எரேமியாவைப் போல திடமனதுடன் இருங்கள்
“கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.”—சங்கீதம் 27:14.
1. யெகோவாவின் சாட்சிகள் எந்த சிறந்த ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறார்கள்?
யெகோவாவின் சாட்சிகள் ஆவிக்குரிய பரதீஸில் வாழ்கிறார்கள். (ஏசாயா 11:6-9) யெகோவா தேவனோடும் ஒருவருக்கொருவரும் சமாதானமாக இருக்கிற சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து துன்பம் மிகுந்த இவ்வுலகில் நிகரற்ற ஆவிக்குரிய சூழலை அனுபவிக்கிறார்கள். (சங்கீதம் 29:11; ஏசாயா 54:13) அவர்களுடைய அந்த ஆவிக்குரிய பரதீஸ் விரிவடைந்து வருகிறது. ‘மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிற’ அனைவரும் அந்த விரிவாக்கத்தில் பங்குகொள்கிறார்கள். (எபேசியர் 6:6) எப்படி? பைபிள் நியமங்களின்படி வாழ்வதன் மூலமும், அவற்றை மற்றவர்களுக்கு கற்பிப்பதன் மூலமும் அதில் பங்குகொள்கிறார்கள். இவ்வாறு தங்களோடு சேர்ந்து அந்தப் பரதீஸின் அளவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்க மற்றவர்களையும் அழைக்கிறார்கள்.—மத்தேயு 28:19, 20; யோவான் 15:8.
2, 3. மெய்க் கிறிஸ்தவர்கள் எவற்றை சகிக்க வேண்டியிருக்கிறது?
2 ஆனால், நாம் ஆவிக்குரிய பரதீஸில் இருக்கிறோம் என்பதற்காக நமக்கு சோதனைகளே வராது என்று அர்த்தமல்ல. நாம் இன்னமும் அபூரணர்களாகத்தான் இருக்கிறோம்; வியாதி, முதுமை, மரணம் என இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, ‘கடைசி நாட்களைப்’ பற்றிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தையும் கண்கூடாகப் பார்க்கிறோம். (2 தீமோத்தேயு 3:1) போர், குற்றச்செயல், நோய், பஞ்சம் போன்ற பயங்கர இன்னல்கள் முழு மனிதவர்க்கத்தையும் துயரத்தில் ஆழ்த்துகின்றன; யெகோவாவின் சாட்சிகளும் இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.—மாற்கு 13:3-10; லூக்கா 21:10, 11.
3 அதுமட்டுமின்றி, ஆவிக்குரிய பரதீஸில் இதமான சூழல் நிலவுகையில் எதிர்ப்பு எனும் கடுங்குளிர்க் காற்று வெளியே வீசிக் கொண்டிருப்பதை நாம் நன்கு அறிவோம். தம்மை பின்பற்றியவர்களை இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:18-21) இன்றைக்கும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. நம்முடைய வணக்கமுறை பெரும்பாலோருக்கு இன்னமும் புரியவில்லை, அப்படி ஒருவேளை புரிந்தாலும் அதை அவர்கள் மதிப்பதில்லை. சிலர் நம் மீது குற்றம் கண்டுபிடிக்கிறார்கள், ஏளனமாக பேசுகிறார்கள், இயேசு எச்சரித்தது போல பகைக்கவும் செய்கிறார்கள். (மத்தேயு 10:22) நமக்கு கெடுதல் செய்வதற்காக நம்மைப் பற்றி தவறான தகவல்களும் தீய பிரச்சாரங்களும் மீடியாவில் அடிக்கொருதரம் வெளியிடப்படுகின்றன. (சங்கீதம் 109:1-3) ஆம், நாம் அனைவருமே சவால்மிக்க சூழ்நிலைகளை எதிர்ப்படுகிறோம், இதனால் நம்மில் சிலர் மனந்தளர்ந்து போய்விடலாம். இத்தகைய சூழல்களில் நாம் எவ்வாறு சகித்திருக்க முடியும்?
