மிகச் சிறந்த ஆலோசனையை கண்டடைதல்
வளமான வாழ்க்கையையே அனைவரும் விரும்புவர். பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகில் அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கிய அம்சங்கள், நல்ல ஆலோசனையும் அதன்படி நடப்பதற்கான மனப்பாங்குமே. ஆனால், சிறந்த ஆலோசனைக்கு செவிசாய்க்க மனிதர் எப்போதுமே மனமுள்ளவர்களாய் இருந்ததில்லை. மனிதர் தங்களுக்குப் பிடித்தவாறே வாழ வேண்டுமென அநேகர் கூறியிருக்கிறார்கள். சொல்லப்போனால், தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக வாழும் மனப்பான்மையை ஆதி மனிதரில் தூண்டிவிட்டவன் கடவுளுடைய பேரரசாட்சிக்கு முதல் விரோதியாய் இருந்த சாத்தானே என்பதாக பைபிள் பதிவு சொல்கிறது. ஏவாளிடம் அவன் வலியுறுத்திய விஷயத்தை ஆதியாகமம் 3:5 இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் இதைப் [நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்] புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.”
பிற்பாடு, ஆதாமும் ஏவாளும் முழுக்க முழுக்க தங்களுடைய சொந்த தீர்மானங்களின்படியே நடந்ததன் மூலம் பாதகமான விளைவுகளின்றி வெற்றிகரமாக வாழ முடிந்ததா? நிச்சயமாகவே இல்லை. நன்மை, தீமையை தாங்களாகவே அறிந்துகொள்ள முடியுமென எண்ணியதன் விளைவாக அவர்கள் விரைவில் ஏமாற்றத்தையே தழுவினர். இதனால் கடவுளுடைய நியாயமான வெறுப்புக்கு ஆளாயினர்; அதோடு அபூரணத்தை சுதந்தரித்து கஷ்டமான வாழ்க்கையை ஆரம்பித்தனர், முடிவாக சாவை நோக்கிப் பயணித்தனர். (ஆதியாகமம் 3:16-19, 23) சாவு நம் எல்லாருக்கும் வருகிறது. அதைத்தான் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாமினாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12.
ஆதாம், ஏவாளின் சொந்த தெரிவுகளால் பயங்கரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கிற போதிலும், மனிதனை படைத்தவரின் ஆலோசனையை பின்பற்றுவதே ஞானமானது என்பதை அநேகர் நம்புவதில்லை. என்றாலும், பைபிள் ‘தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, பிரயோஜனமுள்ளது’ என அது கூறுகிறது; ‘தேறினவராகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவராகவும்’ இருப்பதற்கும் அது நமக்கு உதவும். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆகவே, பைபிளிலுள்ள ஆலோசனையை பின்பற்றினால், நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதைப் பின்பற்ற வேண்டிய முக்கியமானதோர் இடம் குடும்பம்.
திருமணத்தில் உண்மைத்தன்மை
பைபிள் குறிப்பிடுகிறபடி, கடவுள் திருமணத்தை ஏற்பாடு செய்தபோது அது நிலைத்திருக்க வேண்டுமென்றே எதிர்பார்த்தார். (ஆதியாகமம் 2:22-24; மத்தேயு 19:6) அதுமட்டுமல்ல, ‘விவாக மஞ்சம் அசுசிப்படாததாய்’ இருக்க வேண்டுமென்றும் பைபிள் கூறுகிறது; அதாவது, இந்தப் பிணைப்பு துணைவரல்லாத ஒருவரோடு வைத்துக்கொள்ளும் பாலியல் தொடர்புகளால் கறைபடாதிருக்க வேண்டும் என கூறுகிறது. (எபிரெயர் 13:4) ஆனால், இன்று அநேக திருமண உறவுகளில் இந்தத் தராதரம் பின்பற்றப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். வேலை செய்யுமிடத்தில் தங்கள் துணையல்லாதவர்களிடமாக சரசமாடும் பழக்கம் சிலருக்கு உள்ளது. வேறு சிலரோ தங்களுடைய துணையல்லாதவர்களோடு காதலீடுபாட்டில் நேரம் செலவிடுவதற்காக வீட்டில் பொய் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, இளம் துணையோடு வாழ்வதற்காக தங்கள் மனைவியையோ கணவரையோ ஒதுக்கித்தள்ளுகிறார்கள்; முதல் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வெரோனிக்காவின் கணவரைப் போல, இப்படி செய்கையில் தாங்கள் இளமையாகவும் சந்தோஷமாகவும் உணருவதாக காரணம் காட்டுகிறார்கள்.
