உங்களை நேசிக்கிற கடவுளை நேசியுங்கள்
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:37.
1, 2. பிரதான கட்டளையைக் குறித்த கேள்வி எழும்புவதற்கு எது காரணமாய் இருந்திருக்கும்?
இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு கேள்வி எழும்பியது. நியாயப்பிரமாணத்திலுள்ள 600-க்கும் மேற்பட்ட கட்டளைகளில் தலைசிறந்தது எது? அது பலி சம்பந்தப்பட்ட கட்டளையா? உண்மையில், பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுவதற்காகவும் கடவுளுக்கு நன்றியை வெளிக்காட்டுவதற்காகவும் பலிகள் செலுத்தப்பட்டன. அல்லது, ஒருவேளை விருத்தசேதனம் பற்றிய கட்டளையே பிரதான கட்டளையாக இருந்திருக்குமா? அதுவும்கூட முக்கியமானதாகவே இருந்தது; ஏனென்றால், ஆபிரகாமோடு யெகோவா செய்த உடன்படிக்கைக்கு அடையாளமாக அது இருந்தது.—ஆதியாகமம் 17:9-13.
2 மறுபட்சத்தில் பரிசேயர்களில் பழமைவாதிகளோ, கடவுள் தந்த கட்டளைகள் எல்லாமே முக்கியமானதுதான், அவற்றில் சில அந்தளவுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றினாலும் எந்தவொரு கட்டளையையும் மற்றதைவிட மேலானதாகக் காட்டுவது தவறென வாதிட்டார்கள். சர்ச்சைக்குரிய இந்தக் கேள்வியை இயேசுவிடம் கேட்க அவர்கள் தீர்மானித்தார்கள். ஒருவேளை அவருடைய பதிலால் அவர்மீதுள்ள நம்பிக்கையை ஜனங்கள் இழந்துவிடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆக, அவர்களில் ஒருவர் இயேசுவிடம் வந்து இவ்வாறு கேட்டார்: “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது”?—மத்தேயு 22:34-36.
3. பிரதான கட்டளை எதுவென இயேசு சொன்னார்?
3 அந்தக் கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் இன்று நமக்கு மிகவும் முக்கியத்துவமுடையது. உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சமாக எது எப்போதுமே இருந்திருக்கிறது, எது எப்போதுமே இருக்கும் என்பதைத் தமது பதிலில் அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார். உபாகமம் 6:5-ஐ மேற்கோள் காட்டி இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.” ஒரேயொரு கட்டளையைப் பற்றித்தான் அந்தப் பரிசேயன் கேட்டார், ஆனால் இயேசு மற்றொரு கட்டளையையும் கொடுத்தார். லேவியராகமம் 19:18-ஐ மேற்கோள் காட்டி அவர் சொன்னதாவது: “இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” பிறகு, உண்மை வணக்கம் சம்பந்தப்பட்ட எல்லாமே இந்த இரு கட்டளைகளில் அடங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிற கட்டளைகளை வரிசைப்படுத்திச் சொல்லும்படி கேட்பதற்கு இடமளிக்காமல் இயேசு இவ்வாறு கூறி முடித்தார்: “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.” (மத்தேயு 22:37-40) இவ்விரு கட்டளைகளில் பிரதான கட்டளையைப் பற்றி இக்கட்டுரையில் சிந்திக்கப் போகிறோம். நாம் ஏன் கடவுளை நேசிக்க வேண்டும்? அப்படி நேசிப்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்? இத்தகைய அன்பை நாம் எப்படி வளர்க்கலாம்? இக்கேள்விகளுக்கான பதில்களை அறிவது மிக முக்கியம், ஏனெனில் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அவரில் அன்புகூர வேண்டும்.
அன்பின் முக்கியத்துவம்
4, 5. (அ) இயேசுவின் பதிலைக் கேட்டு அந்தப் பரிசேயன் ஏன் ஆச்சரியப்படவில்லை? (ஆ) பலிகளையும் காணிக்கைகளையும்விட எதைக் கடவுள் உயர்வாக மதிக்கிறார்?
