உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 8/1 பக். 8-பக். 11 பாரா. 8
  • எசேக்கியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எசேக்கியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘அத்தேசம் ஏதேன் தோட்டத்தைப்போல் ஆகப்போகிறது’
  • (எசேக்கியேல் 25:1–39:29)
  • “நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை”
  • (எசேக்கியேல் 40:1–48:35)
  • “என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்”
  • “நான் யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • பைபிள் புத்தக எண் 26—எசேக்கியேல்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • கடவுளுடைய ஆலயம்—அதன்மீது ‘உங்கள் இதயத்தை ஊன்ற வையுங்கள்!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ‘ஆலயத்தைப் பற்றி விளக்கிச் சொல்’
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 8/1 பக். 8-பக். 11 பாரா. 8

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

எசேக்கியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்​—⁠இரண்டாம் பகுதி

அ து டிசம்பர் பொ.ச.மு. 609. பாபிலோன் ராஜா எருசலேமின் கடைசி முற்றுகையை ஆரம்பித்துவிட்டார். பாபிலோனில் சிறைப்பட்டிருப்பவர்களுக்கு இதுவரையில் எசேக்கியேல் அறிவித்துவந்த செய்தி இதுதான்: அவர்கள் நெஞ்சார நேசித்த எருசலேம் நகரம் வீழ்ச்சியடையப் போகிறது, அது அழியப் போகிறது! ஆனால், இப்போதோ அவருடைய தீர்க்கதரிசனச் செய்தியின் பொருள் மாறுகிறது. கடவுளுடைய மக்கள் படப்போகிற துன்பங்களைக் கண்டு புறமத தேசங்கள் ஆனந்தமடைவார்கள்; அத்தேசங்களுக்கு வரவிருக்கும் அழிவை அவர் அறிவிக்கிறார். பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு எருசலேம் வீழ்ச்சியடைகையில், அவர் மற்றொரு செய்தியை அறிவிக்கிறார்: மெய் வணக்கம் வியக்கத்தக்க விதத்தில் மீண்டும் தழைக்கும்!

எசேக்கியேல் 25:1–48:35-ல் இஸ்ரவேலைச் சுற்றியிருந்த தேசங்களையும் கடவுளுடைய மக்களின் மீட்பையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அடங்கியுள்ளன.a எசேக்கியேல் 29:17-20-ஐ தவிர இப்பதிவுகள் எல்லாம் காலவரிசைப்படியும் பொருளுக்கேற்பவும் எழுதப்பட்டுள்ளன. இந்த நான்கு வசனங்கள் காலவரிசைப்படி இல்லாவிட்டாலும் எகிப்துக்கு எதிராக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தில் இவை உட்பட்டுள்ளன. கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட இந்த பைபிள் புத்தகத்திலுள்ள செய்தியும், ‘ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.

‘அத்தேசம் ஏதேன் தோட்டத்தைப்போல் ஆகப்போகிறது’

(எசேக்கியேல் 25:1–39:29)

எருசலேமின் வீழ்ச்சியைக் குறித்ததில் பிற தேசத்து மக்களின் மனப்பான்மை எப்படி இருக்கும் என்பதை யெகோவா முன்கூட்டியே அறிந்திருந்ததால், அம்மோன், மோவாப், ஏதோம், பெலிஸ்தியா, தீரு, சீதோன் ஆகிய தேசங்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கும்படி எசேக்கியேலிடம் அவர் சொல்கிறார். எகிப்து சூறையாடப்படப் போகிறது. கேதுரு மரத்தைப்போல் இருக்கிற ‘எகிப்தின் ராஜாவாகிய பார்வோனும் அவனுடைய திரளான ஜனமும்’ ‘பாபிலோன் ராஜாவுடைய பட்டயத்தால்’ வெட்டப்படுவார்கள்.—எசேக்கியேல் 31:2, 3, 12; 32:11, 12.

பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் “நகரம் அழிக்கப்பட்டது” என்ற செய்தியை எசேக்கியேலுக்கு அறிவிக்கிறார். அதன்பிறகு, சிறைபிடிக்கப்பட்டவர்களிடத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி ‘மௌனமாயிருப்பதில்லை.’ (எசேக்கியேல் 33:21, 22) அவர்கள் மீண்டும் தாயகத்திற்குத் திரும்பவிருப்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அவர் அறிவிக்கப்போகிறார். யெகோவா ‘தம் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை அவர்கள்மேல் ஏற்படுத்துவார்.’ (எசேக்கியேல் 34:23) ஏதோம் தேசம் பாழாக்கப்படும்; ஆனால், அதற்கு அப்பாலுள்ள யூதா தேசமோ ‘ஏதேன் தோட்டத்தைப்போல் ஆகப்போகிறது.’ (எசேக்கியேல் 36:35) தாயகம் திரும்பிய தமது மக்களை ‘கோகுவின்’ தாக்குதலிலிருந்து பாதுகாப்பதாக யெகோவா உறுதியளிக்கிறார்.—எசேக்கியேல் 38:2.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

29:8-12—எகிப்து 40 வருடங்களுக்குப் பாழாய் கிடந்தது எப்போது? பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு யூதாவில் இருந்த கொஞ்சநஞ்ச பேர் எகிப்துக்குத் தப்பியோடினார்கள். எரேமியா கொடுத்த எச்சரிப்பைக் காதில் வாங்காமல் அப்படிச் செய்தார்கள். (எரேமியா 24:1, 8-10; 42:7-22) ஆனால், அது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவில்லை; ஏனென்றால், நேபுகாத்நேச்சார் எகிப்துக்கு விரோதமாய்ப் படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து 40 வருடங்களுக்கு எகிப்து தேசம் பாழாய்க் கிடந்திருக்கலாம். இந்தப் பாழ்க்கடிப்பைக் குறித்து சரித்திரத்தில் அத்தாட்சிகள் எதுவும் இல்லாவிட்டாலும், அது நடந்தது என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்; ஏனென்றால், யெகோவா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுபவர்.—ஏசாயா 55:11.

29:18—எவ்வாறு “ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று”? நேபுகாத்நேச்சாருடைய துருப்புகள் அணிந்திருந்த தலைக்கவசம் தலையில் உரசி உரசி அவர்களுடைய தலை மொட்டையானது; கொத்தளங்களையும் அரண்களையும் கட்டுவதற்கான சாமான்களைச் சுமந்து சுமந்து அவர்களுடைய தோள்பட்டையின் தோல் உரிந்துபோனது; அந்தளவுக்கு தீரு நகரத்தின் முக்கியப் பகுதியின்மீது போடப்பட்ட முற்றுகை தீவிரமானதாயும் கடுமையானதாயும் இருந்தது.—எசேக்கியேல் 26:7-12.

நமக்குப் பாடம்:

29:19, 20. தீருவின் குடிகள் தங்களுடைய பெரும்பான்மையான செல்வத்துடன் தீவு நகரத்திற்கு தப்பியோடிவிட்டதால் நேபுகாத்நேச்சாருக்கு தீருவிலிருந்து அற்பசொற்ப கொள்ளைப் பொருட்களே கிடைத்தன. நேபுகாத்நேச்சார் தற்பெருமையும் சுயநலமுமிக்க புறமத அரசனாகவும் இருந்தபோதிலும், அவனது சேவைக்கு ஈடாக எகிப்தை ‘அவனுடைய சேனைக்குக் கூலியாக’ யெகோவா கொடுத்தார். மெய்க் கடவுளைப் பின்பற்றி, நாமும்கூட அரசாங்கம் நமக்குச் செய்யும் சேவைகளுக்காக வரிசெலுத்த வேண்டும், அல்லவா? அரசாங்க அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்தோ, வரிப்பணத்தை அவர்கள் பயன்படுத்தும் விதத்தை வைத்தோ நம்முடைய கடமையைச் செய்யாமல் இருந்துவிடக்கூடாது.—ரோமர் 13:4-7.

33:7-9. நவீனகால காவற்கார வகுப்பாராகிய அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரும் அவர்களுடைய தோழர்களும், ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலிருந்தும் வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தைப்பற்றி’ ஜனங்களுக்கு எச்சரிப்பதிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.—மத்தேயு 24:21.

