நீங்கள் பெற்ற ஆசிகளுக்கு நன்றியுடன் இருக்கிறீர்களா?
எகிப்திலிருந்த இஸ்ரவேல் மக்களின் அடிமை விலங்கு அற்புதமாய் தகர்க்கப்பட்டபோது, யெகோவாவைச் சுதந்திரமாய் வழிபட அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது; அதனால், அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். (யாத். 14:29–15:1, 20, 21) ஆனால், வெகு சீக்கிரத்திலேயே அவர்களுடைய மகிழ்ச்சியெல்லாம் புலம்பலாக மாறியது. அவர்கள் தங்களுடைய சூழ்நிலையைப் பற்றிப் புலம்ப ஆரம்பித்தார்கள். ஏன்? ஏனென்றால் யெகோவா செய்ததை மறந்துவிட்டு, வனாந்தர வாழ்வின் அசௌகரியங்களைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தார்கள். “நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது” என்று மோசேயிடம் அவர்கள் முறையிட்டார்கள்.—எண். 21:5.
பல நூற்றாண்டுகளுக்குப்பின், பூர்வ இஸ்ரவேலை ஆண்டுவந்த தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் [அதாவது, அன்புமாறா கருணையின்மேல்] நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.” (சங். 13:5, 6) யெகோவா தனக்குக் காண்பித்த அன்புமாறா கருணையை, ஆம் அவர் செய்த அன்பான செயல்களை, தாவீது மறந்துவிடவில்லை. மாறாக, எப்போதும் அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். (சங். 103:2) யெகோவா நமக்கும் நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். நாமும் அவர் செய்தவற்றை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படியானால், ஆண்டவருடைய தயவால் இன்று நாம் அனுபவிக்கும் ஆசிகள் சிலவற்றை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
‘யெகோவாவுடன் அன்புறவு’
‘யெகோவாவுடன் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்’ என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 25:14, பொது மொழிபெயர்ப்பு) பாவச் சேற்றில் வீழ்ந்து கிடக்கும் மானிடரான நாம் யெகோவாவுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! என்றாலும், ஜெபம் செய்யக்கூட நேரம் இல்லாத அளவுக்கு அன்றாட வாழ்விலேயே நாம் மூழ்கியிருந்தோமென்றால்...? யெகோவாவுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவு என்னவாகும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெகோவா நம் நண்பராக இருப்பதால், நாம் அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்; நம் மனதில் உள்ளவற்றை எல்லாம், ஆம், நம் குமுறல்களை... ஆசைகளை... கவலைகளை... எல்லாம் அப்படியே ஜெபத்தில் அவரிடம் கொட்டிவிட வேண்டுமென அவர் விரும்புகிறார். (நீதி. 3:5, 6; பிலி. 4:6, 7) அப்படியென்றால், நாம் செய்யும் ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா?
பால் என்ற இளம் சாட்சி தனது ஜெபங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, அவற்றை கொஞ்சம் மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார்.a அவர் சொன்னார்: “யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது எப்போதும் சொன்னதையே சொல்லும் பழக்கம் எனக்கு இருந்தது.” உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் ஜெபத்தைப் பற்றி பால் ஆராய்ச்சி செய்தார்; அப்போது, பைபிளில் சுமார் 180 ஜெபங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்டார். யெகோவாவின் கடந்தகால ஊழியர்கள் தங்களுடைய அடிமனதில் தேங்கிக் கிடந்த உணர்ச்சிகளை அப்படியே கொட்டியிருப்பதை இந்த ஜெபங்களில் காணலாம். “பைபிளில் உள்ள இந்த ஜெபங்களைப் பற்றி தியானித்துப் பார்த்தேன்; அதனால், குறிப்பிட்ட விஷயங்களைச் சொல்லி ஜெபிக்கக் கற்றுக்கொண்டேன். இப்போது, யெகோவாவிடம் மனந்திறந்து பேச முடிகிறது. ஜெபத்தில் யெகோவாவிடம் நெருங்கி வந்திருப்பதில் அதிக மகிழ்ச்சியடைகிறேன்” என்று பால் சொன்னார்.
