கற்புடன் திகழ இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:23.
1-3. (அ) மக்கள் தங்களுடைய கற்பை மதிப்பதில்லை என்பதை பெரும்பாலும் எப்படி காண்பிக்கிறார்கள்? விளக்குங்கள். (ஆ) கற்பின் மதிப்பிற்கு கவனம் செலுத்துவது ஏன் முக்கியம்?
அந்த ஓவியம் பழங்கால பாணி ஓவியம் போல் தோன்றியிருக்கலாம். ஒருவேளை வீட்டின் அலங்காரத்துக்கு கொஞ்சங்கூட பொருத்தமில்லாமல் இருந்திருக்கலாம். என்ன காரணமோ தெரியவில்லை, அந்த ஓவியம் தேவையில்லை என அந்த வீட்டுக்காரர் முடிவு செய்துவிட்டார். கடைசியில், 29 டாலர் விலை போடப்பட்டு பழம்பொருட்களை விற்பனை செய்யும் இடத்திற்கு அந்த ஓவியம் வந்து சேர்ந்தது. ஆனால், அதன் மதிப்போ சுமார் மில்லியன் டாலர் என்பது சில வருடங்களுக்கு பிறகுதான் தெரியவந்தது! ஆம், அது ஓர் அரிய படைப்பு. அந்த பொக்கிஷத்தை குறைவாக மதிப்பிட்ட அந்த வீட்டுக்காரருடைய உணர்ச்சிகளை சற்று கற்பனை செய்து பாருங்கள்!
2 கற்புக்கும் கிட்டத்தட்ட இதுபோன்ற நிலையே பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு நபரின் ஒழுக்க சுத்தம் அல்லது தூய்மையே கற்பு. இன்று அநேகர் தங்களுடைய கற்பை குறைவாக மதிப்பிடுகிறார்கள். கற்பு என்பதெல்லாம் பழம்பாணி, இந்த காலத்துக்கு கொஞ்சம்கூட பொருந்தாதது என சிலர் கருதுகிறார்கள். இதனால், சிறிதளவு ஆதாயத்திற்காக கற்பை துறந்துவிடுகிறார்கள். சிலரோ, கணநேர செக்ஸ் இன்பத்திற்காக தங்கள் கற்பை விற்றுவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, சகாக்களுடைய அல்லது எதிர்பாலார் ஒருவருடைய அபிமானத்தைப் பெற அதை தியாகம் செய்துவிடுகிறார்கள்.—நீதிமொழிகள் 13:20.
3 தங்களுடைய கற்பு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை காலம் கடந்த பிறகே பலர் உணருகிறார்கள். அதை இழந்துவிடுவதால் அவர்கள் பெரும்பாலும் கடுந்துயரங்களை அனுபவிக்கிறார்கள். பைபிள் குறிப்பிடுகிறபடி, ஒழுக்கக்கேட்டினால் வரும் பின்விளைவுகள் விஷம் போன்றவை, அவை ‘எட்டியைப் போலக் கசக்கும்.’ (நீதிமொழிகள் 5:3, 4) ஒழுக்கத்தில் சீரழிந்த இன்றைய சூழலில், உங்களுடைய கற்பை எப்படி காத்துக்கொள்ள முடியும்? நாம் எடுக்க வேண்டிய, ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று படிகள் மீது இப்போது கவனம் செலுத்தலாம்.
இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
4. அடையாளப்பூர்வமான இருதயம் என்பது என்ன, அதை நாம் ஏன் காத்துக்கொள்ள வேண்டும்?
