பிள்ளை கலகம் செய்யும்போது உறுதியாக இருங்கள்
ஒரு கிறிஸ்தவப் பெண்மணி தன் மகனை யெகோவாவை நேசிக்கும் பிள்ளையாக வளர்ப்பதற்கு முயற்சி செய்தார். நாம் அவரை ஜாய் என்றழைக்கலாம். என்றாலும், அந்த மகன் டீனேஜ் பருவத்தின் பிற்பகுதியை அடைந்தபோது கலகம் செய்து வீட்டைவிட்டுச் சென்றுவிட்டான். ஜாய் இவ்வாறு சொல்கிறார்: “நான் அனுபவித்ததிலேயே இதுதான் கடுமையான வேதனையாக இருந்தது. ஏமாற்றப்பட்டவளாக உணர்ந்தேன், உள்ளுக்குள் நொறுங்கிப்போனேன், விரக்தியடைந்துபோனேன். எதிர்மறையான எண்ணங்களில் மூழ்கிப்போனேன்.”
பெரும்பாலும் நீங்களும்கூட, உங்கள் பிள்ளைகளை யெகோவாவை நேசிப்பவர்களாகவும் அவருக்குச் சேவை செய்பவர்களாகவும் வளர்ப்பதற்கு முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் பிறகு அவர்களில் ஒருவரோ இருவரோ வழி தவறிப்போயிருப்பார்கள். இந்தக் கசப்பான ஏமாற்றத்தை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்? யெகோவாவின் சேவையில் நீங்கள் உறுதியாயிருக்க உங்களுக்கு எது உதவும்?
யெகோவாவின் குமாரர் கலகம் செய்தபோது
முதல் படியாக, உங்களுடைய உணர்ச்சிகளை யெகோவா துல்லியமாக அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏசாயா 49:15-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” ஆம், பெற்றோர் பொதுவாக உணரும் விதமாகவே யெகோவாவும் உணருகிறார். ஆகவே, அவருடைய ஆவி குமாரர்கள் எல்லாரும் அவரைத் துதித்து அவருக்குச் சேவை செய்தபோது, அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். முற்பிதாவான யோபுக்கு “பெருங்காற்றிலிருந்து” பதிலளிக்கும்போது, யெகோவா தம்முடைய ஆவிக்குரிய குடும்பம் சந்தோஷமாக இருந்த அந்தக் காலத்தை நினைவுகூர்ந்து இப்படிச் சொல்கிறார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? . . . அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.”—யோபு 38:1, 4, 7.
நாளடைவில், மெய்தேவன் தம் பரிபூரண ஆவி குமாரர்களில் ஒருவன் தமக்கு எதிராகக் கலகம்செய்து சாத்தானாக மாறியதைக் கண்டார். சாத்தான் என்பதற்கு “எதிர்ப்பவன்” என்று அர்த்தம். மேலும், தம்முடைய முதல் மானிட மகனான ஆதாமும், அவனுடைய பரிபூரண மனைவியான ஏவாளும் அந்தக் கலகத்தில் சேர்ந்துகொண்டதை யெகோவா கவனித்தார். (ஆதியாகமம் 3:1-6; வெளிப்படுத்துதல் 12:9) பிற்பாடு, மற்ற ஆவி குமாரர்கள், ‘தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு’ கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.—யூதா 6.
தம்முடைய பரிபூரண குமாரர்களில் சிலர் அந்தக் கலக்கத்தில் சேர்ந்துகொண்டபோது, யெகோவா எப்படி உணர்ந்தார் என்று வசனங்கள் நமக்குச் சொல்வதில்லை. என்றாலும், பைபிள் விரிவாக இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதியாகமம் 6:5, 6) மேலும், தாம் தேர்ந்தெடுத்த இஸ்ரவேல் மக்கள் கலகம் செய்தது யெகோவாவை ‘விசனப்படுத்தியது,’ ‘மட்டுப்படுத்தியது’ அல்லது வேதனைப்படுத்தியது.—சங்கீதம் 78:40, 41.