4 இயேசுவிடம் கேள்வி கேட்ட அந்தப் பரிசேயன் அவருடைய பதிலைக் கேட்டு அதிர்ச்சியடையவும் இல்லை, ஆச்சரியப்படவும் இல்லை. ஏனெனில், அநேகர் கடவுளிடம் அன்புகாட்ட தவறியபோதிலும், அது உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருப்பதை அவர் அறிந்திருந்தார். ஜெபக்கூடங்களில் ஷேமா, அதாவது விசுவாச அறிக்கை [ஓர் எபிரெய ஜெபம்] சப்தமாகச் சொல்லப்படுவது வழக்கமாயிருந்தது; அதில் உபாகமம் 6:4-9-லிருந்து இயேசு மேற்கோள் காட்டிய பகுதியும் உட்பட்டிருந்தது. மத்தேயு சுவிசேஷத்திற்கு இணையாக மாற்கு சுவிசேஷத்தில் உள்ள பதிவின்படி, அந்தப் பரிசேயன் இயேசுவிடம் இவ்வாறு சொன்னார்: “போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.”—மாற்கு 12:32, 33.
5 நியாயப்பிரமாணத்தின்படி தகனபலிகளையும் பிற பலிகளையும் செலுத்துவது முக்கியமானதாய் இருந்தபோதிலும், தம் ஊழியர்களின் இதயப்பூர்வமான அன்பையே கடவுள் மதிப்புமிக்கதாகக் கருதுகிறார். கெட்ட உள்ளெண்ணத்தோடு ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்களைப் பலிசெலுத்துவதைவிட, அன்போடும் பக்தியோடும் ஒரு சிட்டுக்குருவியை கடவுளுக்குச் செலுத்துவது மதிப்புமிக்கதாய் இருந்தது. (மீகா 6:6-8) எருசலேம் ஆலயத்தில் இயேசு கவனித்த அந்த ஏழை விதவையைப் பற்றிய பதிவை நினைவுபடுத்திப் பாருங்கள். அவள் காணிக்கைப் பெட்டியில் இரண்டு காசைப் போட்டாள்; அது ஒரு சிட்டுக்குருவியை வாங்குவதற்குக்கூட போதுமானதாய் இருக்கவில்லை. ஆனாலும், யெகோவா மீதுள்ள இதயப்பூர்வ அன்புடன் அவள் போட்ட அந்தக் காணிக்கையை, செல்வந்தர்கள் தங்களுடைய மிகுதியான செல்வத்திலிருந்து போட்ட அதிகமான காணிக்கையைவிட மேலானதாய் அவர் கருதினார். (மாற்கு 12:41-44) நாம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும் யெகோவாவிடம் நம் எல்லாராலும் காட்ட முடிகிற அன்பை அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதை அறிவது நமக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது, அல்லவா?
6. அன்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பவுல் என்ன எழுதினார்?
6 உண்மை வணக்கத்தில் அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறவராய் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.” (1 கொரிந்தியர் 13:1-3) நம் வணக்கம் கடவுளுக்குப் பிரியமானதாய் இருப்பதற்கு அன்பே பிரதானம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அப்படியெனில், யெகோவா மீதுள்ள அன்பை நாம் எப்படிக் காட்டுகிறோம்?
யெகோவா மீதுள்ள அன்பைக் காட்டும் விதம்
7, 8. யெகோவா மீதுள்ள அன்பை நாம் எப்படிக் காட்டலாம்?
7 அன்பு என்பது கட்டுப்படுத்த முடியாத ஓர் உணர்ச்சி என அநேகர் நினைக்கிறார்கள்; காதல் வலையில் தாங்கள் வீழ்ந்துவிட்டதைப் பற்றி ஆட்கள் சொல்கிறார்கள். என்றாலும், நிஜ அன்பு வெறும் ஓர் உணர்ச்சி அல்ல. அது செயலில் காட்டப்படும் குணம் என விளக்கப்படுகிறது. அன்பை “மேன்மையான வழி” எனவும் நாம் ‘நாட’ வேண்டிய ஒன்று எனவும் பைபிள் குறிப்பிடுகிறது. (1 கொரிந்தியர் 12:31; 14:1) ‘வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரும்படி’ கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.—1 யோவான் 3:18.
8 கடவுள் மீதுள்ள அன்பு, அவருக்குப் பிரியமானதைச் செய்யவும், சொல்லாலும் செயலாலும் அவருடைய அரசதிகாரத்திற்கு ஆதரவு காட்டவும் நம்மை உந்துவிக்கிறது. இந்த உலகத்தையும் அதன் தேவபக்தியற்ற வழிகளையும் நேசிப்பதைத் தவிர்ப்பதற்கு நம்மைத் தூண்டுவிக்கிறது. (1 யோவான் 2:15, 16) கடவுளை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கிறார்கள். (சங்கீதம் 97:10) கடவுளிடம் அன்பு காட்டுவதில் பிறரை நேசிப்பதும் உட்படுகிறது; அதைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம். மேலுமாக, கடவுளை நேசிப்பதற்கு நாம் அவருக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” என பைபிள் சொல்கிறது.—1 யோவான் 5:3.