‘ஏற்ற வேளையில் உணவு’
யெகோவா நம்மீது பொழிந்திருக்கும் மற்றொரு ஆசி பைபிள் சத்தியங்கள். அவர் அளிக்கிற அளவற்ற, அறுசுவைமிக்க ஆன்மீக உணவை நாம் அருந்தும்போது, ‘மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிக்கலாம்.’ (ஏசா. 65:13, 14) இருந்தாலும், ஏதாவது தீய விஷயங்கள் சத்தியத்தின் மீது நாம் கொண்டுள்ள ஆர்வத்தைக் குலைத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, விசுவாசதுரோக பிரச்சாரங்களுக்கு கவனம் செலுத்தினால், அவை நம் சிந்தையைக் கெடுத்துவிடலாம்; உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வாயிலாக “ஏற்ற வேளையில்” யெகோவா தரும் ஆன்மீக உணவின் மதிப்பை உணராதபடி செய்துவிடலாம்.—மத். 24:45, 47.
பல்லாண்டுகளாய் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்த ஆன்ட்ரே என்பவர் விசுவாசதுரோக சிந்தனைக்கு இடம்கொடுத்து சத்தியத்தைவிட்டே வழிவிலகிச் சென்றுவிட்டார். விசுவாசதுரோகிகளின் வெப்சைட்டை மேலோட்டமாக பார்ப்பதால் எந்த ஆபத்தும் இருக்காது என்று அவர் நினைத்தார். “ஆரம்பத்தில், விசுவாசதுரோகிகள் சொல்கிற ‘சத்தியங்கள்’ என்னைக் கவர்ந்தன. அவர்கள் சொன்னதை நான் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க யெகோவாவின் அமைப்பைவிட்டு வெளியேறுவதே எனக்குச் சரியெனப் பட்டது. ஆனால், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக விசுவாசதுரோகிகள் வைக்கும் வாதங்களைத் தீர ஆராய்ந்து பார்த்தபோது, அந்தப் பொய் போதகர்கள் எவ்வளவு தந்திரமான ஆட்கள் என்பது எனக்குப் புரிந்தது. ‘பலமான அத்தாட்சி’ என்று அவர்கள் சொன்னதெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. ஆகவே, நம்முடைய பிரசுரங்களை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன், கூட்டங்களுக்கும் தவறாமல் செல்லத் தொடங்கினேன். ‘எவ்வளவோ நல்ல காரியங்களை இழந்துவிட்டேன்!’ என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்” என்று அவர் சொன்னார். ஆன்ட்ரே மறுபடியும் சபையுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சகோதர கூட்டுறவு
அன்பும் ஒற்றுமையும் உள்ள நம் சகோதரர்கள் மத்தியில் இருப்பது யெகோவாவிடமிருந்து கிடைத்த ஓர் ஆசி. (சங். 133:1) இந்த நல்ல காரணத்திற்காகவே, “சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 2:17) இந்தச் சகோதரர்களில் நாமும் ஒருவராக இருப்பதால், ஆன்மீக ரீதியில் அப்பா அம்மாவாக, அண்ணன் தம்பியாக, அக்கா தங்கையாக இருப்பவர்களின் அன்பான ஆதரவை அனுபவிக்கிறோம்.—மாற். 10:29, 30.
இருந்தாலும், சில நேரங்களில் பல்வேறு சூழ்நிலை காரணமாக நம் சகோதர சகோதரிகளுடன் உள்ள உறவில் உரசல்கள் உண்டாகலாம். உதாரணமாக, ஒருவருடைய குறைபாடுகளைக் கண்டு சிலர் எளிதில் எரிச்சலடைந்து, எதற்கெடுத்தாலும் அந்நபரை குத்திக்காட்டிப் பேச ஆரம்பித்துவிடலாம். ஆனால், குறைகள் இருந்தாலும் யெகோவா அவருடைய ஊழியர்களை நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும், அல்லவா? அதோடு, “‘என்னிடம் பாவம் இல்லை’ என்று சொல்வோமானால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறவர்களாய் இருப்போம்; நமக்குள் சத்தியம் இருக்காது.” (1 யோ. 1:8) ஆகவே, நாம் ‘ஒருவரையொருவர் பொறுத்துக்கொண்டு, தாராளமாக மன்னிக்க வேண்டும்’ அல்லவா?—கொலோ. 3:13.
