யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?
‘யெகோவா ராஜரிகம்பண்ணுகிறார் . . . என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.’—சங்கீதம் 96:10.
1, 2. (அ) பொ.ச. 29 அக்டோபர் வாக்கில், என்ன முக்கிய சம்பவம் நடந்தது? (ஆ) அந்தச் சம்பவம் இயேசுவுக்கு எதை உணர்த்தியது?
பூமியில் முன்னொருபோதும் நடந்திராத ஒரு முக்கிய சம்பவம் பொ.ச. 29, அக்டோபர் வாக்கில் நடந்தது. அதை சுவிசேஷ எழுத்தாளரான யோவான் பின்வருமாறு விவரிக்கிறார்: “பின்னும் [முழுக்காட்டுபவனாகிய] யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன்.” சுவிசேஷ எழுத்தாளர்கள் நான்கு பேரும் குறிப்பிடுகிற சில சம்பவங்களில் இதுவும் ஒன்று.—யோவான் 1:32-34; மத்தேயு 3:16, 17; மாற்கு 1:9-11; லூக்கா 3:21, 22.
2 பரிசுத்த ஆவி இயேசுமீது பொழியப்பட்டதன்மூலம், அவர்தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர், அதாவது மேசியா அல்லது கிறிஸ்து என்பது தெளிவானது. (யோவான் 1:33) கடைசியாக, வாக்குப்பண்ணப்பட்ட ‘வித்து’ வந்தாயிற்று! அவர் முழுக்காட்டுபவராகிய யோவானின் எதிரில் நின்றுகொண்டிருந்தார்; அவருடைய குதிங்கால் சாத்தானால் நசுக்கப்படும்; யெகோவாவுக்கும் அவருடைய உன்னத அரசதிகாரத்திற்கும் எதிராகச் செயல்படும் முக்கிய எதிரியின் தலையை அவர் நசுக்கவிருந்தார். (ஆதியாகமம் 3:15) அந்தச் சமயத்திலிருந்து யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தையும் ராஜ்யத்தையும் குறித்த யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்ற தாம் முழுமூச்சாக உழைக்க வேண்டுமென்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.
3. யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதில் தமக்குள்ள பங்கைச் செய்ய இயேசு தம்மை எப்படித் தயார்படுத்திக்கொண்டார்?
3 புதிய பொறுப்பிற்குத் தம்மை தயார்படுத்திக்கொள்வதற்காக, ‘இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.’ (லூக்கா 4:1; மாற்கு 1:12) அங்கே, யெகோவாவின் ஆட்சியுரிமையைக் குறித்து சாத்தான் எழுப்பிய விவாதத்தைப் பற்றியும் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்கும் விதத்தில் தாம் எப்படி வாழலாம் என்பதைப் பற்றியும் 40 நாட்களுக்கு அவர் ஆழ்ந்து யோசித்தார். இந்த விவாதம், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லா புத்திக்கூர்மையுள்ள படைப்புகளையும் உட்படுத்துகிறது. நாமும் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்கவே விரும்புகிறோம். அப்படியென்றால், அதை வாழ்க்கையில் எப்படி வெளிக்காட்டலாம் என்பதை இயேசுவின் உண்மையுள்ள வாழ்க்கைமுறையைக் கவனிப்பதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.—யோபு 1:6-12; 2:2-6.
யெகோவாவின் உன்னத அரசதிகாரத்திற்கு எதிரான சாத்தானின் சவால்
4. சாத்தான் செய்த என்ன காரியம், உன்னத அரசதிகாரம் சம்பந்தப்பட்ட சவாலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது?
4 மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் எதுவும் சாத்தானின் பார்வைக்குத் தப்பவில்லை. கடவுளுடைய “ஸ்திரீ” பிறப்பிக்கும் முக்கியமான ‘வித்துவின்மீது’ உடனடி தாக்குதலில் இறங்கினான். (ஆதியாகமம் 3:15) சாத்தான் மூன்றுமுறை இயேசுவைச் சோதித்தான். இயேசு தம் தகப்பனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அவருக்கு நன்மை தருவதுபோல் தோன்றின காரியங்களைச் செய்யும்படி அவன் தூண்டினான். குறிப்பாக, மூன்றாவது சோதனை யெகோவாவின் உன்னத அரசதிகாரம் சம்பந்தமான சவாலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” இயேசுவுக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சாத்தான் நேரடியாக அவரிடம் கூறினான். ‘உலகத்தின் சகல ராஜ்யங்களும்’ சாத்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார்; எனினும், “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று பதிலளிப்பதன் மூலம் உன்னத அரசதிகாரம் சம்பந்தமான சவாலில் தாம் யார் பக்கம் என்பதைத் தெளிவாக்கினார்.—மத்தேயு 4:8-10.
