உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 12/15 பக். 4-7
  • ‘இரக்கமுள்ளவர்களாய்’ இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘இரக்கமுள்ளவர்களாய்’ இருங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இரக்கத்தின் வல்லமை
  • பரிவை செயலில் காட்டுவதே இரக்கம்
  • இரக்கம் நிலவுகிற சூழலை அனுபவித்து மகிழுங்கள்
  • உருக்கமான இரக்கமுள்ளோராக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • யெகோவா இரக்கத்தோடு ஆட்சி செய்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 12/15 பக். 4-7

‘இரக்கமுள்ளவர்களாய்’ இருங்கள்

ந ம்மைச் சுற்றியுள்ள அநேகர் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு பஞ்சம், வியாதி, வறுமை, வன்முறை, உள்நாட்டு கலவரங்கள், இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றால் பரிதாபமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இவர்கள்மீது இரக்கப்பட்டு உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இரக்கம் காட்டுவது என்றால், மற்றவர்கள் படுகிற கஷ்டத்தையும் துன்பத்தையும் பார்த்து பரிதாபப்படுவதோடு அவர்களுடைய கஷ்டத்தை முடிந்தளவுக்கு நீக்க வேண்டுமென்று விரும்புவதே ஆகும். குளிரில் நடுங்கும் ஒருவருக்கு சூரிய ஒளி எவ்வாறு கதகதப்பூட்டி, இதமளிக்கிறதோ அதேபோல் துயரத்தில் வாடும் ஒருவருக்கு இரக்கம் காட்டுவது, அவருடைய வேதனையைக் குறைத்து அவருக்கு நம்பிக்கையளிப்பதற்குச் சமமாக இருக்கிறது.

நம்முடைய இரக்கத்தைச் சொல்லிலும் செயலிலும் காட்ட முடியும். எப்படியெனில், மற்றவர்கள்மீது அக்கறை காட்டி, அவர்களுக்கு தேவைப்படுகிற சமயத்தில் உடனடியாக உதவிக்கு வருவதன்மூலம் நாம் அதைச் செய்ய முடியும். வெறுமனே நம் குடும்பத்தார், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று இவர்களிடம் மட்டுமே இரக்கம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் முன்பின் தெரியாதவர்களிடமும் இரக்கம் காட்டுவது நல்லது. “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன?” என்று இயேசு கிறிஸ்து தம்முடைய மலைப் பிரசங்கத்தில் கேட்டார். இரக்கம் நிறைந்த இந்த மனிதர் மேலும் இப்படிச் சொன்னார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 5:46, 47; 7:12.

பொன்விதி என்று அழைக்கப்படுகிற இந்தக் கூற்றை நீங்கள் பைபிளில் வாசிக்கலாம். இரக்கம் காண்பிப்பதற்கு பைபிளே உத்தம வழிகாட்டி என்று அநேகர் ஒத்துக்கொள்கிறார்கள். ஆதரவின்றி, திக்கற்றவர்களாய் இருப்பவர்களுக்கு உதவவேண்டிய கடமை நமக்கு இருப்பதை பைபிள் அடிக்கடி வலியுறுத்துகிறது. அதன் நூலாசிரியராகவும் நம் படைப்பாளராகவும் இருக்கிற யெகோவா தேவனே இரக்கம் காண்பிப்பதில் தலைசிறந்தவர் என்றும் அது சித்தரிக்கிறது.

உதாரணத்திற்கு, “அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார்” என்று நாம் வாசிக்கிறோம். (உபாகமம் 10:18, ஈஸி டு ரீட் வர்ஷன்) யெகோவா தேவன், “ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்” என்று வர்ணிக்கப்படுகிறார். (சங்கீதம் 146:7) ஆதரவற்ற அந்நியரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய விதத்தைக் குறித்து சொல்கையில், யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக.”—லேவியராகமம் 19:34.

இருந்தாலும் இரக்கம் காட்டுவது எப்போதும் சுலபமல்ல. கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனை [அதாவது, சுபாவத்தை] தரித்துக்கொள்ளுங்கள். . . . நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:9, 10, 12.

