உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 6/15 பக். 25-28
  • மணமாகாதவர்கள் மகிழ்ச்சி காண

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மணமாகாதவர்கள் மகிழ்ச்சி காண
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அனுகூலங்களைப் பாருங்கள்
  • மணமாகாத பைபிள் கதாபாத்திரங்கள்
  • வாழ்வை வளமாக்க வழிகள்
  • அன்பின் தேவையைப் பூர்த்திசெய்தல்
  • கடவுள் மறக்க மாட்டார்
  • மணமாகாதவர்களே—காலத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • மணமுடிக்காமலேயே யெகோவாவின் சேவையில் திருப்தி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • மணமாகாதவர்களுக்கும் மணமானவர்களுக்கும் ஞானமான அறிவுரைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • மணமாகாதிருத்தல்—கவனம் சிதறாமல் செயல்படுவதற்கு வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 6/15 பக். 25-28

மணமாகாதவர்கள் மகிழ்ச்சி காண

“அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.” இப்படித்தான் சிறுவர் கதைகள் பல முடிவடைகின்றன. சினிமாக்களிலும் நாவல்களிலும் வரும் காதல் கதைகளில்கூட, கல்யாணம் செய்வதுதான் சந்தோஷத்திற்கு வழி என்பதுபோல் சித்தரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, பெரும்பாலான கலாச்சாரங்களில், வாலிப வயதை எட்டிவிட்டால் கல்யாணம் செய்யச் சொல்லி எல்லாரும் துளைத்தெடுப்பது மாமூல். “வயசுப் பெண் என்றாலே முதல் வேலையாகக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று எல்லாரும் நினைக்க வைத்துவிடுகிறார்கள். அவர்களுடைய அபிப்பிராயப்படி, கல்யாணத்துக்குப் பிறகுதான் வாழ்க்கையே தொடங்குகிறது” என்று புலம்புகிறார் கிட்டத்தட்ட 25 வயது நிரம்பிய டெபி.

ஆன்மீக சிந்தையுள்ள எவருக்கும் “இப்படித்தான்.. அப்படித்தான்..” என்ற பலமான கருத்துக்கள் இருக்காது. இஸ்ரவேலருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணம் செய்துகொள்வது அவர்களுக்கும் வழக்கமாக இருந்தது; அதேசமயத்தில், திருமணம் செய்யாமலேயே மிக நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆண்களும் பெண்களும் அவர்கள் மத்தியில் இருந்தார்கள். இன்று கிறிஸ்தவர்களில் சிலர் திருமணம் செய்யாதிருக்கத் தீர்மானிக்கிறார்கள், வேறு சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத் திருமணமாகாமல் இருக்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும்சரி, முக்கியமான கேள்வி இதுதான்: மணமாகாத கிறிஸ்தவர் எப்படி மனமகிழ்ச்சி காணலாம்?

இயேசுகூட கல்யாணம் செய்துகொள்ளவில்லை; அவருக்கு எவ்வளவு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டிருந்தது என்று நாம் யோசித்தால் அதற்கான காரணம் புரியும். தம்மைப் பின்பற்றுகிறவர்களில் சிலர்கூட மணமாகாமல் வாழும் வாழ்க்கையை ‘ஏற்றுக்கொள்வார்கள்’ (BSI) என அவர் தம் சீடர்களிடம் சொன்னார். (மத். 19:10-12) ஆகவே, மணமாகாதவர் மனமகிழ்ச்சி காண, அவ்வாழ்வை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.

இயேசுவின் இந்த அறிவுரை, கடவுளுடைய சேவையில் முழுமையாக ஈடுபடுவதற்காக மணமுடிக்காமல் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்துகிறதா? (1 கொ. 7:34, 35) அப்படிச் சொல்ல முடியாது. ஒரு கிறிஸ்தவர் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படலாம், ஆனால் அவருக்கு ஏற்ற ஜோடி இன்னும் கிடைக்காதிருக்கலாம். 30 வயதைத் தாண்டிவிட்ட ஆனா என்பவருக்கு இன்னும் திருமணமாகவில்லை; அவர் சொல்கிறார்: “கொஞ்ச நாளுக்கு முன்னால் என்னோடு வேலை பார்க்கிற ஒருவர் திடுதிப்பென்று என்னிடம் வந்து, என்னை விரும்புவதாகச் சொன்னார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உள்ளுக்குள் பூரித்துப்போனேன், ஆனால் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டேன்; ஏனென்றால், யெகோவாவிடம் இன்னுமதிகமாக நெருங்கிச் செல்ல எனக்கு உதவுகிறவர்தான் என் கணவராக வர வேண்டுமென ஆசைப்படுகிறேன்.”

