கூடிவருவது ஏன் அவசியம்?
கிறிஸ்டீனுடைய கணவர் திடீரென அவரைக் கைகழுவி விட்டார்; அதுவும், 20 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பிறகு! ஏழு மகன்களையும் ஒரு மகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு தனிமரமான அவர்மேல் விழுந்தது. அந்தப் பிள்ளைகள் 7 முதல் 18 வயதுள்ளவர்களாக இருந்தார்கள். “இப்பொழுது எல்லா முக்கியமான தீர்மானங்களையும் நானாகவே எடுக்க வேண்டியிருந்தது; இந்தக் கூடுதல் சுமையினால் நான் மிகவும் துவண்டுவிட்டேன், ஆதரவுக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஏங்கித் தவித்தேன்” என்று அவர் கூறுகிறார். தேவையான உதவியை அவர் எங்கே பெற்றார்?
கிறிஸ்டீன் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்தவக் கூட்டங்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் உயிர்நாடியாக இருந்தன. கூட்டங்களில் கலந்துகொண்டபோது நண்பர்களின் ஆதரவையும் கடவுளுடைய வார்த்தையின் வழிநடத்துதலையும் பெற்றோம். தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டது, எங்களுடைய குடும்ப வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான அம்சத்திலும் உதவியது.”
‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ நாம் அனைவருமே பலவிதமான சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1, NW) கிறிஸ்டீனைப்போலவே நீங்களும், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களை உயிர்நாடியாகக் கருதலாம். யெகோவாவை வணங்குவதில் அவை அதிமுக்கியமானதாய் இருப்பதை ஒத்துக்கொள்ளலாம். பெரும்பாலும், ஒவ்வொரு வாரமும் நடக்கும் ஐந்து கூட்டங்களும் கடவுள்மீது உங்களுக்கு இருக்கும் அன்பை அதிகரிக்கின்றன; உங்களுடைய எதிர்கால நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன; சோதனைகளைச் சமாளிப்பதற்கு பைபிளின் அடிப்படையில் வழிநடத்துதலைத் தருகின்றன.
என்றாலும், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்வது சிலருக்குக் கடினமாக இருக்கிறது. நாளின் இறுதியில் அவர்கள் மிகவும் களைப்படைந்து விடுகிறார்கள்; தகுந்த ஆடைகளை உடுத்திக்கொண்டு கூட்டங்களுக்குப் பயணிப்பதை நினைத்தாலே அவர்களுக்கு மலைப்பாக இருக்கலாம். சிலருடைய வேலை நேரம், அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு தொடர்ந்து இடையூறாக இருக்கிறது. எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு அவர்கள் தங்கள் வருவாயில் கொஞ்சத்தை இழக்க வேண்டியிருக்கும் அல்லது தங்கள் வேலையையே விட்டுவிட வேண்டியிருக்கும். வேறுசிலர் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதைவிட ஏதாவது பொழுதுபோக்கில் நேரம் செலவிடுவது அதிக புத்துணர்ச்சி தருவதாக நினைப்பதால் கூட்டங்களைத் தவறவிடலாம்.
ஆனால், கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு என்ன முக்கிய காரணங்கள் இருக்கின்றன? கூட்டங்களின்போது தனிப்பட்டவிதமாக நீங்கள் எப்படிப் புத்துணர்ச்சி அடையலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் காண மத்தேயு 11:28-30 வசனங்களில் இயேசு கொடுத்த அன்பான அழைப்பை நாம் சற்று கலந்தாராயலாம். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.
“என்னிடத்தில் வாருங்கள்”
“என்னிடத்தில் வாருங்கள்” என்று இயேசு அழைத்தார். இயேசுவின் அழைப்புக்கு நாம் கீழ்ப்படிதலைக் காட்டும் ஒரு வழி, தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்வதாகும். அப்படிக் கலந்துகொள்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன; ஏனெனில், “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் இயேசு கூறினார்.—மத்தேயு 18:20.