4 இருதயத்தைக் காத்துக்கொள்வதே கற்பைக் காத்துக்கொள்வதற்கு வழி. “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்” என பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 4:23) ‘உன் இருதயம்’ என்பது இங்கு எதைக் குறிக்கிறது? இது சொல்லர்த்தமான இருதயத்தை அல்ல, ஆனால் அடையாளப்பூர்வமான இருதயத்தைக் குறிக்கிறது. உள்ளுக்குள் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது; உங்களுடைய சிந்தைகள், உணர்ச்சிகள், உள்நோக்கங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக’ என பைபிள் சொல்கிறது. (உபாகமம் 6:5) இது கற்பனைகளிலேயே பிரதான கற்பனை என்று இயேசு குறிப்பிட்டார். (மாற்கு 12:29, 30) அப்படியானால், நம்முடைய இந்த இருதயம் பெரும் மதிப்புடையது என்பதில் சந்தேகமில்லை. இதைக் காத்துக்கொள்வது தகுந்ததே.
5. இருதயம் எப்படி மதிப்புமிக்கதாயும் அதே சமயத்தில் ஆபத்தானதாயும் இருக்க முடியும்?
5 ஆனால், “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது மிகவும் கெட்டுப்போனது” என்றும் பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9, திருத்திய மொழிபெயர்ப்பு) இருதயம் எப்படி வஞ்சனையுள்ளதாக, நமக்கு ஆபத்தானதாக இருக்க முடியும்? உதாரணத்திற்கு ஒரு காரை எடுத்துக் கொள்ளுங்கள். இது விலைமதிப்புள்ள ஒரு சாதனம், அவசர நேரத்தில் ஒருவருடைய உயிரைக் காப்பாற்றவும் இது உதவும். ஆனால், ஸ்டியரிங்கை கட்டுப்படுத்தி காரை கவனமாக டிரைவர் ஓட்டவில்லையென்றால், அந்தக் காரே உயிரை பறிக்கும் சாதனமாகிவிடலாம். அவ்வாறே, உங்களுடைய இருதயத்தை காத்துக்கொள்ளவில்லை என்றால், அடிமனதின் ஒவ்வொரு ஆசையும் தூண்டுதலும் உங்களை கட்டுப்படுத்தி, வாழ்க்கை பாதையை அழிவின் பாதைக்கு திசை திருப்பிவிடும். “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்” என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 28:26) ஆம், ஒரு பயணத்தை துவங்குவதற்கு முன்பு சாலை வரைபடத்தைப் பார்ப்பது போல, உங்களை வழிநடத்துவதற்கு கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்தினால் நீங்கள் ஞானமாய் நடக்கவும் முடியும், அழிவிலிருந்து தப்பிக்கவும் முடியும்.—சங்கீதம் 119:105.
6, 7. (அ) பரிசுத்தம் என்றால் என்ன, யெகோவாவின் ஊழியர்களுக்கு அது ஏன் முக்கியம்? (ஆ) யெகோவாவின் பரிசுத்தத்தை அபூரண மனிதர்களும் பிரதிபலிக்க முடியும் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்?
6 நமது இருதயம் தானாகவே கற்பின் வழியில் திரும்பி விடாது. நாம்தான் அதை அந்த வழியில் திருப்ப வேண்டும். கற்பின் உண்மையான மதிப்பைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதே அதைச் செய்வதற்கு ஒரு வழி. கற்பு எனும் இந்தப் பண்பு, சுத்தம், மாசில்லாமை, பாவத்திலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றை குறிக்கும் பரிசுத்தத்தோடு நெருங்கிய தொடர்புடையது. பரிசுத்தம் என்பது யெகோவா தேவனுடைய இயல்பின் ஒரு பாகமாகவே இருக்கிற தனிச்சிறப்புமிக்க பண்பாகும். பைபிளிலுள்ள நூற்றுக்கணக்கான வசனங்கள் இந்தப் பண்பை யெகோவாவோடு இணைத்து குறிப்பிடுகின்றன. சொல்லப்போனால், “பரிசுத்தம் யெகோவாவுக்கு உரியது” என பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 28:36, NW) அப்படியானால், அந்த உயர்ந்த பண்பிற்கும் அபூரண மனிதராகிய நமக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
