கேள்வி கேட்க யெகோவாவுக்கு இடமளிக்கிறீர்களா?
இருதயத்தை ஊடுருவும் நூற்றுக்கணக்கான கேள்விகள் பைபிளில் உள்ளன. முக்கியமான சத்தியங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு யெகோவாவே கேள்விகளைப் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, காயீனிடம் யெகோவா அடுக்கடுக்காகப் பல கேள்விகளைக் கேட்டு, அவனுடைய தறிகெட்ட போக்கை மாற்றிக்கொள்ளும்படி எச்சரித்தார். (ஆதி. 4:6, 7) வேறு சந்தர்ப்பங்களில், யெகோவா கேட்ட ஒரே ஒரு கேள்விகூட ஆட்களை உடனடியாகச் செயல்பட வைத்தது. யெகோவா ஒரு சமயம், “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்”? என்று கேட்டபோது, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தீர்க்கதரிசி உடனடியாகச் சொன்னார்.—ஏசா. 6:8.
பெரிய போதகரான இயேசுவும்கூட கேள்விகளைத் திறம்படப் பயன்படுத்தினார். அவர் கேட்ட 280-க்கும் அதிகமான கேள்விகள் சுவிசேஷப் பதிவுகளில் காணப்படுகின்றன. தம்மிடம் குற்றம் கண்டுபிடிக்க வந்தவர்களின் வாயை அடைப்பதற்காகச் சில சமயங்களில் அவர் கேள்விகள் கேட்டார் என்பது உண்மைதான்; என்றாலும், தம் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் இருதயத்தைச் சென்றெட்டுவதற்காகவும், அவர்களுடைய ஆன்மீக நிலையைச் சீர்தூக்கிப் பார்க்கத் தூண்டுவதற்காகவுமே அவர் பெரும்பாலும் கேள்விகள் கேட்டார். (மத். 22:41-46; யோவா. 14:9, 10) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ள 14 புத்தகங்களை எழுதிய அப்போஸ்தலன் பவுலும்கூட கேள்விகளைத் திறம்படப் பயன்படுத்தினார். (ரோ. 10:13-15) உதாரணமாக, ரோமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ஏராளமான கேள்விகள் உள்ளன. ‘கடவுளுடைய ஆசீர்வாதங்களின் மகத்துவத்தையும், அவருடைய ஞானம், அறிவு ஆகியவற்றின் ஆழத்தையும்’ கற்றுக்கொண்டு அதைப் பெரிதும் மதிக்க அந்தக் கேள்விகள் வாசகர்களைத் தூண்டுகின்றன.—ரோ. 11:33.
சில கேள்விகள் பதில் சொல்லத் தூண்டுபவையாக இருக்கின்றன; வேறு சில கேள்விகள் ஆழ்ந்து சிந்திக்க வைப்பதற்காகக் கேட்கப்படுகின்றன. இயேசு பெரும்பாலும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிற கேள்விகளையே கேட்டார். ஒரு சந்தர்ப்பத்தில், “பரிசேயர்களுடைய புளித்த மாவையும் ஏரோதுவுடைய புளித்த மாவையும் குறித்து . . . எச்சரிக்கையாக இருங்கள்” எனத் தம் சீடர்களை அவர் எச்சரித்தார்; அதாவது, அவர்களுடைய வெளிவேஷத்தையும் பொய்ப் போதனைகளையும் குறித்து எச்சரித்தார். (மாற். 8:15; மத். 16:12) இது இயேசுவின் சீடர்களுக்குப் புரியாததால், ரொட்டிகளைக் கொண்டுவர மறந்துவிட்டதைப் பற்றியே அவர் குறிப்பிடுவதாக நினைத்துக்கொண்டார்கள்; அதனால் அவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் இயேசு பேசியபோது எப்படியெல்லாம் கேள்விகளைப் பயன்படுத்தினார் என்பதைச் சற்றுக் கவனியுங்கள். “ரொட்டியை எடுத்து வராததைக் குறித்து ஏன் இப்படி விவாதிக்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? புரிந்துகொள்ள முடியாதபடி உங்கள் மனம் மந்தமாகிவிட்டதா? ‘கண்கள் இருந்தும் காணாமல் இருக்கிறீர்களா, காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா?’ . . . இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?” என்றெல்லாம் கேட்டார். இந்தக் கேள்விகள் சீடர்களைச் சிந்திக்க வைத்தன; அவர் சொன்ன விஷயத்தை நன்கு யோசித்துப் பார்க்கவும் தூண்டின.—மாற். 8:16-21.