ஆன் என்ற ஓர் இளம் பெண் கிறிஸ்தவ கூட்டுறவின் முக்கியத்துவத்தை ஒரு கசப்பான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டாள். இயேசுவின் உவமையில் வரும் கெட்ட குமாரனைப் போல நடந்துகொண்டாள்; ஆம், கிறிஸ்தவ சபையைவிட்டே விலகினாள். பிற்பாடு, அவள் தன் தவறை உணர்ந்து சத்தியத்திற்குள் வந்தாள். (லூக். 15:11-24) ஆன் தன்னுடைய அனுபவத்திலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டாள்? “இப்போது நான் யெகோவாவின் அமைப்புக்குள் வந்துவிட்டேன்; சகோதர சகோதரிகளிடம் எந்தக் குறை இருந்தாலும் அவர்களை உயர்வாய் மதிக்கிறேன். முன்பெல்லாம், எதற்கெடுத்தாலும் அவர்களை குற்றம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது சக கிறிஸ்தவர்கள் மத்தியில் நான் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை எதுவும் கெடுத்துப் போடக்கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஆன்மீகப் பூஞ்சோலைக்கு இந்த உலகத்தில் எதுவுமே ஈடாகாது.”
எப்போதும் நன்றியுடன் இருங்கள்
மனிதப் பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுளுடைய அரசாங்கமே ஒரே தீர்வு என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது; அந்த நம்பிக்கை விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம். முதன்முதலில் இந்த நம்பிக்கையை நாம் பெற்றபோது நம் இதயம் நன்றியால் பொங்கி வழிந்தது அல்லவா! ஆம், “விலை உயர்ந்த ஒரு முத்தை” வாங்குவதற்காக ‘தன்னிடமுள்ள எல்லாவற்றையும் உடனடியாக விற்ற’ வியாபாரியைப் போலவே உணர்ந்தோம். (மத். 13:45, 46) அந்த வியாபாரி முத்தின் மீது வைத்திருந்த மதிப்பை பிற்பாடு இழந்துவிட்டதாக இயேசு அந்த உவமையில் சொல்லவில்லை. அதுபோலவே, அருமையான எதிர்கால நம்பிக்கையின் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பை ஒருபோதும் இழந்துவிடாதிருப்போமாக.—1 தெ. 5:8; எபி. 6:19.
60 வருடங்களுக்கும் மேலாக யெகோவாவை சேவித்து வரும் ஜேன் என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னதுதான் அந்த நம்பிக்கையை என் மனதில் பசுமையாக வைத்திருக்க உதவியது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டதால் அவர்களின் கண்கள் பிரகாசித்ததை நான் பார்த்தபோது என்னுடைய நம்பிக்கையும் பலப்பட்டது. பைபிள் மாணாக்கர் சத்தியத்தை கற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதைப் பார்க்கும்போது, ‘நான் மற்றவர்களுக்கு எவ்வளவு அருமையான சத்தியங்களைச் சொல்கிறேன்!’ என்பதை யோசிக்க ஆரம்பித்தேன்.”
நாம் அனுபவிக்கும் அளவற்ற ஆன்மீக ஆசீர்வாதங்களுக்காக நன்றியோடு இருக்க நல்ல காரணங்கள் இருக்கின்றன. துன்புறுத்தல், வியாதி, வயோதிபம், மனச்சோர்வு, அன்பானவரின் மரணம், பணக்கஷ்டம் போன்ற சோதனைகள் நம்மைச் சூழ்ந்துகொண்டாலும் இவையெல்லாம் தற்காலிகமானவையே என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், நாம் இப்போது படுகிற எல்லா கஷ்டங்களும் புதிய உலகில் நீங்கிவிடும். அதுமட்டுமல்ல, நாம் இப்போது அனுபவிக்கிற ஆசிகளோடு மற்ற பல ஆசிகளையும் கடவுளுடைய அரசாங்கத்தில் அனுபவிப்போம்.—வெளி. 21:4.
அதுவரையில், நாம் அனுபவிக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களை நினைத்துப் பார்த்து, சங்கீதக்காரனுக்கு இருந்த அதே நன்றியுணர்வைக் காட்டுவோமாக: “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.”—சங். 40:5.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 18-ன் படம்]
சோதனை காலத்தில் நமக்கு ஆன்மீக ரீதியில் ஆதரவு இருக்கிறது