7 யெகோவா தமது வார்த்தையில் நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” (1 பேதுரு 1:16) ஆம், யெகோவாவின் பரிசுத்தத்தை நாம் பின்பற்ற முடியும்; நம்முடைய கற்பை காத்துக்கொண்டு, அவருக்கு முன்பாக சுத்தமாக இருக்க முடியும். ஆகவே கறைப்படுத்துகிற அசுத்தமான செயல்களை விட்டு விலகும்போது மகிழ்வூட்டும் உயர்ந்ததோர் சிலாக்கியத்தை—உன்னத கடவுளின் அருமையான பண்பை பிரதிபலிக்கும் சிலாக்கியத்தை—நாம் அடைகிறோம்! (எபேசியர் 5:1) இது அடைய முடியாத ஒன்று என நாம் நினைக்கக் கூடாது. ஏனென்றால், யெகோவா ஞானமும், நியாயமுமுள்ள எஜமான், நம் சக்திக்கு மிஞ்சியதை ஒருபோதும் நம்மிடம் கேட்க மாட்டார். (சங்கீதம் 103:13, 14; யாக்கோபு 3:17) உண்மைதான், ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் கற்புடன் இருப்பதற்கு முயற்சி தேவை. என்றாலும், ‘கிறிஸ்துவுக்கு நேர்மையையும் கற்பையும் வெளிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்’ என அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 11:3, NW) அப்படியானால், ஒழுக்க ரீதியில் கற்புடன் இருப்பதற்கு எல்லா முயற்சியையும் எடுக்க கிறிஸ்துவுக்கும் அவருடைய பிதாவுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் அல்லவா? நாம் ஒருபோதும் திரும்ப செலுத்த முடியாதளவுக்கு அதிகமான அன்பை அவர்கள் நம்மீது காண்பித்திருக்கிறார்களே. (யோவான் 3:16; 15:13) ஆகவே, சுத்தமான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் நன்றியுணர்வை காட்டுவது நம் சிலாக்கியம். இந்த விதத்தில் நம் கற்பை கருதுவோமானால், அதை உயர்வாக மதிப்போம், நம் இருதயத்தையும் காத்துக்கொள்வோம்.
8. (அ) அடையாளப்பூர்வ இருதயத்திற்கு நாம் எவ்விதத்தில் போஷாக்கு அளிக்கலாம்? (ஆ) நமது உரையாடல் நம்மைப் பற்றி எதை வெளிப்படுத்தலாம்?
8 மேலும், நாம் எதை உட்கொள்கிறோமோ அதற்கேற்பவும் நம் இருதயத்தை காத்துக்கொள்கிறோம். ஆகவே, நமது மனதிற்கும் இருதயத்திற்கும் தவறாமல் நல்ல ஆவிக்குரிய உணவை ஊட்டி, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது அவசியம். (கொலோசெயர் 3:2) அவ்வாறு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோம் என்பதை நம்முடைய உரையாடலும் காட்ட வேண்டும். மாம்ச பிரகாரமான, ஒழுக்கங்கெட்ட விஷயங்களை பேசுபவர்கள் என்ற பெயரெடுக்கிறோமென்றால், நம்முடைய இருதயம் எப்படிப்பட்டது என்பதை நாம் வெளிப்படுத்துகிறோம் என்று அர்த்தம். (லூக்கா 6:45) அதற்கு மாறாக, ஆவிக்குரிய, கட்டியெழுப்பும் விஷயங்களை பேசுபவர்கள் என்ற பெயரெடுப்போமாக. (எபேசியர் 5:3) நம் இருதயத்தை காத்துக்கொள்ள, நாம் தவிர்க்க வேண்டிய மிகவும் ஆபத்தான சில காரியங்கள் இருக்கின்றன; அவற்றில் இரண்டை நாம் ஆராயலாம்.
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்
9-11. (அ) 1 கொரிந்தியர் 6:18-ல் உள்ள ஆலோசனையை அலட்சியம் செய்பவர்கள் ஏன் படு மோசமான ஒழுக்கக்கேட்டில் சிக்கிவிடும் நிலையில் இருக்கிறார்கள்? விளக்குங்கள். (ஆ) வேசித்தனத்தை விட்டு விலகி ஓடுகிறோமென்றால் நாம் எதைத் தவிர்க்க வேண்டும்? (இ) உத்தம புருஷரான யோபு நமக்கு எத்தகைய சிறந்த முன்மாதிரியை வைத்திருக்கிறார்?