எனவே, இரக்க குணத்தை வளர்த்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டும். இந்தக் குணம் கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய ‘புதிய சுபாவத்தின்’ பாகமாக இருக்கிறது. மூர்க்கமான ஓர் உலகில் பவுல் வாழ்ந்து வந்ததால், தம்முடைய சக விசுவாசிகள் அதிக இரக்கமுள்ளவர்களாகவும் அதிக கருணையுள்ளவர்களாகவும் இருப்பதற்காக தங்கள் சுபாவத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தினார்.

இரக்கத்தின் வல்லமை

இரக்கம் காட்டுபவர்களைச் சிலர் ஏமாளிகளாகவும் பலவீனர்களாகவும் கருதுகிறார்கள். ஆனால், அப்படி நினைப்பது சரியா?

சரியே இல்லை! உள்ளப்பூர்வமான இரக்கத்தைக் காண்பிப்பதற்கு ஆழமான அன்புதான் உந்துவிக்கும் சக்தி. அன்பே உருவாயிருக்கும் கடவுள்தான் இதற்கு ஊற்றுமூலர். ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்.’ (1 யோவான் 4:16) ‘இரக்கங்களின் பிதா என்றும், சகலவிதமான ஆறுதலின் தேவன்’ என்றும் யெகோவா அழைக்கப்படுவது மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. (2 கொரிந்தியர் 1:3) ‘இரக்கம்’ என்று இங்குச் சொல்லப்பட்டிருப்பது, “மனம் உருகுவதை அதாவது, மற்றவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து வேதனைப்படுவதை” குறிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், யெகோவா ‘நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறார்’!—லூக்கா 6:35.

நாமும்கூட இரக்கம் போன்ற இதமான குணங்களைக் காண்பிக்க வேண்டுமென நம்முடைய படைப்பாளர் விரும்புகிறார். ‘மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகிப்பதை . . . அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்’ என்று மீகா 6:8-ல் நாம் வாசிக்கிறோம். “மனிதனிடமுள்ள விரும்பத்தக்க குணம் அவனுடைய அன்புள்ள தயவே” என்று நீதிமொழிகள் 19:22-ல் (NW) நாம் வாசிக்கிறோம். தம் தந்தையை அச்சுப்பிசகாமல் பிரதிபலித்த இயேசு கிறிஸ்துவும்கூட தம்முடைய சீஷர்களை பின்வருமாறு உந்துவித்தார்: “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.”—லூக்கா 6:36.

இரக்கம் காட்டுகையில் நமக்கு கைமேல் பலன் கிடைப்பதால் இரக்கமுள்ளவர்களாய் இருப்பதற்கு இதுவே உகந்த காரணமாக இருக்கிறது. நீதிமொழிகள் 11:17-ல் சொல்லப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையாயிருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அது சொல்வதாவது: “தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்.” உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாம் இரக்கம் காட்டினால் அதை கடவுள், தமக்கே செய்த ஒரு உதவியாகக் கருதுகிறார். தம்முடைய ஊழியர்கள் சிறிய விதத்தில் இரக்கம் காண்பித்தாலும், அவர்களுக்கு ஏதாவதொரு விதத்தில் தாம் தயவு காட்டியே ஆகவேண்டுமென்று அவர் நினைக்கிறார். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என்று தேவ ஆவியின் வழிநடத்துதலால் சாலொமோன் ராஜா கூறினார். (நீதிமொழிகள் 19:17) ‘அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவான்’ என்று பவுலும் எழுதினார்.—எபேசியர் 6:7.