5. எந்தக் கடினமான பணியை இயேசு நிறைவேற்ற வேண்டியிருந்தது?
5 யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதே மிக முக்கியம் என்பதை இயேசு தம் வாழ்க்கைமுறையின் மூலமாக தெள்ளத் தெளிவாகக் காட்டினார். ஆட்சி செய்வது கடவுளுக்கே உரியது என்பதை நிரூபிப்பதற்காக, சாத்தானால் தாம் கொல்லப்படும் வரை உண்மையோடு நிலைத்திருக்க வேண்டும் என்பதை இயேசு நன்றாக அறிந்திருந்தார்; இந்தச் சம்பவம், ஸ்திரீயினுடைய ‘வித்துவின்’ குதிங்கால் நசுக்கப்படும் என்று தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டிருந்தது. (மத்தேயு 16:21; 17:12) அதுதவிர, கலகக்காரனான சாத்தானை அடக்கவும், எங்கும் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் கடவுளுடைய ராஜ்யத்தை யெகோவா கருவியாகப் பயன்படுத்துவார் என்ற செய்தியையும் அவர் அறிவிக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 6:9, 10) இந்தக் கடினமான பணியை நிறைவேற்ற இயேசு என்ன செய்தார்?
“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று”
6. கடவுள், ராஜ்யத்தை கருவியாகப் பயன்படுத்தி ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கப்போகிறார்’ என்பதை இயேசு எவ்வாறு அறிவித்தார்?
6 முதலாவதாக, “இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; . . . என்றார்.” (மாற்கு 1:14, 15) “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றும்கூட அவர் கூறினார். (லூக்கா 4:18-21, 43) இயேசு அந்தத் தேசமெங்கும் பயணித்து, “தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார்.” (லூக்கா 8:1) அதோடு, பெருங்கூட்டத்திற்கு உணவளித்தது, இயற்கை சீற்றத்தை அடக்கியது, நோயுற்றோரைக் குணப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்த்தெழுப்பியது போன்ற வல்லமைவாய்ந்த அநேக செயல்களையும் இயேசு செய்தார். இதன்மூலம், ஏதேனில் நடந்த கலகத்தின் விளைவாக ஏற்பட்ட எல்லா சேதத்தையும் கடவுள் சரிசெய்து, துன்பத்தை நீக்குவார் என்பதையும், இப்படியாக ‘பிசாசினுடைய கிரியைகளை அழிப்பார்’ என்பதையும் இயேசு நிரூபித்தார்.—1 யோவான் 3:8.
7. என்ன செய்யும்படி தம் சீஷர்களிடம் இயேசு கூறினார், இதன் விளைவு என்ன?
7 ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி முழுமையாகப் பிரசங்கிக்கப்பட வேண்டுமென்று இயேசு விரும்பினார். இதனால், உண்மையுள்ள சீஷர்களைக் கொண்ட ஒரு தொகுதியை ஏற்படுத்தி, இந்த வேலைக்காக அவர்களைத் தயார்படுத்தினார். முதலில், தம்முடைய 12 அப்போஸ்தலர்களை நியமித்து, “தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க . . . அவர்களை அனுப்பினார்.” (லூக்கா 9:1, 2) பிறகு, “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது” என்ற செய்தியை அறிவிக்கும்படி இன்னும் 70 பேரை அனுப்பினார். (லூக்கா 10:1, 8, 9) ராஜ்யத்தைப்பற்றிப் பிரசங்கித்தபோது தங்களுக்குக் கிடைத்த பலன்களை அந்த சீஷர்கள் இயேசுவிடம் திரும்பி வந்து அறிக்கையிட்டனர். அப்போது, “சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.—லூக்கா 10:17, 18.
8. பூமியில் இயேசுவின் வாழ்க்கை எதைத் தெளிவாகக் காட்டியது?
