சீரகூசா பவுலுடைய பயணத்தின் இடைநிறுத்தம்
சுமார் பொ.ச. 59-ஆம் வருடம், மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள மெலித்தா தீவிலிருந்து இத்தாலிக்கு ஒரு கப்பல் புறப்பட்டுச் சென்றது. அதன் முகப்பில் மரத்தாலான அடையாளச் சின்னம் காணப்பட்டது; இது, மாலுமிகளின் பாதுகாவலர்களாய் வழிபடப்பட்ட ‘மிதுனத்தின் [“ஜியஸின் மகன்களின்,” NW]’ அடையாள சின்னமாகும். இந்தக் கப்பல், சிசிலியின் தென்கிழக்குக் கரையிலிருந்த ‘சீரகூசா [துறைமுகப்] பட்டணத்தில்’ ‘மூன்றுநாள் தங்கினதாக’ பைபிள் எழுத்தாளரான லூக்கா விவரிக்கிறார். (அப்போஸ்தலர் 28:11, 12) அந்தக் கப்பலில் லூக்காவோடுகூட அரிஸ்தர்க்குவும் விசாரணைக்காக ரோமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பவுலும் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 27:2.
சீரகூசாவில் இறங்குவதற்கு பவுல் அனுமதிக்கப்பட்டாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அவரோ அவரோடு பயணித்த அவருடைய தோழர்களோ கரையிறங்கியிருந்தால் எதையெல்லாம் பார்த்திருப்பார்கள்?
கிரேக்கர்களும் ரோமர்களும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், அத்தேனே, ரோமாபுரி போன்ற நகரங்களைப் போலவே சீரகூசாவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாய் விளங்கியது. இந்த நகரத்தை பொ.ச.மு. 734-ல் கொரிந்தியர்கள் உருவாக்கினதாக வழிவழியாய் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழேணியின் உச்சியில் சீரகூசா கொடிகட்டிப் பறந்த காலங்களும் உண்டு. இது, நாடக ஆசிரியர் எபிக்கார்மஸ், கணிதவியல் நிபுணர் ஆர்க்கிமெடிஸ் போன்ற பண்டைய பிரபலங்கள் சிலர் பிறந்த பூமியாகவும் திகழ்ந்தது. பொ.ச.மு. 212-ல் இதை ரோமர்கள் கைப்பற்றினார்கள்.
இன்றுள்ள சீரகூசா நகருக்குச் சென்று பார்த்தால் பவுலுடைய நாட்களில் அது எப்படி இருந்திருக்குமென ஓரளவு உங்களால் கற்பனை செய்ய முடியும். இந்த நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று, அர்டிஜீயா என்ற சிறிய தீவுப் பகுதியிலும் மற்றொன்று, பிரதான நிலப்பகுதியிலும் இருந்தது. ஒருவேளை, இந்தச் சிறிய தீவுப் பகுதியில்தான் பவுலின் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கலாம்.
எளிய கிரேக்க சிற்பக்கலை வகையைச் சேர்ந்த மிகப் புராதன ஆலயம் ஒன்றின் இடிபாடுகளை நீங்கள் இன்று சிசிலி தீவில் காணலாம்; பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயம் அப்போலோவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததும் அதீனாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமான ஓர் ஆலயத்தின் தூண்களும்கூட உள்ளன; இவை, பின்னர் கிறிஸ்தவ பேராலயத்தின் தூண்களாயின.
பிரதான நிலப்பகுதியில்தான் இன்றைய நகரத்தின் முக்கிய பகுதி உள்ளது; இங்கு நீங்கள் நெயாப்போலி தொல்லியல் ஆய்வுப் பூங்காவைப் போய் பார்க்கலாம். இதன் வாயிலுக்கு அருகில் கிரேக்க அரங்கம் ஒன்று கம்பீரமாய் நிற்கிறது. கிரேக்க அரங்கின் கட்டடக் கலையினுடைய புகழைப் பறைசாற்றும் தனிச்சிறப்புமிக்க கட்டடங்களில் இதுவும் ஒன்று. கடலைப் பார்த்தபடி அமைந்திருக்கும் இந்த அரங்கம், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு அருமையான சூழலை ஏற்படுத்தித் தந்தது. இந்தப் பூங்காவின் தென்கோடியில் பொ.ச. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமர்களது வட்டரங்கம் உள்ளது. நீள்வட்ட வடிவிலுள்ள இந்த வட்டரங்கம் 140 மீட்டர் நீளமும் 119 மீட்டர் அகலமும் உடையது; இது, இத்தாலியிலுள்ள மிகப் பெரிய வட்டரங்குகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
சீரகூசாவுக்கு விஜயம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், அர்டிஜீயாவில் கடலைப் பார்த்தவாறுள்ள பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, உங்கள் பைபிளைத் திறந்து அப்போஸ்தலர் 28:12 வாசியுங்கள்; அப்போது, அப்போஸ்தலன் பவுல் ஏறியிருந்த கப்பல் இந்தத் துறைமுகத்திற்கு வந்து நின்றதை உங்கள் மனத் திரையில் ஓடவிட்டுப் பாருங்கள்.
[பக்கம் 30-ன் படம்/தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மெலித்தா
சிசிலி
சீரகூசா
இத்தாலியா
ரேகியு
புத்தேயோலி
ரோமாபுரி
[பக்கம் 30-ன் படம்]
சீரகூசாவிலுள்ள கிரேக்க அரங்கின் இடிபாடுகள்