பொந்தியு பிலாத்து யார்?
“பிலாத்து—யாரையும் மதிக்காத சந்தேகப்பேர்வழி; ஜனங்களுடைய மனதில் பல யூகங்களை எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு சரித்திரக் கதாபாத்திரம். சிலருக்கு அவர் ஒரு புனிதர்; வேறு சிலருக்கோ அவர் மனித பலவீனத்தின் உரு, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு நபரைப் பலிகொடுக்கக்கூடத் தயங்காத அரசியல்வாதிக்கு மிகச் சரியான ஓர் எடுத்துக்காட்டு.”—பான்டியஸ் பைலட், ஆன் ரோ என்பவர் எழுதியது.
இந்தக் கருத்துகளை நீங்கள் ஆமோதித்தாலும் சரி, ஆமோதிக்காவிட்டாலும் சரி, இயேசு கிறிஸ்துவை பொந்தியு பிலாத்து நடத்திய விதம், அவர் பிரபலமடைவதற்கு காரணமானது. இந்த பொந்தியு பிலாத்து யார்? அவரைப் பற்றி என்ன அறியப்பட்டிருக்கிறது? அவருடைய பதவியைப் பற்றி இன்னுமதிகமாகத் தெரிந்துகொள்வது, பூமியில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களை நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
பதவி, பணி, பலம்
பொ.ச. 26-ல், ரோம பேரரசரான திபேரியு, யூதேயா மாகாணத்தின் மீது பிலாத்துவை ஆளுநராக நியமித்தார். இத்தகைய உயர் அதிகாரிகள், குதிரை வீரர்களாகப் பதவி வகித்தவர்கள், ஆட்சிப் பேரவைக்குரிய உயர்குடியினரிலிருந்து வேறுபட்ட இரண்டாந்தர உயர்குடியினர். பிலாத்து ஒருவேளை இராணுவ அதிகாரியாக, அதாவது இளநிலை படைத்தலைவராக, படையில் சேர்ந்திருக்கலாம்; அதன்பிறகு அடுத்தடுத்து பல இடங்களில் பணிபுரிந்தபோது பல்வேறு உயர் பதவிகளை அடைந்தார்; 30 வயதுக்குள்ளாகவே ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிலாத்து, முழங்காலளவுக்குத் தொங்கிய ஒருவித தோல் அங்கியையும் உலோக மார்க்கவசத்தையும் இராணுவச் சீருடையாக அணிந்திருந்தார். பொதுமக்களின் முன் வந்தபோது, ஊதா நிற பார்டரை உடைய தொளதொள வெள்ளை மேலங்கியை அணிந்திருந்தார். கிராப்புத் தலையுடன் காணப்பட்டார், முகத்தை நன்றாகச் சவரன் செய்திருந்தார். அவர் ஸ்பெயினை சேர்ந்தவரென சிலர் சொன்னாலும், உண்மையில் பான்டீ என்ற வம்சத்தை, அதாவது இத்தாலியின் தென்பகுதியைச் சேர்ந்த சாம்நைட் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை அவருடைய பெயரே தெரிவிக்கிறது.
பிலாத்துவைப் போல் பதவி வகித்த உயர் அதிகாரிகள், நாகரிகத்தில் பின்தங்கிய பிராந்தியங்களைக் கவனித்துக்கொள்ள அனுப்பப்பட்டார்கள். யூதேயாவை அத்தகைய பிராந்தியமாக ரோமர்கள் கருதினார்கள். பிலாத்து, ஒழுங்கை கட்டிக்காப்பதோடு மறைமுக வரிகள், ஆள் வரி ஆகியவை வசூலிக்கப்படுவதையும் கவனித்துக்கொண்டார். அன்றாடம் நீதி விசாரணை செய்யும் பொறுப்பு யூத நீதிமன்றங்களுக்கு இருந்தாலும் மரண தண்டனைக்குரிய வழக்குகளை விசாரணை செய்யும் பொறுப்பு ஆளுநரிடம் விடப்பட்டது, காரணம், தீர்ப்பளிக்கும் மேலான அதிகாரம் அவருக்கே இருந்தது.