33:10-20. நமக்கு இரட்சிப்பு கிடைக்க வேண்டுமென்றால், பொல்லாத வழிகளை விட்டுவிட்டு கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழியில் நடக்க வேண்டும். ஆம், யெகோவாவுடைய வழியே ‘செம்மையானது.’

36:20, 21. இஸ்ரவேலர், ‘யெகோவாவுடைய ஜனங்கள்’ என்ற பெயருக்கேற்ப நடந்துகொள்ளவில்லை. இதன்மூலம் மற்ற தேசத்தாரின் மத்தியில் கடவுளுடைய பெயரை பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். நாமும்கூட ஏதோ கடமைக்காக யெகோவாவை வணங்குகிறவர்களாக ஒருபோதும் இருக்கக்கூடாது.

36:25, 37, 38. இன்று நாம் அனுபவித்து மகிழ்கிற ஆன்மீக பரதீஸ், ‘பரிசுத்தம்பண்ணப்பட்ட மனுஷரின் மந்தையால்’ நிரம்பியிருக்கிறது. ஆகவே, அதைச் சுத்தமாக வைத்திருக்க நாம் முயல வேண்டும்.

38:1-23. மாகோகு தேசத்தானாகிய கோகுவின் தாக்குதலிலிருந்து தம் மக்களை யெகோவா விடுவிப்பார் என்பதை அறிவது எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது! ‘இந்த உலகத்தின் அதிபதியான’ பிசாசாகிய சாத்தானுக்கு, பரலோகத்திலிருந்து வெளியேற்றிய பிறகு சூட்டப்பட்ட பெயரே கோகு. மாகோகின் தேசம் என்பது, சாத்தானும் அவனுடைய பேய்களும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள பூமியின் சுற்றுவட்டாரத்தைக் குறிக்கிறது.—யோவான் 12:31; வெளிப்படுத்துதல் 12:7-12.

“நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை”

(எசேக்கியேல் 40:1–48:35)

எருசலேம் நகரம் அழிக்கப்பட்டு இது 14-ஆம் வருடம். (எசேக்கியேல் 40:1) சிறையிருப்பின் காலம் இன்னும் 56 வருடங்களுக்குத் தொடரும். (எரேமியா 29:10) எசேக்கியேலுக்கு இப்போது ஏறக்குறைய 50 வயது. ஒரு தரிசனத்தில், அவர் இஸ்ரவேல் தேசத்திற்குக் கொண்டுவரப்படுகிறார். அவரிடம் இவ்வாறு சொல்லப்படுகிறது: “மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை.” (எசேக்கியேல் 40:2-4) ஒரு புதிய ஆலயத்தின் தரிசனத்தைப் பார்த்து எசேக்கியேல் எவ்வளவாய் பூரித்திருப்பார்!

எசேக்கியேல் காண்கிற அந்த மகத்தான ஆலயத்தில் 6 வாசல்கள், 30 உணவு அறைகள், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம், மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடம், தகனபலி செலுத்துவதற்கான பலிபீடம் ஆகியவை இருக்கின்றன. ஆலயத்திலிருந்து ‘புறப்பட்டு ஓடுகிற’ தண்ணீர் நதியாய்ப் பாய்ந்தோடுகிறது. (எசேக்கியேல் 47:1) தேசம் பங்கிடப்பட்டு கோத்திரங்களுக்கு நியமிக்கப்படுவதைப் பற்றியும் எசேக்கியேல் தரிசனம் காண்கிறார். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கிழக்கிலிருந்து மேற்காக இடங்கள் நியமிக்கப்படுவதை அவர் காண்கிறார். யூதாவுக்கும் பென்யமீனுக்கும் கொடுக்கப்பட்ட பங்குக்கு இடையில் நிர்வாகத்துக்குரிய பகுதி அமைந்திருக்கிறது. இப்பகுதியில், ‘கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலமும்’ யெகோவா ஷம்மா என அழைக்கப்பட்ட ‘நகரமும்’ அமைந்துள்ளன.—எசேக்கியேல் 48:9, 10, 15, 35.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

