ஜான் மில்டனின் ஆய்வு வெளிச்சத்துக்கு வருதல்
ஆங்கில காப்பியமாகிய பாரடைஸ் லாஸ்ட்டின் (இழந்த பரதீஸ்) எழுத்தாளரான ஜான் மில்டன் ஏற்படுத்தியது போன்ற ஒரு பெரிய தாக்கத்தை இவ்வுலகில் வேறு எந்த எழுத்தாளரும் ஏற்படுத்தியதாகச் சொல்ல முடியாது. மில்டனை “பலர் நேசித்தார்கள், சிலர் வெறுத்தார்கள், வெகு சிலரே அவரை அறியாதிருந்தார்கள்” என்பதாக அவருடைய வாழ்க்கை சரிதையை எழுதிய ஒருவர் குறிப்பிடுகிறார். இன்றுவரை, ஆங்கில இலக்கியம் மற்றும் கலாச்சார வளர்ச்சியில் அவருடைய படைப்புகளுக்குப் பெரும் பங்கு உண்டு.
எப்படி மில்டனால் அப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது? கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற அவரது கடைசி படைப்பு, 150 வருடங்களாக பிரசுரிக்கப்பட முடியாதளவுக்கு ஏன் அத்தனை சர்ச்சைக்கு உரியதாயிற்று?
அவரது ஆரம்ப காலம்
1608-ல் லண்டனில் செல்வ செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் ஜான் மில்டன் பிறந்தார். “இலக்கியம் கற்று தேர்ச்சி பெற வேண்டுமென அப்பா சிறு பிராயத்திலிருந்தே எனக்கு ஊக்கமளித்தார்; பன்னிரண்டு வயதிலிருந்து நடுராத்திரி வரையாக கண்விழித்து படிக்கும் அளவுக்கு எனக்கும் அதில் அதிக ஆர்வம் இருந்தது” என்று கூறினார் மில்டன். அவர் படிப்பில் சிறந்து விளங்கி, 1632-ல் கேம்ப்ரிஜில் முதுகலை பட்டம் பெற்றார். அதன்பிறகு வரலாற்றையும் கிரேக்க, ரோம இலக்கியத்தையும் கற்று வந்தார்.
ஒரு கவிஞராக வேண்டுமென்பதே மில்டனின் ஆசை. ஆனால், புரட்சியின் கோரப்பிடியில் இங்கிலாந்து தத்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. ஆலிவர் க்ராம்வெல் தலைமை தாங்கிய சட்டமாமன்றம் ஒரு நீதிமன்றத்தை ஏற்படுத்தியது. அரசர் முதலாம் சார்ல்ஸ் கொல்லப்படுவதற்கான தீர்ப்பை 1649-ல் அது நிறைவேற்றியது. வலிமையான உரைநடைகளை எழுதி மில்டன் இந்தச் செயலை ஆதரித்து, க்ராம்வெல் ஆட்சியின் சார்பாகப் பேசுகிறவராய் இருந்தார். சொல்லப்போனால், ஜான் மில்டன் ஒரு கவிஞர் என பெயரெடுக்கும் முன்பே அரசியல் மற்றும் ஒழுக்க நெறிகள் சம்பந்தப்பட்ட கைப்பிரதிகளை வெளியிட்டதற்காக பிரபலமாகியிருந்தார்.
1660-ல் இரண்டாம் சார்ல்ஸ், அரசனாக முடிசூட்டப்பட்டு மீண்டும் மன்னராட்சி நிலைநாட்டப்பட்டதும், மில்டனின் உயிர் ஆபத்துக்குள் ஆனது. ஏனென்றால், இவர் க்ராம்வெலின் ஆதரவாளராய் இருந்தவராயிற்றே. மில்டன் தலைமறைவாக வாழ்ந்துவந்தார். செல்வாக்குமிக்க நண்பர்களின் உதவியாலேயே அவர் மரணத்திலிருந்து தப்பினார். இந்தச் சூழலின் மத்தியிலும், ஆன்மீகக் காரியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த ஆர்வம் மட்டும் தணியவே இல்லை.
