பகைமை நிறைந்த உலகில் தயவு காட்ட பிரயாசப்படுதல்
“மனிதனிடமுள்ள விரும்பத்தக்க குணம் அவனுடைய அன்புள்ள தயவே.”—நீதிமொழிகள் 19:22, NW.
1. தயவு காட்டுவது ஏன் கடினமாக இருக்கலாம்?
உங்களை தயவுள்ள ஒரு நபராக நீங்கள் கருதுகிறீர்களா? ஆம் என்றால், இன்றைய உலகில் தொடர்ந்து தயவு காட்டுபவராக வாழ்வது உங்களுக்கு கொஞ்சம் கடினமாகவே இருக்கலாம். தயவு, ‘ஆவியின் கனியில்’ ஓர் அம்சம் என்பதாக பைபிளில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மை என்றாலும், கிறிஸ்தவ நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட தயவு காட்டுவது ஏன் மிக மிக கடினமாக இருக்கிறது? (கலாத்தியர் 5:22) இந்த உலகமுழுவதும் தயவுதாட்சண்யமில்லாத ஓர் ஆவி ஆளான பிசாசாகிய சாத்தானின் பிடியில் கிடக்கிறது என அப்போஸ்தலன் யோவான் எழுதிய கூற்றில் அதற்குரிய பதிலின் ஒரு பாகம் உள்ளது; சென்ற கட்டுரையில் அதைப் பற்றி பார்த்தோம். (1 யோவான் 5:19) ‘இவ்வுலகத்தின் அதிபதியாக’ இருப்பது சாத்தானே என இயேசு கிறிஸ்து அடையாளம் காட்டினார். (யோவான் 14:30) இதன் காரணமாக, இவ்வுலகம் அதனுடைய கலகக்கார அதிபதியின் மூர்க்கத்தனமான மனோபாவத்தை அப்படியே பின்பற்ற முயலுகிறது.—எபேசியர் 2:2.
2. என்னென்ன காரியங்கள் நாம் தயவு காட்டுவதை சவாலாக்கலாம்?
2 மற்றவர்கள் நம்மை தயவுதாட்சண்யம் இல்லாமல் நடத்தும்போது நம் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. கெட்ட எண்ணமுள்ள அயலகத்தாரோ, சிநேகப்பான்மையற்ற அந்நியரோ, ஏன் சில நேரங்களில் முன்பின் யோசிக்காமல் நடந்துகொள்ளும் நண்பரோ, குடும்ப அங்கத்தினரோகூட ஒருவேளை நம்மை தயவில்லாமல் நடத்தலாம். கடுகடுப்புடனும், ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசியவாறும் காட்டுக்கத்தல் கத்துகிற ஜனங்களோடு தொடர்பு வைக்க வேண்டிய போதெல்லாம் நமக்கு அதிக விசனமாக இருக்கலாம். மற்றவர்கள் இப்படி தயவில்லாமல் நடந்துகொள்ளும்போது, நமக்கு கோபம் கோபமாக வரலாம், அதோடு தயவற்ற செயலுக்கு பதிலடியாக தயவற்ற செயலையே திருப்பிச் செய்ய வேண்டுமென நாம் யோசிக்கவும் ஆரம்பித்து விடலாம். இத்தகைய மனப்பான்மை ஆவிக்குரிய அல்லது உடல் ரீதியான பிரச்சினைகளுக்குக்கூட வழிவகுத்துவிடலாம்.—ரோமர் 12:17.
3. தயவுள்ளவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு என்னென்ன பயங்கர பிரச்சினைகள் சோதனையாக வருகின்றன?
3 அழுத்தங்கள் நிறைந்த உலக நிலைமைகளும்கூட நாம் தயவு காட்டுவதை கடினமாக்கலாம். உதாரணத்திற்கு, பயங்கரவாத அச்சுறுத்தலாலும் செயல்களாலும் பொதுவாக மனிதவர்க்கம் கலக்கமடைகிறது; அதுமட்டுமல்ல, உயிரியல் ஆயுதங்களை அல்லது அணு ஆயுதங்களை பல்வேறு தேசங்கள் எங்கே உபயோகித்து விடுவார்களோ என்ற கவலையும் மனிதவர்க்கத்தை ஆட்டிப்படைக்கிறது. மேலும், கோடானுகோடி மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகிய வசதிகள் சரிவர இல்லாமல் வறுமையில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு இருண்ட சூழ்நிலையில் தொடர்ந்து தயவு காட்டுவது ஒரு சவாலாக ஆகிவிடுகிறது.—பிரசங்கி 7:7.