9. கடவுள்மீது தமக்கு அன்பிருப்பதை இயேசு எப்படி மெய்ப்பித்துக் காட்டினார்?
9 கடவுளை நேசிப்பதில் என்ன உட்பட்டுள்ளது என்பதை இயேசு சரியாகவே மெய்ப்பித்துக் காட்டினார். தம்முடைய பரலோக வீட்டைவிட்டு இந்தப் பூமியில் ஒரு மனிதனாக வாழ அன்பு அவரைத் தூண்டியது. அவர் செய்த காரியங்கள், கற்பித்த விஷயங்கள் மூலம் தம் பிதாவை மகிமைப்படுத்த அன்பு அவரை உந்துவித்தது. ‘மரணபரியந்தம் கீழ்ப்படிந்திருக்க’ அன்பு அவரை ஊக்குவித்தது. (பிலிப்பியர் 2:8) இப்படி அவர் அன்புடன் கீழ்ப்படிதலைக் காட்டியது, கடவுளுக்கு முன்பாக நீதியுள்ளவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற உண்மையுள்ளோருக்கு வாய்ப்பளித்தது. பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒரே மனுஷனுடைய [ஆதாமுடைய] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய [கிறிஸ்து இயேசுவுடைய] கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.”—ரோமர் 5:19.
10. கடவுள் மீதுள்ள அன்பில் கீழ்ப்படிதலும் ஏன் உட்பட்டுள்ளது?
10 இயேசுவைப் போலவே, கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் மூலம் அன்பை நாம் காட்டுகிறோம். “நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு” என இயேசுவின் பிரியத்திற்குரிய அப்போஸ்தலனான யோவான் எழுதுகிறார். (2 யோவான் 6) யெகோவாவை உண்மையிலேயே நேசிப்பவர்கள் அவருடைய வழிநடத்துதலுக்காக ஏங்குகிறார்கள். தங்களுடைய நடைகளை வெற்றிகரமாக நடத்த தங்களால் முடியாது என்பதை அறிந்தவர்களாய், கடவுளுடைய ஞானத்தைச் சார்ந்திருக்கிறார்கள், அவருடைய அன்பான அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (எரேமியா 10:23) அவர்கள் நற்குணசாலிகளான பூர்வ பெரோயா பட்டணத்தாரைப்போல் இருக்கிறார்கள்; அந்தப் பட்டணத்தார் கடவுளுடைய செய்தியை “மனோவாஞ்சையாய்” ஏற்றுக்கொண்டார்கள், அவருடைய சித்தத்தைச் செய்ய மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள். (அப்போஸ்தலர் 17:11) கடவுளுடைய சித்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு வேத வசனங்களை அவர்கள் கவனமாய் ஆராய்ந்தார்கள்; இது கீழ்ப்படிதலுள்ள செயல்கள் மூலம் தங்களுடைய அன்பை தொடர்ந்து வெளிக்காட்ட அவர்களுக்கு உதவியது.
11. கடவுளிடத்தில் நம் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருவதன் அர்த்தம் என்ன?
11 இயேசு சொன்னதுபோல், கடவுளிடம் அன்பு காட்டுவதில், நம் முழு இருதயமும், முழு மனமும், முழு ஆத்துமாவும், முழுப் பலமும் சம்பந்தப்பட்டுள்ளது. (மாற்கு 12:30) அத்தகைய அன்பு, நம் உணர்ச்சிகளும், விருப்பங்களும், உள்ளார்ந்த எண்ணங்களும் குடியிருக்கிற இருதயத்திலிருந்து ஊற்றெடுக்கிறது; அதனால், யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவல் நம்மில் பொங்கியெழுகிறது. நம் மனதாலும் நாம் அன்பு காட்டுகிறோம். நாம் காட்டும் பக்தி குருட்டுத்தனமானதல்ல; யெகோவாவுடைய குணங்களையும், ஒழுக்கநெறிகளையும் நோக்கங்களையும் நாம் அறிந்திருக்கிறோம். அவரைச் சேவிப்பதற்கும் துதிப்பதற்கும் நம் ஆத்துமாவை, அதாவது நம்மையே, நம் உயிரையே முழுமையாய் அர்ப்பணிக்கிறோம். அதற்காக நம் பலத்தையும் பயன்படுத்துகிறோம்.
