கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!
“அடக்கத்தோடு உன் கடவுளுடைய வழியில் நடக்க வேண்டும்.”—மீ. 6:8.
1-3. யூதாவிலிருந்து வந்த தீர்க்கதரிசி என்ன செய்ய தவறினார், அதனால் என்ன நடந்தது? (ஆரம்பப் படம்)
இஸ்ரவேல் ராஜாவான யெரொபெயாம் ஆட்சி செய்த காலம் அது! பொய் வணக்கத்துக்காக, பெத்தேல் என்ற நகரத்தில் அவன் ஒரு பலிபீடத்தை வைத்திருந்தான். அவனிடம் நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொல்வதற்காக யூதாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். மனத்தாழ்மையுள்ள அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நியாயத்தீர்ப்பு செய்தியை யெரொபெயாமிடம் சொன்னார். அப்போது, அவனுக்கு அந்தத் தீர்க்கதரிசிமீது பயங்கர கோபம் வந்தது. ஆனால், யெகோவா அவனிடமிருந்து அவரைப் பாதுகாத்தார்.—1 ரா. 13:1-10.
2 இஸ்ரவேலில் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்றும், வேறு வழியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் யெகோவா அந்தத் தீர்க்கதரிசிக்குக் கட்டளை கொடுத்திருந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தபோது, வயதான ஒருவரைச் சந்தித்தார். அந்த வயதானவர், யெகோவாவிடமிருந்து செய்தி வந்திருப்பதாக அந்தத் தீர்க்கதரிசியிடம் பொய் சொன்னார். சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அந்தத் தீர்க்கதரிசியை அழைத்தார். யெகோவாவுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அந்தத் தீர்க்கதரிசி வயதானவரோடு போனார். இது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, அந்தத் தீர்க்கதரிசி தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் வந்து அவரைக் கொன்றுபோட்டது.—1 ரா. 13:11-24.
3 அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக அந்த வயதானவருக்கு ஏன் கீழ்ப்படிந்தார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர் யெகோவாவுடன் தொடர்ந்து “அடக்கத்தோடு” நடக்கவில்லை என்பது மட்டும் நமக்குத் தெரியும். (மீகா 6:8-ஐ வாசியுங்கள்.) பைபிளின்படி, யெகோவாவோடு நடப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவாவை நம்பியிருப்பதையும், வழிநடத்துதலுக்காக அவரைச் சார்ந்திருப்பதையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும் அது அர்த்தப்படுத்துகிறது. தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும் என்பது அடக்கமானவருக்குத் தெரியும். அந்தத் தீர்க்கதரிசி அடக்கமானவராக இருந்திருந்தால், யெகோவா தன்னுடைய கட்டளையை மாற்றி விட்டாரா என்று அவரிடம் கேட்டிருப்பார். சில சமயங்களில், நாமும் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் அடக்கமானவர்களாக இருந்தால் நம்மை வழிநடத்தும்படி நிச்சயம் யெகோவாவிடம் கேட்போம். அப்படிக் கேட்கும்போது, மோசமான தவறுகள் செய்வதை நம்மால் தவிர்க்க முடியும்.
4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?
4 அடக்கமாக இருப்பது என்றால் என்ன என்றும், கிறிஸ்தவர்கள் அடக்கமாக இருப்பது ஏன் இன்று ரொம்ப முக்கியம் என்றும் போன கட்டுரையில் பார்த்தோம். ஆனால், நாம் எப்படி இன்னும் அடக்கமானவர்களாக இருக்கலாம்? அடக்கமானவர்களாக இருப்பதற்கு எப்படிப்பட்ட சூழ்நிலைகள் சவாலாக இருக்கலாம்? இப்போது மூன்று சூழ்நிலைகளைப் பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் எப்படி ஞானமாக நடந்துகொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.—நீதி. 11:2.
நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது...
5, 6. பர்சிலா எப்படி அடக்கமானவராக நடந்துகொண்டார்?
