தவறான சிந்தனையை அறவே தவிர்த்திடுங்கள்!
முற்பிதாவான யோபுவுக்குப் படுபயங்கர சோதனைகள் ஏற்பட்டபோது எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் என்ற அவருடைய மூன்று நண்பர்கள் அவரைச் சந்திக்க சென்றார்கள். தங்களுடைய அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் சொல்லவும் சென்றார்கள். (யோபு 2:11) அந்த மூவரில் எலிப்பாஸ் செல்வாக்குள்ளவராகவும், ஒருவேளை வயதில் மூத்தவராகவும் இருந்திருக்கலாம். யோபுவிடம் முதலாவதாக பேசினதும் நிறைய பேசினதும்கூட அவர்தான். அவர் மூன்று முறை பேசியபோது எப்படிப்பட்ட சிந்தனையை வெளிப்படுத்தினார்?
எலிப்பாஸ் தனக்கு நேரிட்ட ஓர் அசாதாரண அனுபவத்தைப் பற்றி இவ்வாறு விளக்கினார்: ‘அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது. அது ஒரு உருப் போல என் கண்களுக்கு முன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்.’ (யோபு 4:15, 16) எப்படிப்பட்ட ஆவி எலிப்பாஸுடைய சிந்தனையின் மீது செல்வாக்கு செலுத்தியது? அந்த ஆவி கடவுளுடைய நல்ல தேவதூதனாக இருந்திருக்க முடியாது; ஏனென்றால், அடுத்துவரும் வசனங்கள் கண்டனத் தொனியை வெளிப்படுத்துகின்றன. (யோபு 4:17, 18) அப்படியானால் அது ஒரு கெட்ட ஆவியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் பொய்களைச் சொன்னதற்காக எலிப்பாஸையும் அவருடைய இரண்டு நண்பர்களையும் யெகோவா கடிந்துகொண்டார். (யோபு 42:7) ஆம், எலிப்பாஸ்மீது செல்வாக்கு செலுத்தியது பிசாசுதான். எலிப்பாஸுடைய பேச்சு தேவபக்தியற்ற சிந்தனையையே வெளிப்படுத்தியது.
எலிப்பாஸின் பேச்சில் எப்படிப்பட்ட கருத்துகள் தென்பட்டன? தவறான சிந்தனையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது ஏன் முக்கியம்? அதை அறவே தவிர்க்க என்னென்ன படிகளை நாம் எடுக்கலாம்?
“அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை”
கடவுள் நம்மிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதால் நாம் என்னதான் செய்தாலும் அவர் திருப்தியடையப் போவதில்லை என்ற கருத்தையே எலிப்பாஸ் மூன்று முறை பேசியபோதும் வெளிப்படுத்தினார். “கேளும், அவர் [கடவுள்] தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் பழியைச் சுமத்துகிறாரே” என யோபுவிடம் சொன்னார். (யோபு 4:18, NW) பிறகு எலிப்பாஸ் கடவுளைப் பற்றி சொன்னபோது, “இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல” என்றார். (யோபு 15:15) மேலுமாக, “நீர் நீதிமானாயிருப்பதனால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ?” என யோபுவிடம் கேட்டார். (யோபு 22:3) பில்தாத்தும்கூட இந்தக் கருத்தை ஆமோதித்து, “சந்திரனை அண்ணாந்து பாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல” என்று கூறினார்.—யோபு 25:5.
இப்படிப்பட்ட சிந்தனைகள் நம்மீது செல்வாக்கு செலுத்தாதபடிக்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடவுள் நம்மிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்க்கிறார் என்ற எண்ணத்தை அது நம் மனதில் விதைத்துவிடும். யெகோவாவிடமுள்ள நம் உறவிற்கே அது பங்கம் விளைவித்துவிடும். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட எண்ணத்திற்கு இடம் கொடுத்துவிட்டால் நமக்குச் சிட்சை கொடுக்கப்படும்போது, நாம் எவ்வாறு நடந்துகொள்வோம்? நம்முடைய இருதயம் மனத்தாழ்மையுடன் சிட்சையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, “கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் [அதாவது, சினங்கொள்ளும்].” அதோடு, அவர்மீது வெறுப்பு வந்துவிடும். (நீதிமொழிகள் 19:3) கடவுளிடமுள்ள நம் உறவிற்கு எப்பேர்ப்பட்ட பங்கம்!
