மாநாடுகள் —யெகோவாவின் மக்களுக்குச் சந்தோஷமான தருணங்கள்
‘புருஷர்களையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் உங்கள் வாசல்களிலிருக்கும் அந்நியர்களையும் . . . ஒன்றுகூட்டுங்கள்.’ —உபா. 31:12.
1, 2. கடவுளுடைய மக்கள் ஒன்றுகூடி வருவது சம்பந்தமாக என்ன விஷயங்களைச் சிந்திக்கப் போகிறோம்?
சர்வதேச மாநாடுகளும் மாவட்ட மாநாடுகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன கால சரித்திரத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்திருக்கின்றன. அவை சந்தோஷமான தருணங்களாகவும் இருந்திருக்கின்றன. இதுவரை நம்மில் அநேகர் இதுபோன்ற மாநாடுகளை அனுபவித்திருக்கிறோம். சொல்லப்போனால், எண்ணற்ற மாநாடுகளைப் பல பத்தாண்டுகளாகவே அனுபவித்து வந்திருக்கிறோம்.
2 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும்கூட கடவுளுடைய மக்கள் ஒன்றுகூடி வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுகூடி வந்த சந்தர்ப்பங்கள் நவீன கால மாநாடுகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது சிந்தித்துப் பார்க்கலாம். கடவுளுடைய மக்கள் பூர்வகாலத்தில் ஒன்றுகூடி வந்ததற்கும் நவீன காலங்களில் ஒன்றுகூடி வருவதற்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றியும், அவற்றில் கலந்துகொள்வதால் வரும் நன்மைகளைப் பற்றியும் இப்போது அலசிப் பார்க்கலாம்.—சங். 44:1; ரோ. 15:4.
முத்திரை பதித்த மாநாடுகள்—அன்றும் இன்றும்
3. (அ) யெகோவாவின் மக்கள் முதன்முதலாக ஒன்றுகூடிய சமயம் ஏன் விசேஷமானது? (ஆ) இஸ்ரவேலர் ஒன்றுகூடி வருவதற்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டது?
3 கடவுளுடைய மக்கள் முதன்முதலாக சீனாய் மலை அடிவாரத்தில்தான் பெரிய கூட்டமாகக் கூடிவந்தார்கள். அவர்களுக்கு ஆன்மீக அறிவுரை அளிக்கவே யெகோவா அவர்களை ஒன்றுகூடி வரச் செய்திருந்தார். உண்மை வணக்கத்தின் சரித்திரத்திலேயே அது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் இஸ்ரவேலருக்கு யெகோவா திருச்சட்டத்தைக் கொடுத்தார். அப்போது அவருடைய வல்லமையைப் பார்த்து இஸ்ரவேலர் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் யாருமே அந்த நாளை மறந்திருக்க மாட்டார்கள். (யாத். 19:2-9, 16-19; யாத்திராகமம் 20:18-ஐயும் உபாகமம் 4:9, 10-ஐயும் வாசியுங்கள்.) அந்தச் சமயத்தில்தான் கடவுள் அவர்களுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து அவர்களைத் தமது விசேஷ ஜனமாக்கிக்கொண்டார். அதற்குப் பிறகு, தேவைப்படும்போதெல்லாம் அவர்களை ஒன்றுகூட்டுவதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்தார். இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்யும்படி மோசேயிடம் சொன்னார். எக்காளச் சத்தம் கேட்கும்போதெல்லாம் “சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடார வாசலில்” ஒன்றுகூட வேண்டும் என்றார். (எண். 10:1-4) அப்படிப்பட்ட தருணங்களில் இஸ்ரவேலர் மத்தியில் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!
4, 5. மோசேயும் யோசுவாவும் இஸ்ரவேலரை ஒன்றுகூடி வரச் செய்த சந்தர்ப்பங்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?