முதல் நூற்றாண்டில், இயேசு தம்மைப் பின்பற்றும்படி பலதரப்பட்ட மக்களை நேரடியாகவே அழைத்தார். இதன்மூலம் தம்மோடு நெருங்கிப் பழகி மகிழ அவர்களுக்கு வாய்ப்பளித்தார். சிலர் உடனே ஏற்றுக்கொண்டார்கள். (மத்தேயு 4:18-22) மற்றவர்கள் பொருளாதார நாட்டங்கள் முதலியவற்றால் அந்த அழைப்பைத் தட்டிக்கழித்தார்கள். (மாற்கு 10:21, 22; லூக்கா 9:57-62) இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொன்னார்: “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்.”—யோவான் 15:16.
கிறிஸ்து இறந்து, உயிர்த்தெழுந்த பிறகு, ஒரு மனிதராக தம்முடைய சீஷர்களோடுகூட இருக்கவில்லை. ஆனால், வேறு விதத்தில் அவர்களோடு இருந்தார். அவர்களுடைய நடவடிக்கைகளை வழிநடத்துவதன் மூலமும், தம்முடைய அறிவுரைக்கு அவர்கள் எப்படிக் கீழ்ப்படிகிறார்கள் என்பதைக் கவனிப்பதன் மூலமும் தொடர்ந்து அவர்களோடு இருந்தார். உதாரணமாக, இயேசு உயிர்த்தெழுந்து சுமார் 70 வருடங்களுக்குப் பிறகு ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்கு அறிவுரையையும் உற்சாகத்தையும் அளித்தார். அந்தச் சபைகளில் இருந்த ஒவ்வொருவருடைய பலத்தையும் பலவீனத்தையும் அவர் நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவருடைய வார்த்தைகள் காட்டின.—வெளிப்படுத்துதல் 2:1-3:22.
இயேசு இன்றும் தம்முடைய சீஷர்கள் ஒவ்வொருவரின்மீதும் ஆழ்ந்த அக்கறை உள்ளவராக இருக்கிறார். “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று அவர் உறுதியளிக்கிறார். (மத்தேயு 28:20) முடிவு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; எனவே, தம்மைப் பின்பற்றும்படி இயேசு விடுத்த அழைப்பிற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். இதற்கு, மற்றக் காரியங்களோடு கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதும் அவசியமாயிருக்கிறது. நாம் அவருக்குச் செவிகொடுக்க வேண்டுமென்றும் ‘அவரால் நாம் போதிக்கப்பட்டிருக்க’ வேண்டுமென்றும் இயேசு விரும்புகிறார். கூட்டங்களில் தவறாமல் அளிக்கப்படும் பேச்சுகள் வாயிலாகவும் பைபிள் சார்ந்த படிப்புகள் வாயிலாகவும் அவர் நமக்குப் போதிக்கிறார். (எபேசியர் 4:20, 21) “என்னிடத்தில் வாருங்கள்” என்ற இயேசுவின் அழைப்புக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!”
கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான ஒரு முக்கிய காரணம் உற்சாகத்தைப் பெறுவதற்காகத்தான். (எபிரெயர் 10:24, 25) நிச்சயமாகவே, நம்மில் அநேகர் பல வழிகளில் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறோம்.’ உடல்நலக்குறைவு போன்ற அநேக தனிப்பட்ட கவலைகளால் நீங்கள் தளர்ந்து போயிருக்கலாம். ஆனால், கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்கையில் உங்களால் உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்ள முடியும். (ரோமர் 1:11, 12, NW) உதாரணமாக, கூட்டங்களில் விசுவாசத்தைப் பலப்படுத்தும் பதில்களை நீங்கள் கேட்பீர்கள்; பைபிள் அடிப்படையிலான உங்களுடைய நம்பிக்கையைக் குறித்து நினைப்பூட்டப்படுவீர்கள்; சோதனைகளைச் சகித்து நிற்கும் மற்றவர்களின் விசுவாசத்தைக் கவனிப்பீர்கள். இவையெல்லாம், உங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்கவும் அவற்றைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் உங்களுக்கு உதவும்.