4. மற்றவர்களிடம் தயவு காட்டுவதைக் குறித்து யோசிக்கையில், என்ன தவறான முடிவுக்கு சிலர் வந்துவிடலாம்?
4 எனவே, தயவு காட்டுவது அவ்வளவு ஒன்றும் முக்கியமான விஷயமல்ல என ஒருவர் எளிதில் முடிவு செய்துவிடலாம், அது பலவீனத்திற்கான அறிகுறி எனவும் அவர் கருதலாம். குறிப்பாக, மற்றவர்கள் அவரை கொஞ்சமும் மதிக்காமல் கால்தூசியைப் போல நடத்தும்போது தான் அநியாயமாக நடத்தப்படுவதாக அவர் உணரக்கூடும். (சங்கீதம் 73:2-9) என்றாலும், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு பைபிள் சரியான வழிநடத்துதலை தருகிறது, அது இவ்வாறு சொல்கிறது: “மெதுவான [“சாந்தமான,” NW] பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” (நீதிமொழிகள் 15:1) கடவுளுடைய ஆவி பிறப்பிக்கும் கனியின் இரண்டு அம்சங்களான சாந்தமும் தயவும் ஒன்றோடொன்று நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கின்றன; கடினமான சவால்மிக்க சூழ்நிலைமைகளை எதிர்ப்படும்போது இந்தக் குணங்களை வெளிக்காட்டுவது பலனளிப்பதாக இருக்கும்.
5. எந்தெந்த சூழல்களில் தயவு காட்டுவது அவசியம்?
5 கடவுளுடைய ஆவியின் கனியை வெளிக்காட்டுவது கிறிஸ்தவர்களான நமக்கு மிக முக்கியமாக இருப்பதால், அந்தப் பண்புகளில் ஒன்றான தயவை எவ்வாறு காண்பிக்கலாம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பகைமை நிறைந்த இவ்வுலகில் தொடர்ந்து தயவு காட்டுவது சாத்தியமா? அப்படி சாத்தியமென்றால், நாம் தயவு காட்டுவதற்கு—குறிப்பாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தயவு காட்டுவதற்கு—அணைபோடும் சாத்தானின் செல்வாக்கிற்கு இடமளிப்பதில்லை என்பதை நாம் எந்தெந்த சூழல்களில் காட்டலாம்? குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், அக்கம்பக்கத்தில், ஊழியத்தில், சக வணக்கத்தாரிடத்தில் என எல்லாரிடமும் நாம் தொடர்ந்து எப்படி தயவு காட்டலாமென இப்போது சிந்திக்கலாம்.
குடும்பத்தில் தயவு காட்டுதல்
6. குடும்பத்தில் தயவு காட்டுவது ஏன் மிக முக்கியமானது, அதை எவ்வாறெல்லாம் காட்டலாம்?
6 யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் வழிநடத்துதலையும் பெறுவதற்கு ஆவியின் கனி அத்தியாவசியமானது, அது முழுமையாக வளர்க்கப்படவும் வேண்டும். (எபேசியர் 4:32) குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் தயவு காட்டுவதன் அவசியத்தை இப்போது நாம் கலந்தாலோசிக்கலாம். அன்றாட காரியங்களில், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தயவாகவும் கரிசனையாகவும் நடத்த வேண்டும்; தங்களுடைய பிள்ளைகளையும் அவ்வாறே நடத்த வேண்டும். (எபேசியர் 5:28-33; 6:1, 2) குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் விதத்திலும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளும் விதத்திலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சரியாக நடத்துகிற விதத்திலும் அத்தகைய தயவு பளிச்சென்று தெரிய வேண்டும். உடனுக்குடன் பாராட்டு தெரிவியுங்கள், ஆனால் உடனுக்குடன் கண்டனம் செய்யாதீர்கள்.
7, 8. (அ) குடும்பத்தில் உண்மையான தயவை காண்பிக்க வேண்டுமென்றால், எத்தகைய நடத்தையை நாம் தவிர்க்க வேண்டும்? (ஆ) குடும்பப் பிணைப்பு பலப்படுவதற்கு நல்ல பேச்சுத்தொடர்பு எப்படி உதவுகிறது? (இ) உங்கள் குடும்பத்தில் நீங்கள் எவ்வாறு தயவை காண்பிக்கலாம்?
