எல்லாவற்றிலும் கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றுங்கள்
“இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.”—சங். 48:14.
1, 2. நம்முடைய ஞானத்தில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக நாம் ஏன் கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்ற வேண்டும், இது சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுகின்றன?
வீணானதாகவோ தீங்கானதாகவோ இருப்பவற்றை நன்மை தருபவை என்று நினைத்து நாம் ஏமாறுவது சுலபமே. (நீதி. 12:11, பொது மொழிபெயர்ப்பு) கடவுள் வெறுக்கிற ஒரு செயலைச் செய்யவேண்டுமென்ற ஆசை நமக்குள் நிஜமாகவே ஏற்பட்டால், அதை நியாயப்படுத்துவதற்கு நம் இருதயமே காரணங்களைக் கண்டுபிடிக்கும். (எரே. 17:5, 9) எனவேதான், ‘உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்துவதாக’ என்று சங்கீதக்காரன் ஞானமாக யெகோவாவிடம் ஜெபித்தார். (சங். 43:3) அவர் தன்னுடைய சிற்றறிவில் அல்ல ஆனால், யெகோவாவில் நம்பிக்கை வைத்தார். யெகோவாவே அவருடைய மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். சங்கீதக்காரனைப் போலவே கடவுள் தரும் அறிவுரையை ஏற்று நடப்பது நமக்கும் நல்லது.
2 என்றாலும், மற்ற எல்லா அறிவுரைகளையும்விட யெகோவாவின் அறிவுரையை நாம் ஏன் நம்ப வேண்டும்? எப்படிப்பட்ட சமயத்தில் அவருடைய அறிவுரை நமக்குத் தேவை? அதிலிருந்து பயனடைய நாம் எப்படிப்பட்ட மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? யெகோவா இன்று நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்? இத்தகைய முக்கியமான கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கும்.
யெகோவாவின் அறிவுரையை ஏன் நம்ப வேண்டும்?
3-5. நாம் ஏன் யெகோவாவின் அறிவுரையில் முழு நம்பிக்கை வைக்கலாம்?
3 யெகோவாவே நம் பரலோகப் பிதா. (1 கொ. 8:6) நம் ஒவ்வொருவரையும் அவர் முழுமையாக அறிந்திருக்கிறார், நம் இருதயத்தில் உள்ளவற்றையும் அவரால் தெரிந்துகொள்ள முடியும். (1 சா. 16:7; நீதி. 21:2) அரசராகிய தாவீது கடவுளிடம் இவ்வாறு சொன்னார்: “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.” (சங். 139:2, 4) யெகோவா நம்மை அந்தளவுக்கு முழுமையாக அறிந்திருப்பதால், நமக்கு எது மிகச் சிறந்தது என்பதையும் அவர் அறிந்திருப்பார் என்பதில் நமக்குச் சந்தேகம் வரலாமா? யெகோவா ஞானத்தின் சிகரமாயும் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார். மனிதனைப்போல வெளித்தோற்றத்தைப் பார்க்காமல் அகத்தோற்றத்தைப் பார்க்கிறார்; ஒரு காரியத்தின் முடிவை அதன் தொடக்கத்திலேயே அறிந்திருக்கிறார். (ஏசா. 46:9-11; ரோ. 11:33) ஆம், அவர் ‘ஒருவரே ஞானமுள்ள தேவன்.’—ரோ. 16:27.
4 மேலும், யெகோவா நம்மை நேசிக்கிறார்; நமக்கு எப்போதும் மிகச் சிறந்ததையே தர வேண்டுமென்று விரும்புகிறார். (யோவா. 3:16; 1 யோ. 4:8) அன்பும் பாசமுமுள்ள கடவுளாகிய அவர், நமக்கு எல்லாவற்றையும் அள்ளி வழங்குகிறார். “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக். 1:17) கடவுளுடைய அறிவுரைகளின்படி நடக்க விரும்புகிறவர்கள் அவருடைய தாராள மனப்பான்மையிலிருந்து பெரிதும் பயனடைகிறார்கள்.
