உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 8/1 பக். 11-15
  • ஒன்றுபட்ட குடும்பம்—முடிவில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒன்றுபட்ட குடும்பம்—முடிவில்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மணவாழ்வில் ஏற்பட்ட மாற்றம்
  • பிள்ளைகளுக்கு ஆன்மீக உதவி
  • முட்டுக்கட்டைகளைச் சமாளித்து முன்னேறுதல்
  • என் கணவரிடம் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாற்றங்கள்
  • பணி ஓய்வு தந்த மாற்றம்
  • ஒன்றுபட்ட குடும்பம்​—⁠முடிவில்!
  • யெகோவாவின் வழிகளில் எட்டுப் பிள்ளைகளை வளர்த்த சவாலும் சந்தோஷமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • கடவுளிடம் நெருங்கிவருவது சமாளிக்க எனக்கு உதவிற்று
    விழித்தெழு!—1993
  • பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
    காவற்கோபுரம்: பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • யெகோவாவைச் சேவிக்க தீர்மானமாயிருத்தல்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 8/1 பக். 11-15

வாழ்க்கை சரிதை

ஒன்றுபட்ட குடும்பம்​—⁠முடிவில்!

சூமிகோ ஹிராநோ சொன்னபடி

நான் மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைக் கண்டுபிடித்தேன். அந்தப் பாதையில் என் கணவரும் என்னுடன் சேர்ந்து நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் என் கனவு நனவாக 42 வருடங்கள் எடுத்தன.

எனக்கு 1951-⁠ல் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு 21 வயது. நான்கு வருடங்களுக்குள்ளாக எங்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். வாழ்க்கையில் எனக்கு எந்தக் குறையும் இருந்ததாகத் தெரியவில்லை.

1957-⁠ல், யெகோவாவின் சாட்சியாக இருக்கும் மிஷனரி தன் வீட்டுக்கு வந்து போவதாக ஒருநாள் என் அக்கா சொன்னார். அவர் புத்த மதத்தவராக இருந்தாலும் அந்த மிஷனரியோடு பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தார், என்னையும் பைபிள் படிக்கும்படி சொன்னார். நானும் சம்மதித்தேன். நான் புராட்டஸ்டன்டு சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்தேன்; ஆகையால், யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளில் குறையிருப்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியுமென நினைத்தேன்.

ஆனால், பைபிளைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் கொஞ்சம்தான் என்பதை சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். எனக்கு பைபிள் படிப்பு நடத்தின டாஃப்னி குக்கி (பிறகு டாஃப்னி பெட்டிட்) என்ற அந்த மிஷனரியிடம், “யெகோவா யார்?” என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில் நான் போய்க்கொண்டிருந்த சர்ச்சில் அந்தப் பெயரைக் கேட்டதே இல்லை. அந்த மிஷனரி, ஏசாயா 42:8-ஐ (NW) எனக்கு எடுத்துக்காட்டினார்; அந்த வசனத்தில், யெகோவா என்பது சர்வவல்லமையுள்ள கடவுளுடைய பெயரென தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் டாஃப்னி பைபிளிலிருந்து பதில் சொன்னார்.

நான் போய் அதே கேள்விகளை மதகுருவிடமும் கேட்டேன். “கேள்விகள் கேட்பதே பாவம். என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதை நம்பு, அது போதும்” என்றார் அவர். ஆனால், கேள்விகள் கேட்பது தப்பென்று நான் நினைக்கவில்லை; எனவே, ஆறு மாதங்களுக்குத் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை காலையில் சர்ச்சுக்குச் சென்றேன், மதியம் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் சென்றேன்.

மணவாழ்வில் ஏற்பட்ட மாற்றம்

பைபிளிலிருந்து விஷயங்களைக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, மெய்சிலிர்த்துப் போனேன்; அவற்றையெல்லாம் என் கணவர் காசுஹிகோவிடம் சொன்னேன். ஒவ்வொரு முறை பைபிள் படிப்புக்குப் பின்பும், கூட்டங்களுக்குப் போய் வந்த பின்பும் நான் கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் அவரிடம் சொன்னேன். விளைவு? எங்கள் மத்தியில் இருந்த நெருக்கத்தில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறுவதை அவர் விரும்பவில்லை. இருப்பினும், பைபிள் படிப்பு எனக்கு அதிக திருப்தியைத் தந்ததால் நான் தொடர்ந்து படித்தேன், யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொண்டேன்.