8 ராஜ்யத்தைக் குறித்து அறிவிப்பதில் இயேசு முழுமூச்சோடு ஈடுபட்டார், அதைப்பற்றிப் பேசுவதற்குக் கிடைத்த எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர் நழுவவிடவில்லை. இரவு பகல் பாராமல் அவர் தொடர்ந்து உழைத்தார்; தம்முடைய சௌகரியங்களை இழக்கவும் தயாராயிருந்தார். “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்று அவர் கூறினார். (லூக்கா 9:58; மாற்கு 6:31; யோவான் 4:31-34) தம்முடைய மரணத்திற்கு சற்று முன்பு, பொந்தியு பிலாத்துவிடம், “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று அவர் தைரியமாகச் சொன்னார். (யோவான் 18:37) அவர் ஒரு பெரிய போதகராகவோ, அற்புதம் நிகழ்த்துபவராகவோ, தியாகத்தின் உருவான இரட்சகராகவோ இருப்பதற்கு மட்டுமே இந்தப் பூமிக்கு வரவில்லை; மாறாக, சர்வலோகப் பேரரசரான யெகோவாவின் நோக்கத்தை ஆதரிப்பதற்காக வந்தார்; அதோடு, ராஜ்யத்தின் மூலமாக யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்ற வல்லவர் என்பதற்கு சாட்சி கொடுக்கவும் வந்தார்; இதையெல்லாம் தம்முடைய வாழ்க்கை முறையின் மூலமாக இயேசு தெளிவாகக் காட்டினார்.—யோவான் 14:6.
“எல்லாம் நிறைவேறிற்று”
9. கடவுளுடைய ஸ்திரீயின் ‘வித்துவுடைய’ குதிங்காலை நசுக்குவதில் சாத்தான் எப்படி வெற்றி பெற்றான்?
9 ராஜ்யத்திற்கு ஆதரவாக இயேசு செய்த காரியங்கள் எதுவுமே எதிரியான பிசாசாகிய சாத்தானுக்குப் பிடிக்கவில்லை. சாத்தானுடைய வித்துவின் பூமிக்குரிய பாகமாக இருப்பவர்களை, அதாவது அரசியலையும் மதத்தையும் சேர்ந்தவர்களைப் பயன்படுத்தி, ஸ்திரீயின் ‘வித்துவைக்’ கொல்ல சாத்தான் திரும்பத் திரும்ப முயற்சி செய்தான். இயேசு பிறந்ததுமுதல் இறக்கும்வரை சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் அவரையே குறிவைத்துத் தாக்கினார்கள். கடைசியாக, பொ.ச. 33, வசந்தகாலத்தில், குதிங்கால் நசுக்கப்படுவதற்காக எதிரியின் கையில் மனுஷகுமாரன் ஒப்படைக்கப்பட வேண்டிய வேளை வந்தது. (மத்தேயு 20:18, 19; லூக்கா 18:31-33) இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கும் கழுமரத்தில் வேதனையான மரணத்தை அவருக்குப் பெற்றுத் தருவதற்கும் மனிதர்களைச் சாத்தான் எப்படிப் பயன்படுத்திக்கொண்டான் என்பது சுவிசேஷ பதிவுகளில் தெளிவாகத் தெரிகிறது. இவ்விதத்தில் யூதாஸ் காரியோத்து, பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், பரிசேயர்கள், ரோமர்கள் என பலபேர் சாத்தானின் கைப்பாவைகளாய் செயல்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 2:22, 23.
10. கழுமரத்தில் மரித்ததன் மூலமாக இயேசு முக்கியமாய் எதை நிறைவேற்றினார்?
10 கழுமரத்தில் இயேசு அணுஅணுவாகத் துடித்து, மரிக்கும் காட்சியை மனத்திரையில் காணும்போது, உங்கள் நினைவுக்கு வருவது என்ன? ஒருவேளை, பாவமுள்ள மனிதர்களை மீட்பதற்காக இயேசு தன்னலமின்றி அளித்த கிரயபலி உங்கள் நினைவுக்கு வரலாம். (மத்தேயு 20:28; யோவான் 15:13) இந்தப் பலியை கொடுத்ததன்மூலம் யெகோவா காட்டிய மாபெரும் அன்பு உங்களை மலைக்க வைக்கலாம். (யோவான் 3:16) “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்று சொல்வதற்குத் தூண்டப்பட்ட ரோம படைத்தலைவரைப் போன்று நீங்களும் உணரலாம். (மத்தேயு 27:54) இவை அனைத்துமே சரிதான். மறுபட்சத்தில், “எல்லாம் நிறைவேறிற்று” என்று இயேசு கழுமரத்தில் கடைசியாக கூறிய வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். (யோவான் 19:30, பொது மொழிபெயர்ப்பு) அவர் எவற்றை நிறைவேற்றினார்? இயேசு தம்முடைய வாழ்க்கையின் மூலமாகவும் மரணத்தின் மூலமாகவும் பலவற்றைச் சாதித்தார் என்பது உண்மையே. எனினும், யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தைப் பற்றிய விவாதத்தைத் தீர்ப்பதே இயேசு இந்தப் பூமிக்கு வந்ததற்கான முக்கிய காரணம், அல்லவா? யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்காக “வித்து” மிகக் கடுமையான விதத்தில் சாத்தானால் துன்புறுத்தப்படுவார் என்று முன்னுரைக்கப்படவில்லையா? (ஏசாயா 53:3-7) அப்படிப்பட்ட பெரும் பொறுப்புகளை இயேசு முழுமையாகச் செய்து முடித்தார். இது எப்பேர்ப்பட்ட சாதனை!
