பயப்படாதிருங்கள்—யெகோவா உங்களுடனே இருக்கிறார்!
“பயத்தில் சாப்பிட்டு, பயத்தில் தூங்கி, பயத்தில் வாழ்ந்து, பயத்தில் சாவோம்.” முதல் அணுகுண்டு வெடிப்பிற்குச் சற்று பின்னர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஹெரல்ட் சி. யூரே இவ்வார்த்தைகளைக் கூறினார். எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய இந்தக் கருத்து ஐம்பதுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின் இன்றும் உண்மையாகவே இருக்கிறது. பயம் எனும் இருள் இவ்வுலகைக் கவ்விக்கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! ஏனெனில், உலுக்கிப்போடும் தீவிரவாத தாக்குதல்கள், உறைய வைக்கும் குற்றச்செயல்கள், மர்மமான வியாதிகள் ஆகியவைதான் பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாகத் தினமும் வெளிவருகின்றன.
இவற்றிற்கான காரணத்தை கிறிஸ்தவர்களாகிய நாம் நன்கு அறிந்திருக்கிறோம். நாம் இந்தப் பொல்லாத உலகின் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. இவை “கொடிய காலங்கள்” என பைபிள் முன்னறிவித்துள்ளது. (2 தீமோத்தேயு 3:1) இதையெல்லாம் பார்க்கும்போது, நீதி வாசமாயிருக்கும் புதிய உலகை யெகோவா தேவன் வெகு சீக்கிரத்தில் கொண்டுவருவார் என்ற நம் நம்பிக்கை இன்னும் உறுதிப்படுகிறது. (2 பேதுரு 3:13) இதற்கிடையே, கிறிஸ்தவர்களாகிய நாம் பயப்படவே மாட்டோம் என சொல்ல முடியுமா?
பயமும் கடவுளுடைய ஊழியர்களும்
கடவுளுடைய ஊழியர்களான யாக்கோபு, தாவீது, எலியா போன்றோர் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்ப்பட்டபோது ஓரளவு பயந்தனர். (ஆதியாகமம் 32:6, 7; 1 சாமுவேல் 21:11, 12; 1 இராஜாக்கள் 19:2, 3) இவர்கள் விசுவாசத்தில் குறைவுபடவில்லை. மாறாக, எப்போதும் யெகோவாமீது முழுமையாய்ச் சார்ந்திருந்தனர். இருந்தாலும், இவர்களும் சாதாரண மனிதர்கள் தானே. ஆகையால் சில சமயம் பயப்பட்டனர். ‘எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள [“உணர்வுகளுள்ள,” NW] மனுஷன்’ என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 5:17.
நாமும்கூட இப்போது எதிர்ப்படுகிற அல்லது வருங்காலத்தில் எதிர்ப்படவிருக்கிற பிரச்சினைகளை நினைத்து பயப்படலாம். அது இயல்பானதுதான். ஏனென்றால், ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுடனும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுடனும் யுத்தம் பண்ணுவதில்’ சாத்தான் குறியாக இருக்கிறான் என பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:17) இவ்வார்த்தைகள் முக்கியமாக அபிஷேகம் செய்யப்பட்டோருக்குப் பொருந்துகின்றன. என்றாலும், ‘கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்’ என்று பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:12) இருப்பினும், பிரச்சினைகளை எதிர்ப்படும்போது நாம் பயந்து நடுங்க வேண்டியதில்லை. ஏன்?
‘இரட்சிப்பை அருளும் தேவன்’
“நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். (சங்கீதம் 68:20) தம்முடைய மக்களைப் பாதுகாக்க தமக்கு வல்லமை இருப்பதை யெகோவா தேவன் பல முறை வெளிக்காட்டியிருக்கிறார். சில சமயம் அவர்களை ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து மீட்டிருக்கிறார். இன்னும் சில சமயம் பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்வதற்கான பலத்தைக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 34:17; தானியேல் 6:22; 1 கொரிந்தியர் 10:13) இப்படி யெகோவா ‘இரட்சிப்பை அருளியதைப்’ பற்றிய பதிவுகளில் எவையெல்லாம் உங்கள் நினைவுக்கு வருகின்றன?
ஜலப்பிரளயத்தில் நோவா குடும்பத்தார் தப்பிப்பிழைத்தது, சோதோம் கொமோராவின் அழிவிலிருந்து லோத்துவும் அவருடைய மகள்களும் காப்பாற்றப்பட்டது, எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலை பெற்றது, செங்கடலை அவர்கள் கடந்துசென்றது, யூதர்களைப் பூண்டோடு அழிப்பதற்கு ஆமான் போட்ட திட்டம் முறியடிக்கப்பட்டது போன்ற சரித்திரச் சம்பவங்களை உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இண்டெக்ஸைa பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யலாமே? பைபிளில் காணப்படும் இப்படிப்பட்ட விறுவிறுப்பான பதிவுகளைப் படித்து தியானிக்கும்போது யெகோவா இரட்சிப்பை அருளும் கடவுள் என்பதில் உங்கள் விசுவாசம் பலப்படும். விசுவாசப் பரீட்சைகளைத் தைரியமாக எதிர்கொள்ள அது உங்களுக்கு உதவும்.
நவீன நாளைய உதாரணங்கள்
பிரச்சினைகளைச் சகித்த யெகோவாவின் சாட்சிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததன் காரணமாகச் சிறைவாசத்தை அனுபவித்த ஒருவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது மோசமான உடல்நிலையின் மத்தியிலும் யெகோவாவைச் சேவித்து வரும் முதியவர் ஒருவரை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒருவேளை, பள்ளித் தோழர்களின் வற்புறுத்தல்களுக்கு இணங்கிப்போகாமல் உறுதியாக நிற்கும் இளைஞர்கள் யாராவது உங்கள் நினைவுக்கு வரலாம். அவர்கள் மட்டுமல்ல, மணத்துணையின் உதவியின்றி பிள்ளைகளை வளர்க்கும் ஒற்றைப் பெற்றோர்கள், தனிமையில் தவித்தாலும் தளராமல் யெகோவாவைச் சேவித்து வரும் திருமணமாகாதவர்கள் ஆகியோரும் நம் மத்தியில் இருக்கின்றனர். இவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இவர்களுடைய விசுவாசமுள்ள வாழ்க்கைப் போக்கைக் குறித்து சிந்திப்பதன் மூலம் சகித்திருப்பதற்கான பலத்தைப் பெறுவீர்கள், எந்தச் சோதனையையும் தைரியமாகச் சந்திக்க உதவியையும் பெறுவீர்கள்.
எதிர்ப்பையோ துன்புறுத்தலையோ சந்திக்கும்போது மட்டுமல்ல, யெகோவாவின் அன்புக்கு நாம் தகுதியற்றவர்களாக உணரும்போதும் நமக்கு தைரியம் தேவை. தனிப்பட்டவர்களாக கிறிஸ்துவின் கிரய பலியிலிருந்து நன்மை அடைகிறோம் என்பதில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். (கலாத்தியர் 2:20) இவ்வாறு செய்கையில், நாம் அநாவசியமாகப் பயப்படாமல், தயக்கமின்றி யெகோவா தேவனை அணுக முடியும். அவருடைய அன்பைப் பெற நாம் தகுதியற்றவர்களென நினைத்தால், இயேசுவின் பின்வரும் வார்த்தைகளைக் குறித்து தியானிக்கலாம்: ‘ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.’—மத்தேயு 10:29-31.
சோதனைகளைத் தைரியமாக எதிர்ப்பட்ட நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவருகின்றன. பிரச்சினைகள் வந்தபோது அவர்கள் வருத்தப்படவே இல்லை என்று இது அர்த்தப்படுத்தாது. மாறாக, யெகோவாவைச் சேவிப்பதற்கு அவை முட்டுக்கட்டைகளாக இருக்க அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது. அவர்களுடைய வாழ்க்கை சரிதை, தைரியமாகச் சகித்திருக்க உங்களுக்குப் பலத்தைக் கொடுக்கும். இரண்டு உதாரணங்களை இப்போது சிந்திக்கலாம்.
வாழ்வை மாற்றிய விபத்து
மே 8, 2003, விழித்தெழு! பத்திரிகையில் “என் வாழ்வை மாற்றிய விபத்து” என்ற கட்டுரை வெளிவந்தது. கென்யாவைச் சேர்ந்த ஸ்டான்லி ஒம்பிவா என்ற யெகோவாவின் சாட்சி, ஒரு வாகன விபத்திற்குப் பிறகு தான் எதிர்ப்பட்ட சவால்களைப் பற்றி அதில் விவரித்திருந்தார். உடல்நிலை மோசமான பிறகு, சீக்கிரத்திலேயே தன் வேலையையும், அதன் எல்லாச் சலுகைகளையும் இழந்தார். அப்போது அவர் எப்படி உணர்ந்தார் என்பதை இவ்வாறு விவரிக்கிறார்: “என்னுடைய உடல்நிலை எவ்வளவு சீரியஸாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது ரொம்பவே விரக்தி அடைந்தேன், சதா என்னைப் பற்றிய நினைப்பிலேயே மூழ்கியிருந்தேன், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தேன். சில சமயம், மூக்குக்கு மேல் கோபம் வந்தது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டேன்.” இந்தக் கஷ்டத்தின் மத்தியிலும் ஸ்டான்லி தைரியமாக இருந்தார். ஒரேயடியாய் கவலையில் மூழ்கிப்போய், விசுவாசத்தை விட்டுவிடவில்லை. தொடர்ந்து யெகோவாவையே சார்ந்திருந்தார். சகோதரர் ஒம்பிவா மேலும் இவ்வாறு கூறுகிறார்: “எல்லாக் கஷ்டங்களிலும் யெகோவாதான் எனக்குப் பக்கபலமாக இருந்தார். அவர் அந்த அளவிற்கு உறுதுணையாக இருந்ததை நினைக்கும்போது சில சமயம் அதற்குத் தகுதியற்றவனாக உணர்ந்தேன். என்னுடைய சூழ்நிலைக்கு எந்த வசனங்களெல்லாம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் படித்து தியானிக்க உறுதிபூண்டேன்.”
சகோதரர் ஒம்பிவா மனந்திறந்து சொன்ன கருத்துகள் சோதனைகளைத் தைரியமாகச் சமாளிக்க பலருக்கு உதவின. ஒரு கிறிஸ்தவ சகோதரி இவ்வாறு எழுதினார்: “என்மீது அன்பும் அக்கறையும் இருப்பதை இக்கட்டுரையின் மூலமாக யெகோவா எனக்கு உறுதிப்படுத்தினார், ஆறுதலும் அளித்தார். இந்த அனுபவத்தைப் படித்தபோது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.” மற்றொரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “என்னைப் போல் நிறைய பேர் இதுபோன்ற கஷ்டத்தை மனதில் பூட்டிவைத்து உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு இது மாதிரியான கட்டுரைகள் உற்சாக டானிக்.”
உணர்ச்சிப்பூர்வ வேதனைகளைச் சமாளித்தல்
“நாளைக்கு நடப்பது உங்களுக்கு தெரியாதே” என்ற நெஞ்சைத் தொடும் கட்டுரையில் ஹெர்பர்ட் ஜென்னிங்ஸ் என்ற சகோதரர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.b பைபோலார் டிஸார்டர் என்று அழைக்கப்படும் ஒருவித மனநிலை கோளாறை சகோதரர் ஜென்னிங்ஸ் சமாளித்து வருகிறார். நோய் தாக்கிய அந்த ஆரம்ப கட்டத்தைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதுகூட எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும் அது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் எப்படியோ கஷ்டப்பட்டு போய்விடுவேன், ஆனால் அனைவரும் உட்கார்ந்த பிறகுதான் உள்ளே நுழைவேன், அதே போல் கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப ஆரம்பிப்பதற்கு முன்பே நான் அங்கிருந்து வந்துவிடுவேன்.”
வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது சகோதரர் ஜென்னிங்ஸுக்கு மற்றொரு சவாலாக இருந்தது. அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “சில சமயங்களில், கதவருகே சென்ற பிறகுகூட பெல்லை அடிக்க எனக்குத் தைரியம் வராது. ஆனாலும் திரும்பிப் போய்விட மாட்டேன், ஏனென்றால் நம்முடைய ஊழியம் நமக்கும் நாம் சொல்வதைக் கேட்கும் ஆட்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் என்பது எனக்குத் தெரியும். (1 தீமோத்தேயு 4:16) கொஞ்ச நேரத்துக்குப்பின், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்று பேச முயற்சி செய்வேன். ஊழியத்தில் தொடர்ந்து கலந்துகொள்வதன் மூலம் என் ஆன்மீக ஆரோக்கியத்தைக் காத்துக்கொண்டேன்; இதனால் என் பிரச்சினையை நன்கு சமாளிக்க முடிந்தது.”
சகோதரர் ஜென்னிங்ஸின் வாழ்க்கை சரிதை, சோதனைகளைச் சமாளிக்க அநேகருக்குத் தைரியத்தை அளித்திருக்கிறது. உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ சகோதரி இவ்வாறு எழுதினார்: “கடந்த 28 வருடங்களாக காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப் படித்து வருகிறேன். இந்தக் கட்டுரையைப் போல வேறெதுவும் என் மனதை இந்தளவு தொட்டதில்லை. முழுநேர ஊழியத்தை நிறுத்திவிட்டதை நினைத்து குற்றவுணர்வால் வதைக்கப்பட்டேன். ஒருவேளை இன்னும் கொஞ்சம் விசுவாசம் இருந்திருந்தால் முழுநேர ஊழியத்தைத் தொடர்ந்து செய்திருப்பேனோ என்று நினைத்தேன். சகோதரர் ஜென்னிங்ஸ் தன்னுடைய உடல்நிலையைக் கவனித்துக்கொள்வதற்காக முழுநேர ஊழியத்தை விட்டுவிட்டதைப் பற்றி படித்த பிறகுதான், என்னுடைய சூழ்நிலையை என்னால் சமநிலையோடு சீர்தூக்கிப் பார்க்க முடிந்தது. இது நிச்சயமாகவே என் ஜெபத்திற்குக் கிடைத்த பதில்!”
அதேபோல மற்றொரு கிறிஸ்தவ சகோதரர் இவ்வாறு எழுதினார்: “பத்து வருடங்கள் சபை மூப்பராகச் சேவை செய்தேன். ஆனால் ஒருவித மனநலப் பிரச்சினை ஏற்பட்டபோது அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் நம் பத்திரிகைகளில் வரும் வாழ்க்கை சரிதைகளை வாசிக்கும்போது ரொம்பவே சோர்ந்து விடுவேன். ஏனென்றால், யெகோவாவின் ஜனங்கள் எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கப் படிக்க, நான் எதற்கும் லாயக்கில்லாமல் இருக்கிறேனே என்ற உணர்வு என்னை வாட்டி வதைக்கும். ஆனால் சகோதரர் ஜென்னிங்ஸின் விடாமுயற்சி என்னைத் தூக்கி நிறுத்தியது. இந்தக் கட்டுரையைத் திரும்பத் திரும்ப வாசித்தேன்.”
நம்பிக்கையோடு முன்னேறுவோமாக
சகோதரர்கள் ஒம்பிவா, ஜென்னிங்ஸ் போல இன்னும் எத்தனையோ யெகோவாவின் சாட்சிகள் பெரிய பெரிய பிரச்சினைகள் மத்தியிலும் தைரியமாக யெகோவா தேவனுக்குச் சேவை செய்து வருகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் உங்களை மனதாரப் பாராட்டுகிறோம். இந்த வாக்குறுதியில் நீங்கள் நம்பிக்கையாய் இருக்கலாம்: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல.”—எபிரெயர் 6:10.
பூர்வத்தில், எதிரிகளை மேற்கொள்ள யெகோவா தம் ஜனங்களுக்கு உதவி செய்தார். அதேபோல, இன்றுள்ள எல்லாத் தடைகளையும் மேற்கொள்ள உங்களுக்கும் அவர் உதவி செய்வார். ஆகவே, தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் யெகோவா சொன்ன இவ்வார்த்தைகளை மனதில் வையுங்கள்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”—ஏசாயா 41:10.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b டிசம்பர் 1, 2000, காவற்கோபுரம், பக்கங்கள் 24-28-ஐக் காண்க.
[பக்கம் 16-ன் படங்கள்]
ஸ்டான்லி ஒம்பிவா (மேலே), ஹெர்பர்ட் ஜென்னிங்ஸ் (வலது) போன்ற பலர் யெகோவாவை தைரியத்துடன் சேவித்து வருகின்றனர்
[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]
USAF photo