சந்தோஷத்திற்கு வித்திடும் தீர்மானங்கள்
“ஐ யோ, நான் அப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!” இப்படி நீங்கள் எத்தனை முறை உங்களுக்குள்ளேயே சொல்லியிருக்கிறீர்கள்? பின்னர் வருத்தப்படாத விதத்தில் தீர்மானங்களை எடுப்பதற்கு நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம், முக்கியமாக, அவை நம் வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களாக இருந்தால் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கிறோம். அப்படியென்றால், சந்தோஷத்திற்கு வித்திடும் விதத்தில் நாம் எப்படித் தீர்மானங்களை எடுக்கலாம்?
முதலாவதாக, நம்பகமான தராதரங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட தராதரங்கள் இருக்கின்றனவா? இல்லை என்றே அநேகர் நினைக்கின்றனர். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, சரி, தவறு என்றெல்லாம் எதுவுமே கிடையாது என்றும் எது நல்லது, எது கெட்டது என்பதெல்லாம் “தனிப்பட்டவர்களின் மதிப்பீடுகளையும் கலாச்சாரத்தையும் பொறுத்தது” என்றும் கல்லூரியின் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் இருக்கும் மாணவர்களில் 75 சதவீதத்தினர் நம்புவதாகத் தெரிய வந்தது.
ஒழுக்க நெறிகள் வெறுமனே தனி நபர்களின் அல்லது பெரும்பான்மையோரின் கருத்தைப் பொறுத்தது என நினைப்பது உண்மையில் நியாயமாய் இருக்கிறதா? இல்லவே இல்லை. மக்கள் எந்தக் கட்டுப்பாடுமின்றி தங்களுக்கு இஷ்டமானதையெல்லாம் செய்தால் அது குழப்பத்தில்தான் முடிவடையும். சட்டமோ, நீதிமன்றமோ, காவலதிகாரிகளோ இல்லாத ஓர் இடத்தில் யார்தான் இருக்க விரும்புவர்? மறுபட்சத்தில், நம் சொந்த கருத்துகளும் எப்போதும் நம்பகமானவையாக இருப்பதில்லை. நாம் செய்வது சரியே என்று நினைத்து எதையாவது செய்திருப்போம், ஆனால், அது தவறு என்பதை பிறகுதான் உணருவோம். பார்க்கப்போனால், மனித சரித்திரம் முழுவதும் பைபிளின் பின்வரும் கருத்து உண்மையென நிரூபிக்கிறது: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) அப்படியென்றால், வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் தீர்மானம் எடுக்கையில் நாம் எங்கிருந்து வழிநடத்துதலைப் பெறலாம்?
முந்தைய கட்டுரையில் நாம் சிந்தித்த அந்த இளம் அதிபதி, ஞானமாய் இயேசுவிடம் ஆலோசனை கேட்டார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அந்த இளம் நபரின் கேள்விக்குக் கடவுளுடைய நியாயப்பிரமாணத்திலிருந்து இயேசு பதிலளித்தார். யெகோவா தேவன்தான் அறிவுக்கும் ஞானத்திற்கும் உன்னத ஊற்றுமூலர் என்பதையும் தாம் சிருஷ்டித்த மக்களுக்கு எது சிறந்ததென்று அவருக்குத் தெரியும் என்பதையும் இயேசு உணர்ந்திருந்தார். அதனாலேயே இயேசு இவ்வாறு கூறினார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” (யோவான் 7:16) நம் வாழ்க்கையில் ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை ஒரு நம்பகமான வழிகாட்டியாக இருக்கிறது. அதில் உள்ள நியமங்களை நாம் கடைப்பிடிக்கையில் நம் சந்தோஷம் அதிகரிக்கும். அவற்றில் சிலவற்றை நாம் இப்போது சிந்திக்கலாம்.
பொன் விதி
பிரபலமான தனது மலைப் பிரசங்கத்தில் இயேசு ஓர் அடிப்படையான நியமத்தைக் கற்றுக்கொடுத்தார். அது மற்றவர்களோடு நமக்கு இருக்கும் உறவில் ஞானமான தீர்மானங்களை எடுக்க உதவும். அவர் சொன்னது இதுதான்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) இந்நியமம், பெரும்பாலும் பொன் விதி என அழைக்கப்படுகிறது.