5 கடைசியாக, யெகோவா சர்வவல்லவராய் இருக்கிறார். இதைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.” (சங். 91:1, 2) நாம் யெகோவாவின் அறிவுரைப்படி நடக்கும்போது, உண்மையில் அவருடைய மிகச் சிறந்த வழிநடத்துதலை நாடுகிறோம்; ஏனென்றால், அவர் நம்மை ஒருபோதும் தவறாக வழிநடத்த மாட்டார். நாம் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட, அவர் நம்மைத் தாங்கி ஆதரிக்கிறார். அவர் நம்மை ஒருபோதும் நட்டாற்றில் விட்டுவிட மாட்டார். (சங். 71:4, 5; நீதிமொழிகள் 3:19-26-ஐ வாசியுங்கள்.) ஆம், நமக்கு எது மிகச் சிறந்தது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார், அதை நமக்குத் தர வேண்டுமென்றும் விரும்புகிறார்; அதைத் தருவதற்கான சக்தி படைத்தவராகவும் அவர் இருக்கிறார். அவருடைய அறிவுரைகளை அசட்டை செய்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! ஆனால், அவருடைய அறிவுரை எப்போது நமக்குத் தேவை?
நமக்கு அறிவுரை எப்போது தேவை?
6, 7. யெகோவாவின் அறிவுரை நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறது?
6 சொல்லப்போனால், வாலிபத்திலிருந்து வயோதிகம்வரை நம் வாழ்நாள் முழுவதும் கடவுளின் அறிவுரை நமக்குத் தேவை. “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங். 48:14) சங்கீதக்காரனைப் போலவே, ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் அறிவுரைக்காக எப்போதும் யெகோவாவையே சார்ந்திருக்கிறார்கள்.
7 உண்மைதான், உடனடியாக ஏதாவது உதவி கிடைக்காதா என நாம் தவிக்கும் சமயங்களும் இருக்கின்றன. சில சமயங்களில், நாம் ‘நெருக்கடியான நிலையில்’ இருக்கலாம்; ஒருவேளை, துன்புறுத்தலோ, கொடிய வியாதியோ வரலாம், அல்லது திடீரென்று வேலை பறிபோய் விடலாம். (சங். 69:16, 17, பொ.மொ.) அப்படிப்பட்ட சமயங்களில், யெகோவாவிடம் சரணடைவதே நமக்கு ஆறுதலைத் தரும்; அவர் சகித்திருப்பதற்கான பலத்தைத் தருவார், ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கான வழியைக் காட்டுவார் என்ற நம்பிக்கையோடு நாம் அவரை அண்டலாம். (சங்கீதம் 102:16-ஐ வாசியுங்கள்.) என்றாலும், மற்ற சந்தர்ப்பங்களிலும் அவருடைய உதவி நமக்குத் தேவைப்படுகிறது. உதாரணமாக, ராஜ்ய நற்செய்தியை நம் அண்டை அயலாரிடம் சொல்கையில், நம்முடைய ஊழியம் பலன்தரத்தக்கதாக இருக்க வேண்டுமானால் கடவுளுடைய அறிவுரை நமக்குத் தேவை. அதோடு, ஏதாவது தீர்மானம் எடுக்கவேண்டிய சமயத்திலும் அவருடைய அறிவுரை நமக்குத் தேவை. அது ஒருவேளை பொழுதுபோக்கு, உடை, அலங்காரம், நட்பு, வேலை, கல்வி போன்ற விஷயமானாலும்சரி அல்லது வேறெந்த விஷயமானாலும்சரி யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றினால் மட்டுமே நாம் ஞானமாக நடந்துகொள்ள முடியும். சொல்லப்போனால், நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலுமே அவருடைய அறிவுரை நமக்குத் தேவை.
கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றாததால் வரும் ஆபத்துகள்
8. கடவுள் சாப்பிடக்கூடாதென்று சொன்ன பழத்தைச் ஏவாள் சாப்பிட்டது எதைக் காட்டியது?