9 தம்முடைய ஆலோசனைகள் சிலவற்றை எழுதும்படி அப்போஸ்தலனாகிய பவுலை யெகோவா ஏவினார். இருதயத்தை காத்துக்கொண்டு கற்புடன் திகழ அவை அநேகருக்கு உதவி செய்திருக்கின்றன. “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 6:18) வெறுமனே “வேசித்தனத்தை தவிருங்கள்” என்று அவர் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். அப்படியானால், கிறிஸ்தவர்கள் அதைத் தவிர்ப்பது மட்டுமே போதுமானதல்ல. உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் அந்த இடத்தை விட்டே ஓடுவதைப் போல அவர்கள் இத்தகைய ஒழுக்கங்கெட்ட செயல்களை விட்டு ஓட வேண்டும். இந்த ஆலோசனையை அலட்சியம் செய்வோமானால், படு மோசமான ஒழுக்கக்கேட்டுக்குள் சிக்கிவிடும் வாய்ப்பு அதிகமாகி, கடவுளுடைய தயவை இழந்துவிடுவோம்.
10 இதை இவ்வாறு விளக்கலாம்: ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அம்மா தன்னுடைய குட்டிப் பையனை குளிப்பாட்டி, நல்ல டிரஸ் போட்டுவிடுகிறாள். வீட்டிலுள்ள எல்லாரும் கிளம்புவதற்குள் கொஞ்ச நேரம் வெளியே விளையாடட்டுமா என அவன் கேட்கிறான். அம்மாவும் சம்மதிக்கிறாள். ஆனால் ஒரு கண்டிஷன்—“வெளியே எங்கேயும் சகதி ஓரம் போகக் கூடாது, கையில, காலுல சகதியானா அடிப்பேன்” என்று சொல்கிறாள். இதெல்லாம் சொல்லி கொஞ்ச நேரம்கூட ஆகவில்லை, அவன் சகதியின் ஓரத்திலேயே அங்குமிங்குமாக ஆடித்திரிவதை அவள் பார்க்கிறாள். அவனுடைய உடம்பில் இதுவரை சகதி ஒன்றும் படவில்லை. இருந்தாலும், சகதி ஓரம் போகக்கூடாது என்று அம்மா சொன்னதை கேட்காததால் அவன் சிக்கலில் மாட்டப் போவது உறுதி. (நீதிமொழிகள் 22:15) அநேக இளைஞரும் அவர்களைவிட நன்கு விஷயம் தெரிந்த பெரியவர்களும்கூட இதே போன்ற தவறைதான் செய்கிறார்கள். எப்படி?
11 “இழிவான பாலியல் வேட்கைக்கு” அநேகர் அடிபணிந்திருக்கும் இந்தக் காலத்தில், முறைகேடான பாலியலை ஊக்குவிக்கும் ஆபாசத்துறை கொடிகட்டி பறக்கிறது. (ரோமர் 1:26, 27, NW) பத்திரிகைகள், புத்தகங்கள், வீடியோக்கள், இன்டர்நெட் ஆகியவற்றில் ஆபாசம் எனும் கொள்ளை நோய் படு வேகமாக பரவியுள்ளது. அவற்றிலுள்ள ஆபாசக் காட்சிகளை மனதில் பதிப்பவர்கள் உண்மையில் வேசித்தனத்தை விட்டு விலகி ஓடுவதில்லை. பைபிள் கொடுக்கும் எச்சரிப்பை அவர்கள் கேட்காமல் ஆபத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அதனோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருதயத்தை காத்துக்கொள்வதற்கு பதிலாக, பல வருடங்களானாலும் நினைவை விட்டு எளிதில் நீங்காத காட்சிகளால் அதற்கு அவர்கள் விஷமூட்டுகிறார்கள். (நீதிமொழிகள் 6:27) தவறு செய்ய தூண்டும் காரியங்களை பார்க்காதவாறு தன் கண்களோடே உடன்படிக்கை செய்துகொண்ட விசுவாசமுள்ள யோபுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோமாக. (யோபு 31:1) பின்பற்றுவதற்கு நிச்சயமாகவே அவர் ஒரு சிறந்த முன்மாதிரி!