4. சகித்திருப்பதற்கு நாம் யாருடைய உதவியை நாடுகிறோம்?
4 யெகோவா நமக்கு கண்டிப்பாக உதவுவார். தேவ ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19; 1 கொரிந்தியர் 10:13) நாம் யெகோவாவில் முழு நம்பிக்கை வைக்கும்போது, எந்தக் கஷ்டத்தையும் சகிப்பதற்கு அவர் நமக்கு பலம் தருவாரென்பதற்கு நம்மில் அநேகர் ஆதாரமளிக்க முடியும். அவர் மீது நமக்குள்ள அன்பும், நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள சந்தோஷமும் மனச்சோர்வு மற்றும் பயத்தை எதிர்த்துப் போரிட நமக்கு உதவுகின்றன. (எபிரெயர் 12:2) இதன் காரணமாகவே, கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாம் தொடர்ந்து உறுதியோடு இருக்கிறோம்.
கடவுளுடைய வார்த்தை எரேமியாவை பலப்படுத்தியது
5, 6. (அ) சகிப்புத்தன்மையை காண்பித்த உண்மை வணக்கத்தாரில் யாருடைய உதாரணங்கள் நமக்கு இருக்கின்றன? (ஆ) ஒரு தீர்க்கதரிசியாக சேவிக்கும்படி பொறுப்பளிக்கப்பட்டபோது எரேமியா எப்படி பிரதிபலித்தார்?
5 ஆரம்பத்திலிருந்தே யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தைக் கண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர், யெகோவா தம் கோபத்தில் உண்மையற்றவர்களை நியாயந்தீர்த்த காலங்களில் வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட உண்மை வணக்கத்தாரில் எரேமியாவும் அவருடைய தோழர்களில் சிலரும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் அடங்குவர். நம்மை உற்சாகப்படுத்துவதற்காக இவர்களின் சரித்திரப்பூர்வ உதாரணங்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்வதிலிருந்து நாம் அதிகத்தை கற்றுக்கொள்ளலாம். (ரோமர் 15:4) உதாரணமாக, எரேமியாவை எடுத்துக்கொள்ளுங்கள்.
6 யூதாவில் ஒரு தீர்க்கதரிசியாக சேவிக்கும்படி இளம் பிராயத்திலேயே எரேமியாவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டது. அந்த நியமிப்பு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்தக் காலத்தில் அநேகர் பொய்க் கடவுட்களை வணங்கி வந்தார்கள். எரேமியா ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்தில் ராஜாவாக இருந்த யோசியா விசுவாசமிக்கவராக திகழ்ந்தாலும், அவருக்குப் பின் ஆட்சி செய்த எல்லா ராஜாக்களுமே விசுவாசமற்றவர்களாக இருந்தார்கள்; அதுமட்டுமல்ல, ஜனங்களுக்கு போதிக்க கடமைப்பட்டிருந்த பெரும்பாலான தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும்கூட சத்தியத்தை ஆதரிக்கவில்லை. (எரேமியா 1:1, 2; 6:13; 23:11) அத்தகைய ஒரு சூழலில், ஒரு தீர்க்கதரிசியாக சேவிக்கும்படி எரேமியாவிற்கு யெகோவா பொறுப்பளித்தபோது அவர் எவ்வாறு உணர்ந்தார்? அவர் பயந்தார்! (எரேமியா 1:8, 17) தான் முதலில் எப்படி பிரதிபலித்தார் என்பதை எரேமியா இவ்வாறு நினைவுகூருகிறார்: “அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறு பிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.”—எரேமியா 1:6.
7. எரேமியா தன்னுடைய பிராந்தியத்தில் எத்தகைய பிரதிபலிப்பை சந்தித்தார், இதனால் அவர் எப்படி உணர்ந்தார்?