7 நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் தயவாக நடந்துகொள்வது அப்போஸ்தலன் பவுல் கூறிய பின்வரும் அறிவுரைக்கு இணங்க நடப்பதை உட்படுத்துகிறது: “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.” கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒருவருக்கொருவர் மரியாதையுள்ள விதத்தில் பேச வேண்டும். ஏன்? ஏனெனில், உறுதியான, ஆரோக்கியமான குடும்பங்களுக்கு நல்ல பேச்சுத்தொடர்புதான் உயிர்நாடியாக இருக்கிறது. மனஸ்தாபங்கள் எழும்போது வாக்குவாதத்தில் ஜெயிக்க முயலுவதற்கு பதிலாக பிரச்சினையை தீர்க்க முயலுங்கள். சந்தோஷமுள்ள குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் தயவையும் கரிசனையையும் காட்டுவதற்கே ஊக்கமாய் முயலுகிறார்கள்.—கொலோசெயர் 3:8, 12-14.
8 தயவு என்பது ஒரு நல்ல பண்பாகும்; மற்றவர்களுக்கு நல்லது செய்யவும் அது நம்மை தூண்டுகிறது. இதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரயோஜனமுள்ளவர்களாக, கரிசனையுள்ளவர்களாக, உதவியளிப்பவர்களாக இருக்க நாம் பிரயாசப்படுகிறோம். குடும்பத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் இத்தகைய தயவை காண்பிக்க தனிப்பட்டவர்களாகவும் கூட்டாகவும் முயற்சியெடுப்பது அவசியப்படுகிறது. இப்படி செய்கையில் கடவுளுடைய ஆசீர்வாதத்தை அவர்கள் பெறுவார்கள், அதோடு சபையிலும் சமுதாயத்திலும் தயவே உருவான கடவுளாகிய யெகோவாவுக்கு கனத்தையும் சேர்ப்பார்கள்.—1 பேதுரு 2:12.
வேலை செய்யும் இடத்தில் தயவு காட்டுதல்
9, 10. வேலை செய்யும் இடத்தில் எழக்கூடிய சில பிரச்சினைகளை விளக்குங்கள், அவற்றை எப்படி தயவோடு கையாளலாம் என்பதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள்.
9 அன்றாடம் வேலைக்கு போய்வர வேண்டிய ஒரு கிறிஸ்தவருக்கு உடன் வேலையாட்களிடம் தயவு காட்டுவது சவாலாக இருக்கலாம். அவரோடு வேலை செய்பவர்கள் அவர் மீதுள்ள போட்டியாலும் பொறாமையாலும் ஏமாற்றியோ தந்திரமாகவோ அவரது வேலைக்கே உலை வைத்துவிடலாம், இவ்விதமாக அவர் மீது முதலாளிக்கு இருந்த நல்ல அபிப்பிராயத்தை கெடுத்துவிடலாம். (பிரசங்கி 4:4) அப்படிப்பட்ட சூழ்நிலையில் தயவு காட்டுவது அவ்வளவு எளிதல்ல. என்றாலும், தயவோடு நடந்துகொள்வதே சரியான காரியம் என்பதை மனதில் வைக்கும் யெகோவாவின் ஊழியர் ஒருவர், சுமுகமாக பழகாதவர்களையும் ஆதாயப்படுத்திக்கொள்ள தன்னால் ஆன மட்டும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். கரிசனையோடு நடந்துகொள்வது அவ்வாறு மற்றவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள உதவலாம். ஒருவேளை, சக வேலையாள் ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தாலோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது சுகமில்லாமல் இருந்தாலோ அதைப் பற்றி நீங்கள் அக்கறையோடு இருப்பதை காண்பிக்கலாம். வெறுமனே நலம் விசாரிப்பதுகூட அந்த நபருடைய மனதில் நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கி விடலாம். ஆம், கிறிஸ்தவர்கள் தங்களால் முடிந்தவரை சமாதானத்தையும் ஐக்கியத்தையும் முன்னேற்றுவிக்க பாடுபட வேண்டும். அக்கறையோடும் கரிசனையோடும் சொல்லப்படுகிற தயவான ஒரு வார்த்தை சில சமயங்களில் நிலைமையை சரிசெய்ய உதவுவதாக இருக்கும்.
