‘கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்’
‘நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே, ஆகையால் . . . தேவனை மகிமைப்படுத்துங்கள்.’—1 கொரிந்தியர் 6:20.
1, 2. (அ) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, இஸ்ரவேல் அடிமைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டியிருந்தது? (ஆ) ஓர் அடிமை தன் எஜமானரை நேசித்தபோது என்ன செய்ய அனுமதியிருந்தது?
“பூர்வ உலகில் அடிமைத்தனம் எங்கும் வியாபித்திருந்தது, அதை பலரும் ஏற்றுக் கொண்டார்கள்” என்று ஹோல்மன் படவிளக்க பைபிள் அகராதி (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. அது மேலும் கூறுகிறது: “எகிப்து, கிரீஸ், மற்றும் ரோமின் பொருளாதாரம் அடிமை வியாபாரத்தை சார்ந்திருந்தது. கிறிஸ்தவத்தின் முதலாம் நூற்றாண்டில், இத்தாலியில் மூன்று பேருக்கு ஒருவரும் பிற நாடுகளில் ஐந்து பேருக்கு ஒருவரும் அடிமைகளாக இருந்தார்கள்.”
2 பூர்வ இஸ்ரவேலிலும்கூட அடிமைத்தன பழக்கம் இருந்தது, ஆனால் எபிரெய அடிமைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்க மோசேயின் நியாயப்பிரமாணம் வழிசெய்தது. உதாரணமாக, இஸ்ரவேலன் ஒருவன் ஆறு வருஷத்திற்கு மேல் அடிமையாக சேவை செய்யக் கூடாது என்று நியாயப்பிரமாணம் கட்டளையிட்டது. ஏழாம் வருஷத்தில், அவன் ‘ஒன்றும் கொடாமல் விடுதலைப் பெற்று போகலாம்.’ அதேசமயத்தில், அடிமைகளை நடத்துவதைப் பற்றிய நியாயப்பிரமாண விதிமுறைகள் அந்தளவு நியாயமும் கருணையும் மிக்கதாக இருந்ததால் பின்வரும் ஏற்பாடும் இருந்தது: “அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால், அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக் கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக் கொண்டிருக்கக்கடவன்.”—யாத்திராகமம் 21:2-6; லேவியராகமம் 25:42, 43; உபாகமம் 15:12-18.
3. (அ) எத்தகைய அடிமைத்தனத்தை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்? (ஆ) கடவுளுக்குச் சேவை செய்ய எது நம்மை உந்துவிக்கிறது?
3 ஒருவர் மனமுவந்து அடிமையாக இருப்பதற்கு வாய்ப்பளித்த இந்த ஏற்பாடு, இன்று மெய் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் அடிமைத்தனத்திற்கு முற்காட்சியாக இருந்தது. உதாரணமாக, பைபிள் எழுத்தாளர்களான பவுல், யாக்கோபு, பேதுரு, யூதா ஆகியோர் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் தாங்கள் ஊழியக்காரர் அல்லது அடிமைகள் என்று குறிப்பிட்டனர். (தீத்து 1:1; யாக்கோபு 1:1; 2 பேதுரு 1:1; யூதா 1) ‘ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்காக [“அடிமையாயிருப்பதற்காக,” NW], . . . விக்கிரகங்களைவிட்டு அவரிடத்திற்கு மனந்திரும்பியதைப்’ பற்றி தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டினார். (1 தெசலோனிக்கேயர் 1:9) கடவுளுக்குத் தங்களை அடிமையாக மனமுவந்து அர்ப்பணிக்க அந்தக் கிறிஸ்தவர்களை எது உந்துவித்தது? இஸ்ரவேல அடிமையின் விஷயத்தில், தனக்கு கிடைத்த விடுதலையை வேண்டாமென துறப்பதற்கு அவனை உந்துவித்தது எது? எஜமானர் மீது வைத்திருந்த அன்பு அல்லவா? கிறிஸ்தவ அடிமைத்தனமும் கடவுள் மீதுள்ள அன்பில் ஆதாரம் கொண்டுள்ளது. ஜீவனுள்ள மெய் தேவனை அறிந்து அவரை நேசிக்க ஆரம்பிக்கையில், ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும்’ அவருக்கு சேவை செய்ய நாம் உந்துவிக்கப்படுகிறோம். (உபாகமம் 10:12, 13) ஆனால், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக இருப்பது என்றால் என்ன? இது எவ்வாறு நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது?
‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்’
4. நாம் எவ்வாறு கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக ஆகிறோம்?
4 ஓர் அடிமை “மற்றொருவருடைய அல்லது மற்றவர்களுடைய சட்டப்பூர்வ சொத்து” என்றும், “முழு கீழ்ப்படிதலுக்குக் கட்டுப்பட்டவன்” என்றும் வரையறுக்கப்பட்டுள்ளார். நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுகையில் நாம் யெகோவாவின் சட்டப்பூர்வ சொத்தாக ஆகிறோம். “நீங்கள் உங்களுடையவர்கல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே” என்று அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார். (1 கொரிந்தியர் 6:19, 20) அந்தக் கிரயம் இயேசு கிறிஸ்து தந்த மீட்பின் கிரய பலியே என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் அந்த ஆதாரத்தின் பேரிலேயே கடவுள் நம்மை ஊழியர்களாக ஏற்றுக்கொள்கிறார்—நாம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும்சரி பூமிக்குரிய நம்பிக்கையுடைய அவர்களுடைய தோழர்களாக இருந்தாலும்சரி. (எபேசியர் 1:7; 2:13; வெளிப்படுத்துதல் 5:9) இவ்வாறு, முழுக்காட்டுதல் பெற்ற சமயத்திலிருந்து, “நாம் யெகோவாவுக்கு உரியவர்கள்.” (ரோமர் 14:8, NW) இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் நாம் விலைக்குக் வாங்கப்பட்டிருப்பதால், நாம் அவருடைய அடிமைகளாகவும் ஆகிறோம்; இதனால், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டிய கடமையைப் பெற்றிருக்கிறோம்.—1 பேதுரு 1:18, 19.
5. யெகோவாவின் அடிமைகளான நமக்கு இருக்கும் முக்கிய கடமை என்ன, அதை எப்படி நிறைவேற்றலாம்?
5 அடிமைகள் தங்கள் எஜமானருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நம்முடைய அடிமைத்தனம் நாமாகவே விரும்பி தேடிக் கொண்ட ஒன்று, நம் எஜமானர் மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு தேடிக் கொண்ட ஒன்று. “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்று 1 யோவான் 5:3 குறிப்பிடுகிறது. ஆகவே, நம்முடைய கீழ்ப்படிதல் நமது அன்புக்கும் பணிவுக்கும் அத்தாட்சியாக இருக்கிறது. நாம் செய்யும் எல்லாவற்றிலும் இது தெளிவாகத் தெரிகிறது. “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 10:31) அன்றாட வாழ்க்கையில், சிறிய வழிகளிலும்கூட, நாம் ‘யெகோவாவுக்கு அடிமைகளாக ஊழியம் செய்வதை’ காட்ட விரும்புகிறோம்.—ரோமர் 12:11.
6. கடவுளின் அடிமைகளாக இருப்பது வாழ்க்கையில் நாம் செய்யும் தீர்மானங்களை எப்படி பாதிக்கிறது? இதை ஓர் உதாரணத்துடன் விளக்குக.
