‘மகத்துவங்களைப்’ பேசுவதற்கு உந்துவிக்கப்பட்ட கிலியட் பட்டதாரிகள்
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 115-வது வகுப்பு பட்டமளிப்பு விழா 2003, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது; அதைக் காண 52 நாடுகளிலிருந்து 6,635 பேர் திரண்டு வந்திருந்தார்கள்.
‘தேவனுடைய மகத்துவங்களை’ 17 நாடுகளுக்கு எடுத்து செல்லவிருந்த 48 மாணாக்கர்களுக்குக் கொடுக்கப்பட்ட பைபிள் அடிப்படையிலான உற்சாகமூட்டுதலை அவர்கள் கேட்டார்கள். (அப்போஸ்தலர் 2:11) இந்நாடுகளில்தான் இந்தப் பட்டதாரிகள் தங்கள் மிஷனரி ஊழியத்தை செய்யப் போகிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரும், பட்டமளிப்பு விழாவின் சேர்மனுமான ஸ்டீவன் லெட் தன் ஆரம்ப உரையில் மாணாக்கர்களுக்கு இவ்வாறு நினைப்பூட்டினார்: “உங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு செல்லுகையில், அது எந்த நாடாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எதிராக இருப்பவர்களைவிட உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அநேகர்.” ‘தேவனுடைய மகத்துவங்களை’ அறிவிக்கையில் யெகோவா தேவன் மற்றும் கோடாகோடி தூதர்களின் ஆதரவை சார்ந்திருக்கலாம் என 2 இராஜாக்கள் 6-ம் அதிகாரத்தை உபயோகித்து மாணாக்கர்களுக்கு சகோதரர் லெட் நினைப்பூட்டினார். (2 இராஜாக்கள் 6:15, 16) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்கித்தபோதும் போதித்தபோதும் அநேகர் எதிர்த்தார்கள், அலட்சியம் செய்தார்கள், அதே போன்ற சூழ்நிலைகளை இன்று கிறிஸ்தவ மிஷனரிகளும் எதிர்ப்படுகிறார்கள். எனினும் பரலோகத்திலிருந்தும் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பிலிருந்தும் கிடைக்கும் ஆதரவை அவர்கள் சார்ந்திருக்கலாம்.—சங்கீதம் 34:7; மத்தேயு 24:45.
‘தேவனுடைய மகத்துவங்களைப்’ பற்றி பேசுங்கள்
சேர்மனுடைய ஆரம்ப உரைக்குப் பின்பு ஐக்கிய மாகாணங்களின் கிளை அலுவலகக் குழுவை சேர்ந்த ஹரல்ட் கார்கர்ன், “நியாயமான எதிர்பார்ப்புகள்—ஊழியத்தில் சந்தோஷத்தையும் வெற்றியையும் காண்பதற்கு திறவுகோல்” என்ற பொருளில் பேசினார். நீதிமொழிகள் 13:12-ன்படி நம்பிக்கைகள் நிறைவேறாமல் போகையில் ஏமாற்றமாக இருக்கலாம் என சகோதரர் கார்கர்ன் குறிப்பிட்டார். எனினும் நிறைவேறாத நியாயமற்ற எதிர்பார்ப்புகளால்தான் பெரும்பாலும் ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. தங்களையும் மற்றவர்களையும் பற்றி சமநிலையான, எதார்த்தமான நோக்குநிலை பட்டதாரிகளுக்குத் தேவை. தங்களுக்கும் சில தவறுகள் நேரிடும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும்; ஆனால் ‘தேவனுடைய மகத்துவங்களை’ மற்றவர்கள் போற்றுவதற்கு உதவி செய்யும் வேளையில் அந்தத் தவறுகளை நினைத்து மிஷனரிகள் மனமொடிந்துவிடக் கூடாது. “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிற” யெகோவாவின்மீது சார்ந்திருக்க வேண்டுமென புதிய மிஷனரிகளை சகோதரர் கார்கர்ன் உற்சாகப்படுத்தினார்.—எபிரெயர் 11:6.
