யெகோவா தமக்கு உண்மையுள்ளவர்களைக் கைவிட மாட்டார்
“[யெகோவா] தமக்கு உண்மையுள்ளவர்களைக் கைவிட மாட்டார்; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவது நிச்சயம்.”—சங். 37:28, NW.
1, 2. (அ) பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் நடந்த என்ன சம்பவங்கள் கடவுளுடைய மக்களின் உண்மைத்தன்மையைச் சோதித்தன? (ஆ) தமக்கு உண்மையுள்ளவர்களை யெகோவா பாதுகாத்த மூன்று சூழ்நிலைகள் யாவை?
யெகோவாவின் மக்கள் பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். இஸ்ரவேலின் வடக்குக் கோத்திரத்தார் கோபத்தில் கொதித்தெழுகிற சமயம் அது; அவர்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் உள்நாட்டுப் போர் மூளுவது தடுக்கப்படுகிறது. புதிதாகப் பதவியேற்ற யெரொபெயாம் ராஜா, ஒரு புதிய மதத்தைத் தோற்றுவித்துத் தன் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக உடனே களமிறங்குகிறார். தன் குடிமக்கள் அனைவரும் தனக்கு முழு ஆதரவு தர வேண்டுமென எதிர்பார்க்கிறார். இச்சூழ்நிலையில், யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்கள் என்ன செய்வார்கள்? தாங்கள் வணங்குகிற கடவுளுக்குத் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாய் இருப்பார்களா? ஆயிரக்கணக்கானோர் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து உத்தமமாய் நடந்துகொள்கையில் யெகோவா அவர்களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக்கொள்கிறார்.—1 இரா. 12:1–33; 2 நா. 11:13, 14.
2 நம் நாளிலும் கடவுளுடைய ஊழியர்களின் உண்மைத்தன்மைக்குச் சோதனை வருகிறது. “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என பைபிள் எச்சரிக்கிறது. நாம், ‘விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நிற்பதில்’ வெற்றிபெற முடியுமா? (1 பே. 5:8, 9) பொ.ச.மு. 997-ல் யெரொபெயாம் ராஜா புதிய மதத்தை ஆரம்பித்து வைத்தபோது நடந்த சில சம்பவங்களை இப்போது நாம் ஆராயலாம், அவற்றிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் காணலாம். இக்கட்டான அந்தச் சமயத்தில், யெகோவாவுக்கு உண்மையுடன் இருந்தவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். விசுவாசதுரோகிகளின் செல்வாக்குகளுக்கு ஆளானார்கள். அதே சமயம், சவால்மிக்க வேலைகளையும் செய்துவந்தார்கள். இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் தமக்கு உண்மையாய் இருந்தவர்களை யெகோவா கைவிடவில்லை, அவ்வாறே இன்றும் அவர் கைவிட மாட்டார்.—சங். 37:28, NW.
ஒடுக்கப்பட்ட சமயத்தில்
3. தாவீதின் ஆட்சியில் மக்கள் ஏன் ஒடுக்கப்படவில்லை?
3 யெரொபெயாம் ராஜாவாகப் பதவியேற்றபோது எப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருந்தன என்பதை நாம் முதலில் ஆராயலாம். ‘துன்மார்க்கர் ஆளும்போது ஜனங்கள் தவிப்பார்கள்’ என்று நீதிமொழிகள் 29:2 கூறுகிறது. பூர்வ இஸ்ரவேலை தாவீது ராஜா அரசாண்டபோது மக்கள் தவிக்கவில்லை. தாவீது ஒன்றும் பூரணர் அல்ல, ஆனாலும் அவர் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார், கடவுளையே நம்பினார். தாவீதின் ஆட்சியில் மக்கள் ஒடுக்கப்படவில்லை. “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” என்று சொல்லி யெகோவா தாவீதோடு ஓர் உடன்படிக்கை செய்தார்.—2 சா. 7:16.
4. சாலொமோனுடைய ஆட்சியில் மக்கள் அனுபவித்த ஆசீர்வாதங்கள் எந்த நிபந்தனைக்கு உட்பட்டிருந்தன?
