வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ல‘குமாரன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை’ என்று எசேக்கியேல் 18:20-ல் உள்ள வார்த்தைகளும், “பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில்” யெகோவா விசாரிப்பார் என்று யாத்திராகமம் 20:5-ல் உள்ள வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவா?
இல்லை, முரண்படுவதில்லை. தனி நபராக ஒருவர் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதை முதல் வசனம் சுட்டிக்காட்டுகிறது. ஒருவர் செய்கிற அக்கிரமம் அவருடைய சந்ததியை எப்படிப் பாதிக்கலாம் என்பதை இரண்டாவது வசனம் குறிப்பிடுகிறது.
தனி நபராக ஒருவர் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை எசேக்கியேல் 18-ஆம் அதிகாரத்தின் சூழமைவு வலியுறுத்திக் காட்டுகிறது. “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று 4-ஆம் வசனம் சொல்கிறது. ‘நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்கிற’ மனிதனைப் பற்றி என்ன சொல்லலாம்? “அவன் பிழைக்கவே பிழைப்பான்.” (எசே. 18:5, 9) எனவே, கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பதற்கான வயதை எட்டுகிற ஒருவன் ‘தன்னுடைய வழிகளுக்குத் தக்கதாக’ நியாயந்தீர்க்கப்படுவான்.—எசே. 18:30.
இந்த நியமத்தை லேவியனாகிய கோராகின் உதாரணத்தில் பார்க்கலாம். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் பயணம் செய்துவந்தபோது, கோராகுக்கு யெகோவா விசேஷமான பல பொறுப்புகளை அளித்திருந்தார்; ஆனால், அவற்றில் அவன் திருப்தி அடையவில்லை. குருமார் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் தான் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டான்; அதனால், யெகோவாவின் பிரதிநிதிகளான மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கலகம் செய்தான்; வேறு சிலரும் அவனோடு சேர்ந்துகொண்டார்கள். குருமாரின் ஸ்தானத்தை அடைய கோராகு ஆணவத்தோடு முயன்றதால், அவனையும் மற்ற கலகக்காரர்களையும் கடவுள் அழித்துப்போட்டார். ஏனென்றால், இந்த ஸ்தானம் அவர்களுக்கு உரியதாய் இருக்கவில்லை. (எண். 16:8-11, 31-33) என்றாலும், கோராகின் குமாரர்கள் அவர்களுடன் சேர்ந்துகொள்ளவில்லை. அவர்களுடைய தகப்பன் செய்த பாவத்திற்காக யெகோவா அவர்களைத் தண்டிக்கவில்லை. கடவுளுக்கு உத்தமமாய் இருந்ததால், அவர்கள் உயிர் தப்பினார்கள்.—எண். 26:10, 11.
யாத்திராகமம் 20:5-ல் உள்ள எச்சரிப்பைக் குறித்து என்ன சொல்லலாம்? இந்த வசனத்தின் சூழமைவையும் கவனியுங்கள். இஸ்ரவேல் தேசத்தோடு யெகோவா திருச்சட்ட ஒப்பந்தத்தைச் செய்தார். அந்த ஒப்பந்தத்தில் உட்பட்டிருந்த விதிமுறைகளைக் கேட்ட பிறகு இஸ்ரவேலர், ‘யெகோவா சொன்னதையெல்லாம் செய்வோம்’ என்று உரத்த குரலில் சொன்னார்கள். (யாத். 19:5-8) இவ்வாறு, அந்த முழு தேசமும் யெகோவாவோடு ஒரு விசேஷ உறவுக்குள் வந்தது. எனவே, யாத்திராகமம் 20:5-ல் உள்ள வார்த்தைகள் அந்த முழு தேசத்திற்கும் சொல்லப்பட்டவை.
