வாசகரின் கேள்வி
இயற்கை பேரழிவுகள் கடவுளின் தண்டனையா?
இயற்கை பேரழிவுகளால் அப்பாவி ஜனங்களை கடவுள் ஒருபோதும் தண்டிப்பதில்லை. இதுவரை அவர் அப்படிச் செய்ததும் இல்லை, இனி அப்படிச் செய்யப்போவதும் இல்லை. ஏன்? ஏனென்றால், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று 1 யோவான் 4:8-ல் பைபிள் சொல்கிறது.
கடவுளுடைய ஒவ்வொரு செயலிலும் அன்பு தெரிகிறது. அன்பு அப்பாவி ஜனங்களுக்கு கஷ்டம் கொடுக்காது. ஏனென்றால், “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 13:10) தேவன் நிச்சயம் ‘அநியாயஞ் செய்யமாட்டார்’ என்று யோபு 34:12-ல் அது சொல்கிறது.
அதேசமயம், நம்முடைய நாட்களில் ‘பூமியதிர்ச்சிகள்’ போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்று பைபிள் முன்பே தெரிவித்திருக்கிறது. (லூக்கா 21:11) புயல் வரப்போகிறது என்று வானிலை ஆய்வாளர் முன்னறிவிக்கிறார் என்பதற்காக புயலுக்கு அவர்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? அதேபோல் பேரழிவுகள் வரப்போகிறது என்று யெகோவா முன்னறிவித்திருக்கிறார் என்பதற்காக அவற்றுக்கு அவர்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? இயற்கை பேரழிவுகளால் மக்கள் படும் கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லையென்றால், அவற்றுக்கு யார்தான் காரணம்?
‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ அதாவது, பிசாசான சாத்தானின் பிடியில் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே இவன் கடவுளுக்கு விரோதமாக நடந்துகொண்டான். அன்று முதல் இன்று வரை அவன் ஒரு கொலைகாரனாக இருந்து வந்திருக்கிறான். (யோவான் 8:44) மனிதருடைய உயிரை அவன் துச்சமாகக் கருதுகிறான். அவன் ஒரு சுயநலவாதியாக இருக்கிறான். அதனால்தான் அவன் கைக்குள் இருக்கும் இந்த உலகமும் சுயநலத்தில் ஊறிப்போயிருக்கிறது. ஆபத்தான இடங்களில் அதாவது, இயற்கை பேரழிவுகளாலோ மனிதன் கொண்டுவரும் பேரழிவுகளாலோ பாதிக்கப்படும் இடங்களில் வாழும் எத்தனையோ அப்பாவி ஜனங்களை சுயநலம்பிடித்த மனிதர்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள். (எபேசியர் 2:2; 1 யோவான் 2:16) எனவே, திக்கற்ற மக்கள் இதுபோன்ற சில பேரழிவுகளால் பாதிக்கப்படுவதற்கு பேராசை பிடித்த மனிதர்களே காரணம். (பிரசங்கி 8:9) எப்படிச் சொல்கிறோம்?
எண்ணற்ற பேரழிவுகளுக்கு மனிதனே ஓரளவிற்கு காரணமாக இருக்கிறான். உதாரணத்திற்கு, அமெரிக்காவிலுள்ள நியூ ஆர்லியன்ஸில், சூறாவளியுடன் சேர்ந்து வந்த வெள்ளப்பெருக்கையும் வெனிசுவேலாவில் கடற்கரையோரத்திலுள்ள மலைகளில் ஏற்பட்ட மண்சரிவையும் சற்று எண்ணிப் பாருங்கள். இந்த இரண்டு பேரழிவுகளிலும் வீடுகளை இழந்து மக்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி மாளாது. இதுபோன்ற அழிவுகளில் காற்று, மழை போன்ற இயற்கை சக்திகள் சீற்றம் கொண்டு மனிதர்களைத் தத்தளிக்க வைத்துவிட்டன. இதற்கு முக்கிய காரணம் மனிதர்களே. எப்படியென்றால், சுற்றுச்சூழல் பற்றி அவர்களுக்கிருக்கும் அரைகுறை அறிவு, தரமற்ற கட்டிடங்கள், முன்யோசனையின்றி போடும் திட்டங்கள், எச்சரிப்புகளுக்கு அசட்டை செய்யும் மெத்தன போக்கு, அதிகார வர்க்கத்தின் அலட்சிய குணம் ஆகியவையே.
பைபிள் காலத்தில் நடந்த ஒரு பேராபத்தைக் கவனியுங்கள். இயேசு வாழ்ந்த சமயத்தில் ஒரு கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியானார்கள். (லூக்கா 13:4) இதற்கு மனிதன் காரணமாக இருக்கலாம் அல்லது, “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” காரணமாக இருக்கலாம் அல்லது, இரண்டுமே காரணமாக இருக்கலாம். ஆனால், இது நிச்சயம் கடவுள் கொடுத்த தண்டனை அல்ல. பிரசங்கி 9:11, NW
இதுவரை கடவுள் எதாவது அழிவை கொண்டுவந்திருக்கிறாரா? ஆம், கொண்டுவந்திருக்கிறார். ஆனால், அது இயற்கை பேரழிவுகளைப் போலவோ மனிதர்களால் ஏற்படும் விபத்துக்களைப் போலவோ இருந்ததில்லை. மாறாக, யாரை அழிக்கவேண்டும் என்று யெகோவா தேவன் தேர்ந்தெடுத்து அழித்தார். அதோடு, அவர் கொண்டு வந்த அழிவுகளுக்கு ஒரு நல்ல காரணமும் இருந்தது, அதுமட்டுமில்லாமல், அவை அரிதாகவே நிகழ்ந்தன. இதற்கு இரண்டு உதாரணங்கள், நம்முடைய மூதாதையரான நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளம் மற்றும் லோத்துவின் காலத்தில் சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு வந்த அழிவு. (ஆதியாகமம் 6:7–9, 13; 18:20–32; 19:24) கடவுள் கொண்டுவந்த இந்த அழிவில் திருந்தாத கெட்ட ஜனங்களை அழித்துவிட்டு தமக்குக் கீழ்ப்படிந்த மக்களை மட்டும் காப்பாற்றினார்.
இயற்கை பேரழிவுகளால் ஏற்படுகிற துன்பங்களிலிருந்து விடுவிக்கவும் மனிதர் படும் எல்லாக் கஷ்டங்களையும் நீக்கவும் யெகோவா தேவனால் முடியும், அதை செய்ய அவருக்கு விருப்பமும் இருக்கிறது, வல்லமையும் இருக்கிறது. கடவுளால் நியமிக்கப்பட்ட அரசரான இயேசு கிறிஸ்துவைப்பற்றி சங்கீதம் 72:12 இவ்வாறு கூறியது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.” (w08 5/1)