4 தாவீதின் மகன் சாலொமோனுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் அமைதி நிலவியது, நாடும் செழித்தது; எதிர்காலத்தில் கிறிஸ்து இயேசுவின் ஆயிர வருட ஆட்சி எப்படியிருக்கும் என்பதை அது நன்றாகவே படம்பிடித்துக் காட்டியது. (சங். 72:1, 17) அன்று இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் எந்தவொரு கோத்திரமும் அவருடைய ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. என்றாலும், சாலொமோனும் அவருடைய குடிமக்களும் அனுபவித்த ஆசீர்வாதங்கள் நிபந்தனைக்கு உட்பட்டவையாய் இருந்தன. “நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், . . . நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி, இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன்” என்று யெகோவா சாலொமோனிடம் சொல்லியிருந்தார்.—1 இரா. 6:11–13.
5, 6. சாலொமோன் ராஜா கடவுளுக்கு உண்மையற்றவராய் ஆனபோது என்ன நடந்தது?
5 வயதான காலத்தில், சாலொமோன் யெகோவாவுக்கு உண்மையற்றவராய் ஆகிவிட்டார்; பொய் மத வழிபாட்டில் ஈடுபட ஆரம்பித்தார். (1 இரா. 11:4–6) படிப்படியாக, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமலேயே போய்விடுகிறார்; மக்களை மேன்மேலும் அடக்கி ஒடுக்கினார். அவர் அந்தளவுக்கு ஒடுக்கியதால், அவர் இறந்தபிறகு ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் ரெகொபெயாமிடம் மக்கள் அவரைப் பற்றி புகார் செய்தார்கள், கெடுபிடிகளைத் தளர்த்துமாறு கோரினார்கள். (1 இரா. 12:4) சாலொமோன் உண்மையற்றவராய் ஆனபோது யெகோவா என்ன செய்தார்?
6 பைபிள் அதைப்பற்றி இவ்வாறு சொல்கிறது: ‘இரண்டுவிசை தரிசனமான இஸ்ரவேலின் தேவனை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பியதால் . . . கர்த்தர் அவன்மேல் கோபமானார். ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போனபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.’—1 இரா. 11:9–11.
7. சாலொமோனைத் தள்ளிவிட்டபோதிலும், தமக்கு உண்மையுள்ளவர்களை யெகோவா எப்படிக் காப்பாற்றினார்?
7 பின்னர், மக்களை விடுவிக்கும் ஓர் இரட்சகனை அபிஷேகம் செய்வதற்கு அகியா தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். சாலொமோனின் அரசவையில் பணிபுரிந்த யெரொபெயாமே தகுதிவாய்ந்த அந்த இரட்சகன். தாவீதோடு தாம் செய்திருந்த ராஜ்ய உடன்படிக்கைக்கு யெகோவா உண்மையுள்ளவராக இருந்தபோதிலும், இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதற்கு அனுமதித்தார். அதன்படி, பத்துக் கோத்திர ராஜ்யம் யெரொபெயாமுக்கும், இரண்டு கோத்திர ராஜ்யம் தாவீதின் வம்சத்தாருக்கும் கொடுக்கப்பட்டது; அந்த இரண்டு கோத்திர ராஜ்யத்திற்கு ரெகொபெயாம் ராஜாவாக இருப்பார். (1 இரா. 11:29-37; 12:16, 17, 21) யெகோவா யெரொபெயாமிடம், “நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்” என்று சொன்னார். (1 இரா. 11:38) இவ்வாறு, ஒடுக்கப்பட்ட தம் மக்களின் விஷயத்தில் தலையிட்டு யெகோவா அவர்களுக்கு விடுதலை அளித்தார்.
8. இன்று கடவுளுடைய மக்கள் எவ்வாறெல்லாம் கொடுமைக்கு ஆளாகிறார்கள்?
8 இன்றும்கூட கொடுமையும் அநீதியும் மலிந்துகிடக்கின்றன. ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்று பிரசங்கி 8:9 சொல்கிறது. பேராசைமிக்க வியாபார உலகத்தாலும், ஊழல்மிக்க அரசியலாலும் மக்கள் பொருளாதாரக் கஷ்டத்தில் தத்தளிக்கிறார்கள். அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், மதத் தலைவர்களும் பெரும்பாலும் மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதில்லை. எனவே, கடவுளுக்கு உண்மையுள்ளவர்கள் இன்று ‘‘அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் [மிகவும்] வருத்தப்படுகிறார்கள்.’’ (2 பே. 2:7) மேலும், எந்த வம்புக்கும் போகாமல், கடவுளுடைய நெறிமுறைப்படி வாழ அவர்கள் கடினமாக முயற்சி செய்கையில், ஆணவமிக்க ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்.—2 தீ. 3:1-5, 12.