7 எரேமியாவின் பிராந்தியத்திலிருந்த பெரும்பாலோர் செய்தியைக் காதுகொடுத்து கேட்கவில்லை; அவர்களிடமிருந்து எரேமியா பல முறை பலத்த எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. ஒருமுறை பஸ்கூர் என்ற ஆசாரியன் அவரை அடித்தான், கைகால்களை தொழுமர சட்டத்தில் பிணைக்க கட்டளையிட்டான். அந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை எரேமியா சொல்கிறார்: “நான் அவரைப் [யெகோவாவை] பிரஸ்தாபம் பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்.” சில சமயங்களில் நீங்களும்கூட எரேமியாவைப் போலவே உணர்ந்திருக்கலாம், அதாவது ஊழியத்தை நிறுத்திவிட வேண்டுமென நினைத்திருக்கலாம். ஆனால் சோர்ந்து போகாதிருக்க எது எரேமியாவுக்கு உதவியது என்பதை கவனியுங்கள். அவர் சொன்னார்: “அவருடைய வார்த்தை [கடவுளுடைய செய்தி] என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப் போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.” (எரேமியா 20:9) கடவுளுடைய வார்த்தை உங்களையும் அதே விதமாக பாதிக்கிறதா?
எரேமியாவின் தோழர்கள்
8, 9. (அ) தீர்க்கதரிசியான உரியா என்ன பலவீனத்தை வெளிக்காட்டினார், அதன் விளைவு என்ன? (ஆ) பாருக் மனதளவில் சோர்ந்துவிடக் காரணமென்ன, அவருக்கு எப்படி உதவியளிக்கப்பட்டது?
8 எரேமியா ஒருவர் மாத்திரமே அப்போது தீர்க்கதரிசியாக இருக்கவில்லை. அவருக்கு தோழர்களும் இருந்தார்கள், இது நிச்சயம் அவரை பலப்படுத்தியிருக்கும். என்றபோதிலும், சில நேரங்களில், அவருடைய தோழர்கள் ஞானமாக நடந்துகொள்ளவில்லை. உதாரணத்திற்கு, அவருடைய சக தீர்க்கதரிசியான உரியாவை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் எருசலேம் நகரத்துக்கும் யூதா தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தார்; ‘எரேமியா சொன்ன வார்த்தைகளைப் போலவே சொல்லி வந்தார்.’ ஆனால், யோயாக்கீம் ராஜா அவரை கொன்றுபோட ஆணை பிறப்பித்தபோது, அவர் பயந்துபோய் எகிப்துக்கு ஓடிப் போனார். என்றாலும், அவரால் தப்பிக்க முடியவில்லை. ராஜாவின் ஆட்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்தார்கள், அதோடு அவரை எருசலேமிற்கு கொண்டுவந்து கொன்றே போட்டார்கள். அது எரேமியாவுக்கு எவ்வளவு அதிர்ச்சி அளித்திருக்கும்!—எரேமியா 26:20-23.
9 எரேமியாவின் செயலராயிருந்த பாருக் அவருடைய மற்றொரு தோழனாக இருந்தார். அவர் எரேமியாவுக்கு பக்கபலமாக இருந்தார், ஆனால் ஒருமுறை அவரும்கூட ஆவிக்குரிய நோக்குநிலையைக் காத்துக்கொள்ள தவறினார். அவர் இவ்வாறு புலம்பினார்: “இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப் பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதே போனேன்.” மனம் சோர்ந்து போயிருந்த பாருக்குக்கு ஆவிக்குரிய காரியங்களிடம் இருந்த போற்றுதல் குறைய ஆரம்பித்தது. என்றாலும், யெகோவா பாருக்கிற்கு தயவோடு ஞானமான ஆலோசனை வழங்கினார்; இதனால் பாருக் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டார். அதன் பின்னரே, எருசலேம் அழிவில் தப்பிப்பிழைப்பாரென அவருக்கு உறுதியளிக்கப்பட்டது. (எரேமியா 45:1-5) பாருக் மீண்டும் ஆவிக்குரிய தெளிவு பெற்றது எரேமியாவுக்கு எவ்வளவு தெம்பூட்டியிருக்கும்!
தம் தீர்க்கதரிசிக்கு யெகோவா துணைபுரிந்தார்
10. துணைபுரிவதைக் குறித்து யெகோவா என்ன வாக்குறுதிகளை எரேமியாவுக்கு அளித்தார்?
10 எரேமியாவை யெகோவா கைவிடவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டதோடு, அவருக்குத் தேவையான பலத்தை அளித்து துணை புரிந்தார். உதாரணமாக, தன்னுடைய ஊழியத்தின் தொடக்கத்தில், அந்தப் பொறுப்பை தன்னால் நிறைவேற்ற முடியுமா என எரேமியா சந்தேகித்தபோது யெகோவா அவரிடம்: “நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்றார். அதன்பின், அவருடைய நியமிப்பைப் பற்றி விளக்கிவிட்டு, “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று சொன்னார். (எரேமியா 1:8, 19) எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! அந்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார்.
11. எரேமியாவுக்கு துணைபுரிவதாக கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார் என்பது நமக்கு எப்படி தெரியும்?
11 அதனால்தான், கைகால்கள் தொழுமர சட்டத்தில் பிணைக்கப்பட்டு ஜனங்களின் ஏளனத்திற்கு ஆளான பிறகும்கூட, “கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; மிகவும் வெட்கப்படுவார்கள்” என எரேமியாவால் திடநம்பிக்கையோடு சொல்ல முடிந்தது. (எரேமியா 20:11) வருடங்கள் பல உருண்டோடிய பிறகு எரேமியாவைக் கொல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டன; அச்சமயங்களிலும் யெகோவா தொடர்ந்து அவருக்கு துணைபுரிந்தார். பாருக்கைப் போலவே எரேமியாவும் எருசலேமின் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டு, ஒரு சுதந்திர பறவையானார்; மறுபட்சத்தில் அவரை துன்புறுத்தியவர்களும் அவருடைய எச்சரிப்புக்கு செவிகொடுக்காதவர்களும் அந்த அழிவில் மாண்டு போனார்கள், சிலர் பாபிலோனுக்கு கைதிகளாக இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
12. சோர்ந்து போவதற்குக் காரணங்கள் இருந்தாலும், நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
12 எரேமியாவைப் போலவே, யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் இன்று பல இன்னல்களை சகித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, அத்தகைய இன்னல்களில் சில நம்முடைய சொந்த அபூரணத்தினால் ஏற்படுகின்றன, மற்றவை இந்த உலகத்தின் குழப்பமிக்க சூழ்நிலையால் விளைகின்றன, இன்னும் சில நம்முடைய ஊழியத்தை எதிர்க்கிறவர்களிடமிருந்து வருகின்றன. அத்தகைய இன்னல்கள் நம்மை சோர்ந்து போகச் செய்யலாம். எரேமியாவைப் போலவே, ‘இனிமேலும் என்னால் ஊழியம் செய்ய முடியாது’ என்ற முடிவுக்குக்கூட நாம் வந்துவிடலாம். ஆம், அவ்வப்போது நாம் சோர்ந்துவிடுவோம் என்பதை நிச்சயமாகவே எதிர்பார்க்கலாம். மனச்சோர்வை ஏற்படுத்தும் காரியங்கள் யெகோவா மீது நமக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதை சோதிக்கின்றன. எனவே, உரியாவைப் போல நாம் சோர்ந்து போய் யெகோவாவின் சேவையிலிருந்து விலகி விடாதபடிக்கு தீர்மானமாயிருப்போமாக. மறுபட்சத்தில், எரேமியாவைப் போல நாமும் யெகோவா துணைபுரிவார் என்ற திடநம்பிக்கையோடு இருப்போமாக.
சோர்வை எதிர்த்துப் போராடுதல்
13. எரேமியா, தாவீது ஆகியோரின் முன்மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்?
13 யெகோவா தேவனோடு எரேமியா தவறாமல் பேச்சுத்தொடர்பு வைத்திருந்தார்; தனக்குள் குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சிகளையெல்லாம் அவரிடம் கொட்டினார், பலத்திற்காக கெஞ்சி மன்றாடினார். பின்பற்றுவதற்கு இது ஓர் அருமையான முன்மாதிரி. தாவீது பலத்தின் அதே ஊற்றுமூலரை உதவிக்காக அணுகியபோது இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.” (சங்கீதம் 5:1, 2) உதவி கேட்டு தாவீது செய்த ஜெபங்களுக்கு யெகோவா பல முறை பதிலளித்தார் என்பதை அவருடைய வாழ்க்கையைப் பற்றிய கடவுளால் ஏவப்பட்ட பதிவு காண்பிக்கிறது. (சங்கீதம் 18:1, 2; 21:1-5) அவ்வாறே, பயங்கர அழுத்தங்களை நாம் எதிர்ப்படும்போது அல்லது சமாளிக்க முடியாதளவுக்கு பிரச்சினைகள் பூதாகரமாக தோன்றும்போது நாம் ஜெபத்தில் யெகோவாவை அணுகி, மனந்திறந்து அவரிடம் பேச வேண்டும், அப்படி பேசுவது அதிக ஆறுதலாய் இருக்கும். (பிலிப்பியர் 4:6, 7; 1 தெசலோனிக்கேயர் 5:16-18) அவ்வாறு நாம் பேசும்போது யெகோவா தம் காதுகளை அடைத்துக்கொள்ள மாட்டார். மாறாக, ‘அவர் நம்மீது அக்கறையோடு இருப்பதாக’ உறுதியளிக்கிறார். (1 பேதுரு 5:6, 7, NW) ஆனால், நமக்கு வேண்டியதையெல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கேட்டுவிட்டு, அவர் சொல்வதை மட்டும் கேட்காதிருப்பது நியாயமாக இருக்குமா?
14. யெகோவாவின் வார்த்தைகள் எரேமியாவின் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தின?
14 யெகோவா நம்மிடம் எவ்வாறு பேசுகிறார்? மீண்டும் எரேமியாவின் உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். எரேமியா ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததால், யெகோவா அவரோடு நேரடியாகவே பேசினார். கடவுளுடைய வார்த்தைகள் அவருடைய இருதயத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தின என்பதை எரேமியா விவரிக்கிறார்: “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; [“ஏனெனில்,” NW] சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.” (எரேமியா 15:16) ஆம், கடவுளுடைய பெயர் தனக்கு தரிக்கப்பட்டிருப்பதற்காக எரேமியா பெருமகிழ்ச்சியடைந்தார், கடவுளுடைய வார்த்தைகளை அவர் பொக்கிஷமாக போற்றினார். எனவே, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியை அறிவிப்பதற்கு அப்போஸ்தலன் பவுலைப் போல அவர் வெகு ஆர்வமுள்ளவராக இருந்தார்.—ரோமர் 1:15, 16.
15. யெகோவாவின் வார்த்தைகளை நாம் எவ்வாறு இருதயத்தில் பதிய வைக்கலாம், எதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது மௌனமாக இராதபடி நம்மை தீர்மானமாக இருக்கச் செய்யும்?
15 இன்று யாரோடும் யெகோவா நேரடியாக பேசுவதில்லை. என்றாலும், பைபிளிலுள்ள அவருடைய வார்த்தைகள் நம்மிடம் இருக்கின்றன. எனவே, பைபிளை படிக்க ஊக்கமான முயற்சி எடுக்கும்போதும், கற்றுக்கொள்கிற காரியங்களை ஆழமாக தியானிக்கும்போதும், நம்முடைய இருதயத்திற்கும்கூட கடவுளுடைய வார்த்தைகள் ‘சந்தோஷமும், மகிழ்ச்சியுமாயிருக்கும்.’ மேலும், அந்த வார்த்தைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள செல்கையில், நாம் யெகோவாவுடைய பெயரை தரித்திருக்கிறோம் என்பதை எண்ணி நம்மால் பூரிப்படையவும் முடியும். இன்று உலகில் வேறெந்த ஜனமும் யெகோவாவுடைய பெயரை அறிவிப்பதில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதிருப்போமாக. ஸ்தாபிக்கப்பட்டுள்ள கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே அறிவித்து வருகிறார்கள், அதோடு இயேசு கிறிஸ்துவின் சீஷராவது எப்படி என்பதையும் சாந்தகுணமுள்ளவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். (மத்தேயு 28:19, 20) எப்பேர்ப்பட்ட பாக்கியசாலிகள் நாம்! இந்த மகத்தான வேலையை யெகோவா நம்மிடம் அன்போடு ஒப்படைத்திருப்பதை சிந்தித்துப் பார்க்கையில், நம்மால் எப்படி மௌனமாக இருக்க முடியும்?
சகவாசத்தைக் குறித்து ஜாக்கிரதையாய் இருப்போமாக
16, 17. சகவாசத்தை எரேமியா எப்படி கருதினார், நாம் எவ்வாறு அவரை பின்பற்றலாம்?
16 திடமனதுடன் இருக்க தனக்கு உதவிய மற்றொன்றைக் குறித்து எரேமியா அறிவிக்கிறார்: “நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.” (எரேமியா 15:17) கெட்டவர்களோடு சேர்ந்து கெட்டுப் போவதற்கு பதில், தனியாக இருப்பதையே எரேமியா விரும்பினார். அவருடைய அதே கண்ணோட்டம்தான் நமக்கும் இருக்கிறது. “ஆகாத சம்பாஷணைகள் [“சகவாசம்,” NW] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்ற அப்போஸ்தலன் பவுலுடைய எச்சரிப்பை நாம் ஒருபோதும் மறந்துவிடுவதில்லை, ஆம், வருடக்கணக்காக நம்மிடமிருந்த நல்ல பழக்கவழக்கங்களைக்கூட அது கெடுத்துப் போட்டுவிடும்.—1 கொரிந்தியர் 15:33.
17 கெட்ட சகவாசங்களின் மூலம் நம்முடைய சிந்தனை இவ்வுலகத்தின் ஆவியால் மாசுபட்டு விடலாம். (1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2; யாக்கோபு 4:4) அப்படியானால், தீய சகவாசங்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு நம்முடைய பகுத்தறியும் திறமையை பயிற்றுவிப்போமாக, பின்பு அத்தகைய கெட்ட சகவாசத்தை விட்டு முற்றிலும் விலகுவோமாக. (எபிரெயர் 5:14) பவுல் இன்று பூமியில் உயிரோடு இருந்தாரென்றால், ஒழுக்கங்கெட்ட காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் நிறைந்த சினிமாக்களையும் வன்முறை விளையாட்டுகளையும் பார்க்கிற ஒரு கிறிஸ்தவரிடம் என்ன சொல்லுவார் என நினைக்கிறீர்கள்? முன்பின் தெரியாத நபர்களுடன் இன்டர்நெட் மூலம் சகவாசம் வைத்துக்கொள்ள முயலும் ஒரு சகோதரருக்கு அவர் என்ன புத்திமதி சொல்லுவார்? வீடியோ கேம்ஸிலும் டிவியிலும் பல மணிநேரத்தை விரயமாக்கிவிட்டு, தனிப்பட்ட படிப்பிற்கு நேரத்தை செலவிடாத ஒரு கிறிஸ்தவரைப் பற்றி அவர் என்ன நினைப்பார்?—2 கொரிந்தியர் 6:14ஆ; எபேசியர் 5:3-5, 15, 16.
ஆவிக்குரிய பரதீஸில் தொடர்ந்திருங்கள்
18. ஆவிக்குரிய தெம்பைப் பெற எவை நமக்கு உதவும்?
