங்காமல் கொள்ளாமல் யோசித்துக் கொண்டிருப்பதில்லை.
மறுபட்சத்தில், சில தீர்மானங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். என்ன வேலைக்குப் போகலாம் என்ற தீர்மானத்தை இன்றைக்கு இளைஞர்கள் அநேகர் எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக என்ன படிப்பு படிக்க வேண்டும், எவ்வளவு படிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். அதற்கு பிறகு, கல்யாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதையும் அவர்களில் பெரும்பாலோர் தீர்மானிக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிறவர்கள் இதையெல்லாம் தீர்மானிக்க வேண்டும்: ‘கல்யாணம் கட்டிக்கொள்ளும் அளவுக்கு வயசும் பக்குவமும் எனக்கு வந்துவிட்டதா? எப்படிப்பட்ட துணையை விரும்புகிறேன், மிக முக்கியமாக, எப்படிப்பட்ட துணை எனக்கு தேவை?’ வருங்கால துணையைத் தேர்ந்தெடுப்பது மாதிரி நம்முடைய வாழ்க்கை மீது அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்கள் வெகு சிலதான்.
மிகவும் முக்கியமான விஷயங்களில், ஞானமாக தீர்மானம் எடுப்பது இன்றியமையாதது, ஏனென்றால் மகிழ்ச்சி என்பது நாம் எடுக்கும் தீர்மானத்தையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. இத்தகைய தீர்மானங்களை எடுப்பதில் தாங்கள் கில்லாடிகள் என சிலர் நினைக்கலாம், அதனால் மற்றவர்களது உதவியை உதறித் தள்ளலாம். அது ஞானமானதா? பார்க்கலாம்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
நெப்போலியன்: From the book The Pictorial History of the World