“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
கடவுளைப் பற்றிய அறிவு குடும்பங்களைப் பலப்படுத்துகிறது
“பெர்லின் சுவர்.” அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களுடைய வீட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு எழுப்பிய சுவரை இப்படித்தான் அழைத்தார்கள்! கொஞ்சமும் சரிசெய்ய முடியாதளவுக்கு அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமைகள் நிலவின; அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தார்கள்.
வருத்தகரமாக, இப்படிப்பட்ட நிலைமையில் இருப்பவர்கள் அந்தத் தம்பதியர் மட்டுமே அல்ல. சண்டை, நம்பிக்கை துரோகம், கடும் விரோதம் ஆகியவை பல குடும்பங்களில் காணப்படுகின்றன. இது வேதனை தரும் ஒன்று, ஏனெனில் குடும்பம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்டதாகும். (ஆதியாகமம் 1:27, 28; 2:23, 24) குடும்ப ஏற்பாடு கடவுள் தரும் ஒரு பரிசு; இது ஆழ்ந்த அன்பு காட்டுவதற்குச் சிறந்த சூழலைத் தருகிறது. (ரூத் 1:9) கடவுள் கொடுத்துள்ள பொறுப்புகளைச் சரிவர செய்வதன் மூலம் குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷம் அளிக்கிறார்கள்; குடும்ப ஏற்பாட்டின் மூலகாரணராகிய யெகோவாவைக் கனப்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.a
குடும்பத்தை கடவுள் ஏற்படுத்தியிருப்பதால், அது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றிய அவருடைய நோக்குநிலையை நாம் புரிந்துகொண்டு அதன்படி நடப்பது அவசியம். குடும்பங்கள் தழைப்பதற்கும், முக்கியமாகப் பிரச்சினைகள் எழும்புகையில் அவற்றைச் சரிசெய்வதற்கும் உதவும் நடைமுறையான ஆலோசனைகளை அவருடைய வார்த்தை ஏராளமாகத் தருகிறது. கணவன்மார்களின் பங்கைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்.” இதன்படி ஒரு கணவர் நடக்கும்போது, மனைவியும் மகிழ்ச்சியோடு ‘புருஷனிடத்தில் பயபக்தியை,’ அதாவது ஆழ்ந்த மரியாதையைக் காட்டுவாள்.—எபேசியர் 5:25-29, 33.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பந்தத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) இவ்வாறு வளர்க்கையில், ஓர் அன்பான குடும்பச் சூழல் உருவாகிறது; பிள்ளைகளும் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது எளிதாகிறது.—எபேசியர் 6:1.
இக்குறிப்புகள், குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக பைபிள் கொடுத்துள்ள சிறந்த ஆலோசனைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தெய்வீக நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் அநேகர் தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அர்ஜென்டினாவைச் சேர்ந்த அந்தத் தம்பதியரை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு அவர்கள் பைபிளைப் படித்த பிறகு அதன் ஞானமான ஆலோசனைகளை மண வாழ்க்கையில் பின்பற்ற ஆரம்பித்தனர். உரையாடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்டுவதற்கும், மன்னிப்பதற்கும் அவர்கள் அதிகம் பிரயாசப்பட்டனர். (நீதிமொழிகள் 15:22; 1 பேதுரு 3:7; 4:8) தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், நிலைமை கட்டுக்கடங்காமல் போவதாக உணருகையில் கடவுளிடம் உதவி கேட்பதற்கும் அவர்கள் கற்றுக்கொண்டனர். (கொலோசெயர் 3:19) சீக்கிரத்திலேயே அந்த “பெர்லின் சுவர்” தகர்க்கப்பட்டது!
கடவுளால் குடும்பத்தைப் பலப்படுத்த முடியும்
கடவுளுடைய தராதரங்களை அறிவதும் அதை நடைமுறையில் பின்பற்றுவதும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு குடும்பங்களுக்கு உதவும். இது மிக மிக முக்கியம். ஏனென்றால் நம்முடைய நாளில் குடும்பங்கள் பயங்கரமாகத் தாக்கப்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கச் சீர்கேட்டையும் மனித சமுதாயத்தின் தற்போதைய சீரழிவையும் பற்றி பவுல் முன்னறிவித்திருந்தார். “கடைசி நாட்களில்” ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருப்போர்’ மத்தியில்கூட நம்பிக்கைத் துரோகம் காணப்படும், ‘சுபாவ அன்பு’ இருக்காது, பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள் என்றெல்லாம் அவர் சொன்னார்.—2 தீமோத்தேயு 3:1-5.
