உங்கள் அன்புக்குரியவர் யெகோவாவை விட்டு விலகுகையில்
மார்க், லவிஸ் தம்பதியர் யெகோவாவின் சாட்சிகள்.a இவர்கள், கிறிஸ்தவ பெற்றோருக்கு பைபிள் தரும் அறிவுரைப்படி அன்போடும் கரிசனையோடும்தான் தங்கள் பிள்ளைகளுக்கு வேதவசனங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். (நீதிமொழிகள் 22:6; 2 தீமோத்தேயு 3:15) ஆனால், வருத்தகரமான விஷயம் என்னவெனில் பிள்ளைகள் வளர்ந்து வாலிப வயதை எட்டியபோது அவர்களில் சிலர் யெகோவாவை சேவிப்பதை நிறுத்திவிட்டார்கள். “யெகோவாவை விட்டு விலகிச்சென்ற என் பிள்ளைகளை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். மனதுக்குள் நொறுங்கிப் போகாமல், நன்றாக இருப்பதுபோல் தினந்தினம் என்னால் எப்படி நடிக்க முடியும்? தங்களுடைய மகன்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்போது எனக்குத் தொண்டை அடைக்கிறது, என் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்” என்கிறார் லவிஸ்.
யெகோவாவையும் பைபிள் காட்டுகிற ஜீவ பாதையையும் விட்டு விலகுவதற்கு ஒரு நபர் தீர்மானிக்கும்போது, சத்தியத்திலுள்ள குடும்பத்தார் உண்மையிலேயே ரண வேதனையை அனுபவிக்கிறார்கள். “என் அக்காமீது உயிரையே வைத்திருக்கிறேன். அவர் மீண்டும் யெகோவாவிடம் வருவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்!” என்று ஐரின் சொல்கிறார். ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதற்காக தன் தம்பி யெகோவாவை விட்டு விலகிப் போய்விட்டதைக் குறித்து மாரியா இவ்வாறு சொல்கிறார்: “இந்த மன வேதனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, ஏனென்றால், இது தவிர, எல்லா விஷயத்திலுமே அவன் ரொம்ப நல்லவன். நாங்கள் குடும்பமாக ஒன்றுசேருகிற நிகழ்ச்சிகளில் அவன் இல்லாதது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.”
ஏன் தாங்கிக்கொள்ள முடிவதில்லை?
தன் பிள்ளையையோ அன்புக்குரிய ஓர் உறவினரையோ ஆன்மீக ரீதியில் பறிகொடுக்கும்போது, கிறிஸ்தவர்கள் ஏன் அளவுக்கடந்து வேதனைப்படுகிறார்கள்? ஏனெனில், யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பவர்களுக்குப் பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் நித்திய வாழ்க்கையை பைபிள் வாக்குறுதி அளிக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 37:29; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3-5) இத்தகைய மகிழ்ச்சி தரும் வாழ்க்கையை, தங்கள் மணத்துணையோடும், பிள்ளைகளோடும், பெற்றோரோடும், உடன்பிறப்புகளோடும், பேரன்பேத்திகளோடும் சேர்ந்து அனுபவிக்க அவர்கள் காத்திருக்கிறார்கள். எனவே, யெகோவாவை விட்டு விலகியிருக்கும் அன்புக்குரியவர்கள் அப்போது தங்களுடன் இருக்க மாட்டார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பது அவர்களுக்கு எந்தளவு வேதனையாக இருக்கும்! தற்போதைய வாழ்க்கையிலும்கூட, யெகோவாவின் சட்டங்களும் நியமங்களும் தங்களுடைய நன்மைக்கானவையே என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, அன்புக்குரியவர்கள் தீமையை அறுவடை செய்யும் விதத்தில் விதைப்பதை பார்க்கையில் அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.—ஏசாயா 48:17, 18; கலாத்தியர் 6:7, 8.