8 என்றாலும், யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்ற நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்ற நமக்கு விருப்பமில்லை என்றால் அவர் நம்மைக் கட்டாயப்படுத்த மாட்டார். யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்றுவதில்லை என்று தீர்மானித்த முதல் நபர் ஏவாள். அப்படியொரு தவறான தீர்மானம் எடுப்பது எவ்வளவு ஆபத்தானதாக இருக்கலாம் என்பதை அவளுடைய உதாரணம் காட்டுகிறது. அவளுடைய செயல் உண்மையில் எதை அர்த்தப்படுத்தியது என்பதையும் யோசித்துப் பாருங்கள். ‘நன்மை தீமை அறிந்து தேவனைப்போல் இருக்க’ விரும்பியதால்தான், சாப்பிடக்கூடாதென்று கடவுள் சொல்லியிருந்த அந்தப் பழத்தை ஏவாள் சாப்பிட்டாள். (ஆதி. 3:5) அப்படிச் செய்தது, கடவுளுக்குரிய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள அவள் விரும்பியதைக் காட்டியது; அதாவது, கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக எது சரி, எது தவறு என்பதில் தன் இஷ்டப்படி தீர்மானங்கள் செய்ய விரும்பியதைக் காட்டியது. இவ்வாறு, யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை அவள் நிராகரித்தாள். யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட விரும்பினாள். அவளுடைய கணவனாகிய ஆதாமும் அதே கலகத்தனமான வழியில் சென்றான்.—ரோ. 5:12.
9. நாம் யெகோவாவின் அறிவுரையை அசட்டை செய்வது உண்மையில் எதைக் காட்டுகிறது, அது ஏன் மிகவும் ஞானமற்ற செயல்?
9 இன்றும்கூட நாம் கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றவில்லை என்றால், ஏவாளைப் போல அவரது உன்னத அரசதிகாரத்தை ஏற்றுக்கொள்ளத் தவறுகிறோம் என்பதையே உண்மையில் நாம் காட்டுகிறோம். உதாரணத்திற்கு, எப்போதும் ஆபாசத்தை பார்க்கும் பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அவர் கிறிஸ்தவ சபையின் ஓர் அங்கத்தினராக இருந்தால், இதன் சம்பந்தமாக யெகோவா தந்திருக்கும் அறிவுரைகளை அறிந்திருப்பார். அசுத்தமான காரியங்களைப்பற்றி பேசுவதே தவறானதாய் இருக்க, அதைக் காமவெறியோடு ரசித்துப் பார்ப்பது எவ்வளவு பெரிய குற்றமாயிருக்கும். (எபே. 5:3) இவ்விஷயத்தில், யெகோவாவின் அறிவுரைகளை அசட்டை செய்யும் அந்நபர், யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை அவமதிக்கிறார், அவருடைய தலைமைத்துவத்தை நிராகரிக்கிறார். (1 கொ. 11:3) இது மிகவும் ஞானமற்ற செயல்; ஏனென்றால், ‘தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்று எரேமியா குறிப்பிட்டார்.—எரே. 10:23.
10. சுயமாகத் தெரிவு செய்யும் திறனை நாம் ஏன் பொறுப்பான விதத்தில் பயன்படுத்த வேண்டும்?
10 எரேமியாவின் வார்த்தைகளைச் சிலர் ஒத்துக்கொள்ள மறுக்கலாம்; சுயமாய்த் தெரிவு செய்யும் திறனை யெகோவா நமக்குக் கொடுத்திருப்பதால், அதைப் பயன்படுத்துவதற்காக அவர் நம்மைக் குறை சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், சுயமாய்த் தெரிவு செய்யும் திறன் என்பது கடவுள் நமக்குத் தந்திருக்கும் பரிசு மட்டுமல்ல, ஒரு பொறுப்பாகவும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் எதைப் பேச விரும்பினாலும் சரி, எதைச் செய்ய விரும்பினாலும் சரி, அதற்காக கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். (ரோ. 14:10) “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று இயேசு சொன்னார். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும், புறப்பட்டுவரும்” என்றும் அவர் சொன்னார். (மத். 12:34; 15:19) எனவே, நம் சொல்லும் செயலும் நம் இருதயத்தில் இருப்பதைப் படம்பிடித்துக் காட்டிவிடுகின்றன. நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை அவை காட்டுகின்றன. அதனால்தான், ஞானமுள்ள கிறிஸ்தவர் எல்லாவற்றிலும் யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றுகிறார். இவ்வாறு, அவர் ‘இருதயத்தில் செம்மையானவராக’ இருக்கிறார் என்பதை யெகோவா அறிந்துகொண்டு, அவருக்கு ‘நன்மை செய்வார்.’—சங். 125:4.