எனவே, தங்களுடைய பிள்ளைகளின் கலகத்தனத்தால் வலியையும் வருத்தத்தையும் அனுபவிக்கும் பெற்றோருக்காக யெகோவா பரிதவிக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. அதனால், அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் பெற்றோர்கள் தங்களுடைய சூழ்நிலைமையைச் சமாளிப்பதற்கு உதவும் நல்ல அறிவுரைகளையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளார். தங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடவும், மனத்தாழ்மையாக இருக்கவும் பிசாசாகிய சாத்தானை எதிர்த்து நிற்கவும் கடவுள் அறிவுரை கூறுகிறார். இந்த அறிவுரையைப் பின்பற்றுவது, உங்களுடைய பிள்ளை கலகம் செய்யும்போது உறுதியாயிருக்க உங்களுக்கு எப்படி உதவும் என்பதை நாம் பார்க்கலாம்.
கவலைகளையெல்லாம் யெகோவா மேல் வைத்துவிடுங்கள்
தங்களுடைய பிள்ளைகள் தங்களையே கெடுத்துக்கொள்ளக்கூடும் அல்லது மற்றவர்களால் கெடுக்கப்படக்கூடும் என்ற விஷயமே பெற்றோரை அதிகமாகக் கவலைப்பட வைக்கிறது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். இவற்றையும் மற்ற கவலைகளையும் சமாளிக்க அப்போஸ்தலன் பேதுரு ஒரு வழியைக் குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) இந்த அழைப்பும் உறுதியும் குறிப்பாகக் கலகம் செய்யும் பிள்ளையையுடைய பெற்றோருக்கு ஏன் அதிகமாய் பொருந்துகின்றன?
உங்களுடைய பிள்ளை சிறுவனாக இருந்தபோது, அவனை ஆபத்திலிருந்து பாதுகாக்க நீங்கள் கவனமாக இருந்தீர்கள். பெரும்பாலும் அவனும் உங்களுடைய அன்பான வழிநடத்தலுக்குச் செவிகொடுத்திருப்பான். என்றாலும், அவன் பெரியவனாக வளர்ந்தபோதோ அவன் மீதான உங்கள் செல்வாக்கு குறையத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அவனைப் பாதுகாக்க வேண்டுமென்கிற உங்களுடைய ஆசை குறைந்துவிடவில்லை. உண்மையில் அது அதிகரிக்கவே செய்திருக்கும்.
அதன் விளைவாக, உங்களுடைய பிள்ளை கலகம் செய்து ஆன்மீக ரீதியான, உணர்ச்சி ரீதியான, உடல் ரீதியான கேட்டில் கஷ்டப்படும்போது அதற்கு நீங்கள்தான் காரணமென்று நீங்கள் நினைக்கலாம். முன்பு சொல்லப்பட்ட ஜாய், அப்படித்தான் உணர்ந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் தோல்வியுணர்வால் அலைக்கழிக்கப்பட்டேன். நான் என்ன தவறு செய்தேன் என்பதை அறிய நடந்தவற்றை ஓயாமல் சிந்தித்துக்கொண்டேயிருந்தேன்.” முக்கியமாக, இதுமாதிரியான சமயங்களில்தான் “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட” யெகோவா எதிர்பார்க்கிறார். நீங்கள் அவ்வாறு செய்தால் அவர் உங்களுக்கு உதவுவார். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என்கிறார் சங்கீதக்காரன். (சங்கீதம் 55:22) ஜாய் அதுபோன்ற ஆறுதலைத்தான் பெற்றார். “என் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொன்றையும் யெகோவாவிடம் சொன்னேன். என்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் ஊற்றிவிட்டேன். அது மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது” என்று அவர் சொல்கிறார்.