ஆன்மீக ரீதியில் இத்தகைய இழப்பை ஒருபோதும் சந்தித்திராத சிலருக்கு, இதன் பாதிப்பை புரிந்துகொள்ள முடியாதிருக்கலாம். கிட்டத்தட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இது பாதிக்கிறது. “கிறிஸ்தவ கூட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சிரித்துப் பேசி மகிழ்வதைக் காணும்போது வரவர எனக்கு அங்கு உட்காருவதற்கே முடிவதில்லை. சந்தோஷமாக எல்லாரும் ஒன்றுசேரும் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் என் அன்புக்குரியவர்கள் அங்கில்லாததால் வெறுமை என்னைப் பற்றிக்கொள்கிறது” என்கிறார் லவிஸ். தன்னுடைய மாற்றான் மகள் நான்கு வருடங்கள் யெகோவாவை விட்டு விலகியிருந்த சமயத்தை நினைவுபடுத்தி ஒரு கிறிஸ்தவ மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “சந்தோஷமான சமயங்கள்கூட பெரும்பாலும் மனவேதனையையே அளித்தன. என் மனைவிக்கு ஒரு பரிசு கொடுத்தாலோ வார இறுதியில் அவளை எங்காவது அழைத்துச் சென்றாலோ இதையெல்லாம் அனுபவிக்க தன் மகள் அருகில் இல்லையே என்று நினைத்து உடனடியாக அழ ஆரம்பித்துவிடுவாள்.”
இந்தக் கிறிஸ்தவர்கள் மட்டுக்குமீறி உணர்ச்சிவசப்படுகிறார்களா? இல்லவே இல்லை. சொல்லப்போனால், யெகோவாவின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டிருப்பதால், அவருடைய குணங்களை அவர்கள் ஓரளவுக்கு வெளிக்காட்டுகிறார்கள் என்று சொல்லலாம். (ஆதியாகமம் 1:26, 27) இது எதை அர்த்தப்படுத்துகிறது? தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் கலகம் செய்தபோது யெகோவா எப்படி உணர்ந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் விசனப்பட்டார், வேதனைப்பட்டார் என சங்கீதம் 78:38-41-லிருந்து தெரிந்துகொள்கிறோம். இருப்பினும் அவர் பொறுமையோடு அவர்களை எச்சரித்தார், சிட்சித்தார், அவர்கள் மனந்திருந்தி வந்தபோதெல்லாம் மன்னித்தார். ‘தம் கைகளின் கிரியைகளாகிய’ படைப்புகளிடம் யெகோவா தனிப்பட்ட பிரியம் வைத்திருக்கிறார், அவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் அவர் ஒதுக்கிவிடுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. (யோபு 14:15; யோனா 4:10, 11) அதேபோன்ற உண்மையான பிரியத்தை வெளிக்காட்டும் திறனுடன் மனிதர்களை அவர் படைத்திருக்கிறார்; முக்கியமாய், குடும்பத்தார் மத்தியிலுள்ள பாசப்பிணைப்பு பலமானது. எனவே, அன்புக்குரியவரை ஆன்மீக ரீதியில் பறிகொடுக்கையில் மனிதர்கள் துயரப்படுவதில் ஆச்சரியமேதும் இல்லை.
அன்புக்குரியவரை ஆன்மீக ரீதியில் பறிகொடுப்பது, மெய் வணக்கத்தார் சந்திக்கும் சோதனைகளிலேயே மிகக் கொடிய சோதனை என்பது உண்மைதான். (அப்போஸ்தலர் 14:22) தம்முடைய செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது சில குடும்பங்களில் அது பிரிவினையை ஏற்படுத்துமென இயேசு சொன்னார். (மத்தேயு 10:34-38) பைபிள் செய்தி உண்மையில் எந்தப் பிரிவினையையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, விசுவாசிகளாக இல்லாத, அதாவது சத்தியத்தில் இல்லாத குடும்பத்தார், கிறிஸ்தவ வாழ்க்கை முறையை நிராகரிப்பதும், உதறித்தள்ளுவதும், சொல்லப்போனால் எதிர்ப்பதுமே இந்தப் பிரிவினையை ஏற்படுத்துகிறது. எனினும், தமக்கு உண்மையாக இருப்பவர்கள் சோதனைகளை எதிர்ப்படுகையில் அவற்றை சமாளிக்க யெகோவா உதவுவதால் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். அன்புக்குரியவரை ஆன்மீக ரீதியில் பறிகொடுத்த துக்கத்தில் தற்போது நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அந்தத் துயரத்தைச் சமாளிக்கவும் ஓரளவு மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவதற்கும் எந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவலாம்?