9. (அ) தம் மக்களை விடுவிப்பதற்கு யெகோவா ஏற்கெனவே என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்? (ஆ) இயேசு எப்போதும் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருப்பார் என்பதில் நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
9 இருந்தாலும், யெகோவா தமக்கு உண்மையுள்ளவர்களைக் கைவிடவே மாட்டார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்! இவ்வுலகின் ஊழல்மிக்க ஆட்சியாளர்களை நீக்குவதற்காக அவர் ஏற்கெனவே எடுத்திருக்கும் நடவடிக்கைகளைச் சற்று நினைத்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசு ராஜாவாக இருக்கும் கடவுளின் ராஜ்யம் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட நூறு வருடங்களாக இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். கடவுளுடைய பெயர்மீது பயபக்தியாய் இருப்பவர்கள் நிரந்தர விடுதலை பெற அவர் வழிசெய்வார். (வெளிப்படுத்துதல் 11:15-18-ஐ வாசியுங்கள்.) இயேசு, சாகும்வரை கடவுளுக்கு உத்தமமாய் இருந்து தாம் உண்மையுள்ளவர் என்பதை ஏற்கெனவே நிரூபித்துவிட்டார். சாலொமோன் ராஜா தன் குடிமக்களுக்கு ஏமாற்றம் அளித்ததைப்போல் இயேசு ஒருபோதும் செய்ய மாட்டார்.—எபி. 7:26; 1 பே. 2:6.
10. (அ) கடவுளுடைய ராஜ்யத்தை உயர்வாய்க் கருதுகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்? (ஆ) சோதனைகளைச் சந்திக்கும்போது எதைக் குறித்து நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்?
10 கடவுளுடைய ராஜ்யம் என்பது ஓர் உண்மையான அரசாங்கம்; அது எல்லாக் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். நாம் யெகோவா தேவனுக்கும் அவருடைய ராஜ்யத்துக்கும் ஆதரவு காட்டுகிறோம். அந்த ராஜ்யத்தின் மீது நாம் முழு நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த உலகின் தேவபக்தியற்ற காரியங்களை வெறுத்து, பக்திவைராக்கியத்தோடு நற்காரியங்களில் ஈடுபடுகிறோம். (தீத். 2:12-14) இவ்வுலகின் கறை நம்மீது படியாதபடி மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறோம். (2 பே. 3:14) தற்சமயம் எப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்தாலும், நமக்கு எவ்வித ஆன்மீகத் தீங்கும் நேரிடாதபடி யெகோவா நம்மைப் பாதுகாப்பார் என நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்.) மேலும், ‘கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது’ எனவும் சங்கீதம் 116:15 நமக்கு உறுதியளிக்கிறது. ஆம், யெகோவாவின் ஊழியர்கள் அந்தளவு அருமையானவர்களாக இருப்பதால் ஒரு தொகுதியாக அவர்கள் அழிந்துபோக அவர் அனுமதிக்க மாட்டார்.
விசுவாசதுரோகிகளின் செல்வாக்குகளால் பாதிக்கப்படுகையில்
11. யெரொபெயாம் எவ்வாறு உண்மையற்றவராய் மாறினார்?
11 யெரொபெயாம் ராஜாவின் ஆட்சியில் கடவுளுடைய மக்களுக்கு ஓரளவு விடுதலை கிடைத்தது என்னவோ உண்மைதான். ஆனாலும், அவருடைய செயல்கள், கடவுள்மீது மக்கள் காட்டிய உண்மைத்தன்மையை மீண்டும் சோதித்தன. ஏற்கெனவே ஓர் அரசராகக் கௌரவிக்கப்பட்டபோதிலும் அதில் திருப்தியடையாத யெரொபெயாம், தன் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தவே வழி தேடினார். “இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள்” என்று நினைத்தார். ஆகவே, யெரொபெயாம் ஒரு புதிய மதத்தை ஆரம்பித்து வைத்தார்; மக்கள் வழிபடுவதற்காக இரண்டு பொன் கன்றுக்குட்டிகளையும் செய்து வைத்தார். அவற்றில் ‘ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தார். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். அவர் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினார்.’ பிறகு தன் இஷ்டப்படி, அதை ‘இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகை’ நாளாக்கி, ‘பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினார்.’—1 இரா. 12:26–33.
