பைபிள் வாசிப்பை ஊக்கப்படுத்திய முன்னோடி
கிழக்கு சைபீரியாவின் உறைந்துபோன சமவெளியில் உயிர் நீத்தார். அபாண்டமான பழியையும் அவப்பெயரையும் சுமந்தவராய் மறைந்துபோனார். தன் காலத்து கிரேக்கரின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியவர்களில் அவர் முக்கியமானவர். ஆனால், இந்த விஷயம் இன்றிருக்கும் அநேகருக்குத் தெரியாது. இந்த முன்னோடியின் பெயர் செராஃபிம். பைபிள் வாசிப்பை ஊக்கப்படுத்த தைரியமாக முயற்சி செய்ததே அவருடைய மரணத்திற்கு வழிவகுத்தது.
செராஃபிம் வாழ்ந்த சமயத்தில் கிரீஸ் நாடு ஆட்டாமன் சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது, “நல்ல பள்ளிக்கூடங்களுக்கே பஞ்சமாக இருந்தது,” பாதிரிமார் உட்பட “பெரும்பாலான மக்களுக்கு படிப்பறிவே இல்லை” என்று கிரேக்க ஆர்த்தடாக்ஸ் அறிஞரான ஜார்ஜ் மெடாலினாஸ் கூறுகிறார்.
அந்தச் சமயத்தில் புழக்கத்திலிருந்த கிரேக்க மொழியில் பல்வேறு கிளை மொழிகள் இருந்தன. இம்மொழிக்கும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்கள் எழுதப்பட்டிருந்த கொய்னி (பொது) கிரேக்க மொழிக்கும் இடையே பெரும் வித்தியாசம் நிலவியது. இந்த வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததால், பள்ளிக்குச் சென்று படிக்காதவர்களால் கொய்னி மொழியைப் புரிந்துகொள்ளவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எந்த மொழியை ஆதரிப்பது என்ற பிரச்சினை எழுந்தபோது, பொது மக்களுக்குப் புரியாத கொய்னி கிரேக்க மொழியை ஆதரிக்கவே சர்ச் முடிவு செய்தது.
இந்தச் சூழலில்தான், சுமார் 1670-ல் ஸ்டிஃபனாஸ் ஈயோனிஸ் போகோனாடோஸ் பிறந்தார். கிரீஸிலுள்ள லெஸ்வாஸ் தீவில் வசித்த இவர் பிரசித்திபெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தச் சமயத்தில், இல்லாமையும் கல்லாமையும் அந்தத் தீவை ஆட்டிப்படைத்தன. அங்கு போதிய பள்ளிக்கூடங்கள் இல்லாததால் ஸ்டிஃபனாஸ் அங்கிருந்த மடத்திலேயே தொடக்க கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மிகச்சிறிய வயதிலேயே அவர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் உதவிகுருவாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருடைய பெயர் செராஃபிம் என்று மாற்றப்பட்டது.
1693 வாக்கில், உயர்கல்விக்கான தாகத்தால் செராஃபிம் கான்ஸ்டான்டிநோபிளுக்கு (இன்றைய துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு) சென்றார். அவருக்கு நிறைய திறமைகள் இருந்ததால் புகழ்பெற்ற கிரேக்கர்களின் மதிப்பு மரியாதையைச் சீக்கிரத்தில் சம்பாதித்தார். விரைவிலேயே, கிரேக்க தேசியவாத இரகசிய இயக்கம் ஒன்று, ரஷ்ய பேரரசரான மகா பீட்டரைச் சந்திக்க தூதுவராக அவரை அனுப்பிவைத்தது. மாஸ்கோவிற்கு போய்வரும் வழியில் செராஃபிம் ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கடந்து சென்றார். அங்கு மதத்திலும் கல்வித்துறையிலும் வீசிக்கொண்டிருந்த சீர்திருத்தவாத காற்று அவர்மீதும் பட்டது. 1698-ல் செராஃபிம் இங்கிலாந்திற்குப் பயணித்தார். அப்போது, லண்டனிலும் ஆக்ஸ்ஃபர்டிலும் உள்ள பெரும் புள்ளிகளோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அங்கு, ஆங்கிலிகன் சர்ச்சின் தலைவரான கான்டர்பரியின் ஆர்ச் பிஷப்பைச் சந்தித்து அவருடைய நண்பரானார். இந்த நட்பு, பிற்காலத்தில் செராஃபிமிற்குக் கைகொடுக்கவிருந்தது.
ஒரு பைபிளை வெளியிடுகிறார்
இங்கிலாந்தில் இருக்கையில், கிரேக்கர்களுக்கு ஓர் அதிமுக்கிய தேவை இருப்பதை செராஃபிம் உணர்ந்தார். அதுவே, ஒரு நவீன, எளிய “புதிய ஏற்பாடு” (கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்) ஆகும். மாக்ஸிமஸ் என்ற துறவி 50 வருடங்களுக்கும் முன்பு ஒரு பைபிள் மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். செராஃபிம் அதை அடிப்படையாக உபயோகித்து ஒரு புதிய, பிழையில்லாத, எளிய மொழிபெயர்ப்பைச் செய்ய ஆரம்பித்தார். அவர் அதிக உற்சாகத்தோடு வேலையைத் துவங்கினார், ஆனால் சீக்கிரத்திலேயே கையிலிருந்த காசெல்லாம் கரைந்துவிட்டது. தேவையான பணத்தைக் கொடுத்து உதவுவதாக கான்டர்பரியின் ஆர்ச் பிஷப் கூறியபோது நம்பிக்கை ஒளி பிரகாசிப்பதைப் போலிருந்தது. இந்த ஆதரவால் ஊக்கம்பெற்ற செராஃபிம் அச்சடிப்பதற்குத் தேவையான பேப்பரை வாங்கினார், ஓர் அச்சக உரிமையாளரோடு பேசி ஒப்பந்தமும் செய்துகொண்டார்.
என்றாலும், மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிசேஷத்தில் பாதிவரை அச்சடித்தபோது மீண்டும் பணப்பிரச்சினை ஏற்பட்டது. காரணம், இங்கிலாந்தின் அரசாங்கம் மாறியதால் தொடர்ந்து பண உதவி செய்ய முடியாதென கான்டர்பரியின் ஆர்ச் பிஷப் கைவிரித்துவிட்டார். இதைக் கண்டு தளர்ந்துவிடாத செராஃபிம் சில பணக்காரர்களின் உதவியை நாடினார். அவர்களுடைய உதவியால் ஒருவழியாக 1703-ல் தனது திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை வெளியிட்டார். வெளிநாடுகளில் சுவிசேஷங்களைப் பரப்பும் ஒரு சங்கம், அச்சடிப்புச் செலவுக்காக கொஞ்சம் பணத்தைக் கொடுத்து உதவியது.
மாக்ஸிமஸின் பழைய மொழிபெயர்ப்பு இரண்டு தொகுதிகளாக இருந்தது. அதில் மூல கிரேக்க வாசகமும் இருந்ததால் பெரிதாகவும் கனமாகவும் இருந்தது. செராஃபிமின் திருத்திய மொழிபெயர்ப்போ சிறிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அதோடு, நவீன கிரேக்க மொழிபெயர்ப்பு மட்டுமே இருந்ததால் அது அதிக தடிமனாக இருக்கவில்லை, விலையும் குறைவாக இருந்தது.
எரிகிற நெருப்பில் எண்ணெய்
“இந்தப் புதிய பைபிள், ஜனங்களின் அதிமுக்கியத் தேவையை பூர்த்தி செய்தது என்னவோ உண்மைதான். என்றாலும், பாதிரிமாரில் ஒரு தொகுதியினர் [பைபிள்] மொழிபெயர்ப்புகளை எதிர்த்தனர். செராஃபிம் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தாக்கினார்” என்று அறிஞர் ஜார்ஜ் மெடாலினாஸ் கூறுகிறார். பைபிளின் முன்னுரையில் செராஃபிம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: இந்த மொழிபெயர்ப்பு, ‘[கொய்னி] கிரேக்க மொழியை அறியாத சில பாதிரிமாருக்காகவும் குருமாருக்காகவுமே வெளியிடப்பட்டுள்ளது; அப்போதுதான் மகா பரிசுத்த ஆவியின் உதவியோடு அவர்களால் மூல வாக்கியத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்; அதோடு, சாதாரண கிறிஸ்தவர்களுக்கும் அதன் அர்த்தத்தை அவர்களால் விளக்க முடியும்.’ (நவீன கிரேக்கில் பைபிள் மொழிபெயர்ப்பு—19-ம் நூற்றாண்டின்போது) இதைக் கண்ட பாதிரிமார் கொதித்தெழுந்தனர். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் பைபிள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக பெரும் விவாதம் நிலவியது. செராஃபிம் எழுதிய முன்னுரை எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.
இப்பிரச்சினையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருசாரார் பைபிள் மொழிபெயர்ப்பை ஆதரித்தார்கள். காரணம், ஜனங்கள் பைபிளைப் புரிந்துகொண்டால்தான் ஆவிக்குரிய விதத்திலும் ஒழுக்க ரீதியிலும் முன்னேற முடியும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். ஜனங்கள் மட்டுமல்ல, பாதிரிமார்களும்கூட பைபிளைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். அதுமட்டுமல்ல, பைபிளிலுள்ள சத்தியங்களை எந்த மொழியிலும் தெரிவிக்க முடியும் எனவும் நம்பினார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9.
மறுபக்கத்தில், பைபிள் மொழிபெயர்ப்பை எதிர்த்தவர்கள் இருந்தார்கள். பைபிளை மொழிபெயர்த்தால் அதன் செய்தி கறைப்பட்டுவிடும் என்றும், அர்த்தம் சொல்வதிலும் கோட்பாடு விஷயத்திலும் சர்ச்சின் ஆதிக்கம் குறைந்துவிடும் என்றும் அவர்கள் கூறிவந்தார்கள். ஆனால், இது உண்மையான காரணமல்ல. புராட்டஸ்டன்டுகள், பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தி தங்கள் செல்வாக்கை அபகரிக்க முயன்றதைக் கண்டு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர்கள் அஞ்சினார்கள். ஆகவே, புராட்டஸ்டன்டுகளை ஆதரிக்கும் எந்தப் போக்கையும் தடுத்து நிறுத்துவது தங்கள் கடமை என பாதிரிமாரில் அநேகர் நினைக்க ஆரம்பித்தார்கள். அதனால், பைபிளைப் பொது மக்கள் புரிந்துகொள்வதையும் தடுக்க நினைத்தார்கள். இவ்வாறு, ஆர்த்தடாக்ஸ் பிரிவினருக்கும் புராட்டஸ்டன்ட் பிரிவினருக்கும் இடையிலான போராட்டத்தில் பைபிள் மொழிபெயர்ப்பே மிக முக்கிய பிரச்சினையானது.
ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைவிட்டு பிரிந்துபோக வேண்டும் என்பது செராஃபிமின் நோக்கமல்ல. இருப்பினும், தன்னை எதிர்த்த குருமார்களின் அறியாமையையும் தப்பெண்ணத்தையும் தைரியமாக வெளிப்படுத்தினார். தனது ‘புதிய ஏற்பாட்டின்’ முன்னுரையில் இவ்வாறு எழுதினார்: “கடவுள் பயமுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த பைபிளை வாசிக்க வேண்டும்” அப்போதுதான் “கிறிஸ்துவைப் பின்பற்றி [அவருடைய] போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.” பைபிள் படிப்பதைத் தடுப்பது பிசாசின் வேலையே என்றும் அடித்துக்கூறினார்.
எதிர்ப்பு எனும் பேரலை
செராஃபிமின் மொழிபெயர்ப்பு கிரீஸுக்கு வந்து சேர்ந்தபோது அது ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கோபத்தைக் கிளறியது. ஆகவே, அந்தப் புதிய மொழிபெயர்ப்பு தடைசெய்யப்பட்டது. அதன் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன, அதை வைத்திருந்த அல்லது வாசித்த எவரும் சர்ச்சிலிருந்து நீக்கப்படுவார்கள் என பயமுறுத்தப்பட்டார்கள். அந்த மொழிபெயர்ப்பு தேவையற்றது, பயனற்றது என்று கூறி பேட்ரியார்க் மூன்றாம் கேபிரியல் அதன் விநியோகத்தைத் தடைசெய்தார்.
இதைக் கண்டு செராஃபிம் நம்பிக்கை இழக்கவில்லை. என்றாலும், உஷாராயிருப்பதன் அவசியத்தை உணர்ந்தார். அவருடைய மொழிபெயர்ப்பை சர்ச் அதிகாரப்பூர்வமாக தடை செய்திருந்தபோதிலும் அநேக பாதிரிமாரும் பொது மக்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். அதைப் படுவேகமாக விநியோகிப்பதில் செராஃபிம் வெற்றி கண்டார். என்றாலும், பலம் படைத்த எதிரிகளோடு அவருடைய போராட்டம் இத்துடன் முடிந்துவிடவில்லை.
செராஃபிமின் முடிவு ஆரம்பமாகிறது
செராஃபிம் பைபிளை விநியோகிப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் புரட்சிகரமான, தேசியவாத இயக்கங்களிலும் கலந்துகொண்டார். இதற்காக 1704-ன் கோடைக்காலத்தில் மாஸ்கோவிற்கு திரும்பிச் சென்றார். அங்கு மகா பீட்டரின் நம்பிக்கைக்குரிய நண்பரானார். சில மாதங்களுக்கு ரஷ்ய ராயல் அகாடமியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தனது மொழிபெயர்ப்பு என்னவாகும் என்ற கவலையால் 1705-ல் கான்ஸ்டான்டிநோபிளுக்குத் திரும்பி வந்தார்.
அதே வருடத்தில் தனது மொழிபெயர்ப்பின் மறுபதிப்பை வெளியிட்டார். பாதிரியார்களைப் பழித்து முதல் பதிப்பில் எழுதிய முன்னுரையை இதிலிருந்து நீக்கிவிட்டார். அதற்குப் பதிலாக, பைபிளை வாசிக்கும்படி ஊக்கப்படுத்தி ஓர் எளிய முன்னுரையை அதில் சேர்த்தார். இந்தப் பதிப்பு அமோக வரவேற்பைப் பெற்றது. பேட்ரியார்க்கூட இதை எதிர்த்ததாக எந்தப் பதிவும் இல்லை.
இருந்தாலும், 1714-ல் அவருக்கு மரண அடி விழுந்தது. அந்த அடியைக் கொடுத்தவர், கிரேக்க ஆய்வுப்பயணியும் பைபிள் மொழிபெயர்ப்பை எதிர்த்தவருமான ஆலிக்ஸான்டர் எல்லாடியஸ் என்பவர். கிரேக்க சர்ச்சின் தற்போதைய நிலை என்ற தனது கிரேக்க புத்தகத்தில் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களையும் அவர்களுடைய மொழிபெயர்ப்புகளையும் கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். செராஃபிமைத் தாக்கி எழுத ஒரு முழு அதிகாரத்தை ஒதுக்கியிருந்தார். அதில் அவரை ஒரு திருடன், சுரண்டல்காரன், கல்வியறிவில்லாதவன், ஒழுக்கங்கெட்ட ஏமாற்றுப் பேர்வழி என்றெல்லாம் சாடியிருந்தார். அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்ததா? செராஃபிமைப் பற்றிய அநேக அறிஞரின் ஆதாரப்பூர்வமான கருத்தை எழுத்தாளரான ஸ்டிலியானஸ் பைராக்டாரிஸ் தெரிவிக்கிறார். அவர் செராஃபிமை ‘ஓர் உழைப்பாளி, அறிவொளி பெற்ற முன்னோடி’ என்று அழைத்தார். தன் காலத்தில் இருந்தவர்களைவிட முற்போக்கு சிந்தையுள்ளவராக இருந்ததால்தான் தாக்கப்பட்டார் என்றும் கூறுகிறார். என்றாலும், எல்லாடியஸின் புத்தகம் செராஃபிமின் சோகமான முடிவிற்கு வித்திட்டது.
மேகம்போல் சூழ்ந்த சந்தேகம்
1731-ல் செராஃபிம் ரஷ்யா சென்றபோது ரஷ்யப் பேரரசர் மகா பீட்டர் ஏற்கெனவே இறந்திருந்தார். அதனால் அவருக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கவில்லை. அப்போது, பேரரசி அன்னா இவனாவ்னா ஆட்சிசெய்து கொண்டிருந்தார். தனது ஆட்சி கவிழ்வதற்கு வழிநடத்தும் எதுவும் நடந்துவிடாதபடி அவர் மிகவும் கவனமாயிருந்தார். ஜனவரி 1732-ல், ‘பேரரசைக் கவிழ்க்க கிரேக்க ஒற்றன் திட்டம் தீட்டுகிறான்’ என்ற வதந்தி செ. பீட்டர்ஸ்பர்க் எங்கும் காட்டுத்தீ போல பரவியது. எல்லா கண்களும் செராஃபிமை சந்தேகத்தோடு பார்த்தன. அதனால் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக நியேஃப்ஸ்கி மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். செராஃபிமை குற்றஞ்சாட்டி எல்லாடியஸ் எழுதிய புத்தகம் அங்கு இருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்க செராஃபிம் மூன்று மறுப்புரைகளை எழுதினார். அந்த விசாரணை ஏறக்குறைய ஐந்து மாதங்கள் நீடித்தது. என்றாலும், தன்னைச் சூழ்ந்திருந்த சந்தேகம் என்ற மேகத்தை செராஃபிமால் போக்க முடியவில்லை.
செராஃபிமிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நம்பகமான எந்தவொரு அத்தாட்சியும் கிடைக்காததால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. என்றாலும், எல்லாடியஸின் குற்றச்சாட்டுகள் காரணமாக செராஃபிமை விடுதலை செய்யவும் அதிகாரிகள் தயங்கினார்கள். ஆகவே, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைபீரியாவுக்கு நாடுகடத்தினார்கள். “கிரேக்க நூலாசிரியர் எல்லாடியஸ் எழுதிய கட்டுரையில்” காணப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில்தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஜூலை 1732-ல் அவர் விலங்கிடப்பட்டவராய் கிழக்கு சைபீரியாவுக்கு வந்து சேர்ந்தார். மிகவும் மோசமான இடமென பெயரெடுத்த எக்காட்ஸ்க் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் மூன்று வருடங்கள் கழித்து செராஃபிம் இறந்தார். தனிமையில் வாடிய அவர் முற்றிலும் மறக்கப்பட்டுப்போனார். அவர் எடுத்த தீர்மானங்களும் உபயோகித்த முறைகளும் சில சமயங்களில் தவறாகவும் முட்டாள்தனமாகவும் இருந்தன. என்றாலும், அவருடைய மொழிபெயர்ப்பு இன்று கிடைக்கும் அநேக நவீன கிரேக்க மொழிபெயர்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது.a எளிதில் புரிந்துகொள்ள முடிகிற பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்புகூட அந்த மொழிபெயர்ப்புகளில் ஒன்று; இது பல்வேறு மொழிகளிலும் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், ‘சத்தியத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவை அடையும்’ வாய்ப்பைப் பெறுவதற்காக யெகோவா தமது வார்த்தையைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!—1 தீமோத்தேயு 2:3, 4.
[அடிக்குறிப்பு]
a நவம்பர் 15, 2002, தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 26-29-ல் உள்ள “நவீன கிரேக்கில் பைபிளைப் பெற போராட்டம்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 12-ன் படம்]
மகா பீட்டர்
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
படங்கள்: Courtesy American Bible Society