இஸ்ரவேல் தேசத்தார் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபோது, ஏராளமான நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்தார்கள். (லேவி. 26:3-8) ஆனால், யெகோவாவை விட்டுவிலகி, பொய்க் கடவுட்களை வணங்கியபோது, அவருடைய ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் இழந்தார்கள்; துன்பங்களை அனுபவித்தார்கள். (நியா. 2:11-18) என்றாலும், அவர்களில் சிலர் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தார்கள். (1 இரா. 19:14, 18) உண்மையாயிருந்த தனி நபர்கள் சிலர் அந்தத் தேசத்தாருடைய பாவத்தின் காரணமாகக் கஷ்டத்தை அனுபவித்தார்கள்; ஆனாலும், யெகோவா அவர்கள்மீது அன்புமாறா கருணையைக் காட்டினார்.
இஸ்ரவேலர் யெகோவாவின் நியமங்களை அப்பட்டமாக மீறியதால் மற்ற தேசத்தார் அவருடைய பெயரை இகழ்ந்தார்கள்; அப்போது, அவர்களை பாபிலோனியர்கள் சிறைபிடித்துச் செல்ல யெகோவா அனுமதித்தார்; இவ்வாறு அவர்களைத் தண்டிக்க அவர் தீர்மானித்தார். தனி நபர்களாகவும் தொகுதியாகவும் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். (எரே. 52:3-11, 27) உண்மைதான், இஸ்ரவேல் தேசத்தின் பாவம் மிகப் பெரியதாக இருந்தது; எனவே, யாத்திராகமம் 20:5 சொல்கிறபடி, முன்னோர்கள் செய்த பாவங்களின் பொருட்டு மூன்று, நான்கு அல்லது அதற்கும் அதிகமான தலைமுறைகள் பாதிக்கப்பட்டார்கள் என பைபிள் காட்டுகிறது.
பெற்றோரின் கெட்ட நடத்தையால் அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் பாதிக்கப்பட்டதைப் பற்றியும் பைபிளில் பதிவுகள் உள்ளன. தலைமைக் குரு ஏலி, “உதவாக்கரையாக” இருந்த தன் ஒழுக்கங்கெட்ட மகன்களைக் குருமார்களாயிருக்க அனுமதித்ததால் யெகோவாவை வேதனைப்படுத்தினார். (1 சா. 2:12-16, 22-25; NW) யெகோவாவைவிட தன்னுடைய மகன்களுக்கு ஏலி அதிக மதிப்புக் கொடுத்ததால், அவரது குடும்பத்தார் தலைமைக் குரு பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று யெகோவா முன்னுரைத்தார்; ஏலியின் கொள்ளுப்பேரனுடைய மகனான அபியத்தாரில் இது முதன்முதலாக நிறைவேறியது. (1 சா. 2:29-36; 1 இரா. 2:27) யாத்திராகமம் 20:5-ல் உள்ள நியமம் எலிசாவின் வேலைக்காரனான கேயாசியின் விஷயத்தில் உண்மையானது. சீரியாவின் படைத் தளபதியான நாகமான் சுகப்படுத்தப்பட்டபோது பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு, கேயாசி தன் ஸ்தானத்தைத் தவறாகப் பயன்படுத்தினான். அதனால், “நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும்” என்று எலிசாவின் மூலம் யெகோவா அவனுக்குத் தீர்ப்பளித்தார். (2 இரா. 5:20-27) எனவே, அவன் செய்த குற்றத்தால் அவனுடைய சந்ததியினரும் பாதிக்கப்பட்டார்கள்.
யாருக்கு, எப்போது, எப்படி, தண்டனை வழங்குவது சரியானதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க, படைப்பாளரும் உயிரளிப்பவருமான யெகோவாவுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. முன்னோர்கள் செய்த பாவத்தின் தீய விளைவுகளை அவர்களுடைய பிள்ளைகளோ சந்ததிகளோ அனுபவிக்கலாம் என்பதை மேலே உள்ள உதாரணங்கள் காட்டுகின்றன. என்றாலும், யெகோவா ‘எளியவர்களின் கூக்குரலைக் கேட்கிறார்.’ அவரிடம் உள்ளப்பூர்வமாக வருகிறவர்கள் அவருடைய தயவைப் பெறலாம், மனநிம்மதியையும் பெறலாம்.—யோபு 34:27.
[பக்கம் 29-ன் படம்]
கோராகும் அவனுடன் சேர்ந்துகொண்ட கலகக்காரர்களும் தங்களது செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டார்கள்