10 மற்ற சந்தர்ப்பங்களில், ஒரு முதலாளி தன்னுடைய சொந்தக் கருத்துக்களை தன்கீழ் வேலை பார்ப்பவர்கள் மீது திணித்து, ஏதோவொரு தேசிய நிகழ்ச்சியிலோ வேதப்பூர்வமற்ற கொண்டாட்டத்திலோ அவர்கள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தலாம். அதில் கலந்துகொள்ள ஒரு கிறிஸ்தவனுடைய மனசாட்சி இடங்கொடுக்காதபோது, அது சச்சரவில் முடிவடையலாம். அந்த முதலாளியின் விருப்பத்திற்கு தான் இணங்கிப்போவது எவ்வளவு பெரிய தவறென்று அந்த சமயத்தில் நீண்ட விளக்கமளித்துக் கொண்டிருப்பது ஞானமாக இருக்காது. ஏனென்றால், கிறிஸ்தவ நம்பிக்கைகளை கொண்டிராதவர்களுக்கு, அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதே சரியான காரியமாக தோன்றலாம். (1 பேதுரு 2:21-23) ஒருவேளை, அந்நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்துகொள்வதில்லை என்பதற்கான காரணங்களை தயவோடு விளக்கிக் கூறலாம். அவர்கள் ஏளனமாக பழித்துப் பேசும்போது, பதிலுக்கு நீங்களும் ஏளனமாக பேசாதீர்கள். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று ரோமர் 12:18-ல் கொடுக்கப்பட்டுள்ள அருமையான ஆலோசனையை பின்பற்றுவதே ஒரு கிறிஸ்தவருக்கு நல்லது.
பள்ளியில் தயவு காட்டுதல்
11. பள்ளியில் சக மாணவர்களிடம் தயவு காட்டுவதில் பிள்ளைகள் என்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள்?
11 சக மாணவர்களிடம் தயவு காட்டுவது பிள்ளைகளுக்கு உண்மையிலேயே ஒரு சவாலாக இருக்கலாம். தங்கள் வகுப்பிலுள்ள மாணவர்களின் அபிமானத்தைப் பெற வேண்டுமென்று இளைஞர்கள் பெரும்பாலும் துடிக்கிறார்கள். தங்களை மற்ற மாணவர்கள் ஹீரோக்களைப் போல பார்க்க வேண்டும் என்பதற்காக சில பையன்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள், ஏன் பள்ளியில் மற்ற பிள்ளைகளிடம் அடாவடித்தனம் பண்ணுமளவுக்குக்கூட சென்றுவிடுகிறார்கள். (மத்தேயு 20:25) மற்ற பிள்ளைகளோ தாங்கள் பெரிய அறிவாளிகளென்று காட்டிக்கொள்வதை விரும்புகிறார்கள்; விளையாட்டிலோ வேறு ஏதாவது காரியங்களிலோ தங்களுக்குள்ள திறமைகளை காட்டி அலட்டிக்கொள்கிறார்கள். இப்படி பெரிதாக அலட்டிக்கொள்கிற போதெல்லாம், அவர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களையும் மற்ற மாணவர்களையும் தயவின்றி நடத்துகிறார்கள்; இத்தகைய திறமைகள் தங்களுக்கு இருப்பதால் மற்றவர்களைவிட தாங்கள் உயர்வானவர்கள் என தவறாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை அவ்வாறு நடத்துகிறார்கள். இளம் கிறிஸ்தவர்கள், ஆணாகட்டும், பெண்ணாகட்டும், அத்தகைய நபர்களைப் போல் நடந்துகொள்ளாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (மத்தேயு 20:26, 27) “அன்பு நீடிய சாந்தமும், தயவுமுள்ளது” என்றும், அன்பு “தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” என்றும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஆகையால், ஓர் இளம் கிறிஸ்தவன் தன் பள்ளி மாணவர்களிடம் பழகும்போது, தயவுதாட்சண்யமில்லாமல் நடப்பவர்களுடைய மோசமான மாதிரியைப் பின்பற்றுவதற்கு பதிலாக, வேதப்பூர்வ அறிவுரைகளை பின்பற்றவே கடமைப்பட்டிருக்கிறான்.—1 கொரிந்தியர் 13:4.
12. (அ) தங்கள் ஆசிரியர்களிடம் தயவோடு நடந்துகொள்வது இளம் பிள்ளைகளுக்கு ஏன் சவாலாக இருக்கலாம்? (ஆ) தயவற்ற விதத்தில் நடந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படும்போது, யாருடைய உதவியைக் குறித்து பிள்ளைகள் நிச்சயமாக இருக்கலாம்?
12 பிள்ளைகள் தங்கள் ஆசிரியர்களையும் தயவோடு நடத்த வேண்டும். அநேக மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டு அற்ப சந்தோஷமடைகிறார்கள். பள்ளி சட்டதிட்டங்களை மீறுவதன் மூலம் தங்கள் ஆசிரியர்களிடம் மரியாதையில்லாமல் நடந்துகொள்வது தங்கள் கெட்டிக்காரத்தனத்தை காட்டுகிறதென நினைத்துக் கொள்கிறார்கள். இத்தகைய மாணவர்கள் மற்ற பிள்ளைகளை பயமுறுத்தி, தங்களோடு கூட்டுச்சேரவும் செய்துவிடலாம். ஓர் இளம் கிறிஸ்தவ ஆணோ பெண்ணோ அவர்களோடு கூட்டுச்சேர மறுக்கும்போது, அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாகலாம் அல்லது மோசமாக நடத்தப்படலாம். அந்தக் கல்வி ஆண்டு முடிவடையும் வரை இத்தகைய நிலைமைகளை சந்திப்பது, தயவு காட்டத் தீர்மானித்திருக்கும் ஒரு கிறிஸ்தவருக்கு பெரும் சோதனையாக இருக்கலாம். என்றாலும், யெகோவாவின் பற்றுமாறா ஊழியர்களாக இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். வாழ்க்கையின் இப்படிப்பட்ட கடினமான சமயங்களில் தம்முடைய ஆவியின் மூலம் யெகோவா உங்களை ஆதரித்துக் காப்பார் என்பதில் நிச்சயமாய் இருங்கள்.—சங்கீதம் 37:28.
அக்கம்பக்கத்தில் தயவு காட்டுதல்
13-15. ஒருவருடைய அக்கம்பக்கத்தாரிடம் அன்பு காட்டுவதற்கு எது தடையாக நிற்கலாம், இத்தகைய சவால்களை எவ்வாறு மேற்கொள்ளலாம்?
13 நீங்கள் ஒரு தனி வீட்டில் குடியிருந்தாலும் சரி, அடுக்குமாடி வீடுகளில் குடியிருந்தாலும் சரி, அல்லது வேறு ஏதோவொரு இடத்தில் குடியிருந்தாலும் சரி, உங்கள் அயலகத்தாரிடம் எந்தெந்த வழிகளில் தயவு காட்டுவதென்றும் அவர்களுடைய நலனில் உங்களுக்கு அக்கறை இருப்பதை எப்படியெல்லாம் காட்டுவதென்றும் நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். ஆனால், இப்படி செய்வது எப்போதுமே சுலபமாய் இருப்பதில்லை.
14 உங்களுடைய இனம், தேசம் அல்லது மதம் ஆகியவற்றின் காரணமாக பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் உங்களைப் பற்றி தப்பான அபிப்பிராயங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது? சில நேரங்களில் அவர்கள் உங்களிடம் கடுகடுப்பாக நடந்துகொண்டாலோ உங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டிருந்தாலோ என்ன செய்வது? யெகோவாவின் ஓர் ஊழியராக நாம் முடிந்த மட்டும் தயவு காட்டும்போது அது நன்மையில் முடிவடையும். இவ்வாறு செய்யும்போது, நீங்கள் மிக வித்தியாசமான இனிய நபராக தனித்து நிற்பீர்கள்; தயவு காட்டுவதில் மிகச் சிறந்த முன்மாதிரியான யெகோவாவுக்கு உண்மையிலேயே துதி சேர்ப்பவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தயவோடு நடந்துகொள்வதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரருடைய மனம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். யாருக்குத் தெரியும், அவரும்கூட ஒருவேளை எதிர்காலத்தில் யெகோவாவை துதிப்பவராக ஆகலாம்.—1 பேதுரு 2:12.