6 உதாரணமாக, தீர்மானங்கள் எடுக்கும்போது, நமது பரலோக எஜமானரான யெகோவாவின் சித்தத்தை கருத்தில் எடுத்துக்கொள்ள கவனமாய் இருக்க வேண்டும். (மல்கியா 1:6) கஷ்டமான தீர்மானங்கள், கடவுளுக்கு எந்தளவு கீழ்ப்படிகிறோம் என்பதைச் சோதிக்கக்கூடும். அந்தச் சமயத்தில், ‘திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமான’ நமது இருதயத்தின் ஆசைகளுக்கு அடிபணிந்துவிடாமல் அவருடைய அறிவுரைக்குச் செவிகொடுப்போமா? (எரேமியா 17:9) மெலிஸா என்ற மணமாகாத பெண் முழுக்காட்டப்பட்டு சில காலமே ஆகியிருந்தது; அப்போது ஓர் இளைஞன் அவள் மீது காதல்கொள்ள ஆரம்பித்தான். அவன் நல்லவனாகத் தோன்றினான், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளும் படித்துக் கொண்டிருந்தான். இருந்தாலும், ‘கர்த்தருக்குட்பட்டவரை’ மாத்திரமே மணமுடிக்க வேண்டுமென்ற யெகோவாவின் கட்டளையைப் பின்பற்றுவது ஞானமான செயல் என மெலிஸாவிடம் ஒரு மூப்பர் கூறினார். (1 கொரிந்தியர் 7:39; 2 கொரிந்தியர் 6:14) அவள் சொல்வதாவது: “மூப்பரின் அறிவுரையைப் பின்பற்றுவது எனக்கு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய என்னை ஒப்புக்கொடுத்திருந்ததால், அவருடைய தெளிவான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்தேன். நான் அந்த அறிவுரையைப் பின்பற்றியதற்காக சந்தோஷப்படுகிறேன். பைபிள் படிப்பை அந்த ஆள் சீக்கிரத்திலேயே நிறுத்திவிட்டான். அந்த நட்பை நான் முறித்திருக்காவிட்டால், ஓர் அவிசுவாசிக்கு மனைவியாக ஆகியிருப்பேன்.”
7, 8. (அ) மனிதரைப் பிரியப்படுத்துவதைப் பற்றி நாம் ஏன் மட்டுக்குமீறி கவலைப்படக் கூடாது? (ஆ) மனித பயத்தை எப்படி வெல்லலாம் என்பதை உதாரணத்தின் மூலம் விளக்குங்கள்.
7 கடவுளுக்கு அடிமைகளாக இருக்கும் நாம் மனிதருக்கு அடிமைகளாக ஆகக்கூடாது. (1 கொரிந்தியர் 7:23) உண்மைதான், மற்றவர்கள் நம்மை வெறுத்தொதுக்க நாம் யாருமே விரும்புவதில்லை, ஆனால் கிறிஸ்தவ தராதரங்கள் இந்த உலக தராதரங்களிலிருந்து வேறுபட்டவை என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். பவுல் இவ்வாறு கேட்டார்: “மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்?” அவருடைய முடிவு: “நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே [அதாவது அடிமையல்லவே].” (கலாத்தியர் 1:10) நண்பர்களுடைய அழுத்தத்திற்கு அடிபணிந்து மனிதரைப் பிரியப்படுத்துகிறவர்களாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படியானால், ஒத்துப்போவதற்கான தூண்டுதல்களை எதிர்ப்படுகையில் என்ன செய்யலாம்?
8 ஸ்பெய்னில் வசிக்கும் ஏலேனா என்ற இளம் கிறிஸ்தவளின் முன்மாதிரியைக் கவனியுங்கள். அவளுடைய வகுப்புத் தோழிகள் பலர் இரத்த தானம் செய்பவர்கள். யெகோவாவின் சாட்சியான ஏலேனா இரத்தத்தை தானம் செய்யவும் மாட்டாள் ஏற்றிக்கொள்ளவும் மாட்டாள் என்பது அவர்களுக்குத் தெரியும். தனது நம்பிக்கையை முழு வகுப்பிற்கும் விளக்கிச் சொல்ல ஏலேனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது; அதை ஒரு சொற்பொழிவாக அளிக்க அவள் முடிவு செய்தாள். அவள் கூறுவதாவது: “எனக்கு முதலில் ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நான் நன்றாய் தயாரித்தேன், நல்ல பலன்களும் கிடைத்தன, அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மாணவர்கள் பலருடைய மதிப்பைப் பெற்றேன், நான் செய்துவரும் வேலையை ஆசிரியரும் பாராட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவுடைய பெயரின் சார்பாக பேசியதும் என்னுடைய வேதப்பூர்வ நிலைநிற்கைக்குத் தெளிவான காரணங்களை எடுத்துக் காட்டியதும் எனக்கு திருப்தியைத் தந்தது.” (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28, 29) ஆம், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக இருப்பதால் நாம் வேறுபட்டவர்களாய் விளங்குகிறோம். என்றாலும், நமது நம்பிக்கைகளைப் பற்றி கண்ணியமாக எடுத்துச் சொல்வதற்கு நன்கு தயாரித்துச் சென்றால் மக்களுடைய மதிப்பையும் மரியாதையையும் பெறலாம்.—1 பேதுரு 3:15.