துறைமுகப் பட்டணமான செசரியாவில் வேதபாரகர்கள், தோழர்கள், தூதுவர்கள் எனக் கொஞ்சப் பேருடன் பிலாத்துவும் அவருடைய மனைவியும் வசித்து வந்தார்கள். 500 முதல் 1,000 ஆட்களைக்கொண்ட ஐந்து காலாட்படைகளும் சுமார் 500 ஆட்களைக்கொண்ட குதிரைப் படையும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. சட்டத்தை மீறியவர்களை அவருடைய போர்வீரர்கள் பொதுவாகக் கழுவேற்றி வந்தார்கள். போர் நடைபெறாத காலத்தில், ஆட்கள், சுருக்கமான விசாரணைக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள், ஆனால் கலகம் நடந்தபோது கலகக்காரர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள், அதுவும் ஒட்டுமொத்தமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள். உதாரணமாக, ஸ்பார்டகஸ் என்பவனுடைய தலைமையில் எழுந்த கலகத்தை ஒடுக்குவதற்கு ரோமர்கள் 6,000 அடிமைகளைக் கழுவேற்றினார்கள். கலகத்தால் யூதேயாவின் சமாதானம் குலைக்கப்பட்டபோது, ஆளுநர் பொதுவாக சீரியா தேசத்து இராணுவ அதிகாரியின் உதவியை நாடினார்; அந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் ஏராளமான காலாட்படைகள் இருந்தன. ஆனால் பிலாத்துவுடைய ஆட்சி காலத்தின் பெரும்பகுதியின்போது அத்தகைய இராணுவ அதிகாரிகள் யாரும் இல்லாததால் கலகங்களை ஒடுக்குவதற்கு பிலாத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.
ஆளுநர்கள் தவறாமல் பேரரசருடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து வந்தார்கள். பேரரசரின் கௌரவத்திற்குக் களங்கமுண்டாக்கும் காரியங்களை அல்லது ரோம ஆட்சியை அச்சுறுத்தும் காரியங்களை அவரிடம் அவர்கள் அறிவிக்க வேண்டியிருந்தது, பின்னர் அவற்றின்பேரில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆளுநர் ஒருவர் தன் மாகாணத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி மற்றவர்கள் புகார் செய்வதற்கு முன் தானே முந்திக்கொண்டு தனக்குத் தெரிந்ததை அறிவிக்க அக்கறையோடு இருந்திருக்கலாம். யூதேயாவில் பிரச்சினைகள் உருவாகிவந்ததால், அவற்றைப் பற்றி பேரரசரிடம் அறிவிப்பதில் பிலாத்து மிகவும் குறியாக இருந்தார்.
சுவிசேஷப் பதிவுகளைத் தவிர, சரித்திராசிரியர்களான பிளேவியஸ் ஜொஸிஃபஸ் என்பவரும் ஃபிலோ என்பவரும் பிலாத்துவைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். ரோம சரித்திராசிரியரான டாஸிடஸ் என்பவரும்கூட, பிலாத்துதான் கிறிஸ்துவைக் கொலை செய்ததாகக் குறிப்பிடுகிறார்.
யூதர்களின் கோபம் தூண்டிவிடப்பட்டது
உருவப் படங்கள் உண்டாக்கப்படுவதை யூதர்கள் கண்டித்ததால், பேரரசரின் உருவம் பொறிக்கப்பட்ட இராணுவக் கொடிகளை எருசலேமிற்குள் எடுத்துச் செல்வதை ரோம ஆளுநர்கள் தவிர்த்தார்கள் என்று ஜொஸிஃபஸ் கூறுகிறார். ஆனால் எவ்வித தயக்கமும் இல்லாமல் பிலாத்து அவற்றை எடுத்துச் சென்றதால் கோபத்தில் கொதித்தெழுந்த யூதர்கள் அதைக் குறித்து புகார்செய்ய செசரியாவுக்கு விரைந்தார்கள். ஐந்து நாட்களுக்கு பிலாத்து அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தார். ஆறாம் நாள், எதிர்ப்புக்குரல் எழுப்பியவர்களைச் சுற்றிவளைக்குமாறும், கலைந்து செல்ல மறுப்பவர்களைக் கொல்லப்போவதாகப் பயமுறுத்துமாறும் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். தங்களுடைய நியாயப்பிரமாணச் சட்டம் மீறப்படுவதைக் கண்ணால் பார்ப்பதைவிட சாவதே மேல் என யூதர்கள் பதிலளித்தபோது, பிலாத்து மனமிரங்கி, அந்த உருவப் படங்களை அப்புறப்படுத்த கட்டளையிட்டார்.
தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் பிலாத்து கெட்டிக்காரராக இருந்தார். ஜொஸிஃபஸ் பதிவுசெய்த ஒரு சம்பவத்தின்படி, எருசலேமிற்குள் கால்வாய் மூலம் தண்ணீரைக் கொண்டுவரும் பணியை பிலாத்து ஆரம்பித்தார், அதற்காகும் செலவுக்கு ஆலயக் கருவூலத்திலிருந்த பணத்தைப் பயன்படுத்தினார். என்றாலும், அந்த ஆலயப் பணத்தை அவர் பறிமுதல் செய்திருக்க மாட்டார், ஏனெனில் அது தெய்வக்குற்றம் என்பதையும், அப்படிச் செய்தால் யூதர்கள் கோபப்பட்டு திபேரியுவிடம் சொல்லி தன் பதவிக்கே உலை வைத்துவிடுவார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே, இதில் ஆலய அதிகாரிகளின் ஒத்துழைப்பு பிலாத்துவுக்குக் கிடைத்திருக்க வேண்டும். “கொர்பான்” என்ற காணிக்கையை, நகரத்தின் நலனுக்காக பொதுச் சேவைகளுக்குப் பயன்படுத்த அந்த அதிகாரிகள் அனுமதித்தார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒன்றுகூடி அதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள்.
அப்படிக் குரலெழுப்பிய கூட்டத்தாருக்குள் தன் படையினர் சாதாரண ஆட்களைப் போல் உடையணிந்து சென்று, பட்டயத்தை உபயோகிக்காமல் குண்டாந்தடியால் அவர்களைத் தாக்கும்படி பிலாத்து கட்டளையிட்டார். ஒருவேளை அந்தக் கலகக் கும்பலைக் கொன்று குவிக்காமலேயே அவர்களை அடக்க அவர் நினைத்திருக்கலாம். பிலாத்து நினைத்தது நடந்தது என்றாலும், இதில் சிலர் உயிரிழந்துதான் போனார்கள். கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு பிலாத்து கலந்ததாக சில ஆட்கள் இயேசுவிடம் அறிவித்தபோது, இச்சம்பவத்தையே அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.—லூக்கா 13:1.
“சத்தியமாவது என்ன”?
ஜனங்கள் முன் இயேசு தம்மை ராஜாவாகக் காட்டிக்கொண்டு வந்ததாக யூத பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மீது தாக்கல் செய்த வழக்கை விசாரித்த விதம்தான் பிலாத்துவுக்கு மோசமான பெயரைக் கொண்டுவந்தது. சத்தியத்தைக் குறித்து சாட்சிகொடுக்க தாம் வந்ததாக இயேசு சொன்னதைக் கேட்ட பிறகு, கைதியாக நின்ற அவரால் ரோமாபுரிக்கு எந்த அபாயமும் இல்லை என்பதை பிலாத்து அறிந்துகொண்டார். அதன்பின் அவரிடம், “சத்தியமாவது என்ன” என்று கேட்டார், அந்தச் சத்தியம் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு ஒருவேளை அவர் அவ்வாறு கேட்டிருக்கலாம். கடைசியில் இயேசுவைக் குறித்து அவர் என்ன முடிவுக்கு வந்தார்? “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்றார்.—யோவான் 18:37, 38; லூக்கா 23:4.