சபை கூட்டங்களுக்குப் போவதற்கு முன்பாக என் கணவருக்குப் பிடித்தமான உணவை இரவு சாப்பாட்டுக்குத் தயாரித்து வைப்பேன், அவரோ வெளியே போய் சாப்பிட்டு வந்துவிடுவார். கூட்டங்கள் முடிந்து நான் வீடு திரும்பும்போது அவர் கோபமாகவே இருப்பார், என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு அவருடைய கோபம் சற்று தணிய ஆரம்பிக்கும், ஆனால் அதற்குள் அடுத்த கூட்டத்திற்குப் போவதற்கான நாள் வந்துவிடும்.

இந்தச் சமயத்தில் எனக்கு டிபி (காசநோய்) வந்துவிட்டது; இந்த நோயால் என் கணவருடைய குடும்பத்தில் பலர் ஏற்கெனவே இறந்திருந்தார்கள். அதனால் என் கணவர் என்னைப் பற்றி ரொம்ப கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்; குணமான பிறகு நான் ஆசைப்படுகிற எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பதாக என்னிடம் சொன்னார். சபை கூட்டங்களுக்குப் போக மட்டும் என்னை அனுமதித்தால் போதும், வேறெதுவும் வேண்டாமென அவரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார்.

நான் குணமாவதற்கு ஆறு மாதங்கள் எடுத்தன. அந்தச் சமயத்தில் பைபிளை ரொம்ப மும்முரமாகப் படித்தேன். யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளில் ஒரேவொரு குறையைக் கண்டுபிடித்தால்கூட, உடனடியாக பைபிள் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் ஏதாவது முரண்பாடுகள் இருக்கின்றனவா என ஆராய்ந்தேன். என்னால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, புராட்டஸ்டன்டு சர்ச்சிலுள்ள குறைகள் எல்லாம் பளிச்சென்று தெரிந்தன. யெகோவா எந்தளவுக்கு நேசிக்கிறவராகவும் நீதியுள்ளவராகவும் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன்; அவருடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக வாழும்போது பயன் அடைய முடியுமென்பதையும் புரிந்துகொண்டேன்.

நான் குணமானதும், கொடுத்த வாக்கை என் கணவர் காப்பாற்றினார், சபைக் கூட்டங்களுக்குப் போக என்னை அனுமதித்தார். ஆன்மீக ரீதியில் நான் படிப்படியாக முன்னேறினேன்; 1958, மே மாதம் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றேன். என்னோடு சேர்ந்து என் குடும்பத்தாரும் மெய்க் கடவுளை வணங்க வேண்டுமென்று ஏங்கினேன்.

பிள்ளைகளுக்கு ஆன்மீக உதவி

சபை கூட்டங்களுக்கும்சரி, வெளி ஊழியத்திற்கும்சரி, பிள்ளைகள் எப்போதும் என்னோடு வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவர்கள் பைபிள் அறிவில் முன்னேறி வருவதைப் புரிந்துகொள்ள உதவும் விதத்தில் சில சம்பவங்கள் நடந்தன. ஒருநாள் என் ஆறு வயது மகன் மாசாஹிகோ வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று பலத்த சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து யாரோ வீறிட்டு அலறுவதுபோல் இருந்தது. பக்கத்துவீட்டுப் பெண் எங்கள் வீட்டுக்குள் ஓடிவந்தாள், என் மகன் மீது கார் மோதிவிட்டதென்று கத்தினாள். அவன் இறந்துவிட்டானோ? பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல் என்னை ஒருவாறு கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே ஓடினேன். அப்பளம்போல் நொறுங்கியிருந்த அவனுடைய சைக்கிளைப் பார்த்ததும் வெடவெடத்துப்போனேன்; ஆனால் அவன் லேசான காயங்களுடன் தப்பியிருந்தான், அவன் எழுந்து என்னிடம் வந்தான். என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “யெகோவா என்னைக் காப்பாத்திட்டார் இல்லையாம்மா?” என்றான். அவனை உயிரோடு பார்த்ததும், அவன் வாயிலிருந்து வந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்டதும், நான் அழுதேவிட்டேன்.