சிலர் இந்த நியமத்தை எதிர்மறையான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்: “மனுஷர் உங்களுக்கு எதைச் செய்ய விரும்பமாட்டீர்களோ, அதை அவர்களுக்குச் செய்யாதீர்கள்.” இதற்கும் பொன் விதிக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள, இயேசு சொன்ன நல்ல சமாரியனின் உவமையைச் சிந்தியுங்கள். ஒரு யூதன் படுபயங்கரமாக அடிக்கப்பட்டு குற்றுயிராய் வழியில் கிடந்தான். ஓர் ஆசாரியனும் லேவியனும் அவனைப் பார்த்தும் பார்க்காமலே போய்விட்டார்கள். அவர்கள் அந்த மனிதனின் வேதனையைக் கூட்டவில்லை என்பதால், அவர்கள் பொன் விதியை எதிர்மறையான முறையில் பொருத்தியிருக்கிறார்கள் எனலாம். அதற்கு நேர்மாறாக, அந்த வழியாகச் சென்ற ஒரு சமாரியன் அந்த மனிதனின் உதவிக்கு வந்தான். அவனுடைய காயங்களுக்குக் கட்டுப்போட்டு அவனை ஒரு சத்திரத்துக்கு அழைத்துச் சென்றான். மற்றவர்கள் தனக்கு என்ன செய்ய விரும்பியிருப்பானோ அதையே அவன் அந்த மனிதனுக்குச் செய்தான். அவன் பொன் விதியின்படி நடந்து சரியான தீர்மானத்தை எடுத்தான்.—லூக்கா 10:30-37.
இந்த பொன் விதியை நாம் அநேக விதங்களில் பொருத்துவதன்மூலம் நல்ல பலன்களை அடையலாம். ஒருவேளை புதிதாக யாராவது உங்கள் தெருவுக்குக் குடிமாறியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே ஏன் முதலில் போய் அவர்களைச் சந்தித்து, வரவேற்கக்கூடாது? சுற்றுவட்டாரத்தை அவர்கள் தெரிந்துகொள்ள நீங்கள் உதவலாம். அவர்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தாலோ ஏதாவது தேவைப்பட்டாலோ நீங்கள் உதவலாம். அக்கம்பக்கத்தாரிடம் அன்பு காட்டுவதற்கு நீங்கள் முன்வந்தால் அவர்களிடம் நல்ல உறவை வளர்த்துக்கொள்வீர்கள். அதுமட்டுமல்ல, கடவுளுக்குப் பிரியமானதைச் செய்த திருப்தியையும் பெறுவீர்கள். இது ஞானமான தீர்மானம், அல்லவா!
பிறர் மீதுள்ள அன்பின் அடிப்படையிலான தீர்மானங்கள்
ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியளிக்கும் விதத்தில் பொன் விதியோடுகூட இயேசு வேறு கட்டளைகளையும் கொடுத்தார். நியாயப்பிரமாணத்திலேயே எது பிரதான கட்டளை என்று இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.”—மத்தேயு 22:36-40.
தாம் இறப்பதற்கு முந்தைய இரவன்று இயேசு தம் சீஷர்களுக்கு ஒரு “புதிதான கட்டளையை” கொடுத்தார். அதாவது, ஒருவரையொருவர் அன்புகூருங்கள் என்றார். (யோவான் 13:34) அதை ஏன் புதிதான கட்டளை என்று அழைத்தார்? சொல்லப்போனால், நியாயப்பிரமாணம் முழுவதும் அடங்கியிருக்கிற இரண்டு கற்பனைகளில் ஒன்றுதான் பிறனிடத்தில் அன்புகூருவது என்பதை அவர்தான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தாரே. இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில்கூட “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்று குறிப்பிடப்பட்டிருந்ததே. (லேவியராகமம் 19:18) என்றாலும், அதைவிட அதிகத்தைச் செய்யும்படி இயேசு இப்போது தம் சீஷர்களுக்குக் கட்டளையிடுகிறார். தம் ஜீவனையே அவர்களுக்காகக் கொடுக்கப்போவதாக அதே இரவு இயேசு தம் சீஷர்களிடம் கூறினார். பிறகு அவர்களிடம், “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்று கூறினார். (யோவான் 15:12, 13) ஆம், நம்முடைய நலனைவிட பிறருடைய நலனில் அக்கறையாயிருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இந்தக் கட்டளை புதிதாக இருக்கிறது.