யெகோவாவை ஏன் நேசிக்க வேண்டும்
12. தம்மை நேசிக்கும்படி நம்மிடம் கடவுள் ஏன் எதிர்பார்க்கிறார்?
12 யெகோவாவை நாம் ஏன் நேசிக்க வேண்டும் என்பதற்கான ஒரு காரணம், அவருடைய குணங்களைப் பிரதிபலிக்கும்படி அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதே ஆகும். கடவுள் அன்பின் பிறப்பிடமாகவும், அன்புக்குத் தலைசிறந்த முன்மாதிரியாகவும் திகழ்கிறார். தேவ ஆவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் யோவான் “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என எழுதினார். (1 யோவான் 4:8) கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம், அன்பு காட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறோம். சொல்லப்போனால், யெகோவாவின் அரசதிகாரத்திற்கு அடிப்படையாக விளங்குவது அன்பே. தமக்குச் சேவை செய்யும் குடிமக்களையே அவர் விரும்புகிறார்; ஏனெனில், அவருடைய நீதியான ஆட்சியை அவர்கள் நேசிக்கிறார்கள், அதை விரும்புகிறார்கள். உண்மையில், படைப்புகள் எல்லாமே சமாதானமாயும் ஒத்திசைவாயும் வாழ்வதற்கு இன்றியமையாதது அன்பே.
13. (அ) ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக’ என இஸ்ரவேலரிடத்தில் ஏன் சொல்லப்பட்டது? (ஆ) தம்மிடம் அன்புகூரும்படி யெகோவா நம்மிடத்தில் எதிர்பார்ப்பது ஏன் நியாயமானது?
13 யெகோவாவை நேசிப்பதற்கான மற்றொரு காரணம், அவர் நமக்குச் செய்திருப்பவற்றிற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருப்பதே ஆகும். ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக’ என யூதர்களிடம் இயேசு சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள். எங்கோ தொலைவில் தனித்திருக்கிற, யாரென்றே தெரியாத ஒரு கடவுளிடத்தில் அன்புகூரும்படி அவர்கள் எதிர்பார்க்கப்படவில்லை. தங்களிடம் அன்பை வெளிப்படுத்திய கடவுளிடமே அவர்கள் அன்புகாட்ட வேண்டியிருந்தது. யெகோவா அவர்களுடைய கடவுளாக இருந்தார். அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துவந்தவரும், அவர்களைப் பாதுகாத்தவரும், பராமரித்தவரும், நேசித்தவரும், அன்பால் சிட்சித்தவரும் அவரே. இன்றும் யெகோவா நம் கடவுளாக இருக்கிறார்; நாம் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக தம் மகனை மீட்கும் பலியாகத் தந்திருக்கிறார். அதற்குக் கைமாறாக, தம்மிடத்தில் அன்புகூரும்படி யெகோவா எதிர்பார்ப்பது நியாயந்தானே! அன்பைப் பெற்ற நாம் அதே விதத்தில் அன்பு காட்டுகிறோம்; நம்மை நேசிக்கிற கடவுளை நேசிக்கும்படி நம்மிடம் கேட்கப்படுகிறது. ‘முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தவரிடம்’ நாம் அன்புகூருகிறோம்.—1 யோவான் 4:19.
14. யெகோவாவின் அன்பு எவ்விதத்தில் ஒரு பெற்றோரின் அன்பைப்போல் இருக்கிறது?
14 மனிதகுலத்திடம் யெகோவா காட்டும் அன்பு, பிள்ளைகளிடத்தில் பாசமுள்ள ஒரு பெற்றோர் காட்டும் அன்பைப் போன்றது. பாசமுள்ள பெற்றோர்கள் அபூரணர்களாக இருந்தாலும், தங்களுடைய பிள்ளைகளைக் கவனிப்பதற்காக பல ஆண்டுகள் கடினமாக உழைக்கிறார்கள்; அதற்காக அதிக பணத்தையும் செலவழிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்கிறார்கள், அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள், அரவணைக்கிறார்கள், சிட்சிக்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் வாழ்வதைக் காண விரும்புகிறார்கள். அதற்குக் கைமாறாக, பெற்றோர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? தங்களுடைய பிள்ளைகள் தங்களை நேசிக்கவும், அவர்களுடைய நன்மைக்காகக் கற்பித்தவற்றை இருதயத்தில் பதித்துக்கொள்ளவும் வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால், நம் பரிபூரண பரலோகத் தகப்பன் நமக்குச் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் அன்போடு நன்றிசெலுத்தும்படி நம்மிடம் எதிர்பார்ப்பது நியாயம், அல்லவா?