“ஒரு மனுஷன் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?”
கடவுள் நம்மிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்ப்பார்க்கிறார் என்ற கருத்தோடு நெருங்கிய தொடர்புடைய மற்றொரு கருத்து, மனிதர்கள் கடவுளுக்குப் பிரயோஜனமற்றவர்கள் என்பதே. எலிப்பாஸ் மூன்றாவது முறை பேசியபோது இந்தக் கேள்வியைக் கேட்டார்: “ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?” (யோபு 22:2) இந்த வசனத்தில் மனிதன் கடவுளுக்குப் பிரயோஜனமற்றவன் என்று எலிப்பாஸ் சொல்லாமல் சொன்னார். பில்தாத்தும் அதை ஒத்துக்கொண்டு, “மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?” என்று விவாதித்தார். (யோபு 25:4) எனவே, இவர்களுடைய சிந்தனையின்படி: போயும்போயும் ஒரு சாதாரண மனிதனான யோபு, துணிந்து கடவுளுக்கு முன் நீதிமானாக இருக்க முடியுமா?
இன்று சிலர் தங்களைப் பற்றியே தவறான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தவிக்கிறார்கள். குடும்ப சூழல், வாழ்க்கையின் அழுத்தங்கள், இன வெறியின் பாதிப்புகள் போன்றவை அதற்கு காரணிகளாக இருக்கலாம். ஆனால், சாத்தானும் அவனுடைய பேய்களும்கூட மனிதனை அவ்வாறு உணர வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, நாம் என்னதான் செய்தாலும் சர்வவல்லமையுள்ள கடவுள் திருப்தியடையப் போவதில்லை என்ற சிந்தனையை நம் மனதில் நுழைக்கப் பார்க்கிறார்கள். அவர்களுடைய இந்த வலையில் நாம் சிக்கிவிட்டால் அவ்வளவுதான். நாம் சீக்கிரமாகவே சோர்வடைந்துவிடுவோம். பிறகென்ன, காலம் செல்லச்செல்ல ஜீவனுள்ள தேவனிடமிருந்து வழுவிச் சென்று கடைசியில் ஒரேயடியாகவே விலகிப் போய்விடுவோம்.—எபிரெயர் 2:1; 3:12.
வியாதி, முதுமை போன்றவை நம் பலத்தை உறிஞ்சிவிடுகின்றன. எனவே, ராஜ்ய பிரசங்க வேலையில் முன்பு செய்ததைவிட—அதாவது வாலிப வயதில் ஆரோக்கியமாக, வலுவாக இருந்தபோது செய்ததைவிட—இப்போது மிகக் குறைவாகவே செய்ய முடிகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் எவ்வளவுதான் செய்தாலும் கடவுள் திருப்தியடையப் போவதில்லை என்ற சிந்தனை நமக்கு வரவேண்டுமென சாத்தானும் அவனுடைய பேய்களும் விரும்புகிறார்கள். இதை நாம் நினைவில் வைப்பது ரொம்பவும் முக்கியம்! இப்படிப்பட்ட சிந்தனையை நாம் அறவே தவிர்த்திட வேண்டும்.
தவறான சிந்தனையை நாம் எப்படி அறவே தவிர்க்கலாம்
யோபுவை பிசாசாகிய சாத்தான் துன்புறுத்தினான். ஆனாலும், “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என அவர் சொன்னார். (யோபு 27:5) யோபுவுக்கு கடவுள்மீது அன்பு இருந்ததால், என்னதான் நேரிட்டாலும் கடவுளுக்கு உத்தமமாக இருக்கவே அவர் தீர்மானமாய் இருந்தார். அந்தத் தீர்மானத்திலிருந்து அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. தவறான சிந்தனையை அறவே தவிர்த்திட இதுவே முக்கிய வழி. அதாவது கடவுளுடைய அன்பை முழுமையாகப் புரிந்துகொண்டு அதற்கான நன்றியுணர்வை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் மீதுள்ள அந்த அன்பை நாம் இன்னும் வேர்விட்டு வளரச்செய்ய வேண்டும். அதற்காக கடவுளுடைய வார்த்தையை நாம் தவறாமல் படித்து, ஜெபசிந்தையுடன் அதைத் தியானிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, யோவான் 3:16 இவ்வாறு சொல்கிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இந்நாள் வரையாக யெகோவா மனிதர்களிடத்தில் நடந்துகொண்ட விதம் மனிதர்கள்மீது அவர் அளவுகடந்த அன்பை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கடந்தகால உதாரணங்களைத் தியானிப்பதன் மூலம் யெகோவா மீதுள்ள நம்முடைய போற்றுதலையும் அன்பையும் அதிகரிக்கலாம். இவ்வாறு தவறான சிந்தனையை அறவே தவிர்க்கலாம்.
