‘உங்கள் விண்ணப்பங்களைத் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’
“எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.”—பிலிப்பியர் 4:6.
1. யாரிடம் பேசுவதற்கான அரிய வாய்ப்பு நமக்கு இருக்கிறது, இது ஏன் அற்புதமானது?
உங்கள் நாட்டு ஆட்சியாளரைச் சந்தித்துப் பேச நீங்கள் அனுமதி கேட்டால் உங்களுக்கு என்ன பதில் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? ஒருவேளை அவரது அலுவலக ஊழியர்கள் கண்ணியமாக உங்களிடம் பேசலாம். ஆனால் அந்த ஆட்சியாளரிடம் நேரடியாகப் பேச வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். என்றாலும், எல்லாரையும்விட மிகப் பெரிய ஆட்சியாளரும் இப்பிரபஞ்சத்தின் பேரரசருமான யெகோவா தேவன் மிகவும் வித்தியாசப்பட்டவர். நாம் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவரிடம் பேச முடியும். ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செய்யப்படும் ஜெபங்களை அவர் எப்போதும் கேட்கிறார். (நீதிமொழிகள் 15:29) இது உண்மையிலேயே அற்புதமானது! ஆம், பொருத்தமாகவே அவர், ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என அழைக்கப்படுகிறார்; அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அவரிடம் தவறாமல் ஜெபிப்பதற்கு நாம் தூண்டப்படுகிறோம், அல்லவா?—சங்கீதம் 65:2.
2. கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதமாக ஜெபம் செய்வதற்கு என்ன தேவைப்படுகிறது?
2 என்றாலும், ‘எப்படிப்பட்ட ஜெபங்களை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?’ என சிலர் கேட்கலாம். ஜெபங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாய் இருப்பதற்குத் தேவைப்படுகிற ஓர் அம்சத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) ஆம், முந்தின கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, கடவுளை அணுகுவதற்கு முக்கியமாய் விசுவாசம் தேவைப்படுகிறது. ஆகவே, கடவுளை அணுகுவோர் விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும்; நற்செயல்களைச் செய்ய வேண்டும். அதோடு நேர்மை மனதோடும் நல் இருதயத்தோடும் ஜெபிக்க வேண்டும். அப்போது அவர் அதை மனமார ஏற்றுக்கொள்வார்.
3. (அ) முற்கால உண்மை ஊழியர்களைப் போல ஜெபத்தில் எத்தகைய வார்த்தைகளை நாம் பயன்படுத்தலாம்? (ஆ) என்னென்ன விதமான ஜெபங்களை நாம் ஏறெடுக்கலாம்?
3 அப்போஸ்தலன் பவுல் தன் காலத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே [அதாவது, நன்றி தெரிவிப்பதோடு] கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6, 7) தங்களுடைய கவலைகளைக் குறித்து கடவுளிடம் ஜெபித்தவர்களைப் பற்றிய அநேக உதாரணங்கள் பைபிளில் உள்ளன. அன்னாள், எலியா, எசேக்கியா, தானியேல் ஆகியோர் அவர்களில் சிலர். (1 சாமுவேல் 2:1-10; 1 இராஜாக்கள் 18:36, 37; 2 இராஜாக்கள் 19:15-19; தானியேல் 9:3-21) அவர்களுடைய உதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டும். பல்வேறு விதமான ஜெபங்களை நாம் ஏறெடுக்கலாம் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுவதையும்கூட கவனியுங்கள். நன்றி தெரிவிப்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டார்; இது, கடவுள் நமக்குச் செய்துள்ளவற்றிற்காக போற்றுதல் தெரிவிக்கும் ஜெபமாகும். இத்தகைய ஜெபத்தை அவரைப் புகழ்ந்து துதிக்கையில் செய்யலாம். வேண்டுதல் என்பது தாழ்மையோடு ஊக்கமாய் கெஞ்சிக் கேட்பதைக் குறிக்கிறது. விண்ணப்பங்கள் என்பது குறிப்பிட்ட ஒன்றிற்காக மன்றாடுவதை அர்த்தப்படுத்துகிறது. (லூக்கா 11:2, 3) இப்படி எந்த விதத்தில் அணுகினாலும் நம் பரலோகத் தகப்பன் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்.
4. நம் தேவைகளை யெகோவா அறிந்திருக்கிற போதிலும், நம்முடைய விண்ணப்பங்களை நாம் ஏன் அவரிடம் தெரிவிக்கிறோம்?
