எது வாழ்க்கைக்கு மெய்யான அர்த்தமளிக்கிறது?
ஜெஸி ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவன்; 17 வயது நிரம்பிய அவனிடம் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி கேட்டபோது அவன் அளித்த பதில் இதுதான்: “உயிரோடு இருக்கிற வரை எந்தளவு முடியுமோ அந்தளவு ஜாலியாக இருக்க வேண்டும்.” ஸூஸியின் எண்ணம் சற்று வித்தியாசமாக இருந்தது. “நாம் வாழ்க்கையை எப்படி அமைக்கிறோமோ அதைப் பொறுத்துதான் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்னு நான் உண்மையிலே நம்புறேன்” என்று அவள் சொன்னாள்.
வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? மனிதகுலம் அனைத்திற்கும் ஒரே பொதுவான நோக்கம் இருக்கிறதா? அல்லது ஸூஸி சொன்னது சரிதானா—அதாவது ஒவ்வொருவரும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்துதான் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? நாம் வாழும் சமுதாயம் தொழில் நுட்பத்தில் எவ்வளவுதான் முன்னேறினாலும், வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய நம் மனம் ஏங்குவதுபோல் தோன்றுகிறது. ‘நாம் ஏன் இங்கு இருக்கிறோம்?’ என ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நம்மில் பலர் யோசிக்கிறோம்.
நவீன விஞ்ஞானம் இக்கேள்விக்கு பதிலளிக்க போராடியிருக்கிறது. கடைசியில் என்னதான் பதிலளித்திருக்கிறது? “பரிணாம வளர்ச்சியின்படி உயிரோடு இருப்பதுதானே எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை” என குறிப்பிட்டார் உளவியல் மற்றும் விலங்கியல் பேராசிரியரான டேவிட் பி. பேரெஷ். பரிணாம உயிரியலாளர்களைப் பொறுத்தவரை, தொடர்ந்து வாழ்வதும் இனப்பெருக்கம் செய்வதுமே உயிரினங்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம். ஆகவே, பேராசிரியர் பேரெஷ் இவ்வாறு கூறுகிறார்: “அர்த்தமற்ற, மக்களைப் பற்றி கேட்பாரற்ற இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நாமாக, மனதார, திட்டமிட்டு செய்யும் தெரிவுகள் மூலம் வாழ்க்கைக்கு அர்த்தமளிப்பது நம் கடமையாகவே இருக்கிறது.”
அர்த்தத்திற்கும் நோக்கத்திற்கும் காரணர்
அப்படியானால், ஒவ்வொருவரும் அவரவருடைய விருப்பத்தின்படி செய்வதுதான் வாழ்க்கையின் அர்த்தமா? அர்த்தமோ நோக்கமோ இல்லாத இப்பிரபஞ்சத்தில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் நம் வாழ்க்கை இல்லை. மாறாக, நாம் ஒரு நோக்கத்துடனேயே இங்கு வாழ்கிறோம் என்பதை வெகு காலத்திற்கு முன்பே பைபிள் வெளிப்படுத்தியுள்ளது. நாம் உயிரோடு இருப்பது, ஏதோ தற்செயல் நிகழ்வினால் ஏற்பட்டதல்ல. மனிதனுக்காக படைப்பாளர் பல்லாண்டுகள் செலவிட்டு இந்தப் பூமியை தயார்படுத்தினார் என்று பைபிள் நமக்கு தெரிவிக்கிறது. எதுவுமே தற்செயலாக உருவாகும்படி விடப்படவில்லை. எல்லாமே “மிகவும் நன்றாயிருந்தது” என்பதை கடவுள் உறுதி செய்துகொண்டார். (ஆதியாகமம் 1:31; ஏசாயா 45:18) ஏன்? ஏனெனில் மனிதனுக்காக அவர் ஒரு நோக்கம் வைத்திருந்தார்.