5 நம்முடைய சூழ்நிலைகளும் நியமிப்புகளும் மாறும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை வைத்து நாம் உண்மையிலேயே அடக்கமானவர்களா, இல்லையா என்று சொல்லிவிடலாம். தாவீது ராஜாவின் உண்மையான நண்பரான பர்சிலா என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். பர்சிலாவுக்கு 80 வயது இருந்தபோது, தன்னுடைய அரச மாளிகைக்கே வந்துவிடும்படி தாவீது அவரை அழைத்தார். அது ஒரு கௌரவமான அழைப்பாக இருந்தாலும் பர்சிலா அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தனக்கு வயதாகிவிட்டதால், ராஜாவுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும், தனக்குப் பதிலாக கிம்காம் என்பவரை அழைத்துக்கொண்டு போகும்படியும் அவர் தாவீதிடம் சொன்னார். கிம்காம், பர்சிலாவின் மகன்களில் ஒருவராக இருந்திருக்கலாம்.—2 சா. 19:31-37.
6 பர்சிலா அடக்கமானவராக இருந்ததால்தான் அப்படியொரு தீர்மானத்தை எடுத்தார். பொறுப்பைத் தட்டிக்கழிக்க வேண்டும் என்றோ, அமைதியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்றோ பர்சிலா அப்படிச் செய்யவில்லை. தன்னுடைய சூழ்நிலை மாறிவிட்டதையும் தனக்கு வரம்புகள் இருப்பதையும் அவர் புரிந்து நடந்துகொண்டார். (கலாத்தியர் 6:4, 5-ஐ வாசியுங்கள்.) பர்சிலாவைப் போல நாமும் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும். பதவிக்கும் பேர் புகழுக்கும் மட்டுமே ஆசைப்பட்டால், பொறாமையும் போட்டி மனப்பான்மையும் நமக்குள் வந்துவிடும். கடைசியில், அது ஏமாற்றத்தில்தான் போய் முடியும். (கலா. 5:26) ஆனால், நாம் அடக்கமானவர்களாக இருந்தால், சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒற்றுமையாக உழைப்போம். அப்போது, நம்மால் யெகோவாவை மகிமைப்படுத்த முடியும், மற்றவர்களுக்கும் உதவ முடியும்.—1 கொ. 10:31.
7, 8. நம்மீதே நம்பிக்கை வைக்காமல் இருக்க அடக்கமாக இருப்பது எப்படி உதவும்?
7 நிறைய பொறுப்புகள் வரும்போதும், கூடுதல் அதிகாரம் கிடைக்கும்போதும், தொடர்ந்து அடக்கமானவர்களாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இந்த விஷயத்தில் நெகேமியாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். எருசலேம் மக்கள் அனுபவித்த பிரச்சினைகள் நெகேமியாவுக்குத் தெரியவந்தபோது, அவர்களுக்கு உதவி செய்யும்படி அவர் யெகோவாவிடம் கெஞ்சினார். (நெ. 1:4, 11) அவருடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார். நெகேமியாவை அர்த்தசஷ்டா ராஜா அந்த இடத்துக்கு ஆளுநராக நியமித்தார். நெகேமியாவுக்கு அதிகாரமும் பணமும் இருந்தாலும், அவர் ஒருபோதும் தன்னை நம்பியிருக்கவில்லை. யெகோவா தன்னை வழிநடத்த வேண்டும் என்று விரும்பினார், தொடர்ந்து அவருடைய சட்டத்தை வாசித்தார். (நெ. 8:1, 8, 9) மக்கள்மீது நெகேமியாவுக்கு அதிகாரம் இருந்தாலும், தன்னுடைய சுயநலத்துக்காகவோ மற்றவர்களை அடக்கியாளவோ அதை ஒருபோதும் பயன்படுத்தவில்லை.—நெ. 5:14-19.