12. இஸ்ரவேலில் கன்றுக்குட்டி வழிபாட்டை யெரொபெயாம் ஆரம்பித்துவைத்தபோது, வடக்கு ராஜ்யத்தில் கடவுளுக்கு உண்மையாய் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?
12 இப்போது, வடக்கு ராஜ்யத்தில் கடவுளுக்கு உண்மையாய் இருக்கும் குடிமக்கள் என்ன செய்வார்கள்? உண்மையாய் இருந்த தங்கள் முன்னோர்களைப் போலவே, வடக்கு ராஜ்யத்தில் தங்களுக்குத் தரப்பட்ட பட்டணங்களில் வசித்துவந்த லேவியர்கள் தாமதமின்றி உடனே செயல்பட்டார்கள். (யாத். 32:26–28; எண். 35:6–8; உபா. 33:8, 9) தங்கள் வீடுவாசல்களை விட்டுவிட்டு, தெற்கே இருந்த யூதாவில் குடும்பத்தோடு குடியேறினார்கள்; அங்கே எந்தத் தொந்தரவும் இல்லாமல் யெகோவாவை வழிபட்டார்கள். (2 நா. 11:13, 14) மறுபட்சத்தில், யூதாவில் தற்காலிகமாக வசித்துவந்த இஸ்ரவேலர் தங்கள் தாயகத்துக்குத் திரும்பாமல், அங்கேயே இருந்துவிடத் தீர்மானித்தார்கள். (2 நா. 10:17) வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களின் வருங்கால சந்ததியாரும் கன்றுக்குட்டி வணக்கத்திலிருந்து உண்மை வணக்கத்திற்குத் திரும்பி வர யெகோவா வழிசெய்தார்; அவர்கள் யூதாவுக்குச் செல்லத் தடை ஏதும் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்.—2 நா. 15:9-15.
13. விசுவாசதுரோகிகளின் செல்வாக்குகளால் இன்று கடவுளுடைய மக்களுக்கு எவ்வாறு சோதனை வந்திருக்கிறது?
13 விசுவாசதுரோகிகளாலும் அவர்களுடைய செல்வாக்குகளாலும் இன்று கடவுளுடைய மக்களுக்குச் சோதனை வருகிறது. ஆட்சியாளர்கள் சிலர், தங்கள் நாட்டுக்கென ஒரு மதத்தை ஸ்தாபித்து, அதற்குத் தலைவணங்க தங்கள் குடிமக்களை வற்புறுத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவமண்டல குருமார்களும் அகம்பாவம் பிடித்த மற்றவர்களும், தாங்கள்தான் ஆன்மீக ஆலயத்தின் ஆசாரிய வகுப்பார் என உரிமைபாராட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்களின் மத்தியில்தான் நிஜமான ‘ராஜரீக ஆசாரியக்கூட்டத்தாராக’ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நாம் காண்கிறோம்.—1 பே. 2:9; வெளி. 14:1–5.
14. விசுவாசதுரோகக் கருத்துகளைக் கேட்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
14 பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மையுள்ள லேவியர்கள் விசுவாசதுரோகிகளின் வற்புறுத்தலுக்கு இணங்கிவிடவில்லை; அவ்வாறே, இன்று கடவுளுக்கு உண்மையாய் இருப்பவர்களும் விசுவாசதுரோகக் கருத்துகளால் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அவர்களுடைய தோழர்களும் விசுவாசதுரோகக் கருத்துகளுக்குச் சற்றும் இடமளிக்காமல் அவற்றை உடனே உதறித்தள்ளுகிறார்கள். (ரோமர் 16:17-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சட்டங்களுக்கு முரண்படாத காரியங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கு நாம் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிகிறோம், இவ்வுலக சண்டைசச்சரவுகளில் ஈடுபடாமல் நடுநிலை வகிக்கிறோம்; என்றாலும், நம் முழு ஆதரவையும் கடவுளுடைய ராஜ்யத்திற்கே கொடுக்கிறோம். (யோவா. 18:36; ரோ. 13:1–8) தேவனை வழிபடுவதாகச் சொல்லிக்கொண்டு, அவரை அவமதிக்கும் விதத்தில் நடப்பவர்களின் பொய்யான வார்த்தைகளை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம்.—தீத். 1:16.