40:3–47:12—தரிசனத்தில் எசேக்கியேல் கண்ட ஆலயம் எதற்கு அடையாளமாக இருக்கிறது? தரிசனத்தில் எசேக்கியேல் கண்டதைப் போன்ற பிரமாண்டமான ஓர் ஆலயம் கட்டப்படவே இல்லை. இது கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்திற்கு, அதாவது நம் நாளில் தூய வணக்கத்திற்காக கடவுள் செய்துள்ள ஆலயத்தைப் போன்ற ஏற்பாட்டிற்கு அடையாளமாக இருக்கிறது. (எசேக்கியேல் 40:2; மீகா 4:1; எபிரெயர் 8:2; 9:23, 24) ஆசாரிய வகுப்பார் புடமிடப்படுகிற இந்த “கடைசி நாட்களில்” ஆலயத்தைப் பற்றிய தரிசனம் நிறைவேறி வருகிறது. (2 தீமோத்தேயு 3:1; எசேக்கியேல் 44:10-16; மல்கியா 3:1-3) என்றாலும், பரதீஸில் அந்தத் தரிசனம் இறுதியாக நிறைவேறும். ஆலயத்தைப் பற்றிய இந்தத் தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு தூய வணக்கம் மீண்டும் செழித்தோங்கும் என்ற உறுதியையும் ஒவ்வொரு யூத குடும்பத்திற்கும் தேசத்தில் சொந்தமாக இடம் கிடைக்கும் என்ற உறுதியையும் அளித்தது.

40:3–43:17—ஆலயத்தை அளப்பது எதற்கு அடையாளமாக இருக்கிறது? தூய வணக்கம் சம்பந்தமான யெகோவாவின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

43:2-4, 7, 9—ஆலயத்திலிருந்து அகற்ற வேண்டியிருந்த ‘ராஜாக்களின் பிரேதங்கள்’ எதைக் குறிக்கின்றன? இந்தப் பிரேதங்கள் விக்கிரகங்களையே குறிப்பதாகத் தெரிகிறது. எருசலேமின் ராஜாக்களும் அதன் குடிமக்களும் கடவுளுடைய ஆலயத்தை விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தியிருந்தார்கள்; சொல்லப்போனால், அவற்றைத் தங்களுடைய ராஜாக்களாக்கியிருந்தார்கள்.

43:13-20—தரிசனத்தில் எசேக்கியேல் கண்ட அந்தப் பலிபீடம் எதற்கு அடையாளமாக இருக்கிறது? இயேசு கிறிஸ்துவின் மீட்கும்பலி சம்பந்தமான கடவுளுடைய சித்தத்திற்கு இது அடையாளமாக இருக்கிறது. இந்த ஏற்பாட்டின் மூலமாகவே அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள், ‘திரள்கூட்டத்தார்’ கடவுளுக்கு முன்பாக சுத்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-14; ரோமர் 5:1, 2) அதனால்தான், சாலொமோனுடைய ஆலயத்திலுள்ள “வெண்கலக் கடல்” எனும் தொட்டி, அதாவது ஆசாரியர்கள் தங்களைக் கழுவிக்கொள்வதற்குப் பயன்படுத்திய மாபெரும் தண்ணீர்த் தொட்டி ஆலயத்தைப் பற்றிய தரிசனத்தில் காணப்படாமல் இருந்திருக்கலாம்.—1 இராஜாக்கள் 7:23-26.

44:10-16—ஆசாரிய வகுப்பார் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? இன்றுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் வகுப்பாரையே இவர்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். 1918-ஆம் வருடத்தில் ஆவிக்குரிய ஆலயத்தில் “புடமிட்டுச் சுத்திகரிப்பவராக” யெகோவா அமர்ந்தபோது அவர்கள் புடமிடப்பட்டார்கள். (மல்கியா 3:1-5) அவ்வாறு சுத்தமாக்கப்பட்டவர்கள் அல்லது மனந்திரும்பியவர்கள் தங்களுடைய விசேஷித்த சேவையைத் தொடர்ந்து செய்ய முடிந்தது. அதன்பிறகு, இந்த ‘உலகத்தால் கறைபடாதபடி’ தங்களைக் காத்துக்கொள்வதற்காக கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது; இவ்வாறு, ஆசாரியரல்லாத கோத்திரத்தாரைப் பிரதிநிதித்துவம் செய்கிற ‘திரள் கூட்டத்தாருக்கு’ இவர்கள் முன்மாதிரியாக ஆனார்கள்.—யாக்கோபு 1:27; வெளிப்படுத்துதல் 7:9, 10.

