கடவுளுடைய சித்தத்தைச் செய்ய சந்தோஷப்படுகிறார்கள்
இயேசு தம் பிதாவிடம், “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபித்ததன் மூலம் கிறிஸ்தவர்களாகிய நம் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரி வைத்திருக்கிறார். (லூக்கா 22:42) இயேசு மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்ததை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன; இதே மனநிலையைத்தான் இன்று கடவுளின் கோடிக்கணக்கான ஊழியர்களும் வெளிக்காட்டுகிறார்கள். இவர்களில் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 120-வது வகுப்பின் 52 மாணவர்களும் அடங்குவர். இவர்கள் மோசமான சூழ்நிலைகள் மத்தியிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வெவ்வேறு நாடுகளுக்குச் செல்ல தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதைக் குறித்து மார்ச் 11, 2006 அன்று சந்தோஷப்பட்டார்கள்.
யெகோவாவுடைய சித்தத்திற்கு இசைய வாழ்வதற்கு இந்த மாணவர்களை எது தூண்டுகிறது? இக்கேள்விக்கான பதிலை பொலிவியாவிற்கு மிஷனரிகளாக செல்லவிருக்கும் கிறிஸ், லெஸ்லி தம்பதியர் சொல்வதைக் கேளுங்கள்: “எங்களையே நாங்கள் அர்ப்பணித்துவிட்டதால் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.” (மாற்கு 8:34) அல்பேனியாவில் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜேஸன், ஷெரி தம்பதியரும் இப்படிச் சொல்கிறார்கள்: “யெகோவாவின் அமைப்பிடமிருந்து ஒவ்வொரு சமயமும் நாங்கள் நியமிப்பைப் பெற்றபோது புதுப் புது சவால்களை எதிர்ப்பட்டோம். என்றாலும், யெகோவா தேவனையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டும் என்பதை அனுபவத்தில் கற்றிருக்கிறோம்.”
யெகோவாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிய ஊக்கமளித்தல்
பெத்தேலில் ஆர்ட் டிபார்ட்மென்ட்டில் சேவை செய்யும் ஜார்ஜ் சுமித் என்பவர் பட்டமளிப்பு விழாவை ஜெபத்துடன் ஆரம்பித்து வைத்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரும் பட்டமளிப்பு விழாவின் சேர்மனுமான சகோதரர் ஸ்டீவன் லெட் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சந்தோஷமான இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 23 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் நியு யார்க், பாட்டர்சனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்திற்கு வந்திருந்தார்கள். பட்டம் பெறவிருந்த மாணவர்கள் “மிக சக்திவாய்ந்த ஒன்றை” சாதிக்கப்போவதாக சகோதரர் லெட் அவர்களிடம் கூறினார். வேதவசனங்களின் வல்லமையினால் அவர்கள் நிர்மூலமாக்கப்போகும் பொய் கோட்பாடுகள் போன்ற “அரண்களை” பற்றி பேசினார். (2 கொரிந்தியர் 10:4, 5) “நீங்கள் செல்லவிருக்கும் இடங்களிலுள்ள நல்மனமுள்ளவர்களில் காணப்படும் அரண்களை நிர்மூலமாக்க யெகோவா உங்களைப் பயன்படுத்தப் போவது உங்களுக்கு அளவிலா சந்தோஷத்தைத் தரும்!” என்று சொல்லி முடித்தார்.
தலைமை அலுவலகத்தில் சேவை செய்யும் ஹெரால்ட் ஜேக்ஸன், “நினைவில்கொள்ள சில விஷயங்கள்” என்ற தலைப்பில் பேசினார். மிஷனரி சேவையில் காலெடுத்து வைத்திருக்கும் புதியவர்கள் ‘முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையுமே [எப்போதும்] தேட’ வேண்டுமென்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று சொன்னார். (மத்தேயு 6:33) ‘அன்பு பக்திவிருத்தியை உண்டாக்குவதோடு’ எல்லாவற்றிலும் வெற்றிகாண உதவுமென்பதை அவர்கள் நினைவில் வைக்கும்படி சொன்னார். (1 கொரிந்தியர் 8:1) “மற்றவர்களிடம் நீங்கள் பழகும்போது அன்பே பிரதான குணமாக இருக்கட்டும்” என்று கூறினார்.
அடுத்ததாக, ஆளும் குழுவைச் சேர்ந்த ஜெஃப்ரீ ஜேக்ஸன் பேசினார். 1979 முதல் 2003 வரை மிஷனரியாகச் சேவை செய்த இவர் பட்டதாரிகளிடம் இப்படியாகக் கேட்டார்: “நீங்கள் பொறுப்பாளியா?” அவர்களையும் அவர்களுடைய ஊழியத்தையும் குறித்து சமநிலையான கண்ணோட்டம் அவசியம் என்பதை அவர் வலியுறுத்திக் காட்டினார். கடினமாக உழைத்து, சத்தியத்தின் விதைகளை விதைத்து, தண்ணீர் பாய்ச்சும் பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. என்றாலும் வளரச் செய்வது யெகோவாவின் பொறுப்பு, ஏனென்றால், ‘விளையச் செய்கிறவர் தேவனே.’ (1 கொரிந்தியர் 3:6-9) மேலுமாக சகோதரர் ஜேக்ஸன் இப்படியாகச் சொன்னார்: “ஆன்மீக ரீதியில் நீங்கள் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். ஆனால், உங்களுக்கு என்ன மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது? நீங்கள் யெகோவாவையும் நேசிக்க வேண்டும்; ஊழியம் செய்யப்போகும் இடத்திலுள்ள மக்களையும் நேசிக்க வேண்டும்.”
கிலியட் போதனையாளரான லாரன்ஸ் பொவென், “நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருங்கள்” என்ற தலைப்பில் பேசினார். இஸ்ரவேலர் வனாந்தரத்தின் வழியாகப் பயணித்தபோது யெகோவா அவர்களை அற்புதமாய் வழிநடத்தி பாதுகாத்து வந்ததை மாணவர்களுக்கு நினைப்பூட்டினார். (யாத்திராகமம் 13:21, 22) இன்றும் யெகோவா நம்மை பல விதங்களில் வழிநடத்தி பாதுகாத்து வருகிறார்; அவற்றில் ஒன்று, “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற” அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபை மூலமாகும். (1 தீமோத்தேயு 3:14, 15) மனத்தாழ்மையான மக்களுக்கு வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் தருகிற பைபிள் சத்தியத்தை புதிய மிஷனரிகள் ஏற்று, அதன்படி நடக்க வேண்டும்.
கிலியட் போதனையாளர்களில் மற்றொருவரான வாலஸ் லிவரன்ஸ், தங்களுக்கு ‘பின்னால்’ இருக்கும் கடவுளுடைய வார்த்தையை மறந்துவிடாதிருக்கும்படி பட்டதாரிகளை உற்சாகப்படுத்தினார். கடவுளுடைய வார்த்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதி முடிக்கப்பட்டுவிட்டதால் அது பின்னால் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆட்டு மந்தையைப் பின்னாலிருந்து வழிநடத்தும் ஒரு மேய்ப்பனைப்போல யெகோவா பின்னாலிருந்து தம் மக்களை “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாக வழிநடத்துகிறார். (ஏசாயா 30:21; மத்தேயு 24:45-47) பட்டதாரிகள் இந்த ஊழியக்காரனுக்கு மிக நன்றியுள்ளவர்களாக இருக்க இந்தக் கிலியட் பள்ளி உதவியிருக்கிறது. இந்த ‘ஊழியக்காரனிடமிருந்து’ பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் கிடைத்திருக்கிறது. “தகவல் நிறைந்த இந்தப் பொக்கிஷத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்” என்று சகோதரர் லிவரன்ஸ் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.—மத்தேயு 13:52.
ஊழியத்தில் யெகோவாவின் சித்தத்தைச் செய்தல்
“நற்செய்தியை அறிவிக்க விரும்புதல்” என்ற தலைப்பில் பேசிய கிலியட் போதனையாளரான மார்க் நியூமார், பள்ளிக் காலத்தில் வெளி ஊழியத்தில் கலந்துகொண்டபோது பட்டதாரிகளுக்குக் கிடைத்த சில அனுபவங்களைச் சிறப்பித்துக்காட்டினார். (ரோமர் 1:15) அவர்களைப் பேட்டி கண்டபோது, சாட்சிகொடுக்க அவர்கள் எப்போதுமே மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் இருந்தது தெரியவந்தது.
தற்போது அமெரிக்காவில் பயணக் கண்காணிகளாகச் சேவை செய்துவரும் மூன்று சகோதரர்களை கென்னத் ஃப்லோடின் பேட்டி கண்டார்; அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு மாணவர்கள் அதிக உற்சாகம் பெற்றார்கள். முன்பு தென் அமெரிக்காவில் சேவை செய்த ரிச்சர்ட் கெல்லரும் மத்திய அமெரிக்காவில் சேவை செய்த அலேஹான்ட்ரோ லாகையோவும் மிஷனரி சேவையில் சமாளித்த சவால்களையும் அனுபவித்த சில ஆசீர்வாதங்களையும் பட்டதாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்கள். மோயாஸிர் ஃபெலிஸ்பினு என்ற சகோதரர் தன் சொந்த நாடான பிரேசிலில் மிஷனரிகளுடன் சேவை செய்தபோது பெற்ற பயிற்சியைப் பற்றி பட்டதாரிகளிடம் விளக்கினார்.
அனுபவமிக்க மிஷனரிகளான ராபர்ட் ஜோன்ஸ், உட்வர்த் மில்ஸ், கிறிஸ்டஃபர் ஸ்லே ஆகிய மூன்று பேரை டேவிட் ஷாஃபர் என்பவர் பேட்டி கண்டார். இந்த மூவரும், கஷ்டங்களை எதிர்ப்படுகையில் யெகோவாவையே நம்பியிருக்க தாங்கள் கற்றுக்கொண்ட விதத்தைச் சொன்னபோது பட்டதாரிகள் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்டார்கள். யெகோவாவின் அமைப்பு தந்த பயிற்சி, ஊழியத்தை சிறப்பாகச் செய்ய தங்களுக்கு உதவியதைப் போலவே பட்டதாரிகளுக்கும் உதவுமென அந்த மூவரும் உறுதி அளித்தார்கள். சகோதரர் மில்ஸ் இவ்விதமாகச் சொல்லி முடித்தார்: “கிலியட் பள்ளி எனக்கு கற்றுத்தந்த பைபிள் பாடங்களைவிட அது எனக்குக் கற்றுத்தந்த மனத்தாழ்மையும் அன்பும்தான் ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கிறது.”
ஆளும் குழு அங்கத்தினரான கை பியர்ஸ், “யெகோவா ஒருபோதும் தவறமாட்டார்” என்ற தலைப்பில் முக்கியப் பேச்சைக் கொடுத்தார். ஆதாம் தவறியது கடவுளும் தம் பங்கில் தவறிவிட்டதை அர்த்தப்படுத்தியதா? சிலர் சொல்வதுபோல் ஆதாமை பரிபூரணமாகப் படைக்க கடவுள் தவறினாரா? இல்லவே இல்லை. காரணம், “தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்.” (பிரசங்கி 7:29) பூமியிலிருந்தபோது தாம் எதிர்ப்பட்ட மிகப் பெரிய சோதனை மத்தியிலும் இயேசு உண்மையாக இருந்தார். “ஆதாம் தவறியதற்கு அவனுக்கு மன்னிப்பே கிடையாது, அவன் தவறியே இருக்கக்கூடாது” என்பதை இது நிரூபித்துக்காட்டுவதாகப் பேச்சாளர் சொன்னார். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் இருந்தபோது அவனுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. ஆனால் இயேசு வெற்றிகரமாகச் சமாளித்த சோதனையுடன் ஒப்பிடும்போது ஆதாம் எதிர்ப்பட்ட சோதனை ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல. இருந்தும் ஆதாம் தவறிவிட்டான். ஆனால் யெகோவா ஒருபோதும் தவறமாட்டார். அவருடைய சித்தம் கண்டிப்பாக நிறைவேறும். (ஏசாயா 55:11) சகோதரர் பியர்ஸ் புதிய மிஷனரிகளிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் சுயதியாகத்தால் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நீங்கள் மிஷனரிகளாக எங்கு சேவை செய்தாலும் அங்கு யெகோவா உங்கள் ஒவ்வொருவரோடும் இருப்பாராக.”
யெகோவாவின் சாட்சிகளுடைய பல்வேறு கிளை அலுவலகங்களிலிருந்து வந்த வாழ்த்து மடல்களை வாசித்த பிறகு சேர்மனாக இருந்த சகோதரர் லெட் மாணவர்களுக்குப் பட்டங்களையும் நியமன கடிதங்களையும் வழங்கினார். நீண்டகாலமாக பெத்தேலில் சேவை செய்துவரும் வர்னன் வைஸ்கார்வர் முடிவான ஜெபத்தைச் செய்தார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட 6,872 பேரும் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய புது பலம் பெற்றதாக உணர்ந்தார்கள். (சங்கீதம் 40:8) பட்டதாரிகளான ஆன்ட்ரூவும் ஆனாவும் இவ்வாறு சொன்னார்கள்: “எங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறோம். அவர் எங்களிடம் என்ன செய்யச் சொன்னாலும் அதை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறோம். இப்போது யெகோவா எங்களை ஆப்பிரிக்காவிலுள்ள கேமருனுக்கு போகச் சொல்லியிருக்கிறார்.” இவர்களும் மற்ற மாணவர்களும் மனநிறைவும் திருப்தியும் தரும் சேவையில் கால்பதிக்க ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். ஆம், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
[பக்கம் 1
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 6
அனுப்பப்பட்ட நாடுகள்: 20
மாணவர்களின் எண்ணிக்கை: 52
சராசரி வயது: 35.7
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 18.3
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 14.5
[பக்கம் 18-ன் படம்-ன் பெட்டி]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 120-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ரைட், எஸ்.; ஸ்வாரேஸ், பி.; க்ரைஸன்ட், பி.; டாவன்போர்ட், எல். (2) ஜான்ஸன், ஏ.; அல்லை, சி.; கேடி, கே.; கேரேரோ, பி.; ஆஸஸ், ஏ. (3) ஆர்டிஸ், எல்.; லைல், கே.; ஊசெட்டா, எம்.; பேரேத், ஆர்.; பாக்கஸ், கே.; கேட்ரீனா, சி. (4) பால்மர், பி.; லவ்விங், டி.; மக்டானா, ஜே.; பாஸ்டாக், டி.; பெனெடாடோஸ், எல். (5) ஜாசிக்கி, எம்.; ஸாராஃபியனோஸ், ஈ.; ஸ்டெல்டர், சி.; வைரா, ஆர்.; ஊன், ஜே.; ப்ரென்டாஸ், கே. (6) டாவன்போர்ட், எச்.; க்ரைஸன்ட், எச்.; பேரேத், எம்.; வைரா, ஈ.; ஸ்வாரேஸ், ஏ.; கேட்ரீனா, ஐ.; ரைட், சி. (7) கேடி, கே.; மக்டானா, ஜே.; ஆர்டிஸ், எம்.; ஊன், ஜே.; அல்லை, ஜே.; ஆஸஸ், எம். (8) ஸாராஃபியனோஸ், ஜி.; லைல், டி.; ஊசெட்டா, சி.; ஸ்டெல்டர், பி.; ப்ரென்டாஸ், ஜி,; ஜான்ஸன், ஏ.; பெனெடாடோஸ், சி. (9) பால்மர், ஜே.; ஜாசிக்கி, டபிள்யு.; பாக்கஸ், ஜே.; பாஸ்டாக், எஸ்.; கேரேரோ, ஜே. எம்.; லவ்விங், எஸ்.