யாருடைய வாக்குறுதிகளை நீங்கள் நம்பலாம்?
“அன்று அவர் வலிமைமிக்கவர், அவருடைய வாக்குறுதிகளும் அப்படித்தான்; இன்றோ அவர் ஒன்றுமில்லாதவர், அவருடைய செயல்களும் அப்படித்தான்.”—அரசன் எட்டாம் ஹென்றி (ஆங்கிலம்), வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதியது.
ஷேக்ஸ்பியர் குறிப்பிட்ட அந்த வலிமைமிக்க வாக்குறுதிகள் ஆங்கிலேய கார்டினல் தாமஸ் உல்ஸி தந்தவை; இவர் 16-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டு அரசியலில் பலத்த ஆதிக்கம் செலுத்தியவர். இன்று கேள்விப்படும் பெரும்பாலான வாக்குறுதிகளும் ஷேக்ஸ்பியருடைய இந்த வர்ணனைக்குப் பொருந்துமென சிலர் சொல்லலாம். ஆசையைக் கிளறும் வாக்குறுதிகள் அடிக்கடி மக்கள் முன்பு அள்ளி வீசப்படுகின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை காற்றோடு காற்றாக போய்விடுகின்றன. ஆகவே, எல்லா வாக்குறுதிகளையுமே மக்கள் ஏன் சந்தேகிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை.
எங்கும் ஏமாற்றம்
உதாரணமாக, 1990-களில் பால்கனில் நடந்த பயங்கர சண்டையின்போது, ஸ்ரீபரனீட்சா என்ற போஸ்னிய பட்டணத்தை ‘பாதுகாப்பான இடம்’ என்று ஐக்கிய நாட்டு பாதுகாப்பு பேரவை அறிவித்தது. ஐக்கிய நாட்டுச் சங்கத்தில் அங்கம் வகிப்போர் அளித்த நம்பகமான உத்தரவாதம் போல இது தோன்றியது. ஸ்ரீபரனீட்சாவில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம் அகதிகளும் அப்படித்தான் எண்ணினார்கள். ஆனால் கடைசியில் பார்த்தால், பாதுகாப்பு தரும் புகலிடம் என்ற வாக்குறுதி புஸ்வாணமாக போனது. (சங்கீதம் 146:3) ஜூலை 1995-ல், தாக்குதல் படைகள் ஐநா படைகளைத் தோற்கடித்து அந்தப் பட்டணத்தை சின்னாபின்னமாக்கின. 6,000-க்கும் அதிகமான முஸ்லீம்கள் காணாமல் போனார்கள், குறைந்தபட்சம் 1,200 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வாக்குறுதிகள் என்பது தண்ணீரில் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. இன்றைக்கு சரமாரியாக வரும் “பொய்யான விளம்பரங்களால் பல தடவை” மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். “அநேக அரசியல்வாதிகள் அள்ளி வீசும் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாக்குறுதிகள்” என்பதை அறிந்து மக்கள் மனமொடிந்து போயிருக்கிறார்கள். (த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, தொகுதி 15, பக்கம் 37) நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டிய மதத் தலைவர்களே தங்கள் மந்தையிலுள்ள ஆடுகளை கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு மிகவும் அருவருக்கத்தக்க முறையில் அவர்களை துஷ்பிரயோகம் செய்துவிடுகிறார்கள். பரிவு, பிறர்மீது அக்கறை ஆகிய குணங்கள் மேலோங்கி இருப்பதாக கருதப்படும் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளிலும்கூட சிலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள்; தங்கள் பாதுகாப்பில் இருப்போரை சுயநல நோக்குடன் சுரண்டிப் பிழைத்திருக்கிறார்கள். ஏன், கொலையும் செய்திருக்கிறார்களே! ஆகவே, சொல்லப்படும் எல்லா வார்த்தையையும் நம்பாதே என பைபிள் நம்மை எச்சரிப்பதில் ஆச்சரியமில்லை!—நீதிமொழிகள் 14:15.
நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள்
ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறவர்கள் இன்றைக்கு அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில் அதற்காக பெரும் தியாகம்கூட செய்கிறார்கள். (சங்கீதம் 15:4) அவர்களுடைய வாக்குறுதி ஒரு பத்திரத்தைப் போல இருக்கிறது, அதை அவர்கள் மதிக்கிறார்கள். வேறு சிலரோ நல்லெண்ணத்துடன் கொடுக்கும் தங்கள் வாக்குறுதிகளை உண்மையோடு காப்பாற்ற விரும்புகிறார்கள், அவற்றை நிறைவேற்ற தயாராகவும் மனமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் சொன்னபடி அவர்களால் செய்ய முடியாமல் போகிறது. ஆகவே, சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் சிறந்த திட்டங்களையும்கூட தவிடுபொடியாக்கி விடலாம்.—பிரசங்கி 9:11.
என்ன காரணமாக இருந்தாலும்சரி, யாருடைய வாக்குறுதிகளையும் நம்புவது இன்று பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்பதே உண்மை. ஆகவே கேள்வி என்னவென்றால், நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான வாக்குறுதிகள் ஏதாவது இருக்கின்றனவா? ஆம், இருக்கின்றன. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் வாக்குறுதிகளை நாம் நம்பலாம். இந்த விஷயத்தைப் பற்றி அடுத்த கட்டுரை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? கடவுளுடைய வாக்குறுதிகள் நம்பகமானவை என்ற முடிவுக்கு ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் வந்திருக்கின்றனர். நீங்களும் அதே முடிவுக்கு வரலாம்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/Amel Emric