சோதனைகளை எதிர்ப்பட்டோம் நம்பிக்கையில் பலப்பட்டோம்
ஆடா டெல்லோ ஸ்ட்ரிட்டோ சொன்னபடி
இப்போதுதான் என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் இன்றைய தினவசனத்தைப் பார்த்து எழுதி முடித்தேன். எனக்கு 36 வயது. நாலைந்து வரி எழுதி முடிப்பதற்குள்ளேயே இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. ஏன் இவ்வளவு நேரம்? இந்தக் கேள்விக்கு என்னுடைய அம்மா பதில் சொல்வார்.—ஜோயல்.
நானும் என் கணவரும் 1968-ல் யெகோவாவின் சாட்சிகளாக ஞானஸ்நானம் பெற்றோம். எனக்கு மூன்று மகன்கள்; முதல் மகன் டேவிட்டும், இரண்டாவது மகன் மார்க்கும் எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறந்தார்கள். என் மூன்றாவது மகன் ஜோயல் 1973-ஆம் வருடம் பெல்ஜியத்தில் பென்சு என்ற ஊரிலிருந்த ஆஸ்பத்திரியில் குறைமாதக் குழந்தையாய்ப் பிறந்தான். (அந்த ஊர் ப்ருஸ்ஸெல்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.) அவன் பிறந்தபோது 1.7 கிலோ எடைதான் இருந்தான். அவனுடைய எடை இன்னும் கொஞ்சம் கூடுவதற்காக அவனை ஆஸ்பத்திரியிலேயே வைத்துக்கொண்டார்கள், என்னை அனுப்பிவிட்டார்கள்.
வாரங்கள் பல உருண்டோடின; ஆனால், அவன் உடல்நிலை தேறவே இல்லை. அதனால் நானும் என் கணவர் லூயிஜியும் குழந்தைநல டாக்டரிடம் அவனைக் காட்டினோம். டாக்டர் அவனைப் பரிசோதனை செய்துவிட்டு, “சொல்வதற்கே கஷ்டமாக இருக்கிறது, உங்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு இல்லாத கோளாறெல்லாம் இவனுக்கு இருக்கிறது” என்று சொன்னார். கொஞ்ச நேரத்திற்கு யாருமே பேசவில்லை. என்னுடைய குட்டிப் பையனின் உடலில் ஏதோ கோளாறு இருக்கிறதென்று எனக்குப் புரிந்துவிட்டது. டாக்டர் என் கணவரைத் தனியாக அழைத்துச் சென்று, “உங்கள் மகனுக்கு டிரைஸோமி-21 என்ற குறைபாடு இருக்கிறது” என்று சொன்னார். இது டவுன் சின்ட்ரோம் என்றும் அழைக்கப்படுகிறது.a
குழந்தைநல டாக்டர் சொன்னதைக் கேட்டு நாங்கள் இடிந்துபோய்விட்டோம். இன்னொரு டாக்டரிடமும் அவனைக் காட்டலாம் என முடிவு செய்தோம். அந்த டாக்டர் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு அவனை நன்றாகப் பரிசோதனை செய்தார். இடையில் அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எனக்கும் லூயிஜிக்கும் அந்த ஒரு மணிநேரம் ஒரு யுகம்போல் தெரிந்தது. கடைசியாக, டாக்டர் எங்களைப் பார்த்து, “உங்கள் பையனால் சொந்தமாக எதுவும் செய்ய முடியாது. நீங்கள்தான் அவனுக்காக எல்லாமே செய்ய வேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு, “ஆனால், ஜோயலுக்குக் கவலையில்லை, அவனுக்கு நீங்கள் எந்தக் குறையும் வைக்க மாட்டீர்கள்!” என்று கனிவான குரலில் சொன்னார். நான் உணர்ச்சிவசப்பட்டு ஜோயலை அப்படியே என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்; பின்பு, குழந்தையுடன் வீடு வந்துசேர்ந்தோம். அப்போது அவன் இரண்டு மாதக் குழந்தை.