12. காதலிக்கும் காலங்களில் கிறிஸ்தவ ஜோடிகள் எவ்வாறு ‘வேசித்தனத்திற்கு விலகியோடலாம்’?
12 குறிப்பாக, மணமுடிக்கும் நோக்கத்தோடு காதலிக்கும் காலப்பகுதியில் ‘வேசித்தனத்திற்கு விலகியோடுவது’ முக்கியம். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைந்த ஆனந்தமான ஒரு காலப்பகுதியாக அது இருக்க வேண்டும்; ஆனால் இளம் ஜோடிகள் சிலர் ஒழுக்கக்கேட்டுடன் விளையாடி அந்த ஆனந்தத்தை கெடுத்துப்போடுகிறார்கள். அவ்வாறு செய்கையில், சிறந்ததோர் தாம்பத்தியத்துக்கான அஸ்திவாரத்தை—சுயநலமற்ற அன்பு, தன்னடக்கம், யெகோவா தேவனுக்கு கீழ்ப்படிவது ஆகியவற்றின் அடிப்படையிலான உறவை—அவர்கள் இழந்துவிடுகிறார்கள். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ பையனும் பெண்ணும் காதலீடுபாடு கொண்ட காலத்தில் ஒழுக்கக்கேடாய் நடந்து விட்டனர். திருமணத்திற்கு பிறகு, தன் மனசாட்சி தன்னை வதைத்துக்கொண்டே இருந்ததாக அந்தப் பெண் சொன்னாள்; கல்யாண நாளைக்கூட சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் கெடுத்துப்போட்டது என்று சொன்னாள். “நான் செய்த தப்பை மன்னிக்கும்படி யெகோவாவிடம் பலமுறை கெஞ்சினேன்; ஆனால் ஏழு வருஷம் முடிந்த பிறகும்கூட என்னுடைய மனசாட்சி இன்னும் என்னை குத்திக்கொண்டே இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டாள். அப்படிப்பட்ட பாவங்களை செய்கிறவர்கள் கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியை நாடுவது முக்கியம். (யாக்கோபு 5:14, 15) என்றாலும், கிறிஸ்தவ ஜோடிகள் பலர் காதலிக்கும் சமயங்களில் ஞானமாக நடந்து இப்படிப்பட்ட ஆபத்துகளைத் தவிர்க்கிறார்கள். (நீதிமொழிகள் 22:3) தங்கள் பாசத்தை அளவோடு வெளிக்காட்டுகிறார்கள். தங்களுக்கு துணையாக இன்னொருவரையும் அழைத்துச் செல்வதன் மூலம் தனிமையான இடங்களில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதை தவிர்க்கிறார்கள்.
13. யெகோவாவை வணங்காத ஒருவரை கிறிஸ்தவர்கள் ஏன் காதலிக்கக் கூடாது?
13 யெகோவாவை வணங்காதவர்களை காதலிக்கும் கிறிஸ்தவர்கள் எக்கச்சக்கமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உதாரணமாக, யெகோவா தேவனை நேசிக்காத ஒருவருடன் நீங்கள் எப்படி இணைய முடியும்? யெகோவாவை நேசித்து, கற்பைக் குறித்த அவருடைய தராதரங்களை மதிப்பவருடனே கிறிஸ்தவர்கள் பிணைக்கப்படுவது முக்கியம். கடவுளுடைய வார்த்தை நமக்கு இவ்வாறு சொல்கிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?”—2 கொரிந்தியர் 6:14.