45:1; 47:13–48:29—‘தேசமும்’ அதைப் பங்கிடுதலும் எதை அர்த்தப்படுத்துகின்றன? தேசம் என்பது கடவுளுடைய மக்கள் சேவை செய்கிற பிராந்தியத்தைக் குறிக்கிறது. யெகோவாவை வணங்குபவர்கள் எங்கிருந்தாலும் சரி, அவர்கள் மெய் வணக்கத்தை ஆதரிக்கும் வரையில் அந்தப் புதுப்பிக்கப்பட்ட தேசத்தில் இருக்கிறார்கள். தேசம் பங்கிடப்படுவதன் கடைசி நிறைவேற்றம் புதிய உலகில் நடக்கும்; அப்போது உண்மையுள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஓர் இடம் இருக்கும்.—ஏசாயா 65:17, 21.

45:7, 16—ஆசாரியர்களுக்கும் அதிபதிக்கும் ஜனங்கள் கொடுக்கிற பங்கு எதைச் சித்தரிக்கிறது? ஆன்மீக ஆலயத்தில், முக்கியமாக ஆன்மீக ஆதரவு கொடுப்பதையே, அதாவது உதவிக்கரம் நீட்டுவதையும் ஒத்துழைப்பு கொடுப்பதையுமே இது சித்தரிக்கிறது.

47:1-5—எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட நதியின் தண்ணீர் எதற்கு அடையாளமாய் இருக்கிறது? இந்தத் தண்ணீர், ஜீவனைப் பெற யெகோவா செய்துள்ள ஆன்மீக ஏற்பாடுகளுக்கு அடையாளமாய் இருக்கிறது; கிறிஸ்து இயேசுவின் மீட்கும் பலியும் கடவுளைப் பற்றி பைபிள் தருகிற அறிவும் அவற்றில் அடங்கும். (எரேமியா 2:13; யோவான் 4:7-26; எபேசியர் 5:25-27) இந்த நதி செல்லச்செல்ல, மெய் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குள் திரள்கிற புதியவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவுக்கு அதன் ஆழம் அதிகரித்துக்கொண்டே போகிறது. (ஏசாயா 60:22) ஆயிர வருட ஆட்சியில், ஜீவனை அளிக்கவல்ல தண்ணீராக அது பாய்ந்தோடும்; அச்சமயத்தில் திறக்கப்படவிருக்கிற ‘புஸ்தகங்களிலிருந்து’ கிடைக்கும் கூடுதலான விஷயங்களைப் புரிந்துகொள்வதையும் இந்தத் தண்ணீர் உட்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 20:12; 22:1, 2.

47:12—கனிதரும் மரங்கள் எதைக் குறிக்கின்றன? அடையாள அர்த்தமுள்ள இந்த மரங்கள், மனிதகுலம் மீண்டும் பரிபூரண நிலையை அடைவதற்கு கடவுள் செய்கிற ஆன்மீக ஏற்பாடுகளைக் குறிக்கின்றன.

48:15-19, 30-35—தரிசனத்தில் எசேக்கியேல் கண்ட நகரம் எதைக் குறிக்கிறது? “யேகோவா ஷம்மா” என்ற நகரம் ‘பரிசுத்தமாயிராத’ இடத்தில் அமைந்திருப்பதால், இது பூமிக்குரிய ஒன்றைக் குறிக்க வேண்டும். இந்த நகரம், பூமிக்குரிய நிர்வாகத்தை அர்த்தப்படுத்துவதாகத் தெரிகிறது; இந்த நிர்வாகம், நீதியுள்ள ‘புதிய பூமியின்’ குடிமக்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. (2 பேதுரு 3:13) அதன் எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் இருப்பது, அதற்குள்ளே எளிதாகச் செல்ல முடிவதைக் காட்டுகிறது. கடவுளுடைய ஜனங்களின் மத்தியில் கண்காணிகளாக இருப்பவர்கள் அணுக முடிந்தவர்களாய் இருக்க வேண்டும்.