தீராத வியாதியினால் அவதிப்படுகிற ஒரு கிறிஸ்தவப் பெண் சொல்வதைக் கவனியுங்கள். “என்னுடைய நோயின் காரணமாக மருத்துவமனையில் சில காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகு, கூட்டங்களுக்குப் போவது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் அதுதான் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கும் இடம். சகோதர சகோதரிகளின் அன்பும் பாசமும் என் மனதை சந்தோஷத்தால் நிரப்புகின்றன, யெகோவாவாலும் இயேசுவாலும் கொடுக்கப்படுகிற வழிநடத்துதலும் போதனையும் என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகின்றன” என்று அவர் சொல்கிறார்.
“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது”
நாம் கலந்தாராய்ந்து கொண்டிருக்கிற வசனத்தில் இயேசு, “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னதைக் கவனியுங்கள். இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் நாம் அவருடைய சீஷர்களாக ஆகிறோம்; கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும்போது அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். (மத்தேயு 28:19, 20) நாம் இயேசுவின் சீஷர்களாக நிலைத்திருப்பதற்குத் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்வது முக்கியம். ஏன்? ஏனென்றால், இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனைகள், வழிமுறைகள் பற்றியும் கிறிஸ்தவக் கூட்டங்களில்தான் நாம் கற்றுக்கொள்கிறோம்.
என்ன சுமையை நாம் சுமக்கும்படி கிறிஸ்து விரும்புகிறார்? தேவனுடைய சித்தத்தைச் செய்வதே அந்தச் சுமை; அது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு. இந்தச் சுமையைத்தான் இயேசுவும் சுமந்தார். (யோவான் 4:34; 15:8) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு முயற்சி தேவைப்படுகிறது, ஆனால் இந்தச் சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிக பாரமானதல்ல. நம்முடைய சொந்த பலத்தினால் அதைத் தாங்க முயலும்போது அது அதிக பாரமானதாகத் தோன்றலாம். ஆனால், கடவுளுடைய ஆவிக்காக ஜெபம் செய்து, கூட்டங்களில் கிடைக்கும் ஆன்மீக உணவை உட்கொள்ளும்போது கடவுள் அளிக்கும் “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை” நாம் பெற்றுக்கொள்வோம். (2 கொரிந்தியர் 4:7, NW) கூட்டங்களுக்குத் தயாரித்து அவற்றில் கலந்துகொள்வதன் மூலம் யெகோவா மீதுள்ள நம்முடைய அன்பு பலப்படும். அன்பினால் நாம் தூண்டப்படுகையில் கடவுளுடைய கட்டளைகள் ‘பாரமானவையாக இருப்பதில்லை.’—1 யோவான் 5:3.
வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பது, உடல்நலக்குறைவைச் சமாளிப்பது, மற்ற சொந்த பிரச்சினைகளைக் கையாளுவது போன்றவை மக்கள் பொதுவாக எதிர்ப்படுகிற சவால்களில் சில. என்றாலும், அவற்றை நல்லவிதமாகச் சமாளிப்பதற்கு மனித ஞானத்தை நாம் சார்ந்திருப்பதில்லை. சபைக் கூட்டங்கள் ‘கவலைப்படுவதை நிறுத்த’ நமக்கு உதவுகின்றன; ஏனெனில், யெகோவா நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் உதவுகிறார். (மத்தேயு 6:25-33, NW) உண்மையில், கிறிஸ்தவக் கூட்டங்கள் யெகோவா நம்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிக்காட்டே.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்”
கடவுளுடைய வார்த்தை கலந்தாலோசிக்கப்படும் யூத ஜெப ஆலயத்திற்குச் செல்வது இயேசுவின் வழக்கமாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், ஏசாயாவின் சுருளை எடுத்து பின்வருபவற்றை அவர் வாசித்தார்: “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.” (லூக்கா 4:16, 18, 19) இந்த வார்த்தைகளை இயேசு தமக்குப் பொருத்தி, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று சொன்னதைக் கேட்டபோது எவ்வளவு சிலிர்ப்பூட்டுவதாய் இருந்திருக்கும்!—லூக்கா 4:21.