இழப்பைச் சமாளித்தல்
‘உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு . . . தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.’ (யூதா 20, 21) யெகோவாவை விட்டு விலகியிருக்கும் குடும்பத்தாருக்கு இந்தச் சமயத்தில் எந்த விதத்திலும் உதவ முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருக்கலாம். எனினும், உங்களை நீங்களே பலப்படுத்திக்கொள்ளவும் சத்தியத்திலுள்ள மற்ற குடும்பத்தாரைப் பலப்படுத்தவும் முயற்சி செய்யலாம், அப்படிப் பலப்படுத்தவும் வேண்டும். வெரோனிக்காவின் மூன்று மகன்களில் இருவர் யெகோவாவிடமிருந்து விலகிச் சென்றார்கள். அதைக் குறித்து அவர் இவ்வாறு சொல்கிறார்: “நானும் என் கணவரும் ஆன்மீக ரீதியில் பலப்பட்டவர்களாய் நிலைத்திருந்தால், எங்கள் மகன்கள் மனந்திரும்பி வரும்போது அவர்களை வரவேற்க நாங்கள் தயார் நிலையில் இருப்போம் என அன்போடு எங்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டது. கெட்ட குமாரன் மனந்திரும்பி வந்தபோது அவனை வரவேற்கும் நிலையில் அவனுடைய அப்பா இல்லாதிருந்திருந்தால் அவன் என்ன ஆகியிருப்பான்?”
நீங்கள் எப்போதும் பலப்பட்டவர்களாய் இருப்பதற்கு, ஆன்மீக காரியங்களில் ஒன்றிப் போய்விடுங்கள். இது, பைபிளைக் கருத்தூன்றிப் படிப்பதற்கும், கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் ஓர் அட்டவணை போட்டு, அதைத் தவறாமல் பின்பற்றுவதை உட்படுத்துகிறது. உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சபையிலுள்ள மற்றவர்களுக்கு உதவ முன்வாருங்கள். இத்தகைய காரியங்களைச் செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் என்பது உண்மைதான். வெரோனிக்கா இவ்வாறு நினைவுபடுத்தி சொல்கிறார்: “அடிபட்ட விலங்கு பதுங்குவதுபோல ஆரம்பத்தில் யாரையும் பார்க்காமல், யாருடனும் பேசாமல் இருந்தேன். ஆனாலும், நாங்கள் ஆன்மீகக் காரியங்களில் தவறாமல் பங்குகொள்ள வேண்டுமென்பதில் என் கணவர் விடாப்பிடியாக இருந்தார். கூட்டங்களைத் தவறவிடாதபடி பார்த்துக்கொண்டார். ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டிய சமயம் வந்தபோது, அங்கு போவதற்கும், மற்றவர்களைப் பார்ப்பதற்கும் எனக்கு ரொம்பவே தைரியம் தேவைப்பட்டது. அந்த மாநாட்டு நிகழ்ச்சி எங்களை யெகோவாவிடம் நெருங்கி வரச் செய்தது. முக்கியமாக, சத்தியத்திலிருந்த ஒரு மகன் அந்த மாநாட்டினால் பலப்படுத்தப்பட்டான்.”
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மாரியா, வெளி ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவது தனக்கு மிகவும் உதவியதாய் சொல்கிறார், பைபிளைக் கற்றுக்கொள்ள தற்போது நான்கு பேருக்கு அவர் உதவி வருகிறார். அதைப் போலவே லாராவும் சொல்கிறார்: “நான் இன்னமும் தினம் தினம் அழுதுகொண்டுதான் இருக்கிறேன்; சில பெற்றோர்களால் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடிந்ததுபோல் என்னால் வளர்க்க முடியவில்லைதான். இருந்தாலும், இந்தக் கடைசி காலத்தில் குடும்பங்களுக்கு உதவ முடிந்த செய்தி, பைபிள் தரும் அருமையான செய்தி, என்னிடம் இருப்பதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.” கென், எல்லனார் தம்பதியரின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபோது சபையை விட்டு விலகிப் போய்விட்டார்கள்; அப்போது இத்தம்பதியர், ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படும் இடத்திற்குச் செல்வதற்கு ஏற்ப தங்கள் சூழ்நிலைகளைச் சரிசெய்துகொண்டு முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். இது, முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காரியங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் தங்களுடைய துக்கத்தில் மூழ்கிப் போய்விடாதிருக்கவும் அவர்களுக்கு உதவியது.