நமக்குப் பாடம்:

40:14, 16, 22, 26. ஆலயத்தின் நுழைவாயில்களிலுள்ள பேரீச்சம் மரங்களின் சுவர் சித்திரங்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் மட்டுமே அதற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. (சங்கீதம் 92:12) நாம் நல்நடத்தையுள்ளவர்களாய் இருந்தால் மட்டுமே நம்முடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்வார் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

44:23. நவீனகால ஆசாரிய வகுப்பார் நமக்குச் செய்கிற சேவைகளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ நமக்கு காலத்திற்கேற்ற ஆன்மீக உணவை முன்நின்று வழங்குகிறார்கள்; யெகோவாவுக்கு முன்பாக எது சுத்தமானது எது சுத்தமற்றது என்பதைப் பகுத்துணர இந்த உணவு நமக்கு உதவுகிறது.—மத்தேயு 24:45.

47:9, 11. அடையாளப்பூர்வ தண்ணீரின் முக்கிய அம்சமான அறிவு, நம் நாளில் மக்களை மகத்தான விதத்தில் குணப்படுத்தி வருகிறது. மக்கள் எங்கிருந்து அதைப் பருகினாலும் சரி, ஆன்மீக ரீதியில் அது அவர்களுக்கு ஜீவனளிக்கிறது. (யோவான் 17:3) மறுபட்சத்தில், அந்த ஜீவனளிக்கும் தண்ணீரைப் பருகாதவர்கள் ‘உப்பாகவே விடப்படுவார்கள்,’ அதாவது நித்திய அழிவைச் சந்திப்பார்கள். அப்படியானால், ‘சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிப்பதற்கு நாம் ஜாக்கிரதையாய் இருப்பது [அதாவது, முழு முயற்சி செய்வது]’ எவ்வளவு முக்கியம்.—2 தீமோத்தேயு 2:15.

“என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்”

தாவீதின் அரசகுலத்தில் வந்த கடைசி ராஜாவை நீக்கிய பிறகு, அரசதிகாரத்திற்கான “உரிமைக்காரனானவர்” வரும்வரையாக நீண்ட காலப்பகுதி கடந்துபோகும்படி மெய்க் கடவுள் அனுமதித்தார். என்றாலும், தாவீதோடு செய்த உடன்படிக்கையை அவர் மீறவில்லை. (எசேக்கியேல் 21:27; 2 சாமுவேல் 7:11-16) எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில், ‘என் தாசனாகிய தாவீது’ என ஒருவர் குறிப்பிடப்படுகிறார்; அவர் ஒரு ‘மேய்ப்பனாகவும்’ ‘ராஜாவாகவும்’ ஆகப் போகிறார். (எசேக்கியேல் 34:23, 24; 37:22, 24, 25) ராஜாவாக ஆட்சி செய்கிற இயேசு கிறிஸ்துவே அவர். (வெளிப்படுத்துதல் 11:15) இந்த மேசியானிய ராஜ்யத்தின் மூலமாக, யெகோவா ‘தம் மகத்தான நாமத்தைப் பரிசுத்தம்பண்ணுவார்.’—எசேக்கியேல் 36:23.

கடவுளுடைய பரிசுத்த பெயரை பரிசுத்தக்குலைச்சலாக்குகிற எல்லாரும் சீக்கிரத்திலே அழிக்கப்படுவார்கள். ஆனால், யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரை வணங்குவதன்மூலம் தங்களுடைய வாழ்க்கையில் அப்பெயரை பரிசுத்தப்படுத்துபவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். ஆகவே, நம் நாளில் பெருக்கெடுத்து ஓடுகிற ஜீவத்தண்ணீரை நாம் நன்கு பருகி, மெய் வணக்கத்தை நம் வாழ்க்கையின் மையமாக்குவோமாக.

[அடிக்குறிப்பு]

a எசேக்கியேல் 1:1–24:27-ல் உள்ள குறிப்புகளை ஆராய்வதற்கு, ஜூலை 1, 2007 காவற்கோபுர இதழில் “எசேக்கியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்​—⁠முதல் பகுதி” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 9-ன் படம்]

எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட மகத்தான ஆலயம்

[பக்கம் 10-ன் படம்]

எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட ஜீவநதி எதைக் குறிக்கிறது?

[படத்திற்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்