9. அப்போஸ்தலன் யோவானிடம் பேசிய ஒரு தூதனிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
9 நாம் கடவுளின் அடிமைகள் என்பதை நினைவில் வைப்பது மனத்தாழ்மையுடன் இருப்பதற்கும் உதவுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில், அப்போஸ்தலன் யோவான் பரம எருசலேமைப் பற்றிய அற்புத தரிசனத்தைப் பெற்றபோது உணர்ச்சிப் பரவசமடைந்து, கடவுள் சார்பாக பேசிய தூதனை வணங்க அவருடைய பாதங்களில் விழுந்தார். அப்போது அந்தத் தூதன் அவரிடம், “நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன் [அதாவது அடிமைதான்]; தேவனைத் தொழுதுகொள்” என்று கூறினார். (வெளிப்படுத்துதல் 22:8, 9) கடவுளுடைய அடிமைகள் அனைவருக்கும் எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரியை இந்த தூதர் வைத்தார்! கிறிஸ்தவர்கள் சிலர் சபையில் விசேஷ பொறுப்புகளை வகிக்கலாம். இருந்தாலும், இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 20:26, 27) இயேசுவைப் பின்பற்றுகிற நாம் அனைவருமே அடிமைகள்.
“செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்”
10. கடவுளுடைய சித்தத்தைச் செய்வது அவரது உண்மையுள்ள ஊழியர்களுக்கு எப்போதும் எளிதாக இருக்கவில்லை என்பதை விளக்குவதற்கு வேதப்பூர்வ உதாரணங்கள் தருக.
10 கடவுளுடைய சித்தத்தைச் செய்வது அபூரண மனிதருக்கு எப்போதும் எளிதாக இருப்பதில்லை. எகிப்திற்குப் போய் இஸ்ரவேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்படி தீர்க்கதரிசியான மோசேயிடம் யெகோவா சொன்னபோது அவர் அதற்குக் கீழ்ப்படியத் தயங்கினார். (யாத்திராகமம் 3:10, 11; 4:1, 10) நியாயத்தீர்ப்பு செய்தியை நினிவே மக்களுக்கு அறிவிக்கும் வேலையை யோனா பெற்றபோது, ‘கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி புறப்பட்டார்.’ (யோனா 1:2, 3) எரேமியா தீர்க்கதரிசியின் செயலாளரான வேதபாரகன் பாரூக், மனமொடிந்து போயிருப்பதாக முறையிட்டார். (எரேமியா 45:2, 3) கடவுளுடைய சித்தமும் நமது தனிப்பட்ட விருப்பமும் முரண்படுகையில் நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு சொன்ன ஓர் உவமை இதற்குப் பதிலளிக்கிறது.
11, 12. (அ) லூக்கா 17:7-10-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் உவமையைச் சுருக்கமாகக் கூறுங்கள். (ஆ) இயேசுவின் உவமையிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக் கொள்கிறோம்?
11 நாள் பூராவும் வயல் வெளியில் தனது எஜமானரின் மந்தையைக் கவனித்து வந்த ஓர் அடிமையைப் பற்றி இயேசு பேசினார். அந்த அடிமை ஏறக்குறைய 12 மணிநேரம் கடினமாய் உழைத்து வீட்டுக்கு களைப்புடன் வந்து சேருகிறான்; ஆனால், சுவையான உணவை அருந்துவதற்கு அமரும்படி அவனுடைய எஜமான் அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக, “நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக் கொண்டு, நான் போஜனபானம் பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம்” என்கிறார். தன் எஜமானருக்குச் சேவை செய்த பின்பே அந்த அடிமை தன் சொந்த தேவைகளைக் கவனிக்க முடியும். இயேசு பின்வருமாறு சொல்லி இந்த உவமையை முடித்தார்: “அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.”—லூக்கா 17:7-10.