4 இஸ்ரவேலரின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான காலகட்டம் அது. ஆம், 40 வருட வனாந்தர வாழ்க்கை முடிவடையவிருந்த சமயம் அது. அவர்கள் எல்லாரும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையவிருந்த சமயம் அது. அப்போது அவர்கள் அனைவரையும் மோசே ஒன்றுகூட்டினார். அவர்களுக்காக யெகோவா செய்துவந்த எல்லாக் காரியங்களையும், செய்யப்போகும் காரியங்களையும் அவர்களுக்கு நினைவுபடுத்த மோசேக்கு இதுவே பொருத்தமான சமயம்.—உபா. 29:1-15; 30:15-20; 31:30.
5 அந்தச் சமயத்தில், மோசே அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி வருவதற்கும்... ஆன்மீக அறிவுரைகளைப் பெறுவதற்கும்... யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். ஏழு வருடங்களுக்கு ஒரு முறை அனுசரிக்கப்பட்ட கூடாரப் பண்டிகையின்போது ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் இஸ்ரவேலர் மத்தியில் குடியிருந்த அந்நியர்களும் யெகோவா தேர்ந்தெடுத்த இடத்தில் ஒன்றுகூடி வரவேண்டுமென்று கட்டளையிடப்பட்டார்கள். எதற்காக? கற்பிக்கப்படும் விஷயங்களை ‘கேட்டு, கற்றுக்கொண்டு, யெகோவாவுக்குப் பயந்து, நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருப்பதற்காக.’ (உபாகமம் 31:1, 10-12-ஐ வாசியுங்கள்.) எனவே, ஒரு விஷயம் மட்டும் இஸ்ரவேலருடைய சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. ஆம், யெகோவாவின் மக்கள் அவருடைய கட்டளைகளையும் நோக்கங்களையும் பற்றி அறிந்துகொள்ள அடிக்கடி ஒன்றுகூடி வர வேண்டியிருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் முழுமையாய்க் கைப்பற்றியபோதிலும், அவர்களைச் சுற்றி புறதேசத்தார் குடியிருந்ததால் யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையுடன் இருக்கும்படி உற்சாகப்படுத்துவதற்காக யோசுவா அவர்களை ஒன்றுகூட்டினார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரும், ‘கடவுளைவிட்டு ஒருபோதும் விலக மாட்டோம்’ என்று வாக்குறுதி அளித்தார்கள்.—யோசு. 23:1, 2; 24:1, 15, 21-24.
6, 7. எந்த மாநாடுகள் யெகோவாவின் மக்களுடைய நவீன கால சரித்திரத்தில் முத்திரை பதித்துள்ளன?
6 யெகோவாவின் மக்களுடைய நவீன கால சரித்திரத்திலும் சில மாநாடுகள் முத்திரை பதித்துள்ளன. அந்த மாநாடுகளில் அமைப்பு சார்ந்த முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பைபிள் வசனங்களுக்குப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. (நீதி. 4:18) முதல் உலகப் போர் முடிந்தபின், 1919-ல் அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ, சீடர் பாயிண்டில், முதன்முறையாக பைபிள் மாணாக்கர்களின் மிகப் பெரிய மாநாடு நடைபெற்றது. சுமார் 7,000 பேர் அதில் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டில்தான் உலகளாவிய பிரசங்க வேலை அறிமுகப்படுத்தப்பட்டது. 1922-ல் அதே இடத்தில் ஒன்பது நாள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு, ஊழியத்தில் உடனடியாக களமிறங்கும்படி கூடிவந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: “எஜமானருக்கு உண்மையான சாட்சிகளாக இருங்கள். பாபிலோன் தரைமட்டம் ஆகும்வரை உங்கள் ஊழியத்தை நிறுத்தாதீர்கள். எட்டுத் திக்கிலும் நற்செய்தியை அறிவியுங்கள். யெகோவாவே கடவுள் என்பதையும், இயேசு கிறிஸ்துவே ராஜாக்களுக்கெல்லாம் ராஜா... எஜமான்களுக்கெல்லாம் எஜமான்... என்பதையும், இந்த உலகத்திலுள்ள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதுவே நமக்குப் பொன்னான நாள். இதோ, ராஜா ஆட்சி செய்கிறார்! நீங்களே அவரது பிரதிநிதிகள். ஆகவே, ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” அதன் விளைவாக, அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள கடவுளுடைய மக்கள் உற்சாகம் பெற்று ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
7 1931-ல் ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில் நடந்த மாநாட்டில் பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். ‘சிம்மாசனத்திற்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக நிற்பதாக’ வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள “திரள்கூட்டமான மக்கள்” யார் என்று சகோதரர் ரதர்ஃபர்டு 1935-ல் வாஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்ற மாநாட்டின்போது விளக்கினார். (வெளி. 7:9-17) 1942-ல் இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, “சமாதானம்—அது நிலைக்குமா?” என்ற தலைப்பில் நேதன் எச். நார் உற்சாகமூட்டும் ஒரு பேச்சைக் கொடுத்தார். அந்தப் பேச்சில் வெளிப்படுத்துதல் 17-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட “கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம்” எதைக் குறிக்கிறது என்று விளக்கினார். அதோடு, போருக்குப் பிறகு ஊழியத்தில் இன்னும் தீவிரமாய் ஈடுபட வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.