கூட்டங்களிலும் ஊழியத்திலும் பலம் பெற்றோம்
ஜோயலுக்கு இன்னும் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தோம்; அப்போது, அவனுடைய இருதயத்தில் மிக மோசமான கோளாறு இருப்பது தெரியவந்தது; ரிக்கெட்ஸ் என்கிற நோய் இருப்பதும் தெரியவந்தது. அவனுடைய இருதயம் மிகப் பெரியதாக இருந்ததால், அது நுரையீரலை அழுத்தியது. இதனால், நோய்த்தொற்று ஏற்படுகிற வாய்ப்பு அதிகமாக இருந்தது. அவன் நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அவனை மறுபடியும் ஆஸ்பத்திரிக்கே கொண்டுபோக வேண்டியதாகிவிட்டது. அங்கே அவனைத் தனி அறையில் வைத்துவிட்டார்கள். அவன் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது என் நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது. அவனைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும், அன்போடு வருடிக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் ஏங்கினோம். ஆனால், அவனைத் தொடவே கூடாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். லூயிஜியும் நானும் அவனைப் பார்த்துக்கொண்டும், ஒருவரையொருவர் அரவணைத்தபடி ஜெபம் செய்துகொண்டும்தான் இருந்தோம்; எங்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இத்தனை வேதனைகள் இருந்தபோதிலும், ஆறு வயது டேவிட்டையும் மூன்று வயது மார்க்கையும் அழைத்துக்கொண்டு சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் போனோம். ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது, யெகோவாவின் அன்பான அரவணைப்பில் இருப்பதுபோல உணர்ந்தோம். அங்கே சகோதர சகோதரிகள் மத்தியில் இருக்கும்போது, எங்கள் பாரத்தையெல்லாம் யெகோவாமீது வைத்துவிட்டதுபோல் உணர்ந்தோம், மன சமாதானத்தையும் பெற்றோம். (சங். 55:22) ஜோயலைப் பார்த்துக்கொண்ட நர்சுகள்கூட, ‘நீங்கள் போகிற சபைக் கூட்டங்கள்தான் இதையெல்லாம் சகிக்க உங்களுக்குப் பலம் தருகிறது’ என்று சொன்னார்கள்.
ஊழியத்திற்குப் போகப் பலம் தரும்படி அந்தச் சமயத்தில் யெகோவாவிடம் கெஞ்சினேன். வீட்டில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதற்குப் பதிலாக, வெளியே போய் ஊழியம் செய்ய ஆசைப்பட்டேன்; நோய் இல்லாத உலகம் வரப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு எப்படிப் பலம் தந்திருக்கிறது என மற்றவர்களிடம் சொல்ல விரும்பினேன். எப்போதெல்லாம் ஊழியத்திற்குப் போனேனோ அப்போதெல்லாம் யெகோவா என் ஜெபத்திற்குப் பதில் அளித்தார் என்பதைப் புரிந்துகொண்டேன்.
“நம்பவே முடியவில்லை!”
ஒருவழியாக ஜோயலை வீட்டுக்குக் கொண்டு வந்தோம்; அந்த நாளை எங்களால் மறக்கவே முடியாது! அன்று நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால், அடுத்த நாளே எங்கள் சந்தோஷமெல்லாம் பறிபோய்விட்டது. ஜோயலின் உடல்நிலை திடீரென்று மோசமாகிவிட்டது. அவனைத் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கே கொண்டுபோக வேண்டியதாகிவிட்டது. அவனைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், “ஜோயல் இன்னும் ஆறு மாசம்தான் உயிரோடு இருப்பான்” என்று சொன்னார்கள். இரண்டு மாதம் கழித்து, அதாவது ஜோயலுக்குச் சுமார் எட்டு மாதம் ஆனபோது, டாக்டர்கள் சொன்ன வார்த்தை பலித்துவிடும்போல் தோன்றியது. ஏனென்றால், அவனுடைய உடல்நிலை ரொம்பவே மோசமாகிவிட்டது. ஒரு டாக்டர் எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்து, “முடிந்ததையெல்லாம் செய்துபார்த்துவிட்டோம்; இனி யெகோவாதான் அவனைக் காப்பாற்ற வேண்டும்!” என்றார்.