14, 15. (அ) ‘வேசித்தனம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை குறித்ததில் சிலரிடம் என்ன தவறான கருத்து நிலவுகிறது? (ஆ) ‘வேசித்தனம்’ என்ற வார்த்தையில் என்ன வகையான செயல்கள் உட்பட்டுள்ளன, கிறிஸ்தவர்கள் எப்படி ‘வேசித்தனத்திற்கு விலகி ஓடலாம்’?
14 அறிவும்கூட முக்கியம். வேசித்தனத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல், அதைவிட்டு நம்மால் விலகியோட முடியாது. இன்றைய உலகில் சிலர் ‘வேசித்தனம்’ என்ற வார்த்தையை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். திருமணம் செய்யாமலேயே தங்கள் பாலியல் ஆசைகளை திருப்தி செய்துகொள்ளலாம் என்றும், உடலும் உடலும் இணையாதவரை அதில் எந்தத் தவறும் இல்லையென்றும் பலர் நினைக்கிறார்கள். மணமாகாத பருவ வயதினர் கர்ப்பமாவதை கட்டுப்படுத்த முயலும் புகழ்பெற்ற சில மருத்துவ நிறுவனங்களும்கூட, கர்ப்பமாகாத விதத்தில் முறைகேடான பாலியலில் ஈடுபடுவதற்கு இளைஞரை ஊக்குவிக்கிறார்கள். இத்தகைய ஆலோசனை உண்மையில் தவறான பாதைக்குத்தான் வழிநடத்துகிறது. திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமாவதை தடுப்பதுதானே கற்பை காத்துக்கொள்வதென அர்த்தமாகிவிடாது. ‘வேசித்தனம்’ என்ற வார்த்தையில் எவ்வளவோ விஷயங்கள் உட்பட்டுள்ளன.
15 ‘வேசித்தனம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள போர்னியா என்ற கிரேக்க வார்த்தை விரிவான அர்த்தமுடையது. இது மணமாகாதவர்கள் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்வதோடு சம்பந்தப்பட்டது, முக்கியமாக பாலுறுப்புகளை தவறாக பயன்படுத்துவதை குறிக்கிறது. விபச்சார விடுதிகளில் சர்வ சாதாரணமாக நடந்து வரும் வாய்வழி புணர்ச்சி, ஆசனவழி புணர்ச்சி, இன்னொருவரின் பாலுறுப்புகளை கிளர்ச்சியடையச் செய்தல் ஆகியவை போர்னியாவில் உட்பட்டுள்ள செயல்களாகும். இந்த செயல்களெல்லாம் ‘வேசித்தனம்’ அல்ல என்று நினைப்பவர்கள் தங்களையே முட்டாள்களாக ஆக்கிக்கொண்டு சாத்தானுடைய கண்ணிக்குள் வீழ்ந்துவிட்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 2:26) கற்பைக் காத்துக்கொள்வது என்பது வேசித்தனத்தின் பாகமான எந்த செயலிலிருந்தும் வெறுமனே விலகியிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ‘வேசித்தனத்தை விட்டு விலகியோடுவதற்கு’ போர்னியா என்ற பெரும் பாவத்திற்கு வழிவகுக்கும் எல்லாவித பாலியல் அசுத்தத்தையும், ஒழுக்கங்கெட்ட நடத்தையையும் நாம் தவிர்த்தே ஆக வேண்டும். (எபேசியர் 4:19) இவ்வாறு செய்யும்போது நாம் கற்பை காத்துக்கொள்கிறோம்.
சரசமாடுவதன் ஆபத்துக்களை தவிருங்கள்
16. பைபிள் உதாரணம் காட்டுகிறபடி, என்ன சூழ்நிலையில் காதல் விளையாட்டில் ஈடுபடுவது பொருத்தமானது?