4 ‘நம்முடைய எல்லாத் தேவைகளையும் யெகோவா ஏற்கெனவே அறிந்திருக்கிறார், அல்லவா?’ என சிலர் கேட்கலாம். ஆம், அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:8, 32) அப்படியிருந்தும், நம்முடைய விண்ணப்பங்களை அவருக்குத் தெரிவிக்கும்படி அவர் ஏன் எதிர்பார்க்கிறார்? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: கடை முதலாளி ஒருவர் தன்னுடைய வாடிக்கையாளர்கள் சிலருக்குப் பரிசு வழங்குகிறார். ஆனால், இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் முதலாளியிடம் போய் கேட்க வேண்டும். அப்படிப் போக மனமில்லாதவர்கள், பரிசை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அவ்வாறே, நம்முடைய விண்ணப்பங்களை ஜெபத்தில் தெரிவிக்காவிட்டால், யெகோவா தருகிறவற்றை நாம் மதிக்கவில்லை என்றுதான் அர்த்தமாகும். இயேசு இவ்வாறு சொன்னார்: “கேளுங்கள், அப்பொழுது . . . பெற்றுக்கொள்வீர்கள்.” (யோவான் 16:24) இவ்விதமாக, கடவுள் மீதுள்ள நம்பிக்கையை நாம் காட்டுகிறோம்.
கடவுளை எப்படி அணுக வேண்டும்?
5. நாம் ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது அவசியம்?
5 எப்படி ஜெபிக்க வேண்டுமென்பதற்கு எக்கச்சக்கமான கெடுபிடி சட்டங்களை யெகோவா போடுவதில்லை. இருந்தாலும், தகுந்த விதத்தில் கடவுளை அணுகுவது எப்படி என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்; இது பைபிளில் விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு இவ்வாறு கற்றுக்கொடுத்தார்: ‘நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.’ (யோவான் 16:23) ஆகவே, நாம் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது அவசியம். அதாவது, இயேசு மூலமாகவே மனிதகுலத்திற்குக் கடவுள் ஆசீர்வாதங்களை வழங்கப் போகிறார் என்று அறிந்து ஜெபிப்பது அவசியம்.
6. நாம் எந்த நிலையில் இருந்துகொண்டு ஜெபிக்க வேண்டும்?
6 நாம் எந்த நிலையில் இருந்துகொண்டு ஜெபிக்க வேண்டும்? நாம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்துகொண்டு ஜெபித்தால்தான் அதைக் கடவுள் கேட்பாரென பைபிள் சொல்வதில்லை. (1 இராஜாக்கள் 8:22; நெகேமியா 8:6; மாற்கு 11:25; லூக்கா 22:41) ஆனால், நேர்மை மனதோடும் நல் இருதயத்தோடும் கடவுளிடம் ஜெபிப்பதுதான் முக்கியம்.—யோவேல் 2:12, 13.
7. (அ) “ஆமென்” என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) ஜெபத்தில் இது எப்படிப் பொருத்தமாகவே பயன்படுத்தப்படுகிறது?
7 ஜெபத்தில் “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைப் பற்றி என்ன சொல்லலாம்? இது, ஜெபத்தின் முடிவில் பயன்படுத்தப்படுகிற பொருத்தமான வார்த்தை என பைபிள் காட்டுகிறது; முக்கியமாக இது பொது ஜெபங்களில் பயன்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 72:19; 89:52) ஆமென் என்ற எபிரெய வார்த்தையின் அடிப்படை அர்த்தம் “நிச்சயமாகவே” என்பதாகும். ஜெபத்தின் முடிவில் “ஆமென்” என்று சொல்வதன் முக்கியத்துவத்தைக் குறித்து மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா இவ்வாறு விளக்குகிறது: “[ஜெபத்தில்] சொன்னவற்றை உறுதிப்படுத்துவதற்கும் அவை நிறைவேறும்படி வேண்டிக்கொள்வதற்குமே” அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ஜெபம் செய்கிறவர் ஜெபத்தின் முடிவில் உள்ளப்பூர்வமாக “ஆமென்” என்று சொல்வதன் மூலம், தான் விண்ணப்பித்த விஷயங்களிடம் தனக்கிருக்கும் உள்ளார்ந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார். ஒரு கிறிஸ்தவர் சபையில் ஜெபிக்கும்போது முடிவில் “ஆமென்” என்று சொல்வதைக் கேட்கையில், மற்றவர்களும்கூட தங்களுடைய இருதயத்தில் அல்லது சத்தமாக அந்த வார்த்தையைச் சொல்லலாம். இவ்வாறு சொல்வது ஜெபத்தில் சொன்னவற்றை தாங்களும் இருதயப்பூர்வமாக ஆமோதிப்பதைக் காட்டுகிறது.—1 கொரிந்தியர் 14:16.