15 அப்படியானால், அக்கம்பக்கத்தாரிடம் நாம் எவ்வாறு தயவு காட்டலாம்? குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் ஆவியின் கனியை வெளிக்காட்டி, நல்நடத்தையைக் காத்துக்கொள்வது ஒரு வழியாகும், அதை உங்கள் அக்கம்பக்கத்தார் ஒருவேளை கவனிக்கலாம். சில சமயங்களில், உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு நீங்கள் அன்புடன் ஏதாவது உபகாரம் செய்யலாம். மற்றவர்களுடைய நலனில் உள்ளார்ந்த அக்கறை காண்பிப்பதே தயவு என்பதை மறந்துவிடாதீர்கள்.—1 பேதுரு 3:8-12.
ஊழியத்தில் தயவு காட்டுதல்
16, 17. (அ) நம்முடைய ஊழியத்தில் தயவு காட்டுவது ஏன் முக்கியம்? (ஆ) வெளி ஊழியத்தின் வெவ்வேறு அம்சங்களில் நாம் எவ்வாறு தயவு காட்டலாம்?
16 நம் கிறிஸ்தவ ஊழியத்தின்போது, ஜனங்களை அவர்கள் வீடுகளிலும், அவர்களுடைய வியாபார ஸ்தலங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்க ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் நாம் தீவிர முயற்சி எடுக்கிறோம்; அவ்வாறு செய்யப்படும் ஊழியத்தில் தயவு காட்டுவது முக்கியம். எப்போதுமே தயவுள்ளவராக இருக்கும் யெகோவாவை நாம் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.—யாத்திராகமம் 34:6.
17 ஊழியத்தில் தயவு காண்பிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் என்னென்ன உட்பட்டிருக்கிறது? உதாரணத்திற்கு, நீங்கள் தெரு ஊழியத்தில் ஈடுபட்டிருக்கையில், ஜனங்களை அணுகும்போது அவர்களிடம் சுருக்கமாகவும் அன்பாகவும் பேசுங்கள். பொதுவாக நடைபாதைகளில் அதிக ஜனநெரிசல் இருக்கும் என்பதால், நடுவில் நின்றுகொண்டு வழியை மறிக்காதவாறு கவனமாக இருங்கள். அதோடு, வியாபார ஸ்தலங்களில் சாட்சி கொடுக்கும்போது, சுருக்கமாக பேசுவதன் மூலம் தயவு காட்டுங்கள், ஆம், வாடிக்கையாளர்களையும் கடைக்காரர் கவனிக்க வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள்.
18. நம் ஊழியத்தில் தயவு காட்டுவதில் பகுத்துணர்வு என்ன பங்கை வகிக்கிறது?
18 வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது, விவேகமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்குள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதற்காக அதிக நேரம் அங்கேயே இருந்துவிடாதீர்கள், குறிப்பாக மோசமான சீதோஷ்ண நிலை இருக்கும்போது அவ்வாறு செய்யாதீர்கள். ஒரு நபர் இக்கட்டாக உணர ஆரம்பிக்கையிலும், நீங்கள் அங்கு இருப்பதால் எரிச்சலடைய ஆரம்பிக்கையிலும் அதை உங்களால் பகுத்துணர முடிகிறதா? ஒருவேளை நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள வீடுகளை, யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி சென்று சந்திப்பவர்களாக இருக்கலாம். அப்படியென்றால், ஜனங்களிடம் அதிக கரிசனையைக் காட்டுங்கள், எப்போதுமே தயவாகவும் இனிமையாகவும் நடந்துகொள்ளுங்கள். (நீதிமொழிகள் 17:14) ஒரு வீட்டுக்காரர் தான் அன்று விஷயத்தை கேட்க முடியாததற்கான காரணத்தை சொல்லும்போது அதை ஒப்புக்கொள்ளுங்கள். கொஞ்ச நாளைக்குப் பிறகு உங்கள் கிறிஸ்தவ சகோதரர்களோ சகோதரிகளோ மறுபடியும் அந்த வீட்டுக்குச் செல்வார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஊழியத்தில் நீங்கள் கடுகடுப்பான ஒருவரை சந்தித்தீர்களென்றால், அவரிடம் தயவு காட்ட விசேஷ முயற்சி எடுங்கள். உங்கள் குரலை உயர்த்தாதீர்கள் அல்லது முகத்தை சுளிக்காதீர்கள்; மாறாக அமைதலுடன் பேசுங்கள். தயவுள்ள ஒரு கிறிஸ்தவர் வீட்டுக்காரருடன் வீணாக தர்க்கம் செய்ய மாட்டார். (மத்தேயு 10:11-14) ஒருவேளை அந்த வீட்டுக்காரர் என்றோ ஒருநாள் நற்செய்திக்கு செவிசாய்த்தாலும் சாய்க்கக்கூடும்.