8, 9. குறிப்பிட்ட சில மாநாடுகள் மட்டும் ஏன் கடவுளுடைய மக்களை நெகிழ வைத்திருக்கின்றன?
8 1946-ல் ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்ட் நகரத்தில் “மகிழ்ச்சியுள்ள ஜனங்கள்” என்ற மாநாட்டில் “சீரமைப்புப் பணியிலும் விஸ்தரிப்பு வேலையிலும் உள்ள பிரச்சினைகள்” என்ற தலைப்பில் சகோதரர் நார் கொடுத்த பேச்சு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருடைய பேச்சைக் கேட்டவர்களின் பிரதிபலிப்பைப் பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “அன்று மாலை அவர் [சகோதரர் நார்] அந்தப் பேச்சைக் கொடுத்தபோது நானும் மேடையில் இருந்தேன். சீரமைப்புத் திட்டங்களையும் புருக்லின் பெத்தேல் இல்லம் மற்றும் அச்சகத்தை விரிவாக்கும் திட்டங்களையும்... குறித்து அவர் சொன்னபோது கூடியிருந்தவர்கள் மீண்டும் மீண்டும் எழுப்பிய கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது. மேடையிலிருந்து அவர்களுடைய முகங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டாலும் அவர்களிடம் பொங்கியெழுந்த சந்தோஷத்தை உணர முடிந்தது.” 1950-ல் நியு யார்க் சிட்டியில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பை (ஆங்கிலம்) பெற்றபோது சகோதர சகோதரிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். தற்கால ஆங்கிலத்தில் முதன்முதலாக வெளியிடப்பட்ட இந்த பைபிளில், கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் இடம்பெற்றிருந்தது.—எரே. 16:21.
9 யெகோவாவின் சாட்சிகள் பயங்கரமான துன்புறுத்தலை அல்லது தடையுத்தரவைச் சந்தித்த சில நாடுகளிலும்கூட மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ‘ஜெர்மனியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளைப் பூண்டோடு அழிப்பேன்’ என்று அடால்ஃப் ஹிட்லர் சூளுரைத்தார். ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் அணிவகுத்துச் சென்ற அதே நூரெம்பர்க் மைதானத்தில் 1955-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு நடைபெற்றபோது 1,07,000 பேர் கூடிவந்திருந்தார்கள். அநேகருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது! 1989-ல் போலந்து நாட்டில் “தேவ பக்தி” என்ற மாநாடு மூன்று இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 1,66,518 பேர் அந்த மாநாடுகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்தும் முன்னாள் செக்கோஸ்லோவாகியாவிலிருந்தும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். 15 அல்லது 20 சாட்சிகள் அடங்கிய கூட்டத்தை மட்டுமே பார்த்துப் பழகிய சிலர் முதல்முறையாக இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்தார்கள். 1993-ல் “தெய்வீக போதனை” என்ற சர்வதேச மாநாடு, உக்ரேனில் உள்ள கீவ் நகரத்தில் நடைபெற்றது. அதில் 7,402 பேர் ஞானஸ்நானம் பெற்றதைப் பார்த்து வந்திருந்தவர்கள் சந்தோஷத்தில் திளைத்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில், இவ்வளவு பேர் ஞானஸ்நானம் பெற்றது இந்த மாநாட்டில்தான்!—ஏசா. 60:22; ஆகா. 2:7.
