இன்றைய உலகில் மணவாழ்க்கை செழிக்க முடியும்
“பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:14.
1, 2. (அ) கிறிஸ்தவ சபையைக் காணும்போது எது ஊக்கமளிக்கிறது? (ஆ) வெற்றிகரமான மணவாழ்க்கை என்றால் என்ன?
கிறிஸ்தவ சபையிலுள்ள தம்பதியர் பலர் 10, 20, 30 ஆண்டுகளாக, அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் உண்மையுடன் இருப்பதைக் காணும்போது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறதல்லவா? இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாமல் அவர்கள் சேர்ந்தே வாழ்ந்திருக்கின்றனர்.—ஆதியாகமம் 2:24.
2 ஆனால் மணவாழ்க்கையில் கஷ்டநஷ்டங்கள் இல்லாமல் இல்லை என்பதை இவர்களில் பலரும் ஒத்துக்கொள்வர். ஒருவர் இவ்வாறு எழுதினார்: “மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையாக இருந்தாலும் அதில் மேடுபள்ளங்கள் இல்லாமல் இல்லை. இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. . . . ஆனால் இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தம்பதியர் . . . , [கொந்தளிப்புமிக்க] நவீன வாழ்க்கையின் மத்தியிலும் எப்படியோ இணைபிரியாமல் சேர்ந்தே வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள்.” வாழ்க்கை பிரச்சினைகளை, முக்கியமாக பிள்ளைகளைப் பெற்று வளர்க்கையில் எதிர்ப்படுகிற பெரும் சவால்களை இவர்கள் வெற்றிகரமாக சமாளிக்க கற்றிருக்கிறார்கள். உண்மையான அன்பு “ஒருக்காலும் ஒழியாது” என்பதை அனுபவ பாடம் இப்படிப்பட்ட தம்பதியருக்குக் கற்றுத் தந்திருக்கிறது.—1 கொரிந்தியர் 13:8.
3. திருமணத்தையும் விவாகரத்தையும் பற்றிய புள்ளிவிவரங்கள் என்ன காட்டுகின்றன, இவை என்ன கேள்விகளை எழுப்புகின்றன?
3 மறுபட்சத்தில், லட்சோபலட்சம் மணவாழ்க்கைப் படகுகள் கண்ணீர் கடலில் மூழ்கியிருக்கின்றன. ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “இன்று ஐ.மா.-வில் உள்ள பாதி திருமணங்கள் விவாகரத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. அவற்றில் பாதி, 7.8 வருடங்களிலேயே நிகழும். . . . மறுமணம் முடிக்கும் 75 சதவீதத்தினரில், 60 சதவீதத்தினர் மீண்டும் விவாகரத்து செய்துகொள்வார்கள்.” விவாகரத்து எண்ணிக்கை குறைவாக இருந்த நாடுகளிலும்கூட அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, சமீப வருடங்களில், ஜப்பானில் விவாகரத்து வீதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலைக்கு வழிநடத்தியிருக்கும் பிரச்சினைகள் சில யாவை? சில சமயங்களில், கிறிஸ்தவ சபையில் இருப்பவர்களையும் பாதித்திருக்கும் அந்தப் பிரச்சினைகள் என்ன? விவாக ஏற்பாட்டை குலைக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளின் மத்தியிலும் மணவாழ்க்கை செழிக்க எது அவசியம்?
தவிர்க்க வேண்டிய படுகுழிகள்
4. மணவாழ்க்கையை குலைக்கக்கூடிய சில அம்சங்கள் யாவை?
4 மணவாழ்க்கையை சீர்குலைக்கும் அம்சங்களைப் புரிந்துகொள்ள கடவுளுடைய வார்த்தை நமக்கு துணை புரிகிறது. உதாரணமாக, இந்தக் கடைசி நாட்களில் நிலவும் சூழ்நிலைகளைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னதை கவனியுங்கள்: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் [அதாவது உண்மையற்றவர்களாயும்], சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”—2 தீமோத்தேயு 3:1-5.
5. ‘தற்பிரியர்’ ஏன் தனது மணவாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்குகிறார், இதன் சம்பந்தமாக பைபிள் தரும் அறிவுரை என்ன?