நம்முடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டுவதைவிட ஒரு படி மேல்சென்று சுயநலமற்ற அன்பை காட்டுவதற்குப் பல வழிகள் உள்ளன. நீங்கள் ஓர் அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். சத்தமாகப் பாட்டு கேட்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அது உங்களுக்குத்தான் கிளர்ச்சியூட்டுமே தவிர உங்கள் அக்கம்பக்கத்தாருக்கு கடுப்பாக இருக்கும். அவர்கள் நிம்மதியாக இருப்பதற்கு உங்கள் ஆசையை அடக்கிக்கொள்ள மனமுள்ளவராய் இருப்பீர்களா? வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்கள் நலனைவிட உங்கள் அக்கம்பக்கத்தாரின் நலனில் அக்கறையாய் இருப்பீர்களா?
இந்த நிஜ சம்பவத்தைக் கவனியுங்கள். கனடாவில் பனியும் குளிரும் பதம்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளன்று வயதான ஒருவரின் வீட்டுக்கு யெகோவாவின் சாட்சிகள் இருவர் சென்றார்கள். அவர்கள் அந்த வயதானவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தன் இருதயத்தில் ஏதோ கோளாறு இருப்பதால் தன் வீட்டின் முன் உறைந்து கிடந்த பனியை நீக்க முடியாமல் போனதாகக் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சுரண்டுகிற சப்தம் ஜோராகக் கேட்டது. அந்த இரண்டு சாட்சிகள் மீண்டும் வந்து அவருடைய வாசலுக்கு முன்னாலிருந்த படிகளிலிருந்தும் பாதையிலிருந்தும் பனியை நீக்கிக்கொண்டிருந்தார்கள். “உண்மைக் கிறிஸ்தவ அன்பை நிஜ வாழ்க்கையில் இன்றுதான் கண்கூடாகப் பார்த்தேன்” என்று கனடாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு தான் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். “இன்றைய உலகத்தைக் குறித்த என்னுடைய எதிர்மறையான கண்ணோட்டத்தை இவர்களுடைய செயல் மாற்றிவிட்டது. அதோடு, உலகமுழுவதும் நீங்கள் செய்துவரும் சேவைமீது ஏற்கெனவே எனக்கிருந்த மரியாதையை அது இன்னும் அதிகரித்திருக்கிறது” என்றும் அவர் எழுதியிருந்தார். ஆம், மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வருவது, அது எவ்வளவு சிறிய உதவியாக இருந்தாலும் சரி, நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சுயநலமற்ற தீர்மானங்களை எடுப்பதில் உண்மையிலேயே அளவிலா சந்தோஷம் அடங்கியிருக்கிறது!
கடவுள் மீதுள்ள அன்பின் அடிப்படையிலான தீர்மானங்கள்
தீர்மானங்களை எடுக்கையில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், கடவுளை அன்புகூர வேண்டும் என்று இயேசு குறிப்பிட்ட பிரதான கட்டளையாகும். இயேசுவின் இந்தக் கட்டளை யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்கெனவே ஒரு தேசமாக தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார்கள். இருந்தாலும், ஒவ்வொரு இஸ்ரவேலரும் தனிப்பட்ட விதமாக கடவுளை முழு ஆத்துமாவோடும், அன்பு பொங்கும் இருதயத்துடனும் சேவிக்க தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது.—உபாகமம் 30:15, 16.
அதுபோலவே, உங்களுடைய தீர்மானங்கள் கடவுளைப்பற்றி நீங்கள் கருதும் விதத்தைப் பிரதிபலிக்கும். உதாரணத்திற்கு, பைபிளின் நடைமுறையான ஆலோசனைகளை நீங்கள் போற்ற ஆரம்பிக்கையில் நீங்களும் ஒரு தீர்மானத்தை எதிர்ப்படுகிறீர்கள். இயேசுவின் சீஷராய் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்ட முறையில் பைபிளைப் படிக்க மனமுள்ளவராய் இருப்பீர்களா? அப்படிச்செய்ய தீர்மானித்தால் நீங்கள் சந்தோஷத்தைச் சம்பாதிப்பீர்கள் என்பது உறுதி. ஏனென்றால், “ஆன்மீகத் தேவையை குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” என்று இயேசு கூறினார்.—மத்தேயு 5:3, NW.
அந்த இளம் அதிபதி, தன்னுடைய தீர்மானத்தைக் குறித்து வருத்தப்பட்டானா என்பது நமக்குத் தெரியாது. இருந்தாலும், பல வருடங்களாக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய பிறகு அப்போஸ்தலன் பேதுரு எப்படி உணர்ந்தார் என்பது நமக்குத் தெரியும். சுமார் பொ.ச. 64-ல், தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், பேதுரு தன் சக விசுவாசிகளை இவ்வாறு உந்துவித்தார்: “கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.” (2 பேதுரு 1:13; 3:14) 30-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பாக, தான் எடுத்த தீர்மானத்திற்காக பேதுரு வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, மற்றவர்களும் தங்களுடைய தீர்மானத்தில் உறுதியாக நிலைத்திருக்கும்படி உற்சாகப்படுத்தினார்.
பேதுருவின் ஆலோசனையைப் பின்பற்ற விரும்பும் ஒருவர் இயேசுவின் சீஷராக இருப்பதில் அடங்கியுள்ள பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய தீர்மானிக்க வேண்டும். (லூக்கா 9:23; 1 யோவான் 5:3) இது ஒருவேளை கடினமாக இருக்கலாம். ஆனால், நம்பிக்கையூட்டும் வாக்குறுதியை இயேசு நமக்கு அளிக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
ஆர்த்தரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் பத்து வயதாக இருந்தபோது வயலின் வித்துவானாக ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டு அதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவர், 14 வயதிலேயே கச்சேரிகளில் வயலின் இசைக்க ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும், அவருக்குச் சந்தோஷம் கிடைக்கவில்லை. அவருடைய அப்பாவுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றி எப்போதுமே கேள்விகள் இருந்தன. அதனால், மத போதகர்களை வீட்டுக்கு அழைத்தார்; என்றாலும், அவர்கள் அளித்த பதில்கள் அவருக்குத் திருப்தியாக இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா? அவர் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? போன்ற கேள்விகளை அவர்கள் குடும்பமாகக் கலந்துபேசுவார்கள். பிறகு, ஆர்த்தரின் அப்பா, யெகோவாவின் சாட்சிகளுடன் பேச ஆரம்பித்தார். அவர்களுடைய கலந்துரையாடல் ஆர்த்தரின் அப்பாவுக்குத் திருப்தியாக இருந்தது. குடும்பமாக அவர்கள் பைபிளைப் படிப்பதற்கு அது வழிவகுத்தது.
கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதை நாளடைவில் வேத வசனங்களிலிருந்து ஆர்த்தர் புரிந்துகொண்டார். வாழ்க்கையின் நோக்கமும் அவருக்குத் தெளிவானது. தன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் அவரும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்; அதற்காக அவர் வருதப்படவில்லை. அவர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார். “நான் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள யெகோவா எனக்கு உதவியிருக்கிறார், இசை உலகிற்கே உரிய போட்டியிலிருந்தும் என்னைக் காப்பாற்றியிருக்கிறார், ஏனென்றால், வெற்றிபெற மக்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.”
இன்றும்கூட ஆர்த்தர் வயலின் இசைத்து தன் நண்பர்களை மகிழ்வித்து திருப்தியடைகிறார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் அதுவே முக்கிய பங்கை வகிப்பதில்லை. அதற்கு பதிலாக, கடவுளுடைய சேவையே முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆர்த்தர், யெகோவாவின் சாட்சிகளின் ஒரு கிளை அலுவலகத்தில் சேவை செய்து வருகிறார். எனவே, நீங்களும் அந்தச் செல்வமிக்க இளம் அதிபதிபோல் அல்லாமல் ஆர்த்தரைப் போலவும், லட்சக்கணக்கான மற்றவர்களைப் போலவும் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும் ஒரு தீர்மானத்தை எடுக்கலாம். அதாவது, தம்முடைய சீஷராகும்படி இயேசு விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம்.
[பக்கம் 6-ன் படம்]
உங்களுடைய தீர்மானம் மற்றவர்களுடைய வாழ்க்கையை மலரச் செய்யலாம்
[பக்கம் 7-ன் படம்]
நீங்கள் பைபிளைப் படித்து இயேசுவைப் பின்பற்றும் ஒருவராக மாறுவீர்களா?