8 ஒருவேளை, நமக்கு நிறைய பொறுப்புகள் கிடைக்கலாம் அல்லது நம்முடைய நியமிப்புகள் மாறலாம். அப்படிப்பட்ட சமயங்களில், நாமும் நெகேமியாவைப் போல தொடர்ந்து அடக்கமானவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய திறமையையோ அனுபவத்தையோ நாம் நம்பியிருக்கக் கூடாது. ஒருவர் எப்படித் தன்னையே நம்ப ஆரம்பித்துவிடலாம்? உதாரணத்துக்கு, ஒரு மூப்பர், சபை விஷயங்களைச் செய்வதற்கு முன்பு ஜெபம் செய்ய தவறிவிடலாம். ஒரு சகோதரரோ சகோதரியோ, அவர்களாகவே ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டு, பிறகு அதை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் கேட்கலாம். ஆனால், அடக்கமாக இருக்கும் ஒருவர் தன்னையே நம்பியிருக்க மாட்டார். அதுவும், ஒரு விஷயத்தை ஏற்கெனவே பல தடவை செய்திருந்தால்கூட தன்னையே நம்பியிருக்க மாட்டார். யெகோவாவோடு ஒப்பிடும்போது தன்னுடைய திறமைகள் ஒன்றுமே இல்லை என்பதை அவர் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பார். (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) இன்று, நிறைய பேர் சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள். அதோடு, மற்றவர்களை முந்த வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் ஊழியர்கள் அப்படிக் கிடையாது. நமக்குப் பொறுப்புகள் இருப்பதால், நம்முடைய குடும்பத்தில் அல்லது சபையில் இருப்பவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, கடவுளுடைய ஏற்பாட்டில் நம் பங்கு என்ன என்பதை ஞாபகத்தில் வைத்திருப்போம், நம் சகோதர சகோதரிகளோடு ஒற்றுமையாக உழைப்போம்.—1 தீ. 3:15.
அநியாயமாக நடத்தப்படும்போது அல்லது புகழப்படும்போது...
9, 10. நாம் அநியாயமாக நடத்தப்படும்போது, சகித்திருப்பதற்கு அடக்கம் எப்படி உதவும்?
9 மற்றவர்கள் நம்மை அநியாயமாக நடத்தும்போது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அன்னாளும் அநியாயமாக நடத்தப்பட்டாள். அவளுடைய கணவனுக்கு அவள்மீது அன்பு இருந்தாலும், அவளால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஏனென்றால், அவளுடைய எதிரியான பெனின்னாள் எப்போது பார்த்தாலும் அவளை நோகடித்துக்கொண்டே இருந்தாள். தனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று அன்னாள் ஆசைப்பட்டும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் அன்னாள் ரொம்ப வருத்தமாக இருந்தபோது, ஜெபம் செய்வதற்காக வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போனாள். தலைமைக் குருவான ஏலி அவள் அழுவதைப் பார்த்துவிட்டு, அவள் குடிபோதையில் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அப்போது, அன்னாளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! ஆனால், அவள் ஏலியிடம் கோபப்படாமல், மரியாதையாகப் பேசினாள். பிறகு, யெகோவாவிடம் ஜெபம் செய்தாள். யெகோவாமீது அவளுக்கு விசுவாசமும் அன்பும் இருந்ததை அந்த ஜெபம் காட்டியது.—1 சா. 1:5-7, 12-16; 2:1-10.
10 நாம் அடக்கமானவர்களாக இருந்தால், ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்ல’ முடியும். (ரோ. 12:21) சாத்தானுடைய உலகத்தில் எங்கே பார்த்தாலும் தீமைதான் இருக்கிறது. அதனால், நம்மை யாராவது அநியாயமாக நடத்தினால் நாம் ஆச்சரியப்படக் கூடாது. நமக்குக் கோபம் வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த வேண்டும். (சங். 37:1) ஆனால், சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளோடு பிரச்சினைகள் வரும்போது, அது நமக்கு இன்னும் வேதனையாக இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில், நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். “அவர் அவமானப்படுத்தப்பட்டபோது பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை. மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம் தன்னையே ஒப்படைத்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 2:23) இயேசு மனத்தாழ்மையாக இருந்தார். என்ன அநியாயம் நடந்தாலும் யெகோவாவால் அதைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. (ரோ. 12:19) நாமும் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், “யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது” செய்யக் கூடாது.—1 பே. 3:8, 9.
11, 12. (அ) மற்றவர்கள் நம்மைப் புகழும்போது நாம் எப்படி அடக்கமானவர்களாக இருக்கலாம்? (ஆ) நாம் அடக்கமானவர்கள் என்பதை உடை உடுத்தும் விதத்திலும் நாம் நடந்துகொள்ளும் விதத்திலும் எப்படிக் காட்டலாம்?
11 யாராவது நம்மை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளும்போது, அடக்கமானவர்களாக இருப்பது நமக்குக் கஷ்டமாகிவிடலாம். எஸ்தருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவளுடைய வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அவள் தொடர்ந்து அடக்கமானவளாக இருந்தாள். பெர்சியாவில் இருந்த பெண்களிலேயே அவள்தான் ரொம்ப அழகு! ஒரு வருட காலத்துக்கு, மற்ற இளம் பெண்களோடு சேர்த்து இவளுடைய அழகும் மெருகூட்டப்பட்டது. ராஜா யாரிடம் ஈர்க்கப்படுவார் என்ற போட்டி இவர்களுக்குள் இருந்தது. பிறகு, எஸ்தரைத் தன்னுடைய மனைவியாக ராஜா தேர்ந்தெடுத்தார். இருந்தாலும் எஸ்தர் மாறிவிடவில்லை, சுயநலவாதியாகவும் ஆகிவிடவில்லை. தொடர்ந்து அடக்கத்தோடும், கனிவோடும், மரியாதையோடும் நடந்துகொண்டாள்.—எஸ்தர் 2:9, 12, 15, 17.
யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம் என்பதை நாம் உடுத்தும் விதம் காட்டுகிறதா? (பாரா 12)
12 நாம் அடக்கமானவர்களாக இருந்தால், நம்மீதும் மற்றவர்கள்மீதும் நமக்கு மதிப்பு இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்தில் நாம் உடுத்துவோம், நடந்துகொள்வோம். பெருமையடிப்பதற்குப் பதிலாக அல்லது மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்குப் பதிலாக நாம் ‘அமைதியாகவும் சாந்தமாகவும்’ நடந்துகொள்வோம். (1 பேதுரு 3:3, 4-ஐ வாசியுங்கள்; எரே. 9:23, 24) நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நம்முடைய பேச்சும் செயலும் காட்டிவிடும். உதாரணத்துக்கு, நமக்கு விசேஷ பொறுப்புகள் இருக்கிறது என்பதையும், மற்றவர்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் நமக்குத் தெரியும் என்பதையும், அல்லது பொறுப்பிலுள்ள சகோதரர்களோடு நமக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது என்பதையும் நாம் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களுக்குக் காட்டிவிடலாம். அல்லது, மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை நாமே செய்துவிட்டதாக மற்றவர்களை நினைக்க வைத்துவிடலாம். ஆனால், அதைச் செய்வதற்கு உண்மையிலேயே மற்றவர்களும் நமக்கு உதவி செய்திருப்பார்கள். இயேசுவைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தான் ஒரு ஞானி என்பதை அவர் மற்றவர்களுக்குக் காட்டியிருக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தையிலிருந்துதான் அவர் மேற்கோள்காட்டி பேசினார். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. எல்லா புகழும் யெகோவாவுக்கே போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.—யோவா. 8:28.
தீர்மானங்கள் எடுக்கும்போது...
13, 14. நாம் அடக்கமானவர்களாக இருந்தால், எப்படி நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும்?
13 தீர்மானங்கள் எடுக்கும்போதும், நாம் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுல் செசரியாவில் இருந்தபோது, யெகோவா கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்காக எருசலேமுக்குப் போக ஆசைப்பட்டார். ஆனால், அங்கே போனால், அவர் கைது செய்யப்படுவார் என்று தீர்க்கதரிசியான அகபு சொன்னார். அதோடு, அவர் கொல்லப்படுவதற்கும் வாய்ப்பு இருந்தது. அதனால், அங்கே போக வேண்டாமென்று சகோதரர்கள் பவுலைக் கெஞ்சினார்கள். இருந்தாலும், எருசலேமுக்குப் போக பவுல் தீர்மானித்தார். தன்னை நம்பி பவுல் அப்படியொரு தீர்மானத்தை எடுத்தாரா? இல்லை! பவுல் அடக்கமானவராக இருந்ததால், யெகோவாவையே முழுமையாக நம்பியிருந்தார். அதோடு, அந்தச் சகோதரர்களும் அடக்கமானவர்களாக நடந்துகொண்டார்கள். பவுல் எடுத்த தீர்மானத்தை ஆதரித்தார்கள், அவர் எருசலேமுக்குப் போவதை அவர்கள் தடுக்கவில்லை.—அப். 21:10-14.
14 நம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும், அவை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றாலும், நாம் அடக்கமானவர்களாக இருந்தால் நம்மால் நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும். உதாரணத்துக்கு, முழுநேர சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், நம்முடைய உடல்நிலை சரியில்லாமல் போனால், என்ன செய்வது... நம்முடைய பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, நம்முடைய உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டாலோ, என்ன செய்வது... நமக்கு வயதாகிவிட்டால், என்ன செய்வது... என்றெல்லாம் நாம் யோசிக்கலாம். இவற்றைப் பற்றியெல்லாம் நாம் ஜெபம் செய்தாலும் சரி, நன்றாக யோசித்துப் பார்த்தாலும் சரி, நமக்குப் பதில் கிடைக்காது. (பிர. 8:16, 17) ஆனால், நாம் யெகோவாவை நம்பியிருந்தால், நமக்கு வரம்புகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வோம், அதை ஏற்றுக்கொள்வோம். தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு ஆராய்ச்சி செய்வோம், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்போம், மிக முக்கியமாக, வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்வோம். பிறகு, கடவுளுடைய சக்தி நம்மை எப்படி வழிநடத்துகிறதோ அதன்படி செய்வோம். (பிரசங்கி 11:4-6-ஐ வாசியுங்கள்.) இப்படியெல்லாம் செய்யும்போது, யெகோவா நம்முடைய தீர்மானங்களை ஆசீர்வதிக்கலாம் அல்லது நம்முடைய திட்டத்தை மாற்றிக்கொள்ள உதவி செய்யலாம்.—நீதி. 16:3, 9.
இன்னும் அடக்கமானவர்களாக இருப்பது எப்படி?
15. யெகோவாவைப் பற்றி ஆழ்ந்து யோசித்துப் பார்ப்பது மனத்தாழ்மையாக இருக்க எப்படி உதவும்?
15 அடக்கமானவர்களாக இருப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதனால், நாம் எப்படி இன்னும் அடக்கமானவர்களாக இருக்கலாம்? அதற்கான நான்கு வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். முதலாவதாக, யெகோவாவைப் பற்றி ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். அதாவது, அவர் எப்படிப்பட்ட கடவுள் என்று நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். யெகோவாவோடு நம்மை ஒப்பிடும்போது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்றும், நமக்குத் தெரிந்தது எவ்வளவு கொஞ்சம் என்றும் நாம் புரிந்துகொள்வோம். (ஏசா. 8:13) நாம் மனிதருக்கோ தேவதூதருக்கோ அல்ல, யெகோவாவுக்கே சேவை செய்கிறோம்! இதை எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். இதைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, ‘கடவுளுடைய பலத்த கைக்குள் நம்மைத் தாழ்த்திக்கொள்வோம்.’—1 பே. 5:6.
16. கடவுளுடைய அன்பைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பது அடக்கமானவர்களாக இருப்பதற்கு நமக்கு எப்படி உதவும்?