அடுத்து, ஆளும் குழுவின் அங்கத்தினரான டான்யல் சிட்லிக் “கிறிஸ்தவ நம்பிக்கை—அது என்ன?” என்ற பொருளில் பேசினார். “நம்பிக்கை என்பது கிறிஸ்தவருக்குரிய குணம். இது சரியானவற்றை செய்வதற்கான தராதரமாகும்; இது, கடவுளுடன் தகுந்த உறவுக்குள் ஒருவரைக் கொண்டு வருகிறது. நம்மைப் போல நம்பிக்கையோடிருக்க கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களால் முடியவே முடியாது” என அவர் சொன்னார். வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்ப்படுகையில் தொடர்ந்து நல்லதையே எண்ணும்படி ஒருவருக்கு உதவும் கிறிஸ்தவ நம்பிக்கையின் பல்வேறு அம்சங்களை சகோதரர் சிட்லிக் விவரித்தார். “நம்பிக்கை இருக்கையில் புது ஊக்கத்துடனும் வெற்றி காணும் மனநிலையுடனும் நாம் வாழ்க்கையை சந்திக்க முடியும்.” ஒரு கிறிஸ்தவருடைய நம்பிக்கை, யெகோவாவை நோக்கமுள்ள கடவுளாக காணவும், அவருடைய சேவையில் சந்தோஷத்தைக் காணவும் உதவும்.—ரோமர் 12:12.
கிலியட் பள்ளியின் பதிவாளரான வாலஸ் லிவ்ரன்ஸ் “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்” என மாணாக்கர்களை உற்சாகப்படுத்தினார். (கலாத்தியர் 5:16) எரேமியாவின் செயலரான பாருக் ஆவிக்கேற்றபடி நடப்பதை கிட்டத்தட்ட நிறுத்தியே விடும் நிலைக்கு சென்றது எப்படி என்பதை அவர் விளக்கினார். ஒரு கட்டத்தில், பாருக் மிகவும் சோர்ந்துபோய் தனக்காக பெரிய காரியங்களைத் தேட ஆரம்பித்தார். (எரேமியா 45:3, 5) இயேசுவைப் பின்பற்றுவதை சிலர் நிறுத்திவிட்டு, இரட்சிப்புக்கு அத்தியாவசியமான ஆவிக்குரிய சத்தியத்தைப் புறக்கணித்தார்கள் என்பதையும் சகோதரர் லிவ்ரன்ஸ் குறிப்பிட்டார். அவர் போதித்ததை அவர்கள் புரிந்துகொள்ள தவறியதும், அந்த சமயத்தில் தங்களுடைய மாம்சப்பிரகாரமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் அடைந்த ஏமாற்றமுமே அதற்குக் காரணம். (யோவான் 6:26, 27, 51, 66) படைப்பாளரிடமும் அவருடைய நோக்கத்திடமும் கவனத்தை ஒருமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டிருக்கும் மிஷனரிகள் இந்தப் பதிவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? அந்தஸ்தைப் பெறுவது, மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவது, அல்லது தேவராஜ்ய பொறுப்பை சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தாதிருக்கும்படி மாணாக்கர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.
“நீங்கள் கொடுப்பவரா அல்லது வாங்கிக் கொள்பவரா?” என்ற கேள்வியை கிலியட் போதனையாளரான மார்க் நியூமர் கேட்டார். நியாயாதிபதிகள் 5:2-ன் அடிப்படையில் அவர் தன் குறிப்புகளை சொன்னார்; தன்னலம் கருதாமல் பாராக்கின் படையில் சேவை செய்ய மனமுவந்து வந்த இஸ்ரவேலர்கள் பாராட்டப்பட்டார்கள். ஆவிக்குரிய போரில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளும்படி பெரிய பாராக்கான இயேசு கிறிஸ்து விடுத்த அழைப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதற்காக கிலியட் மாணாக்கர்கள் பாராட்டப்பட்டார்கள். கிறிஸ்துவின் சேவகர்கள் தங்களை இப்பணியில் அமர்த்தியிருப்பவரின் அங்கீகாரத்தைப் பெறுவதிலேயே ஆர்வம் காட்ட வேண்டும். “நம்மை திருப்திப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கும்போது எதிரியை எதிர்த்துப் போராடுவதை நாம் நிறுத்திவிடுகிறோம். . . . மிஷனரி ஊழியம் உங்களுக்காக செய்யும் ஊழியமல்ல, அது யெகோவாவுக்காகவும் அவருடைய பேரரசுரிமைக்காகவும் அவருடைய சித்தம் நிறைவேற்றமடைவதற்காகவுமே செய்யப்படுகிறது. யெகோவா நம்மை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் மிஷனரிகளாக சேவை செய்வதில்லை, அவரை நேசிப்பதாலேயே நாம் அவருக்குச் சேவை செய்கிறோம்” என மாணாக்கர்களுக்கு சகோதரர் நியூமர் நினைப்பூட்டினார்.—2 தீமோத்தேயு 2:4.