ஜோயல் இருந்த அறைக்குள் நான் வந்தேன். என் மனதிலும் உடலிலும் கொஞ்சம்கூட தெம்பே இருக்கவில்லை; என்றாலும் அவன் படுக்கைக்குப் பக்கத்திலேயே இருக்க முடிவுசெய்தேன். மூத்த பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள லூயிஜி வீட்டில் இருக்க வேண்டியிருந்ததால் சகோதரிகள் பலர் என்னுடன் மாறிமாறி தங்கினார்கள். இப்படியே ஒரு வாரம் போனது. திடீரென்று ஜோயலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நர்சுகள் ஓடோடிவந்தார்கள்; இருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஒரு நர்ஸ் என்னிடம், “குழந்தைக்கு உயிர் போய்விட்டது!” என்று சொன்னார். நான் அப்படியே உடைந்துபோனேன்; கதறி அழுதபடி அந்த அறையிலிருந்து வெளியேறினேன். ஜெபம் செய்ய முயற்சி செய்தேன்; ஆனால், யெகோவாவிடம் என் வேதனையை எப்படிக் கொட்டுவதென்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கடந்திருக்கும். வேறொரு நர்ஸ் என்னிடம், “ஜோயல் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்” என்று அங்கிருந்து சத்தமாகச் சொன்னார். பின்பு என்னிடம் வந்து கையைப் பிடித்துக்கொண்டு, “இப்போதே வந்து அவனைப் பாருங்கள்” என்று சொன்னார். நான் ஜோயலின் அருகே வந்தபோது, அவன் இருதயம் துடித்துக்கொண்டிருந்தது! அவன் ‘செத்துப்பிழைத்த’ கதை நாலா பக்கமும் பரவியது. நர்ஸுகளும் டாக்டர்களும் அவனைப் பார்க்க வந்தார்கள். “நம்பவே முடியவில்லை!” என்று அவர்களில் அநேகர் ஆச்சரியப்பட்டார்கள்.
நான்கு வயதில் ‘நடந்த’ ஆச்சரியம்!
ஜோயலைக் குழந்தைநல டாக்டரிடம் காட்டியபோதெல்லாம் அவர் எங்களிடம், “அன்புதான் ஜோயலுக்கு மருந்து” என்று திரும்பத்திரும்பச் சொன்னார். ஜோயல் பிறந்த பிறகு, யெகோவாவின் அன்பை நானும் லூயிஜியும் அணுஅணுவாக அனுபவித்து வந்தோம்; ஜோயல்மீதும் அதே அன்பைப் பொழிய நினைத்தோம். எல்லாவற்றையும் அவனுக்கு நாங்களே செய்துவிட வேண்டியிருந்ததால், அவனிடம் அன்பு காட்ட எங்களுக்கு நிறையவே வாய்ப்பு இருந்தது.
வருடா வருடம் அக்டோபரிலிருந்து மார்ச்வரை ஜோயலின் உடம்புக்கு ஏதாவது வந்துகொண்டே இருக்கும். அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதும் வருவதுமாகவே இருப்போம். அவனுக்கு ஏழு வயதாகும்வரை இதே கதைதான். அப்படியிருந்தும், டேவிட்டோடும் மார்க்கோடும் முடிந்தளவு நேரம் செலவிடுவதற்கு ரொம்பவே முயற்சி செய்தேன். ஜோயலுடைய உடல்நிலை தேறுவதற்கு அவர்களும் நிறைய உதவி செய்தார்கள்; ஆச்சரியமான பலன்கள் கிடைத்தன! ஜோயல் நடக்கவே மாட்டான் என்று பல டாக்டர்கள் எங்களிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், ஜோயல் நான்கு வயதாக இருந்தபோது, ஒரு நாள் மார்க் அவனிடம், “நட! ஜோயல், அம்மாவிடம் நடந்துகாட்டு!” என்றான். உடனே, ஜோயல் முதல் அடியை எடுத்து வைத்தான்! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனோம். குடும்பமாகச் சேர்ந்து யெகோவாவுக்கு இருதயப்பூர்வமாக நன்றி சொன்னோம்.
சிசுப்பருவத்திலிருந்து ஆன்மீகப் பயிற்சி
முடிந்தவரை ஜோயலைத் தவறாமல் கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டு போனோம். கிருமித் தொற்று ஏற்பட்டுவிடாமல் பாதுகாப்பதற்காக, கண்ணாடித் தாள் சுற்றப்பட்டிருந்த ஒரு விசேஷ தள்ளுவண்டியில் அவனை உட்கார வைத்து அழைத்துச் சென்றோம். அவன் அதிலேயே உட்கார்ந்துகொண்டிருக்க வேண்டியிருந்தாலும் கூட்டங்களை அனுபவித்து மகிழ்ந்தான்.
