கிலியட் பட்டதாரிகள் இதயத்தைத் தொடும் ஆலோசனையைப் பெறுகிறார்கள்
உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 121-ஆம் வகுப்பு பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9, 2006 அன்று நடைபெற்றது; நியு யார்க், பாட்டர்சனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் அது நடைபெற்றது. உற்சாகமூட்டும் நிகழ்ச்சியாய் அது இருந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான ஜெஃப்ரீ ஜேக்ஸன், 56 பட்டதாரிகளையும் பல நாடுகளிலிருந்து வந்திருந்த 6,366 பேரையும் வரவேற்றார். அவர் சங்கீதம் 86:11-ன் அடிப்படையில் பேசினார்; “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என அந்த வசனம் குறிப்பிடுகிறது. இதில் வலியுறுத்தப்பட்டுள்ள மூன்று காரியங்களை சகோதரர் ஜேக்ஸன் சுட்டிக்காட்டினார். “முதலில் போதனை பெறுவது, இரண்டாவது அதைக் கடைப்பிடிப்பது, மூன்றாவது செயல்படத் தூண்டுவது. குறிப்பாக புதிய நியமிப்புகளுக்குச் செல்லவிருக்கிற மிஷனரிகளாகிய உங்களுக்கு இந்த மூன்று காரியங்களும் முக்கியமானவை” என அவர் சொன்னார். அதன் பிறகு, இந்த மூன்று காரியங்களையும் வலியுறுத்திக் காட்டிய பேச்சுகளையும் பேட்டிகளையும் அறிமுகப்படுத்தினார்.
இதயத்தைத் தொடும் ஆலோசனைகள்
தலைமையகத்தின் அங்கத்தினரான வில்லியம் மேலன்ஃபான்ட், “மிகச் சிறந்த வாழ்க்கை” என்ற தலைப்பில் பேசினார். மார்த்தாளின் சகோதரியான மரியாளுடைய உதாரணத்திற்கு அவர் கவனத்தைத் திருப்பினார். ஒருசமயம், இயேசு அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருந்தபோது அவருடைய காலருகே உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்பதற்கே மரியாள் முதலிடம் கொடுத்தாள். மரியாளைப்பற்றி மார்த்தாளிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்.” (லூக்கா 10:38-42) “இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இயேசுவின் காலருகே உட்கார்ந்து அருமையான ஆன்மீக சத்தியங்களை அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதை மரியாள் ஒருபோதும் மறக்க மாட்டாள்; ஏனெனில், அவள் நல்ல தெரிவைச் செய்தாள்” என பேச்சாளர் குறிப்பிட்டார். பட்டதாரிகள் ஆன்மீக விஷயங்களில் நல்ல தெரிவுகளைச் செய்திருப்பதற்காக அவர்களைப் பாராட்டிய பிறகு, அவர் இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய தெரிவுகள் மிகச் சிறந்த வாழ்க்கைக்கு வழிநடத்தியிருக்கின்றன.”
அடுத்ததாக, ஆளும் குழுவின் அங்கத்தினரான ஆந்தணி மாரிஸ் பேசினார். அவர் ரோமர் 13:14-ன் அடிப்படையில், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் பேசினார். இதை நாம் எப்படிச் செய்யலாம்? ஆங்கிலத்தில், துணைக்குறிப்புகளுள்ள பைபிளில் இந்த வசனத்திற்குரிய அடிக்குறிப்பை சகோதரர் மாரிஸ் சுட்டிக்காட்டினார்; “கர்த்தர் நடந்துகொள்ளும் முறைகளைப் பின்பற்றுங்கள்” என அது குறிப்பிடுகிறது. அப்படியானால், இயேசுவின் முன்மாதிரியையும் சுபாவத்தையும் பின்பற்றுவதை இது அர்த்தப்படுத்துகிறது. “ஜனங்கள் இயேசுவிடம் வருவதற்குத் தயங்கவில்லை; ஏனெனில், அவர்களிடம் அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தது, அதை அவர்களால் உணர முடிந்தது” என பேச்சாளர் சொன்னார். அடுத்து, எபேசியர் 3:18 சொல்கிற விதமாக, சத்தியத்தின் ‘அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துகொள்வதற்கு’ தங்களுடைய கிலியட் பயிற்சி மூலம் மாணாக்கர்கள் எந்தளவுக்கு அறிவைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதைப்பற்றிப் பேச்சாளர் குறிப்பிட்டார். அதே சமயத்தில் 19-ஆம் வசனத்தை அவர்களுக்கு நினைப்பூட்டினார்; ‘அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ளுங்கள்’ என அது குறிப்பிடுகிறது. சகோதரர் மாரிஸ் மாணாக்கரை இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் தவறாமல் தனிப்பட்ட படிப்பில் ஈடுபடும்போது, கிறிஸ்துவின் அன்பையும் பரிவையும் எப்படிப் பின்பற்றலாம் என்றும் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை’ எப்படி ‘தரித்துக்கொள்ளலாம்’ என்றும் சிந்தித்துப்பாருங்கள்.”