16 நமது கற்பை காத்துக்கொள்வதற்கு, சரசமாடுதல் என்ற மற்றொரு ஆபத்தைக் குறித்து விழிப்புடனிருப்பது அவசியம். ‘எதிர்பாலாருடன் சரசமாடுவது பெரிய தவறு இல்லை, அது வெறும் ஜாலியான விளையாட்டே’ என சிலர் வாதாடலாம். உண்மைதான், காதல் விளையாட்டுகளுக்கென ஒரு நேரமும் இடமும் இருக்கிறது. ஈசாக்கும் ரெபெக்காளும் ‘விளையாடிக் கொண்டிருந்ததை’ பார்த்தவர்கள், அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை அல்ல என்பதை புரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 26:7-9) அவர்கள் திருமணமானவர்களாக இருந்தார்கள். ஆகவே கணவன் மனைவியாக அவர்கள் கொஞ்சி விளையாடியது பொருத்தமானதே. ஆனால் சரசமாடுதலோ முற்றிலும் வித்தியாசமானது.
17. சரசமாடுதல் என்றால் என்ன, இந்தப் பிரச்சினையை எப்படி கட்டுப்படுத்தலாம்?
17 சரசமாடுவது என்றால் மணமுடிக்கும் எண்ணம் இல்லாமலேயே காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகும். மனிதரின் மனம் சிக்கலானது. ஆகவே, அவர்களால் எத்தனையோ வழிகளில் காதல் உணர்வுகளை வெளிக்காட்ட முடியும். அவற்றில் சில வெளிப்படையாக தெரியாது. (நீதிமொழிகள் 30:18, 19) அப்படியிருக்கும்போது, இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று கெடுபிடியான சட்டம் போடுவது இதற்கு உதவாது. மாறாக, அதைவிட உயரிய ஒன்று தேவைப்படுகிறது, அதாவது நேர்மையுடன் சுய பரிசோதனை செய்து பைபிள் நியமங்களை கருத்தாய் கடைப்பிடிப்பது தேவைப்படுகிறது.
18. சரசமாடுவதற்கு எது சிலரை தூண்டுகிறது, சரசமாடுவது ஏன் தீங்கானது?
18 எதிர்பாலர் ஒருவர் நம்மீது விருப்பம் காட்டும்போது நாம் உச்சிகுளிர்ந்து போகிறோம் என்பதை நம்மை நாமே நேர்மையுடன் பரிசோதிக்கையில் ஒப்புக்கொள்வோம். அது இயல்பானதே. ஆனால், அப்படிப்பட்ட விருப்பத்தை தூண்டுவதற்காகவே நாம் சரசமாடுகிறோமா? அதாவது வெறுமனே நம் சுயமதிப்பை கூட்டுவதற்காக அல்லது மற்றவர்களை நம்மீது விருப்பம்காட்ட வைப்பதற்காக சரசமாடுகிறோமா? அப்படியானால், அதனால் நாம் ஏற்படுத்தக்கூடிய வேதனையை பற்றி சிந்தித்திருக்கிறோமா? உதாரணமாக, “எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகும்போது இருதயம் இளைத்துப்போகும்” என நீதிமொழிகள் 13:12 (NW) கூறுகிறது. நாம் வேண்டுமென்றே ஒருவரோடு சரசமாடுகையில், அந்த நபர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதைக் குறித்து நாம் ஒருவேளை சிந்திக்காமல் போகலாம். அதாவது, அவனோ அல்லது அவளோ திருமண நோக்குடன் பழகுவதையும் அதன் பிறகு மணமுடிப்பதைப் பற்றியும் பல எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கலாம். ஆனால் அது ஏமாற்றத்தில் விளைவடையும்போதோ அப்படியே இடிந்து போய் விடலாம். (நீதிமொழிகள் 18:14) வேண்டுமென்றே மற்றவர்களுடைய உணர்ச்சிகளோடு விளையாடுவது கொடூரமானது.
19. சரசமாடுதல் கிறிஸ்தவ திருமணங்களை எப்படி சீரழிக்கலாம்?
