உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 9/1 பக். 3-5
  • மதம் ஏதாவது நன்மை உண்டா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதம் ஏதாவது நன்மை உண்டா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அநேகர் மதத்தைப் புறக்கணிக்கக் காரணம்
  • மதத்தின் பெயரில் தவறான காரியங்கள்
  • “எனக்கு என்னதுக்கு?”
  • பொய் மதத்திலிருந்து விடுபட்டு வருதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • தப்பிப்பிழைப்பதற்காக தூய்மையான மதத்தைக் கடைபிடித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?
    பைபிள் தரும் பதில்கள்
  • எந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 9/1 பக். 3-5

மதம் —ஏதாவது நன்மை உண்டா?

“எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை, ஆனாலும் நான் நேர்மையானவன்!” என்று அநேகர் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நேர்மையான, கரிசனையான, நம்பகமான அநேக ஆட்களுக்கு மதத்தில் துளியும் ஈடுபாடில்லை. உதாரணத்திற்கு, மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெரும்பாலோர் கடவுளை நம்புவதாகச் சொல்கிறார்கள், ஆனாலும் வெகு சொற்பமானோரே தவறாமல் சர்ச்சுக்குச் செல்கிறார்கள்.a லத்தீன் அமெரிக்காவில்கூட, கத்தோலிக்கரில் 15 முதல் 20 சதவிகிதத்தினரே ஒழுங்காகச் சர்ச்சுக்குப் போகிறார்கள்.

மேம்பட்ட வாழ்க்கைக்கு மதம் உதவாது என்றே அநேகர் நினைக்கிறார்கள். ஒருவேளை நீங்களும்கூட அப்படி நினைக்கலாம். என்றாலும், இந்தக் காலத்தைவிட உங்கள் தாத்தா, பாட்டியின் காலத்தில் ஏராளமானோர் ரொம்பவே மதப்பற்றுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அப்படியென்றால், இன்று அநேகர் மதப்பற்றை இழந்ததற்குக் காரணம் என்ன? மதப்பற்று இல்லாமலேயே ஒருவரால் நல்லவராக இருக்க முடியுமா? உங்களுக்கு நன்மை செய்யும் மதம் ஏதாவது இருக்கிறதா?

அநேகர் மதத்தைப் புறக்கணிக்கக் காரணம்

ஜனங்கள் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதை கிறிஸ்தவமண்டலத்தார் பலரும் அநேக நூற்றாண்டுகளாக நம்பி வந்தார்கள். அதனால், கடவுளுடைய தயவைப் பெறுவதற்காக சர்ச்சுக்குப் போய் வந்தார்கள்; அங்கு பாதிரியார் நடத்திய சடங்குகள் அல்லது பிரசங்கியார் கொடுத்த ஆலோசனைகள் மூலம் அதைப் பெற்றுக்கொள்ள முடியுமென நினைத்தார்கள். எனினும், மதத்தில் நடக்கிற மாய்மாலத்தைப் பலரும் அறிந்திருந்தார்கள். போரில் மதத்தின் பங்கும் மதத் தலைவர்கள் சிலரின் ஒழுக்கங்கெட்ட நடத்தையையும் அநேகர் அறிந்திருந்தார்கள். என்றாலும், இதற்கு மதத்தைக் குறைசொல்ல முடியாது என்றே பெரும்பாலோர் நினைத்திருந்தார்கள். இன்னும் சிலர் சர்ச்சில் நிலவிய பயபக்தியான சூழலையும், அதன் பாரம்பரியத்தையும், இசையையும் விரும்பினார்கள்; வேறு சிலரோ என்றென்றும் நரகத்தில் வதைக்கப்படுவோமோ என்ற பயத்தில் சர்ச்சுக்குச் சென்றார்கள்; ஆனால் பைபிள் இவ்வாறு போதிப்பதில்லை. காலம் செல்லச் செல்ல, பல மாற்றங்கள் ஏற்பட்டதால், மதத்தைப் பற்றிய பெரும்பாலான மக்களின் கண்ணோட்டமும் மாறியது.

பரிணாமக் கொள்கை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடவுளுடைய உதவியின்றி உயிர் தானாகவே தோன்றியதாக அநேகர் நம்ப ஆரம்பித்தார்கள். கடவுளே உயிரின் ஊற்றுமூலர் என்பதற்கு நம்பகமான ஆதாரங்களை அளிக்க அநேக மதங்கள் தவறின. (சங்கீதம் 36:9) அதுமட்டுமல்ல, மருத்துவம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதால், எந்தப் பிரச்சினையையும் அறிவியலால் தீர்த்துவிட முடியும் என்ற எண்ணம் மக்கள் மனதில் துளிர்விட்டது. மேலுமாக, சமூக அறிவியலாளர்களும் உளவியல் நிபுணர்களும் மதத் தலைவர்களைவிட மேம்பட்ட ஆலோசனை வழங்குகிறார்கள் என்றும் அநேகர் நினைக்க ஆரம்பித்தார்கள். போதாக்குறைக்கு, கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாக வாழ்வதே மிகவும் சிறந்தது என்பதற்கு மதங்களும் எடுத்துக்காட்டாய் திகழவில்லை.​—⁠யாக்கோபு 1:25.

மதத்தைப் பற்றி மக்களின் கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களைக் கண்ட பல மதங்கள் தங்கள் போதனைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள ஆரம்பித்தன. ஜனங்கள் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார் என்று போதிப்பதை நிறுத்திவிட்டன. அதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் நல்லது கெட்டதை தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்று போதித்தன. பொதுமக்களின் ஆதரவைப் பெற முயன்ற சில மதத் தலைவர்கள், ‘நீங்கள் எப்படி வாழ்ந்தாலும்சரி கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வார்’ என்று கற்பிக்க ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, பின்வருமாறு பைபிள் முன்னறிவித்ததே நம் நினைவிற்கு வருகிறது: ‘அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொள்ளும் காலம் வரும்.’​—⁠2 தீமோத்தேயு 4:3, 4.

இத்தகைய போதனைகள் ஜனங்களைக் கவருவதற்குப் பதிலாக அவர்களுக்கு வெறுப்பூட்டின. இயல்பாகவே அவர்கள் இவ்வாறு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்: ‘கடவுளுக்கு சிருஷ்டிக்க வல்லமை இருப்பதையும், சட்டங்கள் இயற்ற ஞானம் இருப்பதையும் மதத் தலைவர்களே சந்தேகித்தால் அந்த மதத்தால் எனக்கு என்ன நன்மை? நான் ஏன் கஷ்டப்பட்டு என் பிள்ளைகளுக்கு மதத்தைப் பற்றி சொல்லித்தர வேண்டும்?’ நல்லவர்களாக வாழ்ந்தால் போதுமென நினைத்தவர்கள் மதத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அதனால் சர்ச்சுகளைவிட்டு வெளியேறினார்கள், மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். காரணம் என்ன? பைபிள், நம்பகமான பதிலைக் கொடுக்கிறது.

மதத்தின் பெயரில் தவறான காரியங்கள்

சிலர், கிறிஸ்தவ மதத்தின் பெயரில் தவறான காரியங்களைச் செய்வார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் ஆரம்பகால கிறிஸ்தவர்களை எச்சரித்தார். ‘மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்’ என்று அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 20:29, 30) அவ்வாறு “மாறுபாடானவைகளை” போதித்தவர்களில் ஒருவர் ரோமன் கத்தோலிக்க இறையியல் வல்லுநரான அகஸ்டின் ஆவார். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டி பேசி ஆட்களை இணங்க வைக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அகஸ்டினோ, லூக்கா 14:23-⁠ல் “உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” என்று இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றிவிட்டார்; ஜனங்களை வற்புறுத்தி மதம் மாற்றுவது சரி என்றுதான் அந்த வசனம் சொல்வதாக அவர் தவறாகக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 28:23, 24) இவ்வாறு, மதத்தை உபயோகித்து ஜனங்களைத் தன் பிடியில் வைத்திருந்தார்.

என்றாலும், மதத்தின் துஷ்பிரயோகத்திற்கும் அதில் நடக்கும் ஊழலுக்கும் காரணமாயிருப்பவன் ஒரு கலகக்கார தூதன். அவன்தான் சாத்தான். முதல் நூற்றாண்டிலிருந்த மதத் தலைவர்களைத் தூண்டிவிட்டு கிறிஸ்தவ சபைகளைக் கெடுக்க அவன் முயன்றான். அவர்களைப் பற்றி பைபிள் கூறுவதாவது: “அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே.”​—⁠2 கொரிந்தியர் 11:13-15.

கிறிஸ்தவ போதனைகளையும், ஒழுக்கநெறிகளையும் பின்பற்றுவது போலவும், அறிவொளியூட்டுவது போலவும் வெளிவேஷம் போடுகிற மதத்தை சாத்தான் இன்றும் உபயோகிக்கிறான். இவ்வாறு, கடவுளுடைய தராதரங்களை விட்டுவிட்டு தனது தராதரங்களுக்கு ஏற்ப வாழ மக்களைத் தூண்டுகிறான். (லூக்கா 4:5-7) இன்றுள்ள அநேக மதத் தலைவர்கள் பகட்டான பட்டப்பெயர்களைச் சூட்டிக்கொள்வதையும் தங்கள் அங்கத்தினரிடமிருந்து பணத்தைக் கறந்துவிடுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். அரசாங்கங்களும்கூட மதத்தின் பெயரில் ஜனங்களைத் தூண்டிவிட்டு யுத்தங்களில் தங்கள் உயிர்களைப் பலிகொடுக்க வைத்திருக்கின்றன.