16 இரண்டாவதாக, யெகோவா நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது, நம்மால் இன்னும் அடக்கமானவர்களாக இருக்க முடியும். சபையை உடல் உறுப்புகளுக்கு ஒப்பிட்டு பவுல் பேசினார். எல்லா உடல் உறுப்புகளையும் ரொம்ப மதிப்புள்ளவையாகத்தான் யெகோவா படைத்தார். (1 கொ. 12:23, 24) அதேபோல், நாம் எல்லாரும் யெகோவாவுக்கு அதிக மதிப்புள்ளவர்கள். மற்றவர்களோடு அவர் நம்மை ஒப்பிடுவது இல்லை. நாம் தவறுகள் செய்யும்போது, நம்மீது அன்பு காட்டுவதை நிறுத்திவிடுவதும் இல்லை. யெகோவா நம்மை நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துவைத்திருக்கும்போது, நாம் பாதுகாப்பாக உணர்வோம்.
17. மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை?
17 மூன்றாவதாக, யெகோவாவைப் போல நாமும் மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது நம்மால் இன்னும் அடக்கமானவர்களாக இருக்க முடியும். எல்லாரும் நமக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக அல்லது எப்போது பார்த்தாலும் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைக் கேட்பதோடு நிறுத்திவிடாமல், அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். (நீதி. 13:10) நம் சகோதர சகோதரிகளுக்கு விசேஷ நியமிப்புகள் கிடைக்கும்போது நாம் சந்தோஷப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருக்கிற எல்லா சகோதர சகோதரிகளையும் யெகோவா ஆசீர்வதித்திருப்பதைப் பார்க்கும்போது அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.—1 பே. 5:9.
18. இன்னும் அடக்கமானவர்களாக இருக்க நம்முடைய மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிக்கலாம்?
18 நான்காவதாக, நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிப்பதற்காக பைபிள் நியமங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்போது, நாம் இன்னும் அடக்கமானவர்களாக இருப்போம். யெகோவா எப்படி உணர்கிறார், எப்படி யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நியமங்கள் நமக்கு உதவும். எல்லா விஷயத்தையும் யெகோவா பார்ப்பது போல் பார்க்கும்போது, அவருக்குப் பிடித்த மாதிரி நம்மால் தீர்மானங்கள் எடுக்க முடியும். தவறாமல் பைபிள் படிக்கும்போதும், ஜெபம் செய்யும்போதும், படித்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றும்போதும் நம்முடைய மனசாட்சி இன்னும் நன்றாகப் பலப்படும். (1 தீ. 1:5) அதோடு, மற்றவர்களை முதலில் வைக்கவும் கற்றுக்கொள்வோம். இவற்றையெல்லாம் செய்யும்போது, நாம் இன்னும் அடக்கமானவர்களாக இருக்க உதவி செய்வதாகவும், நம்முடைய ‘பயிற்சியை முடிப்பதாகவும்’ யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.—1 பே. 5:10.
19. என்றென்றும் அடக்கமானவர்களாக இருக்க எது நமக்கு உதவும்?
19 இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் கவனித்த, யூதாவைச் சேர்ந்த அந்தத் தீர்க்கதரிசியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவர் அடக்கமானவராக இல்லாததால், தன்னுடைய உயிரையும் யெகோவாவோடு இருந்த நட்பையும் இழந்தார். அடக்கமானவர்களாக இருப்பது, சில சமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், நம்மால் தொடர்ந்து அடக்கமானவர்களாக இருக்க முடியும். நம்மால் அடக்கமாக இருக்க முடியும் என்பதை யெகோவாவுடைய உண்மை ஊழியர்களின் உதாரணங்கள் காட்டுகின்றன. நாம் எவ்வளவு அதிகமான வருடங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்கிறோமோ, அவ்வளவு அடக்கமானவர்களாக இருக்க வேண்டும்! (நீதி. 8:13) நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, நம்மால் தொடர்ந்து யெகோவாவோடு நடக்க முடியும். இதைவிட பெரிய பாக்கியம் நமக்கு வேறு எதுவும் கிடையாது! அதனால், அடக்கமானவர்களாக இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம், என்றென்றும் யெகோவாவோடு நடக்கலாம்.