சோதோம் கொமோரா பட்டணங்களுக்குப் பயங்கர அழிவு வரவிருந்த சமயத்தில் ஆபிரகாமிடம் யெகோவா பேசிய விதத்தைக் கவனியுங்கள். அப்பட்டணங்களின் நியாயத்தீர்ப்பு சம்பந்தமாக யெகோவாவிடம் ஆபிரகாம் எட்டு முறை விசாரித்தார். ஆனால் ஒரு முறைகூட அவரிடம் யெகோவா கோபப்படவுமில்லை, எரிச்சலடையவுமில்லை. அதற்கு மாறாக, ஆபிரகாமுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிற விதத்தில் பதிலளித்தார். (ஆதியாகமம் 18:22-33) இன்னொரு உதாரணம், லோத்துவையும் அவர் குடும்பத்தையும் சோதோமிலிருந்து யெகோவா காப்பாற்றிய சமயமாகும். அப்போது, மலைக்கு ஓடிப்போவதற்கு பதிலாக அருகிலிருந்த பட்டணத்திற்கு ஓடிப்போக தன்னை அனுமதிக்கும்படி லோத்து கேட்டுக்கொண்டார். அதற்கு யெகோவா, “நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்” என்று பதிலளித்தார். (ஆதியாகமம் 19:18-22) இந்தப் பதிவுகள் யெகோவாவை, அன்பில்லாத, அதிகாரம் செய்கிற, மட்டுக்குமீறி எதிர்ப்பார்க்கிற ஓர் ஆட்சியாளராகச் சித்தரிக்கின்றனவா? இல்லவே இல்லை. அவர் எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவர் என்பதையே அவை உண்மையில் சித்தரிக்கின்றன. அதாவது அன்பு, இரக்கம், தயவு, புரிந்துகொள்ளுதல் ஆகிய குணங்களையுடைய ஆட்சியாளராக அவரைச் சித்தரிக்கின்றன.
கடவுள் மனிதர்களிடத்தில் குற்றங்குறைகளைத்தான் பார்ப்பார், நல்லதைப் பார்க்கமாட்டார் என்பது அப்பட்டமான பொய். பூர்வ இஸ்ரவேலர்களான ஆரோன், தாவீது, மனாசே ஆகியோரின் உதாரணங்கள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன. ஆரோன், மூன்று வினைமையான தவறுகளைச் செய்தார். பொன் கன்றுக்குட்டியைச் செய்தார், தன் சகோதரியான மிரியாமுடன் சேர்ந்துகொண்டு மோசேயைப் பழித்துப்பேசினார், மேரிபாவில் யெகோவாவைப் பரிசுத்தப்படுத்தவும் மகிமைபடுத்தவும் தவறினார். ஆனாலும் யெகோவா அவருடைய நல்ல குணங்களைக் கவனித்தார். எனவே, மரிக்கும்வரை பிரதான ஆசாரியராகச் சேவைசெய்யும்படி ஆரோனை அவர் அனுமதித்தார்.—யாத்திராகமம் 32:3, 4; எண்ணாகமம் 12:1, 2; 20:9-13.
தாவீது ராஜா தனது ஆட்சியின்போது பயங்கரமான பாவங்களைச் செய்தார். அதாவது, விபச்சாரம் செய்தார், அப்பாவி மனிதனைக் கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்தார், கடவுளுக்கு விரோதமாக ஜனத்தொகையைக் கணக்கெடுத்தார். என்றாலும், தாவீது மனந்திரும்பியதை யெகோவா கவனித்தார். அதனால், அவருடன் செய்த ராஜ்ய உடன்படிக்கையை மாற்றிவிடாமல், தாவீது இறக்கும்வரை ராஜாவாக ஆட்சிசெய்ய அவரை அனுமதித்தார்.—2 சாமுவேல் 12:9; 1 நாளாகமம் 21:1-7.
யூதாவின் ராஜாவாகிய மனாசே, பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டினார், தன் குமாரர்களை தீ மிதிக்கப்பண்ணினார், ஆவியுலகப் பழக்கங்களை ஊக்குவித்தார், ஆலயத்தின் பிரகாரங்களில் பொய்மத பலிபீடங்களைக் கட்டினார். ஆனால் அவர் இருதயப்பூர்வமாக மனந்திரும்பியபோது யெகோவா அவரை மன்னித்தார். சிறையிருப்பிலிருந்து அவரை விடுதலை செய்து மீண்டும் அரியணையில் ஏற்றினார். (2 நாளாகமம் 33:1-13) யாரிடமும் நல்லதைப் பார்க்காத கடவுள் இப்படியெல்லாம் செய்வாரா என்ன? இல்லவே இல்லை!
குற்றஞ்சாட்டுகிறவனே குற்றவாளி
யெகோவாவுக்கு இருப்பதாக சாத்தான் குற்றஞ்சாட்டிய அந்தக் குணங்களெல்லாம் அவனுக்குத்தான் இருக்கின்றன. ஏனெனில், மூர்க்கமானவனும் மட்டுக்குமீறி எதிர்ப்பார்ப்பவனும் சாத்தானே. பிள்ளைகளைப் பலிகொடுக்கும் முற்கால பொய்மதப் பழக்கம் இதற்குச் சான்றாக இருக்கிறது. விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனித்தார்கள், அதாவது எரித்தார்கள். ஆனால் இப்படிப்பட்ட செயல் யெகோவாவின் மனதில் தோன்றக்கூட இல்லை.—எரேமியா 7:31.
குற்றங்குறை கண்டுபிடிப்பவன் சாத்தானே; யெகோவா அல்ல. வெளிப்படுத்துதல் 12:10 சாத்தானைப் பற்றி இப்படிச் சொல்கிறது: ‘நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் . . . அவர்கள்மேல் இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக குற்றஞ் சுமத்துகிறான்!’ ஆனால் யெகோவாவைப் பற்றியோ சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடினார்: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.”—சங்கீதம் 130:3, 4.
தவறான சிந்தனை இனி இருக்கவே இருக்காது
பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தேவதூதர்கள் எவ்வளவு நிம்மதி அடைந்திருப்பார்கள்! (வெளிப்படுத்துதல் 12:7-9) அதன் பிறகு, இந்தப் பொல்லாத ஆவிகளால் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைத் தொந்தரவு செய்ய முடியவில்லை.—தானியேல் 10:13.
பூமியின் குடிமக்களும் வெகு சீக்கிரத்தில் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள். கூடிய விரைவில் பரலோகத்திலிருந்து ஒரு தூதர் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் எடுத்துக்கொண்டுவந்து, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் கட்டிப்போட்டு பாதாளத்தில் தள்ளிவிடுவார், அதாவது செயலற்ற நிலைக்குத் தள்ளிவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3) எப்பேர்ப்பட்ட நிம்மதி!
ஆனால், அதுவரை தவறான சிந்தனைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது அவசியம். நம் மனதில் இப்படிப்பட்ட தவறான சிந்தனை தலைகாட்டுவது போல் தெரிந்தால் அதை அறவே தவிர்த்திட வேண்டும். யெகோவாவின் அன்பை நம் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதன் மூலம் நாம் அப்படிச் செய்யலாம். அப்போது ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் நம் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்.’—பிலிப்பியர் 4:6, 7.
[பக்கம் 26-ன் படம்]
யோபு தவறான சிந்தனையை அறவே தவிர்த்தார்
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா புரிந்துகொள்ளுதலுள்ள ஆட்சியாளர் என்பதை லோத்து தெரிந்துகொண்டார்