கடவுளைப் பிரியப்படுத்த முயல்வது, குடும்பத்தில் இப்படிப்பட்ட தீய பாதிப்புகள் ஏற்படாதிருக்க உதவும். அநேக குடும்பத்தார் தாங்கள் எதிர்ப்படுகிற பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆன்மீக மருந்து தேவை என்பதை கண்டிருக்கின்றனர். குடும்பத்தில் உள்ளவர்கள் கடவுளோடு சிறந்த பந்தத்தை வைத்துக்கொள்ள விரும்பினால், எல்லாவற்றிற்கும் மேலாக பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது அவசியம்; அதோடு, “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என்பதையும் அவர்கள் உணர்வது அவசியம். (சங்கீதம் 127:1) வீட்டில் மகிழ்ச்சி களைகட்டுவதற்குக் குடும்ப வாழ்க்கையில் கடவுளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.—எபேசியர் 3:14, 15.
இது எந்தளவு உண்மை என்பதை ஹவாய் தீவைச் சேர்ந்த டென்னிஸ் என்பவர் அறிந்துகொண்டார். தான் ஒரு கிறிஸ்தவரென அவர் சொல்லிக்கொண்டாலும், ஓயாமல் கெட்ட வார்த்தைகளைப் பேசிக்கொண்டும், சண்டை போட்டுக்கொண்டும் இருந்தார். இராணுவத்தில் சேவை செய்த பிறகு அவர் இன்னும் மூர்க்கத்தனமானார். “நான் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை, சாவதற்கும்கூட துணிந்தேன். கெட்ட வார்த்தைகளைப் பேசுவதும் சண்டை போடுவதும் நிற்கவே இல்லை. யெகோவாவின் சாட்சியான என் மனைவி பைபிளை படிக்கும்படி எனக்கு எடுத்துச் சொன்னாள்” என்று அவர் சொல்கிறார்.
ஆனால் மனைவியின் பேச்சை அவர் கேட்கவில்லை, எதிர்த்தார். என்றாலும், அவளுடைய கிறிஸ்தவ நடத்தையைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறினார். கடைசியில், ஒருநாள் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து கிறிஸ்தவ கூட்டத்திற்குச் சென்றார். அதன் பிறகு அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, அவர் நன்கு முன்னேறினார். 28 வருடமாக புகைபிடித்து வந்த பழக்கத்தை விட்டுவிட்டார், மற்ற கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட நினைத்ததால் அவற்றை செய்து வந்த நண்பர்களின் சகவாசத்தை நிறுத்திவிட்டார். யெகோவாவுக்கு நன்றியுள்ளவராக, டென்னிஸ் இவ்வாறு சொன்னார்: “என்னுடைய குடும்ப வாழ்க்கை இப்போது எவ்வளவோ நன்றாக இருக்கிறது. கூட்டத்துக்கும் ஊழியத்துக்கும் நாங்கள் குடும்பமாக சேர்ந்து போகிறோம். என்னுடைய இரண்டு பிள்ளைகளும் இப்போது என்னைப் பார்த்து பயப்படுவதில்லை. ஏனென்றால் என்னுடைய கோபத்தை அடக்கவும் கெட்ட வார்த்தைகளைப் பேசாமலிருக்கவும் கற்றுக்கொண்டேன். நாங்கள் பைபிள் விஷயங்களை சந்தோஷமாக கலந்து பேசுகிறோம். பைபிள் சத்தியத்தை மட்டும் நான் படிக்காமல் போயிருந்தால், இன்றைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டேன், அந்தளவுக்கு முன்கோபியாக இருந்தேன்.”
யெகோவாவின் சித்தத்தைச் செய்ய கடினமாக முயலும் குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் யாருமே பைபிள் நியமங்களைப் பின்பற்றாமல் இருப்பதைவிட ஒருவராவது அவற்றைப் பின்பற்றும்போது நிலைமை மேம்படுமென அனுபவங்கள் காண்பித்திருக்கின்றன. கிறிஸ்தவ குடும்பத்தைக் கட்டுவது கடினமான வேலையே, அதற்கு நேரமும் திறமையும் தேவை. ஆனால் அவ்வாறு கட்டும் குடும்பத்தாரின் முயற்சிகளை யெகோவா வெற்றிபெறச் செய்வார் என்பது உறுதி. “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்று சொன்ன சங்கீதக்காரனின் வார்த்தைகளை அவர்கள் எதிரொலிக்க முடியும்.—சங்கீதம் 121:2.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2005-ல் மே/ஜூன் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
‘பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்துக்கும் [கடவுளே] நாமகாரணர்.’—எபேசியர் 3:14
[பக்கம் 8-ன் பெட்டி]
குடும்ப ஏற்பாட்டை யெகோவா மிக உயர்வாகக் கருதுகிறார்
‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் . . . என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.’—ஆதியாகமம் 1:28.
‘கர்த்தருக்குப் பயந்து . . . நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்]. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக் கொடியைப் போல் இருப்பாள்.’—சங்கீதம் 12:1, 3.