இன்னொரு நாள் ஊழியம் செய்கையில் ஒரு முதியவரை நாங்கள் சந்தித்தோம்; அவர், “ஏம்மா, இப்படிச் சின்னப் பையனை இழுத்துக்கொண்டு வருகிறாயே, இது உனக்கே நன்றாக இருக்கிறதா? அவனைப் பார்க்கவே எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” என்று சத்தம் போட்டார். அவருக்கு நான் பதில் சொல்ல வாயெடுப்பதற்கு முன்பாக என் எட்டு வயது மகன் டோமோயோஷி முந்திக்கொண்டு, “தாத்தா, பிரசங்கிக்க வரும்படி என் அம்மா ஒன்றும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை; யெகோவாவுக்குச் சேவை செய்ய எனக்கு ஆசை, அதனால்தான் ஊழியத்திற்கு வந்தேன்” என்றான். அந்த முதியவர் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாரே தவிர, பதிலேதும் பேசவில்லை.

என் கணவரிடமிருந்து பிள்ளைகளுக்கு ஆன்மீக வழிநடத்துதல் கிடைக்காததால், அந்த விதத்தில் அவர்கள் அப்பா இல்லாத பிள்ளைகள்தான். அதனால், அவர்களுக்கு பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது; ஆனால், இன்னும் எத்தனையோ விஷயங்களை நானே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் அன்பையும், விசுவாசத்தையும், பக்திவைராக்கியத்தையும் வளர்த்துக்கொண்டு, என் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க முயன்றேன். அவர்களுக்கு முன்பாக தினமும் ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி செலுத்தினேன். ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். இது அவர்களை ஊக்குவித்தது. அவர்கள் பெரியவர்களாகி, பயனியர்கள் (யெகோவாவின் சாட்சிகளில் முழுநேர ஊழியர்கள்) ஆனதும், ஏன் பயனியர் செய்யத் தீர்மானித்தார்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “எங்கள் அம்மா பயனியர் ஊழியம் செய்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள்; அதேபோல நாங்களும் சந்தோஷமாக இருக்க விரும்பினோம், பயனியர் ஊழியம் செய்கிறோம்” என பதில் அளித்தார்கள்.

என் பிள்ளைகளுக்கு முன்பாக அவர்களுடைய அப்பாவைப் பற்றியோ சபையிலுள்ளவர்களைப் பற்றியோ குறைகூறக்கூடாது என்பதில் நான் ரொம்பவே கவனமாக இருந்தேன். ஏனெனில் குறைகூறுவது என் பிள்ளைகளைப் பாதித்துவிடும் என்பதை அறிந்திருந்தேன். அப்படிப் பேசினால் பிள்ளைகள் மற்றவர்களை மதிக்காமல் போவதோடுகூட என்னையும் மதிக்காமல் போய்விடலாம்.

முட்டுக்கட்டைகளைச் சமாளித்து முன்னேறுதல்

1963-⁠ல் என் கணவருடைய வேலை மாற்றல் காரணமாக தைவான் நாட்டிற்கு நாங்கள் குடிமாறிச் சென்றோம். அங்கிருந்த ஜப்பானியர்களிடம் நான் பிரசங்கித்தால் பிரச்சினைகள் வருமென என் கணவர் சொன்னார். மீண்டும் ஜப்பானுக்கே திருப்பி அனுப்பப்படுவோம் என்றும் அதனால் அவர் வேலை பார்க்கும் கம்பெனிக்குப் பிரச்சினை வருமென்றும் அவர் சொன்னார். யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து எங்களை எப்படியாவது பிரிக்க வேண்டுமென விரும்பினார்.