இயேசுவினுடைய விசாரணை அத்துடன் முடிவடைந்திருக்க வேண்டும், ஆனால் அவர் தேசத்தையே கலகத்திற்குள்ளாக்குவதாக அந்த யூதர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினார்கள். பொறாமையால்தான் பிரதான ஆசாரியர்கள் இயேசுவைப் பிடித்துக்கொடுத்தார்கள் என்பதை பிலாத்து அறிந்திருந்தார். இயேசுவை விடுதலை செய்வது பிரச்சினையைக் கிளப்பும் என்பதையும் அவர் அறிந்திருந்தார், அதைத்தான் அவர் தவிர்க்க நினைத்தார். காரணம், ஏற்கெனவே நிறைய பிரச்சினைகள் இருந்தன; கலகம், கொலை போன்ற குற்றங்களுக்காக பரபாஸ் என்பவனும் மற்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். (மாற்கு 15:7, 9; லூக்கா 23:2) போதாக்குறைக்கு, இதற்கு முன் யூதர்களோடு நடந்த மோதல்களில் திபேரியுவிடம் பிலாத்து நற்பெயரைத் தொலைத்திருந்தார்; திறமையற்ற ஆளுநர்களைக் கடுமையாக நடத்துவதில் திபேரியு பேர்போனவராக இருந்தார். இப்படிப்பட்ட சமயத்தில், பிலாத்து யூதர்களுக்கு அடிபணிந்தால் அவர் கையாலாகாதவர் என்பதாக ஆகிவிடும். எனவே, செய்வதறியாமல் பிலாத்து குழம்பினார்.
இயேசுவின் சொந்த ஊரை அறிந்துகொண்ட பிலாத்து, கலிலேயா மாகாணத்தின் அதிபதியான ஏரோது அந்திப்பாவிடம் வழக்கை மாற்றிவிட முயன்றார். ஆனால், அதுவும் அவர் நினைத்தபடி நடக்காததால், தன் அரண்மனைக்கு வெளியே கூடிவந்திருந்தவர்களிடம் இயேசுவை விடுதலை செய்வது பற்றிப் பேசினார்; ஏனெனில் பஸ்கா பண்டிகையின்போது ஒரு கைதியை விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தது. கூட்டத்தாரோ பரபாசை விடுதலையாக்கும்படி கூச்சல்போட்டார்கள்.—லூக்கா 23:5-19.
நியாயமாக நடந்துகொள்ள பிலாத்து ஒருவேளை ஆசைப்பட்டிருக்கலாம், ஆனால் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும் ஜனக்கூட்டத்தாரைப் பிரியப்படுத்தவும்கூட அவர் ஆசைப்பட்டார். இறுதியில், தன் மனசாட்சியையும் நீதியையும்விட தன் பதவிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்த மரண தண்டனை தீர்ப்புக்கு எவ்விதத்திலும் தான் பொறுப்பேற்காததைத் தெரிவிக்கும் விதத்தில், தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி தன் கைகளைக் கழுவினார்.a இயேசு நிரபராதி என்பதை அறிந்திருந்தபோதிலும் அவரைச் சாட்டையால் அடிப்பதற்கும், பரியாசம்பண்ணுவதற்கும், அறைவதற்கும், துப்புவதற்கும் சேவகர்களிடம் அவரை ஒப்புவித்தார்.—மத்தேயு 27:24-31.
இயேசுவை விடுதலை செய்ய கடைசியாக மீண்டும் ஒருமுறை பிலாத்து முயன்றார்; ஆனால் அப்படி அவரை விடுதலை செய்தால் அவர் இராயனுடைய நண்பராக இருக்க மாட்டார் என அந்த ஜனங்கள் கூச்சல்போட்டார்கள். (யோவான் 19:12) அதைக் கேட்ட பிலாத்து அவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டார். அவருடைய தீர்ப்பைக் குறித்து ஒரு கல்விமான் இவ்வாறு சொன்னார்: “அவனைக் கொல்லும்படி தீர்ப்பளிப்பதே எளிதாக இருந்தது. ஏனென்றால், அந்தத் தீர்ப்பினால் ஓர் அற்ப யூதனுடைய உயிர் மட்டும்தான் இழக்கப்படும்; அவனைக் காப்பாற்ற நினைத்து நாட்டில் குழப்பம் தலைதூக்க இடங்கொடுப்பது முட்டாள்தனமாய் இருக்கும்.”
பிலாத்துவுக்கு என்னவானது?
