யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறீர்களா?
“நாம் அனைவரும் . . . யெகோவாவின் மகிமையைக் கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறோம்.” —2 கொ. 3:18.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
நாம் பாவிகளாயிருந்தாலும் கடவுளை எப்படி மகிமைப்படுத்த முடியும்?
கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்க ஜெபம் செய்வதும் சபைக் கூட்டங்களுக்குச் செல்வதும் ஏன் அவசியம்?
எப்போதும் யெகோவாவை மகிமைப்படுத்த நமக்கு எது உதவும்?
1, 2. யெகோவாவின் குணங்களை ஏன் நம்மாலும் வெளிக்காட்ட முடியும்?
நாம் எல்லாருமே ஏதாவதொரு விதத்தில் நம் பெற்றோரைப் போல இருக்கிறோம். அதனால்தான் ஒரு சிறுவனிடம், ‘நீ உன் அப்பா மாதிரியே இருக்க’ என்றோ... ஒரு சிறுமியிடம், ‘உன்னப் பாக்கும்போது உன் அம்மா ஞாபகம்தான் வருது’ என்றோ ஜனங்கள் சொல்வதைக் கேட்கிறோம். பொதுவாகப் பிள்ளைகள், பெற்றோர் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்து அப்படியே பின்பற்றுகிறார்கள். அப்படியானால் நாமும் நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவைப் பின்பற்ற முடியுமா? அவரை நாம் பார்த்திராவிட்டாலும், அவருடைய அருமையான குணங்களைப் பற்றி நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அவருடைய வார்த்தையைப் படிப்பது... படைப்புகளைக் கவனிப்பது... வேதவசனங்களைத் தியானிப்பது, முக்கியமாக, அவருடைய மகன் இயேசு கிறிஸ்து சொன்னவற்றை, செய்தவற்றைத் தியானிப்பது... அதற்கு உதவும். (யோவா. 1:18; ரோ. 1:20) ஆம், நம்மாலும் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்க முடியும்.
2 ஆதாமையும் ஏவாளையும் படைப்பதற்கு முன்பே மனிதர்கள் தம் சித்தத்தைச் செய்வார்கள், தம் குணங்களைப் பிரதிபலிப்பார்கள், தமக்கு மகிமை சேர்ப்பார்கள் என்று கடவுள் நம்பினார். (ஆதியாகமம் 1:26, 27-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவர்களாகிய நாம், நம் படைப்பாளரின் குணங்களை வெளிக்காட்ட வேண்டும். அப்படி வெளிக்காட்டினால் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெறுவோம். நம்முடைய கலாச்சாரம், கல்வித்தகுதி, வாழ்க்கைப் பின்னணி எதுவாக இருந்தாலும் சரி, அந்தப் பாக்கியத்தைப் பெறுவோம். ஏனென்றால், “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப். 10:34, 35.
3. யெகோவாவுக்குச் சேவை செய்கையில் கிறிஸ்தவர்கள் எப்படி உணருகிறார்கள்?
3 பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறார்கள். அதனால்தான், அவர்களில் ஒருவரான அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் அனைவரும் முகத்திரை இல்லாமல் யெகோவாவின் மகிமையைக் கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறோம்; இவ்வாறு . . . மகிமைக்கு மேல் மகிமை அடைந்து அவர் சாயலாக மாற்றப்படுகிறோம்.” (2 கொ. 3:18) மோசே தீர்க்கதரிசி பத்துக் கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளோடு சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்தபோது அவர் முகம் பிரகாசித்தது. அதற்குக் காரணம் யெகோவா அவரோடு பேசியிருந்ததுதான். (யாத். 34:29, 30) கிறிஸ்தவர்களுக்கு அப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததும் இல்லை, அவர்கள் முகம் பிரகாசித்ததும் இல்லை. ஆனால், யெகோவாவையும், அவருடைய குணங்களையும், மனிதகுலத்திற்கான அவருடைய அருமையான நோக்கத்தையும் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், அந்தச் சந்தோஷமே அவர்கள் முகத்தில் பிரகாசிக்கிறது. இப்படியாக, பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்களும் தங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறார்கள்—பூர்வகால உலோகக் கண்ணாடிகளைப்போல. (2 கொ. 4:1) அப்படியானால், யெகோவாவுக்குப் பிரியமான விதத்தில் வாழ்வதன் மூலமும் அவரது அரசாங்கத்தைப் பற்றித் தொடர்ந்து அறிவிப்பதன் மூலமும் அவருடைய மகிமையை நீங்கள் பிரதிபலிக்கிறீர்களா?
யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்க விரும்புகிறோம்
4, 5. (அ) பவுலுக்கு இருந்த என்ன பிரச்சினை நமக்கும் இருக்கிறது? (ஆ) பாவம் நம்மை எப்படிப் பாதித்திருக்கிறது?
4 யெகோவாவின் ஊழியர்களாக இருப்பதால் நாம் என்ன செய்தாலும் அது யெகோவாவிற்குப் புகழையும் மகிமையையும் கொண்டுவர வேண்டுமென ஆசைப்படுகிறோம். ஆனால், எல்லாச் சமயங்களிலும் நாம் நினைப்பதுபோல் செய்ய முடிவதில்லை. பவுலுக்கும்கூட இதே பிரச்சினை இருந்தது. (ரோமர் 7:21-25-ஐ வாசியுங்கள்.) நம் எல்லாருக்கும் ஏன் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்பதை பவுல் விவரித்தார். “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்று சொன்னார். (ரோ. 3:23) ஆம், ஆதாமிலிருந்து வழிவழியாக வந்த “பாவம்” ஒரு ‘ராஜாவை’ போல் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது.—ரோ. 5:12; 6:12.
5 பாவம் என்பது என்ன? யெகோவாவின் குணங்களுக்கு, விருப்பங்களுக்கு, நெறிமுறைகளுக்கு, சித்தத்திற்கு நேர்மாறாக இருக்கும் எல்லாமே பாவம்தான். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே நிலவும் நல்லுறவைப் பாவம் கெடுத்துப் போடுகிறது. குறிபார்த்து அம்பு எய்யும் ஒரு வில்வீரன் தன் இலக்கை எட்ட முடியாதபடி ஏதோவொன்று அவனைத் தடுப்பதைப் போல கடவுளுடைய மகிமையைப் பிரகாசிக்க முடியாதபடி பாவம் நம்மைத் தடுக்கிறது. சிலசமயங்களில் நாம் வேண்டுமென்றே பாவம் செய்துவிடலாம். சிலசமயங்களில் தெரியாமல் செய்துவிடலாம். (எண். 15:27-31) மனிதன் பாவத்தில் ஊறிப்போயிருப்பதால் அவனுக்கும் கடவுளுக்கும் இடையே அது மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. (சங். 51:5; ஏசா. 59:2; கொலோ. 1:21) எனவேதான், இன்று உலகில் பெரும்பாலோர் யெகோவாவை விட்டு முற்றிலும் விலகியிருக்கிறார்கள். அதனால், கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கும் பொன்னான பாக்கியத்தை இழந்திருக்கிறார்கள். பாவம் என்பது மனிதனை அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
6. நாம் பாவிகளாய் இருந்தாலும் கடவுளுடைய மகிமையை எப்படிப் பிரதிபலிக்கலாம்?
6 நாம் பாவத்திலேயே பிறந்து... பாவத்திலேயே வளர்ந்திருந்தாலும்... யெகோவா நமக்கு நம்பிக்கை அளிக்கிறார். (ரோ. 15:13) நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசு கிறிஸ்துவை மீட்புவிலையாக அளித்திருக்கிறார். அந்த மீட்புவிலையில் விசுவாசம் வைத்திருப்பதால் நாம் இனிமேலும், ‘பாவத்திற்கு அடிமைகள்’ அல்ல, மாறாக யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறவர்கள். (ரோ. 5:19; 6:6; யோவா. 3:16) யெகோவாவின் மகிமையை நாம் தொடர்ந்து பிரதிபலித்து வந்தால், இப்போது... அவருடைய ஆசீர்வாதத்தை நிச்சயம் பெறுவோம். எதிர்காலத்தில்... பரிபூரணத்தையும் முடிவில்லா வாழ்வையும் பெறுவோம். நாம் பாவிகளாய் இருந்தாலும் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்க அவர் நம்மைத் தகுதி உள்ளவர்களாய் கருதுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்க நமக்கு எது உதவும்?
7. கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்க வேண்டுமானால் நாம் எதை உணர வேண்டும்?
7 கடவுளுடைய மகிமையை நாம் பிரதிபலிக்க வேண்டுமென்றால், நம் குறைபாடுகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். (2 நா. 6:36) அந்தக் குறைபாடுகளை நாம் உணர்ந்து அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் நம்மால் கடவுளை மகிமைப்படுத்த முடியும். உதாரணத்திற்கு, ஆபாசத்தைப் பார்க்கும் பாவத்தைச் செய்கிறோமென்றால் நமக்கு ஆன்மீக உதவி தேவை என்பதை உணர்ந்து அதைப் பெற்றுக்கொள்ள மூப்பர்களை அணுக வேண்டும். (யாக். 5:14, 15) யெகோவாவை மகிமைப்படுத்த நாம் உண்மையிலேயே விரும்பினால் இதுதான் நாம் எடுக்க வேண்டிய முதற்படி. நாம் யெகோவாவின் ஊழியர்களாக இருப்பதால் அவருடைய நீதியான நெறிமுறைகளுக்கு இசைய வாழ்கிறோமா என்று எப்போதும் சோதித்துப் பார்க்க வேண்டும். (நீதி. 28:18; 1 கொ. 10:12) நமக்கு எப்படிப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும் சரி, அவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் கடவுளுடைய மகிமையை நாம் பிரதிபலிக்க முடியும்.
8. நாம் பரிபூரணர்களாக இல்லாவிட்டாலும் என்ன செய்ய வேண்டும்?
8 பூமியில் வாழ்ந்தவர்களிலேயே இயேசு மட்டும்தான் மரணம்வரை கடவுளுக்குப் பிரியமாயிருந்து அவருடைய மகிமையைப் பிரதிபலித்தார். அவரைப்போல் நாம் பரிபூரணராக இல்லாவிட்டாலும் அவரை நாம் பின்பற்ற முடியும், அதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். (1 பே. 2:21) யெகோவாவை மகிமைப்படுத்தும் விஷயத்தில் நாம் செய்திருக்கும் முன்னேற்றங்களை மட்டுமல்ல, அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளையும் அவர் பார்க்கிறார், ஆசீர்வதிக்கிறார்.
9. யெகோவாவை இன்னும் சிறந்த விதத்தில் பிரதிபலிக்க பைபிள் நமக்கு எப்படி வழிகாட்டுகிறது?
9 யெகோவாவை இன்னும் சிறந்த விதத்தில் பிரதிபலிக்க பைபிள் நமக்கு வழிகாட்டுகிறது. எனவே, அதைக் கருத்தூன்றிப் படிப்பதும், ஆழ்ந்து தியானிப்பதும் அவசியம். (சங். 1:1-3) தினமும் பைபிள் படிப்பது சிறந்த கிறிஸ்தவர்களாவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய நமக்கு உதவும். (யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.) பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. அதோடு, மிக மோசமான பாவங்களைச் செய்யாமல் இருப்பதற்கும்... யெகோவாவுக்குப் பிரியமாய் வாழ்வதற்கும்... நமக்குள்ள தீர்மானத்தைப் பலப்படுத்துகின்றன.—சங். 119:11, 47, 48.
10. யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய ஜெபம் நமக்கு எப்படி உதவும்?