ஆனாவைப் போல் நிறைய சகோதரிகள் இருக்கிறார்கள்; அவர்கள், “நம் எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்ய விரும்புவதால், விசுவாசியாக இல்லாத எவரையும் மணமுடிப்பதில்லை.a (1 கொ. 7:39; 2 கொ. 6:14) கடவுள் தந்திருக்கிற அறிவுரையை உயர்வாக மதித்து, கொஞ்ச காலத்திற்காவது மணமாகா வாழ்வை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் எப்படி மனமகிழ்ச்சி காணலாம்?

அனுகூலங்களைப் பாருங்கள்

பிடிக்காத ஒரு சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது நம்பிக்கையான கண்ணோட்டம்தான். “இருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன், இல்லாததை நினைத்து ஏங்குவதில்லை” என்று சொல்கிறார் 40 வயதைத் தாண்டிய மணமாகா சகோதரி கார்மென். சிலசமயங்களில் நாம் தனிமையில் வாடலாம் அல்லது விரக்தியடையலாம் என்பது உண்மைதான். ஆனால், உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளில் எத்தனையோ பேர் நமக்கிருக்கும் அதே பிரச்சினையோடுதான் போராடுகிறார்கள் என்பதை மனதில் வைத்தால், நாம் எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திக்கலாம். துணையில்லாமல் வாழும் சவாலையும் மற்ற சவால்களையும் வெற்றிகரமாகச் சமாளிக்க யெகோவா பலருக்கு உதவியிருக்கிறார்.—1 பே. 5:9, 10.

தனியாக இருப்பதில் பல அனுகூலங்கள் இருப்பதை அநேக சகோதர சகோதரிகள் கண்டிருக்கிறார்கள். “எப்படிப்பட்ட சூழ்நிலையைச் சந்தித்தாலும் அதிலுள்ள அனுகூலங்களைப் பார்ப்பதுதான் சந்தோஷத்தின் ரகசியம்” என்கிறார் கிட்டத்தட்ட 35 வயதான எஸ்டர் என்ற மணமாகா சகோதரி. “எனக்குக் கல்யாணம் ஆகப்போகிறதோ இல்லையோ, யெகோவாவின் ஊழியத்திற்கு நான் முதலிடம் கொடுத்தால் நன்மையான எதையும் யெகோவா எனக்குத் தராமல் போக மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனக் கார்மென் சொல்கிறார். (சங். 84:11) “நான் திட்டமிட்டபடி என் வாழ்க்கை அமையாவிட்டாலும் சந்தோஷமாக இருக்கிறேன், இனியும் சந்தோஷமாகவே இருப்பேன்” என்றும் அவர் சொல்கிறார்.

மணமாகாத பைபிள் கதாபாத்திரங்கள்

யெப்தாவின் மகள் திருமணம் செய்யாதிருக்கத் திட்டமிடவில்லை. ஆனால், யெப்தா செய்த பொருத்தனையின் காரணமாக அவள் இளவயதிலிருந்தே கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய வேண்டியதாயிற்று. எதிர்பாராமல் திடீரென்று வந்த அந்தப் பொறுப்பு அவளுடைய சொந்த திட்டங்களைக் குலைத்திருக்கும், அவளுடைய இயல்பான உணர்ச்சிகளுக்கு அணைபோட்டிருக்கும். தனக்குத் திருமணம் ஆகாது என்றும் பிள்ளைகள் பிறக்காது என்றும் தெரிந்தபோது அவள் இரண்டு மாதங்களுக்குத் துக்கம் அனுசரித்தாள். இருந்தாலும், அந்தப் புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு, மீதமுள்ள காலமெல்லாம் மனப்பூர்வமாகக் கடவுளைச் சேவித்தாள். மற்ற இஸ்ரவேலப் பெண்கள் வருடாவருடம் அவளைச் சந்தித்து அவளுடைய சுய தியாகத்தைப் பாராட்டினார்கள்.—நியா. 11:36-40, NW.