12 நாம் செய்யும் சேவையை யெகோவா மதிப்பதில்லை என்று காட்டுவதற்கு இயேசு இந்த உவமையைச் சொல்லவில்லை. பைபிள் இவ்வாறு தெளிவாகக் கூறுகிறது: “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) ஆகவே, இயேசுவின் உவமையில் நாம் கற்றுக்கொள்ளும் குறிப்பு என்னவென்றால், ஓர் அடிமை தனது சந்தோஷத்திற்காக அல்லது செளகரியங்களுக்காக செயல்பட முடியாது என்பதே. நம்மை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய அடிமைகளாக இருக்க மனமுவந்து தீர்மானித்தபோது, நமது சொந்த விருப்பத்திற்கு மேலாக அவருடைய சித்தத்தையே முதன்மையாக வைக்க ஒப்புக் கொண்டோம். ஆகவே நமது சொந்த விருப்பத்தைவிட கடவுளுடைய சித்தத்திற்கே முதலிடம் தர வேண்டும்.
13, 14. (அ) எத்தகைய சந்தர்ப்பங்களில் நமது விருப்பங்களை ஒதுக்க வேண்டியிருக்கலாம்? (ஆ) கடவுளுடைய சித்தமே மேலோங்குவதற்கு நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?
13 கடவுளுடைய வார்த்தையையும் ‘‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாருடைய பிரசுரங்களையும் தவறாமல் படித்து வருவதற்கு நம் பங்கில் பெரும் முயற்சி தேவைப்படலாம். (மத்தேயு 24:45, NW) முக்கியமாக, வாசிப்பதென்றாலே நமக்கு எப்போதும் கஷ்டமாக இருந்தால், அல்லது ஒரு பிரசுரம் ‘தேவனுடைய ஆழமான காரியங்களை’ ஆராய்ந்தால், அப்படிப்பட்ட பெரும் முயற்சி தேவைப்படலாம். (1 கொரிந்தியர் 2:10) என்றாலும், தனிப்பட்ட படிப்புக்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும் அல்லவா? ஓரிடத்தில் உட்கார்ந்து நேரமெடுத்து படிப்பதற்கு நமக்கு நாமே கடிவாளம் போட வேண்டியிருக்கலாம். அப்படி செய்யவில்லை என்றால், ‘பூரண வயதுள்ளவர்களுக்குத் தகுந்த’ ‘பலமான ஆகாரத்தை’ நாம் எப்படி ருசிபார்க்க முடியும்?—எபிரெயர் 5:14.
14 நாள் முழுவதும் வேலை செய்து வீட்டிற்கு களைப்புடன் திரும்பும் சந்தர்ப்பங்களில் என்ன செய்வது? கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராக நம்மை நாமே உந்துவிக்க வேண்டியிருக்கலாம். அல்லது, நமது சுபாவத்தின் காரணமாக, பழக்கமில்லாத ஆட்களிடம் சென்று பிரசங்கிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். சொல்லப்போனால், ‘விருப்பமில்லாமல்’ நற்செய்தியை அறிவிக்கும் சந்தர்ப்பங்கள் வரலாம் என்பதை பவுல்கூட உணர்ந்திருந்தார். (1 கொரிந்தியர் 9:17, NW) இருந்தாலும், நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று நம் அன்புக்குரிய பரம எஜமானரான யெகோவா நமக்குச் சொல்வதால் அதையெல்லாம் மறுக்காமல் செய்கிறோம். படிப்பதற்கும் கூட்டங்களுக்கு ஆஜராவதற்கும் பிரசங்கிப்பதற்கும் முயற்சி செய்கையில், நாம் எப்போதும் மனதிருப்தியையும் புத்துணர்ச்சியையும் காண்கிறோம் அல்லவா?—சங்கீதம் 1:1, 2; 122:1; 145:10-13.
‘பின்னிட்டுப் பார்க்காதேயுங்கள்’
15. கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் விஷயத்தில் இயேசு எவ்வாறு சிறந்த முன்மாதிரி வைத்தார்?
15 பரம தகப்பனுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை இயேசு கிறிஸ்து ஒப்பற்ற விதத்தில் மெய்ப்பித்துக் காட்டினார். “என் சித்தத்தின் படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்” என்று சீஷர்களிடம் கூறினார். (யோவான் 6:38) கெத்செமனே தோட்டத்தில் கடும் துயரத்தில் இருந்தபோது, “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது” என்று ஜெபம் பண்ணினார்.—மத்தேயு 26:39.