8. சில சமயங்களில் நம்முடைய ஜெபங்கள் எவ்வாறு யாக்கோபு அல்லது ஆபிரகாமுடையதைப் போல இருக்கலாம், இது நம்மைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?
8 சில சமயங்களில், நாம் ஜெபம் செய்கிற விஷயங்களின் பேரில் நமக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்த கடவுள் நம்மை அனுமதிக்கலாம். பூர்வத்தில் வாழ்ந்த யாக்கோபுவைப் போல் நாமிருப்பது அவசியமாயிருக்கலாம்; ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக ஓர் இரவு முழுக்க தேவதூதனோடு அவர் போராடினார். (ஆதியாகமம் 32:24-26) அல்லது சில சமயங்களில் ஆபிரகாமைப் போல் நாமிருப்பது அவசியமாயிருக்கலாம்; அவர் லோத்திற்காகவும் சோதோமில் நீதிமான்கள் யாராவது இருந்திருந்தால் அவர்களுக்காகவும் திரும்பத் திரும்ப யெகோவாவிடம் விண்ணப்பித்தார். (ஆதியாகமம் 18:22-33) அவ்வாறே, நாம் முக்கியமாய் கருதும் விஷயங்களைக் குறித்து யெகோவாவிடம் மன்றாடலாம்; அவருடைய நீதி, அன்புள்ள தயவு, இரக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
எவற்றிற்காக நாம் ஜெபிக்கலாம்?
9. நம்முடைய ஜெபங்களில் எவை முக்கிய இடம் பெற வேண்டும்?
9 ‘எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை . . . தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ என பவுல் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். (பிலிப்பியர் 4:6) ஆகவே, நம்முடைய சொந்த ஜெபங்களில், நம் வாழ்க்கையின் தேவைகள் எதைக் குறித்து வேண்டுமானாலும் கேட்கலாம். என்றாலும், யெகோவாவைக் குறித்த விஷயங்கள் நம்முடைய ஜெபத்தில் முதலிடம் பெற வேண்டும். இதில் தானியேல் நமக்குச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். தங்கள் பாவங்களின் காரணமாக இஸ்ரவேலர் தண்டனை அனுபவிக்கையில், இரக்கம் காட்டும்படி யெகோவாவிடம் அவர் இவ்வாறு மன்றாடினார்: “என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்.” (தானியேல் 9:15-19) இதுபோலவே, யெகோவாவுடைய பெயர் பரிசுத்தப்படுவதும் அவருடைய சித்தம் நிறைவேறுவதும் நம்முடைய ஜெபங்களில் முக்கிய இடம் பெறுகின்றனவா?
10. சொந்த தேவைகளுக்காக ஜெபம் செய்வது பொருத்தமானது என்பது நமக்கு எப்படித் தெரியும்?
10 இருந்தாலும், நம்முடைய சொந்த தேவைகளுக்காக ஜெபம் செய்வதும் பொருத்தமானதே. உதாரணமாக, சங்கீதக்காரனைப் போல, கடவுளைப் பற்றிய ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறனுக்காக நாம் ஜெபிக்கலாம். அவர் இவ்வாறு ஜெபித்தார்: ‘எனக்கு உணர்வை [அதாவது, புரிந்துகொள்ளும் திறனை] தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.’ (சங்கீதம் 119:33, 34; கொலோசெயர் 1:9, 10) இயேசு, ‘தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல் செய்தார்.’ (எபிரெயர் 5:7) இவ்வாறு செய்ததன் மூலம், ஆபத்தோ சோதனைகளோ வருகையில் பலத்திற்காக வேண்டிக்கொள்வது எவ்வளவு பொருத்தமானது என்பதை அவர் செயலில் காட்டினார். இயேசு தம் சீஷர்களுக்கு மாதிரி ஜெபத்தை சொல்லிக்கொடுத்தபோது, தவறுகளுக்கு மன்னிப்பைப் பெறுவது, அன்றாட ஆகாரத்தைப் பெறுவது போன்ற சொந்த தேவைகளையும் அதில் குறிப்பிட்டார்.