ஏசாயாவின் காலத்தில், அரவாணிகள் தங்களுடைய நிலைமையை நினைத்து வருந்தியிருக்கலாம். என்ன காரணத்தினால் அவர்கள் அரவாணிகளாக இருந்தார்களென பைபிள் சொல்வதில்லை. ஆனால், அவர்களால் முழு கருத்தில் இஸ்ரவேல் சபையின் அங்கத்தினர்களாய் ஆக முடியவில்லை, திருமணம் செய்துகொள்ளவோ பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவோகூட முடியவில்லை. (உபா. 23:1) இருந்தாலும், யெகோவா அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார்; அவர்கள் தம்முடைய ஒப்பந்தத்திற்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிந்ததைப் பாராட்டினார். அவர்களுக்குத் தம்முடைய வீட்டில் ஒரு ‘நினைவுச்சின்னமும்,’ ‘என்றுமுள்ள பெயரும்’ இருக்குமெனச் சொன்னார்; அதாவது, உண்மையுள்ள அந்த அரவாணிகள் இயேசுவின் அரசாட்சியின்கீழ் முடிவில்லா வாழ்வை நிச்சயமாகப் பெறுவார்களெனச் சொன்னார். ஆம், யெகோவா அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார்.—ஏசா. 56:3-5, பொது மொழிபெயர்ப்பு.

எரேமியாவின் சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எரேமியாவைக் கடவுள் ஒரு தீர்க்கதரிசியாக நியமித்த பின்பு, திருமணம் செய்யாதிருக்கும்படி கட்டளையிட்டார்; எரேமியா கொடிய காலத்தில் வாழ்ந்ததாலும், ஒரு பொறுப்பை நிறைவேற்ற வேண்டியிருந்ததாலும் அப்படிக் கட்டளையிட்டார். “நீ பெண்ணை விவாகம்பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்க வேண்டாம்” என்று யெகோவா அவரிடம் சொன்னார். (எரே. 16:1-4) இதைக் கேட்டதும் எரேமியா எப்படி உணர்ந்தார் என்று பைபிள் சொல்வதில்லை; ஆனால், அவர் யெகோவாவின் வார்த்தையை எப்போதும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் என்று அது தெளிவாகக் காட்டுகிறது. (எரே. 15:16) பிற்பாடு, 18 மாத முற்றுகையின் கோரப் பிடியில் எருசலேம் சிக்கியபோது, திருமணம் செய்யாதிருக்கும்படி யெகோவா கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தது எவ்வளவு ஞானமானதென எரேமியா கண்கூடாகப் பார்த்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.—புல. 4:4, 10.

வாழ்வை வளமாக்க வழிகள்

நாம் சிந்தித்த இந்த பைபிள் கதாபாத்திரங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் யெகோவாவின் துணையோடு அவரது சேவையில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். அதேபோல் இன்றும், ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது நம் வாழ்க்கையை வளமாக்கும். நற்செய்தியை அறிவிக்கும் பெண்கள் பெரிய படையைப் போல் இருப்பார்களென பைபிள் முன்னறிவித்தது. (சங். 68:11, NW) இந்தப் படையில் மணமாகாத ஆயிரக்கணக்கான சகோதரிகள் இருக்கிறார்கள். ஊழியத்தின் பலனாக, அவர்களில் அநேகருக்கு அடையாளப்பூர்வ பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள்.—மாற். 10:29, 30; 1 தெ. 2:7, 8.

பதினான்கு வருடங்களாக பயனியர் ஊழியம் செய்யும் லாலி என்ற மணமாகா சகோதரி சொல்வதைக் கேளுங்கள்: “பயனியர் ஊழியம் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது. நான் எப்போதும் எதையாவது செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்கிறேன், இதனால் தனிமையில் வாடுவதில்லை. என் ஊழியம் மற்றவர்களுக்கு எவ்வளவு நன்மை தருகிறதெனக் கண்கூடாகப் பார்ப்பதால் ஒவ்வொரு நாளின் முடிவிலும் மனம் நிறைந்திருக்கிறது. மிகுந்த சந்தோஷமும் கிடைக்கிறது.”