‘நான் உன்னிடம் கேள்வி கேட்கிறேன்’
தம் ஊழியரான யோபுவின் சிந்தனையைச் சரிசெய்வதற்காக யெகோவா கேள்விகளைக் கேட்டார். இந்த அகிலாண்டத்தின் படைப்பாளரான தம்மோடு ஒப்பிட, யோபு வெறும் தூசியே என்பதை உணர்த்தும் விதத்தில் அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார். (யோபு, அதி. 38-41) அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் யோபு பதில் சொல்ல வேண்டுமென்று யெகோவா எதிர்பார்த்தாரா? அப்படித் தெரியவில்லை. “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?” என்பதைப் போன்ற கேள்விகள், யோபுவின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் தூண்டுவதற்காகவே கேட்கப்பட்டிருக்க வேண்டும். யோபுவின் உள்ளத்தை ஊடுருவிய அப்படிப்பட்ட கேள்விகள் சிலவற்றை யெகோவா கேட்டபோது யோபுவால் பதில் சொல்ல முடியவில்லை; “என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்” என்றுதான் சொன்னார். (யோபு 38:4; 40:4) யெகோவா கேட்ட கேள்விகளின் அர்த்தத்தை யோபு புரிந்துகொண்டபோது, தன்னையே தாழ்த்திக்கொண்டார். யெகோவா கேட்ட கேள்விகள் யோபுவுக்கு மனத்தாழ்மையை மட்டுமே கற்றுத்தரவில்லை, அவருடைய சிந்தனையைச் சரிசெய்துகொள்ளவும் உதவின. எவ்வாறு?
யோபு ‘உத்தமனும் சன்மார்க்கனுமாய்’ இருந்தபோதிலும், சில சமயங்களில் அவர் பேசிய வார்த்தைகள் அவருடைய தவறான கண்ணோட்டத்தை வெளிக்காட்டின. அதைக் கவனித்த எலிகூ, ‘தேவனைப் பார்க்கிலும் யோபு தன்னை நீதிமானாக்கிக்கொள்வதாக’ அவரைச் சாடினார். (யோபு 1:8; 32:2; 33:8-12) ஆம், யெகோவா கேட்ட கேள்விகள் யோபுவின் சிந்தனையைச் சரிசெய்துகொள்ள உதவின. ‘அறிவில்லா வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? இப்போதும் புருஷனைப் போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னிடம் கேள்வி கேட்கிறேன்; நீ எனக்குப் பதில்சொல்’ என்று பெருங்காற்றிலிருந்து யெகோவா யோபுவிடம் சொன்னார். (யோபு 38:1-3) இவ்வாறு, படைப்பில் மிளிர்கிற தமது நிகரற்ற ஞானத்தினிடமும் வல்லமையினிடமும் யோபுவின் கவனத்தை ஈர்த்தார். இதன் பலனாக, யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் மீதும் செயல்கள் மீதும் யோபுவுக்கு இருந்த நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. சர்வ வல்லமையுள்ள கடவுளே தன்னிடம் கேள்விகள் கேட்டதை நினைத்துப் பார்த்து யோபு எவ்வளவாய் மெய்சிலிர்த்துப் போயிருப்பார்!
யெகோவா நம்மிடம் கேள்வி கேட்க எவ்வாறு இடமளிக்கலாம்?
பைபிளில் பதிவாகியுள்ள கேள்விகளிலிருந்து நாமும் நன்மை அடைய முடியுமா? நிச்சயமாக! இந்தக் கேள்விகளை நாம் சற்று யோசித்துப் பார்த்தோமென்றால் ஆன்மீக நன்மைகளை அள்ளலாம். பைபிளில் காணப்படுகிற வலிமைமிக்க கேள்விகள் கடவுளுடைய வார்த்தைக்கு வலிமை சேர்க்கின்றன. ஆம், “கடவுளுடைய வார்த்தை . . . வல்லமையுள்ளது; . . . இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியக்கூடியது.” (எபி. 4:12) என்றாலும், அவற்றிலிருந்து அதிக நன்மைகளைப் பெற, அந்தக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்; யெகோவா நம்மிடமே அந்தக் கேள்விகளைக் கேட்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். (ரோ. 15:4) அந்தக் கேள்விகளில் சிலவற்றை இப்போது சிந்திப்போம்.
“சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ”? (ஆதி. 18:25) சோதோம் கொமோராவின் மீது யெகோவா நியாயத்தீர்ப்பை வழங்கவிருந்த சமயத்தில் அவரிடம் ஆபிரகாம் இந்தக் கேள்வியைக் கேட்டார்; ஆனால், பதிலை எதிர்பார்க்கவில்லை. நீதிமான்களை அநீதிமான்களோடு சேர்த்து அழிப்பதை யெகோவாவினால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார். இந்தக் கேள்வி, யெகோவாவின் நீதியில் அவர் வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிக்காட்டியது.
யெகோவாவின் எதிர்கால நியாயத்தீர்ப்புகளைக் குறித்து இன்று பலரும் பலவிதமாக ஊகிக்கலாம்; அர்மகெதோனில் யாரெல்லாம் தப்பிப்பிழைப்பார்கள், உயிர்த்தெழுதலில் யாரெல்லாம் வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் ஊகிக்கலாம். அவற்றையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை; மாறாக, ஆபிரகாமின் கேள்வியை மனதில் வைக்க வேண்டும். நம் பரலோகத் தகப்பன் யெகோவா அளவில்லா ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குபவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்; அவருடைய நீதி, இரக்கம் ஆகியவற்றில் ஆபிரகாமைப் போலவே முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம்; எனவே, இதுபோன்ற ஊகங்களைக் குறித்து அநாவசியமாகக் கவலைப்பட்டோ, வீணாகச் சந்தேகப்பட்டோ, வேண்டாத வாக்குவாதம் செய்தோ நம் நேரத்தையும் சக்தியையும் விரயமாக்க மாட்டோம்.
“கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன் ஆயுளோடு ஒரு நொடியைக் கூட்ட முடியுமா?” (மத். 6:27) சீடர்கள் உட்பட ஏராளமான மக்களிடம் இயேசு பேசியபோது இந்தக் கேள்வியைக் கேட்டார். யெகோவாவின் அன்பான கரங்களில் அவர்கள் தங்களை ஒப்படைத்துவிட வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தவே இப்படிக் கேட்டார். நாம் இந்தப் பொல்லாத உலகின் கடைசிக் கட்டத்தில் வாழ்வதால், பல்வேறு கவலைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால், அந்தக் கவலைகளிலேயே மூழ்கிவிடுவது நம் வாழ்நாளை ஒரு நொடிகூடக் கூட்டாது, நம் வாழ்க்கைத் தரத்தை இம்மியளவும் உயர்த்தாது.
நம்மை நினைத்தோ நம் அன்புக்குரியவர்களை நினைத்தோ நாம் கவலைப்பட ஆரம்பித்தால், இயேசு கேட்ட இந்தக் கேள்வியை ஞாபகப்படுத்திக்கொள்வது நல்லது; அப்படிச் செய்வது, நம்முடைய கவலைகளைச் சரியான கண்ணோட்டதில் பார்க்க உதவும். மனோ ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், உடல் ரீதியிலும் நம்மைச் சக்கையாய்ப் பிழிந்துவிடுகிற கவலைகளுக்கும் வேண்டாத எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் உதவும். வானத்துப் பறவைகளுக்கு உணவளிக்கிறவரும் காட்டுப் பூக்களுக்கு உடையளிக்கிறவருமான நம் பரலோகத் தகப்பன் நமக்கு என்ன தேவை என்பதை நன்றாக அறிந்திருக்கிறார் என்று இயேசுவும் உறுதியளித்தாரே!—மத். 6:26-34.
“தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?” (நீதி. 6:27) நீதிமொழிகள் புத்தகத்தின் முதல் ஒன்பது அதிகாரங்களில், ஒரு தகப்பன் தன் மகனுக்குச் சொல்கிற நடைமுறையான ஆலோசனைகள் அடங்கியுள்ளன. மேற்கண்ட கேள்வி, மணத்துணைக்குத் துரோகம் இழைப்பதால் வருகிற கசப்பான பின்விளைவுகளைக் குறிப்பிடுகிறது. (நீதி. 6:29) எதிர்பாலார் ஒருவரோடு நாம் சரசமாடுவதாக நமக்குத் தோன்றினால் அல்லது தவறான பாலியல் ஆசைகள் நம் மனதை ஆக்கிரமிப்பதாக நமக்குத் தெரிந்தால், இந்தக் கேள்வி நம் மனதில் எச்சரிக்கை மணிபோல் எதிரொலித்துக்கொண்டே இருக்க வேண்டும். வேறு ஏதாவது சபலங்கள் மனதிற்குள் எட்டிப்பார்த்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்ற நடைமுறையான பைபிள் நியமத்தை இந்தக் கேள்வி எவ்வளவு அழகாக வலியுறுத்துகிறது!—கலா. 6:7.
“வேறொருவருடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?” (ரோ. 14:4) ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், முதல் நூற்றாண்டு சபையில் எழுந்த பிரச்சினைகளைக் குறிப்பிட்டிருந்தார். வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருந்த சில கிறிஸ்தவர்கள், சக விசுவாசிகளின் தீர்மானங்களையும் செயல்களையும் நியாயந்தீர்க்கிற விதத்தில் பேசிவந்தார்கள். எனவே, பவுல் கேட்ட இந்தக் கேள்வி, ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளவும் நியாயந்தீர்க்கிற வேலையை யெகோவாவிடம் விட்டுவிடவும் அவர்களை ஊக்கப்படுத்தியது.
இன்றும் யெகோவாவின் மக்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கிறார்கள். என்றாலும், ஒற்றுமை செழித்தோங்குகிற உலகளாவிய குடும்பத்திற்குள் யெகோவா நம்மைக் கூட்டிச் சேர்த்திருக்கிறார். அந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்க நம்மால் முடிந்ததைச் செய்கிறோமா? ஒரு சகோதரர் தன் மனசாட்சியின்படி ஒரு செயலைச் செய்திருக்கும்போது, நாம் அதைக் கடுமையாய் விமர்சித்துப் பேசுவதற்குப் பதிலாக, பவுல் கேட்ட இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்வது நல்லது.
கேள்விகள்—யெகோவாவிடம் நம்மை நெருங்கி வரச் செய்கின்றன
இதுவரை நாம் சில கேள்விகளை மட்டுமே சிந்தித்தோம். பைபிளிலுள்ள கேள்விகளுக்கு இருக்கும் வலிமையைப் புரிந்துகொள்ள இவை நமக்கு உதவுகின்றன. ஒரு கேள்வி எந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்பட்டது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அதை நம்முடைய சூழ்நிலைக்கேற்ப பொருத்திக்கொள்ள உதவும். நாம் பைபிளை வாசிக்க வாசிக்க, பிரயோஜனமான பல கேள்விகளைக் கவனிப்போம்.—பக்கம் 14-ல் உள்ள பெட்டியைக் காண்க.
பைபிளிலுள்ள உள்ளத்தை ஊடுருவும் கேள்விகள் நம் மனதையும் இருதயத்தையும் தொடுவதற்கு நாம் இடமளித்தால், யெகோவாவின் நீதியான வழிகளுக்கு இசைய எப்போதும் நடந்துவருவோம். யோபுவிடம் யெகோவா கேள்வி கேட்ட பிறகு, “என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்று யோபு சொன்னார். (யோபு 42:5) ஆம், யோபுவுக்கு, யெகோவா நிஜமான நபராகத் தெரிந்தார், தன் கண் முன்னால் நிற்பது போலத் தெரிந்தார். சீடரான யாக்கோபும் இவ்வாறு சொன்னார்: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக். 4:8) எனவே, கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஒவ்வொரு அம்சத்தையும், அதிலுள்ள கேள்விகளையும், நன்கு பயன்படுத்தி ஆன்மீக ரீதியில் முன்னேறுவோமாக; யெகோவாவை இன்னும் தெளிவாக ‘காண்போமாக’!
[பக்கம் 14-ன் பெட்டி]
பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டுக்கொள்வது யெகோவாவின் கண்ணோட்டத்தைப் பெற எப்படி உதவும்?
▪ ‘யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் அவருக்குப் பிரியமாயிருக்குமோ?’—1 சா. 15:22.
▪ “கண்ணை உருவாக்கினவர் காணாரோ?”—சங். 94:9.
▪ “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?”—நீதி. 6:9.
▪ “நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ”?—யோனா 4:4.
▪ “ஒருவர் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துபோனால் என்ன பிரயோஜனம்?”—மத். 16:26.
▪ “கிறிஸ்துவின் அன்பிலிருந்து எது நம்மைப் பிரிக்க முடியும்?”—ரோ. 8:35.
▪ “உங்களிடம் இருக்கிற அனைத்தும் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டதுதானே?”—1 கொ. 4:7.
▪ “ஒளிக்கும் இருளுக்கும் தொடர்பேது?”—2 கொ. 6:14.
[பக்கம் 15-ன் படம்]
யெகோவா கேட்ட கேள்விகளிலிருந்து யோபு என்ன கற்றுக்கொண்டார்?