5 பவுலின் வார்த்தைகளை நாம் சிந்திக்கையில், அவர் பட்டியலிட்ட பல அம்சங்கள் திருமண உறவுகள் முறிவடைவதற்கு வழிவகுக்கலாம் என புரிந்துகொள்கிறோம். உதாரணமாக, ‘தற்பிரியராக’ இருப்பவர்கள் சுயநலக்காரர்களாகவும் பிறர் மீது கரிசனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். கணவன்மார்களாக இருந்தாலும் மனைவிமார்களாக இருந்தாலும், தங்கள் மீதே அன்புகூருகிறவர்கள் தங்களுடைய சொந்த இஷ்டப்படி நடப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் விட்டுக் கொடுப்பதோ வளைந்து கொடுப்பதோ இல்லை. இத்தகைய மனப்பான்மை மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு துணைபுரியுமா? நிச்சயமாகவே துணைபுரியாது. கிறிஸ்தவர்களுக்கு, தம்பதியர்களுக்கும்கூட, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஞானமாக அறிவுரை கூறினார்: ‘[நீங்கள்] ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண வேண்டும். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்க வேண்டும்.’—பிலிப்பியர் 2:3, 4.
6. பண ஆசை எப்படி திருமண பந்தத்தைப் பாதிக்கக்கூடும்?
6 பண ஆசை கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிளவை உண்டுபண்ணலாம். பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9, 10) இன்று பலருடைய மணவாழ்க்கையில் பவுலின் எச்சரிக்கை உண்மையாக ஆகியிருப்பது வருத்தகரமான விஷயம். செல்வத்தைத் தேடிப் போனதால், தங்கள் துணைவர்களின் தேவைகளை அநேகர் அசட்டை செய்திருக்கிறார்கள். அதாவது உணர்ச்சி ரீதியிலான ஆதரவு, கனிவான தோழமை ஆகியவற்றை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அசட்டை செய்திருக்கிறார்கள்.
7. சிலருடைய விஷயத்தில், எத்தகைய நடத்தை துரோகம் செய்ய வழிநடத்தியிருக்கிறது?
7 கடைசி நாட்களில் சிலர் ‘உண்மையற்றவர்களாயும் சுபாவ அன்பில்லாதவர்களாயும் இணங்காதவர்களாயும்’ இருப்பார்கள் என்றும் பவுல் கூறினார். திருமண உறுதிமொழி என்பது பயபக்தியுடன் செய்யப்படும் ஒரு வாக்குறுதி, அது நிலையான பந்தத்திற்கு வழிநடத்த வேண்டும், துரோகம் செய்வதற்கு அல்ல. (மல்கியா 2:14-16) ஆனால் சிலர் தங்களுடைய மணத்துணை அல்லாத பிறர் மீது காமப் பார்வையை செலுத்தியிருக்கிறார்கள். சுமார் 35-வயதுடைய ஒரு பெண் கணவனால் கைவிடப்பட்டாள்; தன்னை கைவிட்டுச் செல்வதற்கு முன்பே மற்ற பெண்களிடம் அதிக நெருக்கமாகவும் பாசமாகவும் அவர் நடந்துகொண்டதாக அப்பெண் கூறினாள். மணமான ஆடவனுக்குத் தகுந்த நடத்தை எது என்பதை அவர் உணரத் தவறிவிட்டார். அவரது நடத்தையைப் பார்த்து மிகுந்த வேதனைப்பட்ட மனைவி, அதிலுள்ள ஆபத்தைக் குறித்து நயமாக எச்சரித்தாள். இருந்தாலும், அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார். அன்பாக எச்சரிப்பு கொடுக்கப்பட்டபோதிலும், அதற்குக் கவனம் செலுத்த அவர் விரும்பவில்லை. கண்ணியில் நேரே போய் விழுந்தார்.—நீதிமொழிகள் 6:27-29.
8. எது விபச்சாரத்திற்கு வழிநடத்தலாம்?