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். அன்பு “சகலத்தையும் நம்பும்.” (1 கொரிந்தியர் 13:7) மேலே குறிப்பிடப்பட்ட கென் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் பிள்ளைகள் சத்தியத்தைவிட்டு விலகியபோது அவர்கள் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் என் சகோதரி இறந்தபோது என் கண்ணோட்டம் மாறியது. என் பிள்ளைகள் உடல்ரீதியில் உயிரோடு இருப்பதற்கும் அவர்கள் தம்மிடம் திரும்பி வருவதற்கு யெகோவா வழியைத் திறந்து வைத்திருப்பதற்கும் நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.” சத்தியத்தை விட்டு விலகியவர்களில் பலர் கடைசியில் மனந்திரும்பி வந்திருப்பதாகவே அனுபவங்கள் காட்டுகின்றன.—லூக்கா 15:11-24.
உங்கள் மீதே பழிசுமத்திக்கொள்வதைத் தவிருங்கள். பெற்றோர்கள் முக்கியமாய் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கலாம்; சில பிரச்சினைகளைச் சரியான விதத்தில் தாங்கள் கையாளவில்லையென வருத்தப்படலாம். எனினும், எசேக்கியேல் 18:20-ல் காணப்படும் முக்கிய கருத்தின்படி, பாவியை யெகோவா தப்பவிடார்; அவனுடைய தவறான போக்கிற்கு அவனுடைய பெற்றோர் அல்ல, அவனே பொறுப்பேற்க வேண்டும். பிள்ளைகளைச் சரியான விதத்தில் வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக பல முறை நீதிமொழிகள் புத்தகம் குறிப்பிடுகிறது. என்றாலும், தங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ப நடக்கும்படி, அதைவிட நான்கு மடங்குக்கும் அதிகமான புத்திமதியை அது பிள்ளைகளுக்குக் கொடுப்பது ஆர்வத்துக்குரியது. ஆம், அபூரணர்களாக இருக்கும் தங்கள் பெற்றோர்கள், பைபிள் அடிப்படையில் தரும் பயிற்சிக்கு ஏற்ப நடப்பது பிள்ளைகளின் பொறுப்பாக இருக்கிறது. ஒருவேளை, நீங்கள் அந்தச் சமயத்தில் முடிந்தவரை சரியான விதத்தில் பிரச்சினைகளைச் சமாளித்திருக்கலாம். இருப்பினும், நீங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதாகவும், உண்மையிலேயே உங்கள் மீதுதான் தவறு இருப்பதாகவும் நினைக்கலாம்; அப்படி நினைத்தாலும்கூட, உங்கள் தவறுகளால்தான் உங்கள் அன்புக்குரியவர் சத்தியத்தை விட்டு விலகிவிட்டார் என்பது நிஜமாகாது. எப்படியானாலும், ‘ஒருவேளை அப்படிச் செய்திருந்தால், அல்லது ஒருவேளை இப்படிச் செய்திருந்தால்’ என யோசிப்பதில் எந்தப் பயனுமில்லை. உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவற்றைத் திரும்பவும் செய்யாதபடி உறுதியாய் இருங்கள், மன்னிப்புக் கேட்டு யெகோவாவிடம் ஜெபியுங்கள். (சங்கீதம் 103:8-14; ஏசாயா 55:7) பிறகு, முன்னிருக்கும் பாதையைப் பாருங்கள், கடந்து வந்த பாதையைப் பார்க்காதீர்கள்.