“பைபிளை அளவுகோலாக. . . ”
ஆன்மீக விஷயங்களைக் குறித்து ஆரம்பத்திலிருந்தே தனக்கிருந்த ஆர்வத்தை விவரித்து மில்டன் பின்வருமாறு எழுதினார்: “நான் இளைஞனாக இருந்தபோதே பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் அவற்றின் மூல மொழிகளில் கருத்தூன்றி படிப்பதற்குக் கவனம் செலுத்தினேன்.” ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விஷயங்களையும் பொறுத்தவரை பரிசுத்த வேதாகமம் மட்டுமே நம்பத்தக்க வழிகாட்டி என்பதாக மில்டன் நம்பினார். ஆனால், அன்று பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மத சம்பந்தமான பிரசுரங்களைப் படித்து ஆராய்ந்தபோது அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். “அவற்றைச் சார்ந்து, என்னுடைய அடிப்படை நம்பிக்கைகளையோ இரட்சிப்பைப் பற்றிய நம்பிக்கையையோ மதிப்பிட முடியாதென கருதினேன்” என்று பின்னர் எழுதினார். “பைபிளை அளவுகோலாக வைத்து” மட்டுமே தன்னுடைய நம்பிக்கைகளைச் சரியாக மதிப்பிட வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்காக, தான் முக்கியமாய் கருதிய வேத வசனங்களை பொதுவான தலைப்புகளின்கீழ் பட்டியலிட்டார். பிறகு, அந்தப் பட்டியலிலிருந்து பொருத்தமான வசனங்களை மேற்கோள் காட்டினார்.
பாரடைஸ் லாஸ்ட் என்ற காப்பியத்தை இயற்றியதற்காக இன்று ஜான் மில்டன் பரவலாக நினைவுகூரப்படுகிறார். பரிபூரணத்திலிருந்து மனிதன் விழுந்துபோனதைக் குறித்து பேசும் பைபிள் பதிவை கவிதை நடையில் அவர் அதில் விவரிக்கிறார். (ஆதியாகமம், 3-ம் அதிகாரம்) முதல்முதலாக 1667-ல் பிரசுரிக்கப்பட்ட இந்தப் படைப்புக்காகவே இலக்கிய உலகில், குறிப்பாக ஆங்கிலம் பேசும் உலகில் மில்டன் பெரும் புகழை ஈட்டினார். அதன் பிறகு அவர் பாரடைஸ் லாஸ்ட்டின் தொடர்ச்சியான பாரடைஸ் ரீகெய்ன்ட் (மீண்டும் நிலைநாட்டப்பட்ட பரதீஸ்) என்ற கவிதையைப் பிரசுரித்தார். பூமியில் பூங்காவனம் போன்ற பரதீஸில் பரிபூரண வாழ்க்கையை மனிதன் அனுபவிக்க வேண்டும் என்ற கடவுளுடைய ஆதி நோக்கத்தையும் கிறிஸ்துவின் மூலமாய் மீண்டும் கடவுள் பரதீஸை பூமியில் நிலைநாட்டுவார் என்பதையும் அந்தக் கவிதைகள் விவரிக்கின்றன. உதாரணமாக, பாரடைஸ் லாஸ்ட்டில், கிறிஸ்து, “தம்மை உண்மையாய் சேவிப்பவர்களுக்கு பரலோகத்திலோ பூமியிலோ நித்திய சந்தோஷத்தை அளிப்பார்; ஏனென்றால், அப்போது பூமி முழுவதும் பரதீஸாக இருக்கும், ஏதேனைவிட சந்தோஷமான இடமாகவும், அதிக இனிமையான நாட்கள் நிறைந்தவையாகவும் இருக்கும்” என பிரதான தூதனாகிய மிகாவேல் முன்னறிவிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி
கிறிஸ்தவ வாழ்க்கையையும் கோட்பாடுகளையும்பற்றி நன்கு கலந்தாராயும் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் மில்டன் பல ஆண்டுகளாக விரும்பினார். 