இருந்தாலும், கடவுளுடைய தலையிடுதல்களால் அல்லது சில உயிரியல் மாற்றங்களால் ஒவ்வொருவருடைய எதிர்காலத்தையும் முன்தீர்மானிக்கவில்லை என்பது அக்கறைக்குரிய விஷயம். ஜீன்கள் நம்மீது செல்வாக்கு செலுத்தினாலும், நம் செயல்களை கட்டுப்படுத்தும் சக்தி பெரும்பாலும் நம் கையில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கைப் போக்கை நாமாக தெரிவு செய்வதற்கு உரிமை இருக்கிறது.
வாழ்க்கையில் தெரிவுகளை செய்வது நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், நாம் போடும் திட்டங்களிலிருந்து படைப்பாளரை ஒதுக்கித் தள்ளுவது தவறாகும். சொல்லப்போனால், வாழ்க்கையின் உண்மையான அர்த்தமும் நோக்கமும் கடவுளோடுள்ள உறவுடன் பின்னிப்பிணைந்திருப்பதாகவே அநேகர் கண்டறிந்திருக்கிறார்கள். கடவுளுக்கும் நம் வாழ்க்கையின் நோக்கத்திற்கும் உள்ள முக்கிய தொடர்பு கடவுளுடைய சொந்தப் பெயரில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. யெகோவா என்பதே அவருடைய பெயர்; அதன் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்.” (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 83:17) அதாவது, அவர் வாக்குறுதியளிப்பவற்றை படிப்படியாக நிறைவேற்றுகிறார், அதோடு தாம் செய்வதற்காக நோக்கம் கொண்டவற்றை எப்போதும் செய்து முடிக்கிறார். (யாத்திராகமம் 3:14, NW; ஏசாயா 55:10, 11) அப்படியானால், அந்தப் பெயரின் முக்கியத்துவத்தை சிந்தித்துப் பாருங்கள். அர்த்தமுள்ள நோக்கத்திற்கு யெகோவாவே மூலகாரணராயும் நிரந்தர ஊற்றுமூலராயும் இருக்கிறார் என்பதற்கு அவருடைய பெயர் நம் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
படைப்பாளர் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதுதானே வாழ்க்கை பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லினட் என்ற 19 வயது இளைஞி இவ்வாறு கூறுகிறாள்: “யெகோவாவின் அற்புதமான படைப்புகள் அத்தனையையும் பார்ப்பதும் அவற்றின் நோக்கத்தை அறிந்துகொள்வதும், நானும்கூட ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு தெரிவிக்கிறது.” ஆம்பர் இவ்வாறு சொல்கிறாள்: “கடவுள் இருக்கிறாரா என்றே தெரியாது என மற்றவர்கள் சொல்லும்போது, எனக்கு அந்த விஷயம் தெரிந்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். யெகோவா இருக்கிறார் என்பதை அவருடைய படைப்புகளே நிரூபிக்கின்றன.” (ரோமர் 1:20) உண்மையில் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது ஒரு விஷயம், ஆனால் அவருடன் அர்த்தமுள்ள உறவை வளர்த்துக்கொள்வது வேறொரு விஷயம்.
கடவுளுடன் நட்பு
இதற்கும்கூட பைபிள் உதவுகிறது. யெகோவா தேவன் அன்புள்ள தகப்பன் என்பதற்கு பைபிளின் ஆரம்ப அதிகாரங்கள் தெளிவான அத்தாட்சி அளிக்கின்றன. உதாரணமாக, ஆதாம், ஏவாளை அவர் படைத்துவிட்டு, தம்மை யார் என்று அவர்களாகவே தெரிந்துகொள்ளும்படி அவர் விட்டுவிடவில்லை. மாறாக, அவர்களோடு தவறாமல் பேச்சுத்தொடர்பு கொண்டார். அவர்களாகவே தங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளும்படி ஏதேனில் விட்டுவிட்டு, அவர் வேறு காரியங்களில் மூழ்கிவிடவில்லை. அதற்கு பதிலாக, சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு திட்டவட்டமான வழிநடத்துதலை அளித்தார். திருப்தியளிக்கும் வேலையைக் கொடுத்தார், அவர்களுக்கு தொடர்ந்து கல்வி புகட்டுவதற்கும் ஏற்பாடு செய்தார். (ஆதியாகமம் 1:26-30; 2:7-9) அருமையான, அன்பான பெற்றோர் ஒருவரிடமிருந்து இதையல்லவா நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? இப்போது அதன் அர்த்தத்தை சிந்தித்துப் பாருங்கள். “யெகோவா இந்த பூமியை படைத்து, அவருடைய படைப்புகளை அனுபவித்து மகிழும் திறமையுடன் நம்மை உண்டாக்கியிருப்பதைப் பார்க்கும்போது, நாம் சந்தோஷமாக இருப்பதையே அவர் விரும்புகிறார் என்பது தெரிகிறது” என சொல்கிறாள் டின்யல்.
அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு நல்ல தகப்பனையும் போல யெகோவா தம்முடைய பிள்ளைகள் எல்லாருமே தம்முடன் தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ளும்படி விரும்புகிறார். இதன் காரணமாகவே, அப்போஸ்தலர் 17:27 நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” இதனால் என்ன நன்மை? ஆம்பர் இவ்வாறு சொல்கிறாள்: “யெகோவாவை அறிந்திருப்பது, நான் ஒருபோதும் தன்னந்தனியாய் இல்லை என்ற உறுதியை எனக்கு அளித்திருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் எப்போதுமே எனக்கு உதவி செய்ய ஒருவர் இருக்கிறார்.” அதுமட்டுமல்ல, யெகோவாவை அதிகமதிகமாக தெரிந்துகொள்கையில், அவர் தயவுள்ளவர், நீதியுள்ளவர், நல்லவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். அவரை நீங்கள் நம்பியிருக்கலாம். “யெகோவா என்னுடைய உற்ற நண்பரானபோது, எனக்கு உதவி செய்ய அவரைவிட மேலானவர் வேறொருவரும் இல்லை என்பதை உணர்ந்தேன்” என ஜெஃப் சொல்கிறான்.
ஆனால், யெகோவாவைப் பற்றி அநேக எதிர்மறையான காரியங்கள் சொல்லப்பட்டிருப்பது வருத்தகரமான விஷயம். மனிதரின் பெரும்பாலான துன்பத்துக்கும் மதத்தின் தீய நடத்தைக்கும் அவர்தான் காரணர் என பழிபோடப்படுகிறது. மனித சரித்திரத்தில் நடந்துள்ள படுமோசமான சில அட்டூழியங்களுக்கு அவர் மீதே பழிசுமத்தப்படுகிறது. ஆனால், உபாகமம் 32:4, 5 இவ்வாறு விளக்குகிறது: “அவர் வழிகளெல்லாம் நியாயம், . . . அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்.” ஆகவே, இந்த உண்மைகளை ஆராய்ந்து பார்ப்பது நம் கடமை.—உபாகமம் 30:19, 20.
கடவுளுடைய நோக்கம் நிறைவேறுகிறது
நம்முடைய முடிவு என்னவாக இருந்தாலும், இந்த பூமியையும் மனிதகுலத்தையும் குறித்த நோக்கத்தை கடவுள் முழுமையாக நிறைவேற்றாதபடி எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. அவரே படைப்பாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படியானால் அந்த நோக்கம்தான் என்ன? இயேசு கிறிஸ்து தம்முடைய மலைப்பிரசங்கத்தில் அதைப் பற்றி குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” பிற்பாடு, அப்போஸ்தலனாகிய யோவானிடம் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதற்கு’ கடவுள் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டார். (மத்தேயு 5:5; வெளிப்படுத்துதல் 11:18) சிருஷ்டிப்பின்போது கடவுளோடு இயேசு இருந்திருப்பதால், ஒரு பரிபூரண மனித குடும்பம் இந்த பூமியில் பூங்காவனம் போன்ற பரதீஸில் நித்தியமாய் வாழ்வதுதான் ஆதியிலிருந்தே கடவுள் கொண்டிருந்த நோக்கம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். (ஆதியாகமம் 1:26, 27; யோவான் 1:1-3) கடவுள் மாறுவதே இல்லை. (மல்கியா 3:6) “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும், நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்” என கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்.—ஏசாயா 14:24.