10 கடவுளின் மகிமையைப் பிரதிபலிப்பதற்கு நாம் ‘ஜெபத்தில் உறுதியாயிருக்கவும்’ வேண்டும். (ரோ. 12:12) யெகோவாவுக்குப் பிடித்தமான வகையில் அவருக்குச் சேவை செய்ய உதவி கேட்டு ஜெபம் செய்யலாம், அப்படிச் செய்யவும் வேண்டும். கடவுளுடைய சக்தியைத் தரும்படி... அதிக விசுவாசத்தைத் தரும்படி ... சோதனைகளைச் சமாளிக்க பலம் தரும்படி... கேட்டு நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்த’ உதவி கேட்டும் நாம் ஜெபம் செய்யலாம். (2 தீ. 2:15; மத். 6:13; லூக். 11:13; 17:5) ஒரு பிள்ளை தன் அப்பாவை எப்போதும் சார்ந்திருப்பதுபோல, நாமும் நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவை எப்போதும் சார்ந்திருக்க வேண்டும். யெகோவாவுக்காக இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்குப் பலம் தரும்படி நாம் கேட்டால் அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்வார். நாம் அவரைத் தொல்லைப்படுத்துவதாக ஒருபோதும் நினைக்கக் கூடாது! மாறாக, நம்முடைய ஜெபங்களில் அவரைத் துதிப்போமாக; அவருக்கு நன்றிசெலுத்துவோமாக; சோதனைகள் வரும்போது நம்மை வழிநடத்தும்படி அவரைக் கேட்போமாக. அவருடைய புனிதமான பெயருக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் அவருக்குச் சேவை செய்ய உதவும்படி கேட்போமாக.—சங். 86:12; யாக். 1:5-7.
11. நாம் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்க சபைக் கூட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன?
11 கடவுள் தம்முடைய அருமையான ஆடுகளைக் கவனிக்கும் பொறுப்பை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையிடம்’ ஒப்படைத்திருக்கிறார். (மத். 24:45-47; சங். 100:3) யெகோவாவின் மகிமையைச் சக விசுவாசிகள் இன்னும் நன்றாகப் பிரதிபலிக்க அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் அடிமை வகுப்பார் மிகவும் ஆவலாய் இருக்கிறார்கள். ஒரு டெய்லர் எப்படி நமக்குக் கச்சிதமாகப் பொருந்தும் விதத்தில் உடையை வடிவமைக்கிறாரோ அப்படியே, நம்முடைய கூட்டங்களும் நம்மைச் சிறந்த கிறிஸ்தவர்களாக வடிவமைக்கின்றன. (எபி. 10:24, 25) எனவே, நாம் சரியான நேரத்திற்குக் கூட்டங்களுக்குச் செல்ல முயற்சி செய்வோமாக. ஒருவேளை தாமதமாகச் செல்வது நம் பழக்கமாக இருந்தால் நம்மை ‘வடிவமைக்க’ வழங்கப்படும் ஆலோசனைகள் சிலவற்றைத் தவற விட்டுவிடுவோம்.
கடவுளைப் பின்பற்றுவோமாக
12. நாம் எப்படிக் கடவுளைப் பின்பற்றலாம்?
12 நாம் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்க வேண்டுமானால், ‘அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது’ மிக மிக முக்கியம். (எபே. 5:1) அதற்கு ஒரு வழி, எந்தவொரு விஷயத்திலும் யெகோவாவின் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகும். ஒருவேளை நம் இஷ்டத்திற்கு வாழ்ந்தால் அது அவருக்கு அவமதிப்பைக் கொண்டு வரும். நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உலகம் பிசாசாகிய சாத்தானின் கையில் இருப்பதால் யெகோவா வெறுப்பதை வெறுக்கவும், அவர் விரும்புவதை விரும்பவும் நாம் கடினமாய் முயற்சி செய்ய வேண்டும். (சங். 97:10; 1 யோ. 5:19) எல்லாக் காரியங்களையும் கடவுளுடைய மகிமைக்காகச் செய்வதே அவருக்குச் சேவை செய்வதற்கான ஒரே சரியான வழி என்பதை நாம் மனதார நம்ப வேண்டும்.—1 கொரிந்தியர் 10:31-ஐ வாசியுங்கள்.
13. பாவத்தை நாம் ஏன் வெறுக்க வேண்டும், அப்படி வெறுத்தால் நாம் என்ன செய்வோம்?