இருப்பினும், என்னதான் வந்தாலும் நம்முடைய திருப்தியே முக்கியம் என நினைப்பது நிலையான சந்தோஷத்தை தராது. ரானல்ட் இதற்கு ஓர் உதாரணம். வாழ்க்கையை இன்னும் நன்றாக அமைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில், இவர் தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் புதுக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். அந்தப் பெண்ணுடன் அவருக்கு ஆறு வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருந்தது; அவள் மூலம் அவருக்கு ஏற்கெனவே இரண்டு பிள்ளைகளும் பிறந்திருந்தனர். ஆனால், அவர் தன் மனைவியை கைவிட்ட கொஞ்ச காலத்தில் அவருடைய காதலி அவரை கைவிட்டுவிட்டாள்! ரானல்ட் கடைசியில் தன் பெற்றோரிடம் சென்று அவர்களோடு வாழ்ந்தார். தன்னுடைய வாழ்க்கை “சீரழிந்து”வருவதாக அவர் குறிப்பிட்டார். இது போன்ற உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. தன்னல ஆசைகளால் தூண்டப்படும் இப்படிப்பட்ட நடத்தையால், விவாகரத்துகள், குடும்ப முறிவுகள் போன்ற எதிர்பாரா சம்பவங்கள் ஏராளமாக ஏற்பட்டிருக்கின்றன; அதனால் பெரியவர்கள் பிள்ளைகள் என்ற பேதமின்றி எண்ணற்றோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மறுபட்சத்தில், பைபிளின் ஆலோசனையை கடைப்பிடிப்பது மெய்யான மகிழ்ச்சியை தருகிறது. ரோபர்டோவின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “பைபிள் ஆலோசனையை கடைப்பிடித்ததால், நான் என்னுடைய மனைவியை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. துணையல்லாத ஒருவர் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும்கூட அவரைப் பார்த்து மயங்கிவிடுவதால் உண்மையான சந்தோஷத்தை பெற முடியாது. பல வருஷங்களாகவே என் உற்ற தோழியாக இருந்திருக்கும் என் மனைவியை அருமையானவளாக கருத பைபிள் கல்வி எனக்கு உதவியிருக்கிறது.” ‘ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணக்’ கூடாதென்ற பைபிள் ஆலோசனை ரோபர்டோவின் வாழ்க்கையில் சிறந்த பயனை அளித்திருக்கிறது. (மல்கியா 2:15) இன்னும் வேறு என்னென்ன அம்சங்களில் கடவுளுடைய ஆலோசனையிலிருந்து நாம் பயனடையலாம்?