கடவுள் மீதுள்ள அன்பை வளர்த்தல்
15. கடவுள் மீதுள்ள அன்பை வளர்ப்பதற்கு முதற்படி என்ன?
15 நாம் கடவுளைப் பார்த்ததும் இல்லை, அவர் குரலைக் கேட்டதும் இல்லை. (யோவான் 1:18) ஆனாலும், தம்முடன் அன்பான உறவை வைத்துக்கொள்ளும்படி அவர் நம்மை அழைக்கிறார். (யாக்கோபு 4:8) அது எப்படிச் சாத்தியம்? ஒருவரிடத்தில் அன்பு காட்டுவதற்கு முதற்படி, அவரைப் பற்றி அறிந்துகொள்வதாகும்; முன்பின் தெரியாத ஒருவரிடத்தில் பாசம் காட்ட வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வராது. ஆகவே, தம்மைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக தம் வார்த்தையாகிய பைபிளை யெகோவா நமக்குத் தந்திருக்கிறார். அதனால்தான், பைபிளைத் தவறாமல் வாசிக்கும்படி தம்முடைய அமைப்பு மூலமாக அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். கடவுளைப் பற்றியும், அவரது குணங்கள், சுபாவம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடம் அவர் நடந்துகொண்ட முறை ஆகியவற்றைப் பற்றியும் பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. அப்பதிவுகளை வாசித்து நாம் தியானிக்கையில், நம்முடைய புரிந்துகொள்ளுதலும் அவர் மீதுள்ள நம் அன்பும் அதிகரிக்கும்.—ரோமர் 15:4.
16. இயேசுவின் ஊழியத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுள் மீதுள்ள நம் அன்பு எப்படி வளருகிறது?
16 யெகோவா மீதுள்ள அன்பில் வளருவதற்கு பிரதான வழி, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதாகும். சொல்லப்போனால், இயேசு தம் பிதாவை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார். அதனால்தான், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவான் 14:9) இயேசு ஒரு விதவையின் ஒரே மகனை உயிர்த்தெழுப்பி தம் பாசத்தை வெளிப்படுத்தியது உங்களை நெகிழ வைக்கவில்லையா? (லூக்கா 7:11-15) கடவுளுடைய மகனும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதருமான அவர் தம் சீஷர்களின் கால்களைத் தாழ்மையோடு கழுவியதை அறிவது நம் மனதைத் தொடவில்லையா? (யோவான் 13:3-5) அவர் எந்தவொரு மனிதனையும்விட உயர்ந்தவரும் ஞானமுள்ளவருமாய் இருந்தபோதிலும், பிள்ளைகள் உட்பட எல்லாராலும் அணுகமுடிந்தவராக இருந்ததை அறிந்து உங்கள் மனம் இளகவில்லையா? (மாற்கு 10:13, 14) இவற்றையெல்லாம் நன்றியோடு தியானித்துப் பார்க்கையில், பேதுரு குறிப்பிட்ட கிறிஸ்தவர்களைப்போல் நாம் ஆகிறோம். “அவரை [இயேசுவை] நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்” என அவர்களைக் குறித்து அவர் எழுதினார். (1 பேதுரு 1:8) இயேசுவின் மீது நம் அன்பு வளருகையில், யெகோவா மீதுள்ள நம் அன்பும் வளருகிறது.
17, 18. யெகோவா அன்புடன் செய்துள்ள என்ன ஏற்பாடுகளைப் பற்றித் தியானிப்பது அவர் மீதுள்ள நம் அன்பை வளர்க்கலாம்?