16, 17. (அ) நாம் விட்டுவந்த காரியங்களை எப்படி கருத வேண்டும்? (ஆ) உலகப்பிரகாரமான வாய்ப்புகளை பவுல் வெறும் ‘குப்பையாக’ மதிப்பிட்டதில் எப்படி எதார்த்தமானவராக இருந்தார் என்பதைக் காட்டுங்கள்.
16 கடவுளுக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமென்ற நமது தீர்மானத்தில் உறுதியாக இருக்கும்படி இயேசு கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கிறார். “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” என்று அவர் சொன்னார். (லூக்கா 9:62) கடவுளுக்கு அடிமைகளாக சேவை செய்யும்போது, ஏற்கெனவே துறந்துவிட்ட காரியங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பது நிச்சயமாகவே சரியல்ல. மாறாக, கடவுளுக்கு அடிமைகளாக இருப்பதைத் தேர்ந்தெடுத்ததால் பெற்ற ஆசீர்வாதங்களை நெஞ்சார மதிக்க வேண்டும். பிலிப்பியருக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன்.”—பிலிப்பியர் 3:8, 11.
17 கடவுளின் அடிமையாக இருப்பதால் வரும் ஆன்மீக நன்மைகளுக்காக மற்ற எதையெல்லாம் பவுல் குப்பையாக கருதி கைவிட்டார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உலக சுகங்களை மட்டுமல்ல, யூதேய மதத்தின் எதிர்கால தலைவராக ஆகும் வாய்ப்பையும்கூட அவர் விட்டுவிட்டார். யூதேய மதத்தை பவுல் தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருந்தால், அவருடைய ஆசான் கமாலியேலின் குமாரனான சிமியோனைப் போல் உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருப்பார். (அப்போஸ்தலர் 22:3; கலாத்தியர் 1:14) சிமியோன் பரிசேயருக்குத் தலைவராகி, பொ.ச. 66-70-ல் ரோமுக்கு விரோதமாக நடந்த யூத கலகத்தில் முக்கிய பாகத்தை வகித்தார்; மனதில் சில தயக்கங்கள் இருந்தபோதிலும் அந்த முக்கிய பாகத்தை வகித்தார். பின்பு அந்தப் போராட்டத்தில் அவர் மரித்தார்; யூத தீவிரவாதிகளாலோ ரோம படை வீரர்களாலோ அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.
18. ஆவிக்குரிய விதத்தில் சாதனைகள் புரிவது எவ்வாறு பலன்களைத் தருகிறது என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
18 யெகோவாவின் சாட்சிகள் பலர் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஜீன் இவ்வாறு சொல்கிறார்: “பள்ளிப் படிப்பு முடிந்த சில வருடங்களில், லண்டனிலேயே பிரபலமான வக்கீல் ஒருவருக்கு எக்ஸிகியூட்டிவ் செகரெட்டரியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வேலை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, கைநிறைய சம்பளமும் கிடைத்தது, ஆனால் யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய என்னால் முடியுமென மனசாட்சி சொன்னது. ஒருவழியாக, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, பயனியர் ஊழியம் செய்யத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 20 வருஷத்திற்கு முன்பு இந்தப் படியை எடுத்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்! முழுநேர ஊழியம் என் வாழ்க்கையை வளமாக்கியிருக்கிறது; எந்தவொரு செகரெட்டரி வேலையும் என் வாழ்க்கையை இப்படி மாற்றியிருக்க முடியாது. யெகோவாவின் வார்த்தை ஒருவருடைய வாழ்க்கையை மாற்றும் விதத்தைப் பார்ப்பதில் கிடைக்கும் மனத்திருப்தி வேறு எதிலும் இல்லை. அதில் ஒரு பங்கு வகிப்பது அற்புதமான காரியம். யெகோவாவுக்காக நாம் கொடுக்கும் காரியங்கள், அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் காரியங்களோடு ஒப்பிடுகையில் வெறும் அற்ப சொற்பமே.”
19. நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும், ஏன்?
19 காலம் செல்லச் செல்ல நம் சூழ்நிலைமைகள் மாறலாம். ஆனால் கடவுளுக்கான நம் ஒப்புக்கொடுத்தல் ஒருபோதும் மாறுவதில்லை. நாம் எப்பொழுதும் யெகோவாவின் அடிமைகளே; நம்முடைய நேரம், சக்தி, திறமைகள், உடைமைகள் ஆகியவற்றை எப்படி மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதென தீர்மானிப்பதை கடவுள் நம் கையில் விட்டுவிடுகிறார். ஆகையால், இதன் சம்பந்தமாக நாம் செய்யும் தீர்மானங்கள் கடவுள் மீது நமக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைக் காட்டும். தனிப்பட்ட தியாகங்கள் செய்வதற்கு எந்தளவு மனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையும் காட்டும். (மத்தேயு 6:33) நம்முடைய சூழ்நிலைமைகள் எப்படி இருந்தாலும், யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுப்பதில் உறுதியாயிருக்க வேண்டுமல்லவா? பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.”—2 கொரிந்தியர் 8:12.
“உங்களுக்குக் கிடைக்கும் பலன்”
20, 21. (அ) கடவுளின் அடிமைகளால் என்ன பலனைப் பெறமுடிகிறது? (ஆ) தங்களால் இயன்ற மிகச் சிறந்ததைக் கொடுப்போரை யெகோவா எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்?
20 கடவுளுடைய அடிமைகளாக இருப்பது கஷ்டமான ஒன்றல்ல. உண்மையில், நம்முடைய மகிழ்ச்சியைப் பறிக்கும் பெருஞ்சுமையான வேறொரு அடிமைத்தனத்திலிருந்து அது நம்மை தப்புவிக்கவே செய்கிறது. “நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்” என்று பவுல் எழுதினார். (ரோமர் 6:22) ஆகவே, கடவுளுக்கு அடிமைகளாக இருப்பதால் பரிசுத்தமாகுதலை பலனாகப் பெறுகிறோம்; அதாவது பரிசுத்தமான அல்லது ஒழுக்க ரீதியில் சுத்தமான நடத்தையால் வரும் பலன்களை அறுவடை செய்கிறோம். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் நித்திய ஜீவனுக்கும் அது வழிநடத்துகிறது.
21 யெகோவா தமது அடிமைகளிடம் தயாள குணத்தைக் காட்டுகிறார். அவருடைய சேவையில் மிகச் சிறந்ததை நாம் செய்கையில், அவர் “வானத்தின் பலகணிகளை” திறந்து, “இடங்கொள்ளாமற் போகுமட்டும்” நம்மேல் ‘ஆசீர்வாதத்தை வருஷிக்கப் பண்ணுகிறார்.’ (மல்கியா 3:10) யெகோவாவின் அடிமைகளாக நித்திய காலமெல்லாம் தொடர்ந்து சேவை செய்வது எவ்வளவு இன்பமாயிருக்கும்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நாம் ஏன் கடவுளின் அடிமைகளாக ஆகிறோம்?
• கடவுளின் சித்தத்திற்கு நமது கீழ்ப்படிதலை எப்படிக் காட்டுகிறோம்?
• யெகோவாவின் சித்தத்திற்கு முதலிடம் கொடுக்க ஏன் ஆயத்தமாக இருக்க வேண்டும்?
• நாம் ஏன் ‘பின்னிட்டுப் பார்க்கக்’ கூடாது?
[பக்கம் 16, 17-ன் படம்]
இஸ்ரவேலில் ஒருவர் மனமுவந்து அடிமையாக இருப்பதற்குரிய ஏற்பாடு கிறிஸ்தவ அடிமைத்தனத்திற்கு முற்காட்சியாக இருந்தது
[பக்கம் 17-ன் படம்]
நாம் முழுக்காட்டப்படுகையில் கடவுளின் அடிமைகளாக ஆகிறோம்
[பக்கம் 17-ன் படம்]
கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சித்தத்திற்கு முதலிடம் தருகிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
மோசே தன் ஊழிய நியமிப்பை ஏற்க தயங்கினார்