பிள்ளைகளுக்கு பயிற்சியளிப்பதில்
பிள்ளைகளுக்கு பெற்றோர் பயிற்சியளிக்கையில் நிறைய கட்டுப்பாடுகள் வைக்கக்கூடாது என்ற கருத்து சில பத்தாண்டுகளுக்கு முன்பு மக்கள் மத்தியில் பிரபலமானது. எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ள பிள்ளைகளை அனுமதிப்பது நியாயமானதென தோன்றியது. அவர்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்பதே குறிக்கோளாக இருந்தது. சில இடங்களில், குறைந்தளவு பாடத் திட்டத்தை உடைய கல்வி முறைகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு மற்ற காரியங்களோடுகூட, வகுப்புகளில் கலந்துகொள்வதா, வேண்டாமா என்பதையும் மாணவர்கள் தங்களுக்குத் தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ள முடிந்தது; அதோடு எந்தளவுக்கு பொழுதுபோக்கு அல்லது பயிற்சி தேவை என்பதையும் அவர்கள் தெரிவு செய்ய முடிந்தது. “பெரியோரின் கருத்துக்கோ தலையீட்டிற்கோ இடமின்றி பிள்ளைகள் தங்களுடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் தெரிவிக்கும்படி விடுவதே” இவ்வகையான கல்விமுறையாக இருந்தது. இன்றும், சில வகையான தண்டனைகளை கொடுப்பதால் பயனுண்டா என்பதன் பேரில் மனித நடத்தை சம்பந்தப்பட்ட சில ஆலோசகர்கள் விவாதிக்கிறார்கள்; அன்பாக சிட்சை கொடுப்பதன் அவசியத்தை சில பெற்றோர் உணரும் சந்தர்ப்பங்களிலும்கூட அந்த ஆலோசகர்கள் அவ்வாறு விவாதிக்கிறார்கள்.
இதனால் என்ன விளைவடைந்திருக்கிறது? பிள்ளைகளை இப்படி கட்டுப்பாடின்றி வளர்ப்பதால் அளவுக்கு அதிகமான சுதந்திரம் அவர்களுக்கு கிடைப்பதாக அநேகர் நம்புகிறார்கள். குற்றச்செயலும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் அதிகரிப்பதற்கு இதுதான் காரணமென்று அவர்கள் நினைக்கிறார்கள். பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெற்றோரின் வழிநடத்துதல் தேவையானளவு கிடைப்பதில்லை என கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் நினைத்ததாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. டீனேஜர்கள் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் மற்ற பயங்கரமான குற்றச்செயல் புரிவதற்கும் காரணத்தை கண்டுபிடிக்க முயலுகையில், “பெற்றோர் கொடுக்கும் இளக்காரம்தான்” காரணம் என அநேகர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதன் பாதிப்புகள் படுபயங்கரமாக இல்லாவிட்டாலும், பிள்ளைகளை சரியாக வளர்க்காததன் கசப்பான விளைவுகளை பெற்றோரும் பிள்ளைகளும் அனுபவிக்கிறார்கள்.
இதன் சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது? பெற்றோர் தங்களுடைய அதிகாரத்தை அன்போடும் உறுதியோடும் நிறைவேற்ற வேண்டும் என்பதே பைபிள் தரும் ஆலோசனை. “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) ஆனால், பெற்றோர் கொடுக்கும் சிட்சை எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். எந்தவிதமான சிட்சையானாலும் அது சாந்தத்தோடும், தன்னடக்கத்தோடும், கரிசனையோடும் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது அன்புக்கு அடையாளமாக இருக்கும். பெற்றோர் தங்களுடைய அதிகாரத்தை முரட்டுத்தனமாக அல்லாமல் அன்பாக செலுத்தும்போது வெற்றி கிட்ட மிக அதிக வாய்ப்புண்டு.