11. இஸ்ரவேலரின் சரித்திரத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
11 இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நல்ல தீர்மானங்கள் எடுத்தபோது அவர் அவர்களைப் பாதுகாத்தார். (யோசு. 24:15, 21, 31) என்றாலும், அவர்கள் அடிக்கடி தவறான தெரிவுகளையே செய்தார்கள். எரேமியாவின் நாட்களில், யெகோவா அவர்களைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.” (எரே. 7:24-26) எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்! நாம் ஒருபோதும் பிடிவாதத்தின் காரணமாகவோ, சுகபோகமான காரியங்களில் மூழ்கிவிடுவதன் காரணமாகவோ யெகோவாவின் அறிவுரையை அசட்டை செய்துவிடாதிருப்போமாக! சொந்த யோசனைகளின்படி நடத்து, ‘முன்னிட்டல்ல பின்னிட்டுச் செல்கிறவர்களாக’ ஆகிவிடாதிருப்போமாக!
கடவுளின் ஆலோசனைபடி நடப்பதற்கு தேவைப்படுபவை
12, 13. (அ) யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்ற எது நம்மைத் தூண்டுகிறது? (ஆ) நமக்கு ஏன் விசுவாசம் அத்தியாவசியமாக இருக்கிறது?
12 யெகோவா மீதுள்ள அன்பு அவருடைய அறிவுரையைப் பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது. (1 யோ. 5:3) என்றாலும், நமக்குத் தேவைப்படுகிற மற்றொரு பண்பை பவுல் சுட்டிக் காட்டினார். “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” என்று அவர் சொன்னார். (2 கொ. 5:6, 7) விசுவாசம் ஏன் முக்கியம்? யெகோவா நம்மை “நீதியின் பாதைகளில்” நடத்துகிறார். ஆனால், இந்த உலகில் செல்வச் செழிப்புடனும் செல்வாக்குடனும் வாழ்வதற்கு இப்பாதை நம்மை வழிநடத்தாது. (சங். 23:3) ஆகவே, யெகோவாவைச் சேவிப்பதால் வரும் ஒப்பில்லா ஆன்மீக ஆசீர்வாதங்களில் நம் விசுவாசக் கண்களை ஒருமுகப்படுத்த வேண்டும். (2 கொரிந்தியர் 4:17, 18-ஐ வாசியுங்கள்.) அத்தியாவசியமான பொருட்களோடு திருப்தியுடன் வாழவும் விசுவாசம் நமக்கு உதவுகிறது.—1 தீ. 6:8.
13 உண்மை வழிபாட்டின் ஓர் அம்சமாக இருப்பது சுயதியாக மனப்பான்மை; இதைக் காட்டுவதற்கும் விசுவாசம் அவசியம். (லூக். 9:23, 24) கடவுளை வழிபட்ட விசுவாசமுள்ள நபர்களில் சிலர் பெரும் தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்; வறுமை, ஒடுக்குதல், இனப்பகை, கடும் துன்புறுத்துதல் ஆகியவற்றைச் சகித்திருக்கிறார்கள். (2 கொ. 11:23-27; வெளி. 3:8-10) அவற்றைச் சந்தோஷமாகச் சகிக்க பலமான விசுவாசமே அவர்களுக்கு உதவியது. (யாக். 1:2, 3) யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்றுவதே எப்போதும் நமக்குச் சிறந்தது என்பதில் முழு நம்பிக்கை வைப்பதற்குப் பலமான விசுவாசம் உதவுகிறது. அது நமக்கு எப்போதும் நீடித்த பலனைக் கொடுக்கிறது. உண்மையோடு சகித்திருப்பவர்களுக்கு யெகோவா தரும் வெகுமதி இந்த உலகில் தற்காலிகமாக நாம் படுகிற எந்தக் கஷ்டத்தைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கும் என்பதில் நமக்குத் துளியும் சந்தேகமில்லை.—எபி. 11:6.