15. ‘உண்மையும் விவேகமுமுள்ள’ அடிமை வகுப்பாருக்கு நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பது ஏன் நியாயமானது?
15 நல்மனமுள்ளவர்கள், இந்தப் பொல்லாத உலகத்தைவிட்டு அடையாள அர்த்தத்தில் வெளியேறி, தாம் உருவாக்கியிருக்கும் ஆன்மீகப் பரதீஸுக்குள் வருவதற்கு யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளையும் நினைத்துப் பாருங்கள். (2 கொ. 12:1–4) ‘ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனுக்கு [“அடிமைக்கு,” NW]’ நாம் நன்றி பொங்கும் இதயத்தோடு ஆதரவு காட்டுகிறோம். இந்த அடிமை வகுப்பாரையே கிறிஸ்து ‘தம் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும்’ விசாரணைக்காரனாக வைத்திருக்கிறார். (மத். 24:45–47) ஆகவே, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடிமை வகுப்பார் ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என நாம் சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவர்கள் சொல்வதை ஒதுக்கித்தள்ளி சாத்தானுடைய உலகத்திற்குத் திரும்பிச்செல்ல அவசியமில்லை. அதற்கு மாறாக, உண்மையுள்ளவர்களாய், காரியங்களை யெகோவா தெளிவுபடுத்தும்வரை தாழ்மையோடு காத்திருக்க வேண்டும்.
கடவுள் கொடுத்துள்ள வேலைகளைச் செய்கையில்
16. யூதாவைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசிக்கு யெகோவா என்ன வேலையைக் கொடுத்தார்?
16 விசுவாசதுரோகச் செயல்களில் ஈடுபட்டதற்காக யெரொபெயாமை யெகோவா கண்டித்தார். யூதாவைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசியை வடக்கே உள்ள பெத்தேலுக்கு யெகோவா அனுப்பினார். தான் கட்டிய பலிபீடத்தில் யெரொபெயாம் தூபங்காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் அந்தத் தீர்க்கதரிசி அவரைச் சந்தித்தார். அதிர்ச்சிதரும் நியாயத்தீர்ப்புச் செய்தியை யெரொபெயாமுக்கு அவர் அறிவிக்க வேண்டியிருந்தது. உண்மையில், அது ஒரு சவால்மிக்க வேலையாக இருந்தது.—1 இரா. 13:1–3.
17. யெகோவா தம் தீர்க்கதரிசியை எவ்வாறு பாதுகாத்தார்?
17 யெகோவாவின் கண்டனத்தீர்ப்பைக் கேட்டவுடன், யெரொபெயாமுக்குக் கோபம் தலைக்கேறியது. கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசியை நோக்கி, “அவனைப் பிடியுங்கள்” என்று கூச்சல்போட்டுத் தன் கையை நீட்டினார். ஆனால், அந்தத் தீர்க்கதரிசியை யாரும் பிடிப்பதற்கு முன்பே, ‘அவருக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. . . . பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.’ வேறு வழியின்றி தவித்த யெரொபெயாம், தனக்கு யெகோவா தயவு காட்டும்படியும், தனது கை முன்போல் ஆவதற்கு ஜெபம் செய்யும்படியும் அந்தத் தீர்க்கதரிசியிடம் கெஞ்ச வேண்டியதாயிற்று. அவரும் அவ்வாறே ஜெபம் செய்தார், கையும் குணமானது. இவ்வாறு, தம் தீர்க்கதரிசியை யெகோவா ஆபத்திலிருந்து பாதுகாத்தார்.—1 இரா. 13:4–6.
18. நாம் பயமின்றி யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்கையில் அவர் நம்மை எவ்வாறு காப்பாற்றுகிறார்?
