வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன?
பி ரபலமான தரகு தொழில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர், கெனி. விலைமதிப்புள்ள சொகுசு காரை அவர் வைத்திருந்தார்; பெருநகர் ஒன்றின் செல்வ செழிப்பான பகுதியிலுள்ள வானுயர் கட்டிடத்தின் மேல்மாடியில் வசதிமிக்க சொந்த வீடும் அவருக்கு இருந்தது. வானில் ‘டைவ்’ அடிப்பதிலும் வல்லவர். ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்து வானில் சாகசம் செய்து, தரையிறங்குவதில் தனி சந்தோஷத்தை அவர் பெற்றிருந்தார். இவை அனைத்தும் அவருடைய வாழ்க்கையில் திருப்தியை அளித்தனவா? அதைக் குறித்து அவர் என்ன சொன்னார் என்பதை த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இவ்வாறு தெரிவிக்கிறது: “எனக்கு இப்போது 45 வயதாகிவிட்டது. திக்குத் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது என் வாழ்க்கை . . . அதற்கு ஓர் அர்த்தம் இருப்பதாகவே தெரியவில்லை.”
பனிச் சறுக்குவதில் சாதனை படைப்பதற்குக் கடினமாக முயன்றார், எலன். நினைத்தபடியே வெற்றிப்படியின் உயரத்திற்குச் சென்றார். தேடிய பெயரையும் புகழையும் பெற்றார். “இதனால் நான் சந்தோஷப்படுவேன் என்றல்லவா நினைத்தேன், ஆனால், நான் தேடிய மகிழ்ச்சி எங்கே?” என்று சொல்லி அந்தப் பெண் வருத்தப்பட்டார். “தனிமை உணர்வு என்னை வாட்டியெடுக்கிறது. போகப் போக வயதும் ஆகிவிடும். பணத்திற்கு எவ்வித குறைச்சலுமில்லை என்றாலும், இவ்வளவுதான் வாழ்க்கை என்றிருந்தால் இப்படிப்பட்ட வாழ்க்கை பிரயோஜனமற்றதாகவே தோன்றுகிறது” என்றார் அவர்.
நிறங்களை வைத்து தன் கைவரிசையைக் காட்டுவதில் சிறந்து விளங்கினார், ஹீடியோ. புதுபுது கலைப் படைப்புகளை உருவாக்குவதற்கு தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். தன் கைவண்ணத்தில் உருவான கலைப் பொருள்களை விற்பது கலையின் மதிப்பைக் குறைப்பதாக அவர் கருதியதால் அவற்றை விற்கவில்லை. 98 வயதை எட்டவிருந்த சமயத்தில் அவர் தன்னுடைய கலைப் படைப்புகளில் பலவற்றையும் ஓர் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக அளித்தார். தன் வாழ்க்கை முழுவதையும் கலாபூர்வமான நாட்டங்களுக்காகவே செலவிட்டார். இருப்பினும், அவர் திருப்தியடையவில்லை. காரணம், கலையில் கரைகாண வேண்டுமென்றால் காலமெல்லாம் போதாது என்று அவர் நினைத்தார்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிலர் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். உதாரணத்திற்கு, ஹாலிவுட்டைச் சேர்ந்த திரை உலக அதிகாரி ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவிலுள்ள பிரபல திரை நிறுவனம் ஒன்றில் அவர் துணைத் தலைவராக இருந்ததால் பிரபலங்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அதோடு, சகல வசதியும் சொகுசும் ஒருங்கே அமைந்த குடியிருப்பு பகுதியில் அவர் வசித்து வந்தார். விடுமுறையைக் கழிக்க அவர் கம்போடியாவுக்குச் சென்றார். அங்கே, நாம்-பென் என்ற இடத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சிறுமி அவரிடம் பிச்சை கேட்டாள். அவளுக்கு ஒரு டாலர் பணத்தையும் குளிர்பானத்தையும் கொடுத்தார். அந்தச் சிறுமி திருப்தி அடைந்தாள். ஆனால், அடுத்த நாள் இரவு மீண்டும் அவள் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். வெறும் மேலோட்டமாக உதவி செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.
ஒரு வருடத்திற்குப் பின் இந்த அதிகாரி தன் தொழிலையே மாற்றிக்கொள்ள தீர்மானித்தார். பொழுதுபோக்குத் துறையில் வேலை செய்வதை விட்டுவிட்டு கம்போடியாவிலுள்ள ஏழைகளுக்கு உதவ தீர்மானித்தார். தங்குமிடத்தையும் உணவையும் கல்வியையும் வழங்கக்கூடிய ஒரு பள்ளியை அவர் தொடங்கினார். இதையெல்லாம் செய்த பிறகும்கூட அவருக்குள் எப்போதுமே ஓர் உணர்ச்சி போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், அவர் செய்துவரும் காரியங்களில் சந்தோஷமும் திருப்தியும் ஒரு பக்கம் கிடைத்தாலும் மறுபக்கத்தில் அவர் கையாளவேண்டிய பிரச்சினைகள் குவிந்து வருவதைப் பார்க்கையில் ஏமாற்றமும் கவலையும் தலைதூக்குகின்றன.
மேற்சொன்ன நான்கு பேருமே வாழ்க்கையில் தங்கள் இலட்சியத்தை அறிந்திருந்ததாகவே நினைத்தார்கள். இருப்பினும், கடுமையாகப் பாடுபட்டு, விரும்பியதை அடைந்த பிறகுகூட வெறுமையாகவே உணர்ந்தார்கள். சரி, உங்களைப்பற்றி என்ன? நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? நீங்கள் வாழும் விதத்தைக் குறித்து பின்னர் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள் என்பதில் உறுதியாயிருக்கிறீர்களா?