11. ஏதேனில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை முழுமையாக நிறைவேற்ற இயேசு என்ன செய்வார்?
11 உண்மையாகவும் உத்தமமாகவும் நடந்துகொண்டதால், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். ஒரு மனிதராக அல்ல, மாறாக, “உயிர்ப்பிக்கிற ஆவி”யாக எழுப்பப்பட்டார். (1 கொரிந்தியர் 15:45; 1 பேதுரு 3:18) “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்” என்று தம்முடைய மகிமைப்படுத்தப்பட்ட மகனிடம் யெகோவா வாக்குறுதி அளித்தார். (சங்கீதம் 110:1) இங்கு குறிப்பிடப்படும் ‘சத்துருக்களில்,’ முக்கிய எதிரியான சாத்தானும், அவனுடைய ‘வித்துவின்’ பாகமாக இருக்கும் அனைவரும் அடங்குவர். யெகோவாவுடைய மேசியானிய ராஜ்யத்தின் அரசரான இயேசு கிறிஸ்து, பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லா கலகக்காரர்களையும் துடைத்தழிப்பதில் முன்நின்று செயல்படுவார். (வெளிப்படுத்துதல் 12:7-9; 19:11-16; 20:1-3, 10) அதன் பிறகு, ஆதியாகமம் 3:15-ல் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறும்; “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபமும் முழுமையாக நிறைவேறும்.—மத்தேயு 6:10; பிலிப்பியர் 2:8-11.
பின்பற்ற ஒரு முன்மாதிரி
12, 13. (அ) ராஜ்ய நற்செய்திக்கு எப்படிப்பட்ட பிரதிபலிப்பை இப்போது காணமுடிகிறது? (ஆ) கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்பினால் நாம் என்னென்ன கேள்விகளை நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
12 ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பல தேசங்களில் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்; அது இன்று நிறைவேறி வருகிறது. (மத்தேயு 24:14) இதன் விளைவாக, லட்சக்கணக்கான மக்கள் தங்களையே கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள். ராஜ்யத்தின் மூலமாக வரவிருக்கும் ஆசீர்வாதங்களை எண்ணி மகிழ்கிறார்கள். பரதீஸாக மாறவிருக்கும் பூமியில் சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிருப்பதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்; தங்கள் நம்பிக்கையை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவிக்கிறார்கள். (சங்கீதம் 37:11; 2 பேதுரு 3:13) இவ்வாறு ராஜ்யத்தை அறிவிப்போரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், நீங்கள் பாராட்டுக்குரியவர்கள். எனினும், நாம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது.
13 “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 2:21) பிரசங்கிப்பதில் இயேசு காட்டிய உள்ளார்வத்தையோ போதிப்பதில் அவருக்கிருந்த திறமையையோ குறித்து பேதுரு இங்கு குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, இயேசுவின் பாடுகளைக் குறித்தே பேசினார். யெகோவாவின் உன்னத அரசதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதற்கும் சாத்தானைப் பொய்யனென்று நிரூபிப்பதற்கும் இயேசு எந்தளவு கஷ்டப்படத் தயாராயிருந்தார் என்பதை பேதுரு நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் அவர் பட்ட கஷ்டத்தை பேதுரு நேரடியாகக் கண்டிருந்தார். அப்படியானால், இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் என்னென்ன விதங்களில் பின்பற்றலாம்? ‘யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதற்கும் மதிப்பதற்கும் நான் எந்தளவு கஷ்டப்படத் தயாராயிருக்கிறேன்? என்னுடைய வாழ்க்கைமுறையும் ஊழியத்தில் காட்டும் உள்ளார்வமும் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதை மிக முக்கியமானதாய் கருதுகிறேன் என்பதைக் காட்டுகிறதா?’ என்பது போன்ற கேள்விகளை நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.—கொலோசெயர் 3:17.
