யெகோவாவை பாடலில் துதித்தல்
1 உங்கள் பாட்டு புத்தகத்தில் பின்னாலிருக்கும் கடைசி தாளுக்கு தயவுசெய்து திறவுங்கள். நீங்கள் என்ன காண்கிறீர்கள்? யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் லேவிய பாடகர்களாலான ஒரு குழு தங்கள் வாய்களை விரிவாய்த் திறந்து ஆர்வத்தோடு பாடுகின்றனர். யெகோவாவின் ஆலயத்தில் பாடுவது மெய் வணக்கத்தின் ஒரு முக்கியமான அம்சமாயிருந்தது. தாவீது ராஜாவின் காலத்தில், ஆலயத்தில் சேவித்தவர்களில் 10 சதவிகிதத்துக்கு மேலானோர் யெகோவாவை இசையுடன் துதிக்கும்படி நியமிக்கப்பட்டனர். அந்த எண்ணிக்கையில், 288 பேர் பயிற்றுவிக்கப்பட்ட பாடகர்களாய் இருந்தனர், “எல்லாரும் வல்லுநர்கள்.” அவர்கள், பாடுவதை உள்ளார்ந்த அக்கறையுடன் எடுத்துக்கொண்டனர் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.—1 நாளா. 23:3, 5; 25:7.
2 கிறிஸ்தவ காலங்களுக்கு வருகையில், கர்த்தருடைய இராப்போஜனத்தின் கடைசியில் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஒரு பாடலைப் பாடினர் என்று நாம் அறிகிறோம். (மாற்கு 14:26) அப்போஸ்தலனாகிய பவுல், நம் கடவுளுக்கு துதிகளைப் பாடும்படி திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கிறார். கொலாசெயர் 3:16-ல் அவர், “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் [யெகோவாவை, NW] பக்தியுடன் பாடுங்கள்” என்று எழுதினார்.—எபேசியர் 5:19, 20-ஐயும் பாருங்கள்.
3 ராஜ்ய பாடல்களைப் பாடுவது யெகோவாவை நாம் துதிக்கும் வழிகளில் ஒன்றாகும். ஆகையால் நாம் முழு இருதயத்தோடும் பாட வேண்டுமல்லவா? அவ்வாறு செய்யும்போது, நாம் யெகோவாவுக்கு துதி கொடுக்கிறோம். அவருக்கு ஏறெடுக்கப்படும் நம் பாடல்களுக்கு, நம் ஜெபங்களுக்கு அவர் செவிகொடுப்பது போலவே அவர் செவிகொடுக்கிறார். நாம் உண்மையிலேயே திறந்துபாடும் போது, மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொண்டு வரலாம், நாமும்கூட நன்மையடைகிறோம்.
4 நம் பாடல்களின் அழகான வார்த்தைகளை சிந்தித்துப் பாருங்கள். இவைகள் நாம் உண்மையிலேயே “ஒருவருக்கொருவர் போதித்துப் புத்தி சொல்லிக் கொள்வதற்கு” ஓர் உதவியாயிருக்கிறது. நம் பாடல்களில் என்னே சிறந்த புத்திமதி அடங்கியுள்ளது! அந்தப் புத்திமதியை அக்கறையுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆவியின் கனிகளை விருத்தி செய்ய நாம் உதவப்படலாம், அவைகளில் மிகுந்திருக்கவும், மாம்சப்பிரகாரமான, உலகப்பிரகாரமான செல்வாக்குகள் நுழைவதற்கு எதிராக காத்துக்கொள்ளவும் உதவப்படலாம். ‘இருதயத்தில் பாடுவது’ யெகோவாவை தைரியமாகவும் மனமகிழ்வோடும் சேவிப்பதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறது.
5 கூட்டங்களில் பாடலுக்கு ஒரு சிறந்த ஆரம்பத்தைக் கொடுக்க, அக்கிராசினர் பாட்டின் எண் மட்டுமல்லாமல் அதனுடைய பொருள் அல்லது தலைப்பையும் அறிவிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் பாடலுக்கான வேதாகம அடிப்படையைக் குறிப்பிட்டு, அளிக்கப்படும் தகவலோடு அது எவ்வாறு பொருந்துகிறது என்று சுருக்கமாக குறிப்பிடலாம்.
6 ராஜ்ய இன்னிசைகளும், நம் பாடல்களின் பியானோ கேசட்டுகளும், பாடல்களோடு மேலுமாக அறிமுகமாவதற்கு நம் குடும்பங்களுக்கு உதவி செய்யும் சிறந்த கருவிகளாகும். இவைகளை பின்னணி இசையாக இசைப்பது, நம் பாடல்களோடு அதிகமாக அறிமுகமாவதற்கான மிக அதிக மகிழ்ச்சியான வழியாகும்.
7 நம் அன்பான பரலோகத் தகப்பனை பாடலோடு துதிக்கும் கடமையை வேதாகமம் நமக்குத் திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்துகிறது. நாம் அதை முழு ஆத்துமாவோடும் செய்வோமாக. அதன் மூலமாக நம் மத்தியில் வரும் புதியவருக்கு இருதயத்துக்கு அனலூட்டும் சாட்சி நாம் கொடுக்கலாம். ஆம், பண்டைய தாவீது செய்தது போல நாம் பாடி யெகோவாவை கீர்த்தனம் செய்வோமாக.—சங். 108:1–3.