தைவானில் சபை கூட்டங்கள் எல்லாம் சைனீஸ் மொழியில் நடைபெற்றன; அங்கிருந்த சாட்சிகள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். ஜப்பானியர்களுக்குப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக சீனர்களுக்குப் பிரசங்கிப்பது என்ற முடிவுக்கு வந்தேன்; அதற்காக சைனீஸ் மொழியைக் கற்றுக்கொண்டேன். இப்படிச் செய்ததால், என் கணவர் சொன்ன எந்தப் பிரச்சினையும் வராமல் என்னால் பார்த்துக்கொள்ள முடிந்தது.

தைவானிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு வைத்திருந்தது எங்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தியது. மிஷனரிகளாக அங்கு சேவை செய்து வந்த ஹார்வி, கேத்தி லோகன் தம்பதியர் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தார்கள். சகோதரர் லோகன், ஆன்மீக வழிகாட்டுதல் அளிப்பதில் என் பிள்ளைகளுக்கு அப்பா மாதிரி இருந்தார். யெகோவாவுக்குச் சேவை செய்வது சந்தோஷத்தைப் பறிக்கிற, கட்டுப்பாடு மிகுந்த ஒரு வாழ்க்கை அல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தார். எனவே, தைவானில் இருக்கும்போதுதான் என் மகன்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய தீர்மானம் எடுத்தார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

என் மகன்களான டோமோயோஷியும், மாசாஹிகோவும் தைவானிலிருந்த அமெரிக்கன் பள்ளியில் படித்தபோது ஆங்கிலம், சைனீஸ் ஆகிய இரு மொழிகளையும் கற்றுக்கொண்டார்கள். இந்தப் படிப்பு, எதிர்காலத்தில் மெய்க் கடவுளாகிய யெகோவாவின் ஊழியர்களாகச் சேவை செய்ய அவர்களைத் தயார்படுத்தியது. எங்களுக்குக் கஷ்டமானதாக இருந்திருக்க வேண்டிய காலப் பகுதியை நித்திய ஆசீர்வாதங்களைப் பெறும் காலப் பகுதியாக யெகோவா மாற்றிவிட்டதற்காக என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு நன்றி சொல்கிறேன். தைவானில் குடியிருந்த அந்த மூன்றரை வருடங்களை மறக்கவே முடியாது; அதற்குப் பிறகு நாங்கள் மீண்டும் ஜப்பானுக்குக் குடிமாறினோம்.

இப்போது பிள்ளைகள் வாலிப வயதிலிருந்தார்கள், தங்கள் இஷ்டம்போல் சுதந்திரமாக வாழ விரும்பினார்கள். மணிக்கணக்காக அவர்களோடு உட்கார்ந்து அவர்களுக்குப் புரியும் விதத்தில் பைபிள் நியமங்களை எடுத்துச் சொன்னேன்; கடினமான அந்தக் காலப் பகுதியைச் சமாளிக்க யெகோவா அவர்களுக்கு உதவினார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் டோமோயோஷி பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தான். ஒருசில வருடங்களிலேயே, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற நான்கு பேருக்கு அவன் உதவினான். மாசாஹிகோவும் அவனுடைய அண்ணனைப் போலவே பள்ளிப் படிப்பை முடித்த கையோடு பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தான். நான்கு வருடங்களுக்குள் நான்கு இளைஞர்கள் யெகோவாவின் சாட்சிகளாவதற்கு அவன் உதவினான்.

என் பிள்ளைகளை யெகோவா இன்னும் அதிகமாக ஆசீர்வதித்தார். பைபிள் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள நான் ஒரு பெண்ணுக்கு உதவியிருந்தேன்; அவளுடைய கணவருக்கு டோமோயோஷி பைபிள் படிப்பு நடத்தினான். அவர்களுடைய இரு மகள்களும்கூட யெகோவாவின் சாட்சிகளானார்கள். பின்னர், டோமோயோஷி அவர்களுடைய மூத்த மகளான நோபுகோவை திருமணம் செய்துகொண்டான், மாசாஹிகோ அவர்களுடைய இளைய மகள் மாசாகோவை திருமணம் செய்துகொண்டான். இப்போது டோமோயோஷியும் நோபுகோவும் நியு யார்க்கில், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். மாசாஹிகோவும் மாசாகோவும் பராகுவே நாட்டில் மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள்.