11. சோதனைகளில் வீழ்ந்துவிடாதிருப்பதற்கு ஜெபம் நமக்கு எப்படி உதவலாம்?
11 மாதிரி ஜெபத்தில் பின்வரும் வேண்டுகோளையும் இயேசு குறிப்பிட்டார்: “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.” (மத்தேயு 6:9-13) பிற்பாடு, அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.” (மத்தேயு 26:41) நாம் சோதனைகளைச் சந்திக்கையில் ஜெபம் செய்வது அத்தியாவசியம். வேலை செய்யுமிடத்திலோ பள்ளியிலோ பைபிள் நியமங்களை மீறும்படியான சோதனைகளை எதிர்ப்படலாம். யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்கள், கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்லாத காரியங்களில் ஈடுபட நம்மை அழைக்கலாம். ஒழுக்க நியமங்களை மீறுகிற ஏதாவது காரியத்தைச் செய்யும்படி அவர்கள் நம்மிடம் சொல்லலாம். அப்படிப்பட்ட சமயங்களில், இயேசுவின் ஆலோசனைப்படி சோதனையில் வீழ்ந்துவிடாதிருப்பதற்கு கடவுளிடம் உதவிகேட்டு நாம் ஜெபம் செய்வது அவசியம். சோதனையைச் சந்திக்கும் முன்னும், அதைச் சந்திக்கும்போதும் இவ்வாறு ஜெபம் செய்வது அவசியம்.
12. கவலைக்குக் காரணமான எவை ஜெபம் செய்யும்படி நம்மை உந்துவிக்கின்றன, யெகோவாவிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கலாம்?
12 இன்று கடவுளுடைய ஊழியர்கள் வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்களையும் கவலைகளையும் எதிர்ப்படுகிறார்கள். வியாதியும், மன உளைச்சலும் அநேகருடைய கவலைக்கு முக்கிய காரணங்களாய் இருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் நடக்கிற வன்முறைகள் நம் வாழ்க்கையைப் பாரமாக்குகின்றன. பொருளாதார நெருக்கடிகளும் அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாமல் நம்மை நெருக்குகின்றன. யெகோவாவுடைய ஊழியர்கள் இந்த விஷயங்களையெல்லாம் ஜெபத்தில் அவரிடம் தெரிவிக்கையில், அவற்றை அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! சங்கீதம் 102:16 யெகோவாவைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: “திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.”
13. (அ) ஜெபிப்பதற்குப் பொருத்தமான சில சொந்த விஷயங்கள் யாவை? (ஆ) அப்படிப்பட்ட ஒரு ஜெபத்திற்கு உதாரணம் கொடுங்கள்.
13 சொல்லப்போனால், யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையையோ அவரோடுள்ள நம் பந்தத்தையோ பாதிக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் ஜெபிப்பது பொருத்தமானது. (1 யோவான் 5:14) திருமணம், வேலை அல்லது ஊழியத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் பேரில் நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தால், உதவிகேட்டு கடவுளைத் தயங்காமல் அணுகுங்கள். உதாரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓர் இளம் பெண், முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்க விரும்பினாள். ஆனால், தன்னுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள அவளுக்கு ஒரு வேலை இல்லாதிருந்தது. அவள் இவ்வாறு சொல்கிறாள்: “ஒருநாள் சனிக்கிழமை பயனியர் ஊழியம் செய்ய விரும்புவதை முக்கியமாய் குறிப்பிட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். அன்றே நான் ஊழியத்திற்குச் சென்றிருந்தபோது, ஒரு டீனேஜ் பெண்ணுக்கு புத்தகம் ஒன்றை அளித்தேன். கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, திடீரென அந்தப் பெண் என்னிடம், ‘திங்கட்கிழமை காலையில் முதல் காரியமாக நீங்கள் என்னுடைய ஸ்கூலுக்கு வாருங்கள்’ என்று சொன்னாள். ‘ஏன்?’ என்று கேட்டேன். ஸ்கூலில் வேலைக்கு ஓர் ஆள் அவசரமாக தேவைப்படுவதாகச் சொன்னாள். நான் அங்கு போனேன், உடனடியாக வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். இவை எல்லாமே மளமளவென நடந்துவிட்டதென சொல்லலாம்.” உலகெங்குமுள்ள எண்ணற்ற யெகோவாவின் சாட்சிகளுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. ஆகவே, உங்களுடைய இருதயப்பூர்வமான விண்ணப்பங்களைக் கடவுளிடம் தெரிவிக்கத் தயங்காதீர்கள்!
நாம் பாவம் செய்தால்
14, 15. (அ) ஒருவர் பாவம் செய்திருந்தாலும்கூட ஜெபம் செய்வதை ஏன் நிறுத்தக்கூடாது? (ஆ) தனிப்பட்ட விதமாக ஜெபம் செய்வது தவிர, வேறெதுவும்கூட பாவத்திலிருந்து மீளுவதற்கு உதவும்?
14 பாவம் செய்த ஒருவருக்கு ஜெபம் எப்படி உதவும்? பாவம் செய்த ஒருவர் தன் குற்றத்தை எண்ணி, கூனிக்குறுகுவதால் ஜெபம் செய்வதை நிறுத்திவிடுகிறார். ஆனால், அப்படிச் செய்வது சரியல்ல. இதை இப்படி விளக்கலாம்: விமானிகள் திசை மாறிப் போனால் அவர்கள் விமானப் போக்குவரத்து மையத்துடன் தொடர்புகொள்ளலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், திசை மாறிப் போன ஒரு விமானி தன் தவறை எண்ணி, கூனிக்குறுகிப்போய் தொடர்புகொள்ளத் தயங்கினால் என்னவாகும்? அது விபத்தில்தான் போய் முடியும்! அதுபோலவே, பாவம் செய்தவர் அவமானம் காரணமாகக் கடவுளிடம் ஜெபம் செய்யாமல் போனால் அவரது நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். அவமானம் காரணமாக யெகோவாவிடம் பேசுவதை ஒருவர் நிறுத்திவிடக்கூடாது. சொல்லப்போனால், மோசமான தவறு செய்தவர்களைத் தம்மிடம் ஜெபம் செய்யும்படியே கடவுள் அழைக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசி தன்னுடைய காலத்திலிருந்த ஜனங்கள் பாவம் செய்தபோது யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஏனெனில், அவர் “மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்,” அதாவது, பெருமளவில் மன்னிக்கிறார் என ஏசாயா சொன்னார். (ஏசாயா 55:6, 7) அப்படியானால், ‘யெகோவாவின் முகத்தை சாந்தப்படுத்துவதற்கு’ முதலாவதாக, ஒருவர் மனத்தாழ்மையைக் காட்ட வேண்டும். பாவத்தை விட்டுவிலகி உள்ளப்பூர்வமாக மனந்திரும்ப வேண்டும்.—சங்கீதம் 119:58, NW; தானியேல் 9:13.
15 பாவம் செய்தவர்கள், மற்றொரு காரணத்திற்காகவும் ஜெபம் செய்வது முக்கியம். ஆன்மீக உதவி தேவைப்படுகிற ஒருவரைக் குறித்து சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் . . . அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். . . . கர்த்தர் அவனை எழுப்புவார்.” (யாக்கோபு 5:14, 15) ஆம், தனிப்பட்ட விதமாக ஒருவர் தன் பாவத்தை ஜெபத்தில் யெகோவாவிடம் தெரிவிக்க வேண்டும், அதோடு, தனக்காக ஜெபிக்கும்படி மூப்பர்களிடமும் அவர் கேட்கலாம். இப்படிச் செய்வது, கடவுளோடு மீண்டும் பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள அவருக்கு உதவும்.
ஜெபங்களுக்குப் பதில்கள்
16, 17. (அ) ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் அளிக்கிறார்? (ஆ) ஜெபமும் பிரசங்க வேலையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது என்பதை எந்த அனுபவங்கள் விளக்குகின்றன?
16 ஜெபங்களுக்கு எவ்வாறு பதில் கிடைக்கிறது? சில ஜெபங்களுக்கு உடனடியாகவும் வெளிப்படையாகவும் பதில் கிடைக்கிறது. (2 இராஜாக்கள் 20:1-6) இன்னும் சில ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க தாமதமாகலாம், இதைப் புரிந்துகொள்வது கடினமாகவும் இருக்கலாம். ஒரு விதவையைப் பற்றி இயேசு கூறிய உவமையில் காட்டப்பட்டுள்ளபடி, திரும்பத் திரும்ப ஜெபிக்க வேண்டியிருக்கலாம்; அந்த விதவை அடிக்கடி நியாயாதிபதியிடம் வந்து தன் பிரச்சினையைச் சொன்னாள். (லூக்கா 18:1-8) என்றாலும், கடவுளுடைய சித்தத்திற்கு இசைய நாம் ஜெபிக்கும்போது, “என்னைத் தொந்தரவு செய்யாதே” என யெகோவா ஒருபோதும் சொல்ல மாட்டார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—லூக்கா 11:5-9.