சபையிலிருந்த சகோதர சகோதரிகள் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தார்கள்; எங்கள்மீது அன்பைப் பொழிந்தார்கள், எங்களுக்கு வேண்டிய பல்வேறு உதவிகளைச் செய்தார்கள். ஒரு சகோதரர் ஏசாயா 59:1-ஐ அடிக்கடி எங்களுக்கு நினைப்பூட்டுவார். ‘இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்கு யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை’ என்று அந்த வசனம் சொல்கிறது. இந்த வார்த்தைகள் யெகோவாமீது நம்பிக்கையைப் பலப்படுத்த எங்களுக்கு உதவின.
ஜோயல் வளர வளர, அவனுடைய வாழ்க்கையில் யெகோவாவின் சேவைக்கே முக்கியத்துவம் கொடுக்கும்படி அவனை ஊக்கப்படுத்தினோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் யெகோவாவைப் பற்றி அவனிடம் பேசினோம்; அவரோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவனுக்கு உதவினோம். நாங்கள் கொடுக்கிற ஆன்மீகப் பயிற்சிக்கு நல்ல பலன் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினோம்.
பருவ வயதானபோது, யாரையெல்லாம் அவன் சந்தித்தானோ அவர்களிடமெல்லாம் பைபிள் சத்தியத்தைப் பேச ஆரம்பித்தான்; அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொன்னோம். 14 வயதில் அவனுக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது; அவன் குணமாகிவந்த சமயத்தில், “அம்மா.. டாக்டருக்கு என்றும் வாழலாம் புத்தகத்தைக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டான். எனக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. சில வருடங்கள் கழித்து, ஜோயலுக்கு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவன் பிழைக்க மாட்டான் என்றே நாங்கள் நினைத்தோம். அறுவை சிகிச்சைக்கு முன்பு, நாங்கள் அவனுடன் சேர்ந்து தயாரித்திருந்த ஒரு கடிதத்தை ஜோயல் தன் டாக்டர்களிடம் கொடுத்தான். இரத்தத்தை அவன் ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் அதில் விளக்கப்பட்டிருந்தது. “நீ இதற்குச் சம்மதிக்கிறாயா?” என்று ஜோயலிடம் டாக்டர் கேட்டார். “ஆமாம், டாக்டர்” என்று அவன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். கடவுள்மீது அவனுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவரைப் பிரியப்படுத்துவதற்கான திடத்தீர்மானத்தையும் பார்த்தபோது எங்களுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஆஸ்பத்திரி ஊழியர்கள் எங்களோடு நன்கு ஒத்துழைத்தார்கள். அதற்கு நாங்கள் ரொம்பவே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
ஜோயலின் ஆன்மீக முன்னேற்றம்
ஜோயலுக்கு 17 வயதானபோது ஞானஸ்நானம் பெற்றான். அந்த நாளை எங்களால் மறக்கவே முடியாது! அவன் ஆன்மீக முன்னேற்றம் செய்வதைப் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைகிறோம். அன்றிலிருந்து இன்றுவரை யெகோவாமீது அவனுக்குள்ள அன்பும், சத்தியத்தின் மீது அவனுக்குள்ள பக்திவைராக்கியமும் குறையவே இல்லை. பார்க்கிறவர்களிடமெல்லாம், “சத்தியம்தான் என் உயிர்மூச்சு!” என்று சொல்கிறான்; அப்படிச் சொல்வதில் அவனுக்கு அப்படியொரு சந்தோஷம்!
அவனுக்குக் கிட்டத்தட்ட 18, 19 வயதானபோது, எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டான். அதற்காக அவன் எடுத்த முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு சின்ன வார்த்தையை எழுதுவதே பெரிய சாதனையாக இருந்தது. அப்போது முதற்கொண்டு, காலை எழுந்தவுடன், முதல் வேலையாக தினவசனத்தைப் படிப்பான். பின்பு, சிரத்தையெடுத்து அந்த வசனத்தைப் பார்த்து தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் எழுதுவான். இப்படி அவன் எழுதிய நோட்டுப் புத்தகங்களுக்குக் கணக்கே இல்லை!
கூட்டங்கள் நடக்கும் நாட்களில், சீக்கிரமாக ராஜ்ய மன்றத்திற்குப் போக வேண்டுமெனத் துடிப்பான்; அங்கே வருகிற எல்லாரையும் அன்போடு வரவேற்க ஆசைப்படுவான். கூட்டங்களில் பதில் சொல்வதும் நடிப்புகளில் பங்குகொள்வதும் அவனுக்குக் கொள்ளைப் பிரியம். ராஜ்ய மன்றத்தில் மைக்குகளைக் கையாளுவான், மற்ற வேலைகளிலும் உதவி செய்வான். உடல்நிலை நன்றாக இருந்தால், ஒவ்வொரு வாரமும் எங்களுடன் ஊழியத்திற்கு வந்துவிடுவான். 2007-ல் உதவி ஊழியனாக நியமிக்கப்பட்டான். அந்த அறிவிப்பைக் கேட்டதும் நாங்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். யெகோவாவிடமிருந்து கிடைத்த எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!