14, 15. (அ) தவறான யோசனைகளும் வாய்ப்புகளும் முன்வைக்கப்பட்டபோது, இயேசு என்ன செய்தார், ஏன்? (ஆ) நாம் எந்த விவாதத்தை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்? (“யெகோவாவின் பக்கம் நில்லுங்கள்” என்ற பெட்டியைக் காண்க.)
14 நாம் ஒவ்வொரு நாளும், பெரியதும் சிறியதுமான பல சோதனைகளைச் சந்திக்கவும் பல தீர்மானங்களை எடுக்கவும் வேண்டியிருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும்? உதாரணமாக, நம்முடைய கிறிஸ்தவ நிலைநிற்கையைப் பாதிக்கக்கூடிய ஏதோவொன்றைச் செய்யும்படியான சோதனையை நாம் எதிர்ப்படுகையில், நாம் என்ன செய்வோம்? இயேசுவுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாதென்று பேதுரு அவரிடம் சொன்னபோது, இயேசு என்ன செய்தார்? “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ . . . தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்று கூறினார். (மத்தேயு 16:21-23) கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையோ பதவி உயர்வோ நமக்கு கிடைக்கிறது; ஆனால், அது நம் ஆன்மீக நலனைப் பாதிக்கும் என்று தெரிந்தால், நாம் என்ன செய்வோம்? இயேசுவைப் போல நாம் செயல்படுவோமா? தாம் செய்த அற்புதங்களைக் கண்டவர்கள், “தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென” இயேசு அறிந்தபோது, அவர் உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்றார்.—யோவான் 6:15.
15 இத்தகைய சமயங்களிலும், இதுபோன்ற பிற சந்தர்ப்பங்களிலும் இயேசு ஏன் இவ்வளவு உறுதியாக நடந்துகொண்டார்? ஏனெனில், தம்முடைய பாதுகாப்பையும் நலனையும்விட மிக முக்கியமான ஒரு காரியம் இருப்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார். என்ன நடந்தாலும் சரி, தம் பிதாவின் சித்தத்தையே செய்ய வேண்டும், அவருடைய உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். (மத்தேயு 26:50-54) ஆகவே, இயேசுவைப் போன்று நாமும் இந்த விவாதத்தை நம் மனதில் எப்போதும் தெளிவாக வைத்திருக்கவில்லையென்றால், விட்டுக்கொடுத்துவிடவோ தவறு செய்துவிடவோ வாய்ப்பிருக்கிறது. ஏன்? ஏனெனில், நாம் சாத்தானுடைய தந்திரங்களுக்கு எளிதில் இரையாகிவிடலாம். ஏவாளை சோதித்தபோது செய்ததைப்போலவே, தவறான காரியத்தை விரும்பத்தக்கதாகக் காட்டுவதில் அவன் கெட்டிக்காரன்.— 2 கொரிந்தியர் 11:14; 1 தீமோத்தேயு 2:14.
16. மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவும்போது நம்முடைய முக்கிய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்?
16 ஊழியத்தில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், அவற்றிற்கு பைபிள் அளிக்கும் தீர்வுகளையும்பற்றி நாம் பேசுகிறோம். பைபிளைப் படிக்கும்படி மக்களை ஊக்கப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியே. எனினும், பைபிள் சொல்வதைக் குறித்தோ கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரப்போகும் ஆசீர்வாதங்களைக் குறித்தோ கற்றுக்கொடுப்பது மட்டுமே நம் முக்கிய குறிக்கோள் அல்ல. மாறாக, யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தைப் பற்றிய விவாதத்தைப் புரிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களாக மாறி, தங்கள் ‘கழுமரத்தை’ எடுத்துக்கொண்டு, ராஜ்யத்திற்காக கஷ்டங்களைச் சகிக்க தயாராக இருக்கிறார்களா? (மாற்கு 8:34, NW) யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பவர்களோடு ஒன்றுசேர்ந்து, சாத்தானை பொய்யனென்றும் பழிதூற்றுபவனென்றும் நிரூபிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா? (நீதிமொழிகள் 27:11) யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதற்கு நாம் கடும்முயற்சி எடுப்பதோடு மற்றவர்களும் அவ்வாறு செய்ய உதவுவது நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய பாக்கியமே!—1 தீமோத்தேயு 4:16.