1652-குள் தன் பார்வையை முழுமையாக இழந்துவிட்டபோதிலும் செயலர்களின் உதவியோடு இந்தப் பணியில் ஈடுபட்டு, 1674-ல் தான் மரிக்கும் வரையாக அதைத் தொடர்ந்தார். கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி பரிசுத்த வேதாகமத்திலிருந்து மட்டும் தொகுத்த ஆய்வு என தன் கடைசி படைப்பிற்குத் தலைப்பிட்டார். அதன் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்: “இந்தப் பொருளின்பேரில் ஆய்வு செய்த பலரும் . . . தாங்கள் போதிக்கும் விஷயங்கள் எதை முழுமையாகச் சார்ந்தவை என்பதைக் காண்பிக்க பைபிள் வசனங்களின் அதிகாரங்களையும் வசன எண்களையும் ஓரக்குறிப்புகளாக அவ்வப்போது மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றனர். மறுபட்சத்தில், நானோ, பைபிளின் எல்லா பாகங்களிலிருந்தும் மேற்கோளாக எடுக்கப்பட்ட வசனங்களால் என்னுடைய பக்கங்களை நிரப்பியிருக்கிறேன், சொல்லப்போனால், அவை வசனங்களால் நிரம்பிவழிகின்றன.” மில்டன் சொன்னது சரியே. கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற தன் ஆய்வில், மறைமுகமாகவோ நேரடியாகவோ வேத வசனங்களை 9,000 தடவைகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
மில்டன் தன்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு ஆரம்பத்தில் தயங்கவில்லை என்றாலும், இந்த ஆய்வை அவர் பிரசுரிக்கவில்லை. ஏன்? ஒரு காரணம், அதில், தான் வேதப்பூர்வமாகக் கொடுத்திருந்த விளக்கங்கள் சர்ச்சால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதனையிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்ததை அவர் அறிந்திருந்தார். மேலும், மன்னராட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டதால், அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் இவர் இழந்திருந்தார். அவர் ஒருவேளை இன்னும் அமைதியான காலங்களுக்காகக் காத்திருந்திருக்கலாம். காரணம் எதுவானாலும், மில்டனின் மரணத்திற்குப்பின், அவருடைய செயலர், லத்தீனில் இருந்த அந்தக் கையெழுத்துப்பிரதியை பிரசுரிப்பாளர் ஒருவரிடம் எடுத்துச்சென்றார். அவரோ அதை அச்சிட மறுத்துவிட்டார். பின்னர், இங்கிலாந்தின் அமைச்சரவையில் அங்கத்தினராய் இருந்த ஒருவர் அந்தப் பிரதியை பறிமுதல் செய்து எங்கோ வைத்துவிட்டார். மில்டனின் இந்த ஆய்வு மீண்டும் வெளிச்சத்திற்கு வருவதற்குள் ஒன்றரை நூற்றாண்டுகள் உருண்டோடிவிட்டன.
எதிலோ சுற்றிவைக்கப்பட்டிருந்த, இந்தப் பிரபல கவிஞரின் கையெழுத்துப்பிரதி 1823-ல் அலுவலக க்ளார்க் ஒருவரின் கண்ணில்பட்டது. அப்போது இங்கிலாந்தில் ஆட்சி செய்துவந்த அரசர் நான்காம் ஜார்ஜ், அந்தப் படைப்பை யாவரறியச் செய்வதற்காக அதை லத்தீனிலிருந்து மொழிபெயர்க்கும்படி கட்டளையிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து அது ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டபோது, இறையியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. ஏதோ ஏமாற்று வேலை உட்பட்டிருப்பதாகச் சொல்லி ஒரு பிஷப் அந்தப் பிரதியை உடனடியாகக் கண்டனம் செய்துவிட்டார். மத சம்பந்தப்பட்ட கவிதைகளை எழுதும் இங்கிலாந்தின் மகத்தான கவிஞர் என அநேகரால் போற்றப்படும் மில்டன், சர்ச்சின் முக்கிய போதனைகளை இவ்வளவு உறுதியாக மறுத்திருக்க மாட்டார் என்பது அவருடைய வாதம். இப்படி ஒரு சர்ச்சை கிளம்பலாம் என்பதை முன்னறிந்த மொழிபெயர்ப்பாளர், மில்டன்தான் இதை எழுதினார் என்பதற்கு ஆதாரம் அளித்திருந்தார். கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற படைப்புக்கும் பாரடைஸ் லாஸ்ட் என்ற படைப்புக்கும் பொதுவாக இருக்கும் 500 ஒப்புமைகளை அடிக்குறிப்பில் காட்டியிருந்தார்.a