ஓர் அபூரண பெற்றோராக, உங்கள் பிள்ளையை வளர்ப்பதில் நீங்கள் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் அவற்றையே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமென்ன இருக்கிறது? தெளிவாகவே, யெகோவா அப்படி நினைப்பதில்லை. “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” என்று தேவாவியால் தூண்டப்பட்ட சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 130:3) நீங்களொரு பரிபூரண பெற்றோராக இருந்திருந்தாலும்கூட, உங்கள் பிள்ளை கலகம் செய்திருக்கலாம். அதனால் உங்கள் உணர்ச்சிகளையெல்லாம் ஜெபத்தில் யெகோவாவிடம் வெளிப்படுத்துங்கள். அதைச் சமாளிக்க அவர் உங்களுக்கு உதவுவார். என்றாலும், யெகோவாவின் சேவையில் உறுதியாயிருப்பதற்கும் சாத்தானுக்குப் பலியாகாமல் இருப்பதற்கும் நீங்கள் அதிகம் செய்யவேண்டும்.
மனத்தாழ்மையாயிருங்கள்
“ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” என்று பேதுரு எழுதினார். (1 பேதுரு 5:6) உங்களுடைய பிள்ளை கலகம் செய்யும்போது மனத்தாழ்மை ஏன் தேவைப்படுகிறது? கலகம் செய்யும் பிள்ளையினால் நீங்கள் குற்றவுணர்வையும் வேதனையையும் அனுபவிப்பதோடு அவமானமாகவும் உணரலாம். உங்களுடைய பிள்ளையின் செயல்கள், குடும்பத்தின் நற்பெயரைக் குலைத்துவிட்டதாக நீங்கள் கவலைப்படலாம். முக்கியமாக கிறிஸ்தவ சபையிலிருந்து அவன் நீக்கப்பட்டிருந்தால் நீங்கள் அவ்வாறு உணரலாம். அவமான உணர்வும் தலைக்குனிவும் ஒன்றுசேர்ந்து கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நீங்கள் செல்வதைத் தடைசெய்யலாம்.
இதுபோன்ற சூழ்நிலையைக் கையாளுவதில் நீங்கள் நடைமுறை ஞானத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்” என்று நீதிமொழிகள் 18:1 சொல்கிறது. உங்களுடைய மனவேதனையின் மத்தியிலும் நீங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம், இன்றியமையாத ஆலோசனையையும் உற்சாகத்தையும் பெறமுடியும். “ஆரம்பத்தில் நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. ஆனால் நான் வழக்கமாகச் செய்துவரும் ஆன்மீகக் காரியங்களின் முக்கியத்துவத்தை நினைத்துப்பார்த்தேன். தவிர, நான் வீட்டிலேயே அடைந்துகிடந்தால் என்னுடைய பிரச்சினைகளைப் பற்றியே சதா நினைத்துக்கொண்டிருப்பேன். கட்டியெழுப்பும் ஆன்மீகக் காரியங்களில் என் மனதை ஒருமுகப்படுத்த கூட்டங்கள் எனக்கு உதவின. என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததற்கும், சகோதர சகோதரிகளின் அன்பான ஆதரவைத் தவறவிடாமல் இருந்ததற்கும் நான் சந்தோஷப்படுகிறேன்” என்று ஜாய் ஒத்துக்கொள்கிறார்.—எபிரெயர் 10:24, 25.
குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொரு நபரும் கிறிஸ்தவனாக, ‘தன்தன் பாரத்தைச் சுமக்கவேண்டும்’ என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். (கலாத்தியர் 6:5) பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டுமென்றும் அவர்களைச் சிட்சிக்க வேண்டுமென்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். மேலும், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும், மரியாதை கொடுக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பதில் சிறந்ததைச் செய்தால் பெற்றோர் கடவுளுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பார்கள். (எபேசியர் 6:1-4) பெற்றோரின் அன்பான சிட்சைக்குக் கீழ்ப்படியாமல் ஒரு பிள்ளை கலகம் செய்தால் அந்தப் பிள்ளையுடைய பெயர்தான் கெட்டுப்போகும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” என்று நீதிமொழிகள் 20:11 சொல்கிறது. சாத்தானுடைய கலகம், உண்மையை அறிந்தவர்கள் மத்தியில் யெகோவாவின் நற்பெயரை நிச்சயமாகவே கெடுத்துப்போடவில்லை.
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என்று பேதுரு எச்சரிக்கிறார். (1 பேதுரு 5:8) ஒரு சிங்கத்தைப்போல, பிசாசு இளைஞர்களையும் அனுபவம் இல்லாதவர்களையுமே அடிக்கடி குறிவைக்கிறான். பூர்வ காலங்களில், சிங்கங்கள் இஸ்ரவேலில் சுற்றித்திரிந்தன. அவை வீட்டு விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தன. ஓர் இளம் ஆடு மந்தையிலிருந்து பிரிந்து சென்றால் அது சுலபமாக மாட்டிக்கொள்ளும். இயல்புணர்வால் ஒரு தாயாடு தன்னுடைய குட்டியைக் காப்பாற்ற அதனுடைய உயிரையே பணயம் வைக்கலாம். என்றாலும், முழுமையாய் வளர்ந்த செம்மறியாடுகூட ஒரு சிங்கத்தை எதிர்த்து நிற்க முடியாது. எனவே, மந்தையைப் பாதுகாக்க தைரியமிக்க மேய்ப்பர்கள் தேவைப்பட்டார்கள்.—1 சாமுவேல் 17:34, 35.
யெகோவா தம்முடைய அடையாளப்பூர்வ ஆட்டை ‘கெர்ச்சிக்கும் சிங்கத்திடமிருந்து’ பாதுகாக்க, ஆன்மீக மேய்ப்பர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்கள் ‘பிரதான மேய்ப்பரான’ இயேசு கிறிஸ்துவின் கீழுள்ள மந்தையைக் கவனித்துக்கொள்கிறார்கள். (1 பேதுரு 5:4) இதுபோன்று நியமிக்கப்பட்ட மனிதர்களுக்குப் பேதுரு இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும் . . . கண்காணிப்பு செய்யுங்கள்.” (1 பேதுரு 5:1-3) இந்த மேய்ப்பர்கள் பெற்றோரான உங்களுடைய உதவியுடன் ஓர் இளைஞனுக்குத் தன்னுடைய ஆன்மீக வாழ்க்கையை சரிசெய்துகொள்ள உதவ முடியும்.
கலகம் செய்யும் உங்களுடைய பிள்ளைக்குக் கிறிஸ்தவ மேய்ப்பர்கள் அறிவுரை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படும்போது, அந்தச் சிட்சையிலிருந்து அவனைப் பாதுகாப்பதற்கு நீங்கள் தூண்டப்படலாம். என்றாலும், அப்படிச் செய்வதே மோசமான தவறு. ஆன்மீக மேய்ப்பர்களுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்றல்ல மாறாக “[பிசாசுக்கு] எதிர்த்து நில்லுங்கள்” என்றே பேதுரு சொல்கிறார்.—1 பேதுரு 5:9.
சிட்சை கடுமையாக இருக்கும்போது
உங்களுடைய பிள்ளை முழுக்காட்டப்பட்டவனாகவும் மனந்திரும்பாதவனாகவும் இருந்தால், சபையிலிருந்து நீக்கப்படும் கடுமையான சிட்சையை அவன் பெறலாம். அந்தச் சமயத்திலிருந்து அவனுடைய வயதுக்கேற்றாற்போலும், மற்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போலும் அவனோடுள்ள உங்களுடைய கூட்டுறவு வரம்பிற்குட்பட்டதாக இருக்கும்.
உங்களுடைய பிள்ளை வயது வராதவனாகவும் உங்களுடன் இருப்பவனாகவும் இருந்தால், இயல்பாகவே அவனுடைய சரீரத் தேவைகளை நீங்கள் கவனித்துக்கொள்வீர்கள். மேலும் அவனுக்கு ஒழுக்கப் பயிற்சியும், சிட்சையும் தேவைப்படுகின்றன. அவற்றைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையதே. (நீதிமொழிகள் 1:8-18; 6:20-22; 29:17) அவனுடன் பைபிள் படிப்பை நடத்த நீங்கள் விரும்பலாம். அதில் அவன் நேரடியாகப் பங்குகொள்ளும்படி செய்யலாம். பல்வேறு வசனங்களுக்கும் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” கொடுத்திருக்கும் பிரசுரங்களுக்கும் அவனுடைய கவனத்தைத் திருப்பலாம். (மத்தேயு 24:45) மேலும் அந்தப் பிள்ளையைக் கூட்டங்களுக்கு உங்களோடு அழைத்து வரலாம், உங்களோடு உட்கார வைத்துக்கொள்ளலாம். ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கு அவன் செவிகொடுப்பான் என்ற நம்பிக்கையில் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.
வீட்டுக்கு வெளியே தங்கியிருக்கிற, வயது வந்த ஒருவன் சபைநீக்கம் செய்யப்படும்போது சூழ்நிலை வேறுபடுகிறது. பூர்வ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பெருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.” (1 கொரிந்தியர் 5:11) சபைநீக்கம் செய்யப்பட்ட நபரிடம் அத்தியாவசியமான குடும்ப விஷயங்களுக்காகத் தொடர்புகொள்ள வேண்டியதிருக்கலாம். ஒரு கிறிஸ்தவப் பெற்றோர் அந்நபரோடு தேவையில்லாமல் கூட்டுறவுகொள்வதைத் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும்.
தவறு செய்த பிள்ளைக்குக் கிறிஸ்தவ மேய்ப்பர்கள் சிட்சை கொடுத்திருக்கும்போது, அவர்களுடைய பைபிள் அடிப்படையான நடவடிக்கையை நீங்கள் ஒதுக்கித்தள்ள முயற்சிப்பதோ, குறைக்க முயற்சிப்பதோ ஞானமற்றதாக இருக்கும். கலகம் செய்யும் பிள்ளையோடு நீங்கள் சேர்ந்துகொள்வது நிச்சயம் உங்கள் பிள்ளைகளைப் பிசாசிடமிருந்து பாதுகாக்க முடியாது. உண்மையில், உங்களுடைய சொந்த ஆன்மீக ஆரோக்கியத்தையே ஆபத்துக்குள்ளாக்குகிறீர்கள். அதற்கு மாறாக, மேய்ப்பர்களின் முயற்சிகளை ஆதரிப்பதன்மூலம் நீங்கள் “விசுவாசத்தில் உறுதியாயிரு”ப்பீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த உதவியையும் அளிப்பீர்கள்.—1 பேதுரு 5:9.
யெகோவா உங்களை ஆதரிப்பார்
உங்களுடைய பிள்ளை கலகம் செய்தால் அது உங்களுக்கு மட்டுமே நிகழ்வதில்லை என்பதை நினைவில் வையுங்கள். மற்ற கிறிஸ்தவப் பெற்றோர்களும் இதுமாதிரியான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். நாம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும்சரி, யெகோவா நம்மை ஆதரிப்பார்.—சங்கீதம் 68:19.
ஜெபம் செய்து யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள். தொடர்ந்து கிறிஸ்தவ சபையோடு தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். நியமிக்கப்பட்டுள்ள மேய்ப்பர்கள் கொடுக்கும் சிட்சைக்கு ஆதரவு காட்டுங்கள். இவ்வாறு செய்வதன்மூலம் நீங்கள் உறுதியாயிருக்க முடியும். உங்களுடைய அருமையான முன்மாதிரி, யெகோவாவிடம் திரும்பவேண்டுமென்று அவர் விடுக்கும் அன்பான அழைப்பிற்கு உங்கள் பிள்ளை செவிகொடுக்க உதவலாம்.—மல்கியா 3:6, 7.
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜெபத்திலிருந்தும் கிறிஸ்தவ சபையிலிருந்தும் பலத்தைப் பெறுங்கள்