அநேக சகோதரிகள் புதிய மொழியைக் கற்றுக்கொண்டு, அயல்மொழி பேசுவோரிடம் பிரசங்கிப்பதன் மூலம் தங்கள் ஊழியத்தை விரிவாக்கியிருக்கிறார்கள். முன்பு குறிப்பிட்ட ஆனா பிரெஞ்சு மொழி பேசுவோரிடம் பிரசங்கித்து மகிழ்கிறார். “நான் வசிக்கிற நகரத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்குத் தெரிந்த ஒரு மொழியை நான் கற்றுக்கொண்டிருப்பதால் ஒரு புதிய பிராந்தியம் கிடைத்திருக்கிறது, என் பிரசங்க வேலையும் சுவாரஸ்யமாக இருக்கிறது” என்று அவர் சொல்கிறார்.

திருமணமாகாதவர்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் குறைவு; ஆகவே, அவர்களில் சிலர் தங்கள் சூழ்நிலையை அனுகூலப்படுத்திக்கொண்டு தேவை அதிகமிருக்கும் இடங்களுக்குச் சென்று ஊழியம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட 35 வயதான லிடியானா என்ற மணமாகா சகோதரி தேவை அதிகமிருக்கும் மற்ற நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்திருக்கிறார்; “யெகோவாவின் ஊழியத்தில் அதிகமாக ஈடுபடும்போது நெருங்கிய நண்பர்கள் கிடைப்பது எளிது, மற்றவர்களுடைய அன்பைப் பெறுவதும் எளிது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். “பலதரப்பட்ட பின்னணிகளையும் நாடுகளையும் சேர்ந்த அநேகர் என் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருக்கிறார்கள், அவர்களுடைய நட்பு என் வாழ்க்கையை மிகவும் வளமாக்கியிருக்கிறது” என்றும் சொல்கிறார்.

நற்செய்தியாளரான பிலிப்புவுக்குத் திருமணமாகாத நான்கு மகள்கள் இருந்ததாகவும் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. (அப். 21:8, 9) அவர்கள் தங்களுடைய தகப்பனைப் போலவே பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்திருக்க வேண்டும். ஒருவேளை, செசரியாவிலிருந்த சக கிறிஸ்தவர்களின் நன்மைக்காக அவர்கள் தங்களுடைய தீர்க்கதரிசன வரத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். (1 கொ. 14:1, 3) இன்றும் மணமாகா சகோதரிகள் அநேகர், தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சென்று அதில் பங்குகொள்வதன் மூலம் மற்றவர்களைப் பலப்படுத்துகிறார்கள்.

பிலிப்பியைச் சேர்ந்த ஆரம்பகால கிறிஸ்தவப் பெண்ணாகிய லீதியாளின் உபசரிக்கும் குணத்தை பைபிள் பாராட்டுகிறது. (அப். 16:14, 15, 40) திருமணமாகாதவராகவோ விதவையாகவோ இருந்த அந்த லீதியாள் தாராள குணம் படைத்தவராக இருந்தார்; இதனால், பவுல், சீலா, லூக்கா போன்ற பயணக் கண்காணிகளோடு பழகவும் அதன் மூலம் அதிக பயனைப் பெறவும் அவரால் முடிந்தது. தாராள குணத்தால் இன்றும் அதேபோன்ற ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன.

அன்பின் தேவையைப் பூர்த்திசெய்தல்

நிறைவான வாழ்க்கை வாழ, ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதோடு, அன்பையும் பாசத்தையும் பெற வேண்டிய தேவை நம் அனைவருக்குமே உண்டு. திருமணமாகாதவர்கள் இந்தத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளலாம்? முதலாவதாக, நம்மை நேசிப்பதற்கும் நம்மைப் பலப்படுத்துவதற்கும் நமக்குச் செவிகொடுப்பதற்கும் யெகோவா எப்போதும் இருக்கிறார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். தாவீது ராஜா சிலசமயங்களில் ‘தனிமையிலும் துன்பத்திலும்’ இருந்ததாக உணர்ந்தார், ஆனாலும் உதவிக்காக எப்போதும் யெகோவாவை அணுகலாமென அறிந்திருந்தார். (சங். 25:16, NW; 55:22) “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று அவர் எழுதினார். (சங். 27:10) கடவுள் தம்முடைய ஊழியர்கள் அனைவரையும், தம்மிடம் நெருங்கி வரும்படியும் தம் நெருங்கிய நண்பர்களாக ஆகும்படியும் அழைக்கிறார்.—சங். 25:14, NW; யாக். 2:23; 4:8.