கிலியட் போதனையாளர்களின் முடிவான ஆலோசனை
அடுத்த பேச்சை கிலியட் போதனையாளரான வாலஸ் லிவ்ரன்ஸ் கொடுத்தார். அவருடைய பேச்சின் தலைப்பு நீதிமொழிகள் 4:7-ன் அடிப்படையில் இருந்தது. கடவுளைப் பற்றிய ஞானம் முக்கியம்தான், அதே சமயத்தில் நாம் ‘புத்தியைச் சம்பாதித்துக்கொள்வதும்கூட’ முக்கியம் என அவர் சொன்னார். தனித்தனி உண்மைகளை ஒன்றுசேர்த்து, அவை ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ள விதத்தைப் பார்ப்பதன் மூலம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது இதில் உட்பட்டுள்ளது என்றும் சொன்னார். ‘புத்தியைச் சம்பாதிப்பது’ ஞானமாகச் செயல்பட நமக்கு உதவுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். உதாரணமாக, நெகேமியாவின் காலத்தில், லேவியர்கள் நியாயப்பிரமாணத்தை “விளக்கிச் சொன்னார்கள்” அதோடு, “புரியும்படி உணர்த்தினார்கள்.” அதன் பிறகு, ஜனங்கள் “தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், மிகுந்த சந்தோஷம் கொண்டாடினார்கள்.” (நெகேமியா 8:7, 8, 12; NW) சகோதரர் லிவ்ரன்ஸ் தன் உரையை இவ்வாறு முடித்தார்: “ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்கையில் கிடைப்பதே சந்தோஷம்.”
மற்றொரு கிலியட் போதனையாளரான மார்க் நூமர், “உண்மையில் உங்களுடைய எதிரி யார்?” என்ற தலைப்பில் பேசினார். போரிடும்போது அநேகர் தங்களுடைய சொந்த படைவீரர்களாலேயே தெரியாத்தனமாக சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். “நம்முடைய ஆன்மீகப் போரைப்பற்றி என்ன சொல்லலாம்?” என அவர் கேட்டார். “நாம் கவனமாக இல்லாவிட்டால், நம்முடைய விரோதி உண்மையில் யார் என தெரியாமல், நம்முடைய சக வீரர்களையே நாம் காயப்படுத்தி விடுவோம்” என அவர் சொன்னார். சிலருக்குப் பொறாமையின் காரணமாக, எதிரி யார் என சரிவரத் தெரியாமல் போய்விடலாம். பொறாமையினால்தான் ராஜாவான சவுல் தன் சக வணக்கத்தானான தாவீதைக் கொல்ல முயன்றார்; உண்மையில் பெலிஸ்தரே அவருடைய விரோதிகளாக இருந்தார்கள். (1 சாமுவேல் 18:7-9; 23:27, 28) “உங்களோடு சேர்ந்து சேவைசெய்யும் மிஷனரி பல விஷயங்களில் உங்களைவிட சிறந்து விளங்கினால் அவரிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்? உங்களுடைய சக போர்வீரனைக் குறைகூறி புண்படுத்துவீர்களா, அல்லது மற்றவர்கள் உங்களைவிட பல விஷயங்களில் விஞ்சியவர்களாக இருப்பார்கள் என்பதை அமைதியாக ஒத்துக்கொள்வீர்களா? மற்றவர்களுடைய அபூரணங்களையே பார்த்துக்கொண்டிருந்தால், யார் எதிரி என்பதே தெரியாமல் போய்விடும். உண்மையில் எதிரியாய் இருப்பவனான சாத்தானையே எதிர்த்துப் போரிடுங்கள்” என பேச்சாளர் சொன்னார்.
ஆனந்தமான அனுபவங்கள், பயனுள்ள பேட்டிகள்
“சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” என்ற தலைப்பில் அடுத்த பகுதியை கிலியட் போதனையாளரான லாரன்ஸ் போவென் நடத்தினார். அதில் பேட்டிகளும் அனுபவங்களும் இடம்பெற்றன. துணைக்குறிப்புகளுள்ள பைபிளில் 2 தீமோத்தேயு 4:5-ன் அடிக்குறிப்பு “மிஷனரியின்” வேலையைச் செய் என சொல்வதாக அவர் குறிப்பிட்டார். “இது மிகவும் பொருத்தமானது, ஏனெனில் கிலியட்டில் பயிற்சிபெற்ற ஒரு மிஷனரியின் முக்கிய வேலை நற்செய்தியை அறிவிப்பதே; இந்த வகுப்பில் பயின்ற மாணாக்கர்கள் எங்கெல்லாம் ஆட்களைச் சந்தித்தார்களோ அங்கெல்லாம் அவர்களிடம் இச்செய்தியை அறிவித்திருக்கிறார்கள்” என்றும் பேச்சாளர் சொன்னார். மாணாக்கர்களுக்குக் கிடைத்த சில இனிய அனுபவங்கள் நிஜ சம்பவ நடிப்பாக நடித்துக்காட்டப்பட்டன.
நிகழ்ச்சியில் அடுத்த இரண்டு பாகங்களை பெத்தேல் அங்கத்தினர்களான மைக்கல் பர்னட்டும் ஸ்காட் ஷாஃப்னரும் நடத்தினார்கள். ஆஸ்திரேலியா, பார்படோஸ், கொரியா, உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்களை அவர்கள் பேட்டி கண்டார்கள். மிஷனரிகளின் தேவைகளை, உதாரணமாக, வீட்டு வசதி, உடல்நல பராமரிப்பு போன்ற தேவைகளைக் கவனிப்பதற்காக எந்தளவு முயற்சி எடுக்கப்படுகிறது என்பதை அந்த அங்கத்தினர்களின் குறிப்புகள் காட்டின. மிஷனரி சேவையில் மும்முரமாக ஈடுபடுபவர்கள் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாக இருப்பதையும் அவர்கள் வலியுறுத்திக் காட்டினார்கள்.
இதயத்தைத் தூண்டி ஊக்குவிக்கும் முடிவுரை
நிகழ்ச்சியின் முக்கிய பேச்சு, “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்” என்பதாகும். இதை ஆளும் குழுவில் பல வருடங்களாகச் சேவை செய்துவரும் ஜான் ஈ. பார் கொடுத்தார். வெளிப்படுத்துதல் 14:6, 7-ன் அடிப்படையில் அவர் பேசினார்; அது இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவர் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினார்.’
அந்தத் தூதன் செய்த மூன்று காரியங்களை நினைவில் வைக்கும்படி மாணாக்கர்களை சகோதரர் பார் ஊக்குவித்தார். முதலாவது, அவர் நித்திய சுவிசேஷத்தை, அதாவது நற்செய்தியை, அறிவிக்க வேண்டியிருந்தது. ராஜ்யத்தை ஆள முழு அதிகாரம் பெற்றவராக கிறிஸ்து இப்போது ஆட்சிசெய்து வருகிறார் என்பதே அந்த நற்செய்தி. “1914-ல் அவர் ராஜாவாகிவிட்டார் என்பதை நாம் உறுதியாய் நம்புகிறோம். ஆகவே, மகிழ்ச்சி தரும் இச்செய்தி உலகெங்கும் அறிவிக்கப்பட வேண்டும்.” இரண்டாவது, ‘தேவனுக்குப் பயந்திருங்கள்’ என அந்தத் தூதன் குறிப்பிட்டார். கடவுளிடம் பயபக்தியை வளர்க்க பட்டதாரிகள் தங்களுடைய பைபிள் மாணாக்கர்களுக்கு உதவ வேண்டும்; கடவுளுக்குப் பிடிக்காத எதையும் செய்யாதிருக்க அது அவர்களுக்கு உதவும் என பேச்சாளர் விளக்கினார். மூன்றாவது, ‘தேவனை மகிமைப்படுத்துங்கள்’ என அந்தத் தூதன் கட்டளையிட்டார். “நாம் செய்யும் சேவை, கடவுளை மகிமைப்படுத்துவதற்காகவே, நம்மை மகிமைப்படுத்துவதற்காக அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று மாணாக்கர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அடுத்து, ‘நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளையை’ பற்றி சகோதரர் பார் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடைசி நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கான காலம் குறுகிக்கொண்டே போகிறது. அந்த வேளை, அதாவது சமயம் முடிவதற்குள் நற்செய்தியைக் கேட்க வேண்டியவர்கள் நம் பிராந்தியங்களில் இன்னும் அநேகர் இருக்கிறார்கள்.”
இந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டிருக்க, 56 பட்டதாரிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது, பூமியின் பல பாகங்களில் ஊழியம் செய்ய அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அந்தக் குதூகலமான நாளில் வழங்கப்பட்ட தூண்டுதல் அளிக்கும் ஆலோசனை அங்கே கூடியிருந்த பட்டதாரிகளின் இதயத்தையும் மற்றவர்களின் இதயத்தையும் ஆழமாகத் தொட்டது.
[பக்கம் 17-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 6
அனுப்பப்பட்ட நாடுகள்: 25
மாணவர்களின் எண்ணிக்கை: 56
சராசரி வயது: 35.1
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 18.3
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.9
[பக்கம் 18-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 121-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஃபாக்ஸ், ஒய்.; கனிக்கி, டி.; வில்கின்சன், எஸ்.; கவாமோட்டோ, எஸ்.; கோன்ஸோலான்டி, ஜி.; மாயன், சி. (2) சான்டியாகோ, என்.; க்ளான்ஸி, ஆர்.; ஃபிஷ்ஷர், எம்.; டெ அப்ரூ, எல்.; டேவிஸ், ஈ. (3) ஹ்வாங், ஜெ.; ஹாஃப்மேன், டி.; ரிஜ்வே, எல்.; இப்ராஹிம், ஜெ.; டாபல்ஷ்டைன், ஏ.; பாகாபக், எம். (4) பேட்டர்ஸ், எம்.; ஜோன்ஸ், சி.; ஃபோர்ட், எஸ்.; பாரா, எஸ்.; ராத்ராக், டி.; டாட்லோ, எம்.; பெரெஸ், ஈ. (5) டெ அப்ரூ, எஃப்.; கவாமோட்டோ, எஸ்.; ஐவ்ஸ், எஸ்.; பர்டோ, ஜெ.; ஹ்வாங், ஜெ.; வில்கின்சன், டி. (6) ஃபாக்ஸ், ஏ.; பாகாபக், ஜெ.; ஸிகாவ்ஸ்கி, பி.; ஃபார்யே, சி.; மாயன், எஸ்.; கோன்ஸோலான்டி, இ.; ரிஜ்வே, டபிள்யூ. (7) பாரா, பி.; பெரெஸ், பி.; டாட்லோ, பி.; சான்டியாகோ, எம்.; இப்ராஹிம், ஒய்.; கனிக்கி, சி. (8) பர்டோ, சி.; ஸிகாவ்ஸ்கி, பி.; ஐவ்ஸ், கே.; ஃபோர்ட், ஏ.; ராத்ராக், ஜெ.; ஹாஃப்மேன், டி.; டேவிஸ், எம். (9) பேட்டர்ஸ், சி.; டாபல்ஷ்டைன், சி.; ஜோன்ஸ், கே.; க்ளான்ஸி, எஸ்.; ஃபிஷ்ஷர், ஜெ.; ஃபார்யே, எஸ்.