18 பிரசங்கித்துச் சீஷராக்கும் வேலையில் நாம் உண்மையோடு ஈடுபடும்போது, சில சமயங்களில் கடுகடுப்பாகப் பேசுகிறவர்களையும், சண்டைக்கு வருகிறவர்களையும் நாம் சந்திக்கிறோம். (மத். 24:14; 28:19, 20) செய்தியைக் கேட்காத மக்களுக்குப் பயந்து, ஊழியத்தில் நம் ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. யெரொபெயாமின் காலத்தில் வாழ்ந்த அந்தத் தீர்க்கதரிசியைப் போலவே நாமும், ‘பயமில்லாமல் [யெகோவாவுக்கு] உண்மையோடு பரிசுத்த சேவை செய்யும் பாக்கியத்தை’ பெற்றிருக்கிறோம்.a (லூக். 1:74, 75, NW) இன்று யெகோவா அற்புதமாகத் தலையிட்டு நம்மைக் காப்பாற்றுவாரென நாம் எதிர்பார்ப்பதில்லைதான்; என்றாலும், அவரது சாட்சிகளான நம்மை அவருடைய சக்தியின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் காப்பாற்றுகிறார். (யோவான் 14:15–17-ஐயும் வெளிப்படுத்துதல் 14:6-ஐயும் வாசியுங்கள்.) ஆம், தம்முடைய வார்த்தையைப் பயமின்றித் தொடர்ந்து சொல்லிவருபவர்களைக் கடவுள் கைவிடவே மாட்டார்.—பிலி. 1:14, 28.
யெகோவா தமக்கு உண்மையுள்ளவர்களைக் காப்பாற்றுவார்
19, 20. (அ) யெகோவா நம்மைக் கைவிடவே மாட்டார் என நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
19 யெகோவா உண்மையுள்ள கடவுள். (வெளி. 15:4, NW; 16:5, NW) அவர், ‘தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவராயிருக்கிறார்,’ அதாவது, உண்மையுள்ளவராய் இருக்கிறார். (சங். 145:17) “தம்முடைய பரிசுத்தவான்களின் [“தமக்கு உண்மையுள்ளவர்களின்,” NW] பாதையைக் காப்பாற்றுகிறார்.” (நீதி. 2:8) கடவுளுக்கு உண்மையுள்ளவர்கள், சோதனைகளையோ, விசுவாசதுரோகக் கருத்துகளையோ, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் சவால்களையோ சந்திக்கும்போது, யெகோவா நம்மோடிருந்து நம்மை ஆதரிப்பார் என நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
20 இப்போது, நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி இதுவே: என்னதான் கஷ்டங்களும் சோதனைகளும் வந்தாலும், யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாய் இருக்க எது எனக்கு உதவும்? வேறு விதமாகச் சொன்னால், மற்ற சோதனைகள் வரும்போது கடவுளுக்கு நான் எப்படி உண்மையாய் நிலைத்திருக்க முடியும்?
[அடிக்குறிப்பு]
a அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிகிறாரா இல்லையா என்பதையும், அவருக்கு என்ன நேரிடுகிறது என்பதையும் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
எவ்வாறு பதில் அளிப்பீர்கள்?
• தமக்கு உண்மையுள்ளவர்கள் ஒடுக்கப்படுகையில் யெகோவா அவர்களைக் கைவிட மாட்டார் என்பதை எப்படி நிரூபித்திருக்கிறார்?
• விசுவாசதுரோகக் கருத்துகளைக் கேட்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
• தமக்கு உண்மையுள்ளவர்கள் ஊழியத்தில் ஈடுபடும்போது, யெகோவா எப்படிக் காப்பாற்றுகிறார்?
[பக்கம் 5-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வடக்கு ராஜ்யம் (யெரொபெயாம்)
தாண்
சீகேம்
பெத்தேல்
தெற்கு ராஜ்யம் (ரெகொபெயாம்)
எருசலேம்
[படம்]
கன்றுக்குட்டி வழிபாட்டை யெரொபெயாம் ஆரம்பித்துவைத்தபோது தமக்கு உண்மையுள்ளவர்களை யெகோவா கைவிடவில்லை
[பக்கம் 3-ன் படம்]
சாலொமோனும் அவருடைய குடிமக்களும் அனுபவித்த ஆசீர்வாதங்கள் நிபந்தனைக்கு உட்பட்டவையாய் இருந்தன