சபைக் கூட்டங்களில் தயவு காட்டுதல்
19, 20. சபையில் ஏன் தயவு காட்ட வேண்டும், எவ்விதத்தில் அதை காட்டலாம்?
19 சக வணக்கத்தாரிடம் தயவு காட்டுவதும்கூட மிக முக்கியமானது. (எபிரெயர் 13:1) நாம் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதால், எல்லா விஷயங்களிலும் ஒருவரோடு ஒருவர் தயவு காட்டுவது அத்தியாவசியமாக இருக்கிறது.
20 ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்று, இரண்டு, அல்லது மூன்று சபைகளோடு ஒரு சபை பகிர்ந்துகொண்டிருந்தால், மற்ற சபைகளில் உள்ளவர்களோடு தயவுடன் நடந்துகொள்வது முக்கியம்; அவர்களோடு சேர்ந்து சில காரியங்களில் ஈடுபடும்போது, அவர்களுக்குரிய கனத்தை கொடுங்கள். கூட்டங்களுக்கான நேரத்தை திட்டமிடும்போதும், சுத்தப்படுத்துதல் அல்லது சீரமைத்தல் போன்ற அத்தியாவசிய காரியங்களுக்கு ஏற்பாடு செய்யும்போதும் போட்டி மனப்பான்மை இருந்தால் ஒற்றுமையோடு செயல்பட முடியாமல் போய்விடும். ஒருவேளை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும்கூட, தயவாகவும் கரிசனையாகவும் நடந்துகொள்ளுங்கள். இப்படி செய்யும்போது, நாம் காட்டும் தயவுக்கு வெற்றி கிடைக்கும், அதுமட்டுமல்ல மற்றவர்களுடைய நலனில் நீங்கள் காண்பிக்கும் அக்கறைக்காக யெகோவா உண்மையிலேயே உங்களை ஆசீர்வதிப்பார்.
தொடர்ந்து தயவு காட்டுங்கள்
21, 22. கொலோசெயர் 3:12-ன்படி, நாம் என்ன செய்ய உறுதிபூண்டிருக்க வேண்டும்?
21 தயவு என்பது பல விஷயங்களை உள்ளடக்குகிற அதிமுக்கிய பண்பாக இருப்பதால், அது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது. எனவே இந்தப் பண்பை நம்முடைய கிறிஸ்தவ ஆள்தன்மையின் இன்றியமையாத பாகமாக நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு தயவாக நடந்துகொள்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
22 ஒவ்வொரு நாளும் நாம் அனைவருமே மற்றவர்களிடம் தயவோடு நடந்துகொள்வோமாக; இந்த விதத்தில், அப்போஸ்தலன் பவுலுடைய பின்வரும் வார்த்தைகளை தனிப்பட்ட விதத்தில் பொருத்துவோமாக: “நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்”கொள்ளுங்கள்.—கொலோசெயர் 3:12.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தயவு காட்டுவதை ஒரு கிறிஸ்தவருக்கு எது கடினமாக்குகிறது?
• குடும்பத்தில் தயவு காட்டுவது ஏன் முக்கியமானது?
• பள்ளியிலும், வேலை செய்யும் இடத்திலும், அக்கம்பக்கத்திலும் தயவு காட்டுவதை கடினமாக்கும் சில காரியங்கள் யாவை?
• ஊழியத்தின்போது கிறிஸ்தவர்கள் எப்படி தயவு காட்டலாம் என்பதை விளக்குங்கள்.
[பக்கம் 18-ன் படம்]
குடும்பத்திலுள்ள அனைவரும் தயவு காட்டும்போது ஐக்கியமும் ஒற்றுமையும் வளர்கிறது
[பக்கம் 19-ன் படம்]
சக வேலையாளுக்கோ அவருடைய குடும்பத்தாருக்கோ உடல் சுகமில்லாமல் போகும்போது நீங்கள் தயவு காட்டலாம்
[பக்கம் 20-ன் படம்]
கேலி கிண்டல் செய்யப்பட்டாலும் உண்மையோடு தயவு காட்டுபவர்களை யெகோவா ஆதரிக்கிறார்
[பக்கம் 21-ன் படம்]
பக்கத்து வீட்டுக்காரருக்கு தேவை ஏற்படுகையில் உபகாரம் செய்வது தயவின் வெளிக்காட்டு