மீளாத் துயரம்
சமீபத்தில் ஆராய்ச்சியாளர் ஒருவர், மரணத்தில் அன்பானவர்களை இழந்தவர்களின் துயரங்களைக் காலம் எந்தளவுக்கு ஆற்றுகிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினார். பல வருடங்களுக்கு முன்னால் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த சில பெற்றோருக்கு அவர் கேள்வித்தாள்களை அனுப்பினார். அவர்களில் சிலர் மட்டுமே அதற்குப் பதிலளித்தார்கள். விலாடமிர் என்ற பெயருடைய ஒரு தந்தை, தன்னுடைய மகனைப் பறிகொடுத்து ஐந்து வருடங்கள் கடந்திருந்தாலும் அவனைப்பற்றிப் பேசும்போதெல்லாம் துக்கம் நெஞ்சை அடைப்பதாகச் சொன்னார்.a
மரணத்தில் அன்பானவர்களைப் பறிகொடுத்த பெற்றோர் அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் தவிப்பது இயல்பானதே. வில்லியம் என்பவருடைய 18 வயது மகன், பத்து வருடங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இறந்துவிட்டான்; வில்லியம் இவ்வாறு எழுதுகிறார்: “அந்த இழப்பின் வலி என்னைவிட்டு நீங்கவே நீங்காது, நான் சாகும்வரை அது இருக்கும்.” ஐந்து வருடங்களுக்கு முன்னால் திடீரென்று ஏற்பட்ட ஒரு நோயால் தன் மகனை இழந்த லூஸி, இவ்வாறு எழுதுகிறார்: “ஆரம்பத்தில், ‘என் பிள்ளை சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறான்’ என்றே எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஏதோ ஒரு கெட்ட கனவுதான் கண்டிருக்கிறேன், அது உண்மையாய் இருக்காது என்றே நினைத்தேன்; ஆனால், போன என் பிள்ளை திரும்பி வரப்போவதில்லை என்ற நிஜத்தை சில நாட்களுக்குப் பிறகுதான் உணர ஆரம்பித்தேன். என் மகன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன; ஆனால் இன்னமும் சில சமயங்களில் நான் தனியாக இருக்கும்போது அவனை நினைத்து அழுதுகொண்டுதான் இருக்கிறேன்.”
பிள்ளைகளைப் பறிகொடுத்த விலாடமிர், வில்லியம், லூஸி போன்ற பெற்றோரால் ஏன் இன்னும் துயரத்திலிருந்து மீள முடியவில்லை? சில காரணங்களை நாம் ஆராயலாம்.
தாளாத துன்பம்—ஏன்?
மனித உறவுகளிலேயே பெற்றோர்-பிள்ளை உறவு மிகவும் விசேஷித்தது என்பதால், தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கையில் பெற்றோர் இன்ப வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறார்கள். அந்தப் பச்சிளம் மொட்டைக் கையிலேந்திக்கொண்டு, அது துயிலுவதை இமை கொட்டாமல் பார்ப்பதும் அதன் பூஞ்சிரிப்பைக் கண்டு ரசிப்பதும் பேரானந்தத்தை, திருப்தியைத் தருகிறது. அன்புள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாராட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்க்கிறார்கள். பண்பாகவும் பணிவாகவும் நடந்துகொள்வதற்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:7, 11) தாங்கள் கொடுத்த பயிற்சிகளின்படியே பிள்ளைகள் நடந்துகொள்ளும்போது, பெற்றோர் பெருமிதமடைகிறார்கள்; ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அவர்களைப் பேணி வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்.
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கடினமாக உழைக்கிறார்கள். எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகள் சொந்தக் காலில் நின்று ஒரு குடும்பத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் பணத்தையோ பொருட்களையோ சேர்த்துவைக்கிறார்கள். (2 கொரிந்தியர் 12:14) இப்படி பாசத்தையும் உழைப்பையும் கொட்டி, நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பது சாவதற்கு அல்ல வாழ்வதற்கே என்பது தெளிவாகத் தெரிகிறது, அல்லவா? ஒரு பிள்ளை சாகும்போது, அவனைப் பேணி வளர்க்கும் பணி பாதியிலேயே நின்றுவிடுகிறது; அந்தப் பெற்றோரின் ஆசைக் கனவுகள் சிதைந்து விடுகின்றன. அந்தப் பிள்ளைமீது பெற்றோர் காட்டும் அன்பும் பாசமும் இடையிலேயே தடுக்கப்பட்டு மரணமெனும் கல்லால் அணை போடப்படுகிறது. ஒரு சமயத்தில், தங்களுடைய மகனோ மகளோ குடிகொண்டிருந்த அவர்களுடைய இதயங்கள் இப்பொழுது மேகம் கலைந்த வானம்போல் வெறிச்சோடிப் போகின்றன. ஆழ்ந்த துயரம் பெற்றோரின் மனதை அப்பிக்கொள்கிறது.
பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர் படும் கடுமையான, தாளாத துயரத்தைப்பற்றி பைபிளும் சொல்கிறது. முற்பிதாவான யாக்கோபு தன்னுடைய மகன் யோசேப்பு கொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டபோது எப்படி நடந்துகொண்டார் என்பதை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “[யாக்கோபு] தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் [பிரேதக்குழியில்] இறங்குவேன் என்றான்.” இறந்துபோனதாக நினைத்த தனது மகனை எண்ணிப் பல வருடங்களுக்குப் பிறகும்கூட யாக்கோபு துக்கப்பட்டார். (ஆதியாகமம் 37:34, 35; 42:36-38) தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்துத் தவித்த நகோமி என்னும் விசுவாசமுள்ள பெண்ணின் உதாரணமும் பைபிளில் இருக்கிறது. தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்ததால், “இன்பம்” என அர்த்தம்கொள்ளும் நகோமி என்ற தன்னுடைய பெயரை, “கசப்பு” என்று அர்த்தம்கொள்ளும் மாராள் என மாற்றிக்கொள்ள அவள் நினைத்தாள்.—ரூத் 1:3-5, 20, 21.
என்றாலும், பெற்றோர் அனுபவிக்கும் துயரத்தை மட்டுமல்லாமல், துயரப்படுவோருக்கு யெகோவா எவ்வாறு பலம் அளிக்கிறார் என்பதையும் பைபிள் குறிப்பிடுகிறது. வேதனையால் புலம்பித் தவிப்பவர்களுக்குக் கடவுள் ஆறுதல் அளிக்கும் சில வழிகளை நாம் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.