8 விபச்சாரத்தைக் குறித்து எவ்வளவு தெளிவாக பைபிள் எச்சரிக்கிறது! “ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்.” (நீதிமொழிகள் 6:32) பொதுவாக, விபச்சாரம் என்பது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு செய்யப்படும் ஒரு செயல் அல்ல. பைபிள் எழுத்தாளர் யாக்கோபு சுட்டிக்காட்டுகிறபடி, விபச்சாரம் போன்ற பாவம் முதலில் மனதில் தோன்றி, அதன்பின் தொடர்ந்து சிந்தையை ஆக்கிரமிக்கும் போதுதான் அது செயலாக உருவெடுக்கிறது. (யாக்கோபு 1:14, 15) அதில் ஈடுபடுபவர் தனது துணைக்கு, அதாவது காலம் பூராவும் கற்புடன் நடப்பதாக வாக்குறுதி கொடுத்தவருக்கு, உண்மையுள்ளவராக இருப்பதை படிப்படியாக நிறுத்திவிடுகிறார். இயேசு இவ்வாறு கூறினார்: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.”—மத்தேயு 5:27, 28.
9. நீதிமொழிகள் 5:18-20-ல் காணப்படும் ஞானமான அறிவுரை என்ன?
9 ஆகவே, நீதிமொழிகள் புத்தகத்தில் உற்சாகப்படுத்தப்படும் அறிவுரையைப் பின்பற்றுவதே ஞானமான செயலாகும்: “உன் ஊற்றுகள் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண் மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவ வேண்டியதென்ன?”—நீதிமொழிகள் 5:18-20.
அவசரப்பட்டு மணமுடிப்பதைத் தவிருங்கள்
10. வருங்கால துணைவரைப் பற்றி அறிந்துகொள்ள நேரம் செலவழிப்பது ஏன் ஞானமானது?
10 தம்பதியர் அவசரப்பட்டு மணமுடிக்கும்போது திருமணத்தில் பிரச்சினைகள் எழும்பலாம். அவர்கள் ஒருவேளை மிகவும் இளைஞர்களாகவும் அனுபவமற்றவர்களாகவும் இருக்கலாம். அல்லது ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு—விருப்பு வெறுப்புகளையும் வாழ்க்கையின் இலட்சியங்களையும் குடும்ப பின்னணியையும் தெரிந்துகொள்வதற்கு—நேரம் செலவழிக்காமல் இருக்கலாம். பொறுமையாக இருந்து, வருங்கால துணையை நன்கு அறிந்துகொள்ள நேரம் செலவழிப்பது ஞானமானது. ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபை பற்றி சிந்தித்துப் பாருங்கள். ராகேலை மணமுடிப்பதற்கு முன்பு தனது வருங்கால மாமனாருக்காக அவர் ஏழு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதற்கு அவர் மனமுள்ளவராக இருந்தார், ஏனென்றால் அவருக்கு உண்மையான அன்பு இருந்தது, அவர் வெறுமனே அழகைக் கண்டு மயங்கவில்லை.—ஆதியாகமம் 29:20-30.
11. (அ) திருமண பந்தம் எதை ஒன்றுசேர்க்கிறது? (ஆ) ஞானமாக பேசுவது திருமணத்தில் ஏன் முக்கியம்?
11 திருமணம் என்பது வெறும் காதல் உறவு மட்டுமல்ல. வித்தியாசப்பட்ட குடும்ப பின்னணிகளை, சுபாவங்களை, உணர்ச்சிகளை, கல்விப் பின்னணிகளைச் சேர்ந்த இரு நபர்களை ஒன்றுசேர்க்கும் பந்தம் அது. சில சமயங்களில், இரு கலாச்சாரத்தினரை, ஏன் இரு மொழியினரையும்கூட அது இணைக்கிறது. குறைந்தபட்சம், இரு கருத்துகளைக் கொண்ட நபர்களை இணைக்கிறது. அந்த இரு கருத்துகள் திருமண பந்தத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எப்போதும் குறைகூறும் விதத்திலும் புகார் சொல்லும் விதத்திலும் கருத்துகள் வெளிப்படுத்தப்படலாம், அல்லது உற்சாகமூட்டி கட்டியெழுப்பும் விதத்தில் வெளிப்படுத்தப்படலாம். ஆம், நம்முடைய வார்த்தைகளால் நமது துணையை புண்படுத்தவும் முடியும் ஆறுதல்படுத்தவும் முடியும். கட்டுப்பாடற்ற பேச்சு மண வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.—நீதிமொழிகள் 12:18; 15:1, 2; 16:24; 21:9; 31:26.