அதுமட்டுமல்ல, உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நாம் அடையாளப்பூர்வ தகப்பன்களையும், தாய்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் பெறுகிறோம்; இவர்கள் காட்டும் அன்பு நம் வாழ்வை வளமாக்குகிறது. (மத். 19:29; 1 பே. 2:17) திருமணமாகாத அநேக கிறிஸ்தவர்கள், ‘நற்செயல்களையும் தானதர்மங்களையும் நிறையச் செய்து வந்த’ தபீத்தாளின் உதாரணத்தைப் பின்பற்றி மிகுந்த திருப்தி காண்கிறார்கள். (அப். 9:36, 39) லாலி இப்படிச் சொல்கிறார்: “நான் சோர்ந்திருக்கும்போது அன்பும் ஆதரவும் காட்டக்கூடிய உண்மையான நண்பர்களை எந்தச் சபைக்குப் போனாலும் தேடுகிறேன்; அவர்களோடு உள்ள நட்பைப் பலப்படுத்திக்கொள்ள அவர்கள்மீது அதிக அன்பும் அக்கறையும் காட்ட முயற்சி செய்கிறேன். நான் இதுவரை எட்டு சபைகளில் சேவை செய்திருக்கிறேன், இந்த எல்லா சபைகளிலுமே எனக்கு உண்மையான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களில் நிறையப் பேர் என்னைவிட வயதில் ரொம்பப் பெரியவர்கள் அல்லது ரொம்பச் சிறியவர்கள்.” ஒவ்வொரு சபையிலும் பாசமும் நட்பும் தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்மீது நாம் உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுவது அவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்; அதோடு, அன்பு காட்டவும் அன்பு பெறவும் நமக்கிருக்கும் ஆசையைப் பூர்த்தி செய்யும்.—லூக். 6:38.

கடவுள் மறக்க மாட்டார்

இது கொடிய காலமாக இருப்பதால் கிறிஸ்தவர்கள் எல்லாருமே ஏதோவொரு விதத்தில் தியாகம் செய்ய வேண்டுமென பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:29-31) நம் எஜமானரைப் பின்பற்றுகிறவரை மட்டுமே திருமணம் செய்ய வேண்டுமென்ற கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்திருப்பதால் திருமணம் செய்யாமல் இருக்கிறவர்கள் நம் விசேஷ மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். (மத். 19:12) அவர்கள் செய்திருக்கும் இந்தத் தியாகம் பாராட்டத்தக்கது; ஆனாலும், அவர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாதென அர்த்தமாகாது.

லிடியானா சொல்கிறார்: “நான் யெகோவாவுடன் நெருங்கியிருப்பதாலும் அவருக்குச் சேவை செய்வதாலும் திருப்தியான வாழ்க்கை வாழ்கிறேன். திருமணமானவர்களில் சந்தோஷமாக இருக்கிறவர்களையும் எனக்குத் தெரியும், சந்தோஷமாக இல்லாதவர்களையும் எனக்குத் தெரியும். ஆகவே, என் சந்தோஷம் எனக்குக் கல்யாணம் நடக்கப்போகிறதா இல்லையா என்பதைச் சார்ந்தில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.” ஆம், இயேசு சுட்டிக்காட்டியபடி, மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் சேவை செய்வதிலும்தான் சந்தோஷம் கிடைக்கிறது; இவற்றை எல்லாக் கிறிஸ்தவர்களாலும் செய்ய முடியும்.—யோவா. 13:14-17; அப். 20:35.

எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக நாம் செய்யும் எப்படிப்பட்ட தியாகத்திற்காகவும் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதை அறிந்திருப்பது நமக்கு அளவிலா சந்தோஷத்தைத் தருகிறது. “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—எபி. 6:10.

[அடிக்குறிப்பு]

a இங்கே கிறிஸ்தவ சகோதரிகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சகோதரர்களுக்கும் இந்த நியமங்கள் பொருந்தும்.

[பக்கம் 25-ன் சிறுகுறிப்பு]

“இருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன், இல்லாததை நினைத்து ஏங்குவதில்லை.”—கார்மென்

[பக்கம் 26-ன் படம்]

லாலியும் லிடியானாவும், தேவை அதிகமிருக்கும் இடங்களில் சேவை செய்து மகிழ்கிறார்கள்

[பக்கம் 27-ன் படம்]

கடவுள் தம் ஊழியர்கள் அனைவரையும் தம்மிடம் நெருங்கிவரும்படி அழைக்கிறார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்