10. நீங்கள் மறக்க முடியாத மாநாடுகள் எவை, ஏன்?
10 சில மாவட்ட மாநாடுகள் அல்லது சர்வதேச மாநாடுகள் உங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கலாம். நீங்கள் கலந்துகொண்ட முதல் மாநாடு அல்லது நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த மாநாடு உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த மாநாடுகள் உங்கள் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான மாநாடுகளாக இருந்திருக்கும். எனவே, இந்த இனிய நினைவுகளை உங்கள் நினைவுப் பெட்டகத்தில் பத்திரமாய்ப் பாதுகாத்திடுங்கள்.—சங். 42:4.
சந்தோஷத்தில் திளைக்க வைத்த வருடாந்தர நிகழ்ச்சிகள்
11. இஸ்ரவேலர் எந்தெந்த பண்டிகைகளைக் கொண்டாட வேண்டுமென யெகோவா கட்டளையிட்டிருந்தார்?
11 வருடாவருடம் இஸ்ரவேலர் அனைவரும் மூன்று பண்டிகைகளைக் கொண்டாட எருசலேமுக்கு வரவேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டிருந்தார். அவை: புளிப்பில்லாத அப்பப்பண்டிகை, வாரங்களின் பண்டிகை (பிற்பாடு பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்பட்டது), கூடாரப்பண்டிகை. இந்தப் பண்டிகைகள் சம்பந்தமாக யெகோவா இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: ‘வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் யெகோவாவாகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.’ (உபா. 16:16; யாத். 23:14-17) யெகோவாவின் வணக்கத்தில் இந்தப் பண்டிகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்த அநேக குடும்பத் தலைவர்கள் இவற்றைக் கொண்டாட குடும்பமாக எருசலேமுக்குச் சென்றார்கள்.—1 சா. 1:1-7; லூக். 2:41, 42.
12, 13. வருடாந்தரப் பண்டிகைகளில் கலந்துகொள்ள அநேக இஸ்ரவேலர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது?
12 எருசலேமுக்குச் செல்ல ஓர் இஸ்ரவேலக் குடும்பம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, யோசேப்பும் மரியாளும் நாசரேத்திலிருந்து எருசலேம் செல்வதற்கு மட்டுமே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. சிறுபிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அவ்வளவு தூரம் நடந்தே செல்ல வேண்டுமென்றால் நிறைய நாட்கள் ஆகியிருக்கும், இல்லையா? இயேசு சிறு பையனாக இருந்தபோது அவருடைய குடும்பம் எருசலேமுக்குச் சென்றதைப் பற்றிய பதிவை வாசித்துப் பார்த்தால்... பண்டிகை சமயங்களில் உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்தே பயணித்திருப்பார்கள் எனத் தெரிகிறது. இப்படி ஒன்றாகச் சேர்ந்து பயணம் செய்தது... உணவு தயாரித்தது... பழக்கமில்லாத இடங்களில் இரவு தூங்கியது... அவர்களுக்குப் புதுவித அனுபவமாக இருந்திருக்கும். என்றாலும், 12 வயது இயேசுவுக்கு அவருடைய பெற்றோர் ஓரளவு சுதந்திரம் கொடுத்திருந்ததைப் பார்க்கும்போது அது ஒரு பாதுகாப்பான பயணமாகவே இருந்திருக்கும் என்று தெரிகிறது. அப்படிப்பட்ட பண்டிகைகளின்போது, முக்கியமாகச் சிறுபிள்ளைகள், எந்தளவு குதூகலப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். வாழ்நாளெல்லாம் அவற்றை நினைத்து நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.—லூக். 2:44-46.