14. ஆகார் ஏன் மனத்தாழ்மையைக் காட்ட வேண்டியிருந்தது?
14 யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்ற நமக்கு மனத்தாழ்மையும் தேவை. சாராளின் பணிப்பெண்ணாகிய ஆகாரின் உதாரணம் இதை நமக்குக் காட்டுகிறது. தனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை உணர்ந்த சாராள், ஆகாரை ஆபிரகாமுக்கு மனைவியாகக் கொடுத்தார். அவள் கர்ப்பமானபோது, தன் எஜமானியிடம் கர்வத்துடன் நடந்துகொண்டாள். இதனால், ஆகாரை சாராள் ‘கடினமாய் நடத்த’ அவள் அங்கிருந்து ஓடிப்போனாள். யெகோவாவின் தூதன் ஆகாரைச் சந்தித்து, “நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு” என்று சொன்னார். (ஆதி. 16:2, 6, 8, 9) ஒருவேளை, வேறு ஏதாவது அறிவுரையைப் பின்பற்ற ஆகார் விரும்பியிருக்கலாம். ஆனால், தேவதூதனின் அறிவுரைப்படி நடப்பதற்கு, தன்னுடைய அகந்தையான மனப்பான்மையை அவள் ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. என்றாலும், ஆகார் தாழ்மையோடு தூதன் சொன்னபடியே செய்தாள்; அதன் காரணமாக, அவளுடைய மகன் இஸ்மவேல் பாதுகாப்பான இடத்தில், தன் தகப்பனின் கூடாரத்தில் பிறந்தான்.
15. இன்று யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்ற நமக்கு மனத்தாழ்மை தேவைப்படுகிற சில சூழ்நிலைகளை விவரியுங்கள்.
15 யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்றுவதற்கு நாமும்கூட நம்மைத் தாழ்த்த வேண்டியிருக்கலாம். தங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு கடவுளுக்குப் பிடிக்காது என்பதைச் சிலர் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒருவேளை ஒரு கிறிஸ்தவர் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவரிடம் மன்னிப்புகேட்க வேண்டியிருக்கலாம். அல்லது அவர் ஏதாவது தவறு செய்திருக்கலாம், இப்போது அதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒருவேளை யாராவது மோசமான பாவத்தில் ஈடுபட்டிருந்தால் அப்போது என்ன செய்வது? அவர் தன்னையே தாழ்த்தி மூப்பர்களிடம் தன் பாவத்தை அறிக்கையிட வேண்டும். அவர் சபைநீக்கமும் செய்யப்படலாம். மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு அவர் தாழ்மையுடன் மனந்திரும்பி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சமயங்களிலும் இதுபோன்ற மற்ற சமயங்களிலும் நீதிமொழிகள் 29:23-ல் உள்ள பின்வரும் வார்த்தைகள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன: “மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.”
யெகோவா நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்?
16, 17. கடவுள் தரும் அறிவுரைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் பைபிளிலிருந்து நாம் எப்படி முழுமையாகப் பயனடையலாம்?
16 கடவுள் தரும் அறிவுரைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது அவருடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளே. (2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் முழுமையாகப் பயனடைவதற்கு அதிலுள்ள பயனுள்ள அறிவுரைகளை முன்கூட்டியே அறிந்துகொள்வது நல்லது; ‘கஷ்டமான சூழ்நிலை வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என்றிருப்பது ஞானமற்ற செயல். எனவே, நாம் பைபிள் வாசிப்பை அன்றாட பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். (சங். 1:1-3) இப்படிச் செய்தால், கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தைகள் நமக்கு அத்துப்படியாக இருக்கும். கடவுளுடைய எண்ணங்கள் நம் எண்ணங்களில் ஒன்றரக் கலக்கும்போது, எதிர்பாராமல் வரும் பிரச்சினைகளையும் சமாளிக்க நாம் தயாராக இருப்போம்.