தேவனே ‘சகலத்திலும் சகலமுமாயிருக்கும்போது’
17, 18. யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை நாம் ஆதரித்தால், எப்படிப்பட்ட மகத்தான காலத்தை நாம் எதிர்நோக்கியிருக்கலாம்?
17 நம்முடைய நடத்தை, ஊழியம் ஆகியவற்றின் மூலமாக யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பதற்கு நம்மாலான அனைத்தையும் இப்போதே செய்வோமாக. அப்படிச் செய்கையில், இயேசு கிறிஸ்து தம்முடைய ‘தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுக்கும்’ காலத்தை நாம் எதிர்நோக்கியிருக்கலாம். அது எப்போது நடக்கும்? ‘அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரிக்கும்போது. . . . [கடவுள்] எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்வார். . . . தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.’—1 கொரிந்தியர் 15:24, 25, 28.
18 தேவன் ‘சகலத்திலும் சகலமுமாயிருக்கும்போது’ எப்பேர்ப்பட்ட மகத்தான காலமாக அது இருக்கும்! ராஜ்யம் அதன் குறிக்கோளை அடைந்திருக்கும். யெகோவாவின் ஆட்சியை எதிர்க்கும் அனைவரும் அழிக்கப்பட்டிருப்பர். சர்வலோகம் எங்கும் அமைதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டிருக்கும். “கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, . . . கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் . . . என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்” என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளைச் சொல்லி அனைத்து படைப்புகளும் பாடும்.— சங்கீதம் 96:8, 10.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
• யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை இயேசு எவ்வாறு முதலிடத்தில் வைத்தார்?
• தம் ஊழியம், மரணம் ஆகியவற்றின் மூலமாக இயேசு எதை முக்கியமாக நிறைவேற்றினார்?
• யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுவதில் இயேசுவின் முன்மாதிரியை நாம் எந்தெந்த விதங்களில் பின்பற்றலாம்?
[பக்கம் 29-ன் பெட்டி/படங்கள்]
யெகோவாவின் பக்கம் நில்லுங்கள்
கொரியாவிலும் மற்ற இடங்களிலும் உள்ள ஏராளமான சகோதரர்கள் அறிந்திருக்கும் விதமாக, கடுமையான சோதனைகளை கிறிஸ்தவர்கள் எதிர்ப்படுகையில், அதற்கான காரணத்தை மனதில் தெளிவாக வைத்திருப்பது உதவியாக இருக்கிறது.
முன்னாள் சோவியத் ஆட்சியின்போது சிறைவாசத்தை அனுபவித்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இவ்வாறு கூறினார்: “கடவுளுக்கு ஆட்சி செய்ய உரிமை இருக்கிறதா என்பதைக் குறித்து ஏதேன் தோட்டத்தில் எழுப்பப்பட்ட விவாதத்தை நாங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தோம். இது சகித்திருக்க எங்களுக்கு உதவியது. . . . யெகோவாவுடைய ஆட்சியை ஆதரிப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இருந்ததை நாங்கள் அறிந்திருந்தோம். . . . இது எங்களைப் பலப்படுத்தியது, உத்தமத்தோடு நிலைத்திருக்க எங்களுக்கு உதவியது.”
கட்டாய உழைப்பு முகாமில் இருந்தபோது தனக்கும் சக சாட்சிகளுக்கும் எது உதவியதென்று மற்றொரு சாட்சி இவ்வாறு கூறினார்: “யெகோவா எங்களுக்கு ஆதரவாக இருந்தார். கஷ்டமான சூழ்நிலைகள் மத்தியிலும் நாங்கள் ஆன்மீக ரீதியில் விழிப்பாக இருந்தோம். கடவுளுடைய அரசதிகாரத்தைப் பற்றிய விவாதத்தில் நாம் யெகோவாவின் பக்கம் நிலைத்திருக்கிறோம் என்று நினைப்பூட்டுவதன்மூலம் ஒருவரையொருவர் எப்போதும் உற்சாகப்படுத்தினோம்.”
[பக்கம் 26-ன் படம்]
சாத்தானால் சோதிக்கப்பட்டபோது இயேசு எவ்வாறு யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரித்தார்?
[பக்கம் 28-ன் படம்]
இயேசுவின் மரணம் எவற்றை நிறைவேற்றியது?