17 யெகோவாவின் மக்கள் தங்களுடைய பல ஜெபங்களுக்குப் பதில் கிடைத்திருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். இப்படிப் பதில் கிடைத்திருப்பதை வெளி ஊழியத்தில் நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். உதாரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ சகோதரிகள் இருவர் தொலைதூரப் பகுதி ஒன்றில் பைபிள் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு பெண்ணுக்குத் துண்டுப்பிரதியைக் கொடுத்தபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவள் இவ்வாறு சொன்னாள்: “பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுப்பதற்கு யாரையாவது அனுப்ப வேண்டுமென்று நேற்று ராத்திரிதான் கடவுளிடம் ஜெபம் செய்தேன். இது என்னுடைய ஜெபத்திற்குக் கிடைத்த பதில் என்றே சொல்ல வேண்டும்.” சீக்கிரத்திலேயே, ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு அவள் வர ஆரம்பித்தாள். தென்கிழக்கு ஆசியாவின் மற்றொரு பகுதியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ சகோதரர், பலத்த பாதுகாப்புள்ள ஓர் அபார்ட்மென்டில் ஊழியம் செய்ய பயப்பட்டார். என்றாலும், அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு, தைரியமாக அங்கு சென்றார். ஒரு வீட்டின் கதவைத் தட்டினார், ஓர் இளம் பெண் வந்தாள். அவர் பைபிள் செய்தியைச் சொன்னதும், அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்க ரொம்ப காலமாகவே விரும்புவதாகவும், அதற்காக ஜெபம் செய்துவந்ததாகவும் அவள் சொன்னாள். அந்தச் சகோதரர், அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையோடு கூட்டுறவு கொள்ள அவளுக்கு அன்போடு உதவினார்.
18. (அ) நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஜெபம் செய்யும்போது நாம் எதைக் குறித்து உறுதியோடிருக்கலாம்?
18 உண்மையிலேயே ஜெபம் ஓர் அருமையான ஏற்பாடு. ஜெபத்தைக் கேட்பதற்கும் அதற்குப் பதில் அளிப்பதற்கும் யெகோவா தயாராய் இருக்கிறார். (ஏசாயா 30:18, 19) என்றாலும், நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா எப்படி பதில் அளிக்கிறார் என்பதை நாம் கவனிப்பது அவசியம். அவர் பதில் அளிப்பது எப்போதுமே நாம் எதிர்பார்க்கும் விதமாக இருக்காது. என்றாலும், அவருடைய வழிநடத்துதலை நாம் உணரும்போது, அவருக்கு நன்றியையும் துதியையும் செலுத்த நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (1 தெசலோனிக்கேயர் 5:18) அதுமட்டுமல்ல, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையை எப்போதும் நினைவில் வையுங்கள்: “எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” ஆம், கடவுளிடம் பேசுவதற்குக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிச் செய்கையில், தங்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தவர்கள் பெற்ற அனுபவத்தை நீங்களும் தொடர்ந்து பெறுவீர்கள். அவர்களைக் குறித்து பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் . . . காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
பதில் அளிக்க முடியுமா?
• நாம் என்னென்ன விதமான ஜெபங்களை ஏறெடுக்கலாம்?
• நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்?
• என்னென்ன விஷயங்களுக்காக நாம் ஜெபிக்கலாம்?
• ஒருவர் பாவம் செய்கையில் ஜெபம் என்ன பங்கு வகிக்கிறது?
[பக்கம் 29-ன் படங்கள்]
இருதயப்பூர்வமான ஜெபம் சோதனைகளுக்குள் வீழ்ந்துவிடாதிருக்க நமக்கு உதவுகிறது
[பக்கம் 31-ன் படங்கள்]
ஜெபத்தின் மூலம் நம்முடைய நன்றியையும் கவலைகளையும் விண்ணப்பங்களையும் கடவுளிடம் தெரிவிக்கிறோம்