மற்றவர்களிடம் பொறுமையாய் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் அனுபவிக்கும் அதே வேதனையை சிலர் ஒருபோதும் அனுபவித்திராததால் உண்மையில் உங்களை எப்படி ஊக்குவிப்பது அல்லது உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என தெரியாதிருக்கலாம். அதோடு, எது ஊக்கத்தையும் ஆறுதலையும் தரும் என்பது நபருக்கு நபர் வேறுபடலாம். எனவே, ஒருவர் ஏதாவது சொல்ல அது உங்களைப் புண்படுத்திவிட்டால், கொலோசெயர் 3:13-ல் அப்போஸ்தலன் பவுல் தரும் பின்வரும் புத்திமதியைப் பின்பற்றுங்கள்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”
சிட்சை கொடுப்பதற்கான யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மரியாதை காட்டுங்கள். சபை தரும் சிட்சையை உங்கள் உறவினர் பெற்றிருந்தால், இது யெகோவாவின் ஏற்பாடுகளில் ஒன்று என்பதையும், தவறுசெய்தவர் உட்பட நம் எல்லாருடைய நலனையும் மனதில் வைத்தே அது கொடுக்கப்படுகிறது என்பதையும் நினைவில் வையுங்கள். (எபிரெயர் 12:11) எனவே, அதில் உட்பட்டிருந்த மூப்பர்கள் மீதோ அவர்கள் எடுத்த தீர்மானங்களின் மீதோ குற்றம் கண்டுபிடிப்பதைத் தவிருங்கள். யெகோவாவின் வழிகளில் காரியங்களைச் செய்வது சிறந்த பலன்களைத் தரும் என்பதையும், அவருடைய ஏற்பாடுகளை எதிர்ப்பதோ, இன்னும் அதிக துயரத்தையே தரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையான பிறகு மோசேதான் அவர்களுடைய நியாயாதிபதியாக இருந்து வந்தார். (யாத்திராகமம் 18:13-16) இருதரப்பினருக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும்போது, அது ஒருவருக்குச் சாதகமாகவும் மற்றொருவருக்குப் பாதகமாகவும் இருக்குமென்பதால், மோசேயின் தீர்ப்பில் சிலர் மனமுடைந்துபோனது ஏன் என்பதை எண்ணிப் பார்ப்பது சிரமமல்ல. மோசேயின் தீர்ப்பில் குற்றம் கண்டுபிடித்தவர்கள், சில சந்தர்ப்பங்களில் அவருடைய தலைமை வகிப்புக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். இருப்பினும், தம்முடைய ஜனங்களை வழிநடத்துவதற்கு மோசேயையே யெகோவா பயன்படுத்தி வந்தார்; அவர் மோசேயை அல்ல, ஆனால் கலகக்காரர்களையும் அவர்களை ஆதரித்த அவர்களுடைய குடும்பத்தாரையுமே தண்டித்தார். (எண்ணாகமம் 16:31-35) இன்று தேவராஜ்ய முறைப்படி அதிகாரம் பெற்றிருப்பவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மதிப்பையும் ஒத்துழைப்பையும் கொடுக்க உறுதியாய் இருப்பதற்கு இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
இப்படி ஒருசமயம் தன் மகளுக்குச் சபையில் சிட்சை கொடுக்கப்பட்டபோது சமநிலையைக் காத்துக்கொள்வது தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை டலோரஸ் நினைவுபடுத்தி சொல்கிறார். “யெகோவாவின் ஏற்பாடுகளில் காணப்படும் நியாயத்தன்மையைப் பற்றிய கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தது எனக்கு உதவியது. சகித்திருக்கவும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்யவும் உதவுகிற குறிப்புகளைப் பேச்சுகளில் கேட்கும்போதோ, பத்திரிகைகளில் வாசிக்கும்போதோ அவற்றை ஒரு தனி புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டேன்” என சொல்கிறார். இது சமாளிப்பதற்கு உதவும் மற்றொரு முக்கியமான வழியைக் காட்டுகிறது.
உங்கள் மனதிலுள்ளதைக் கொட்டிவிடுங்கள். உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் ஓரிருவரிடம் மனம்திறந்து பேசுவது உங்களுக்கு உதவியாக இருக்கலாம். இதற்கு, எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க உங்களுக்கு உதவுகிற நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெபத்தில் யெகோவாவிடம் ‘உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுவது,’ உண்மையிலேயே மிகவும் உதவியாக இருக்கும்.b (சங்கீதம் 62:7, 8) ஏன்? ஏனெனில், நீங்கள் எந்தளவுக்கு வருத்தப்படுகிறீர்கள் என்பதை அவர் முழுமையாகப் புரிந்துகொள்கிறார். உதாரணத்திற்கு, இதுபோன்ற மனவேதனையை அனுபவிப்பது நியாயமற்றதென நீங்கள் நினைக்கலாம். மொத்தத்தில், நீங்கள் யெகோவாவை விட்டு விலகவில்லையே. இருப்பினும், உங்கள் உணர்ச்சிகளை யெகோவாவிடம் ஜெபத்தில் தெரிவியுங்கள், அந்தச் சூழ்நிலையைக் குறித்து அந்தளவுக்கு வருத்தப்படாதிருக்கும் மனநிலையைத் தந்து உதவும்படி அவரிடம் கேளுங்கள்.—சங்கீதம் 37:5.