யெகோவா எங்களைக் கைவிடவில்லை
1999-ஆம் வருடம் இன்னுமொரு சோதனை வந்தது. கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டிவந்த ஒருவன் எங்கள் கார்மீது மோதினான். லூயிஜி படுகாயம் அடைந்தார். ஒரு காலையே எடுக்க வேண்டியதானது. முதுகுத் தண்டில் பெரிய பெரிய அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியதானது. அந்தச் சமயமும் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, அவரிடமிருந்து பலத்தைப் பெற்றோம். (பிலி. 4:13) லூயிஜியால் முன்புபோல் நடமாட முடிவதில்லை. என்றாலும், அதையே நினைத்துக் கவலைப்படாமல், நன்மைகளை யோசித்துப் பார்க்கிறோம். அவரால் இப்போது வேலைக்குச் செல்ல முடியாததால், ஜோயலைக் கவனித்துக்கொள்ள அவருக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. இதனால், ஆன்மீகக் காரியங்களில் என்னால் அதிகமாக ஈடுபட முடிகிறது. லூயிஜி தற்போது மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்; குடும்பத்தையும் சபையையும் ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
எங்கள் வீட்டுச் சூழ்நிலை வித்தியாசமாக இருப்பதால், குடும்பமாக நிறைய நேரம் செலவிட முடிகிறது. இத்தனை காலங்களில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும், அளவுக்குமீறி எதிர்பார்க்காமல் இருக்கவும் கற்றுக்கொண்டோம். சில சமயம் நாங்கள் நொந்துபோய் இருக்கும்போது, மனதிலுள்ளதை எல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிடுவோம். ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், எங்கள் மகன்கள் டேவிட்டும் மார்க்கும் பெரியவர்களாகி வீட்டைவிட்டுப் போன பின்பு, யெகோவாவுக்குச் சேவை செய்வதை படிப்படியாக நிறுத்திவிட்டார்கள். என்றாவது ஒரு நாள் யெகோவாவிடம் திரும்பி வருவார்களென நம்பிக்கையோடு இருக்கிறோம்.—லூக். 15:17-24.
யெகோவா எங்களைக் கைவிடவே இல்லை என்பதை எங்கள் வாழ்க்கையில் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்; எந்தப் பிரச்சினை வந்தாலும் யெகோவாமீது சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டோம். ஏசாயா 41:13 எங்களுக்கு மிகவும் பிடித்த வசனம். அது இப்படிச் சொல்கிறது: ‘உன் தேவனாயிருக்கிற யெகோவாவாகிய நான் உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.’ யெகோவா எங்கள் கையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறார் என்பதை அறிவது மனதுக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது. ஆம், சோதனைகளை எதிர்ப்பட்டோம், ஆனால் பரலோகத் தகப்பனாகிய யெகோவா மீதுள்ள நம்பிக்கையில் பலப்பட்டோம்.
[அடிக்குறிப்பு]
a டிரைஸோமி-21 என்பது பிறவிக் குறைபாடு; இதனால் பாதிக்கப்படும் பிள்ளைகள் மனவளர்ச்சி குன்றியவர்களாக இருப்பார்கள். நம்முடைய உடலில் உள்ள குரோமசோம்கள் பொதுவாக ஜோடி ஜோடியாகத்தான் இருக்கும்; ஆனால், டிரைஸோமி உள்ள பிள்ளைகளுக்கு ஒரு ஜோடி குரோமசோமில் ஒரு குரோமசோம் அதிகமாக இருக்கும். 21-வது குரோமசோமைப் பாதிப்பதுதான் இந்த டிரைஸோமி-21.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
அம்மாவுடன் ஜோயல்
[பக்கம் 18-ன் படம்]
அம்மா, அப்பாவுடன் ஜோயல்
[பக்கம் 19-ன் படம்]
ராஜ்ய மன்றத்தில் ஜோயல் எல்லாரையும் முகம் மலர வரவேற்கிறான்