இதுமட்டுமல்ல, பெரும்பாலோர் நினைத்துக்கூட பார்க்காத விதங்களிலும் மதத்தை சாத்தான் உபயோகிக்கிறான். சில மத தீவிரவாதிகளை மட்டுமே சாத்தான் உபயோகிக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவன்,’ ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்’ என்று பைபிள் சொல்கிறது. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும்”கூட அது சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9; 1 யோவான் 5:19) மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மதத்தை உபயோகித்து ஜனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட மதத்தைப் பற்றி கடவுள் எப்படிக் கருதுகிறார்?

“எனக்கு என்னதுக்கு?”

கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் சிலவற்றின் செயல்களைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் என்றால், சர்வவல்லமையுள்ள கடவுளும் அதைக் கண்டு பெருமளவு வேதனைப்படுகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கடவுளோடு ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கிறிஸ்தவமண்டலம் சொல்லிக்கொள்கிறது. பூர்வ இஸ்ரவேலரும் அவ்வாறே கூறினார்கள். ஆனால், இரு தரப்பினருமே அந்த ஒப்பந்தத்தை மீறி நடந்திருக்கிறார்கள். ஆகவே, இஸ்ரவேலரை யெகோவா கண்டித்தது இன்று கிறிஸ்தவமண்டலத்திற்கும் பொருந்துகிறது. அவர் இவ்வாறு கூறினார்: ‘இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; . . . சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கம் . . . எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல.’ (எரேமியா 6:19, 20) மாய்மாலக்காரர்களின் வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய சடங்குகளும் ஜெபங்களும் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘உங்கள் பண்டிகைகளை என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்’ என்று இஸ்ரவேலரிடம் அவர் கூறினார்.​—⁠ஏசாயா 1:14, 15.

முன்பு பொய்க் கடவுட்களைக் கௌரவிப்பதற்காகக் கொண்டாடப்பட்ட பண்டிகைகளை இன்று கிறிஸ்தவ பண்டிகைகளாக சர்ச்சுகள் கொண்டாடுகின்றன. அவற்றில் யெகோவா பிரியப்படுவாரா? கிறிஸ்துவின் போதனைகளைக் கலப்படம் செய்கிற பாதிரிமாரின் ஜெபங்களைக் கேட்பாரா? தமது சட்டதிட்டங்களை புறக்கணிக்கிற எந்த மதத்தையும் அவர் ஏற்றுக்கொள்வாரா? பூர்வ இஸ்ரவேலரிடம் அவர்களுடைய பலிகள், “எனக்கு என்னதுக்கு?” என்று அவர் சொல்லி அவற்றை வெறுத்தது போலவே இன்றைய சர்ச்சுகளின் சடங்குகளையும் அவர் வெறுக்கிறார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

என்றாலும், நல்மனமுள்ள மக்கள் தம்மை உண்மையோடு வணங்கும்போது யெகோவா அதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். தாம் அளிக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றி தெரிவிக்கும் ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷப்படுகிறார். (மல்கியா 3:16, 17) அப்படியென்றால், நீங்கள் கடவுளை வணங்காமலேயே நல்லவராக இருக்க முடியுமா? அன்புள்ள தன் பெற்றோருக்காக எதையுமே செய்யாத ஒருவர் தன்னை நல்லவர் என்று சொல்லிக்கொள்வது நியாயமாக இருக்குமா? கடவுளுக்காக எதையுமே செய்யாத ஒருவர் நல்லவராக இருக்க முடியுமா? ஆகவே, உயிரின் ஊற்றுமூலராய் இருக்கிற உண்மையான கடவுளைப் பற்றி அறிவதில் நாம் ஆர்வம் காட்டுவது நியாயமானதே. உண்மை வழிபாடு கடவுளைக் கௌரவிப்பதோடு நமக்கும் நன்மை செய்கிறது. அது எப்படி என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

[அடிக்குறிப்பு]

a “அநேக நாடுகளில் மதம் என்ற அமைப்பு முழுமையாகச் சீர்குலைய ஆரம்பித்தது . . . 1960-களில்தான்.”​—⁠மேற்கத்திய ஐரோப்பாவில் கிறிஸ்தவமண்டலத்தின் வீழ்ச்சி, 1750-2000 (ஆங்கிலம்).

[பக்கம் 4-ன் படம்]

கடவுளே எல்லாவற்றையும் படைத்தார் என்பதற்கான அத்தாட்சியை சர்ச்சுகள் அளித்திருக்கின்றனவா?

[பக்கம் 4, 5-ன் படம்]

கடவுளுடைய பிரதிநிதி இந்தச் சூழ்நிலையில் இருக்க முடியுமா?

[பக்கம் 5-ன் படம்]

இப்படிப்பட்ட பண்டிகையை கடவுள் எவ்வாறு கருதுகிறார்?

[படத்திற்கான நன்றி]

AP Photo/Georgy Abdaladze

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்