பிரச்சினைகளைத் தீர்த்து, சமாதானத்தைக் காத்துக்கொள்ளும் சக்தி இரக்க குணத்திற்கு இருக்கிறது. மனஸ்தாபங்களை நீக்கி மனதார மன்னிப்பதற்கு இந்தக் குணம் வழிவகுக்கிறது. நம்முடைய யோசனைகளையும் உணர்ச்சிகளையும் நாம் நினைத்தபடி சரியாக வெளிப்படுத்தாமல் போகையில் அல்லது, நம்முடைய செயல்களை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்கையில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். இங்குதான் இரக்கம் நம் உதவிக்கு வருகிறது, சமாதானத்தைக் காக்க அது உதவுகிறது. இரக்க குணம் காண்பிக்கிறவராக அறியப்பட்ட ஒருவரை மன்னிப்பது சுலபம். கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த அறிவுரையைப் பின்பற்ற இந்தக் குணம் உதவுகிறது. அவர் சொன்னதாவது: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.

பரிவை செயலில் காட்டுவதே இரக்கம்

மற்றவர்களுடைய வேதனையை நீக்கக்கூடிய சக்தியும் இரக்கத்திற்கு இருக்கிறது. நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி, துயரத்தில் வாடுபவர்களிடம் பரிவு காட்ட அது நம்மை உந்துவிக்கிறது. மற்றவர்களுடைய கஷ்டத்தை நம்முடைய கஷ்டமாக நினைக்க நம்மைத் தூண்டுகிறது. கடுந்துயரத்தில் உள்ளவர்களுக்காக மனதுருகுவதும், அவர்களுக்காக நடைமுறையான உதவிகளைச் செய்வதும் அதில் உட்படுகிறது.

இரக்கம் காண்பிப்பதன்மூலம் கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள். இயேசு, மற்றவர்களுக்கு சரீர ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் உதவ எப்போதும் தயாராக இருந்தார். மற்றவர்கள் திக்கற்ற நிலையில் இருப்பதை உணர்ந்தபோது அவர்களுக்காக மனம் இரங்கி உதவினார்.

ஆன்மீக ரீதியில் துவண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது இயேசு எவ்வாறு உணர்ந்தார் என்பதைக் கவனியுங்கள்: ‘அவர் திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மத்தேயு 9:36) ‘மனதுருகினார்’ என்ற இந்த வார்த்தை “ஒருவருடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் ஓர் உணர்ச்சியை விவரிக்கிறது” என்று ஒரு பைபிள் அறிஞர் கூறுகிறார். பார்க்கப்போனால் இந்த வார்த்தை, கிரேக்க மொழியில் இரக்க உணர்வுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் வலிமையான வார்த்தைகளில் ஒன்று என்பதாகச் சொல்லப்படுகிறது.

இயேசுவைப் போலவே இரக்கமுள்ள கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய சரீர தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் உணர்ந்து உடனடியாக உதவி செய்ய முன்வருகிறார்கள். ‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களுமாக’ இருக்க வேண்டுமென அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:8) இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: வசதி குறைவுபட்ட ஒரு கிறிஸ்தவ குடும்பம், உடல் நிலை காரணமாக வேறொரு இடத்திற்கு குடிமாறிச் சென்றபோது அங்கிருந்த சகவிசுவாசிகள் அவர்களுக்காக ஒரு வீட்டை ஏற்பாடு செய்து, ஆறு மாதத்திற்கு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் குடும்பத்தின் தலைவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் அவர்கள் தவறாமல் எங்களை வந்து பார்த்துவிட்டு போனார்கள். ஆறுதலான அவர்களுடைய வார்த்தைகள் எங்களுக்கு தெம்பளித்தன. வேறு இடத்தில் இருப்பதுபோன்ற உணர்வே எங்களுக்கு வராதபடி பார்த்துக்கொண்டார்கள்.”

உண்மைக் கிறிஸ்தவர்கள், அந்நியர்களின் தேவைகளைக் குறித்தும் உணர்வுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், பணத்தையும் மனமுவந்து செலவழிக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்ததாக முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அந்தத் தன்னார்வ தொண்டர்கள் வேறு யாருமில்லை, யெகோவாவின் சாட்சிகளே.