நம்முடைய நாளில், ஒன்றுபட்ட ஒரு சமுதாயத்திற்கான அஸ்திவாரத்தை யெகோவா ஏற்கெனவே போட ஆரம்பித்திருக்கிறார். அந்த சமுதாயம், இன்றைய உலகத்தைப் போல் பேராசையும் சுயநலமும் பிடித்தது அல்ல, மாறாக கடவுளிடமும் பிறரிடமும் அன்பு காட்டும் ஒரு சமுதாயமாகும். (யோவான் 13:35; எபேசியர் 4:15, 16; பிலிப்பியர் 2:1-4) முன்னேற்றத்திலும் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் மனமுவந்து ஆர்வம் காட்டும் நபர்களே இந்த சமுதாயத்தினர்; வரவிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இந்தப் பொல்லாத உலகின் முடிவு வருவதற்கு முன்பாக பிரசங்கிப்பதே இவர்களது நோக்கம். (மத்தேயு 24:14; 28:19, 20) 230-க்கும் மேற்பட்ட நாடுகளில், 60 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் அன்பும் ஐக்கியமும் நிலவும் சர்வதேச சகோதரத்துவத்துடன் சேர்ந்து ஏற்கெனவே கடவுளை வணங்கி வருகிறார்கள்.
உங்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தமூட்டுங்கள்
நீங்கள் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள் என்றால், தம்முடைய ஜனங்களுடன், அதாவது ‘நீதியுள்ள ஜாதியுடன்’ இப்போதே கூட்டுறவு கொள்ளும்படி யெகோவா தேவன் அழைக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (ஏசாயா 26:2) ஆனால், ‘இந்தக் கிறிஸ்தவ சமுதாயத்தில் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும்? அதன் பாகமாக இருக்க உண்மையிலேயே எனக்கு விருப்பமா?’ என நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். இளைஞர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
க்வென்டன்: “உலகத்திலிருந்து என்னைப் பாதுகாக்கும் இடம் சபையே. யெகோவா என் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறார் என்பதை அறிவது, அவர் இருக்கிறார் என்பதையும் நான் சந்தோஷமாக இருக்க அவர் விரும்புகிறார் என்பதையும் உணர்ந்துகொள்ள உதவுகிறது.”
ஜெஃப்: “சபையே நான் உற்சாகம் பெறுவதற்கு சிறந்த இடம். எனக்கு ஆதரவையும் பாராட்டையும் அளிக்கிற சகோதர சகோதரிகள் அங்கு இருக்கிறார்கள். அவர்களே உண்மையில் என்னுடைய உற்றாரும் உறவினரும்.”
லினட்: “ஒருவர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவை சேவிக்க தீர்மானிப்பதைக் காணும் சந்தோஷத்தைவிட வேறு சந்தோஷம் எதுவுமில்லை. இது என்னுடைய வாழ்க்கைக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.”
கோடி: “யெகோவா மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கை எதற்கும் உதவாது. சந்தோஷத்தை தேடி அங்குமிங்கும் அலைந்து திரிந்தும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் அநேகரைப் போல்தான் நானும் இருப்பேன். அதற்கு பதிலாக, யெகோவாவுடன் உறவு வைத்துக்கொள்ளும் அரும்பெரும் பாக்கியத்தை அவர் எனக்கு அளித்திருக்கிறார், அது என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கிறது.”
நீங்களும் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? படைப்பாளராகிய யெகோவா தேவனிடம் நெருங்கிச் செல்லும்போது வாழ்க்கையில் மெய்யான அர்த்தத்தை காண முடியும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
[பக்கம் 31-ன் படங்கள்]
கடவுளோடுள்ள உறவு நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
NASA photo