13 இஸ்ரவேலர் மற்ற தேசங்களிலும் வசித்துவந்ததால் பண்டிகை சமயங்களில் அவர்கள் எல்லாரும் எருசலேமுக்கு வரவேண்டியிருந்தது. கி.பி. 33-ல், பெந்தெகொஸ்தே நாளன்று யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இத்தாலியா, லீபியா, கிரேத்தா, ஆசியா மைனர், மெசொப்பொத்தாமியா போன்ற இடங்களிலிருந்து யூதர்களும், யூத மதத்திற்கு மாறியவர்களும் எருசலேமுக்கு வந்தார்கள்.—அப். 2:5-11; 20:16.
14. வருடாந்தரப் பண்டிகைகளில் கலந்துகொண்டதால் இஸ்ரவேலர் எப்படி உணர்ந்தார்கள்?
14 ஆயிரக்கணக்கான சக இஸ்ரவேலரோடு சேர்ந்து உற்சாகமாய் யெகோவாவை வணங்குவதே அவர்கள் மேற்கொண்ட பயணங்களின் முக்கிய நோக்கமாக, சிறப்பம்சமாக இருந்தது. இந்தப் பண்டிகைகளில் கலந்துகொண்டபோது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? யெகோவா தம்முடைய மக்களிடம் கூடாரப்பண்டிகை பற்றிக் குறிப்பிட்டபோது இவ்வாறு சொன்னார்: ‘உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியினால், யெகோவா தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.’—உபா. 16:14, 15; மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள்.
நவீன கால மாநாடுகள் ஏன் முக்கியமானவை?
15, 16. மாநாடுகளில் கலந்துகொள்ள நீங்கள் என்ன தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள், மாநாடுகளில் கிடைக்கும் பலன்களுக்கு ஏன் ஈடிணையே இல்லை?
15 அன்று இஸ்ரவேலர் கொண்டாடிய பண்டிகைகள் இன்று கடவுளுடைய மக்களுக்கு எப்பேர்ப்பட்ட முன்னுதாரணங்கள்! அன்றைய பண்டிகைகளுக்கும் இன்றைய மாநாடுகளுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருந்தாலும், சில முக்கிய அம்சங்கள் இன்றுவரை மாறவில்லை. பூர்வ காலத்தில், பண்டிகைகளில் கலந்துகொள்வதற்காக இஸ்ரவேலர் எப்படித் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்ததோ அப்படியே இன்றும் நம்மில் அநேகர் மாநாடுகளில் கலந்துகொள்ள தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்றாலும், மாநாடுகளில் கலந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளுக்கு ஈடிணையே இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி, மாநாடுகள் ஆன்மீக விருந்து படைக்கின்றன. அவற்றில் நாம் பெற்றுக்கொள்ளும் தகவல்களும் விளங்கிக்கொள்ளும் விஷயங்களும் யெகோவாவிடம் நெருங்கிய பந்தத்தைக் காத்துக்கொள்ள உதவுகின்றன. கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கடைப்பிடிக்க... பிரச்சினைகளைத் தவிர்க்க... சோர்ந்துவிடாமல் சுறுசுறுப்பாய் இருக்க... புத்துணர்ச்சி அளிக்கிற ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க... மாநாடுகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன.—சங். 122:1-4.
16 மாநாடுகளில் கலந்துகொள்பவர்கள் அடையும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 1946-ல் நடந்த ஒரு பெரிய மாநாட்டைப் பற்றி ஓர் அறிக்கை இவ்வாறு சொன்னது: “ஆயிரக்கணக்கான சாட்சிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்னணியில் இசை ஒலிக்க அவர்கள் எல்லாரும் ஏகக் குரலில் யெகோவாவைத் துதித்து ராஜ்யப் பாடல்களைப் பாடியபோது காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது.” அந்த அறிக்கை மேலும் சொன்னதாவது: “மாநாட்டிற்கு வந்திருந்த பலர் வாலண்டியர் இலாகாவில் தாங்களாகவே முன்வந்து பெயர் கொடுத்தார்கள். சகோதர சகோதரிகள் மீதுள்ள அன்பின் காரணமாக, எல்லா வேலையையும் சந்தோஷமாய்ச் செய்தார்கள்.” மாவட்ட மாநாடுகளில் அல்லது சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டபோது நீங்களும் இதேபோல் சந்தோஷமாக உணர்ந்திருக்கிறீர்களா?—சங். 110:3; ஏசா. 42:10-12.