19 திருமணமானவர்களோடு சரசமாடுவதற்கு எதிராக நம்மை காத்துக்கொள்வது மிகவும் முக்கியம். மணமான ஒருவர் மீது காதல் உணர்வுகளை வெளிக்காட்டுவது, அல்லது மணமான ஒருவர் திருமண பந்தத்தை மீறி மற்றொருவர் மீது காதல் உணர்வுகளை வெளிக்காட்டுவது தவறு. தங்களுடைய மணத்துணை அல்லாதவர்களிடம் காதல் உணர்வுகளை வளர்த்துக்கொள்வது சரிதான் என்ற தவறான கருத்து சில கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவுவது கவலை தரும் விஷயம். சிலர் தங்களுடைய அடிமனதின் எண்ணங்களை அப்படிப்பட்ட ஒரு “நண்பரிடம்” தெரிவிக்கிறார்கள், தங்களுடைய துணையிடம் சொல்லாத சில அந்தரங்க விஷயங்களையும்கூட தெரிவித்துவிடுகிறார்கள். விளைவு? காதல் உணர்வுகள் படிப்படியாக மலர்ந்து கடைசியில் உணர்ச்சி ரீதியில் அந்த ‘நண்பரையே’ முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்; அதனால் திருமண வாழ்க்கை ஆட்டங்காண ஆரம்பிக்கலாம், ஏன் சுக்குநூறாகியும் விடலாம். விபச்சாரத்தைப் பற்றி இயேசு கொடுத்த ஞானமான எச்சரிப்பை மணமான கிறிஸ்தவர்கள் நினைவில் வைத்திருப்பது நல்லது. விபச்சாரம் இருதயத்தில்தான் துளிர்விடுகிறது. (மத்தேயு 5:28) அப்படியானால், இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள், நாசகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளை தவிருங்கள்.
20. கற்பை எவ்வாறு கருத நாம் தீர்மானமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
20 உண்மைதான், இன்றைய ஒழுக்கங்கெட்ட உலகில் கற்புடன் நிலைத்திருப்பது எளிதல்ல. என்றாலும், இழந்த கற்பை மீண்டும் பெற முயலுவதைவிட அதைக் காத்துக்கொள்வது ரொம்பவே எளிது என்பதை நினைவில் கொள்ளுங்கள். யெகோவா “பெருமளவில் மன்னிக்கிறவர்,” என்பதும் தங்கள் பாவங்கள் நிமித்தம் உண்மையாய் மனந்திரும்புகிறவர்களை அவரால் சுத்திகரிக்க முடியும் என்பதும் உண்மைதான். (ஏசாயா 55:7, NW) என்றாலும், ஒழுக்கக்கேட்டில் வீழ்ந்துவிடுபவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளிலிருந்து அவர்களை யெகோவா பாதுகாப்பதில்லை. அந்த பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு, ஏன் காலம் பூராவும்கூட நீடிக்கலாம். (2 சாமுவேல் 12:9-12) ஆகவே, இருதயத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் கற்புடன் திகழ தீர்மானமாயிருங்கள். யெகோவா தேவனுக்கு முன்பாக நீங்கள் எடுத்துள்ள சுத்தமான கற்புள்ள நிலைநிற்கையை அரும்பெரும் பொக்கிஷமாக கருதுங்கள்—அதை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்!
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• கற்பு என்றால் என்ன, அது ஏன் மிகவும் முக்கியம்?
• நம் இருதயத்தை எப்படி காத்துக்கொள்ள முடியும்?
• வேசித்தனத்திற்கு விலகி ஓடுவதில் என்ன உட்பட்டுள்ளது?
• சரசமாடுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
[பக்கம் 11-ன் படம்]
காரை சரியாக ஓட்டவில்லை என்றால் அதுவே உயிருக்கு உலைவைத்து விடலாம்
[பக்கம் 12-ன் படங்கள்]
எச்சரிப்புகளை அலட்சியம் செய்தால் என்ன நேரிடலாம்?
[பக்கம் 13-ன் படம்]
காதலீடுபாடு கொள்கையில் கற்பைக் காத்துக்கொள்வது சந்தோஷத்தை அளிக்கிறது, கடவுளை கனப்படுத்துகிறது