17 கடவுள் மீதுள்ள அன்பில் வளருவதற்கு மற்றொரு வழி, நம் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்காக அவர் அன்புடன் செய்துள்ள அபரிமிதமான ஏற்பாடுகளைப் பற்றி தியானிப்பதாகும். படைப்பில் வெளிப்படும் அழகு, சாப்பிடுவதற்கு வகைவகையான, ருசிமிக்க உணவுகள், நல்ல நண்பர்களின் அன்பான தோழமை, மகிழ்ச்சியும் திருப்தியும் தருகிற எண்ணற்ற பிற காரியங்கள் இவையாவும் அவர் செய்துள்ள அன்பான ஏற்பாடுகளாகும். (அப்போஸ்தலர் 14:17) நம் கடவுளைப் பற்றி எந்தளவு அறிந்துகொள்கிறோமோ அந்தளவு அவருடைய அளவில்லா நற்குணத்திற்கும் தாராளகுணத்திற்கும் நன்றியுள்ளவர்களாய் இருக்க நமக்குக் காரணங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு யெகோவா செய்துள்ள எல்லாக் காரியங்களையும் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது, உங்களுடைய அன்புக்கு அவர் தகுதியுள்ளவர் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
18 எந்தச் சமயத்திலும் கடவுளை ஜெபத்தில் அணுக முடிவது அவர் நமக்கு அளித்திருக்கும் அநேக பரிசுகளில் ஒன்று; ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். (சங்கீதம் 65:2) ஆட்சி செய்வதற்கும், நியாயத்தீர்ப்பு செய்வதற்குமான அதிகாரத்தை தம் அன்பு மகனுக்கு அவர் கொடுத்திருக்கிறார். என்றாலும், ஜெபத்தைக் கேட்பதற்கான அதிகாரத்தை தம் மகனுக்கோ மற்றவர்களுக்கோ அவர் கொடுப்பதில்லை. நம் ஜெபங்களை அவரே கேட்டு பதில் அளிக்கிறார். இவ்வாறு, யெகோவா அன்புடன், தனிப்பட்ட விதத்தில் நம்மீது அக்கறை காட்டுவது, அவரிடம் நம்மை நெருங்கிவரச் செய்கிறது.
19. யெகோவாவின் என்ன வாக்குறுதிகள் அவரிடம் நம்மை நெருங்கிவரச் செய்கின்றன?
19 மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காக யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதைச் சிந்திக்கையிலும் அவரிடம் நாம் நெருங்கி வருகிறோம். நோய், துயரம், சாவு இவற்றிற்கெல்லாம் முடிவுகட்டப்போவதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:3, 4) மனிதகுலம் பரிபூரணத்தை அடைந்த பிறகு, மன அழுத்தமோ, மனச்சோர்வோ, துயரமோ யாரையும் வாட்டாது. பசி பட்டினி, வறுமை, போர் இராது. (சங்கீதம் 46:9; 72:16) பூமி ஒரு பூங்காவன பரதீஸாக மாறும். (லூக்கா 23:43) யெகோவா இந்த ஆசீர்வாதங்களை அருளுவதற்குக் காரணம், அவர் அதற்குக் கடமைப்பட்டிருப்பதால் அல்ல, அவர் நம்மை நேசிப்பதால்தான்.
20. யெகோவாவிடம் அன்பு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி மோசே என்ன சொன்னார்?
20 அப்படியானால், நாம் கடவுளிடம் அன்பு காட்டுவதற்கும் அந்த அன்பை வளர்ப்பதற்கும் பலமான காரணங்கள் இருக்கின்றன. கடவுள் மீதுள்ள அன்பை நீங்கள் தொடர்ந்து வளர்ப்பீர்களா, உங்களுடைய பாதைகளுக்கு வழிகாட்ட அவரை அனுமதிப்பீர்களா? தெரிவு உங்களுடையதே. யெகோவா மீதுள்ள அன்பை வளர்ப்பதாலும் அதைத் தொடர்ந்து காட்டிவருவதாலும் கிடைக்கிற ஆசீர்வாதங்களை மோசே அறிந்திருந்தார். முற்கால இஸ்ரவேலரிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.”—உபாகமம் 30:19, 20.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நாம் யெகோவாவிடத்தில் அன்புகூருவது ஏன் முக்கியம்?
• கடவுள் மீதுள்ள அன்பை நாம் எப்படிக் காட்டலாம்?
• யெகோவாவிடத்தில் அன்புகூர நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
• கடவுள் மீதுள்ள அன்பை நாம் எப்படி வளர்க்கலாம்?
[பக்கம் 20-ன் படம்]
யெகோவாவிடம் நம் எல்லாராலும் காட்ட முடிகிற அன்பை அவர் உயர்வாக மதிக்கிறார்
[பக்கம் 23-ன் படங்கள்]
“என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.”—யோவான் 14:9