மில்டனின் நம்பிக்கைகள்
மில்டன் இருந்த காலத்திலேயே இங்கிலாந்து, ரோமன் கத்தோலிக்க சர்ச்சுடன் இருந்த பிணைப்பை அறுத்துவிட்டு புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தை ஏற்றிருந்தது. விசுவாசத்தையும் ஒழுக்கம் சம்பந்தமான விஷயங்களையும் நிர்ணயிப்பதற்கு பைபிளே அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர போப் அல்ல என்பதாக பொதுவில் புராட்டஸ்டான்டினர் நம்பினார்கள். இருந்தாலும், கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற ஆய்வில் அநேக புராட்டஸ்டன்ட் போதனைகளும் பழக்கங்களும்கூட பைபிளுக்கு முரணாக இருப்பதை மில்டன் காண்பித்தார். மக்கள் சுயமாகத் தெரிவு செய்யும் திறனுடையவர்கள் என்பதை ஆதரித்த மில்டன், எதிர்காலம் முன்விதிக்கப்பட்டிருக்கிறது என்ற கால்வினின் கோட்பாட்டை பைபிள் அடிப்படையில் ஏற்க மறுத்தார். கடவுளுடைய பெயரான யெகோவா என்பதை தன்னுடைய எழுத்துக்களில் அடிக்கடி குறிப்பிட்டதன்மூலம் அதை மரியாதைக்குரிய விதத்தில் பயன்படுத்துவதை ஆதரித்தார்.
மனித ஆத்துமா சாகும் என்பதை வேத வசனங்களின் அடிப்படையில் மில்டன் நிரூபித்தார். ஆதியாகமம் 2:7-ஐ குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: “மனிதன் இவ்விதமாக படைக்கப்பட்டபோது கடைசியாக, மனிதன் ஜீவாத்துமாவானான். . . . என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்துமா, உடல் என இரு வெவ்வேறு தனி பாகங்களால் உருவானவன் மனிதன் என்று பொதுவாக நினைக்கப்படுவதுபோல் மனிதன் இரண்டு பாகமாக அல்லது பிரிக்க முடிந்தவனாக இல்லை. மாறாக, முழு மனிதனே ஆத்துமா, அந்த ஆத்துமாதான் மனிதன்.” அதற்குப்பின் மில்டன் இந்தக் கேள்வியை எழுப்பினார்: “முழு மனிதனும் சாகிறானா அல்லது உடல் மட்டும் சாகிறதா?” முழு மனிதனும் சாகிறான் என்பதற்குச் சான்றாக அநேக பைபிள் வசனங்களை எடுத்துக்காட்டிய பிறகு, அவர் தொடர்ந்து சொன்னார்: “ஆத்துமா சாகிறது என்பதற்கு கடவுளே உறுதியான ஆதாரத்தை, கொடுத்திருக்கிறார். அதாவது, எசேக்[கியேல் 18:]20: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” எதிர்காலத்தில் மரண நித்திரையிலிருந்து உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை இறந்தவர்களுக்கு இருப்பதை விளக்குவதற்கு லூக்கா 20:37 மற்றும் யோவான் 11:25 போன்ற வசனங்களையும் மில்டன் குறிப்பிட்டிருந்தார்.
கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற படைப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு காரணம் என்ன? கிறிஸ்து, தேவனுடைய குமாரன், பிதாவாகிய கடவுளுக்கு கீழ்ப்பட்டவர் என்பதற்கு மில்டன் கொடுத்த எளிய அதே சமயம் வலுவான பைபிள் அத்தாட்சியே காரணம். யோவான் 17:3-ஐயும் யோவான் 20:17-ஐயும் மேற்கோள் காண்பித்தப் பிறகு, மில்டன் கேட்கிறார்: “பிதாவானவர் கிறிஸ்துவின் கடவுளாகவும் நம்முடைய கடவுளாகவும் இருந்தால், ஒரேவொரு கடவுள்தான் இருக்கிறார் என்றால், அந்தக் கடவுள் பிதாவாக இல்லாமல் வேறே யாராக இருக்க முடியும்?”