கொஞ்ச நாட்கள் ஆகஆக, உங்களுடைய உணர்ச்சிகளை நீங்களே சமாளித்துக்கொள்ள முடியலாம். இதற்கிடையில், உங்கள் பரலோகத் தகப்பனைப் பிரியப்படுத்த எடுக்கும் முயற்சிகளைக் கைவிட்டுவிடாதீர்கள், அவற்றால் பயனேதும் இல்லை என்ற முடிவுக்கு ஒருபோதும் வராதீர்கள். (கலாத்தியர் 6:9) யெகோவாவை விட்டு நாம் விலகினாலும்கூட இன்னமும் நமக்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள். மறுபட்சத்தில், யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருக்கும்போது, நாம் சந்திக்கும் சோதனைகளைச் சமாளிக்க அவருடைய உதவி நமக்குக் கிடைக்கிறது. எனவே, உங்களுடைய சூழ்நிலையை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார், ஏற்ற சமயத்தில் தேவையான பலத்தைத் தருவார் என்பதில் உறுதியாய் இருங்கள்.—2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13; எபிரெயர் 4:16.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினருக்காக ஜெபிப்பது பற்றி அறிந்துகொள்ள, 2001, டிசம்பர் 1, காவற்கோபுர இதழில் பக்கங்கள் 30-1-ஐக் காண்க.
[பக்கம் 19-ன் பெட்டி]
சமாளிப்பதற்கு வழி
◆ ‘உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு . . . தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.’—யூதா 20, 21.
◆ நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். —1 கொரிந்தியர் 13:7.
◆ உங்கள் மீதே பழிசுமத்திக்கொள்வதைத் தவிருங்கள்.—எசேக்கியேல் 18:20.
◆ மற்றவர்களிடம் பொறுமையாய் நடந்துகொள்ளுங்கள்.—கொலோசெயர் 3:13.
◆ சிட்சை கொடுப்பதற்கான யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மரியாதை காட்டுங்கள். —எபிரெயர் 12:11.
◆ உங்கள் மனதிலுள்ளதைக் கொட்டிவிடுங்கள்.—சங்கீதம் 62:7, 8.
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
நீங்கள் யெகோவாவை விட்டு விலகியிருக்கிறீர்களா?
விலகியிருக்கிறீர்கள் என்றால் அது என்ன காரணத்திற்காக இருந்தாலும்சரி, யெகோவாவுடன் உள்ள உங்கள் பந்தமும் உங்கள் எதிர்கால வாழ்க்கையும் ஆபத்தில் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வர நினைக்கலாம். இதற்காக மும்முரமாய் இப்போது முயற்சி செய்து வருகிறீர்களா? அல்லது ‘நேரம் வரட்டும்’ என்று அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அர்மகெதோன் யுத்தத்திற்கான புயல் மேகங்கள் வேகமாய் திரண்டு வருகின்றன. மேலும், இந்த உலகில் வாழ்க்கை குறுகியது, நிலையற்றது. நாளை நீங்கள் உயிரோடிருப்பீர்களா என்பதே நிச்சயமில்லை. (சங்கீதம் 102:3; யாக்கோபு 4:13, 14) உயிரைக் குடிக்கும் வியாதி தனக்கு வந்திருப்பதை அறிந்த ஒரு நபர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்யும் சமயத்தில் இந்த வியாதி எனக்கு வந்தது, வெட்கி வேதனைப்படும்படியான எந்த இரகசியமும் என்னிடம் இல்லை. இப்போது இதுதான் எனக்கு ஆறுதலான உணர்வைத் தருகிறது.” ஆனால், “ஒருநாள் நான் யெகோவாவிடம் திரும்பி வருவேன்!” என்ற நினைப்போடு அவர் இருந்த சமயத்தில் ஒருவேளை இந்த வியாதி அவருக்கு வந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் யெகோவாவை விட்டு விலகியிருக்கிறீர்கள் என்றால் திரும்பி வருவதற்கு இதுவே ஏற்ற சமயம்.
[பக்கம் 18-ன் படங்கள்]
ஆன்மீக காரியங்களில் மும்முரமாய் ஈடுபடுவது, முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காரியங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும்