வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மத்தேயு 5:22-ல் இயேசு என்ன மூன்று தீமைகளுக்கு எதிராக எச்சரித்தார்?
மலைப் பிரசங்கத்தில், இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோரை இவ்வாறு எச்சரித்தார்: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தன் சகோதரனிடம் தொடர்ந்து சீற்றத்துடன் இருக்கும் ஒவ்வொருவரும் நீதிமன்றத்திடம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்; ஆனால் படுகேவலமான ஒரு வார்த்தையைச் சொல்லி தன் சகோதரனை அழைக்கிறவன் எவனும் உச்ச நீதிமன்றத்திடம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்; அதற்கு மாறாக, ‘கேடுகெட்ட முட்டாளே!’ எனச் சொல்கிற ஒருவன் அனல்கக்குகிற கெஹென்னாவுக்கு உரியவனாக இருப்பான்.”—மத்தேயு 5:22, NW.
யூதர்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களைப் பயன்படுத்தியே இயேசு பேசினார், அதாவது நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அனல்கக்குகிற கெஹென்னா ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தியே பேசினார். பாவங்களின் வினைமை அதிகரிக்க அதிகரிக்க, தண்டனையின் கடுமையும் அதிகரிக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே அவற்றைப் பயன்படுத்திப் பேசினார்.
முதலாவதாக, தன் சகோதரனிடம் தொடர்ந்து சீற்றத்துடன் இருக்கும் ஒவ்வொருவரும் உள்ளூர் “நீதிமன்றத்திடம்,” அதாவது உள்ளூர் ஆலோசனைச் சங்கத்திடம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என இயேசு சொன்னார். உள்ளூர் நீதிமன்றங்கள் பொதுவாக 120 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் வசிக்கும் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்ததாக பாரம்பரியம் சொல்கிறது. (மத்தேயு 10:17; மாற்கு 13:9) இத்தகைய நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு, கொலைக் குற்ற வழக்குகளில் நியாயத்தீர்ப்பு அளிப்பதற்கும் அதிகாரம் இருந்தது. (உபாகமம் 16:18; 19:12; 21:1, 2) ஆகையால், தன் சகோதரன் மீது கடும் வெறுப்பை மனதில் தொடர்ந்து வளர்க்கும் ஒரு நபர் வினைமையான பாவம் செய்கிறார் என்பதையே இயேசு இந்த வசனத்தில் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.
இரண்டாவதாக, “படுகேவலமான ஒரு வார்த்தையைச் சொல்லி தன் சகோதரனை அழைக்கிறவன் எவனும் உச்ச நீதிமன்றத்திடம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று இயேசு சொன்னார். “படுகேவலமான ஒரு வார்த்தை” என்ற சொற்றொடர் ராகே (NW அடிக்குறிப்பு) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; இதன் அர்த்தம் “வீணன்” அல்லது “அறிவில்லாதவன்” என்பதாகும். “கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பழித்துப் பேசுவதற்காகப் பயன்படுத்திய ஒரு வார்த்தை அது” என த நியு தேயர்ஸ் கிரீக்-இங்கிலிஷ் லெக்ஸிக்கன் ஆஃப் த நியு டெஸ்டமென்ட் சொல்கிறது. ஆக, படுகேவலமான ஒரு வார்த்தையால் தன் சகோதரனைத் தரக்குறைவாகப் பேசி வெறுப்பைக் காட்டுகிற வினைமையான பாவத்திற்கு எதிராகவே இயேசு எச்சரித்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்துபவன் வெறும் உள்ளூர் நீதிமன்றத்தால் அல்ல, ஆனால் உச்ச நீதிமன்றத்தால், அதாவது முழு ஆலோசனைச் சங்கத்தால்—பிரதான ஆசாரியராலும், 70 மூப்பர்களாலும், வேதபாரகர்களாலும் ஆன எருசலேமின் சட்டமன்ற குழுவால்—நியாயந்தீர்க்கப்படுவான் என்ற அர்த்தத்திலேயே இயேசு அதைச் சொல்லிக்கொண்டிருந்தார்.—மாற்கு 15:1.
கடைசியாக, ஒருவன் மற்றவனைப் பார்த்து “கேடுகெட்ட முட்டாளே!” என்று சொன்னால், அவன் அனல்கக்குகிற கெஹென்னாவுக்கு உரியவனாக இருப்பான் என இயேசு விளக்கினார். “கெஹென்னா” என்ற வார்த்தை கெ ஹின்னோம் என்ற எபிரெய வார்த்தைகளிலிருந்து வந்திருக்கிறது. அதன் பொருள் “இன்னோம் பள்ளத்தாக்கு” என்பதாகும். அது பூர்வ எருசலேமின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இயேசுவின் நாட்களில், குப்பைக்கூளங்களை எரிக்கும் இடமாக அது இருந்தது; கெளரவமான அடக்கத்திற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட கொடிய குற்றவாளிகளின் பிரேதங்களும் அங்கு எரிக்கப்பட்டன. எனவே, “கெஹென்னா” என்ற வார்த்தை முழுமையான அழிவைக் குறிப்பதற்கு மிகப் பொருத்தமான அடையாளமாக இருந்தது.
அப்படியானால், “கேடுகெட்ட முட்டாளே!” என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன? இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை “கலகக்காரன்” அல்லது “முரடன்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிற எபிரெய வார்த்தைக்கு ஒத்ததாக இருந்தது. இந்த வார்த்தை ஒருவனை ஒழுக்கங்கெட்டவனாக, விசுவாசதுரோகியாக அல்லது கடவுளுக்கு எதிரான கலகக்காரனாகச் சுட்டிக்காட்டுகிறது. ஆகையால், “கேடுகெட்ட முட்டாளே” என்று தன் சகோதரனைப் பார்த்துச் சொல்லும் ஒருவன், கடவுளுக்கு எதிராக கலகம் செய்பவர்களுக்கு கொடுக்கப்படுகிற தண்டனை அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையே அர்த்தப்படுத்தினான், அதாவது அவன் நித்தியமாக அழிக்கப்பட வேண்டும் என்பதையே அர்த்தப்படுத்தினான். ஆனால் கடவுளுடைய பார்வையில், மற்றொருவனுக்கு எதிராக அத்தகைய கண்டனத் தீர்ப்பைச் சொல்கிறவன்தானே அந்தக் கடுமையான தண்டனைக்கு, அதாவது நித்திய அழிவுக்கு உரியவனாய் இருக்கிறான்.—உபாகமம் 19:17-19.
ஆதலால், மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டங்களில் உட்பட்டிருந்த நியமங்களின் தராதரத்தைக் காட்டிலும் உயர்ந்த தராதரத்தை இந்த வசனத்தில் இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒரு கொலைக் குற்றவாளி “நீதிமன்றத்திடம் கணக்குக் கொடுக்க” வேண்டியிருக்கும் என மக்கள் அப்போது நம்பினார்கள், ஆனால் இயேசு அதற்கும் ஒரு படி மேலே சென்றார். சகோதரர்களுக்கு எதிராகத் தங்கள் மனதில் வெறுப்பைத் தேக்கி வைப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டும் என்று தம் சீஷர்களுக்குக் கற்பித்தார்.—மத்தேயு 5:21, 22, NW.