என் கணவரிடம் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாற்றங்கள்

இந்த எல்லா சமயத்திலும் என் கணவர் சத்தியத்திற்குப் பாராமுகம் காட்டினார், ஆனால் அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுவது தெரிந்தது. என் மத நம்பிக்கைகளை மற்றவர்கள் எதிர்த்தபோது அவர் எனக்குத் துணை நின்றார்; உண்மையில் அவருக்கே தெரியாமல் பைபிள் சத்தியங்களை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார். கஷ்டத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்குப் பொருளுதவி அளித்து உதவினார். எங்கள் மகன்களில் ஒருவனுடைய திருமணத்தின்போது சுருக்கமாக அவர் பேசுகையில் இவ்வாறு சொன்னார்: “மக்களுக்கு நல்வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுப்பதுதான் இருப்பதிலேயே மிகச் சிறந்த வேலை, மிகக் கடினமான வேலையும்கூட. என் மகன்களும் மருமகள்களும் இந்தக் கஷ்டமான பாதையில் வாழ்நாள் முழுவதும் நடக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள்.” இவையெல்லாம், என்றாவது ஒருநாள் நிச்சயம் அவர் என்னோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவார் என்ற எண்ணத்தை எனக்குள்ளே ஏற்படுத்தின.

யெகோவாவின் சாட்சிகளுடன் அவர் பழகுவதற்காக அவர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்தேன். கிறிஸ்தவக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பிலும் கலந்துகொள்ளும்படி அவரை அழைத்தேன். அவர் தயங்கினாலும், வேலை அதிகமில்லாத சமயங்களில், முடிந்தபோது இக்கூட்டங்களுக்கு வந்தார். பைபிள் படிப்பதற்கு ஒப்புக்கொள்வார் என்ற எண்ணத்தில் அநேக முறை கிறிஸ்தவ மூப்பர்களை நான் வீட்டுக்கு வரவழைத்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். காரணம் புரியாமல் குழம்பினேன்.

அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகள் அப்போது என் மனதுக்கு வந்தன; அவர் சொன்னார்: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) அந்தப் புத்திமதியை நான் முழுமையாக கடைப்பிடிக்காததை உணர்ந்தேன். அதற்கு, நான் ஆன்மீக ரீதியில் இன்னும் முன்னேற வேண்டியிருந்தது.

ஆன்மீக ரீதியில் இன்னும் முன்னேற வேண்டுமென்ற நோக்கத்துடன், 1970-⁠ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பத்து வருடம் ஆனது, இருபது வருடம் ஆனது. ஆனால் என் கணவரிடம் ஆன்மீக ரீதியில் எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. நான் பைபிள் படிப்பு நடத்திய பெண் ஒருமுறை இவ்வாறு சொன்னாள்: “உங்கள் கணவருக்கே உங்களால் உதவ முடியாத போது மற்றவர்களுக்கு உதவுவது உங்களுக்குக் கடினம்தான்.” அப்படிச் சொன்னபோது எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது, ஆனாலும் சோர்ந்துவிடவில்லை.

1980-⁠ன் பிற்பகுதியில், எங்கள் அப்பா, அம்மா சாகும் நிலையில் இருந்தார்கள். அவர்களையும் பராமரிக்க வேண்டும், என் வேலைகளையும் கவனிக்க வேண்டுமென்பதால் களைப்படைந்தேன், பாரமாக உணர்ந்தேன். நான் யெகோவாவை வணங்குவதை அவர்கள் வருடக்கணக்கில் எதிர்த்து வந்தவர்கள், ஆனாலும் அவர்களிடம் முடிந்த மட்டும் அன்புடன் நடந்துகொண்டேன். 96 வயதான என் அம்மா இறப்பதற்கு முன்பாக, “சூமிகோ, நான் மட்டும் உயிர்த்தெழுப்பப்பட்டேன் என்றால் நிச்சயம் உன் மதத்தில் சேர்ந்துவிடுவேன்” என்று என்னிடம் சொன்னார்கள். என் முயற்சி வீண்போகவில்லை என்பதை அப்போது புரிந்துகொண்டேன்.