12, 13. திருமணத்தைப் பற்றி என்ன நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது நல்லது?
12 ஆகவே, வருங்கால துணையைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள நேரம் செலவழிப்பது ஞானமானது. அனுபவமிக்க கிறிஸ்தவ சகோதரி ஒருவர் இவ்வாறு கூறினார்: “வருங்கால துணையை தேர்ந்தெடுக்கும்போது, அந்த நபரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான பத்து குணங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை ஏழு குணங்களை மட்டுமே நீங்கள் அவரிடத்தில் பார்த்தால், ‘மீதி மூன்றை பொருட்படுத்தாமல் விட்டுவிட தயாராக இருக்கிறேனா? தினமும் அந்தக் குறைபாடுகளை என்னால் சகித்துக்கொண்டு வாழ முடியுமா?’ என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், நின்று நிதானமாக மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.” அதேசமயத்தில், நீங்கள் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மணம் செய்துகொள்ள விரும்பினால், உங்களால் ஒருபோதும் பரிபூரணமான துணைவரைக் கண்டுபிடிக்க முடியாது என்பதை அறிந்திருங்கள். அதோடு, நீங்களும் உங்களுடைய துணைவருக்குப் பரிபூரண துணையாக இருக்க முடியாது என்பதையும் அறிந்திருங்கள்!—லூக்கா 6:41.
13 திருமணத்தில் தியாகங்கள் உட்பட்டுள்ளன. பின்வருமாறு சொன்னபோது பவுல் இதை சிறப்பித்துக் காட்டினார்: “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம் பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.”—1 கொரிந்தியர் 7:32-34.
ஏன் சில திருமணங்கள் தோல்வியுறுகின்றன
14, 15. திருமண பந்தம் பலவீனமடைவதற்கு எது பங்களிக்கலாம்?
14 ஒரு கிறிஸ்தவ மனைவியின் கணவர் பன்னிரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தபின் விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் உறவுகொள்ள ஆரம்பித்தபோது, அவரது மனைவி கடும் துயரத்தை அனுபவித்தார். மணவாழ்க்கை முறிவடைவதற்கு முன்பு அவர் ஏதாவது எச்சரிப்பூட்டும் அறிகுறிகளைக் கண்டாரா? அவர் கூறுகிறார்: “என் கணவர் ஜெபம் செய்வதையே விட்டுவிட்டார். கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் வராமலிருக்க சாக்குப்போக்குகள் சொல்ல ஆரம்பித்தார். என்னுடன் நேரமே செலவிட மாட்டார், எப்போது பார்த்தாலும் அதிக பிஸியாக அல்லது அதிக களைப்பாக இருப்பதாக சொன்னார். அவர் என்னிடம் பேசவே இல்லை. ஆன்மீக விஷயங்களைப் பேசுவதையும் நிறுத்திவிட்டார். அவர் இப்படி மாறியது உண்மையிலேயே வருத்தமான விஷயம். இவர் என் கணவர்தானா என சந்தேகிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்.”
15 இதுபோன்ற அறிகுறிகளை துணைவரிடம் கவனித்ததாக மற்றவர்களும் சொல்கிறார்கள்; தனிப்பட்ட பைபிள் படிப்பையும் ஜெபத்தையும் கிறிஸ்தவ கூட்டங்களையும் அசட்டை செய்ததால் ஆவிக்குரிய விதத்தில் தங்கள் கணவர் பலவீனமாகி விட்டதாக சொல்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், தங்களுடைய துணையைக் கைவிட்டுச் சென்றவர்களில் பலர் யெகோவாவுடன் உள்ள உறவு பலவீனமடைய அனுமதித்தார்கள். அதனால், அவர்களுடைய ஆவிக்குரிய பார்வை மங்கிவிட்டது. அவர்களுக்கு யெகோவா உயிருள்ள கடவுளாக இருக்கவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட நீதியுள்ள புதிய உலகம் நிஜமாக இருக்கவில்லை. சிலருடைய விஷயத்தில், வேறொருவருடன் பழக ஆரம்பிப்பதற்கு முன்பே இத்தகைய ஆவிக்குரிய பலவீனம் ஏற்பட்டுள்ளது.—எபிரெயர் 10:38, 39; 11:6; 2 பேதுரு 3:13, 14.