சாந்தமுள்ள ‘பிரதான மேய்ப்பரான’ இயேசு, தம்மைப் பின்பற்றுகிறவர்களை இன்றும் ஆன்மீக ரீதியில் கவனித்துக்கொள்கிறார். (1 பேதுரு 5:1-4) அவருடைய வழிநடத்துதலின்கீழ் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் மேய்ப்பர்களை நியமித்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW; தீத்து 1:5-9) இந்த மனிதர்கள் கனிவோடு ‘தேவனுடைய மந்தையை மேய்க்கிறார்கள்.’ அதோடு, கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதன்மூலம் நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். நீங்களும் கூட்டங்களில் கலந்துகொள்வதன்மூலம் இந்த “மனிதர்களில் வரங்களுக்கு” நன்றியுணர்வைக் காட்டலாம்; நீங்கள் கூட்டங்களுக்கு வருகை தந்து அவற்றில் பங்கேற்பதன்மூலம் மற்றவர்களையும் உற்சாகப்படுத்த முடியும்.—அப்போஸ்தலர் 15:30-33; 20:28; எபேசியர் 4:8, 11-13.
‘உங்கள் ஆத்துமாக்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்’
கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது புத்துணர்ச்சியைப் பெற நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு வழி, “நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்” என்று இயேசு சொன்ன அறிவுரைக்குக் கீழ்ப்படிவதுதான். (லூக்கா 8:18) கற்றுக்கொள்ள மிகவும் ஆவலாயிருந்த மக்கள், இயேசு சொன்னவற்றை கூர்ந்து கவனித்தார்கள். அவர் கூறிய உவமைகளை விளக்கும்படி அவரிடம் கேட்டார்கள்; அதன் விளைவாக, விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டார்கள்.—மத்தேயு 13:10-16.
நம்முடைய கூட்டங்களில் கொடுக்கப்படுகிற பேச்சுகளைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் இதுபோன்ற ஆன்மீகக் காரியங்களுக்கான பசியார்வம் உள்ளவர்களை நீங்கள் பின்பற்றலாம். (மத்தேயு 5:3, 6) பேச்சாளர் விஷயங்களை விளக்கும் விதத்தைக் கவனிக்க முயற்சி செய்கையில் உங்கள் கவனம் சிதறாமல் இருக்கும். மனதுக்குள்ளேயே இது போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய வாழ்க்கையில் இந்த விஷயங்களை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்? இதைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்? இந்தக் குறிப்பை நான் எப்படி விளக்குவேன்?’ கூடுதலாக, பேச்சாளர் முக்கிய குறிப்புகளை விளக்குவதற்குப் பயன்படுத்தும் வேத வசனங்களை எடுத்துப் பாருங்கள். நீங்கள் எந்தளவுக்குக் கவனம் செலுத்துகிறீர்களோ அந்தளவுக்குக் கூட்டங்கள் புத்துணர்ச்சி அளிப்பவையாக இருக்கும்.
கூட்டத்திற்குப் பிறகு, தகவல்களைக் குறித்து மற்றவர்களுடன் கலந்துபேசுங்கள். அந்த விஷயத்தின்மீதும் அதை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதன்மீதும் கவனம் செலுத்துங்கள். இதுபோன்ற உற்சாகமூட்டும் உரையாடல்கள் மூலமாக கூட்டங்களிலிருந்து இன்னுமதிக புத்துணர்ச்சியைப் பெறலாம்.
நிச்சயமாகவே, நாம் ஒன்றுகூடி வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இப்போது கலந்தாலோசித்த நன்மைகளை மறுபார்வை செய்தபிறகு, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘“என்னிடத்தில் வாருங்கள்” என்ற இயேசுவின் அழைப்பிற்கு நான் கீழ்ப்படிகிறேனா?’
[பக்கம் 11-ன் படங்கள்]
நீங்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதை மற்ற நடவடிக்கைகள் தடை செய்கின்றனவா?