நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—தொலைபேசி மூலம்
1 நற்செய்தியை நாம் ஜனங்களிடம் முகமுகமாய் பேச விரும்புகிறோம். ஆனால் சில சூழ்நிலைமைகள் தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பதை ஓர் அவசியமான மாற்றீடாக ஆக்குகிறது. பிரஸ்தாபிகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, வியாதியின் காரணமாக அல்லது சரீர குறைபாடுகளின் காரணமாக வீடுகளில் அடைப்பட்ட நிலைக்குள்ளாகிறார்கள். இவர்களுக்குச் சாட்சி கொடுக்க தொலைபேசியை நன்கு பயன்படுத்தலாம். மேலுமாக பலத்த பாதுகாப்பு தடையுத்தரவுகளை கொண்ட கட்டிடங்களையும் அல்லது முன் அழைப்பின்றி அனுமதி தடைச் செய்யப்பட்டிருக்கும் மற்ற இடங்களில் உள்ள ஆட்களுடன் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி அழைப்புகள் அதிக வெற்றிகரமானதாக இருக்கக்கூடும். தொலைபேசி மூலம் சாட்சி கொடுத்தலானது ஒரு தனித்தன்மை வாய்ந்த சவாலை முன்வைக்கிறது. ஆனால் கவனமான முன்யோசனையாலும் திட்டமிடுதலாலும் அவற்றை மேற்கொள்ளலாம்.
2 சில சமயங்களில் கட்டிடங்களின் முன் அறையில் உள்ள ஊர் பெயர்கள் குறிப்பு நூலிலிருந்து (DIRECTORY) அல்லது தபால் பெட்டிகளிலிருந்து பெயர்களைப் பெற்றுக்கொள்ளலாம். பின்பு தொலைபேசி எண்களைக் கண்டுபிடிப்பதற்கு தொலைபேசி ஊர் பெயர் குறிப்பு நூலைப் (DIRECTORY) பயன்படுத்தலாம். இது ஊழியக் கண்காணியின் வழிநடத்துதலின் கீழ் செய்ய வேண்டும். ஏனெனில் அப்பொழுது தொலைபேசி பிராந்தியங்கள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டு, பூர்த்தியான பதிவுகள் வைக்கப்படலாம்.
தயார் செய்வது எப்படி
3 பலன் தரத்தக்க தொலைபேசி சாட்சி கொடுத்தலுக்கு அனலான இனிமையான குரலோசைத் தேவைப்படுகிறது. அதிகாலையிலோ இரவின் பிந்திய மணிநேரங்களிலோ உணவு அருந்தும் சமயங்களிலோ தொலைபேசி சந்திப்புகளைச் செய்வதை தவிர்த்திடுங்கள். தொலைபேசி அநேக தடவைகள் ஒலிக்கும்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொலைபேசி இயந்திரத்தின் பதில் உங்களுக்கு கிடைத்துவிடுமானால், நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “என்னுடைய பெயர் . . . எதிர்காலத்துக்கான பைபிள் நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன். நான் மீண்டும் உங்களை அழைக்கிறேன்.” இந்தத் தொலைபேசி சந்திப்பை வீட்டில் இல்லாதவர்கள் பேரில் செய்யப்பட்ட சந்திப்பாக கருவது நல்லது. மற்றொரு சமயம் மீண்டுமாக பேச முயற்சிசெய்யலாம்.
4 உங்களுடைய பிரசங்கத்தை முன்னதாகவே நன்றாக ஒத்திகை பார்த்துகொள்ளுங்கள். அப்பொழுது அது வாசிப்பதைப் போன்று தொனிக்காது. நீங்கள் அவரில் தனிப்பட்ட அக்கறையை உடையவராக இருக்கிறீர்கள் என்பதை வீட்டுக்காரர் உணரும்படி செய்வதற்காக அவரையும் சம்பாஷணையில் ஈடுபடுத்த முயற்சிசெய்யுங்கள். உங்களை அறிமுகப்படுத்துகையில் உங்களுடைய முதல் மற்றும் கடைசி பெயரைப் தெரியப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஒரு சம்பாஷணையாக ஆக்குங்கள். மேலும் உங்கள் உரையாடல் முழுவதிலும் வீட்டுக்காரரின் பெயரைப் பயன்படுத்த பிரயாசப்படுங்கள்.