16. திருமணத்தைப் பலப்படுத்துவது எது?
16 மறுபட்சத்தில், மிகவும் சந்தோஷமுள்ள ஒரு தம்பதியர், பலமான ஆவிக்குரிய பந்தமே தங்களுடைய மணவாழ்க்கையின் வெற்றிக்கு காரணமென சொல்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறார்கள், படிக்கிறார்கள். அந்தக் கணவர் சொல்கிறார்: “நாங்கள் ஒன்று சேர்ந்து பைபிள் வாசிக்கிறோம். சேர்ந்து வெளி ஊழியத்திற்குப் போகிறோம். எல்லா காரியங்களையும் சேர்ந்தே செய்கிறோம்.” ஆகவே, பாடம் தெளிவாக இருக்கிறது: யெகோவாவுடன் நல்ல உறவைக் காத்துக்கொள்வது திருமண பந்தம் பலப்பட பெரிதும் உதவும்.
எதார்த்தமாயிருங்கள், பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள்
17. (அ) வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு உதவும் இரண்டு காரியங்கள் யாவை? (ஆ) கிறிஸ்தவ அன்பை பவுல் எவ்வாறு விவரிக்கிறார்?
17 வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு உதவும் இன்னும் இரண்டு காரியங்கள்: கிறிஸ்தவ அன்பு, பேச்சுத்தொடர்பு. காதலிக்கும்போது குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது இயல்பு. காதலர்கள் நிறைய ஆசைக் கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம், ஒருவேளை காதல் காவியங்களில் படித்ததையோ அல்லது திரைப்படங்களில் பார்த்ததையோ நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் கடைசியில் அவர்கள் எதார்த்தத்தை எதிர்ப்பட்டே தீர வேண்டும். அப்பொழுது, சிறுசிறு தவறுகளோ எரிச்சலூட்டும் சின்னஞ்சிறிய பழக்கங்களோ பூதாகரமான பிரச்சினைகளாக வெடிக்கலாம். அப்படி சம்பவித்தால், ஆவியின் கனியில் ஓர் அம்சமான அன்பை கிறிஸ்தவர்கள் வெளிக்காட்ட வேண்டும். (கலாத்தியர் 5:22, 23) சொல்லப்போனால், அன்பே—காதல் அல்ல ஆனால் கிறிஸ்தவ அன்பே—மிகவும் வலிமை வாய்ந்தது. இத்தகைய கிறிஸ்தவ அன்பை பவுல் விவரித்தார்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; . . . [அது தன்னலத்தை நாடாது] சினமடையாது, தீங்கு நினையாது, . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” (1 கொரிந்தியர் 13:4-7) உண்மையான அன்பு மானிட குறைபாடுகளைப் பொறுத்துக் கொள்ளும் என்பது தெளிவாக இருக்கிறது. அது பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை.—நீதிமொழிகள் 10:12.
18. பேச்சுத்தொடர்பு எவ்வாறு உறவை பலப்படுத்துகிறது?
18 பேச்சுத்தொடர்பும் இன்றியமையாதது. எவ்வளவு வருடங்கள் உருண்டோடியிருந்தாலும் சரி, துணைவர்கள் ஒருவரோடொருவர் பேச வேண்டும், ஒருவருக்கொருவர் செவிகொடுத்துக் கேட்க வேண்டும். ஒரு கணவர் இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் மனதில் எதையும் வைக்காமல் எல்லாவற்றையும் பேசிவிடுகிறோம், ஆனால் அப்படி பேசுகையில் ஒருவரையொருவர் நண்பர்களாக பாவிக்கிறோம்.” கணவனும் மனைவியும் அனுபவம் பெறப் பெற, மனம்விட்டு சொல்லப்படும் விஷயத்திற்கு மட்டுமல்ல, மனம்விட்டு சொல்லப்படாத விஷயத்திற்கும் செவிசாய்க்க கற்றுக்கொள்கிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், காலங்கள் செல்லச் செல்ல, வார்த்தைகளில் வடிக்கப்படாத எண்ணங்களை அல்லது வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகளைப் பகுத்துணர கற்றுக்கொள்கிறார்கள். தாங்கள் சொல்வதை தங்கள் கணவன்மார் உண்மையில் செவிகொடுத்துக் கேட்பதில்லை என மனைவிமார்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். மனைவிமார்கள் நேரங்கெட்ட நேரத்தில் வந்து பேசுவதாக கணவன்மார்கள் சிலர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேச்சுத்தொடர்பு என்பது இரக்கத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உட்படுத்துகிறது. திறம்பட பேச்சுத்தொடர்பு கொள்வது கணவன் மனைவி ஆகிய இருவருக்குமே நல்லது.—யாக்கோபு 1:19.