பிலாத்துவின் பதவி காலத்தில் இன்னொரு சண்டையும் நிகழ்ந்தது; கடைசியாக அவரைப் பற்றிப் பதிவுசெய்யப்பட்ட சம்பவம் அது. ஜொசிஃபஸ் குறிப்பிடுகிறபடி, மோசே புதைத்து வைத்ததாகக் கருதப்பட்ட பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், ஆயுதந்தரித்த ஏராளமான சமாரியர்கள் கெரிசீம் மலைமீது கூடிவந்தார்கள். அந்தச் சமயத்தில் பிலாத்து தன் படைகளோடு வந்து அக்கூட்டத்தாரிலிருந்த எண்ணற்றோரை வெட்டிச் சாய்த்தார். இதைப் பற்றி பிலாத்துவின் மேலதிகாரியான சிரியாவின் ஆளுநர் லூக்யுஸ் விடெலீயுஸ் என்பவரிடம் சமாரியர்கள் புகார்செய்தார்கள். பிலாத்து அத்துமீறி நடந்ததாக விடெலீயுஸ் நினைத்தாரா என்பது குறிப்பிடப்படவில்லை. எனினும், அவர் அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தை ரோமாபுரியின் பேரரசரிடம் போய்ச் சொல்லும்படி பிலாத்துவுக்கு அவர் கட்டளையிட்டார். ஆனால் அவர் அங்கு போய்ச் சேரும் முன்பே திபேரியு இறந்துவிட்டார்.
ஒரு பத்திரிகை சொல்கிறபடி, “அந்தச் சம்பவத்திற்குப் பின் பிலாத்துவைப் பற்றி சரித்திரப் பதிவுகள் எதுவுமே சொல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகள் இருக்கின்றன.” ஆனால் விடுபட்ட விவரங்களைக் கொடுக்க அநேகர் முயன்றிருக்கிறார்கள். பிலாத்து கிறிஸ்தவராய் மாறியதாகச் சொல்லப்படுகிறது. எத்தியோப்பிய “கிறிஸ்தவர்கள்” அவரை “புனிதராக” ஆக்கினார்கள். யூதாஸ் காரியோத்தைப் போலவே பிலாத்துவும் தற்கொலை செய்துகொண்டார் என அநேகர் சொன்னார்கள்; அவ்வாறு முதலில் சொன்னவர் யூசிபியஸ் என்பவர் ஆவார்; இவர் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த எழுத்தாளர். ஆனால் உண்மையில் பிலாத்துவுக்கு என்ன சம்பவித்தது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது.
பிலாத்து பிடிவாதக்காரராக, பொறுப்பற்றவராக, ஒடுக்குகிறவராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் பத்து வருடங்கள் பதவி வகித்திருந்தார்; யூதேயாவை ஆண்ட பெரும்பாலான ஆளுநர்களோ அதைவிட குறைந்த வருடங்களே பதவி வகித்தார்கள். அதனால், ரோமர்கள் அவரைத் தகுதியானவராகவே கருதினார்கள். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள இயேசுவைக் கொடுமைப்படுத்தி, கொலை செய்ய அனுமதித்ததால் சிலர் அவரைக் கோழையென அழைத்திருக்கிறார்கள். சமாதானம் காப்பதும், ரோமர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதும்தான் பிலாத்துவின் முக்கிய பணியாக இருந்ததே தவிர, நீதி வழங்குவது அல்ல என இன்னும் சிலர் விவாதிக்கிறார்கள்.
பிலாத்துவின் காலம் நம்முடைய காலத்தைப் போல் இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், எந்தவொரு நேர்மையான நீதிபதியும் ஒரு நபர் குற்றமற்றவர் என்பதை அறிந்தே அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க மாட்டார். இயேசுவை மட்டும் பிலாத்து சந்தித்திருக்காவிட்டால், அவர் இந்தளவு பிரபலமாகியிருக்க மாட்டார், மற்ற பெயர்களைப் போல அவருடைய பெயரும் வெறும் சரித்திர ஏடுகளில் மட்டுமே இருந்திருக்கும்.
[அடிக்குறிப்பு]
a இரத்தப்பழியில் பங்கில்லை எனக் காட்டுவதற்குக் கைகளைக் கழுவுவது யூதர்களின் பழக்கமாக இருந்தது, ரோமர்களுடைய பழக்கமல்ல.—உபாகமம் 21:6, 7.
[பக்கம் 11-ன் படம்]
யூதேயாவின் ஆளுநராக பொந்தியு பிலாத்துவை அடையாளம் காட்டுகிற இந்த எழுத்துப் பொறிப்பு, செசரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது