நீங்கள் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா?
‘சர்ச்சில் உறுப்பினராக இருந்தால்தான் அல்லது சர்ச்சுக்குத் தவறாமல் போய்வந்தால்தான் கடவுள் நம்பிக்கை உண்டு என்பதில்லை!’ இப்படித்தான், சர்ச்சில் அல்லது ஏதாவதொரு மத அமைப்பில் உறுப்பினராக இருப்பதைப் பற்றி அநேகர் நினைக்கின்றனர். சொல்லப்போனால் சர்ச்சில் நடக்கும் ஆராதனையில் கலந்துகொள்வதற்குப் பதிலாக வெளியே சென்று இயற்கையை ரசித்து மகிழும்போதுதான் கடவுளிடம் நெருக்கமாக உணருவதாக சிலர் சொல்கின்றனர். கடவுள் மீது நம்பிக்கை வைக்க ஒரு மதத் தொகுதியோடு அல்லது அமைப்போடு கூட்டுறவு கொள்வது அவசியமில்லை என்பதே இன்று நிலவும் பொதுவான கருத்து.
இருந்தாலும் மற்றவர்கள் வேறு விதமாக நினைக்கிறார்கள். கடவுளுடைய அங்கீகாரம் வேண்டுமென்றால் சர்ச்சில் உறுப்பினராக இருப்பதும் சர்ச்சிற்கு தவறாமல் செல்வதும் கண்டிப்பாக அவசியம் என அவர்கள் விவாதிக்கிறார்கள். ஆகவே மத அமைப்பின் பாகமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது புள்ளிவிவரங்களுக்காக அல்லது விஷயங்களை அறிவதற்காக மதத்தை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லாருக்குமேதான் முக்கியமான விஷயம். எப்படியிருந்தாலும், கடவுளுடன் நமக்குள்ள உறவு இதில் உட்பட்டிருப்பதால், அவர் இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என கண்டுபிடிப்பது நியாயமானதல்லவா? ஆக, அவருடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து நாம் இதைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
கடவுள் அன்று மக்களை கையாண்ட விதம்
கிட்டத்தட்ட 4,400 வருடங்களுக்கு முன்பு, திடீரென உலகெங்கும் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் எளிதில் மறக்க முடியாதது. அதனால்தான் உலகெங்குமுள்ள மக்களின் ஆரம்பகால சரித்திரத்தில் அதைப் பற்றிய கதைகள் இடம்பெறுகின்றன. அவற்றிலுள்ள நுணுக்க விவரங்கள் வேறுபட்டாலும், மொத்தத்தில் அவற்றில் பொதுவான விஷயங்கள் பல உள்ளன; சில மனிதர்களும் மிருகங்களும் மட்டும் உயிர்தப்பிய உண்மையும் அவை அனைத்திலும் உண்டு.
வெள்ளத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் ஏதோ குருட்டாம்போக்கில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்களா? இல்லை என்றே பைபிள் பதிவு காட்டுகிறது. வெள்ளத்தைக் கொண்டுவரப்போவதாக கடவுள் ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவர் நோவாவிடம் மட்டுமே சொன்னார்; நோவா அந்த வெள்ளம் வரப்போவதைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரித்தார்.—ஆதியாகமம் 6:13-16; 2 பேதுரு 2:5.
நோவா மூலமாக கடவுள் கொடுத்த வழிநடத்துதலை ஏற்க மனமுள்ளவர்களாய், ஒரே ஐக்கியப்பட்ட தொகுதியின் பாகமாக இருந்தவர்கள் மட்டுமே தப்பிப்பிழைக்க முடிந்தது. பேழையிலிருந்த மிருகங்கள்கூட அந்தத் தொகுதியின் பாகமாக இருந்ததால்தான் வெள்ளத்தில் தப்பிப்பிழைத்தன. மிருக ஜீவன்களைப் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டுமென்ற தெள்ளத்தெளிவான அறிவுரைகள் நோவாவுக்கு வழங்கப்பட்டிருந்தன.—ஆதியாகமம் 6:17–7:8.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு நோவாவின் குமாரன் சேமின் சந்ததியினர் எகிப்தில் அடிமைகளானார்கள். இருந்தாலும் அவர்களை விடுவித்து அவர்களது முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்த தேசத்திற்கு கொண்டு வருவதே கடவுளுடைய நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த விஷயமும் ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக சொல்லப்படவில்லை; அவர்களுடைய தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோசேயிடமும் அவரது சகோதரர் ஆரோனிடமும் மட்டுமே முதலில் சொல்லப்பட்டது. (யாத்திராகமம் 3:7-10; 4:27-31) அடிமைகளாக இருந்தவர்கள் ஒரு தொகுதியாக எகிப்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு, சீனாய் மலையில் கடவுளுடைய கட்டளைகளைப் பெற்று இஸ்ரவேல் தேசமாக உருவாக்கப்பட்டார்கள்.—யாத்திராகமம் 19:1-6.
கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட தொகுதியோடு கூட்டுறவுகொண்டு இந்தத் தொகுதிக்காக நியமிக்கப்பட்ட தலைவர்களின் வழிநடத்துதலைப் பின்பற்றியதால் மட்டுமே தனிப்பட்ட இஸ்ரவேலர்கள் விடுதலை பெற்றனர். கடவுளுடைய அங்கீகாரத்தை நிச்சயமாகவே பெற்றிருந்த இந்தத் தொகுதியோடு கூட்டுறவு கொள்ள தனிப்பட்ட எகிப்தியர்களுக்கும்கூட வாய்ப்பளிக்கப்பட்டது. இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுச் சென்றபோது இந்தத் தனிப்பட்ட எகிப்தியர்களும் அவர்களோடு சென்று, இவ்வாறு கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறும் எதிர்பார்ப்பை அடைந்தனர்.—யாத்திராகமம் 12:37, 38.
பிறகு முதல் நூற்றாண்டில் இயேசு மக்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்து சீஷர்களை ஒன்றுதிரட்டினார். தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் ஒவ்வொருவருக்கும் அன்பான கவனிப்பைக் காட்டினார் என்றாலும் அவர்களை ஒரு தொகுதியாகவே கையாண்டார். உண்மையுள்ள தம் 11 அப்போஸ்தலர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.” (லூக்கா 22:28, 29) பிற்பாடு சீஷர்கள் ஒரு தொகுதியாக ஒன்றுகூடியிருந்தபோது கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்கள்மீது பொழியப்பட்டது.—அப்போஸ்தலர் 2:1-4.
கடந்த காலத்தில் கடவுள் தம் மக்களை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொகுதியாகவே எப்போதும் கையாண்டு வந்திருக்கிறார் என்பதை இந்த உதாரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. நோவா, மோசே, இயேசு போன்ற சில நபர்களை கடவுள் தனிப்பட்ட விதமாக கையாண்டார் என்றாலும், நெருங்க பிணைக்கப்பட்ட ஒரு தொகுதியோடு அவர்கள் மூலம் தொடர்பு கொள்வதற்காகவே உண்மையில் அவ்விதமாக செய்தார். இன்றும் கடவுள் தம் ஊழியர்களை அவ்விதமாகவே நடத்துகிறார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இது இன்னொரு கேள்வியை எழுப்புகிறது: ஏதாவதொரு மதத் தொகுதியோடு கூட்டுறவு வைத்திருந்தால் போதுமா? இந்த முக்கியமான கேள்வியைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[பக்கம் 4-ன் படம்]
கடவுள் தம் மக்களை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொகுதியாகவே எப்போதும் கையாண்டிருக்கிறார்