18 ஆவிக்குரிய பரதீஸை நாம் பொக்கிஷமாக கருதுகிறோம். அதைப் போன்ற வேறொன்று இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கும் அன்பு, பரிவு, தயவு ஆகியவற்றைக் குறித்து அவிசுவாசிகள்கூட பாராட்டி பேசியிருக்கிறார்கள். (எபேசியர் 4:31, 32) இருந்தபோதிலும், எப்போதையும்விட இப்போது நாம் மனச்சோர்வை எதிர்த்துப் போராட வேண்டும். நல்ல சகவாசம், ஜெபம், பயனுள்ள படிப்பு பழக்கங்கள் ஆகியவை நாம் ஆவிக்குரிய தெம்பைப் பெற உதவும். யெகோவாவில் முழு நம்பிக்கையோடு எந்த சோதனையையும் எதிர்ப்படுவதற்கு அவை கண்டிப்பாக நம்மை பலப்படுத்தும்.—2 கொரிந்தியர் 4:7, 8.
19, 20. (அ) சகித்திருப்பதற்கு எது நமக்கு உதவும்? (ஆ) அடுத்த கட்டுரை யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, அது யாருக்கும்கூட ஆர்வமூட்டுவதாக இருக்கும்?
19 நாம் சொல்லும் பைபிள் செய்தியை வெறுப்பவர்கள், நம்மை பயமுறுத்தி நம் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும்படி செய்ய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. நமக்கு விரோதமாக சண்டையிடுவோர், எரேமியாவை துன்புறுத்திய எதிரிகளைப் போல தேவனோடுதான் சண்டையிடுகிறார்கள். அவர்கள் வெற்றி காண மாட்டார்கள். நம்முடைய எதிராளிகளைவிட பன்மடங்கு பலசாலியான யெகோவா நம்மிடம் இவ்வாறு சொல்கிறார்: “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.” (சங்கீதம் 27:14) யெகோவா மீதுள்ள நம்பிக்கை நம் இருதயத்திலே ஆழமாக வேரூன்றப்பட்டிருக்க, நன்மை செய்வதில் சோர்ந்து போகாதபடி தீர்மானமாய் இருப்போமாக. எரேமியாவையும் பாருக்கையும் போல நாம் சோர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம் என்ற திடநம்பிக்கையோடு இருப்போமாக.—கலாத்தியர் 6:9.
20 மனச்சோர்வை சமாளிப்பது அநேக கிறிஸ்தவர்களுக்கு ஒரு தீரா போராட்டமாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அவர்களுக்கே உரிய சோதனைகளை எதிர்ப்படுகிறார்கள். என்றாலும் அவர்களுக்கு மாபெரும் வாய்ப்புகள் இருக்கின்றன. நம் மத்தியிலிருக்கும் இளைஞர்களுக்கென்றே அடுத்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. வார்த்தையாலும் நல்ல முன்மாதிரியாலும் சபையிலுள்ள இளைஞர்களுக்கு நேரடியாக உதவ முடிந்த முழுக்காட்டப்பட்ட பெரியவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்கூட அடுத்த கட்டுரை ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
உங்கள் பதிலென்ன?
• சோர்ந்து போகச் செய்யும் சூழ்நிலைகள் ஏற்படுமென நாம் ஏன் எதிர்பார்க்கலாம், உதவிக்காக நாம் யாரிடம் செல்ல வேண்டும்?
• கடினமான ஒரு நியமிப்பை பெற்றிருந்தபோதிலும், எரேமியா மனச்சோர்விலிருந்து எவ்வாறு மீண்டார்?
• துன்பங்களுக்கு மத்தியிலும் நம் இருதயத்திற்கு எது ‘சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும்’ தரும்?
[பக்கம் 9-ன் படம்]
ஒரு தீர்க்கதரிசியாக சேவிக்க தனக்கு வயதும் அனுபவமும் போதாது என எரேமியா நினைத்தார்
[பக்கம் 10-ன் படம்]
துன்புறுத்தப்பட்ட சமயத்திலும்கூட, ஒரு “பயங்கரமான பராக்கிரமசாலியாய்” யெகோவா தன்னோடு இருந்ததை எரேமியா அறிந்திருந்தார்