17 அதோடு, பைபிளில் நாம் வாசித்தவற்றைத் தியானித்து, அது சம்பந்தமாக ஜெபிப்பதும் முக்கியம். பைபிள் வசனங்களை நாம் அசைபோடும்போது, குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் அது நமக்கு எப்படிப் பொருந்தலாம் என்று சிந்தித்துப் பார்க்கிறோம். (1 தீ. 4:15) பயங்கரமான பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, நமக்குத் தேவையான அறிவுரையைக் கண்டுபிடிக்க உதவும்படி நாம் யெகோவாவிடம் ஜெபிக்கிறோம். அப்போது, பைபிளிலோ பைபிள் பிரசுரங்களிலோ நாம் வாசித்த பயனுள்ள நியமங்களை நினைவுக்குக் கொண்டுவர யெகோவாவுடைய ஆவி நமக்கு உதவும்.—சங்கீதம் 25:4, 5-ஐ வாசியுங்கள்.
18. நம்மை வழிநடத்துவதற்கு கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை யெகோவா என்னென்ன வழிகளில் பயன்படுத்துகிறார்?
18 யெகோவாவின் அறிவுரைகளைப் பின்பற்றுவதற்கு நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்தும் சிறந்த உதவி கிடைக்கிறது. இவர்களில், முக்கியமாக ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரிடமிருந்தும்’ அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஆளும் குழுவிடமிருந்தும் உதவி கிடைக்கிறது. புத்தகங்களின் வாயிலாகவும், கூட்டங்கள் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் அவர்கள் நமக்கு ஆன்மீக உணவைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். (மத். 24:45-47; அப். 15:6, 22-31) அதுமட்டுமல்ல, நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மத்தியில் முதிர்ச்சிவாய்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக மூப்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தனிப்பட்ட உதவியையும் பைபிள் ஆலோசனையையும் வழங்குவதற்கு தகுதிபெற்றவர்கள். (ஏசா. 32:1) கிறிஸ்தவ குடும்பங்களில் வளருகிற இளம் பிள்ளைகள் மற்றொரு விதத்திலும் சிறந்த உதவியைப் பெற முடியும். சத்தியத்திலிருக்கும் அவர்களுடைய பெற்றோருக்கு, கடவுளுடைய அறிவுரைகளை பிள்ளைகளுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே, இளைஞர்கள் எப்போதும் அவர்கள் தரும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.—எபே. 6:1-3.
19. யெகோவாவின் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுவதால் என்னென்ன ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கிறோம்?
19 ஆம், யெகோவா நமக்கு பல்வேறு விதங்களில் அறிவுரை அளிக்கிறார்; அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இஸ்ரவேல் தேசம் கடவுளுக்கு உண்மையாக இருந்த சமயத்தைப்பற்றி அரசராகிய தாவீது இவ்வாறு சொன்னார்: “எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்.” (சங். 22:3-5) யெகோவாவின் அறிவுரையை நம்பிக்கையோடு பின்பற்றினால் நாமும்கூட ‘வெட்கப்பட்டுப் போகாதிருப்போம்.’ நம் நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும். நம் ஞானத்தில் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, ‘நம் வழியை யெகோவாவிடம் ஒப்புவித்தோமானால்’ இப்போதேகூட நாம் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுவோம். (சங். 37:5) இந்தப் பாதையில் உண்மையோடு நிலைத்திருந்தோமானால் அந்த ஆசீர்வாதங்களை என்றென்றும் அனுபவிப்போம். அரசராகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள். . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங். 37:28, 29.
விளக்க முடியுமா?
• யெகோவாவின் அறிவுரையில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கிறோம்?
• யெகோவாவின் அறிவுரையை அசட்டை செய்வது எதைக் காட்டுகிறது?
• எந்தெந்த சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவருக்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது?
• இன்று யெகோவா நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்?
[பக்கம் 8-ன் படங்கள்]
வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவின் அறிவுரைகளை பின்பற்றுகிறீர்களா?
[பக்கம் 9-ன் படம்]
யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஏவாள் நிராகரித்தாள்
[பக்கம் 10-ன் படம்]
தேவதூதனின் அறிவுரையைப் பின்பற்ற ஆகாருக்கு எந்தப் பண்பு தேவைப்பட்டது?