ஆம், கிறிஸ்தவ சபையில் இரக்கமும், அன்புள்ள தயவும் குடிகொண்டிருக்கின்றன. சபையிலுள்ளவர்கள் அன்பினால் தூண்டப்பட்டு மற்றவர்களுக்கு உதவ வழி தேடுகிறார்கள். உங்கள் சபையில் உள்ள விதவைகளும் அனாதைகளும் பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு உங்களுடைய அக்கறையும் அனுதாபமும் தேவைப்படலாம். அவர்கள் வறுமையில் வாடலாம், போதிய மருத்துவ உதவி பெறமுடியாமல் தவிக்கலாம், சரியான வீடு இல்லாமல் கஷ்டப்படலாம், அல்லது வேறு ஏதாவது சொந்த பிரச்சினைகளுடன் போராடலாம். இவர்களுக்கு நீங்கள் உதவ முடியுமா?

கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தம்பதிக்கு என்ன ஆனது என்பதைக் குறித்து கவனியுங்கள். அந்தக் கணவர் திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரும் அவருடைய மனைவியும் வெகு தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடைய ஆரஞ்சு பழத்தோட்டத்திலிருந்து கிடைத்த சொற்ப பணத்தையே வருமானத்திற்காக நம்பியிருந்தார்கள். ஆனால், அவர்கள் மருத்துவமனையில் இருப்பதால், யார் அந்தப் பழங்களைப் பறித்து, விற்று பணமாக்குவது? உள்ளூரிலிருந்த சபை அந்த ஆரஞ்சு பழங்களை விற்று அவர்களுக்கு மாதாமாதம் வருவாய் கிடைக்கும்படிச் செய்து அவர்களுடைய கவலையைப் போக்கியது. தேவையில் இருந்த அந்தத் தம்பதிக்கு அது சமயசஞ்சீவியாக இருந்தது.

இரக்க குணத்தைப் பல வழிகளில் காண்பிக்கலாம். உதாரணத்திற்கு, கஷ்டத்தில் இருப்பவர்கள், தங்களை அன்புடன் யாராவது வந்து சந்தித்து, தங்களுடைய பாரத்தை இறக்கி வைக்கையில் காதுகொடுத்துக் கேட்டு, தங்கள் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு பரிவு காட்ட வேண்டுமென விரும்புவார்கள்; அதோடு, பைபிளிலிருந்து மனதுக்கு ஆறுதலாக சில விஷயங்களைப் பேச வேண்டுமென்றும் ஆசைப்படுவார்கள். சில சமயங்களில் இப்படிப்பட்ட உதவியே முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதை இரக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—ரோமர் 12:15.

இரக்கம் நிலவுகிற சூழலை அனுபவித்து மகிழுங்கள்

உலகமுழுவதிலுமுள்ள கிறிஸ்தவ சபைகளில் இரக்கமும் தயவும் காட்டப்படுவதால் அங்குச் சமாதானமும் சந்தோஷமும் நிலவுகின்றன. இரக்க குணம் மக்களைத் தன்பால் ஈர்க்கிறது, கொடூர குணமோ தூரமாக விலகிப்போகச் செய்கிறது என்பதை உண்மை கிறிஸ்தவர்கள் தெரிந்திருக்கிறார்கள். எனவே, தங்களுடைய பரலோகத் தந்தையைப் பின்பற்ற அவர்கள் பிரயாசப்படுகையில், நடைமுறையான விதங்களில் மற்றவர்களிடம் ‘இரக்கமுள்ளவர்களாக’ இருக்க முயற்சி செய்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அனுபவிக்கும் இரக்கத்தையும், அன்பையும், பரிவையும் நீங்களும் அனுபவித்து மகிழும்படி உங்களை மனதார அழைக்கிறார்கள். அந்தச் சூழல் உங்கள் மனதுக்கு இதமாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்பதில் அவர்கள் உறுதியாயிருக்கிறார்கள்.—ரோமர் 15:7.

[பக்கம் 5-ன் படம்]

கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்கள் உருக்கமான இரக்கத்தை தரித்துக்கொள்ளும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்குவித்தார்

[பக்கம் 7-ன் படங்கள்]

மற்றவர்கள் திக்கற்ற நிலையில் இருப்பதை இயேசு உணர்ந்தபோது அவர்களுக்காக மனம் இரங்கி உதவினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்