மில்டன் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்: “பிதாவே எல்லா விஷயங்களிலும் குமாரனைவிட பெரியவர் என குமாரன் தாமேயும் அவருடைய அப்போஸ்தலரும் சொன்ன, எழுதிய எல்லாவற்றிலும் ஒத்துக்கொள்கிறார்கள்.” (யோவான் 14:28) “சொல்லப்போனால், கிறிஸ்துவே பின்வருமாறு மத்தேயு 26:39-ல் சொல்கிறார்: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது. . . . அவர் தாமே உண்மையில் கடவுளாக இருந்தால், ஏன் தம்மிடமே ஜெபம் செய்யாமல் பிதாவிடம் மட்டும் ஜெபம் செய்ய வேண்டும்? அவரே மனிதனாகவும் உன்னத கடவுளாகவும் இருந்தால், தம்முடைய சக்திக்கு உட்பட்ட ஒரு காரியத்தை நிறைவேற்ற அவர் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்? . . . பிதாவுக்கு மட்டுமே குமாரன் எப்போதும் மரியாதையும் வணக்கமும் செலுத்துவது போலவே நாமும் செய்யும்படி அவர் நமக்குப் போதிக்கிறார்.”
மில்டனின் குறைகள்
ஜான் மில்டன் சத்தியத்தைத் தேடினார். இருந்தாலும், மனிதருக்கே உரிய குறைகள் அவரையும் விட்டுவைக்கவில்லை. மில்டனின் கசப்பான அனுபவங்கள் அவருடைய கருத்துகள் சிலவற்றைப் பாதித்திருக்கலாம். உதாரணத்திற்கு, அவருக்கு திருமணமாகி சீக்கிரத்திலேயே மணப்பெண் அவரை விட்டுவிட்டு சுமார் மூன்று வருடங்களுக்கு தன் வீட்டாருடன் இருந்தாள். இந்தப் பெண், மன்னராட்சிக்கு ஆதரவாளராய் இருந்த ஒரு ஜமீன்தாரின் மகள். இந்தச் சமயத்தில், விவாகரத்தை நியாயப்படுத்தும் துண்டுபிரதிகளை மில்டன் எழுதினார். இயேசு குறிப்பிட்டபடி, தாம்பத்திய உறவில் உண்மையற்றவர்களாய் நடந்துகொண்டால் மட்டுமல்ல, மணத்துணைகள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாவிட்டாலும் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று அவர் கூறினார். (மத்தேயு 19:9) கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற ஆய்வில் இதே கருத்தையே ஆதரித்தார்.
மில்டனின் குறைகள் ஒருபுறம் இருந்தாலும், கிறிஸ்தவ கோட்பாடுகள்பற்றி என்ற ஆய்வில் அவர் எண்ணற்ற முக்கியமான போதனைகளைப்பற்றி பைபிளின் கருத்தை அழுத்தம்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார். ஒருபோதும் தவறாத பைபிளை அளவுகோலாக வைத்து வாசகர்கள் தங்கள் நம்பிக்கைகளை அளவிடுவதற்கு இன்றுவரையாக அந்த ஆய்வு உதவி செய்கிறது.
[அடிக்குறிப்பு]
a கிறிஸ்தவ கோட்பாடுகளைப்பற்றி என்ற பிரசுரத்திற்கு மற்றொரு மொழிபெயர்ப்பை 1973-ல் யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இது மில்டனின் மூல லத்தீன் பிரதியை இன்னும் அதிகமாகச் சார்ந்திருக்கிறது.
[பக்கம் 11-ன் படம்]
மில்டன் பைபிளை கருத்தூன்றி படித்தார்
[படத்திற்கான நன்றி]
Courtesy of The Early Modern Web at Oxford
[பக்கம் 12-ன் படம்]
“பாரடைஸ் லாஸ்ட்” கவிதை மில்டனுக்கு புகழ் தேடித்தந்தது
[படத்திற்கான நன்றி]
Courtesy of The Early Modern Web at Oxford
[பக்கம் 12-ன் படம்]
150 வருடங்களாக காணாமற்போன மில்டனின் கடைசி படைப்பு
[படத்திற்கான நன்றி]
Image courtesy of Rare Books and Special Collections, Thomas Cooper Library, University of South Carolina
[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]
Image courtesy of Rare Books and Special Collections, Thomas Cooper Library, University of South Carolina