இந்த அறிவுரையை பின்பற்றுவதன் மூலம் சிறந்த பலன்களை கண்ணாரக் காணலாம். 30 வயது ஆர்ட்டூரோ மெக்சிகோவைச் சேர்ந்தவர். சமீபத்தில் மணம் செய்துகொண்ட இவர் இவ்வாறு கூறுகிறார்: “குடும்பத்தில் தனக்கும் அம்மாவுக்கும் அதிகாரம் இருப்பதை அப்பா என்னிடமும் என் சகோதரர்களிடமும் தெளிவாக சொல்லியிருக்கிறார். எங்களுக்கு சிட்சை கொடுக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. அதே சமயத்தில், எங்களோடு பேசுவதற்கு எப்போதும் அவர்கள் நேரம் ஒதுக்கினார்கள். இப்போது பெரியவனாக, நான் அனுபவிக்கும் நிலையான வாழ்க்கையை உயர்வாக கருதுகிறேன்; சிறந்த வழிநடத்துதலைப் பெற்றதன் விளைவே இது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”
மிகச் சிறந்த ஆலோசனையிலிருந்து பயனடையுங்கள்
மனிதகுலத்திற்கு தேவையான மிகச் சிறந்த ஆலோசனை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ளது. அதன் வழிநடத்துதல் குடும்ப வட்டாரத்திற்கு மட்டுமே உரியதல்ல. அநேக வழிகளில் நம்மை பயிற்றுவிப்பதற்கு இது உதவுகிறது. ஏனென்றால், ஞானத்தின் உன்னத ஊற்றுமூலரின் ஆலோசனையை தங்களுடைய சொந்த நன்மைக்காக கேட்டு நடப்பது அவசியம் என்பதை ஏற்க மனமில்லாதோர் அநேகர் வாழும் இந்த உலகில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென இது கற்பிக்கிறது.
மனிதகுலத்தின் படைப்பாளராகிய யெகோவா தேவன், சங்கீதக்காரனாகிய தாவீதின் மூலம் பின்வரும் வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” (சங்கீதம் 32:8) ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க படைப்பாளர் நம்மீது கண்ணோக்கமாயிருக்கிறார் என்பதன் அர்த்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இருந்தாலும், நம் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் கேள்வி இதுதான்: ‘யெகோவாவின் பாதுகாப்பான வழிநடத்துதலை நான் தாழ்மையோடு ஏற்றுக்கொள்வேனா?’ அவரது வார்த்தை அன்பாக நம்மிடம் இவ்வாறு சொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.
யெகோவாவை அறிந்துகொள்வதற்கு முயற்சியும் முழு ஈடுபாடும் அவசியமே. இருந்தாலும் பைபிளின் உதவியோடு அதைக் கண்டிப்பாக செய்ய முடியும். யெகோவா சிபாரிசு செய்யும் வாழ்க்கை ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தம் அளிக்கிறது.’ அப்படிப்பட்ட வாழ்க்கை அளிக்கும் நன்மைகளை சிந்திக்கையில், அது உண்மையில் மிகுந்த ஆதாயமே.—1 தீமோத்தேயு 4:8; 6:6.
பைபிள் தரும் ஆழமான புரிந்துகொள்ளுதலும், அதற்கிசைய நடப்பதால் வரும் ஆசீர்வாதங்களும் உங்களை கவர்ந்தால், கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கும் தியானிப்பதற்கும் வாழ்க்கையில் முதலிடம் கொடுங்கள். அப்படி செய்வது, இன்றும் இனியும் சந்திக்கும் எந்த சவாலையும் வெற்றிகரமாக சமாளிக்க உங்களுக்கு உதவும். அது தவிர, கடவுளுடைய புதிய உலகில் வாழும் நம்பிக்கையை பற்றியும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்; அந்த உலகில், எல்லாருமே யெகோவாவால் போதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு மிகுந்த சமாதானம் இருக்கும்.—ஏசாயா 54:13.
[பக்கம் 5-ன் படம்]
பைபிளின் ஆலோசனை திருமணப் பந்தத்தை உறுதிப்படுத்தும்
[பக்கம் 6-ன் படங்கள்]
சிறந்த அறிவுரைக்கு பைபிளே அடிப்படை, அதே சமயத்தில் ஜாலியாக இருப்பதையும் அது தடை செய்வதில்லை
[பக்கம் 7-ன் படங்கள்]
பைபிள் ஆலோசனையை பின்பற்றுபவர்கள் சமநிலையான வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம்