பினெகாஸ் போல சவால்களைச் சந்திப்பீர்களா?
சபையில் மூப்பராகச் சேவை செய்வது ஓர் அருமையான பாக்கியமே. இருந்தாலும், மூப்பர்களுக்குச் சவால்கள் இருக்கத்தான் செய்யுமென்று பைபிள் ஒத்துக்கொள்கிறது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ‘யெகோவாவுக்கென்று நியாயம் விசாரிக்க’ வேண்டியிருக்கலாம். (2 நா. 19:6, திருத்திய மொழிபெயர்ப்பு) வேறு சந்தர்ப்பங்களில், ஒரு நியமிப்பைக் கையாள தங்களுக்குத் தகுதியில்லை என மோசேயைப் போல அவர்கள் உணரலாம். மோசேக்கு யெகோவா ஒரு நியமிப்புக் கொடுத்தபோது, ‘பார்வோனிடம் போக . . . நான் எம்மாத்திரம்?’ என்று தாழ்மையுடன் கேட்டார்.—யாத். 3:11.
மூப்பர்களை நியமிப்பது கடவுளுடைய சக்தி; அதே சக்தியால் எழுதப்பட்ட பைபிள், சவால்களை வெற்றிகரமாய்ச் சமாளித்த கண்காணிகளைப் பற்றிய உயிருள்ள உதாரணங்களைப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. பினெகாஸ் என்பவர் எலெயாசாரின் மகன், ஆரோனின் பேரன்; அதனால், தலைமைக் குருவாகச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெறவிருந்தார். அவருடைய வாழ்வில் நடந்த மூன்று சம்பவங்களை நாம் இப்போது ஆராயப்போகிறோம்; இன்று மூப்பர்கள் தைரியத்துடன்... விவேகத்துடன்... யெகோவாமீது நம்பிக்கையுடன்... சவால்களைச் சந்திப்பதன் அவசியத்தை அவை சிறப்பித்துக் காட்டுகின்றன.
உடனே ‘அவர் எழுந்தார்’
இஸ்ரவேலர் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்த சமயத்தில் பினெகாஸ் ஓர் இளைஞனாக இருந்தார். “ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். . . . ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எண். 25:1, 2) தவறு செய்தவர்களை யெகோவா ஒரு வாதையால் கொன்றுபோட்டார். இஸ்ரவேலர் செய்த மாபெரும் பாவத்தை... அதனால் உண்டான வாதையை... பற்றிய செய்தி பினெகாஸ் காதுக்கு எட்டியபோது அவர் எவ்வளவாய் வேதனைப்பட்டிருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
பைபிள் பதிவு தொடர்ந்து சொல்கிறது: “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக் கொண்டுவந்தான்.” (எண். 25:6) அப்போது, குருவாகச் சேவித்த பினெகாஸ் என்ன செய்தார்? அவர் வயதில் இளையவராக இருந்தார்; மீதியானிய பெண்ணை அழைத்துவந்த இஸ்ரவேலனோ கடவுளுடைய வணக்கத்தாரை வழிநடத்திய ஒரு பிரபுவாக இருந்தான்.—எண். 25:14.
ஆனால், பினெகாஸ் யெகோவாவுக்குப் பயந்து நடந்தார், மனிதருக்கு அல்ல. அந்த இஸ்ரவேலன் மீதியானிய பெண்ணுடன் பாளையத்திற்குள் வருவதைப் பார்த்தவுடனேயே ஒரு ஈட்டியை எடுத்துக்கொண்டு, அவர்கள் நுழைந்த கூடாரத்திற்குள் சென்று, அவர்களைத் தரையோடு தரையாய் உருவக் குத்தினார்! பினெகாஸ் காட்டிய தைரியத்தையும் உறுதியையும் யெகோவா எப்படிக் கருதினார்? யெகோவா உடனே அந்த வாதையை நிறுத்தினார்; அதோடு, குருத்துவம் ‘நித்திய’ காலமாய் பினெகாஸுடைய வம்சத்தைவிட்டு நீங்காமல் இருக்குமென்ற ஒப்பந்தத்தைச் செய்வதன் மூலம் அவருக்குப் பலனளித்தார்.—எண். 25:7-13.
இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் வன்முறையைக் கையில் எடுப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், பினெகாஸைப் போல மூப்பர்கள் எப்போதும் உறுதியாகவும் தைரியமாகவும் செயல்படத் தயாராய் இருக்க வேண்டும். உதாரணமாக, கில்யெர்மா என்பவர் நியாயவிசாரணைக் குழுவில் சேவை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டபோது மூப்பராகி சில மாதங்களே ஆகியிருந்தன. இளமைப் பருவத்தில் தனக்கு உதவிசெய்த மூப்பருக்கு எதிரான வழக்கைத்தான் இப்போது கில்யெர்மா விசாரிக்க வேண்டியிருந்தது. “அது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையாக இருந்தது” என அவர் கூறுகிறார். “ராத்திரி தூக்கம்கூட வராமல் கஷ்டப்பட்டேன். என்னுடைய உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல் யெகோவாவுடைய நீதிநெறியின்படி இந்த வழக்கை எப்படிக் கையாளுவது என்ற யோசனை சதா என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பல நாட்களாக ஜெபம் செய்தேன், பைபிள் பிரசுரங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்தேன்” என்றும் அவர் கூறுகிறார். அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கத் தேவையான தைரியத்தைப் பெற இது அவருக்குக் கைகொடுத்தது; தவறு செய்த சகோதரருக்கு ஆன்மீக உதவியை அளிக்கவும் துணைபுரிந்தது.—1 தீ. 4:11, 12.
தேவைப்படும்போது சபையில் தைரியத்தோடும் உறுதியோடும் செயல்படுவதன் மூலம் மூப்பர்கள் விசுவாசத்திற்கும் உண்மைத்தன்மைக்கும் உதாரணமாக விளங்குகிறார்கள். மற்ற கிறிஸ்தவர்களும் அவர்களைப் போல் தைரியமாய்ச் செயல்பட வேண்டும்; தங்களுக்குத் தெரியவருகிற வினைமையான தவறுகளைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். அதோடு, சபைநீக்கம் செய்யப்பட்ட ஒரு நண்பருடனோ உறவினருடனோ சகவாசம் வைக்காமல் கடவுளுக்கு உண்மைத்தன்மையோடு இருக்க வேண்டும்.—1 கொ. 5:11-13.
விவேகம் பிரச்சினையை விரட்டும்
பினெகாஸ் முன்பின் யோசிக்காமல் ஏதோ துடுக்குத்தனமாகச் செயல்படவில்லை. மற்றொரு செய்தியைக் கேள்விப்பட்டபோது அவர் எப்படி விவேகமாய்ச் செயல்பட்டார் என்பதைக் கவனியுங்கள். ரூபன் கோத்திரத்தாரும், காத் கோத்திரத்தாரும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் யோர்தான் நதியருகில் ஒரு பலிபீடம் கட்டினார்கள். பொய் வழிபாட்டிற்காகத்தான் அதைக் கட்டினார்கள் என மற்ற இஸ்ரவேலர் முடிவு செய்துகொண்டு, இவர்கள்மீது போர் தொடுக்கத் தயாராகிவிட்டார்கள்.—யோசு. 22:11, 12.
பினெகாஸ் எப்படிச் செயல்பட்டார்? அவர் இஸ்ரவேல் பிரபுக்களோடு போய், பலிபீடத்தைக் கட்டியவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி விவேகமாய்ப் பேசினார். அவர்கள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார்கள்; ‘யெகோவாவின் ஆராதனைக்காகத்தான்’ பலிபீடத்தைக் கட்டியதாக எடுத்துச் சொன்னார்கள். இதனால், பூகம்பம்போல் வெடிக்கவிருந்த ஒரு பிரச்சினை தவிர்க்கப்பட்டது.—யோசு. 22:13-34.
சக கிறிஸ்தவரைப் பற்றி நாம் ஏதாவது குற்றச்சாட்டையோ மோசமான விஷயத்தையோ கேள்விப்பட்டால், பினெகாஸைப் பின்பற்றுவது எவ்வளவு ஞானமான காரியம்! நம் சகோதரர்மீது வன்மம் கொள்வதிலிருந்து அல்லது அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதிலிருந்து விவேகம் நம்மை அணைபோட்டுத் தடுக்கும்.—நீதி. 19:11.
பினெகாஸைப் போல் செயல்பட மூப்பர்களுக்கு விவேகம் எவ்வாறு கைகொடுக்கும்? “ஒரு பிரஸ்தாபி இன்னொரு பிரஸ்தாபியுடன் இருக்கும் பிரச்சினையைப் பற்றி என்னிடம் வந்து பேசும்போது, யார் பக்கமும் சாயாமல் பைபிளிலிருந்து அறிவுரை கொடுப்பதற்கு உதவுமாறு நான் உடனே யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன்” என 10 வருடங்களுக்கும் மேலாக மூப்பராய் இருக்கும் ஹைமே கூறுகிறார். “ஒருநாள் சகோதரி ஒருவர் என்னிடம் வந்து, மற்றொரு சபையைச் சேர்ந்த பொறுப்புள்ள சகோதரர் ஒருவர் தன்னை நடத்திய விதத்தைப் பற்றிப் புகார் செய்தார். அந்தச் சகோதரர் என்னுடைய நண்பர் என்பதால், அவருக்காகப் பரிந்து பேசுவது எளிதாக இருந்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல் நிறைய பைபிள் நியமங்களை அந்தச் சகோதரிக்கு எடுத்துக் காட்டினேன். முதலில் அந்தச் சகோதரரிடம் போய்ப் பேச அந்தச் சகோதரி ஒத்துக்கொண்டார். (மத். 5:23, 24) ஆனால் அப்படிப் பேசியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. வேறு பைபிள் நியமங்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி நான் அந்தச் சகோதரியிடம் சொன்னேன். அந்தப் பிரச்சினையைப் பற்றி மீண்டும் ஜெபம் செய்வதற்கும் தன்னைப் புண்படுத்தியவரை மன்னித்துவிடுவதற்கும் அந்தச் சகோதரி தீர்மானித்தார்” என்றும் அவர் சொல்கிறார்.
இதனால் ஏற்பட்ட பலன்? ஹைமே இவ்வாறு சொல்கிறார்: “பல மாதங்களுக்குப் பிற்பாடு, அந்தச் சகோதரி என்னிடம் வந்து, அந்தச் சகோதரர் தான் பேசியதைக் குறித்து வருத்தப்பட்டதாகச் சொன்னார். தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்ததாகவும் தன்னைப் பாராட்டியதாகவும்கூட சொன்னார். ஆக, இரண்டு பேரும் சமாதானமானார்கள். அவர்களுக்கு இடையே நான் என் மூக்கை நுழைத்து ஒருதலைபட்சமாய் நடந்திருந்தால், இதுபோன்ற நல்ல தீர்வு கிடைத்திருக்குமா?” பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “வழக்காட விரைந்து செல்லாதே.” (நீதி. 25:8, தி.மொ.) ஆகவே, விவேகமுள்ள மூப்பர்கள் என்ன செய்கிறார்கள்? ஒருவருக்கொருவர் சமாதானம் ஆவதற்காக பைபிள் நியமங்களைப் பொருத்தும்படி கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.
யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார்
கடவுளுடைய மக்களின் சார்பாகக் குருவாய்ச் சேவை செய்யும் பாக்கியத்தை பினெகாஸ் பெற்றிருந்தார். முன்பே கவனித்தபடி, அவர் இளையவராக இருந்தபோதே மிகுந்த தைரியத்தையும் விவேகத்தையும் காட்டினார். என்றாலும், யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்ததால்தான் சவால்களை வெற்றிகரமாய்ச் சந்தித்தார்.
பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கிபியாவின் ஆட்கள் லேவியன் ஒருவனுடைய மறுமனையாட்டியைக் கற்பழித்துக் கொலை செய்துவிட்டார்கள். அதனால், மற்ற கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரத்தாருக்கு எதிராகப் போர் செய்யக் கிளம்பினார்கள். (நியா. 20:1-11) உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள்; ஆனால், இரண்டு முறை தோல்வியடைந்து விட்டார்கள், அதனால் பெரும் இழப்பு உண்டானது. (நியா. 20:14-25) தாங்கள் செய்த ஜெபத்திற்கு எந்தப் பலனுமில்லை என முடிவு செய்தார்களா? நடந்த தவறுக்கு அவர்கள் பதிலடி கொடுப்பதை யெகோவா உண்மையில் விரும்பினாரா இல்லையா?
அச்சமயத்தில் இஸ்ரவேலின் தலைமைக் குருவாக ஆகியிருந்த பினெகாஸ் நம்பிக்கையில் சிறிதும் துவளாமல் மீண்டும் செயல்பட்டார். “எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா” என்று கேட்டு ஜெபம் செய்தார். அதற்குப் பதில் கிடைத்தது; ஆம், பென்யமீன் கோத்திரத்தாரை வெல்ல யெகோவா துணைபுரிந்தார், கிபியா தீக்கிரையானது.—நியா. 20:27-48.
இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? மூப்பர்கள் ஊக்கமாய் முயற்சிகள் எடுத்த பின்பும், உதவிக்காகப் பல முறை ஜெபம் செய்த பின்பும் சபையில் சில பிரச்சினைகள் தீராமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், “கேட்டுக்கொண்டே [அல்லது, ஜெபம் செய்துகொண்டே] இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று இயேசு சொன்னதை மூப்பர்கள் நினைவில் கொள்வது நல்லது. (லூக். 11:9) ஜெபத்திற்குப் பதில் கிடைப்பது தாமதமாவதுபோல் தோன்றினாலும்கூட, யெகோவா உரிய நேரத்தில் பதிலளிப்பார் என்பதில் கண்காணிகள் உறுதியுடன் இருக்கலாம்.
உதாரணமாக, அயர்லாந்திலுள்ள ஒரு சபைக்கு ராஜ்ய மன்றம் அவசரமாகத் தேவைப்பட்டது, ஆனால் அதைக் கட்டுவதற்கு உள்ளூர் திட்ட அலுவலருடைய ஒப்புதல் கிடைக்கவில்லை. சகோதரர்கள் கொடுத்திருந்த எல்லா வரைபடங்களுக்கும் அந்த அலுவலர் ஆட்சேபணை தெரிவித்தார். அவற்றிற்கு ஒப்புதல் வாங்க அந்நாட்டின் முதன்மை திட்ட அலுவலரிடம்தான் செல்ல வேண்டும் என்று தெரிய வந்தது. பினெகாஸ் நாளில் ஜெபத்திற்குப் பலன் கிடைத்ததுபோல் இந்தச் சகோதரர்களுடைய ஜெபத்திற்குப் பலன் கிடைத்ததா?
உள்ளூர் மூப்பர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “இதற்காகப் பல தடவை உருக்கமாய் ஜெபம் செய்த பிறகு, முதன்மை திட்ட அலுவலகத்திற்குச் சென்றோம். முதன்மை திட்ட அலுவலரைச் சந்திக்கப் பல வாரங்கள் ஆகலாமென என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால், அவரை ஐந்து நிமிடம் மட்டுமே சந்திப்பதற்கு ஒருவழியாக அனுமதி கிடைத்தது. திருத்தியமைக்கப்பட்ட வரைபடங்களைப் பார்த்தவுடனே எங்களுக்கு அவர் அனுமதி அளித்தார்; அன்றிலிருந்து உள்ளூர் திட்ட அலுவலரும்கூட எங்களுக்காக வலியவந்து உதவிகள் செய்தார். ஜெபத்திற்கு எந்தளவு வல்லமை இருக்கிறது என்பதை அந்த அனுபவத்திலிருந்து நாங்கள் புரிந்துகொண்டோம்.” ஆம், யெகோவாவைச் சார்ந்திருந்து அவரிடம் உள்ளப்பூர்வமாய் ஜெபம் செய்கிற மூப்பர்களுக்கு அவர் பதிலளிப்பார்.
பினெகாஸுக்குப் பூர்வ இஸ்ரவேலில் மிகப் பெரிய பொறுப்புகள் இருந்தன; என்றாலும், தைரியத்துடன்... விவேகத்துடன்... யெகோவாமீது நம்பிக்கையுடன்... செயல்பட்டதால் சவால்களை அவரால் வெற்றிகரமாய்ச் சந்திக்க முடிந்தது. கடவுளுடைய சபையை பினெகாஸ் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்ததால் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றார். சுமார் 1,000 ஆண்டுகளுக்குப்பின், கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எஸ்றா இவ்வாறு எழுதினார்: “எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் அவர்கள்மீது தலைவராய் இருந்தார்; யெகோவா அவரோடு இருந்தார்.” (1 நா. 9:20, NW) இன்றைக்குக் கடவுளுடைய மக்களை வழிநடத்துகிற அனைவரோடும், சொல்லப்போனால் உண்மையோடு அவருக்குச் சேவை செய்கிற கிறிஸ்தவர்கள் அனைவரோடும் யெகோவா இருப்பாராக.