19. (அ) தவறை ஒப்புக்கொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (ஆ) தவறை ஒப்புக்கொள்வதற்கு எது நம்மை உந்துவிக்கும்?
19 தவறை ஒப்புக்கொள்வதும் பேச்சுத்தொடர்பில் உட்பட்டுள்ளது. அது எப்போதும் சுலபமல்ல. ஒருவர் தனது தவறுகளை ஒத்துக்கொள்வதற்கு மனத்தாழ்மை தேவை. என்றாலும், மணவாழ்க்கையை பலப்படுத்துவதில் அது எப்பேர்ப்பட்ட உதவியாக இருக்கிறது! தவறை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும்போது இனி என்றாவது அந்த விஷயத்தைப் பற்றி வாக்குவாதம் செய்வதற்கு இடமில்லாமல் போகிறது. இது, உண்மையான மன்னிப்புக்கும் பிரச்சினைக்கான பரிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. பவுல் இவ்வாறு கூறுகிறார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13, 14.
20. ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு அந்தரங்கத்திலும் பிறர் முன்னிலையிலும் தனது துணையை நடத்த வேண்டும்?
20 பரஸ்பர ஆதரவும் மணவாழ்க்கையில் முக்கியம். கிறிஸ்தவ கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நம்ப வேண்டும், ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை தரக்குறைவாக நடத்தக்கூடாது, மற்றொருவருடைய தன்னம்பிக்கையை அழித்துப் போடவும் கூடாது. திருமணத் துணைவர்கள் ஒருவரையொருவர் பாராட்ட வேண்டும், கடுமையாக விமர்சிக்கக் கூடாது. (நீதிமொழிகள் 31:28ஆ, 29) ஒருவரையொருவர் கேலி செய்து அவமானப்படுத்தக் கூடாது. (கொலோசெயர் 4:6) இத்தகைய பரஸ்பர ஆதரவு பாசத்தைப் பொழிவதன் மூலம் பலப்படுத்தப்படுகிறது. “நான் உன்னை இன்னும் நேசிக்கிறேன். நீ என்னுடன் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்பதை அன்பாக தொடும்போது அல்லது பாசமாக அழைக்கும்போது சொல்கிறீர்கள். இவையெல்லாம் உறவைப் பலப்படுத்தவும் இன்றைய உலகில் மணவாழ்க்கை வெற்றிபெறவும் உதவுகிற சில அம்சங்களாகும். வேறுசில அம்சங்களும் இருக்கின்றன, வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு உதவும் கூடுதலான வேதப்பூர்வ அறிவுரையை பின்வரும் கட்டுரை தருகிறது.a
[அடிக்குறிப்பு]
a கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற பிரசுரத்தைக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• மணவாழ்க்கையை கெடுக்கும் சில அம்சங்கள் யாவை?
• அவசரப்பட்டு மணமுடிப்பது ஏன் ஞானமற்றது?
• மணவாழ்க்கையில் ஆவிக்குரிய தன்மை எவ்வாறு நல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது?
• மணவாழ்க்கையை ஸ்திரப்படுத்த என்ன அம்சங்கள் துணை புரிகின்றன?
[பக்கம் 12-ன் படம்]
மணவாழ்க்கை என்பது வெறும் காதல் உறவு மட்டுமல்ல
[பக்கம் 14-ன் படங்கள்]
யெகோவாவுடன் பலமான உறவை வைத்துக்கொள்வது மணவாழ்க்கை வெற்றிபெற தம்பதியருக்கு உதவுகிறது