எங்கள் அப்பா அம்மாவுக்கு நான் செய்த எல்லாவற்றையும் என் கணவர் கவனித்துக்கொண்டே இருந்தார். என்னை மெச்சும் விதத்தில் அவர் தவறாமல் சபை கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். இப்படி அநேக வருடங்களுக்குக் கூட்டங்களுக்கு வந்தார்; ஆனாலும் ஆன்மீக ரீதியில் அவரிடம் உண்மையிலேயே எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. என்னால் முடிந்தளவு அவருக்குப் பிரியமாக நடக்க முயற்சி செய்தேன். அவருடைய நண்பர்களையும், தொழில்ரீதியாக அவருக்குப் பழக்கமான அயல்நாட்டு பணியாளர்களையும்கூட விருந்துக்கு அழைத்தேன். அவரோடு சேர்ந்து பொழுதுபோக்கில் நேரம் செலவிட்டேன். பயனியர் ஊழியத்தில் ஒரு மாதத்திற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய மணிநேரம், 70 எனக் குறைக்கப்பட்டபோது அவருடன் நிறைய நேரத்தைச் செலவழித்தேன்.

பணி ஓய்வு தந்த மாற்றம்

1993-⁠ல் என் கணவர் வேலையிலிருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு நேரமிருப்பதால் இப்போது பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்வாரென நினைத்தேன். ஆனால், நேரம் இருக்கிறது என்பதற்காகக் கடவுளை வணங்குவது அவரை அவமதிப்பதுபோல இருக்குமென சொல்லிவிட்டார். எப்போது கடவுளை வணங்க வேண்டுமென்று அவருடைய மனதிற்குத் தோன்றுகிறதோ அப்போது வணங்குவதாகவும், அதுவரை நான் அவரை வற்புறுத்த வேண்டாமென்றும் சொல்லிவிட்டார்.

ஒருநாள் அவர் என்னிடம், ‘சூமிகோ, இனியாவது நீ எனக்காக மட்டுமே வாழ்வாயா?’ என்று கேட்டார். எனக்கு வேதனையாய் இருந்தது, ஏனெனில், அவரைக் கல்யாணம் செய்த நாள் முதலாய் என்னால் முடிந்த எல்லாவற்றையும் அவருக்காக நான் செய்து வந்திருந்தேன். அவரைப் பிரியப்படுத்துவதற்காக பார்த்துப் பார்த்து காரியங்களைச் செய்திருந்தேன், ஆனால் அவரைவிட, யெகோவாவுக்காகவே நான் வாழ்வதாக அவர் நினைத்திருந்தார். இதைக் குறித்துக் கொஞ்ச நேரம் யோசித்த பிறகு, என்னால் முடிந்த அனைத்தையும் அவருக்காகச் செய்திருப்பதாய் சொன்னேன். ஆனால் நான் செய்கிற வேலையை அவரும் செய்தால், இருவருமாகச் சேர்ந்து அருமையான, புத்தம் புது வாழ்க்கையைத் தொடங்கலாமென்றும், ஏதோ சில வருடங்கள் அல்ல, காலமெல்லாம் அப்படி வாழலாமென்றும் சொன்னேன். நாட்கணக்கில் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கடைசியில் அவர், “சரி அப்படியென்றால் நீ என்னோடு பைபிள் படிப்பாயா?” என்று கேட்டார். அந்த வார்த்தைகள் என் காதில் எதிரொலிக்கும் போதெல்லாம் என் இருதயம் மகிழ்ச்சியில் துள்ளும்.

ஆரம்பத்தில் என் கணவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஒரு கிறிஸ்தவ மூப்பரை ஏற்பாடு செய்தேன், அவரோ, “உன்னிடம்தான் பைபிள் படிப்பேன், வேறு யாரிடமும் படிக்கப்போவதில்லை” என்று சொல்லிவிட்டார். எனவே தினமும் பைபிள் படிப்பு நடந்தது. நான் சைனீஸ் மொழி சபைக்குப் போய்க்கொண்டிருந்தேன், என் கணவருக்கும் அந்த மொழி அத்துப்படி, எனவே பைபிள் படிப்பு சைனீஸ் மொழியில் நடந்தது. அதோடு, இருவருமாகச் சேர்ந்து ஒரு வருடத்திற்குள்ளாக முழு பைபிளையும்கூட வாசித்து முடித்தோம்.

இந்தச் சமயத்தில் சைனீஸ் மொழி சபையிலிருந்த ஒரு மூப்பரும் அவருடைய மனைவியும் எங்கள் இருவரிடமும் கரிசனையுடன் பழகினார்கள். எங்கள் பிள்ளைகளைவிட அவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தபோதிலும் எங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். சபையிலிருந்த இன்னும் அநேகரும் என் கணவரிடம் தனிப்பட்ட அக்கறை காட்டினார்கள். எங்களை விருந்துக்கு அழைத்தார்கள், என் கணவரை அவர்களுடைய அப்பா ஸ்தானத்தில் வைத்து அவருடன் பேசினார்கள். இதையெல்லாம் பார்த்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஒருநாள் சபையிலிருந்த ஒருவருடைய திருமண அழைப்பிதழ் என் கணவருடைய பெயருக்கு வந்தது. குடும்பத் தலைவர் என்ற முறையில் அவரை மதித்து அப்படி அனுப்பியிருந்தது அவரை நெகிழ வைத்தது, அதில் கலந்துகொள்ள அவர் தீர்மானித்தார். சீக்கிரத்திலேயே சாட்சிகள் எல்லாருடனும் கலகலப்பாகப் பேசிப் பழக ஆரம்பித்தார், கிறிஸ்தவ மூப்பர் ஒருவருடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அவ்வாறு பைபிள் படித்ததும், கூட்டங்களில் கலந்துகொண்டதும், சபையிலுள்ளவர்கள் காட்டிய அன்பும் அவர் ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேற உதவின.

ஒன்றுபட்ட குடும்பம்​—⁠முடிவில்!

டிசம்பர் 2000-⁠ல், அவர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார். இந்த நவீன நாளைய “அற்புதத்தை” பார்க்க வெகு தூரத்திலிருந்த என் மகன்களும் மருமகள்களும் புறப்பட்டு வந்திருந்தார்கள். என் கனவு நனவாக 42 வருடங்கள் ஆயின, ஆனால் இப்போது நாங்கள் ஒன்றுபட்ட குடும்பமாக இருக்கிறோம்.

இப்போதெல்லாம் தினமும் காலையில் இரண்டு பேருமாகச் சேர்ந்து தினவசனத்தையும், பைபிளையும் வாசிக்கிறோம். தினமும் ஆன்மீக விஷயங்களைப் பேசுகிறோம், ஆன்மீக காரியங்களில் பங்குகொள்கிறோம். என் கணவர் இப்போது உதவி ஊழியராக இருக்கிறார், சமீபத்தில் சைனீஸ் மொழி சபையில் அவர் ஒரு பொதுப் பேச்சைக் கொடுத்தார். சத்தியத்தில் எங்களை ஒன்றுசேர்த்த யெகோவாவுக்கு நான் நன்றி சொல்கிறேன். என் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து அவருடைய பெயரையும் பேரரசாட்சியையும் நித்தியத்திற்குமாய் ஆதரிக்கும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்.

[பக்கம் 13-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சீனா

வட கொரியா

தென் கொரியா

ஜப்பான் கடல்

ஜப்பான்

டோக்கியோ

கிழக்கு சீனக் கடல்

தைவான்

தைபீ

[பக்கம் 12-ன் படம்]

1958, நான் முழுக்காட்டுதல் எடுத்த வருடத்தில் என் குடும்பத்தாரோடு

[பக்கம் 13-ன் படங்கள்]

டோக்கியோவிலிருந்து தைபீக்கு மாற்றலானபோது ஹார்வி, கேத்தி லோகன் போன்ற நண்பர்கள் ஆன்மீக ரீதியில் எங்களைப் பலப்படுத்தினார்கள்

[பக்கம் 15-ன் படம்]

இன்று மெய் வணக்கத்தில் ஒன்றுபட்ட என் குடும்பம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்