17. சமீபகால மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்துவதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
17 மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்தும் விதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் எட்டு நாள் மாநாடுகள் நடந்தன. அப்போது காலை நிகழ்ச்சி, மதிய நிகழ்ச்சி, ஏன் மாலை நிகழ்ச்சிகூட நடைபெற்றன. அந்தச் சமயத்தில் எல்லா மாநாடுகளிலும் வெளி ஊழியத்திற்குச் செல்வது ஒரு முக்கிய அம்சமாய் இருந்தது. சில சமயங்களில் காலை ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகி இரவு ஒன்பது மணிவரைகூட நீடித்தது. மாநாட்டுக்கு வந்தவர்களுக்காக காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு தயாரிக்க வாலண்டியர்கள் நீண்ட நேரம் கடினமாய் வேலை செய்தார்கள். இப்போது மாநாடுகள் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. எல்லாருமே அவரவர் சாப்பாட்டை கொண்டுவந்துவிடுவதால், மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர்களால் அதிக கவனம் செலுத்த முடிகிறது.
18, 19. மாநாட்டின் எந்தெந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஏன்?
18 காலங்காலமாக மாநாடுகளில் இடம்பெறும் சில நிகழ்ச்சிகள் எப்போதும் நம் ஆர்வத்தை ஈர்க்கின்றன. இந்த மாநாடுகள் மூலம் “ஏற்ற வேளையில்” கிடைக்கும் ஆன்மீக உணவு பைபிள் தீர்க்கதரிசனங்களையும் போதனைகளையும் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. மாநாடுகளில் கொடுக்கப்படும் பேச்சுகளில் மட்டுமல்ல, அவற்றில் வெளியிடப்படும் புதிய பிரசுரங்கள் மூலமாகவும் ஆன்மீக உணவு கிடைக்கிறது. (மத். 24:45) இப்படிப்பட்ட புதிய பிரசுரங்கள் பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்ள ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியுள்ள மக்களுக்கு உதவுகின்றன. சிறியோர், பெரியோர் என எல்லாரும் தங்களுடைய உள்ளெண்ணங்களை ஆராய்ந்து பார்க்கவும், உலகச் சிந்தனைகளால் கறைபடாதபடி தங்களைக் காத்துக்கொள்ளவும் பைபிள் நாடகங்கள் உதவுகின்றன. அதேபோல், ஞானஸ்நானப் பேச்சு வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதை அலசி ஆராய வாய்ப்பளிக்கிறது; யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.
19 ஆம், ஆண்டாண்டு காலமாக உண்மை வணக்கத்தின் பாகமாக உள்ள இந்த மாநாடுகள் யெகோவாவின் மக்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கின்றன, சவாலான சந்தர்ப்பங்களில் அவருக்கு உண்மையாய் நிலைத்திருக்க உத்வேகம் அளிக்கின்றன, அதோடு அவருடைய சேவையில் இன்னும் அதிகமாய் ஈடுபட உற்சாகப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட மாநாடுகள் புதிய நண்பர்கள் கிடைக்கவும், உலகளாவிய சகோதர பந்தத்தில் திளைக்கவும் வாய்ப்பளிக்கின்றன. முக்கியமாக, இப்படிப்பட்ட மாநாடுகள் மூலமாகத்தான் யெகோவா தம் மக்களை ஆசீர்வதிக்கிறார், அரவணைக்கிறார். எனவே, எந்த நிகழ்ச்சியையும் தவறவிடாமல் எல்லா மாநாடுகளிலும் கலந்துகொண்டு பயனடைய நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோமாக.—நீதி. 10:22.