5 அவசரமின்றி உளமார்ந்த உணர்ச்சியுடன் பேசுங்கள். கேள்வி கேட்கும் சமயம் தவிர மற்ற சமயங்களில் நிறுத்த வேண்டாம். ஏனெனில் உங்கள் நிறுத்தம் ஒரு கேள்வியென எடுத்துக்கொள்ளப்படலாம். நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “என்னுடைய பெயர் . . . , நான் உங்களை நேரடியாக வந்துபார்க்க முடியவில்லை. ஆகையால்தான் தொலைபேசியின் மூலம் உங்களுடன் பேச விரும்பினேன்.” பின்பு நிறுத்தாமல் நீங்கள் பின்வருமாறு தொடரலாம்: “அக்கறையூட்டும் ஒரு கேள்வியின் பேரில் உங்களுடைய கருத்தைக் கேட்க வேண்டும் என்பதே உங்களிடம் பேச விரும்புவதன் நோக்கமாகும். நீங்கள் எப்போதாகிலும் யோசித்து பார்த்ததுண்டா . . . ?” வேறு விதமாக கேள்வியை அமைத்து, “அது எப்போதாகிலும் உங்களுக்கு நேரிட்டிருக்கிறதா . . . ?” அல்லது “அதைக் குறித்து எப்போதாகிலும் நீங்கள் சிந்தித்ததுண்டா . . . ?” இந்தக் கேள்விகளுக்குத் தவறான பதில்கள் எதுவுமில்லை, வீட்டுக்காரரை சம்பாஷணையில் உட்படுத்துவதற்கு இது ஓர் எளிதான வழியை உண்டுபண்ணக்கூடும். “உங்களுக்கு நான் இடையூறு உண்டாக்கவில்லை என்று நினைக்கிறேன்,” “நீங்கள் அவ்வளவு வேலையாக இல்லை என்று நான் நினைக்கிறேன்,” போன்ற வார்த்தைகளைச் சொல்லுவதன் மூலம் வீட்டுக்காரர் உங்களுக்குச் செவிகொடுக்காதபடி செய்யும் பிரதிபலிப்பை உண்டுபண்ணும் பிரதியுத்தரங்களை வரவழைக்காதீர்கள். வீட்டுக்காரரே வேறுவிதமாக சொல்லாத வரையில் அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
6 “நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்?” என்று அந்த நபர் கேட்பாராகில், நிறுத்தம் இல்லாமல் “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன். இந்த அக்கறையூட்டும் கேள்வியின் பேரில் உங்கள் கருத்தைக் கேட்க விரும்பினேன். எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா . . . ?” என்று சொல்லுங்கள். “என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்று ஒருவேளை வீட்டுக்காரர் உங்களை கேட்டால், “தொலைபேசி டைரக்டரியிலிருந்து பெற்றுக்கொண்டேன். இந்த அக்கறையூட்டும் கேள்வியின் பேரில் உங்களுடைய கருத்தைக் கேட்கவே உங்களை அழைத்தேன். நீங்கள் எப்பொழுதாவது இதைப் பற்றி சிந்தித்திருக்கிறீர்களா . . . ?” என்று பதில் சொல்லலாம்.
7 ஒரு சிலர் வீட்டுக்காரரிடம் நேரிடையாக, பைபிள் கேள்விகளை பதிலளிப்பதற்கு நாங்கள் ஓர் இலவச திட்டத்தைக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு பின்பு என்றும் வாழலாம் புத்தகத்திலுள்ள ஒரு சில அத்தியாயங்களின் தலைப்பகளை குறிப்பிடுவதன் மூலம் வெற்றி கண்டிருக்கின்றனர். அல்லது நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “மிகுதியான குற்றச்செயல் காரணமாக உங்களுடைய கட்டிடம் பலத்த பாதுகாப்பு தடையுத்தரவுகளை கொண்டிருப்பதால், நான் உங்கள் கருத்தை கேட்கவே உங்களிடம் பேச விரும்பினேன். இன்று குற்றச்செயலின் விகிதம் இவ்வளவு அதிகமாய் இருப்பதற்கு காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
8 பலத்த பாதுகாப்பு தடையுத்தரவுகளை கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில், தொலைபேசி சாட்சிகொடுக்க முயற்சி செய்யும் வரையில் அதிகமான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக 14 வீட்டு வேதப்படிப்புகள் துவங்கப்பட்டன. எனவே கட்டுப்பாடான அனுமதி மட்டுமே வழங்கப்படக்கூடிய கட்டிடங்கள் மெய்யாகவே ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தை உண்டுபண்ணுகின்றன. அவற்றில் மகத்தான வாய்ப்புகள் இருக்கக்கூடும். யெகோவாவின் உதவி நமக்கிருக்கிறது என்ற அறிவுடன், நம்பிக்கையான மனநிலையோடு தொலைபேசி சாட்சிகொடுத்தல் நற்செய்தியை பகிர்ந்து கொள்வதற்கு மற்றொரு பலன்தரக்கூடிய வழியாயிருப்பதாக நாம் காணலாம்.—2 தீமோ. 4:5.