13 யெகோவா பாவத்தை வெறுக்கிறார். நாமும் வெறுக்க வேண்டும். எனவே, நாம் பாவத்தைவிட்டு தூர விலகி ஓட வேண்டுமே தவிர பாவத்தில் விழாமலேயே எந்தளவுக்கு அதன் பக்கத்தில் போக முடியும் என்று பார்க்கக் கூடாது. உதாரணத்திற்கு, விசுவாசத்துரோகம் எனும் வலையில் சிக்காமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நம்மால் கடவுளை மகிமைப்படுத்த முடியாது. (உபா. 13:6-9) எனவே, விசுவாசத்துரோகிகளுடன் அல்லது சகோதரன் என்று சொல்லிக் கொண்டு கடவுளை அவமதிப்பவர்களுடன் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இவர்கள் நம் குடும்ப அங்கத்தினர்களாக இருந்தாலும் சரி. (1 கொ. 5:11) யெகோவாவின் அமைப்பைப் பற்றிக் குறைசொல்பவர்களிடமும், விசுவாசத்துரோகிகளிடமும் விவாதம் செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இன்டர்நெட்டிலோ தங்கள் புத்தகங்களிலோ விசுவாசத்துரோகிகள் வெளியிடும் செய்திகளை நாம் வாசிக்கக் கூடாது. ஏனென்றால், யெகோவாவோடு நமக்குள்ள நல்லுறவை அவை பாதிக்கும்.—ஏசாயா 5:20-ஐயும் மத்தேயு 7:6-ஐயும் வாசியுங்கள்.
14. நம்முடைய பரலோகத் தகப்பனைப் பின்பற்ற மிகச் சிறந்த வழி எது, ஏன்?
14 நம்முடைய பரலோகத் தகப்பனைப் பின்பற்ற மிகச் சிறந்த வழி அன்பு காட்டுவதாகும். ஆம், அவரைப் போலவே நாம் அன்பு காட்ட வேண்டும். (1 யோ. 4:16-19) சொல்லப்போனால், நம்மை யெகோவாவின் ஊழியர்களாகவும், இயேசுவின் சீடர்களாகவும் அடையாளம் காட்டுவது அந்த அன்பே. (யோவா. 13:34, 35) குறைபாடு உள்ளவர்களாக நாம் இருப்பதால் அன்பு காட்டுவது சில சமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் எல்லாச் சமயங்களிலும் அன்பு காட்ட முயற்சி செய்ய வேண்டும். அன்பையும் மற்ற கிறிஸ்தவ குணங்களையும் வளர்த்துக்கொண்டால் பாவம் செய்வதையும் அன்பற்ற காரியங்களில் ஈடுபடுவதையும் தவிர்ப்போம்.—2 பே. 1:5-7.
15. அன்பு இருந்தால் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வோம்?
15 நமக்கு அன்பு இருந்தால் மற்றவர்களுக்கு நல்லது செய்ய விரும்புவோம். (ரோ. 13:8-10) உதாரணத்திற்கு, நம் வாழ்க்கைத் துணையை உயிருக்கு உயிராய் நேசித்தால் வாழ்நாளெல்லாம் அவருக்கு உண்மையாய் இருப்போம். அதேபோல்... மூப்பர்களை நேசித்து, அவர்கள் செய்யும் வேலையை மதித்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்போம், அவர்களுக்கு அடிபணிவோம். பிள்ளைகள் பெற்றோரை நேசித்தால் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள், மரியாதை கொடுப்பார்கள். அவர்களைப் பற்றி மோசமாகப் பேச மாட்டார்கள். சகமனிதர்களை நாம் நேசித்தால் அவர்களைக் கேவலமாகப் பார்க்க மாட்டோம், அவர்களிடம் மரியாதையில்லாமல் பேச மாட்டோம். (யாக். 3:9) கடவுளின் ஆடுகளை நேசிக்கும் மூப்பர்களும் அவர்களைக் கனிவாக நடத்துவார்கள்.—அப். 20:28, 29.
16. ஊழியத்தில் சந்திப்பவர்களிடமும் நாம் ஏன் அன்பு காட்ட வேண்டும்?
16 ஊழியத்தில் சந்திப்பவர்களிடமும் நாம் அன்பு காட்ட வேண்டும். யெகோவாமேல் நமக்கு அதிக அன்பு இருப்பதால், வீட்டுக்காரர்கள் வேண்டாமென்று சொன்னாலோ ஆர்வம் காட்டாவிட்டாலோ ஊழியம் செய்வதை நிறுத்திவிடமாட்டோம். அதற்குப் பதிலாக, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கிப்போம். அன்பு இருந்தால் ஊழியத்திற்காக நன்கு தயாரிப்போம். சிறந்த விதத்தில் ஊழியம் செய்ய முயற்சி செய்வோம். கடவுளையும் சக மனிதர்களையும் நாம் உண்மையாய் நேசித்தால் கடமைக்காக ஊழியம் செய்ய மாட்டோம். மாறாக, அதை மாபெரும் பாக்கியமாகக் கருதி சந்தோஷத்துடன் செய்வோம்.—மத். 10:7.
யெகோவாவை எப்போதும் மகிமைப்படுத்துங்கள்
17. நம் குறைபாடுகளை நாம் அறிந்திருப்பதால் என்ன செய்ய வேண்டும்?
17 பாவம் எந்தளவுக்குப் பாதிப்பு உண்டாக்குகிறது என்பது இன்று பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. ஆனால் நமக்குத் தெரியும். அதனால், பாவம் செய்யத் தூண்டும் எண்ணத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறோம். நம்முடைய குறைபாடுகளை நாம் அறிந்திருப்பதால் நம் மனசாட்சியைப் பயிற்றுவிக்க வேண்டும். அப்போதுதான் பாவம் செய்வதற்கான ஆசை நம் மனதில் தலைகாட்டும்போது உடனே நடவடிக்கை எடுக்க அது நம்மைத் தூண்டும். (ரோ. 7:22, 23) நாம் பலவீனம் உள்ளவர்கள்தான், குறைபாடு உள்ளவர்கள்தான். இருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியானதைச் செய்வதற்குக் கடவுள் நமக்குப் பலம் தருவார்.—2 கொ. 12:10.
18, 19. (அ) சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் எதிரான போராட்டத்தில் வெற்றி பெற நமக்கு எது உதவும்? (ஆ) எதைச் செய்ய நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
18 நாம் யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டுமென்றால் சாத்தானையும் அவனுடைய பேய்களையும்கூட எதிர்த்துப் போராட வேண்டும். கடவுள் தருகிற முழு கவசத்தையும் அணிந்துகொண்டால் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறலாம். (எபே. 6:11-13) யெகோவாவிற்கு மட்டுமே சேர வேண்டிய மகிமையைத் தட்டிப் பறிக்க சாத்தான் விடாமல் முயற்சி செய்கிறான். யெகோவாவோடு நமக்குள்ள பந்தத்தை முறிப்பதற்கும் தீவிரமாய் முயற்சி செய்கிறான். ஆனால், அபூரணர்களாக இருக்கும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் இன்று யெகோவாவிற்கு உண்மையோடிருந்து அவரை மகிமைப்படுத்துகிறார்கள். சாத்தானுக்கு இது எப்பேர்ப்பட்ட சாட்டையடி! எனவே, பரலோகத்தில் உள்ளவர்களைப் போல் நாமும் யெகோவாவை நாள்தோறும் துதிப்போமாக: “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன.”—வெளி. 4:11.
19 என்ன நடந்தாலும் சரி, எப்போதும் யெகோவாவை மகிமைப்படுத்த தீர்மானமாய் இருப்போமாக. பூமியிலுள்ள தம்முடைய லட்சக்கணக்கான ஊழியர்கள் அவரைப் பின்பற்றவும் மகிமைப்படுத்தவும் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். (நீதி. 27:11) ‘என் தேவனாகிய யெகோவாவே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்’ என்று தாவீதைப்போல் நாமும் சொல்வோமாக. (சங். 86:12) யெகோவாவின் மகிமையை முழுமையாய்ப் பிரதிபலிக்கும் நாள்... என்றென்றும் அவரைத் துதிக்கும் நாள்... சீக்கிரம் வரவேண்டுமென எவ்வளவு ஆசையாய் காத்திருக்கிறோம்! அந்த ஆசை நிறைவேறும்போது கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள். அப்படியானால், என்றென்றும் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கும் நாம் ஒவ்வொருவரும் இப்போது அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோமா?
[பக்கம் 27-ன் படங்கள்]
யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்க இதையெல்லாம் செய்கிறீர்களா?