அடுத்து, கிலியட் போதனையாளரான லாரன்ஸ் போவன், “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்” என்ற பொருளில் கலந்தாலோசித்தார். (யோவான் 17:17) 115-வது வகுப்பின் மாணாக்கர்களை பரிசுத்தமாக்கப்பட்ட கடவுளுடைய ஊழியர்கள் என குறிப்பிட்டார். இந்தப் பள்ளியின் பயிற்சி காலத்தில் அவர்கள் வெளி ஊழியத்திலும் கலந்துகொண்டு, சத்தியத்தை நேசிக்கும் நல்மனமுள்ளவர்களைத் தேடி சென்றார்கள். இயேசுவையும் அவருடைய ஆரம்ப கால சீஷர்களையும் போலவே மாணாக்கர்கள் “சுயமாய்ப் பேசவில்லை.” (யோவான் 12:49, 50) கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையை, அதாவது உயிர் கொடுக்கும் சத்திய வார்த்தையை வைராக்கியத்துடன் அறிவித்தார்கள். அவர்கள் சந்தித்த ஆட்களிடம் பைபிள் ஏற்படுத்திய பலமான பாதிப்பை அவர்களுடைய நிஜ சம்பவ நடிப்புகளும் அனுபவங்களும் உறுதிப்படுத்தின.
உற்சாகமளித்த புத்திமதிகளும் அனுபவங்களும்
ஐக்கிய மாகாணங்களின் கிளை அலுவலகத்தில் ஊழிய இலாகாவில் சேவிக்கும் அந்தோணி பேரஸ், அந்தோணி க்ரிஃபின் என்பவர்கள் உலகெங்குமிருந்து வந்திருந்த கிளை அலுவலக குழு அங்கத்தினர்களைப் பேட்டி கண்டார்கள். இவர்கள் புதிய மிஷனரிகள் எதிர்ப்படும் சில சவால்களை கலந்தாலோசித்து சொந்த அனுபவத்திலிருந்து நடைமுறையான புத்திமதியை அளித்தார்கள். பண்பாட்டு வேறுபாடுகள், வருடம் முழுவதும் நிலவும் வெப்பமண்டல சீதோஷணநிலை, அல்லது மாணாக்கர்களுக்குப் பழக்கமில்லாத மத, அரசியல் சூழல் போன்றவை அந்த சவால்களில் சில. இந்தப் புதிய சூழ்நிலைகளை புதிய மிஷனரிகள் சமாளிப்பதற்கு எது உதவும்? யெகோவாவிடமுள்ள அன்பும், ஜனங்களிடமுள்ள அன்பும், விட்டு வந்தவற்றை ஆவலுடன் எண்ணிப் பார்க்காதிருப்பதும், அவசரப்பட்டு செயல்படாதிருப்பதும் உதவும். “எங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள நாட்டில் ஜனங்கள் ஏற்கெனவே நூற்றாண்டுக்கணக்கில் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே எங்களாலும் அங்குள்ள சூழ்நிலைகளை அனுசரித்து வாழ முடியும் என நம்பினோம். ஒவ்வொரு முறை பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோதும் எங்கள் குணநலனை செதுக்கி சீராக்க கிடைத்த வாய்ப்புகளாகவே அவற்றை நாங்கள் கருதினோம். ஜெபத்திலும் யெகோவாவின் ஆவியிலும் சார்ந்திருந்தால், ‘நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என இயேசு சொன்ன வார்த்தைகளின் நிஜத்தை ருசிப்போம்” என கிளை அலுவலக குழுவிலுள்ள ஓர் அங்கத்தினர் சொன்னார்.—மத்தேயு 28:20.
நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக, ஆளும் குழுவின் அங்கத்தினரான சாமுவேல் ஹெர்டு, “தேவனுடைய மகத்துவங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்” என்ற பொருளில் உரையாற்றினார். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவி இயேசுவின் சீஷர்களை பலப்படுத்தி, ‘தேவனுடைய மகத்துவங்களைப்’ பற்றி பேசும்படி செய்தது. இன்று அதே வைராக்கியத்துடன் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேச புதிய மிஷனரிகளுக்கு எது உதவும்? அதே பரிசுத்த ஆவி உதவும். ‘ஆவியிலே அனலாயிருக்கவும்,’ தங்கள் நியமிப்புகளைக் குறித்து சந்தோஷப்படவும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியை ஒருபோதும் மறந்துவிடாதிருக்கவும் பட்டம் பெறும் மாணாக்கர்களை சகோதரர் ஹெர்டு உற்சாகப்படுத்தினார். (ரோமர் 12:11) “பைபிள் தேவனுடைய மகத்துவத்தில் ஒன்று. அதன் மதிப்பை ஒருபோதும் குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள். அதன் செய்தி ஜீவனுள்ளது. அது இருதயத்தின் அடித்தளம் வரை ஊடுருவிச் செல்லும் சக்தி படைத்தது. உங்கள் வாழ்க்கையில் காரியங்களை சரிசெய்ய அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சிந்தனையை மாற்றியமைக்க இடமளியுங்கள். வேதாகமத்தைப் படிப்பது, வாசிப்பது, தியானிப்பது ஆகியவற்றின் மூலம் உங்கள் சிந்திக்கும் திறனைக் காத்துக்கொள்ளுங்கள் . . . கிலியட்டில் நீங்கள் பெற்ற பயிற்சியை பயன்படுத்தி ‘தேவனுடைய மகத்துவங்களைப்’ பேசிக்கொண்டே இருப்பதற்கு இலக்கு வையுங்கள், அதில் தீர்மானமாயிருங்கள்” என சகோதரர் ஹெர்டு சொன்னார்.
உலகெங்குமுள்ளவர்கள் அனுப்பிய வாழ்த்து மடல்களை வாசித்ததற்கும், மாணாக்கர்கள் பட்டங்களைப் பெற்றதற்கும் பிறகு தாங்கள் பெற்ற பயிற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வகுப்பாரின் சார்பாக ஒரு பட்டதாரி நன்றி மடல் ஒன்றை வாசித்தார். 2 நாளாகமம் 32:7-யும் உபாகமம் 20:1-4-யும் சகோதரர் லெட் குறிப்பிட்டது அந்த சந்தோஷமான நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. முடிவுரையை தன் ஆரம்ப குறிப்புகளுடன் இணைத்து இவ்வாறு நிறைவு செய்தார்: “எனவே அன்புள்ள பட்டதாரிகளே, உங்கள் புதிய நியமிப்புகளில் ஆவிக்குரிய போருக்கு நீங்கள் அணிவகுத்துச் செல்லும்போது யெகோவாவும் உங்களுடன் வருவார் என்பதை நினைவில் வையுங்கள். உங்களுக்கு எதிராக இருப்பவர்களைவிட உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அநேகர் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.”
[பக்கம் 25-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 7
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 17
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 33.7
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17.8
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.5
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 115-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ப்ரௌன், டி.; கோலர், சி.; ஹாஃப்மன், ஏ.; ப்ரூஸீஸி, ஜே.; ட்ரேஹன், எஸ். (2) ஸ்மார்ட், என்.; கேஷ்மன், எஃப்.; கார்ஸிய, கே.; லோஹன், எம்.; சிஃபர்ட், எஸ்.; க்ரே, கே. (3) பெக்கெட், எம்.; நிக்கல்ஸ், எஸ்.; ஸ்மித், கே.; கூல்யாரா, ஏ.; ரப்பென்னிகர், ஏ. (4) க்ரே, எஸ்.; வாசிக், கே.; ஃப்ளெமிங், எம்.; பெத்தல், எல்.; ஹர்மான்சன், டி.; ஹர்மான்சன், பி. (5) ரப்பென்னிகர், ஜி.; லோஹன், டி.; டிக்கி, எஸ்.; கிம், சி.; ட்ரேஹன், ஏ.; வாஷிங்டன், ஏ.; ஸ்மார்ட், எஸ். (6) கோலர், எல்.; பர்க்ஹாஃபர், டி.; கூல்யாரா, டி.; நிக்கல்ஸ், ஆர்.; வாஷிங்டன், எஸ்.; கிம், ஜே. (7) பெக்கெட், எம்.; டிக்கி, ஜே.; ஸ்மித், ஆர்.; கார்ஸிய, ஆர்.; ஹாஃப்மன், ஏ.; சிஃபர்ட், ஆர்.; ப்ரௌன், ஹெச். (8) ஃப்ளெமிங், எஸ்.; ப்ரூஸீஸி, பி.; பர்க்ஹாஃபர், டபிள்யு.; பெத்தல், டி.; கேஷ்மன், ஜே.; வாசிக், கே.